உயிர்த்தெழுதல் நிஜமே!
“மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 24:15.
1. உயிர்த்தெழுதல் நம்பிக்கை நிஜம்தானா?
யெகோவா ஓர் அபார நம்பிக்கையை நமக்குமுன் வைத்திருக்கிறார். அதுதான் உயிர்த்தெழுதல் நம்பிக்கை. இது நிஜம்தானா? இதில் சந்தேகம் வேண்டாம்! இறந்தவர்கள் உயிரடைந்து எழுவர் என்பதாக அவருடைய வார்த்தை சொல்கிறது. மரணம் எனும் நித்திரையில் இருப்பவர்களுக்காக யெகோவா கொண்டுள்ள நோக்கம் நிச்சயம் நிறைவேறும். (ஏசாயா 55:11; லூக்கா 18:27) இதை கடவுள் ஏற்கெனவே நடத்திக் காட்டியிருக்கிறார்.
2. உயிர்த்தெழுதல் நம்பிக்கை எப்படியெல்லாம் நமக்கு உதவும்?
2 தாங்க முடியாத டென்ஷனால் நாம் தத்தளிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, இயேசு கிறிஸ்து மூலம் கடவுள் இறந்தவர்களை உயிருடன் எழுப்புவார் என்ற நம்பிக்கை நம்மைத் தாங்கும். உயிர்த்தெழுதல் நிஜமாகவே நடக்கும்! இந்த உறுதிதான் நாம் மரணத்தின் விளிம்பில் ஊசலாட நேரிட்டாலும் யெகோவாவுக்கு நம் உத்தமத்தைக் காத்துக்கொள்ள உதவும். அதே சமயத்தில், பைபிளில் பதிவாகியுள்ள உயிர்த்தெழுதல் சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதும் நமக்குத் தெம்பூட்டும். இந்த அற்புதங்கள் அனைத்துமே உன்னத அரசராகிய யெகோவா தேவனின் சக்தியால் நடந்தேறின.
இறந்தவர்கள் உயிர்த்தெழக் கண்டவர்கள்
3. சாறிபாத்தைச் சேர்ந்த விதவையின் மகன் இறந்தபோது கடவுளின் உதவியால் எலியா என்ன செய்தார்?
3 கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகளும் அசைக்க முடியாத விசுவாசம் காட்டினார்கள். இதைப் பற்றி படிக்கப் படிக்க நாம் பரவசமடைவோம். இதைப் பற்றி பவுல் எழுதினார்: “ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்.” (எபிரெயர் 11:35; 12:1) இப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தி, ஃபொனிஷிய பட்டணமாகிய சாறிபாத்தைச் சேர்ந்த ஓர் ஏழை விதவை. அவள் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலியாவை உபசரித்தாள். இதனால் அங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில், அவளிடம் இருந்த மாவும் எண்ணெயும் எடுக்க எடுக்க குறையவேயில்லை. இந்த அற்புதம் மட்டும் நடந்திராவிட்டால், அவளும் அவளது ஒரே மகனும் இறந்திருப்பர். ஆனால், கண்மணி போல் காத்துவந்த அந்த ஒரே மகன் ஒருநாள் இறந்துவிட்டான். அந்தச் சமயத்தில், எலியா ஒரு கட்டிலின்மேல் அவனைக் கிடத்தினார். அவன்மீது மூன்று தரம் குப்புறப் படுத்து உருக்கமாக ஜெபித்தார்: “என் கடவுளே, யெகோவாவே, இந்தப் பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்பிவரச் செய்தருளும்” என்றார். கடவுள் அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். எப்படி? அந்தப் பையனின் உயிர்சக்தியை மறுபடியும் அவனுக்குள் வரச்செய்தார். (1 இராஜாக்கள் 17:8-24, தி.மொ.) அந்த விதவைக்கு எப்படி இருந்திருக்கும்! அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது. ஏனெனில் அவளது விசுவாசத்தின் பலனாக, சரித்திரத்திலேயே முதன்முதலாக உயிர்த்தெழுந்த மனிதன் என்ற பெயரைத் தட்டிச்சென்றது அவளுடைய மகனல்லவா!
4. சூனேமில் எலிசா நடத்திய அற்புதம் எது?
4 சூனேம் என்ற நகரத்தில் வசித்துவந்த மற்றொரு பெண்ணின் வீட்டிலும் ஓர் உயிர்த்தெழுதல் சம்பவம் நடந்தது. அவள் ஒரு வயதானவரின் மனைவி. எலிசா தீர்க்கதரிசிக்கும் அவருடைய வேலைக்காரனுக்கும் அவள் குறிப்பறிந்து உதவினாள். இதனால், ஒரு மகனை பெற்றெடுப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டாள். ஆனால் அந்த மகன் ஒருநாள் இறந்துவிட்டான். உடனே எலிசா தீர்க்கதரிசியை அழைத்துவந்தாள். அவர் வந்தார். ஜெபித்துவிட்டு தான் செய்ய வேண்டிய வேலையைச் செய்தார். அப்போது, “பிள்ளையின் உடல் அனல்கொண்டது.” அவன் “ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.” உயிரடைந்த மகனைக் கண்ட தாயும் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பாள்; தாயைக் கண்ட மகனும் ஆனந்தப் பரவசம் அடைந்திருப்பான். (2 இராஜாக்கள் 4:8-37; 8:1-6) ஆனால் அவர்கள் இதைவிட அதிகப் பரவசம் அடையப்போகும் ஒரு நாள் வருகிறது. அதுதான் ‘மேன்மையான உயிர்த்தெழுதல்’ நடக்கப்போகும் நாள். முதலில் நடந்த உயிர்த்தெழுதலுடன் ஒப்பிட, இது மேம்பட்டதுதான். ஏனெனில் இந்த உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மறுபடியும் இறக்கவே தேவையில்லை! இந்த உயிர்த்தெழுதலை ஏற்பாடு செய்த அன்புக் கடவுள் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!—எபிரெயர் 11:35.
5. இறந்துபோன எலிசாவால் அற்புதம் நடந்தது எப்படி?
5 எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்ட பிறகும்கூட, அவருடைய எலும்புகள் பரிசுத்த ஆவியைப் பெற்று பலங்கொண்டன. எப்படியென்றால், அவரது உடலை அடக்கம் செய்திருந்த இடத்தில் என்ன நடந்ததென்று நாம் வாசிப்பதாவது: “மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம் பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.” (2 இராஜாக்கள் 13:20, 21) அந்த மனிதனுக்குத் தலைகால் புரிந்திருக்காது! எல்லையில்லா ஆனந்தமும் அடைந்திருப்பான். நம் வீட்டிலும் யாராவது உயிருடன் வந்தால் நமக்கும் அப்படித்தான் இருக்கும். அதுவே யெகோவா தேவனின் நோக்கம்.
இறந்தவர்களை இயேசு எழுப்பினார்
6. நாயீன் ஊருக்கு அருகில் இயேசு நடத்திய அற்புதம் என்ன, இது நம் உள்ளத்தைத் தொடுவது எவ்வாறு?
6 இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து நித்தியமாய் வாழ்வார்கள். கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்கு இந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளார். கடவுள் அருளும் வல்லமையால் அப்படிப்பட்ட ஓர் அற்புதம் நடக்கும். நாயீன் ஊருக்கு அருகில் நடந்த ஒரு சம்பவம் இதை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வாலிபனின் உடலை அடக்கம் செய்வதற்காக நகரத்திற்கு வெளியே சுமந்துசென்றவர்கள் மாரடித்துப் புலம்பியதைக் கண்ட இயேசு உள்ளம் உருகினார். அவன் தன் தாய்க்கு ஒரே பிள்ளை. அவளோ கணவனை இழந்தவள். இயேசு அவளிடம்: “அழாதே” என்றார். பின்பு அவர் அந்தப் பாடையைத் தொட்டு: “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். உடனே அவன் எழுந்து உட்கார்ந்து, சகஜமாகப் பேசினான். (லூக்கா 7:11-15) உயிர்த்தெழுதல் நிஜமே என்ற நம்பிக்கைக்கு உரமூட்டுகிறது இந்த அற்புதம்.
7. யவீருவின் மகளுக்கு என்ன நடந்தது?
7 கப்பர்நகூமில் இருந்த ஓர் ஜெப ஆலயத் தலைவரின் பெயர் யவீரு. அவரது மகளுக்கு 12 வயது. தன் அருமை மகள் உயிருக்குப் போராடியதைக் கண்ட அவரது நெஞ்சம் துடித்தது. எப்படியாவது அவள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று இயேசுவிடம் கெஞ்சினார். அதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவருக்கு தகவல் வந்தது. யவீருவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று இயேசு அவரிடம் சொல்லி யவீருவின் வீட்டிற்கு சென்றார். பார்த்தால் வீடு முழுக்க ஒரே அழுகையும் புலம்பலுமாய் இருந்தது. இயேசு அவர்களிடம்: “பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” என்று சொன்னதுதான் தாமதம்; அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்தார்கள். ஏனெனில் அவள் நிஜமாகவே இறந்துவிட்டாளே! ஆனால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஆட்களை எவ்வாறு எழுப்ப முடியுமோ, அவ்வாறே நீண்ட உறக்கத்திலிருந்தும் உயிர்த்தெழுப்ப முடியும் என்பதை இயேசு செய்து காட்டவிருந்தார். அந்தப் பிள்ளையின் கையைப் பிடித்து: “சிறுபெண்ணே எழுந்திரு” என்றார். அவள் உடனடியாக எழுந்தாள், அவளுடைய பெற்றோர் “மிகுந்த ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.” (மாற்கு 5:35-43; லூக்கா 8:49-56) வரவிருக்கும் பரதீஸ் பூமியில் இறந்தவர்கள் வரிசையாக உயிர்த்தெழுந்து வரும்போது அவரவரது குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியம் தாளாமல் ‘பிரமிப்பார்கள்’ என்பதில் சந்தேகமில்லை.
8. லாசருவின் கல்லறைக்கு முன்பு இயேசு என்ன செய்தார்?
8 லாசரு என்பவன் இறந்துபோய் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு, அவனை வைத்த கல்லறைக்கு இயேசு வந்து அதன் வாசலில் இருந்த கல்லைப் புரட்டும்படி செய்தார். பின்பு சத்தமாக ஜெபித்தார். அப்போதுதானே இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். இயேசு கடவுளின் வல்லமையால்தான் அற்புதம் செய்துவந்தார் என்ற உண்மைதான் அது! பின்பு, “லாசருவே, வெளியே வா” என்று இயேசு உரத்த சத்தமாய் கூப்பிட்டார். அவன் வெளியில் வந்தான்! பிரேதத் துணிகளால் தன் முகம், கை கால்களில் சுற்றப்பட்டிருந்த அதே நிலையில் வெளிவந்தான். “இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள்,” என்று இயேசு சொன்னார். இந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்ட லாசருவின் உறவினர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள் லாசருவின் சகோதரிகளான மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் ஆறுதல் சொல்ல வந்திருந்தார்கள். (யோவான் 11:1-45) இந்த விவரத்தை நீங்கள் படிக்கையில், கடவுளால் வரவிருக்கும் புதிய உலகத்தில் உங்களுக்குப் பிரியமானவர்களும் உயிரோடு எழுப்பப்படலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறதல்லவா?
9. இறந்தவர்களை இயேசுவால் உயிர்த்தெழுப்ப முடியும் என்று ஏன் நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
9 முழுக்காட்டுபவனான யோவான் சிறையில் இருந்தபோது இயேசு இந்த ஊக்கமூட்டும் செய்தியை அவருக்கு அனுப்பினார்: “குருடர் பார்வையடைகிறார்கள், . . . மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்.” (மத்தேயு 11:4-6) பூமியிலிருக்கும்போதே இயேசு மரித்தோரை உயிர்த்தெழுப்பினார்; அப்படியிருக்க, வல்லமைவாய்ந்த ஆவி சிருஷ்டியாக பரலோகத்திற்குச் சென்று, கடவுளே அவருக்கு அதிகாரம் அளித்தபிறகு அவரால் நிச்சயமாக மரித்தோரை உயிர்த்தெழுப்ப முடியும். இயேசு, ‘உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்.’ வெகு சீக்கிரத்தில், “ஞாபகார்த்த பிரேதக்குழிகளில் இருப்போர் எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள்” என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!—யோவான் 5:28, 29, NW; 11:25.
நம்பிக்கைக்கு உரமூட்டும் உயிர்த்தெழுதல்கள்
10. ஓர் அப்போஸ்தலன் முதன்முதலில் உயிர்த்தெழுப்பிய அற்புதத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?
10 ராஜ்யத்தைப் பிரசங்கிக்கும்படி தம் அப்போஸ்தலர்களை அனுப்பினபோது, “மரித்தோரை எழுப்புங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:5-8) கடவுளுடைய வல்லமையால்தான் மரித்தோரை உயிர்த்தெழுப்ப முடியும். பொ.ச. 36-ல் யோப்பா பட்டணத்தில், தேவபக்தியுள்ள தொற்காள் (தபீத்தாள்) இறந்துவிட்டாள். அவள் உயிரோடிருந்தபோது ஏழை விதவைகளுக்கு அங்கிகளை நெய்து கொடுத்தாள்; இன்னும் இதுபோன்ற நற்காரியங்களைச் செய்துவந்தாள். அவள் யார் யாருக்கு அவ்வாறு உதவி செய்திருந்தாளோ, அவற்றை அனுபவித்தவர்கள் இவற்றையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதனர். சீஷர்கள் அவளுடைய உடலை அடக்கம் பண்ண ஏற்பாடுகள் செய்தனர்; அப்போஸ்தலன் பேதுருவுக்கும் தகவல் சொல்லி அனுப்பி அங்கு உடனே வரும்படி அழைத்தனர். அவர் வந்தால் அவர்களுக்கு ஒருவேளை ஆறுதலாக இருக்கும் என நினைத்திருக்கலாம். (அப்போஸ்தலர் 9:32-38) அவர், எல்லாரையும் மேல்வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்; பின்பு ஜெபித்தார். “தபீத்தாளே, எழுந்திரு” என்றார்! அவள் தன் கண்களைத் திறந்து, எழுந்து உட்கார்ந்தாள். பேதுரு தன் கையைக் கொடுத்தபோது, அதைப் பிடித்துக்கொண்டே எழுந்துவிட்டாள். ஓர் அப்போஸ்தலன் முதன்முதலில் உயிர்த்தெழுப்பிய இந்த அற்புத செய்தி ஊரெல்லாம் பரவியது; இதனால் அநேகர் விசுவாசிகளானார்கள். (அப்போஸ்தலர் 9:39-42) இந்த விவரத்தாலும் நாம் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கலாம்.
11. பைபிளில் பதிவாகியுள்ள கடைசி உயிர்த்தெழுதல் எது?
11 பைபிளில் பதிவாகியுள்ள கடைசி உயிர்த்தெழுதல் துரோவாவில் நடந்தது. தன் மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது பவுல் அங்கு தங்கினார். அவர் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நடுராத்திரி ஆகிவிட்டது. அப்போது ஒரு வாலிபன் அதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பெயர் ஐத்திகு. அவன் மூன்றாவது மாடியிலிருந்த ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். ஜன நெருக்கடியாலோ விளக்குகளின் சூட்டினாலோ மிகவும் களைப்படைந்துபோய் தூங்கிவிட்டான். திடீரென்று தடுமாறி தொப்பென்று கீழே விழுந்துவிட்டான். பார்த்தால், பேச்சில்லை, மூச்சுமில்லை. “மரித்தவனாக எடுக்கப்பட்டான்.” அப்போது பவுல் ஐத்திகுமீது குப்புறப் படுத்து, அவனை அணைத்துக்கொண்டு அனைவரையும் பார்த்து: “கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது” என்று சொன்னார். அந்த வாலிபனுக்கு உயிர் வந்துவிட்டது என்ற அர்த்தத்தில் அவ்வாறு சொன்னார். அதைப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை; அவர்கள் “மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.” (அப்போஸ்தலர் 20:7-12) இவற்றைப் படிக்கும் கடவுளுடைய ஊழியர்களும் ஆறுதல் அடைந்துள்ளனர். எப்படியும் கடவுள் தம் வாக்கை நிறைவேற்றுவார் என்று அவர்கள் நம்புகின்றனர். அதனால், ஒரு காலத்தில் கடவுளுடைய சேவையில் தங்களோடு சேர்ந்து ஊழியம் செய்தவர்கள் இப்போது தங்கள் மத்தியில் இராவிட்டாலும், சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்று காத்திருக்கின்றனர்.
உயிர்த்தெழுதல்—ஒரு நெடுங்கால நம்பிக்கை
12. ரோம தேசாதிபதி பேலிக்ஸுக்கு முன்பு நிறுத்தப்பட்ட பவுல் தனக்கு என்ன நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்?
12 ரோம தேசாதிபதி பேலிக்ஸுக்கு முன்பாக விசாரணைக்கு நிற்கையில், பவுல் இவ்வாறு சாட்சிபகர்ந்தார்: “நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து, நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:14, 15) கடவுளுடைய வார்த்தையின் பாகமாக இருக்கும் ‘நியாயப்பிரமாணம்’ மரித்தோர் எழுப்பப்படுவதைப் பற்றி எவ்வாறு குறிப்பிடுகின்றன?
13. கடவுள் முதன்முதலாக தீர்க்கதரிசனம் உரைத்தபோது, உயிர்த்தெழுதலைப் பற்றியும் குறிப்பாக தெரிவித்தார் என ஏன் சொல்லலாம்?
13 கடவுள் முதன்முதலாக ஏதேனில் தீர்க்கதரிசனம் உரைக்கையில், உயிர்த்தெழுதலைப் பற்றி குறிப்பாகத் தெரிவித்தார். அதாவது, “பழைய பாம்பாகிய” பிசாசான சாத்தானுக்குத் தீர்ப்பளிக்கையில், கடவுள் இவ்வாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:14, 15) ஸ்திரீயினுடைய வித்தின் குதிங்காலை நசுக்குவது, இயேசு கிறிஸ்துவைக் கொல்வதைக் குறித்தது. அதன்பின் அந்த வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்க வேண்டுமென்றால், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட வேண்டும்.
14. எவ்வாறு யெகோவா ‘மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்?’
14 இயேசு இவ்வாறு அறிவித்தார்: “மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப் பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை [யெகோவாவை, NW] ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே.” (லூக்கா 20:27, 37, 38; யாத்திராகமம் 3:6) ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் மரித்தார்கள்; ஆனால், அவர்களை உயிர்த்தெழுப்பும்படியான கடவுளுடைய நோக்கம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். எனவே, அவருக்கு அவர்கள் உயிரோடிருப்பதுபோல் இருந்தார்கள்.
15. ஆபிரகாம் என்ன காரணத்தோடு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்தார்?
15 ஆபிரகாம் காரணத்தோடுதான் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்தார். ஏனெனில், அவருக்கும் அவருடைய மனைவி சாராளுக்கும் பிள்ளை பெறும் வயது கடந்துவிட்டது. சொல்லப்போனால் அவர்களது பிள்ளை பிறப்பிக்கும் சக்தியே செத்துவிட்டது. இந்நிலையில், கடவுள் அற்புதமாய் அந்தச் சக்திக்கு உயிர் கொடுத்தார். கிட்டத்தட்ட இது ஓர் உயிர்த்தெழுதல்தான்! (ஆதியாகமம் 18:9-11; 21:1-3; எபிரெயர் 11:11, 12) அவர்கள் மகன் ஈசாக்குக்கு ஏறக்குறைய 25 வயதானபோது, அவனை பலியிடும்படி கடவுள் ஆபிரகாமிடம் சொன்னார். எனினும், ஆபிரகாம் ஈசாக்கை வெட்ட கையை ஓங்கிய நேரம் பார்த்து, யெகோவாவின் தூதன் அவர் கையைத் தடுத்து நிறுத்தினார். ஈசாக்கை ‘மரித்தோரிலிருந்தெழுப்பக் கடவுள் வல்லவரென்று [ஆபிரகாம்] எண்ணினார், அப்படியே அவனை அடையாளமாகப் பெற்றுக்கொண்டார்.’—எபிரெயர் 11:17-19, தி.மொ.; ஆதியாகமம் 22:1-18.
16. இறந்த ஆபிரகாம் எதற்கு காத்திருக்கிறார்?
16 வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய மேசியாவின் ஆட்சியில் உயிர்த்தெழுதல் நடக்கும் என ஆபிரகாம் நம்பினார். மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பே தம்முடைய பரலோக ஸ்தானத்திலிருந்து கடவுளுடைய குமாரன், ஆபிரகாமின் விசுவாசத்தை தெள்ளத்தெளிவாக கவனித்தார். எனவேதான் மனிதனாக பூமியில் சஞ்சரித்தபோது இயேசு கிறிஸ்து, யூதரிடம் இவ்வாறு உறுதியாக சொன்னார்: “உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் எனது நாளைக் காண ஆவல்கொண்டு மகிழ்ந்திருந்தான்.” (யோவான் 8:56-58, தி.மொ.; நீதிமொழிகள் 8:30, 31) ஆபிரகாம் இறந்துவிட்டார் என்பது உண்மைதான்; ஆனால் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தில் பூமியில் வாழும் எதிர்பார்ப்புடன் உயிர்த்தெழ காத்திருக்கிறார்.—எபிரெயர் 11:8-10, 13.
நியாயப்பிரமாணம், சங்கீதங்களிலிருந்து அத்தாட்சி
17. ‘நியாயப்பிரமாணத்தில் எழுதியிருப்பதற்கும்’ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
17 உயிர்த்தெழுதலைப் பொறுத்தமட்டில் ‘நியாயப்பிரமாணத்தில் எழுதியிருப்பது’ எதுவோ அதேதான் பவுலின் நம்பிக்கையும். இஸ்ரவேலரிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். நீங்கள் அங்கீகரிக்கப்படும்படி ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் [நிசான் 16-ன்போது] யெகோவாவின் சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்.” (லேவியராகமம் 23:9-14, தி.மொ.) ஒருவேளை இந்தக் கட்டளையை மனதில் வைத்து பவுல் இவ்வாறு எழுதியிருக்கலாம்: “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.” பொ.ச. 33-ன் நிசான் 16-ல் ‘முதற்பலனாக’ இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். பின்னால், அவருடைய வந்திருத்தலின்போது, ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அவரைப் பின்பற்றின இவர்கள், ‘பிற்பட்ட பலனானவர்கள்.’—1 கொரிந்தியர் 15:20-23; 2 கொரிந்தியர் 1:21; 1 யோவான் 2:20, 27.
18. இயேசு உயிர்த்தெழுவார் என்பது சங்கீதத்தில் முன்னறிவிக்கப்பட்டதை பேதுரு எவ்வாறு காட்டினார்?
18 உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதற்கு சங்கீத புத்தகத்திலும் ஆதாரம் உள்ளன. பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளின்போது, அப்போஸ்தலன் பேதுரு, சங்கீதம் 16:8-11-ஐ மேற்கோளாக எடுத்துக்காட்டி இவ்வாறு சொன்னார்: “தாவீது அவரைக் குறித்து: கர்த்தரை [யெகோவாவை] எப்பொழுதும் எனக்குமுன் நோக்கிக்கொண்டிருந்தேன். நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலேயே இருக்கிறார். அதினிமித்தம் என் இருதயம் மகிழ்ந்தது. என் நாவு களிகூர்ந்தது; என் மாம்சமுங்கூட நன்னம்பிக்கையில் தங்கும்; என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உமது பக்தன் அழிவைக் காணவொட்டீர்; . . . என்று சொல்லுகிறான்.” பேதுரு மேலுமாகச் சொன்னார்: “அவர் பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும் அவர் மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்தவனாக [தாவீது] கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசினான். இந்த இயேசுவைக் கடவுள் எழுப்பினார்.”—அப்போஸ்தலர் 2:25-32, தி.மொ.
19, 20. சங்கீதம் 118:22-லிருந்து மேற்கோள் காட்டி பேதுரு பேசினது எப்பொழுது, இதற்கும் இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததற்கும் என்ன சம்பந்தம்?
19 சில நாட்களுக்குப் பின்பு, பேதுரு யூத நியாய சங்கத்திற்கு முன்பாக நின்றபோது, மறுபடியும் சங்கீத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார். சப்பாணியாயிருந்த பிச்சைக்காரனை எவ்வாறு சுகப்படுத்தினார் என்று கேட்டபோது, அவர் சொன்னதாவது: “உங்களால் சிலுவையில் [கழுமரத்தில்] அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”—அப்போஸ்தலர் 4:10-12.
20 இச்சந்தர்ப்பத்தில் பேதுரு, சங்கீதம் 118:22-லிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார்; அதில் சொல்லப்பட்டதை இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பொருத்தினார். தங்கள் மதத்தலைவர்களால் தூண்டப்பட்ட யூதர்கள், இயேசுவை நிராகரித்தனர். (யோவான் 19:14-18; அப்போஸ்தலர் 3:14, 15) ‘வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று கல்லைத் தள்ளினதால்’ கிறிஸ்து மரித்தார். ஆனால், ‘‘அந்தக் கல், மூலைக்குத் தலைக்கல்லானது,’ அவர் பரலோகத்தில் ஆவிக்குரிய மகிமைக்கு எழுப்பப்பட்டிருப்பதைக் குறித்தது. சங்கீதக்காரர் முன்னறிவித்ததுபோல், “அது யெகோவாவினாலே ஆயிற்று.” (சங்கீதம் 118:23, தி.மொ.) ‘அந்தக் கல்லை’ மூலைக்குத் தலைக்கல் ஆக்கியதில், இயேசுவை அரச பதவியில் அமர்த்தி சிறப்பித்ததும் அடங்கும்.—எபேசியர் 1:19, 20.
உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் உயிர்பெறுதல்
21, 22. யோபு 14:13-15-ன்படி, யோபு என்ன நம்பிக்கையை வெளிக்காட்டினார், தங்கள் குடும்ப அங்கத்தினரை இழந்தவர்களை இந்த ஆறுதலான செய்தி எவ்வாறு அணைக்கிறது?
21 இறந்தவர்கள் உயிரடைந்ததை நாம் கண்ணார பார்த்ததில்லை. ஆனால் உயிர்த்தெழுதல் நடந்தது என்பதற்கான அத்தாட்சி பைபிளில் இருப்பதை இதுவரை சிந்தித்தோம். உத்தமனாய் வாழ்ந்த யோபு அந்த நம்பிக்கையைக் குறிப்பிட்டார். அதைப் போலவே நாமும் அந்த நம்பிக்கையை கைவிடாமல் காத்துக்கொள்ளலாம். யோபு துன்பப்படுகையில் இவ்வாறு மன்றாடினார்: “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, . . . என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? . . . என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.” [“உமக்கு அளவிலா ஆவல் இருக்கும்,” NW] (யோபு 14:13-15) யோபுவை உயிர்த்தெழுப்புவது கடவுளின் விருப்பம். ‘தம் கைகளின் கிரியையை நடப்பிக்க அவருக்கு அளவிலா ஆவல்’ உள்ளது. நமக்கு எப்பேர்ப்பட்ட அபார நம்பிக்கை!
22 கடவுள் பயமுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு யோபுவின் நிலைமை ஏற்படலாம். ஒருவேளை தீராத நோயால் அவதிப்பட்டு, வெல்ல முடியாத சத்துருவாகிய மரணத்துக்கும் இரையாகலாம். அந்த நபரை இழந்தவர்களுக்கு துக்கம் மேலிடலாம். இறந்துபோன லாசருவை நினைத்து இயேசு அழுததுபோல் அவர்களும் அழுது புலம்பலாம். (யோவான் 11:35) ஆனால், அவர்களுக்கு ஆறுதலான ஓர் செய்தி என்னவெனில், கடவுள் கூப்பிடும் நாளில் அவருடைய நினைவில் இருப்பவர்கள் எழுந்து வருவார்கள்! அவ்வாறு வரும்போது முன்பிருந்த நோய் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வராது; அல்லது வலிமை இழந்து தள்ளாடி தள்ளாடி நடந்து வரமாட்டார்கள்; பூரண சுகத்துடன் துள்ளிக் குதித்து ஓடி வருவார்கள். எங்கோ ஒரு நாட்டிற்கு பயணம் சென்று வீடுதிரும்புவதுபோல் வருவார்கள்.
23. உயிர்த்தெழுதலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதை சிலர் எவ்வாறு காட்டியிருக்கிறார்கள்?
23 கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் வயதாகி இறந்துவிட்டார். அவரைப் பிரிந்த துக்கத்தில் இருந்த மகளுக்கு உடன் விசுவாசிகள் இவ்வாறு எழுதினர்: “உங்கள் தாயாரின் இழப்புக்காக நாங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களை சீக்கிரத்தில் வரவேற்கப் போகிறோம். அதுவும் அழகாகவும் துடிப்பாகவும் இருக்கப்போகிறார்களே!” தங்கள் மகனை இழந்த பெற்றோர் இவ்வாறு சொன்னார்கள்: “ஜேசன் விழித்தெழப்போகிற அந்த நாளுக்காக நாங்கள் எவ்வளவு ஆவலோடு எதிர்பார்க்கிறோம்! அவன் சுற்றி முற்றிப் பார்க்கும்போது, தன் மனக்கண்ணால் கண்ட பரதீஸையே நிஜக் கண்ணால் காண்பான். . . . இதை நினைத்துத்தானே அவன் மேல் உயிரையே வைத்திருந்த நாங்களும் எப்படியாவது அங்கிருக்க வேண்டும் என துடிக்கிறோம்.” ஆம், உயிர்த்தெழுதல் நிஜமே. இந்த நம்பிக்கைக்காக நம் நன்றிகள் பல!
உங்கள் பதில் என்ன?
• இறந்தவர்களை கடவுள் உயிர்ப்பிப்பார் என்பதில் விசுவாசம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை?
• நாம் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கு உதவும் பைபிள் சம்பவங்கள் என்னென்ன?
• உயிர்த்தெழுதலை நெடுங்கால நம்பிக்கை என்று ஏன் சொல்லலாம்?
• இறந்தவர்களைப் பற்றிய என்ன நம்பிக்கையால் நாம் உயிர்பெறலாம்?
[பக்கம் 10-ன் படம்]
யெகோவா அருளிய வல்லமையால், விதவையின் மகனை எலியா உயிர்ப்பித்தார்
[பக்கம் 12-ன் படம்]
யவீருவின் மகளை இயேசு உயிர்ப்பித்தபோது, அவளுடைய பெற்றோர் ஆச்சரியம் தாளாமல் பிரமித்தார்கள்
[பக்கம் 15-ன் படம்]
இயேசு மரித்தோரிலிருந்து எழுந்ததை அப்போஸ்தலன் பேதுரு பெந்தெகொஸ்தே நாளின்போது தைரியமாய் சாட்சிபகர்ந்தார்