கொடுப்பதில்தான் சந்தோஷம்!
தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டின் எல்லையை தாண்டி இன்னொரு நாட்டிற்குள் ஒரு பஸ் போகவிருந்தது. அப்போது, “இந்த பஸ் போகலாம், ஆனா இந்த சீன நாட்டை சேர்ந்தவன் மட்டும் இங்க இருக்கட்டும்” என்ற வார்த்தைகள் பஸ்ஸில் இருந்த அலெக்ஸான்ட்ரா என்ற பெண்ணின் காதில் விழுந்தது. அதனால், என்ன நடக்கிறது என்று பார்க்க அலெக்ஸான்ட்ரா பஸ்ஸில் இருந்து இறங்கி போனாள். அங்கு ஒரு சீன இளைஞன், ஒரு காவல் அதிகாரியிடம் திக்கித் திணறி ஸ்பானிஷ் மொழி பேசிக்கொண்டிருந்தான். தன்னுடைய பிரச்சினையை சொல்லி புரியவைக்க அவன் முயற்சி செய்துக்கொண்டிருந்தான். ஆனால், அந்த அதிகாரிக்கு அவன் சொன்னது புரியவே இல்லை. அதனால், அலெக்ஸான்ட்ரா அவனுக்கு உதவி செய்தாள். யெகோவாவின் சாட்சிகளுடைய சீன மொழி சபைக்கு போனதால் அவளுக்கு சீன மொழி தெரிந்திருந்தது. அதனால், அந்த இளைஞன் சொன்னதை அந்த அதிகாரியிடம் எடுத்து சொன்னாள்.
தான் அந்த நாட்டின் குடிமகன் என்றும் சமீபத்தில் தன்னுடைய பணத்தையும் ஆவணங்களையும் யாரோ திருடிவிட்டார்கள் என்றும் அந்த இளைஞன் சொன்னான். ஆனால், ஆரம்பத்தில் அந்த அதிகாரி அதை நம்பவில்லை. அந்த இளைஞனும் அலெக்ஸான்ட்ராவும் ஆள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நினைத்தார். கடைசியில், ஒருவழியாக அவன் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். இருந்தாலும், அந்த அப்பாவி இளைஞன் அபராதம் கட்ட வேண்டியிருந்தது. அவனிடம் பணம் இல்லாததால் அலெக்ஸான்ட்ரா அவனுக்கு 20 டாலர் கொடுத்து உதவினாள். அவள் செய்த உதவிக்கு நன்றி சொல்ல அவனிடம் வார்த்தைகளே இல்லை! அவள் கொடுத்ததைவிட அதிகமான பணத்தை திருப்பி கொடுப்பதாக அவன் சொன்னான். ஆனால், எந்த கைமாறும் எதிர்பார்த்து உதவி செய்யவில்லை என்று அலெக்ஸான்ட்ரா சொன்னாள். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது தன் கடமை என்று அவள் நினைத்தாள். அப்படி செய்வது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிறகு, அவள் அந்த இளைஞனுக்கு சில பைபிள் புத்தகங்களை கொடுத்தாள். யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிக்கவும் உற்சாகப்படுத்தினாள்.
முன்பின் தெரியாதவர்களுக்கு இப்படிப்பட்ட உதவி செய்வது எவ்வளவு பெரிய விஷயம்! எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் இப்படிப்பட்ட அன்பை காட்டுகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட அதை செய்கிறார்கள். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசுவும் சொன்னார். (அப்போஸ்தலர் 20:35) உங்களுடைய நலனைப் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியிருந்தால் உங்களுக்கு நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்! இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
‘சந்தோஷமாகக் கொடுங்கள்’
எந்தளவு மற்றவர்களுக்கு கொடுக்கிறோமோ அந்தளவு நாம் சந்தோஷமாக இருப்போம். அப்போஸ்தலன் பவுல் வாழ்ந்த காலத்தில், சில கிறிஸ்தவர்கள் கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு தாராளமாக கொடுத்து உதவினார்கள். இப்படி ‘சந்தோஷமாகக் கொடுப்பவர்களைத்தான் கடவுள் நேசிக்கிறார்’ என்று பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 8:4; 9:7) அந்த கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக இருந்ததால் மற்றவர்களுக்கு கொடுத்தார்கள் என்று அவர் சொல்லவில்லை. மற்றவர்களுக்கு தாராளமாக கொடுக்க முடிந்ததால்தான் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.
ஒரு ஆராய்ச்சி சொல்கிறபடி, நாம் தாராளமாக கொடுக்கும்போது “நம் மூளையின் சில பாகங்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதாவது, சந்தோஷமாக இருப்பது... நம்பிக்கையாக இருப்பது... சமுதாயத்தோடு நமக்கு இருக்கும் தொடர்பு... போன்றவற்றை கட்டுப்படுத்தும் நம் மூளையின் பாகம் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. அதனால், நமக்கு திருப்தியும் மனநிறைவும் கிடைக்கிறது.” இன்னொரு ஆராய்ச்சி என்ன சொல்கிறது பாருங்கள்: “நம் பணத்தை நமக்காக செலவு செய்யும்போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோஷம்தான் அதிகம்.”
‘மத்தவங்களுக்கு கொடுத்து உதவுற நிலைமையில நான் இல்லயே’ என்று நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! ‘கொடுப்பதால்’ கிடைக்கும் சந்தோஷத்தை எல்லாராலும் அனுபவிக்க முடியும். ஏனென்றால், மற்றவர்களுக்கு நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படிப்பட்ட மனதோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்த பத்திரிகையை வெளியிடுகிறவர்களுக்கு யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பெண் கொஞ்சம் நன்கொடையோடு சேர்த்து இப்படி எழுதி அனுப்பினார்: “இவ்வளவு நாளா என்னால நிறைய நன்கொடை கொடுக்க முடியில. ஏதோ கொஞ்சம் நன்கொடைய மட்டும் ராஜ்ய மன்றத்தில இருக்க நன்கொடை பெட்டியில போடுவேன். ஆனா, நான் யெகோவாவுக்கு கொடுத்ததவிட அவர் எனக்கு நிறைய கொடுத்திருக்காரு. . . . அவருக்கு கொடுக்கிறதுக்கு எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். இப்படி செய்றது எனக்கு திருப்தியா இருக்கு.”
பணம் மட்டும் கிடையாது, நிறைய விதங்களில் நம்மால் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ முடியும்.
கொடுப்பது—ஆரோக்கியமாக இருக்க உதவும் மருந்து
“கருணையுள்ளவன் தனக்கு நன்மை செய்துகொள்கிறான். ஆனால், கொடூரமானவன் தனக்குக் கஷ்டத்தை தேடிக்கொள்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:17) கருணையுள்ளவர்கள் தாராள குணமுள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக தங்களுடைய நேரம், சக்தி என எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராகயிருப்பார்கள். மற்றவர்கள் மேல் அக்கறை காட்டுவார்கள். எல்லா சமயங்களிலும் இப்படி தாராள குணத்தைக் காட்டுபவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பவர்களுக்கு வலி, வேதனை, மன அழுத்தம் போன்றவை அதிகம் வருவதில்லை என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அவர்களால் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க முடிகிறது. மல்ட்டிப்பிள் ஸ்கிலிரோஸிஸ் (பக்கவாதம்), எச்ஐவி போன்ற வியாதிகளால் கஷ்டப்படுகிறவர்கள் தாராள குணத்தைக் காட்டும்போது தங்களுடைய வியாதியால் வரும் வேதனையை சமாளிக்க முடிகிறது. குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டுவர முயற்சி செய்பவர்கள்கூட தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களுடைய மன அழுத்தம் குறைகிறது. திரும்பவும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க முடிகிறது.
நம் ஆரோக்கியத்துக்கும் தாராள குணத்துக்கும் என்ன சம்பந்தம்? மற்றவர்களுக்காக அனுதாபப்படும்போது... கருணை காட்டும்போது... நம் மனநிலை மாறும். தன்னம்பிக்கை கிடைக்கும், வாழ்க்கையில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. மற்றவர்களுக்கு கொடுத்து உதவும்போது நமக்கிருக்கும் மன அழுத்தம், ரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகள் குறைந்துவிடும். மணத்துணையை பறிக்கொடுத்தவர்கள் மேலே சொல்லப்பட்ட குணங்களைக் காட்டினால் அவர்களால் மனச்சோர்விலிருந்து சீக்கிரத்தில் மீண்டுவர முடியும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது பாருங்கள்!
உங்கள் தாராள குணம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும்
இயேசு தன்னுடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.” (லூக்கா 6:38) மற்றவர்களுக்கு நீங்கள் தாராளமாக கொடுக்கும்போது அவர்களும் உங்களுக்கு தாராளமாக கொடுப்பார்கள், நன்றியோடு இருப்பார்கள். தாராள குணத்தைக் காட்ட கற்றுக்கொள்வார்கள். அதனால், நல்ல நட்பு மலரவும் வாய்ப்பு இருக்கிறது.
மனித உறவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். “சுயநலம் இல்லாத அன்பை காட்டுகிறவர்கள் அதே அன்பை காட்டும்படி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறார்கள்.” “கருணையுள்ள ஒருவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை படித்தாலே போதும் அவரைப் போலவே நடந்துகொள்ள மற்றவர்களும் தூண்டப்படுவார்கள்.” ஒரு ஆராய்ச்சி சொல்வதுபோல் ‘ஒருவருக்கு இருக்கும் நல்ல குணங்கள் அவரை சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆட்களை தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதில் சிலர் அந்த நபருக்கு முன்பின் தெரியாதவர்களாக இருக்கலாம், அவரை பார்க்காதவர்களாகக்கூட இருக்கலாம்.’ தாராள குணமுள்ள ஒரு நபர் செய்த நல்ல செயலைப் பார்த்து, ஒருவர் மாற்றி ஒருவர் என எல்லாரும் தாராள குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நல்ல மக்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் வாழ ஆசைப்படுவீர்கள், இல்லையா? கொடுப்பதை எல்லாரும் பழக்கமாக்கிக்கொண்டால் நிச்சயம் அளவில்லாத சந்தோஷம் கிடைக்கும்.
அமெரிக்காவில் இருக்கும் ப்ளோரிடா நகரத்தை பயங்கரமான சூறாவளி ஒன்று தாக்கியது. யெகோவாவின் சாட்சிகளின் நிவாரண குழு பாதிக்கப்பட்ட வீடுகளை சரி செய்ய வந்தார்கள். ஒரு சாட்சியினுடைய வீட்டை சரிசெய்ய தேவையான பொருள்கள் வரும்வரை அவர்கள் அந்த வீட்டில் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் பக்கத்து வீட்டின் வேலி சேதமாகியிருந்ததை கவனித்தார்கள். அதனால், அதை சரிசெய்து கொடுத்தார்கள். அதைப் பார்த்து அந்த வீட்டின் சொந்தக்காரர் ரொம்ப சந்தோஷப்பட்டார். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்துக்கு அவர் இப்படி கடிதம் எழுதினார்: “அவங்க செஞ்ச உதவிய நான் மறக்கவே மாட்டேன். இப்படிப்பட்ட அன்பான மக்களை நான் இதுவரைக்கும் பாத்ததே இல்ல.” யெகோவாவின் சாட்சிகள் செய்யும் அருமையான வேலைகளுக்கு நன்றிக் காட்ட விரும்பியதால் தாராளமாக அவர் நன்கொடையை அனுப்பினார்.
கொடைவள்ளலான கடவுளைப் பின்பற்றுங்கள்
“மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற உணர்வு மனிதர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது” என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இன்னொரு ஆராய்ச்சி இப்படி சொல்கிறது: குழந்தைகள் “பேச கற்றுக்கொள்வதற்கு முன்பே சுயநலம் இல்லாத அன்பை காட்டுகிறார்கள்.” காரணம்? மனிதர்கள் ‘கடவுளுடைய சாயலில்’ படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், அவருக்கு இருக்கும் நல்ல குணங்கள் மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கிறது.—ஆதியாகமம் 1:27.
கடவுளிடம் இருக்கும் அருமையான குணங்களில் தாராள குணமும் ஒன்று. அவர் நமக்கு உயிரை கொடுத்திருக்கிறார், நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 14:17; 17:26-28) இப்படிப்பட்ட அன்பான கடவுளைப் பற்றியும் அவர் நமக்காக செய்திருக்கும் அருமையான ஏற்பாடுகளைப் பற்றியும் அவருடைய வார்த்தையான பைபிளிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் பைபிள் சொல்கிறது.a (1 யோவான் 4:9, 10) தாராள குணத்தின் ஊற்றுமூலமே யெகோவா தேவன்தான். அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கும் நீங்களும் அவரைப் போல தாராள குணத்தைக் காட்டினால் நிச்சயம் சந்தோஷமாக இருப்பீர்கள். அவருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.—எபிரெயர் 13:16.
அலெக்ஸான்ட்ரா அனுபவத்தில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். அவள் அந்த இளைஞனுக்கு பண உதவி செய்ததை பஸ்ஸில் இருந்த ஒருவர் பார்த்து, ‘உங்க பணத்த நீங்களே தூக்கிப் போட்டதுக்கு சமம்’ என்று சொன்னார். ஆனால், அந்த இளைஞன் தன் நண்பர்களின் உதவியோடு அலெக்ஸான்ட்ராவுக்கு அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டான். அதுமட்டுமல்ல, அலெக்ஸான்ட்ரா சொன்னதுபோல் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிக்கவும் ஆரம்பித்தான். 3 மாதத்துக்கு பிறகு பெரு நாட்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு சீன மொழியில் நடந்தது. அங்கே அலெக்ஸான்ட்ரா அந்த இளைஞனை சந்தித்தாள். அலெக்ஸான்ட்ரா செய்த உதவிக்கு நன்றி காட்டுவதற்காக அந்த இளைஞன் அவளையும் மாநாட்டுக்கு அவளோடு வந்திருந்தவர்களையும் தன்னுடைய ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்தான்.
மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. ஆனால் அதைவிட பெரிய சந்தோஷம் எதில் இருக்கிறது தெரியுமா? எல்லா நல்ல பரிசுகளையும் கொடுத்த யெகோவா தேவனோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதில்தான் இருக்கிறது. (யாக்கோபு 1:17) கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷ மழையில் நனைய நீங்கள் தயாரா?
a இன்னும் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.jw.org வெப்சைட்டில் இருந்து இதை டவுன்லோட் செய்யலாம். வெளியீடுகள் >புத்தகங்கள், சிறு புத்தகங்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.