உயிர்த்தெழுதல்—உங்கள் மீது செல்வாக்கு செலுத்தும் ஒரு போதனை
‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.’—அப்போஸ்தலர் 24:15.
1. யூத உயர்நீதி மன்றத்தில் கூடியிருந்தோர் மத்தியில் உயிர்த்தெழுதல் எப்படிச் சர்ச்சைக்குரிய விஷயமானது?
அது பொ.ச. 56-ம் ஆண்டு. அப்போஸ்தலன் பவுல் தனது மூன்றாம் மிஷனரி பயணத்தின் முடிவிலே எருசலேமில் இருந்தார். ரோமர்களால் கைது செய்யப்பட்ட அவர், யூத உயர்நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். (அப்போஸ்தலர் 22:29, 30) அப்போது அங்கே கூடியிருந்தவர்களை அப்படியே சுற்றிவர நோட்டமிட்டார்; அவர்களில் சிலர் சதுசேயர்கள், மற்றவர்கள் பரிசேயர்கள். இவ்விரு தொகுதியினரும் முக்கியமான ஒரு விஷயத்தில் வேறுபட்டிருந்தார்கள். அதாவது, சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்ளவில்லை, பரிசேயர்களோ அதை ஏற்றுக்கொண்டார்கள். இவ்விஷயத்தில் தனக்கிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக பவுல் இவ்வாறு சொன்னார்: “சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்.” இப்படி அவர் சொல்லி முடித்ததும், அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது!—அப்போஸ்தலர் 23:6-9.
2. உயிர்த்தெழுதலில் தனக்கிருந்த நம்பிக்கையை ஆதரித்துப் பேச பவுல் ஏன் தயாராக இருந்தார்?
2 பல ஆண்டுகளுக்கு முன்பு, தமஸ்குவுக்கு செல்லும் வழியில் பவுல் ஒரு தரிசனத்திலே இயேசுவின் குரலைக் கேட்டார். “ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்” என்று அவரிடம் கேட்டார். அதற்கு இயேசு, “நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்று பதிலளித்தார். பவுல் தமஸ்குவுக்குச் சென்றதும், கிறிஸ்தவ சீஷனாகிய அனனியாவைக் கண்டார்; உதவும் மனமுள்ள அனனியா இவ்வாறு விளக்கினார்: “நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரை [உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை] தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்து கொண்டார்.” (அப்போஸ்தலர் 22:6-16) அப்படியானால் உயிர்த்தெழுதலில் தனக்கிருந்த நம்பிக்கையை ஆதரித்துப் பேச பவுல் தயாராக இருந்ததில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?—1 பேதுரு 3:15.
உயிர்த்தெழுதல் நம்பிக்கையை வெளியரங்கமாக அறிவித்தல்
3, 4. உயிர்த்தெழுதல் போதனையை பவுல் எப்படி உறுதியாக ஆதரித்துப் பேசினார், அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 பிற்பாடு, தேசாதிபதி பேலிக்ஸ் முன்பு பவுல் நிறுத்தப்பட்டார். அப்போது, பவுலுக்கு எதிராக யூதர்கள் தொடுத்த வழக்கின் பேரில் தெர்த்துல்லு என்னும் ‘நியாயசாதுரியன்’ வாதாட ஆரம்பித்தான். பவுல் ஒரு மதபேதத்தின் தலைவர் என்றும், அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்கிறவர் என்றும் குற்றஞ்சாட்டினான். அதற்கு பவுல், ‘உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து வருகிறேன்’ என்று சட்டென பதிலளித்தார். பிறகு முக்கிய விஷயத்திற்குக் கவனத்தைத் திருப்பி, “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார்.—அப்போஸ்தலர் 23:23; 24:1-8, 14, 15.
4 சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பேலிக்ஸுக்கு அடுத்து பதவியேற்ற பொர்க்கியு பெஸ்து, சிறையிலிருக்கும் பவுலை விசாரிப்பதில் தனக்கு உதவும்படி அகிரிப்பா ராஜாவைக் கேட்டுக்கொண்டார். ‘மரித்துப்போன இயேசு என்ற நபர் உயிரோடிருப்பதாக’ பவுல் ஆணித்தரமாய்க் கூறியதை அவருடைய எதிரிகள் மறுத்தது பற்றி பெஸ்து விளக்கினார். உடனே பவுல், “தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?” என்று தன் தரப்பில் வாதாடினார். அதன் பிறகு இவ்வாறு அறிவித்தார்: “ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று நான் இந்நாள் வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கூறி வருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபட வேண்டியதென்றும் மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை.” (அப்போஸ்தலர் 24:27; 25:13-22; 26:8, 22, 23) உயிர்த்தெழுதல் போதனையை பவுல் எந்தளவு உறுதியாக ஆதரித்துப் பேசினார், பாருங்கள்! பவுலைப் போன்று நாமும்கூட உயிர்த்தெழுதல் போதனையை நம்பிக்கையோடு அறிவிக்கலாம். ஆனால் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை நாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கலாம்? பவுலுக்கு கிடைத்ததைப் போன்ற பிரதிபலிப்புதான் பெரும்பாலும் நமக்குக் கிடைக்கும்.
5, 6. (அ) உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி அப்போஸ்தலர்கள் பேசியபோது எப்படிப்பட்ட பிரதிபலிப்பு கிடைத்தது? (ஆ) உயிர்த்தெழுதலில் நம் நம்பிக்கையைப் பற்றி பேசும்போது எது மிக முக்கியம்?
5 இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது (சுமார் பொ.ச. 49-52) அத்தேனே பட்டணத்திற்கு பவுல் சென்றிருந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். பல்வேறு தெய்வங்களை வணங்கிய ஆட்களிடம் அவர் நியாயங்காட்டிப் பேசினார். அதோடு, கடவுள் தாம் நியமித்த ஒரு மனுஷனைக் கொண்டு இந்தப் பூமியை நீதியாய் நியாயந்தீர்க்கப் போகிறார் என்ற விஷயத்தை நன்கு கவனிக்கும்படியும் அவர்களை உந்துவித்தார். இந்தப் பூமியை நியாயந்தீர்ப்பதற்கு கடவுளால் நியமிக்கப்பட்ட அந்த மனுஷன் இயேசுவே. அவரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் இப்பூமியை நீதியாய் நியாயந்தீர்ப்பார் என்பதற்கு கடவுள் உத்தரவாதம் அளித்திருப்பதை பவுல் விளக்கினார். இதற்கு அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம் என்றார்கள்.”—அப்போஸ்தலர் 17:29-32.
6 பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளுக்குச் சற்று பிறகு பேதுருவும் யோவானும் இதேபோன்ற பிரதிபலிப்பைத்தான் எதிர்ப்பட்டார்கள். அப்போதும்கூட விவாதத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் சதுசேயர்களே. நடந்ததை அப்போஸ்தலர் 4:1-4 இவ்வாறு விவரிக்கிறது: ‘அவர்கள் ஜனங்களுடனே பேசிக் கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத் தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும் இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும் சினங்கொண்டார்கள்.’ என்றாலும், மற்றவர்கள் சாதகமாகப் பிரதிபலித்தார்கள். “வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.” அப்படியானால், உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி பேசும்போது, நாமும்கூட வித்தியாசமான பிரதிபலிப்புகளை எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகிறது. ஆகவே, இந்தப் போதனையில் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.
விசுவாசமும் உயிர்த்தெழுதலும்
7, 8. (அ) முதல் நூற்றாண்டு கொரிந்து சபைக்கு எழுதப்பட்ட கடிதம் காட்டுகிறபடி, நம்முடைய விசுவாசம் எப்போது வீணானதாகிவிடும்? (ஆ) உயிர்த்தெழுதலைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் மெய் கிறிஸ்தவர்களை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறது?
7 பொ.ச. முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்களாக மாறிய எல்லோருக்குமே உயிர்த்தெழுதல் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வது சுலபமாக இருக்கவில்லை. கொரிந்து சபையிலிருந்த சிலருக்கு அது கடினமாக இருந்தது. அவர்களுக்குப் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.’ மேலும், இதற்கு அத்தாட்சி அளிக்கும் விதத்தில், “ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கு . . . [உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து] தரிசனமானார்” என்றும் ‘அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் உயிரோடிருக்கிறார்கள்’ என்றும் பவுல் கூடுதலாக சொன்னார். (1 கொரிந்தியர் 15:3-8) மேலும், அவர் இவ்வாறு நியாயப்படுத்தினார்: “கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.”—1 கொரிந்தியர் 15:12-14.
8 ஆம், உயிர்த்தெழுதல் அந்தளவு முக்கிய போதனையாக இருக்கிறது, எனவே அதை நிஜமானதென்று ஏற்றுக்கொள்ளாவிட்டால் கிறிஸ்தவ விசுவாசமே வீணானதாகிவிடும். உண்மையில் உயிர்த்தெழுதலைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் பொய் கிறிஸ்தவர்களிலிருந்து மெய் கிறிஸ்தவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. (ஆதியாகமம் 3:4; எசேக்கியேல் 18:4) அதனால்தான், உயிர்த்தெழுதல் போதனையை கிறிஸ்தவத்தின் ‘மூல உபதேசங்களில்’ ஒன்று என பவுல் குறிப்பிட்டார். ஆகையால், ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதே’ (NW) நம்முடைய தீர்மானமாய் இருக்க வேண்டும். ‘தேவன் அனுமதித்தால் இப்படியே தொடர்ந்து முன்னேறுவோம்’ என்று பவுல் உற்சாகப்படுத்தினார்.—எபிரெயர் 6:1-3; NW.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை
9, 10. உயிர்த்தெழுதல் பற்றி பைபிள் குறிப்பிடும்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது?
9 உயிர்த்தெழுதலிலுள்ள நம்முடைய நம்பிக்கையை இன்னும் அதிகமாய் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற கேள்விகளை இப்போது கலந்தாராயலாம்: உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் குறிப்பிடும்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது? உயிர்த்தெழுதல் போதனை எவ்வாறு யெகோவாவின் அன்பை உயர்த்திக் காட்டுகிறது? இந்தக் கேள்விகளுக்குரிய பதில்கள் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவி செய்வதோடு, மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் நமக்கு உதவும்.—2 தீமோத்தேயு 2:2; யாக்கோபு 4:8.
10 “உயிர்த்தெழுதல்” என்பது “மறுபடியும் எழுந்து நிற்பது” என்ற நேர்பொருளைக் கொடுக்கும் கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? இறந்த ஒரு நபர் மறுபடியும் வாழ முடியும் என்பதை உறுதியாக நம்புவதே உயிர்த்தெழுதல் நம்பிக்கை என பைபிள் காண்பிக்கிறது. அந்த நபர் பூமியில் வாழும் நம்பிக்கை உடையவரா அல்லது பரலோகத்தில் வாழும் நம்பிக்கை உடையவரா என்பதைப் பொறுத்தே, உயிர்த்தெழுதலின்போது அவர் மாம்ச சரீரத்தையோ ஆவிக்குரிய சரீரத்தையோ பெறுவாரென பைபிள் மேலும் விளக்குகிறது. இந்த அற்புதமான உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் வெளிப்படுகிற யெகோவாவின் அன்பும், ஞானமும், வல்லமையும் நம்மை வியக்க வைக்கின்றன.
11. அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு என்ன உயிர்த்தெழுதல் எதிர்பார்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன?
11 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டபோது பரலோக சேவைக்கு ஏற்ற ஓர் ஆவி உடலைப் பெற்றார், அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய சகோதரர்களும் அதேபோல் ஆவி உடலைப் பெறுகிறார்கள். (1 கொரிந்தியர் 15:35-38, 42-53) இந்தப் பூமியைப் பரதீஸாக மாற்றப் போகிற மேசியானிய ராஜ்யத்தில் அவர்கள் எல்லாரும் அரசர்களாகச் சேவை செய்வார்கள். இயேசு பிரதான ஆசாரியராக இருப்பார்; அபிஷேகம் செய்யப்பட்டவர்களோ அவருக்குக் கீழ், ஒரு ராஜரீக ஆசாரியக்கூட்டமாய் சேவை செய்வார்கள். நீதியுள்ள புதிய உலகில் வாழும் மனிதர்களுக்கு கிறிஸ்துவின் கிரய பலியின் நன்மைகள் கிடைக்கும்படி அவர்கள் செய்வார்கள். (எபிரெயர் 7:25, 26; 9:24; 1 பேதுரு 2:9; வெளிப்படுத்துதல் 22:1, 2) இதற்கிடையில், இப்போது பூமியில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டோர் தொடர்ந்து கடவுளுக்குப் பிரியமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் மரிக்கும்போது, பரலோகத்தில் அழிவில்லாத ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம் தங்கள் “பலனை” பெறுவார்கள். (2 கொரிந்தியர் 5:1-3, 6-8, 10; 1 கொரிந்தியர் 15:51, 52; வெளிப்படுத்துதல் 14:13) “அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” என்று பவுல் எழுதினார். (ரோமர் 6:5) அப்படியானால், மீண்டும் மனிதர்களாக இந்தப் பூமியில் உயிர்த்தெழுப்பப்படப் போகிறவர்களைப் பற்றியென்ன? உயிர்த்தெழுதல் நம்பிக்கை கடவுளிடம் நெருங்கி வர அவர்களுக்கு எவ்வாறு உதவும்? ஆபிரகாமின் முன்மாதிரியிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
உயிர்த்தெழுதலும் யெகோவாவுடன் நட்புறவும்
12, 13. உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்க ஆபிரகாமுக்கு என்ன பலமான காரணம் இருந்தது?
12 ‘தேவனுடைய சிநேகிதன்’ என்று வர்ணிக்கப்பட்ட ஆபிரகாம், விசுவாசத்திற்குத் தலைசிறந்த மாதிரியாகத் திகழ்ந்தார். (யாக்கோபு 2:23) எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விசுவாசமுள்ள ஆண்கள், பெண்கள் பட்டியலில் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றி பவுல் மூன்று முறை குறிப்பிட்டார். (எபிரெயர் 11:8, 9, 17) அவருடைய மூன்றாவது குறிப்பு, ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலிசெலுத்த கீழ்ப்படிதலுடன் முன்வந்தபோது வெளிக்காட்டிய விசுவாசத்தைப் பற்றியது. ஈசாக்கின் மூலம் வித்து வரும் என்ற வாக்குறுதிக்கு யெகோவா உத்தரவாதம் அளித்திருந்ததை ஆபிரகாம் உறுதியாக நம்பினார். ஈசாக்கு ஒரு பலியாக செலுத்தப்பட வேண்டியிருந்தாலும், அவரை ‘மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்று’ அவர் நம்பினார்.
13 ஆபிரகாமின் பலமான விசுவாசத்தை யெகோவா பார்த்தபோது, ஈசாக்கிற்குப் பதிலாக பலி செலுத்துவதற்கு ஒரு மிருகத்தை அளித்தார். இருந்தாலும், ஈசாக்கின் அனுபவம் உயிர்த்தெழுதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. “மரித்தோரிலிருந்து அவனை [ஈசாக்கை] பாவனையாகத் திரும்பவும் [ஆபிரகாம்] பெற்றுக்கொண்டான்” என பவுல் விளக்கினார். (எபிரெயர் 11:19) அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்க ஆபிரகாமுக்கு ஏற்கெனவே ஒரு பலமான காரணம் இருந்தது. ஏனெனில், ஆபிரகாமும் சாராளும் வயதானவர்களாக இருந்தபோதும், ஆபிரகாமின் பிள்ளை பிறப்பிக்கும் சக்தியை யெகோவா புதுப்பித்து, ஈசாக்கு பிறக்கும்படி செய்திருந்தாரே!—ஆதியாகமம் 18:10-14; 21:1-3; ரோமர் 4:19-21.
14. (அ) எபிரெயர் 11:9, 10-ன்படி, எதற்காக ஆபிரகாம் காத்துக் கொண்டிருந்தார்? (ஆ) புதிய உலகில் ராஜ்ய ஆசீர்வாதங்களை அனுபவிக்க ஆபிரகாமிற்கு எது நிகழ வேண்டியது அவசியம்? (இ) ராஜ்ய ஆசீர்வாதங்களை நாம் எப்படி அனுபவிக்கலாம்?
14 ‘தேவன் தாமே உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்திற்கு காத்திருந்த’ பரதேசியாகவும் கூடாரவாசியாகவும் ஆபிரகாமை பவுல் விவரித்தார். (எபிரெயர் 11:9, 10) அந்த நகரம் கடவுளுடைய ஆலயம் அமைந்திருந்த எருசலேமைப் போன்ற சொல்லர்த்தமான ஒரு நகரம் அல்ல. மாறாக, அது ஓர் அடையாளப்பூர்வமான நகரம். அது, கிறிஸ்து இயேசுவையும் அவரோடு ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரையும் கொண்ட கடவுளுடைய பரலோக ராஜ்யம். பரலோக மகிமையில் இருக்கும் 1,44,000 பேர், ‘புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம்’ என்றும் கிறிஸ்துவின் “மணவாட்டி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 21:2) 1914-ல் இயேசுவை பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக யெகோவா முடிசூட்டி, தமது சத்துருக்களின் மத்தியில் ஆட்சி செய்யும்படி ஆணையிட்டார். (சங்கீதம் 110:1, 2; வெளிப்படுத்துதல் 11:15) இந்த ராஜ்ய ஆட்சியின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு ‘யெகோவாவின் சிநேகிதனான’ ஆபிரகாம் திரும்ப உயிருக்கு வர வேண்டும். அதேபோல், நாமும் ராஜ்ய ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டுமென்றால் கடவுளுடைய புதிய உலகில் உயிரோடிருக்க வேண்டும்; அதாவது, அர்மகெதோன் யுத்தத்தில் தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டத்தைச் சேர்ந்தவராக அல்லது உயிர்த்தெழுந்து வருபவராக இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஆனால், உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது எது?
கடவுளின் அன்பு—உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு அடிப்படை
15, 16. (அ) பைபிளின் முதல் தீர்க்கதரிசனம் எவ்வாறு நம்முடைய உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு ஓர் அடிப்படையை அளிக்கிறது? (ஆ) உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பது எவ்வாறு நம்மை யெகோவாவிடம் நெருங்கி வரச் செய்கிறது?
15 அன்புள்ள பரலோக தகப்பனாகிய யெகோவாவுடன் நமக்குள்ள நெருக்கமான உறவு, ஆபிரகாமைப் போன்ற நம்முடைய உறுதியான விசுவாசம், யெகோவாவின் கட்டளைகளுக்கு நாம் காட்டும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் நம்மை நீதிமான்களாக அறிவிப்பார், அதோடு தம்முடைய நண்பர்களாகவும் கருதுவார். அதன் மூலம் ராஜ்ய ஆட்சியிலிருந்து நம்மால் நன்மைகளைப் பெற முடியும். சொல்லப்போனால், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கும் கடவுளுடைய நண்பர்களாய் இருப்பதற்கும் ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தீர்க்கதரிசனமே ஓர் அஸ்திவாரமாய் இருக்கிறது. அந்தத் தீர்க்கதரிசனம், சாத்தானுடைய தலை நசுக்கப்படும் என்று சொன்னதோடு, கடவுளுடைய ஸ்திரீயின் வித்துவுடைய குதிங்கால் நசுக்கப்படும் என்றும் முன்னறிவித்தது. கழுமரத்தில் இயேசு மரித்தது அந்தக் குதிங்கால் நசுக்கப்படுவதற்கு அடையாளமாக இருந்தது. மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்தது அந்தக் காயத்தை ஆற்றியது. அதோடு, ‘மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசுக்கு’ எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகுத்தது.—எபிரெயர் 2:14.
16 “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். (ரோமர் 5:8) நம்மீது காட்டப்படும் இந்தத் தகுதியற்ற தயவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பது இயேசுவிடமும் நமது அன்பான பரலோக தகப்பனிடமும் நம்மை உண்மையிலேயே நெருங்கி வரச் செய்கிறது.—2 கொரிந்தியர் 5:14, 15.
17. (அ) என்ன நம்பிக்கையை யோபு வெளிப்படுத்தினார்? (ஆ) யெகோவாவைப் பற்றி யோபு 14:15 என்ன வெளிப்படுத்துகிறது, இதைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
17 கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன் வாழ்ந்த விசுவாசமுள்ள மனிதனாகிய யோபுவும்கூட உயிர்த்தெழுதல் நடைபெறும் காலத்திற்காக ஆவலோடு காத்திருந்தார். அவர் சாத்தானுடைய தாக்குதலுக்கு ஆளாகி பயங்கரமாக அவதிப்பட்டார். உயிர்த்தெழுதலைப் பற்றி ஒருமுறைகூட குறிப்பிடாத தன்னுடைய போலி நண்பர்களைப் போல் இல்லாமல், உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் மிகுந்த ஆறுதலைக் கண்டார். “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று கேட்டுவிட்டு, அதற்கு அவரே இவ்வாறு பதிலளித்தார்: “எனக்கு விடுதலை கிடைக்கும் வரை என் கட்டாய சேவையின் நாட்களெல்லாம் நான் காத்திருப்பேன்.” மேலும், தனது கடவுளான யெகோவாவை நோக்கி ஜெபிக்கையில், “என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்” என்றார். நமது அன்பான படைப்பாளரின் உணர்ச்சிகளைக் குறித்து சொல்கையில், “உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக [அதாவது, ஆவலாய் இருப்பீராக]” என்றார். (யோபு 14:14, 15) ஆம், தமக்கு உண்மையுடன் இருந்தவர்களைத் திரும்ப உயிரோடு கொண்டு வரும் காலத்திற்காக யெகோவா மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார். நாம் அபூரணர்களாக இருக்கிறபோதிலும் நம்மீது அவர் காட்டும் அன்பையும் தகுதியற்ற தயவையும் தியானிக்கையில், அவரிடம் நெருங்கிவர நாம் எவ்வளவாய் தூண்டப்படுகிறோம்!—ரோமர் 5:21; யாக்கோபு 4:8.
18, 19. (அ) மறுபடியும் வாழ தானியேலுக்கு என்ன எதிர்பார்ப்பு உள்ளது? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைக் கலந்தாராய்வோம்?
18 மிகவும் ‘பிரியமானவன்’ என்று கடவுளுடைய தூதனால் விவரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசி நீண்ட காலமாக விசுவாசத்தோடு சேவை செய்தவர். (தானியேல் 10:11, 19) பொ.ச.மு. 617-ல் நாடுகடத்தப்பட்டது முதல், பொ.ச.மு. 536-ல், அதாவது பெர்சிய ராஜா கோரேசு அரசாண்ட மூன்றாம் வருஷத்தில், ஒரு தரிசனத்தைப் பெற்று பிற்பாடு மரிக்கும்வரை யெகோவாவுக்கு உத்தமத்தோடு இருந்தார். (தானியேல் 1:1; 10:1) கோரேசு அரசாண்ட அந்த மூன்றாம் வருஷத்தில், தானியேல் ஒரு தரிசனத்தைக் கண்டார்; வல்லரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்புவதையும் அதன் பிறகு மிகுந்த உபத்திரவத்தில் அவை முடிவுக்கு வருவதையும் பற்றிய தரிசனமே அது. (தானியேல் 11:1–12:13) அந்தத் தரிசனத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாத தானியேல், அதை அளித்த தேவதூதனிடம், “என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்” என்று கேட்டார். அதற்கு அந்தத் தேவதூதன் ‘முடிவு காலத்தைப்’ பற்றி குறிப்பிட்டுவிட்டு, அந்த முடிவின் காலத்தில்தான் அதை ‘ஞானவான்கள் உணர்ந்துகொள்வார்கள்’ என்று பதிலளித்தார். அப்படியானால் தானியேலுக்கு என்ன நம்பிக்கை இருந்தது? தேவதூதன் இவ்வாறு அறிவித்தார்: “நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்.” (தானியேல் 12:8-10, 13) கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் ‘நீதிமான்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது’ தானியேல் திரும்ப உயிரோடு வருவார்.—லூக்கா 14:14.
19 இப்போது நாம் முடிவு காலத்தின் கடைசி பகுதியில், கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி ஆரம்பிக்கப்போகும் சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் விசுவாசிகளான சமயத்திலிருந்ததைவிட அந்த நாள் மிக அருகில் இருக்கிறது. ஆகையால் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘ஆபிரகாம், யோபு, தானியேல் போன்ற விசுவாசமுள்ள ஆண்களோடும் பெண்களோடும் கூட்டுறவு கொள்வதற்கு நான் புதிய உலகில் இருப்பேனா?’ யெகோவாவோடு நெருக்கமாயிருந்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் நாமும் அங்கிருப்போம். இந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்த கூடுதலான விவரங்களை அடுத்த கட்டுரையில் நாம் கலந்தாராய்வோம்; யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• உயிர்த்தெழுதலில் தனக்கிருந்த நம்பிக்கையைப் பவுல் அறிவித்தபோது எப்படிப்பட்ட பிரதிபலிப்பை எதிர்ப்பட்டார்?
• உயிர்த்தெழுதல் நம்பிக்கை மெய் கிறிஸ்தவர்களைப் பொய் கிறிஸ்தவர்களிலிருந்து ஏன் வேறுபடுத்திக் காட்டுகிறது?
• ஆபிரகாம், யோபு, தானியேல் ஆகியோருக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருந்ததென நமக்கு எப்படித் தெரியும்?
[பக்கம் 8-ன் படம்]
தேசாதிபதி பேலிக்ஸுக்கு முன் பவுல் நிறுத்தப்பட்டபோது, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை உறுதியோடு அறிவித்தார்
[பக்கம் 10-ன் படம்]
ஆபிரகாம் ஏன் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்தார்?
[பக்கம் 12-ன் படம்]
உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் யோபு மிகுந்த ஆறுதலைக் கண்டார்
[பக்கம் 12-ன் படம்]
நீதிமான்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது தானியேல் திரும்ப உயிரோடு வருவார்