பைபிள் புத்தக எண் 40—மத்தேயு
எழுத்தாளர்: மத்தேயு
எழுதப்பட்ட இடம்: பலஸ்தீனா
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 41
காலப்பகுதி: பொ.ச.மு. 2-பொ.ச. 33
ஏதேனில் கலகம் தலைதூக்கியது முதற்கொண்டு, மனிதகுலத்தார் யாவருக்கும் ஆறுதலளிக்கும் வாக்கை யெகோவா கொடுத்துள்ளார்; நீதியை நேசிப்போர், “ஸ்திரீ”யினுடைய வித்தின் மூலமாக விடுதலை பெறுவர் என்பதே அவ்வாக்கு. இந்த வித்து அல்லது மேசியா, இஸ்ரவேலில் பிறக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். எபிரெய எழுத்தாளர்களை ஏவி, பல தீர்க்கதரிசனங்களை நூற்றாண்டுகளாக பதிவு செய்தார். அந்த வித்து கடவுளின் ராஜ்யத்தில் அரசராக இருப்பார், யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்காக நடவடிக்கை எடுப்பார், அப்பெயரின்மீது சுமத்தப்பட்டுள்ள நிந்தையை என்றென்றுமாக நீக்குவார் என அத்தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டின. யெகோவாவின் அரசதிகாரத்தை நியாய நிரூபணம் செய்பவரும், பயம், ஒடுக்குதல், பாவம், மரணம் ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கப் போகிறவருமான இவரைக் குறித்து அவை பல நுட்பவிவரங்களை அளித்தன. எபிரெய வேதாகமம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டபோது, யூதர்களிடத்தில் மேசியாவைப் பற்றிய இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தது.
2 இதற்கிடையில் உலக நிலையும் மாறிக்கொண்டிருந்தது. மேசியாவின் வருகைக்காக கடவுள் தேசங்களை தயார்படுத்தினார். அந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தி எங்கும் பரவுவதற்கு சூழ்நிலைமைகள் மிக சாதகமாக அமைந்தன. ஐந்தாம் உலக வல்லரசாகிய கிரீஸ் ஒரு பொதுமொழியை உருவாக்கியது. தேசங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதற்கான பாலமாக இது அமைந்தது. ஆறாவது உலக வல்லரசாகிய ரோம், தனது ஆட்சிக்குட்பட்ட தேசங்களை ஒரே பேரரசாக இணைத்தது; அப்பேரரசின் எப்பகுதிக்கும் செல்ல பாதைகளை அது அமைத்தது. இந்தப் பேரரசு முழுவதிலும் யூதர்கள் சிதறிக்கிடந்தனர், இதனால் மேசியாவின் வரவை யூதர்கள் எதிர்நோக்கி இருந்ததை மற்றவர்களும் அறிந்திருந்தனர். அந்த ஏதேனிய வாக்கு அளிக்கப்பட்டு 4,000-த்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின் அப்போதுதான் மேசியா தோன்றியிருந்தார்! காலங்காலமாய் ஜனங்கள் எதிர்நோக்கியிருந்த அந்த வாக்குப்பண்ணப்பட்ட வித்து வந்திருந்தார்! பூமியில் இந்த மேசியா தம்முடைய பிதாவின் சித்தத்தை உண்மையுடன் நிறைவேற்றியபோது, மனித சரித்திரத்தில் ஒருபோதும் நடந்திராத அதிமுக்கியமான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன.
3 இது, முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சிகளை ஏவப்பட்ட எழுத்துக்களாக பதிவு செய்வதற்கான காலமாயிருந்தது. உண்மையுள்ள நான்கு பேரை யெகோவாவின் ஆவி ஏவியது. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே விவரங்களை பதிவு செய்தனர். இவ்வாறு, இயேசுவே மேசியா, வாக்குப்பண்ணப்பட்ட வித்து, அரசர் என்பதற்கும், அவருடைய வாழ்க்கை, ஊழியம், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைப் பற்றிய நுட்ப விவரங்களுக்கும் நான்கு மடங்கு சாட்சி அளிக்கப்பட்டது. இந்த விவரங்கள் சுவிசேஷங்கள் என்று அழைக்கப்பட்டன. “சுவிசேஷம்” என்ற இந்தச் சொல்லுக்கு அர்த்தம் “நற்செய்தி.” இந்த நான்கும் பெரும்பாலும் ஒரே சம்பவங்களையே குறிப்பிடுபவை. இருந்தபோதிலும், நிச்சயமாகவே இவை வெறும் நகல்கள் அல்ல. முதல் மூன்று சுவிசேஷங்களைப் பெரும்பாலும் ஆங்கிலத்தில் ‘சினாப்டிக்’ என அழைக்கின்றனர்; இதற்கு “ஒரேவிதமான கருத்து” என்பது அர்த்தம். அவை அனைத்தும் இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றியே பேசுவதால் இப்பெயர் பொருத்தமானது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய அந்த நான்கு எழுத்தாளர்களும் தங்கள் சொந்த நடையில் கிறிஸ்துவின் சரிதையைச் சொல்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியில் ஒரு குறிப்பட்ட பொருளையும் நோக்கத்தையும் மனதில்கொண்டு எழுதினர், தங்கள் சுபாவத்தின் முத்திரையைப் பதித்தனர், தங்களுடைய காலத்தில் வாழ்ந்த வாசகர்களை மனதில் வைத்தே எழுதினர். அவர்களுடைய புத்தகங்களை நாம் ஆராய ஆராய அவை ஒவ்வொன்றின் பிரத்தியேக அம்சங்களையும் காண்போம்; ஏவப்பட்ட இந்த பைபிள் புத்தகங்கள் நான்கும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிய தனித்தனியான, அதேசமயம் ஒத்திசைவான, ஒன்றையொன்று நிறைவுசெய்யும் விவரப்பதிவுகளை அளிப்பதையும் உணருவோம்.
4 கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை முதலில் எழுத்தில் வடித்தவர் மத்தேயு. இவரது பெயர், “மத்தித்தியா” என்ற எபிரெய வடிவின் சுருக்கமாக இருக்கலாம். அதற்கு, “யெகோவாவின் அன்பளிப்பு” என்பது அர்த்தம். இயேசு தெரிந்தெடுத்த 12 அப்போஸ்தலரில் இவரும் ஒருவர். எஜமானரான இயேசு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கித்தும் கற்பித்தும் பலஸ்தீனா தேசமெங்கும் நடந்தார்; அச்சமயத்தில் மத்தேயுவுக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. இயேசுவின் சீஷராவதற்கு முன்பாக, மத்தேயு வரி வசூலிப்பவராக இருந்தார். இந்த வேலையை யூதர்கள் முற்றிலுமாக வெறுத்தனர்; ஏனெனில் அது, அவர்கள் சுயாதீனர் அல்ல, ரோமப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழிருப்போர் என்பதை இடைவிடாது நினைப்பூட்டியது. மத்தேயுவின் மற்றொரு பெயர் லேவி. இவருடைய தகப்பனின் பெயர் அல்பேயு. தம்மைப் பின்பற்றும்படி இயேசு அவரை அழைத்தபோது உடனடியாக பின்சென்றார்.—மத். 9:9; மாற். 2:14; லூக். 5:27-32.
5 இந்தச் சுவிசேஷத்தின் எழுத்தாளராக கருதப்படும் மத்தேயுவின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதிலும், ஆரம்ப கால சர்ச் சரித்திராசிரியர்களுடைய ஏராளமான சான்றுகள் அவரே எழுத்தாளர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மத்தேயு புத்தகத்தின் எழுத்தாளர் யாரென மிகத் தெளிவாகவும் ஒருமனதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது; இந்தளவுக்கு வேறு எந்தப் பூர்வ புத்தகத்தின் எழுத்தாளரும் உறுதிசெய்யப்படவில்லை எனலாம். மத்தேயுவே இதன் எழுத்தாளர் என்ற உண்மைக்கும் அது கடவுளுடைய நம்பத்தக்க வார்த்தையின் பாகமென்பதற்கும் ஹயராப்போலிஸின் பப்பையாஸ் காலம் (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி) முதற்கொண்டே அநேக ஆரம்ப கால சாட்சிகள் உள்ளனர். மெக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு கூறுகிறது: “ஜஸ்டின் மார்ட்டிர், டயோக்னீடஸுக்கு எழுதின கடிதத்தின் ஆசிரியர் (ஆட்டோவின் ஜஸ்டின் மார்ட்டிர், தொ. ii-ஐக் காண்க), ஹெகீஸிப்பஸ், ஐரீனியஸ், டாட்டியன், அதெனாகொரஸ், தியாஃபிலஸ், கிளெமென்ட், டெர்ட்டுல்லியன், ஆரிகென் ஆகியோர் மத்தேயு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினர். அவர்கள் மேற்கோள் காட்டியது மாத்திரமல்ல, மேற்கோள் காட்டிய விதமும், சந்தேகத்தின் சுவடே இல்லாதிருப்பதும் நம்மிடமுள்ள இந்தப் புத்தகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் மத்தேயுதான் அதன் எழுத்தாளர் எனவும் நிரூபிக்கின்றன.”a மத்தேயு ஓர் அப்போஸ்தலராகவும் கடவுளின் ஆவியையும் பெற்றவராகவும் இருந்ததால், அவர் உண்மையான பதிவையே எழுதியிருப்பார்.
6 மத்தேயு தன் விவரப்பதிவை பலஸ்தீனாவில் எழுதினார். எந்த ஆண்டில் எழுதினார் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை; எனினும் சில கையெழுத்துப் பிரதிகளின் (எல்லாம் பொ.ச. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை) முடிவிலுள்ள குறிப்புகள், அது பொ.ச. 41-ல் எழுதப்பட்டதாக சொல்கின்றன. அப்போது வழக்கிலிருந்த எபிரெய மொழியில் மத்தேயு தன் சுவிசேஷத்தை முதலில் எழுதினார்; பின்னர் அதை கிரேக்கில் மொழிபெயர்த்தார் என்பதற்கு அத்தாட்சி உள்ளது. டி வைரிஸ் இன்லஸ்ட்ரிபஸ் (புகழ்பெற்ற மனிதரைப் பற்றியது) என்ற தன் புத்தகத்தில், மூன்றாம் அதிகாரத்தில் ஜெரோம் பின்வருமாறு கூறுகிறார்: “வரிவசூலிப்பவனாக இருந்து அப்போஸ்தலனாக மாறிய லேவி என அழைக்கப்பட்ட மத்தேயு, விசுவாசிகளாக மாறின விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்களுக்காக, கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தை யூதேயாவில் எபிரெய மொழியில் முதலில் தொகுத்தார்.”b இந்தச் சுவிசேஷத்தின் எபிரெய பதிப்பு தன் நாளில் (பொ.ச. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில்), சிசெரியாவில் உள்ள நூலகத்தில் பாதுகாப்பாய் இருந்ததென்று ஜெரோம் மேலும் சொல்கிறார். இந்த நூலகம் பாம்ஃபிலஸ் என்பவரால் நிறுவப்பட்டது.
7 மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுவிசேஷங்களைப் பற்றி ஆரிகென் குறிப்பிட்டார். “மத்தேயுவே . . . முதலில் எழுதினார். . . . விசுவாசிகளாக மாறிய யூதர்களுக்காக எபிரெய மொழியில் அதை தொகுத்து பிரசுரித்தார்” என்று ஆரிகென் சொன்னதாக யூஸிபியஸ் மேற்கோள் காட்டுகிறார்.c அது யூதரை மனதில் வைத்தே முதலில் எழுதப்பட்டது என்பதற்கு ஒரு அத்தாட்சி, அதிலுள்ள வம்சவரலாறு. ஆபிரகாமிலிருந்து தொடங்கி இயேசுவின் சட்டப்பூர்வ வம்சாவளியைச் சுட்டிக்காட்டுகிறது. மேசியாவின் வருகையை முன்னுரைத்த எபிரெய வேதாகமத்திலிருந்து பல மேற்கோள்களை காட்டுவதிலிருந்தும் அது யூதரை மனதில் வைத்தே முதலில் எழுதப்பட்டது என்பது தெரிகிறது. எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டுகையில், கடவுளின் பெயர் வரும் இடங்களில் எல்லாம் யெகோவாவைக் குறிக்கும் எபிரெய நான்கெழுத்துக்களை மத்தேயு பயன்படுத்தினாரென்று நம்புவது நியாயமானதே. அதன் காரணமாகவே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் மத்தேயு புத்தகத்தில் யெகோவாவின் பெயர் 18 தடவை வருகிறது. 19-ம் நூற்றாண்டில் எஃப். டிலிட்ஸ்ச் என்பவரால் வெளியிடப்பட்ட மத்தேயுவின் எபிரெய மொழிபெயர்ப்பிலும் அவ்வாறே உள்ளது. கடவுளின் பெயரை இயேசு எவ்வாறு கருதினாரோ அவ்வாறே மத்தேயுவும் கருதியிருப்பார்; அந்தப் பெயரைப் பயன்படுத்தக்கூடாதென்ற அப்போதைய யூத மூடநம்பிக்கை தன்னைக் கட்டுப்படுத்த அனுமதித்திருக்க மாட்டார்.—மத். 6:9; யோவா. 17:6, 26.
8 மத்தேயு வரிவசூலிப்பவராக இருந்தவர்; எனவே பணம், எண்கள், மதிப்புகள் பற்றிய விவரங்களை தெள்ளத்தெளிவாக அவர் குறிப்பிடுவது இயல்பானதே. (மத். 17:27; 26:15; 27:3) வரிவசூலிப்பவர் என அவர் இழிவாக கருதப்பட்டார்; எனவே, நற்செய்தியின் ஊழியக்காரனும் இயேசுவின் நெருங்கிய கூட்டாளியுமாக ஆவதில் கடவுள் காட்டின தயவை அவர் மனமார மதித்தார். அதனால்தான், பலியோடுகூட இரக்கமும் தேவை என இயேசு திரும்பத்திரும்ப அறிவுறுத்தியதை சுவிசேஷ எழுத்தாளர்களில் மத்தேயு மாத்திரமே நமக்குக் கூறுகிறார். (9:9-13; 12:7; 18:21-35) யெகோவாவின் தகுதியற்ற தயவு மத்தேயுவை அதிகமாய் உற்சாகப்படுத்தியது. எனவே, மிகுந்த ஆறுதலளிக்கும் இயேசுவின் வார்த்தைகளை அவர் பதிவுசெய்வது பொருத்தமானதுதான்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (11:28-30) வரிவசூலிப்பவராக இருந்த காலத்தில், அவருடைய சொந்த நாட்டவரின் வசைச் சொற்கள் அவரை துளைத்திருக்க, இந்தக் கனிவான வார்த்தைகள் பெருமளவு ஆறுதலளித்ததில் சந்தேகமில்லை!
9 இயேசுவினுடைய போதகத்தின் மையப் பொருள் “பரலோகங்களின் ராஜ்யம்” என்பதை மத்தேயு முக்கியமாய் அறிவுறுத்தினார். (4:17, NW) அவருடைய பார்வையில் இயேசு போதக-அரசர். “ராஜ்யம்” என்ற வார்த்தையை அந்தளவு அடிக்கடி (50-க்கும் மேற்பட்ட தடவை) பயன்படுத்தியிருப்பதால், இந்த சுவிசேஷத்தை ராஜ்ய சுவிசேஷம் என அழைக்கலாம். துல்லியமான காலவரிசைப்படி எழுதுவதற்குப் பதிலாக, இயேசுவின் போதகங்களையும் பிரசங்கங்களையும் தர்க்கரீதியான விதத்தில் தொகுத்தளிப்பதிலேயே மத்தேயு அதிக ஆர்வம் காட்டினார். முதல் 18 அதிகாரங்களில், ராஜ்யம் என்ற தலைப்பை வலியுறுத்தியதால் மத்தேயுவால் காலவரிசையை பின்பற்ற முடியவில்லை. எனினும், கடைசி பத்து அதிகாரங்கள் (19-லிருந்து 28 வரை) காலவரிசைப்படி உள்ளன, ராஜ்யத்தைப் பற்றியும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றன.
10 மத்தேயுவின் சுவிசேஷத்திலுள்ள குறிப்புகளில் நாற்பத்திரண்டு சதவீதம், மற்ற மூன்று சுவிசேஷங்களில் துளியும் காணப்படுகிறதில்லை.d இதில் குறைந்தபட்சம் பத்து உவமைகள் உள்ளன: வயலில் களைகள் (13:24-30), புதைந்திருந்த பொக்கிஷம் (13:44), விலையுயர்ந்த முத்து (13:45, 46), வலை (13:47-50), இரக்கமற்ற அடிமை (18:23-35), வேலையாட்களும் திநாரியமும் (20:1-16, தி.மொ.), தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் (21:28-32), ராஜாவின் குமாரனுடைய கலியாணம் (22:1-14), பத்துக் கன்னிகைகள் (25:1-13), தாலந்துகள் (25:14-30). மொத்தத்தில், பொ.ச.மு. 2-ல் இயேசுவின் பிறப்பிலிருந்து, பொ.ச. 33-ல் அவர் பரலோகத்துக்குச் செல்வதற்கு முன் தம் சீஷர்களுடன் பேசியது வரையான விவரப்பதிவு இந்தப் புத்தகத்தில் உள்ளது.
மத்தேயுவின் பொருளடக்கம்
11 இயேசுவையும் ‘பரலோக ராஜ்யத்தைப்’ பற்றிய செய்தியையும் அறிமுகப்படுத்துதல் (1:1–4:25). இயேசுவின் பரம்பரை பற்றிய பதிவோடு தொடங்கி, ஆபிரகாம் மற்றும் தாவீதின் சுதந்தரவாளியாக இயேசுவின் சட்டப்பூர்வமான உரிமையை தர்க்கரீதியான முறையில் மத்தேயு உறுதிப்படுத்துகிறார். இது, யூத வாசகரின் கவனத்தை ஈர்க்க உதவுகிறது. பின்பு மரியாளின் கர்ப்பப்பையில் அற்புதமான முறையில் இயேசு உருவாதல், பெத்லகேமில் அவருடைய பிறப்பு, வானசாஸ்திரிகளின் வருகை, கோபத்தில் ஏரோது வெகுண்டெழுந்து பெத்லகேமில் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளைகள் அனைத்தையும் கொல்லுதல், இளம் பிள்ளையுடன் யோசேப்பும் மரியாளும் எகிப்துக்கு ஓடிப்போதல், மீண்டும் அவர்கள் நாசரேத்திற்குத் திரும்புதல் ஆகிய விவரங்களைப் பற்றி வாசிக்கிறோம். இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதை நிரூபிக்க தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள்மீது மத்தேயு கவனத்தைத் திருப்புகிறார்.—மத். 1:23—ஏசா. 7:14; மத். 2:1-6—மீகா 5:2; மத். 2:13-18—ஓசி. 11:1-ம் எரே. 31:15-ம்; மத். 2:23—ஏசா. 11:1, NW அடிக்குறிப்பு.
12 மத்தேயுவின் விவரம் இப்போது நம்மை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறது. முழுக்காட்டுபவரான யோவான்: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று யூதேயாவின் வனாந்தரத்தில் பிரசங்கிக்கிறார். (மத். 3:2) அவர், மனந்திரும்பின யூதர்களுக்கு யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் கொடுக்கிறார், வரவிருக்கும் கோபாக்கினையைக் குறித்து பரிசேயரையும் சதுசேயரையும் எச்சரிக்கிறார். இயேசு கலிலேயாவிலிருந்து வந்து முழுக்காட்டுதல் பெறுகிறார். உடனடியாக கடவுளுடைய ஆவி அவர்மீது வந்திறங்குகிறது, பரலோகங்களிலிருந்து ஒரு குரல்: “இவர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்” என்று சொல்கிறது. (3:17, NW) பின்பு இயேசு வனாந்தரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்; 40 நாட்கள் அங்கே உபவாசித்த பின்பு, பிசாசாகிய சாத்தானால் சோதிக்கப்படுகிறார். மூன்று தடவை கடவுளின் வார்த்தையிலிருந்து மேற்கோள் காட்டி சாத்தானை தோல்வியுறச் செய்கிறார். கடைசியாக: “அப்பாலே போ, சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்கவேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என்று எழுதியிருக்கிறதே” என்கிறார்.—4:10, NW.
13 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.” ஆர்வத்தைத் தூண்டும் இந்த வார்த்தைகளைத்தான் அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு இப்போது கலிலேயாவில் யாவரறிய அறிவிக்கிறார். மீன்பிடிப்பதை விட்டுவிட்டு தம்மைப் பின்பற்றி ‘மனுஷரைப் பிடிக்கிறவர்களாகும்படி’ மீனவர் நால்வரை அவர் அழைக்கிறார். அவர்களுடன் சேர்ந்து அவர், “கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெபாலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து ஜனங்களில் காணப்பட்ட சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிக் குணமாக்”குகிறார்.—4:17, 19, 23, தி.மொ.
14 மலைப்பிரசங்கம் (5:1–7:29, தி.மொ.). ஜனங்கள் அவரைத் தொடர்ந்துவர ஆரம்பிக்கையில், இயேசு மலைமீது ஏறுகிறார்; அங்கு ஓரிடத்தில் அமர்ந்து தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகிறார். ஒன்பது விதமான ‘மகிழ்ச்சிகளை’ (NW) பற்றி சொல்லி ஆர்வத்தைத் தூண்டும் பேச்சைத் தொடங்குகிறார்: தங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள், துக்கிப்பவர்கள், சாந்த குணமுள்ளவர்கள், நீதியின் நிமித்தம் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானத்தை நாடுபவர்கள், நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுபவர்கள், நிந்திக்கப்பட்டு அவதூறாய் பேசப்படுபவர்கள்—இவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள். “சந்தோஷப்பட்டு களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” அவர் தம்முடைய சீஷர்களை ‘பூமிக்கு உப்பு’ எனவும் ‘உலகத்துக்கு வெளிச்சம்’ எனவும் அழைக்கிறார். மேலும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க தேவைப்படும் நீதி, சதுசேயர், பரிசேயரின் சம்பிரதாயத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருப்பதை விளக்குகிறார். “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.”—5:12-14, 48.
15 போலியான தானதர்மங்களையும் ஜெபங்களையும் குறித்து இயேசு எச்சரிக்கிறார். பிதாவின் பெயர் பரிசுத்தப்படவும், அவருடைய ராஜ்யம் வரவும், அன்றாட உணவைப் பெறவும் ஜெபிக்குமாறு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிக்கிறார். அந்தப் பிரசங்கம் முழுவதிலும் ராஜ்யத்திற்கே இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறார். தம்மைப் பின்பற்றுவோர் பொருள் செல்வங்களைப் பற்றி கவலைப்படுவதோ அவற்றிற்காக மாத்திரமே உழைப்பதோ கூடாதென எச்சரிக்கிறார்; ஏனெனில் உண்மையில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை பிதா அறிந்திருக்கிறார். ஆகையால், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்று அவர் சொல்கிறார்.—மத். 6:33.
16 மற்றவர்களுடனான உறவுகளின்பேரில் எஜமானர் அறிவுரை கொடுக்கிறதாவது: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” ஜீவனுக்குச் செல்லும் பாதையை ஒருசிலரே கண்டடைவர்; அவர்கள் அவருடைய பிதாவின் சித்தத்தைச் செய்வர். அக்கிரமச் செய்கைக்காரர்களை அவர்களின் செயல்களே காட்டிக் கொடுத்துவிடும்; அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். தம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் ஒருவனை, “கன்மலையின்மேல் தன் வீட்டைக்கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு” இயேசு ஒப்பிடுகிறார். செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்போரை இந்தப் பேச்சு எப்படி பாதிக்கிறது? அவர்கள் “அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்ப”டுகிறார்கள், ஏனெனில் அவர், “வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய்” போதிக்கிறார்.—7:12, 24-29.
17 ராஜ்ய பிரசங்க ஊழியம் விஸ்தரிக்கப்படுகிறது (8:1–11:30). குஷ்டரோகிகள், திமிர்வாதக்காரர்கள், பேய்ப்பிடித்தவர்கள் ஆகியோரைச் சுகப்படுத்துவது என இயேசு பல அற்புதங்களை செய்கிறார். புயலை அடக்குவதால் காற்றின்மீதும் அலைகளின்மீதும் தமக்கிருக்கும் அதிகாரத்தைக் காட்டுகிறார்; அதுமட்டுமா, இறந்த ஒரு சிறு பெண்ணை உயிரோடு எழுப்புகிறார். அந்தத் திரளான ஜனங்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல” ஒடுக்கப்பட்டு அலைக்கழிந்திருப்பதை கண்டு இயேசு எந்தளவு மனதுருகுகிறார்! தம் சீஷர்களிடம் அவர் சொல்கிறதாவது: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்பின் எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.”—9:36-38, தி.மொ.
18 இயேசு 12 அப்போஸ்தலரைத் தெரிந்தெடுக்கிறார், ஊழியப் பொறுப்பளித்து அனுப்புகிறார். அந்த ஊழியத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டமான கட்டளைகளை கொடுத்து, அவர்களுடைய போதகத்தின் முக்கிய கோட்பாட்டை அறிவுறுத்துகிறார்: “போகையில், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.” அன்போடு அவர்களுக்கு ஞானமுள்ள அறிவுரையைக் கொடுக்கிறார். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.” நெருங்கிய உறவினராலும் பகைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்பதைச் சொல்லி கூடுதலாக இயேசு அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார்: “தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.” (10:7, 8, 16, 39) தங்களுக்கு நியமிக்கப்பட்ட பட்டணங்களில் போதிக்கவும் பிரசங்கிக்கவும் அவர்கள் தங்கள் வழியே செல்கின்றனர்! முழுக்காட்டுபவரான யோவானைத் தமக்கு முன்பாக அனுப்பப்பட்ட தூதன், வாக்குப்பண்ணப்பட்ட “எலியா” என இயேசு அடையாளங்காட்டுகிறார், ஆனால் “இந்தச் சந்ததி” யோவானையும்சரி, மனுஷ குமாரனையும்சரி ஏற்பதில்லை. (11:14, 16) ஆகவே அவருடைய வல்லமைவாய்ந்த செயல்களைக் கண்டு மனந்திரும்பாத இந்தச் சந்ததிக்கும் இந்தப் பட்டணங்களுக்கும் ஆபத்து வரும்! ஆனால் அவருடைய சீஷராகிறவர்கள் இளைப்பாறுதலைக் கண்டடைவார்கள்.
19 பரிசேயர்கள் அம்பலப்படுத்தப்பட்டு கண்டனம் செய்யப்படுகின்றனர் (12:1-50). ஓய்வுநாள் சம்பந்தமாக இயேசுவில் குற்றம் கண்டுபிடிக்க பரிசேயர்கள் முயலுகின்றனர், ஆனால் அவர்களுடைய குற்றச்சாட்டுகளைத் தவறெனக் காட்டி அவர்களுடைய பாசாங்குத்தனத்தைக் கடுமையாய் சாடுகிறார். இவ்வாறு அவர்களிடம் சொல்கிறார்: “விரியன் பாம்புக்குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளைப் பேசுவதெப்படி? இருதயத்தின் நிறைவிலிருந்து வாய் பேசும்.” (12:34, தி.மொ.) யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது: மனுஷகுமாரன் மூன்று பகல்களும் இரவுகளும் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
20 ராஜ்யத்தைப் பற்றிய ஏழு உவமைகள் (13:1-58). இயேசு தம் பேச்சில் ஏன் உவமைகளைப் பயன்படுத்துகிறார்? தம்முடைய சீஷர்களிடம் அவர் கூறுகிறதாவது: “பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.” எல்லாவற்றையும் தம்முடைய சீஷர்கள் காண்பதாலும் கேட்பதாலும் அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களென்று கூறுகிறார். எப்பேர்ப்பட்ட புத்துயிரளிக்கும் போதனையை அளிக்கிறார்! விதைக்கிறவனின் உவமையை அவர் விளக்கிய பின்பு, வயலிலுள்ள களைகள், கடுகு விதை, புளித்தமாவு, புதைந்திருந்த பொக்கிஷம், விலையுயர்ந்த முத்து, வலை ஆகிய உவமைகளை இயேசு சொல்கிறார்—இவையெல்லாமே ஏதாவது ஒருவிதத்தில் ‘பரலோக ராஜ்யத்தோடு’ சம்பந்தப்பட்டவை. எனினும், அந்த ஜனங்கள் அவர்பேரில் இடறலடைகிறார்கள். இயேசு அவர்களிடம் சொல்கிறார்: “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்.”—13:11, 57.
21 “கிறிஸ்து”வின் ஊழியமும் அற்புதங்களும் (14:1–17:27). கோழையான ஏரோது அந்திப்பாவின் கட்டளையின்பேரில் முழுக்காட்டுபவரான யோவானின் தலை வெட்டப்படுகிறது; இச்செய்தி இயேசுவின் மனதை ஆழமாய் பாதிக்கிறது. 5,000-த்துக்கு அதிகமானோருக்கு அற்புதமாய் உணவளிக்கிறார்; கடலின்மீது நடக்கிறார்; பரிசேயரின் மேலுமான குற்றச்சாட்டை அடக்குகிறார். அவர்கள் ‘தங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை மீறி நடக்கிறார்கள்’ என்கிறார்; பேய்ப்பிடித்தவர், “சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை” சுகப்படுத்துகிறார்; மறுபடியுமாக, ஏழு அப்பங்கள், ஒருசில சிறு மீன்களை வைத்து 4,000-த்திற்கும் அதிகமானோருக்கு உணவளிக்கிறார். (15:3, 30) இயேசு கேட்ட ஒரு கேள்விக்கு பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என பதிலளித்து அவரை அடையாளம் காட்டுகிறார். இயேசு அவரைப் பாராட்டி: “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று சொல்கிறார். (16:16, 18) இயேசு இப்போது நெருங்கிவரும் தம் மரணத்தையும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்படப் போவதையும் பற்றி பேச ஆரம்பிக்கிறார். ஆனால் தம்முடைய சீஷரில் சிலர் “மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை” என்றும் வாக்கு கொடுக்கிறார். (16:28) ஆறு நாட்களுக்குப்பின், இயேசு தம் மறுரூப மகிமையைக் காண்பிப்பதற்கு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் உயர்ந்த ஒரு மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தரிசனத்தில், மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுவதை அவர்கள் காண்கின்றனர், மேலும் பரலோகத்திலிருந்து ஒரு குரல்: “இவர் என் குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொல்வதை கேட்கின்றனர். அந்த மலையிலிருந்து கீழிறங்கிய பின்பு, வாக்குப்பண்ணப்பட்ட “எலியா” ஏற்கெனவே வந்தாயிற்று என்று இயேசு அவர்களிடம் சொல்கிறார். முழுக்காட்டுபவரான யோவானைப் பற்றி அவர் குறிப்பிடுகிறாரென அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.—17:5, 12, NW.
22 இயேசு தம்முடைய சீஷருக்கு அறிவுரை கொடுக்கிறார் (18:1-35). மனத்தாழ்மை, வழிதவறிய ஆட்டைத் திரும்பக் கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சி, சகோதரரிடையே மனத்தாங்கல்களைத் தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றி கப்பர்நகூமில் இயேசு தம் சீஷர்களிடம் சொல்கிறார். ‘நான் எத்தனைதரம் என் சகோதரனை மன்னிக்க வேண்டும்?’ என்று பேதுரு கேட்கிறார். “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என இயேசு பதிலளிக்கிறார். இதை மேலும் வலியுறுத்துவதற்கு, 6 கோடி திநாரியங்கள் கடன்பட்ட அடிமையை அவனுடைய எஜமானர் மன்னித்ததைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். பின்னால் இந்த அடிமை 100 திநாரியங்கள் மாத்திரமே தனக்கு கடன்பட்டிருந்த உடன் அடிமையை சிறையில் அடைத்தான். இதன் விளைவு, அந்த இரக்கமற்ற அடிமை சிறைக்காவலரிடம் ஒப்புவிக்கப்பட்டான்.e இயேசு இந்தக் குறிப்பைச் சொல்கிறார்: “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.”—18:21, 22, 35.
23 இயேசுவினுடைய ஊழியத்தின் இறுதி நாட்கள் (19:1–22:46). வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினுடைய ஊழியத்தைக் குறித்து இன்னும் ஆத்திரமடைகையில் சம்பவங்கள் துரிதமாய் நிகழ்கின்றன, பதட்டநிலை அதிகரிக்கிறது. மணவிலக்கைப் பற்றிய விஷயத்தில் அவரை இடறச் செய்ய அவர்கள் வருகின்றனர், ஆனால் மிஞ்சுவது தோல்வியே; மணவிலக்குக்கு வேதப்பூர்வ ஒரே காரணம் வேசித்தனம் மட்டுமே என இயேசு குறிப்பிடுகிறார். பணக்கார இளைஞன் ஒருவன் இயேசுவிடம், நித்திய ஜீவனடைவதற்கான வழியைக் குறித்து கேட்கிறான், ஆனால் தனக்குள்ள எல்லாவற்றையும் விற்று அவரைப் பின்பற்ற வேண்டுமென்பதை அறிகையில் துக்கத்தோடு போய்விடுகிறான். வேலையாட்களையும் திநாரியங்களையும் பற்றிய உவமையைச் சொன்ன பின்பு, இயேசு தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி மீண்டும் குறிப்பிட்டு, “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று சொல்கிறார்.—20:28.
24 இது இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி வாரம். ‘ராஜாவாக, கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் ஏறிக்கொண்டு’ வெற்றி பவனியாக எருசலேமுக்குள் பிரவேசிக்கிறார். (21:4, 5) காசு மாற்ற வருவோரிடம் கொள்ளை லாபம் அடிப்பவர்களை வெளியே துரத்தி ஆலயத்தைச் சுத்திகரிக்கிறார். “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்” என்று அவர் சொல்கிறபோது அவருடைய சத்துருக்கள் பகைமையால் பொங்கியெழுகின்றனர். (21:31) திராட்சைத் தோட்டத்தையும் கலியாண விருந்தையும் பற்றிய அவருடைய உவமைகள் அவர்கள் உள்ளத்தைக் குத்துகின்றன. வரி சம்பந்தப்பட்ட பரிசேயரின் கேள்விக்கு, “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று திறம்பட்ட முறையில் பதிலளிக்கிறார். (22:21) அவ்வாறே, பிரச்சினையில் சிக்க வைப்பதற்கு சதுசேயர் கேட்கும் கேள்விக்கு அவர் பதிலடி கொடுத்து, உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை வலியுறுத்துகிறார். மறுபடியுமாக நியாயப்பிரமாணம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியுடன் பரிசேயர்கள் அவரை அணுகுகிறார்கள். இயேசு அவர்களிடம், யெகோவாவை முழுமையாக நேசிப்பதே பிரதான கட்டளை என்றும், இரண்டாவதாக தன்னைப்போல் மற்றவர்களை நேசிக்க வேண்டுமென்றும் சொல்கிறார். பின்பு, ‘கிறிஸ்து எவ்வாறு தாவீதின் குமாரனும் அவருடைய கர்த்தருமாக இருக்கக்கூடும்?’ என்று இயேசு அவர்களைக் கேட்கிறார். ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை, அதன்பின் ஒருவரும் அவரைக் கேள்வி கேட்கத் துணிகிறதில்லை.—22:45, 46, NW.
25 ‘மாயக்காரரே, உங்களுக்கு ஐயோ’ (23:1–24:2). ஆலயத்தில் ஜனங்களிடம் பேசிய இயேசு, எல்லாருக்கும் முன்பாக வேதபாரகரையும் பரிசேயரையும் மற்றொரு முறை கடுமையாய் கண்டிக்கிறார். ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க அவர்கள் தகுதியற்றவர்கள், அதோடு மற்றவர்களையும் பிரவேசிக்கவிடாமல் தடுக்க எல்லா தந்திர சூழ்ச்சிகளையும் பயன்படுத்துகின்றனர். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போலவே, வெளிப்புறத்தில் அழகாகத் தோன்றுகின்றனர், ஆனால் உள்ளே ஊழலும் அசுத்தமும் நிறைந்தவர்கள். எருசலேமுக்கு எதிரான இந்த நியாயத்தீர்ப்புடன் இயேசு முடிக்கிறார்: “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” (23:38) ஆலயத்தை விட்டுச் செல்கையில், இயேசு அதன் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
26 ‘தம்முடைய வந்திருத்தலின் அடையாளத்தை’ இயேசு கொடுக்கிறார் (24:3–25:46). ஒலிவ மலையிலிருக்கையில் இயேசுவின் சீஷர்கள் ‘அவருடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவிற்கும் அடையாளத்தை’ கேட்கின்றனர். அதற்கு பதிலளிப்பவராக இயேசு, போர்கள், ‘ஜனத்துக்கு விரோதமாக ஜனம் ராஜ்யத்துக்கு விரோதமாக ராஜ்யம் எழும்புதல்,’ உணவு குறைபாடுகளும் பூமியதிர்ச்சிகளும் அக்கிரமமும் அதிகரித்தல், “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” பூமியெங்கும் பிரசங்கிக்கப்படுதல், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை . . . தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மீதும்’ நியமித்தல் போன்றவை நிகழும் சமயத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படியாக, ‘மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்த் தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்படி’ வருவதைக் குறித்துக் காட்டும் கூட்டு அடையாளத்தின் வேறு பல அம்சங்களையும் இயேசு முன்னறிவிக்கிறார். (24:3, 7, 14, 45-47, NW; 25:31) விழிப்போடும் உண்மையோடும் இருப்போருக்கு மகிழ்ச்சியுள்ள பலன்கள் காத்திருப்பதைக் காட்டும் பத்துக் கன்னிகைகளையும் பத்து தாலந்துகளையும் பற்றிய உவமைகளை பயன்படுத்துகிறார். அதோடு, வெள்ளாடுகளைப் போன்றவர்கள் “நித்திய அழிவிற்கும், நீதிமான்கள் நித்திய ஜீவனுக்கும்” செல்வதை விளக்கும் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையையும் கூறி இயேசு இந்த முக்கியமான தீர்க்கதரிசனத்தை முடிக்கிறார்.—25:46, NW.
27 இயேசுவின் கடைசி நாளின் சம்பவங்கள் (26:1–27:66). பஸ்காவை ஆசரித்த பின்பு, இயேசு தம் உண்மையுள்ள அப்போஸ்தலருடன் ஒரு புதிய ஆசரிப்பைத் தொடங்கி வைக்கிறார்; தம் சரீரத்தையும் இரத்தத்தையும் அடையாளப்படுத்தும் புளிப்பில்லா அப்பத்திலும் திராட்ச மதுவிலும் பங்கெடுக்கும்படி அவர்களை அழைக்கிறார். பின்பு அவர்கள் கெத்செமனே தோட்டத்திற்குச் செல்கின்றனர், அங்கே இயேசு ஜெபிக்கிறார். ஆயுதம் ஏந்திய கூட்டத்தாருடன் யூதாஸ் அங்கு வருகிறான்; இயேசுவை பாசாங்குத்தனமாக ஒரு முத்தத்தால் காட்டிக்கொடுக்கிறான். இயேசு பிரதான ஆசாரியனிடம் கொண்டு செல்லப்படுகிறார்; முக்கிய ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர் யாவரும் இயேசுவுக்கு எதிராக பொய் சாட்சிகளைத் தேடுகின்றனர். இயேசு முன்னுரைத்தபடியே, பேதுரு சோதனைக்கு உள்ளானபோது அவரை மறுதலிக்கிறார். யூதாஸ் மனவேதனையில் தான் காட்டிக் கொடுத்ததற்காக பெற்ற அந்தப் பணத்தை ஆலயத்திற்குள் வீசியெறிந்துவிட்டு சென்று தூக்குப்போட்டுக் கொள்கிறான். காலையில் இயேசு ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். ஆசாரியரால் தூண்டிவிடப்பட்ட கலகக்கூட்டத்தார், “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என கூச்சலிடுகின்றனர்; அவர்களின் வற்புறுத்துதலுக்கு இணங்கி பிலாத்து, அவரைக் கழுமரத்தில் அறைய ஒப்புக்கொடுக்கிறான். தேசாதிபதியின் போர்ச்சேவகர் அவருடைய அரசதிகாரத்தைப் பரிகசித்து, பின்னர் கொல்கொதாவுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கே அவர் இரண்டு திருடர்களுக்கு இடையே கழுமரத்தில் ஏற்றப்படுகிறார். அவருடைய தலைக்கு மேல், “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்ற வாசகம் வைக்கப்படுகிறது. (27:25, 37) பல மணிநேரம் துன்புறுத்தப்பட்ட பின், இயேசு பிற்பகல் ஏறக்குறைய மூன்று மணி அளவில் மரிக்கிறார். பின்பு அரிமத்தியா ஊரானான யோசேப்புக்குச் சொந்தமான புதிய கல்லறையில் அவர் வைக்கப்படுகிறார். சரித்திரத்திலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாள் அது!
28 இயேசுவின் உயிர்த்தெழுதலும் முடிவான கட்டளைகளும் (28:1-20). மத்தேயு இப்பொழுது அருமையான செய்தியுடன் தன் விவரத்தை முடிக்கிறார். மரித்த இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்—அவர் இப்போது உயிருடனிருக்கிறார்! வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலத்தில், மகதலேனா மரியாளும் “மற்ற மரியாளும்” கல்லறைக்கு வந்தபோது, இந்தக் குதூகலமான செய்தியை தேவதூதன் அவர்களிடம் அறிவிக்கிறார். (28:1) இதை உறுதிப்படுத்த இயேசுவே அவர்கள் முன் தோன்றுகிறார். அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட உண்மையையே மறைக்க சத்துருக்கள் முயற்சிக்கின்றனர்; கல்லறைக்கு காவலிருந்த போர்ச்சேவகருக்கு லஞ்சம் கொடுத்து, “நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள்” என்று சொல்லும்படி செய்கின்றனர். பின்பு, கலிலேயாவில் இயேசு தம் சீஷர்களை மீண்டும் சந்தித்து பேசுகிறார். அவர்களுக்கான அவருடைய பிரியாவிடை கட்டளை என்ன? இதுவே: “போய் . . . சகல தேசங்களின் ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின், குமாரனின், பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டுங்கள்.” இந்தப் பிரசங்க ஊழியத்தில் அவர்களுக்கு வழிநடத்துதல் உண்டா? மத்தேயு பதிவு செய்யும் இயேசுவின் இந்தக் கடைசி வார்த்தைகள் இந்த நிச்சயத்தை அவர்களுக்கு அளிக்கின்றன: “இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையில் சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்.”—28:13, 19, 20, NW.
ஏன் பயனுள்ளது
29 நான்கு சுவிசேஷங்களில் முதலாவதான மத்தேயு புத்தகம், உண்மையிலேயே எபிரெய வேதாகமத்திற்கும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திற்கும் இடையே சிறந்த பாலமாக அமைகிறது. மேசியாவும் கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்தின் அரசருமானவரை அது சந்தேகமில்லாமல் அடையாளம் காட்டுகிறது; அவரைப் பின்பற்றுவோருக்கான தகுதிகளையும் பூமியில் அவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் குறிப்பிடுகிறது. முதலில் முழுக்காட்டுபவரான யோவான், பின் இயேசு, கடைசியாக அவருடைய சீஷர்கள் என அனைவரும் “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என பிரசங்கித்தனர். மேலும், “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்ற இயேசுவின் கட்டளை இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையாக பொருந்துகிறது. எஜமானரின் மாதிரியைப் பின்பற்றி, ராஜ்ய பிரசங்க ஊழியத்திலும் ‘சகல தேசங்களின் ஜனங்களை சீஷராக்குவதிலும்’ பங்குகொள்வது, உண்மையில் மகத்தான, அதிசயமான பாக்கியமாய் இருந்தது, இன்னும் இருக்கிறது.—3:2; 4:17; 10:7; 24:14, NW; 28:19.
30 மத்தேயுவின் சுவிசேஷம் உண்மையிலேயே “நற்செய்தி.” ஏவப்பட்டு எழுதப்பட்ட அதன் செய்தி, பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் அதற்குச் செவிசாய்த்தவர்களுக்கு “நற்செய்தி”யாக நிரூபித்தது; மேலும் இந்நாள்வரை “நற்செய்தி”யாக நிலைக்கும்படி யெகோவா தேவன் பார்த்துக்கொண்டார். கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களும் இந்தச் சுவிசேஷத்தின் வல்லமையை ஒப்புக்கொள்ளும்படி தூண்டப்படுகின்றனர். உதாரணமாக, இந்திய தலைவர் மோகன்தாஸ் காந்தி, இந்தியாவின் முன்னாள் வைசிராய் இர்வின் பிரபுவிடம் இவ்வாறு சொன்னதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது: “மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்து போதித்தவற்றை உம்முடைய நாடும் என்னுடைய நாடும் பின்பற்றினால், நாம் நம் நாட்டின் பிரச்சினைகளை மட்டுமல்ல; இந்த முழு உலகின் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவோம்.”f மற்றொரு சந்தர்ப்பத்தில் காந்தி சொன்னதாவது: “உங்கள்வசம் கொடுக்கப்பட்டிருக்கும் மலைப்பிரசங்கம் எனும் நீரூற்றில் பெருக்கெடுக்கும் நீரை நன்கு பருகுங்கள் . . . இந்தப் பிரசங்கத்தின் போதகம் நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது.”g
31 எனினும், கிறிஸ்தவ நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் உட்பட முழு உலகமும் பிரச்சினைகளில்தான் உழல்கிறது. இந்த மலைப்பிரசங்கத்தையும் மத்தேயு எழுதின நற்செய்தியின் மற்ற நலமார்ந்த அறிவுரை அனைத்தையும் பொக்கிஷம்போல பாதுகாத்து, அவற்றைப் படித்து, பின்பற்றினால் பெறும் நன்மையோ கோடி. ஆனால், இவற்றை உண்மை கிறிஸ்தவர்களான சொற்பப் பேரே அனுபவிக்கின்றனர். உண்மை மகிழ்ச்சியை கண்டடைதல், ஒழுக்கநெறிகள், திருமணம், அன்பின் வல்லமை, ஏற்கத்தக்க ஜெபம், ஆவிக்குரிய மதிப்பீடுகளுக்கு எதிராக பொருளாதார மதிப்பீடுகள், ராஜ்யத்தை முதலாவது தேடுவது, பரிசுத்தமானவற்றை மதித்தல், விழிப்புடனும் கீழ்ப்படிதலுடனும் இருப்பது—இவற்றின் சம்பந்தமாக இயேசுவின் சிறந்த அறிவுரைகளை மீண்டும் மீண்டும் படிப்பது பயனுள்ளது. ‘பரலோக ராஜ்யத்தின்’ நற்செய்தியைப் பிரசங்கிப்போருக்கு மத்தேயு 10-ம் அதிகாரம் இயேசுவின் ஊழியக் கட்டளைகளை அறிவுறுத்துகிறது. ‘கேட்பதற்குக் காதுகளுள்ள’ அனைவருக்கும் இயேசுவின் உவமைகள் முக்கிய பாடங்களைக் கற்பிக்கின்றன. மேலும், தம்முடைய ‘வந்திருத்தலின் அடையாளத்தைப்’ பற்றி இயேசு முன்னறிவித்த நுட்பமான தீர்க்கதரிசனங்கள் உறுதியான எதிர்கால நம்பிக்கை அளிக்கின்றன.—5:1–7:29; 10:5-42; 13:1-58; 18:1–20:16; 21:28–22:40; 24:3–25:46, NW.
32 மத்தேயுவின் சுவிசேஷம், நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் நிறைந்த புத்தகம். இந்த நிறைவேற்றங்களைப் புரியவைக்கும் நோக்குடனேயே எபிரெய வேதாகமத்திலிருந்து அவர் பல மேற்கோள்களை குறிப்பிட்டிருக்கிறார். இவை இயேசுவே மேசியா என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சிகள். ஏனெனில் இந்த தீர்க்கதரிசனங்களில் உள்ள எல்லா நுட்பவிவரங்களையும் திட்டமிட்டு நிறைவேற்றியிருப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை. உதாரணமாக, மத்தேயு 13:14, 15-ஐ ஏசாயா 6:9, 10 உடன்; மத்தேயு 21:42-ஐ சங்கீதம் 118:22, 23 உடன்; மற்றும் மத்தேயு 26:31, 56-ஐ சகரியா 13:7 உடன் ஒப்பிடுக. இத்தகைய நிறைவேற்றங்கள், மத்தேயு பதிவுசெய்த இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் யாவும் உரிய காலத்தில் நிச்சயம் நிறைவேறுமென்று உறுதியளிக்கின்றன. அவை ‘பரலோக ராஜ்யத்தைப்’ பற்றிய யெகோவாவின் உன்னத நோக்கங்கள் நிறைவேறுகையில் நடந்தேறும்.
33 ராஜ்ய அரசரின் வாழ்க்கையைப் பற்றிய மிக நுணுக்கமான விவரங்களையும் கடவுள் வெகு திருத்தமாய் முன்னறிவித்தார்! இந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களை தேவாவியால் ஏவப்பட்ட மத்தேயு எவ்வளவு உண்மையுடன் திருத்தமாய் பதிவுசெய்தார்! நீதியை நேசிப்போர், மத்தேயு புத்தகத்திலுள்ள இந்த எல்லா தீர்க்கதரிசன நிறைவேற்றங்களையும் வாக்குறுதிகளையும் ஆழ்ந்து சிந்திக்கலாம். அப்போது, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட அவர் உபயோகிக்கவிருக்கும் ‘பரலோக ராஜ்யத்தைப்’ பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் நிச்சயமாகவே மகிழலாம். “புதுப்படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.” சாந்தகுணமுள்ளோருக்கும் ஆவிக்குரிய பசிதாகமுள்ளோருக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்களையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரப்போவது இயேசு கிறிஸ்து ஆளும் இந்த ராஜ்யமே. (மத். 19:28, பொ.மொ.) “மத்தேயு எழுதின” ஊக்கமூட்டும் இந்த நற்செய்தியில் இவையெல்லாம் அடங்கியுள்ளது.
[அடிக்குறிப்புகள்]
a 1981 மறுபதிப்பு, தொ. V, பக்கம் 895.
b ஈ. சி. ரிச்சர்ட்ஸன் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, “Texte und Untersuchungen zur Geschichte der altchristlichen Literatur,” என்ற தொடரில் பிரசுரிக்கப்பட்ட லத்தீன் மூலவாக்கியத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது; லீப்ஸிக், 1896, தொ. 14, பக்கங்கள் 8, 9.
d சுவிசேஷங்களின் படிப்புக்கு அறிமுகம் (ஆங்கிலம்), 1896, பி. எஃப். வெஸ்ட்காட், பக்கம் 201.
e இயேசுவின் நாளில், ஒரு திநாரியம் ஒரு நாள் கூலிக்குச் சமம்; ஆகவே 100 திநாரியங்கள் ஓர் ஆண்டு கூலியில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கிற்குச் சமமாயிருந்தன. ஆறு கோடி திநாரியங்களை சேர்ப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் உழைக்க வேண்டும்.—வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 614.
f கிறிஸ்தவ விசுவாசத்தின் பொக்கிஷசாலை, 1949, எஸ். ஐ. ஸ்டூபர், டி. சி. கிளார்க் என்போரால் பதிப்பிக்கப்பட்டது, பக்கம் 43.
g மகாத்மா காந்தியின் கருத்துக்கள், (ஆங்கிலம்) 1930, சி. எஃப். ஆன்ட்ரூஸ் என்பவர் எழுதியது, பக்கம் 96.
[கேள்விகள்]
1. (அ) மனிதகுலத்திற்காக என்ன வாக்கை யெகோவா ஏதேன் முதற்கொண்டே கொடுத்துள்ளார்? (ஆ) மேசியாவில் நம்பிக்கை எவ்வாறு யூதருக்குள் உறுதியானது?
2. மேசியா தோன்றினபோது, நற்செய்தி பரவ சூழ்நிலைமைகள் எவ்வாறு மிக சாதகமாயிருந்தன?
3. (அ) இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பவிவரங்களைப் பதிவு செய்ய என்ன ஏற்பாட்டை யெகோவா செய்தார்? (ஆ) சுவிசேஷங்கள் ஒவ்வொன்றின் தனிச்சிறப்பு என்ன, அவை நான்கும் ஏன் அவசியம்?
4. முதல் சுவிசேஷத்தை எழுதினவரைப் பற்றி என்ன அறிந்திருக்கிறோம்?
5. முதல் சுவிசேஷத்தின் எழுத்தாளர் மத்தேயு என எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது?
6, 7. (அ) எப்போது, எந்த மொழியில் மத்தேயுவின் சுவிசேஷம் முதலில் எழுதப்பட்டது? (ஆ) அது யூதருக்காகவே முக்கியமாய் எழுதப்பட்டதென்று எது காட்டுகிறது? (இ) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின்படி மத்தேயுவில் யெகோவாவின் பெயர் எத்தனை தடவை வருகிறது, ஏன்?
8. மத்தேயு வரிவசூலிப்பவராக ஒருசமயம் இருந்தது எவ்வாறு அவருடைய சுவிசேஷத்தில் காட்டப்பட்டுள்ளது?
9. என்ன மையப்பொருளும் எழுத்துநடையும் மத்தேயுவின் தனித்தன்மையை காட்டுகின்றன?
10. எத்தனை சதவீத தகவல்கள் மத்தேயுவில் மாத்திரமே காணப்படுகின்றன, இந்தச் சுவிசேஷ விவரங்கள் எந்தக் காலப்பகுதிக்குரியவை?
11. (அ) இந்தச் சுவிசேஷம் எப்படி தொடங்குகிறது, என்ன தொடக்க சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன? (ஆ) மத்தேயு நம் கவனத்திற்கு கொண்டுவரும் சில தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் யாவை?
12. இயேசுவின் முழுக்காட்டுதலின்போதும் அதன் பின்னும் என்ன நடக்கிறது?
13. ஆர்வத்தைத் தூண்டும் என்ன வார்த்தைகள் கலிலேயாவில் யாவரறிய அறிவிக்கப்படுகின்றன?
14. தம்முடைய மலைப்பிரசங்கத்தில், எந்தெந்த மகிழ்ச்சிகளைப் பற்றி இயேசு பேசுகிறார், நீதியைப்பற்றி அவர் என்ன சொல்கிறார்?
15. ஜெபம், ராஜ்யம் ஆகியவற்றைப் பற்றி இயேசு என்ன சொல்கிறார்?
16. (அ) மற்றவர்களுடனான உறவுகளின்பேரில் இயேசுவின் அறிவுரை என்ன, கடவுளுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிவோரையும் கீழ்ப்படியாதோரையும் குறித்து என்ன சொல்கிறார்? (ஆ) அவருடைய பிரசங்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?
17. மேசியாவாக தம் அதிகாரத்தை இயேசு எவ்வாறு காட்டுகிறார், எப்படி கரிசனை காட்டுகிறார்?
18. (அ) இயேசு தம் அப்போஸ்தலருக்கு என்ன கட்டளையையும் அறிவுரையையும் கொடுக்கிறார்? (ஆ) ‘இந்தச் சந்ததிக்கு’ ஏன் ஆபத்து வரும்?
19. ஓய்வுநாளில் இயேசுவின் செயலை பரிசேயர்கள் குற்றப்படுத்திப் பேசுகையில், அவர்களை எவ்வாறு அவர் கண்டிக்கிறார்?
20. (அ) இயேசு ஏன் உவமைகளில் பேசுகிறார்? (ஆ) ராஜ்யத்தைப் பற்றிய என்ன உவமைகளை அவர் இப்பொழுது கொடுக்கிறார்?
21. (அ) என்ன அற்புதங்களை இயேசு நடப்பிக்கிறார், அவையனைத்தும் அவரை யாரென அடையாளங்காட்டுகின்றன? (ஆ) மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் குறித்து என்ன தரிசனம் கொடுக்கப்படுகிறது?
22. மன்னிப்பதைப் பற்றி இயேசு என்ன அறிவுரை கொடுக்கிறார்?
23. மணவிலக்கு, ஜீவனுக்கான வழி ஆகியவற்றைக் குறித்து இயேசு விளக்கிக் கூறுவது என்ன?
24. பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி வாரத்தில் மத எதிரிகளிடம் இயேசு எதிர்ப்படும் கேள்விகள் என்ன, அவர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?
25. இயேசு எவ்வாறு வேதபாரகரையும் பரிசேயரையும் கடுமையாய் கண்டிக்கிறார்?
26. ராஜாவிற்குரிய மகிமையில் தம்முடைய வந்திருத்தலைப் பற்றிய என்ன தீர்க்கதரிசன அடையாளத்தை இயேசு அளிக்கிறார்?
27. பூமியில் இயேசுவின் கடைசி நாளில் நடந்த சம்பவங்கள் யாவை?
28. என்ன மிகச் சிறந்த செய்தியை மத்தேயு தன் பதிவின் இறுதியில் சொல்கிறார், என்ன ஊழிய பொறுப்பை பற்றி குறிப்பிட்டு முடிக்கிறார்?
29. (அ) மத்தேயு புத்தகம், எபிரெய வேதாகமத்திற்கும் கிரேக்க வேதாகமத்திற்கும் இடையே எவ்வாறு பாலமாக அமைகிறது? (ஆ) இயேசு அனுபவித்த என்ன பாக்கியத்தை இன்றும் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கலாம்?
30. மத்தேயுவின் எந்தப் பகுதி அதன் நடைமுறை பயனுக்காக பிரபலமாகியுள்ளது?
31. மத்தேயுவின் அறிவுரைக்கு யார் உண்மையான மதித்துணர்வைக் காட்டியுள்ளனர், இந்தச் சுவிசேஷத்தை மீண்டும் மீண்டும் படிப்பது ஏன் பயனுள்ளது?
32. (அ) நிறைவேறின தீர்க்கதரிசனம் இயேசுவை மேசியாவென நிரூபிப்பதை விளக்குங்கள். (ஆ) இந்த நிறைவேற்றங்கள் என்ன உறுதியை இன்று நமக்கு அளிக்கின்றன?
33. நீதியை நேசிப்போர் எந்த அறிவிலும் நம்பிக்கையிலும் இப்பொழுது மகிழலாம்?