அதிகாரம் ஏழு
இறந்துபோன பிரியமானவர்களுக்கு ஒரு நிஜ எதிர்பார்ப்பு
உயிர்த்தெழுதல் உண்மையிலேயே நடக்குமென்று நமக்கு எப்படித் தெரியும்?
இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்?
யார் யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
1-3. நம் எல்லாரையும் துரத்திக்கொண்டு வரும் எதிரி யார், இதைப் பற்றி பைபிள் கற்பிக்கும் விஷயத்தைச் சிந்தித்துப் பார்ப்பது ஏன் நமக்கு ஓரளவு நிம்மதியளிக்கும்?
கொடூரமான ஓர் எதிரி உங்களைத் துரத்திக்கொண்டு வருவது போலவும் அவனிடமிருந்து நீங்கள் தப்பியோடி வருவதைப் போலவும் கொஞ்சம் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவன் உங்களைவிட பலசாலியாக இருக்கிறான், உங்களைவிட அதிவேகமாக ஓடி வருகிறான். அவன் ஈவிரக்கமற்ற கல்நெஞ்சக்காரன் என்பது உங்களுக்குத் தெரியும், ஏனெனில் உங்கள் நண்பர்களில் சிலரை அவன் கொன்று போட்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவனிடமிருந்து தப்பி ஓட நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவன் உங்களை நெருங்கிக்கொண்டே வருகிறான். இனி அவ்வளவுதான் என்பது போல நினைக்கிறீர்கள். அந்தச் சமயம் பார்த்து உங்களைக் காப்பாற்ற திடீரென ஒருவர் வருகிறார். அந்த எதிரியைவிட அவர் ரொம்பவே பலசாலியாக இருக்கிறார், உங்களுக்கு உதவுவதாக வாக்குக் கொடுக்கிறார். அதைக் கேட்கும்போது எவ்வளவு நிம்மதி அடைவீர்கள்!
2 ஒருவிதத்தில், அப்படிப்பட்ட ஓர் எதிரி உங்களைத் துரத்திக்கொண்டு வருகிறான். சொல்லப்போனால், நம் எல்லாரையுமே துரத்திக்கொண்டு வருகிறான். முந்தைய அதிகாரத்தில் பார்த்தபடி, மரணத்தை ஓர் எதிரி என்றே பைபிள் அழைக்கிறது. நம்மில் யாராலுமே அதன் பிடியிலிருந்து தப்பிக்கவோ அதைத் தவிர்க்கவோ முடியாது. இந்த எதிரி, நம் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவர்களைக் கொன்றிருப்பதை நம்மில் அநேகர் பார்த்திருக்கிறோம். ஆனால் மரணம் என்ற எதிரியைவிட யெகோவா எத்தனையோ மடங்கு பலசாலியாய் இருக்கிறார். நம்மைக் காப்பாற்ற வந்திருக்கும் அன்பானவர் அவர்தான்; மரணம் என்ற அந்த எதிரியைத் தம்மால் வீழ்த்த முடியுமென்பதை அவர் ஏற்கெனவே காண்பித்திருக்கிறார். அதை அடியோடு ஒழித்துக்கட்டப் போவதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். ‘பரிகரிக்கப்படும் கடைசிச் சத்துரு மரணம்’ என்று பைபிள் கற்பிக்கிறது. (1 கொரிந்தியர் 15:26) ஆஹா, எப்பேர்ப்பட்ட ஒரு நல்ல செய்தி!
3 மரணம் என்ற எதிரி, நமக்குப் பிரியமானவர்களுடைய உயிரைப் பறிக்கும்போது நாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம் என்பதைப் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். இவ்வாறு பார்ப்பது மகிழ்ச்சியூட்டும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். அதாவது, இறந்தவர்கள் மீண்டும் உயிருக்குக் கொண்டு வரப்படுவார்கள் என்ற விஷயத்தைப் புரிந்துகொள்ள உதவும்; அப்படிச் செய்யப்போவதாக யெகோவா தேவனே வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 26:19) ஆம், இறந்தவர்கள் திரும்ப உயிர் பெறுவார்கள். அதுதான் உயிர்த்தெழுதல் என்ற எதிர்பார்ப்பு.
பிரியமான ஒருவர் இறக்கும்போது
4. (அ) பிரியமான ஒருவர் இறந்தபோது இயேசு பிரதிபலித்த விதம், யெகோவாவின் உணர்ச்சிகளை நமக்குக் காட்டுகிறதென எப்படிச் சொல்ல முடியும்? (ஆ) இயேசு யாரோடு நெருக்கமான நட்பு வைத்திருந்தார்?
4 பிரியமான ஒருவரை நீங்கள் எப்போதாவது மரணத்தில் இழந்திருக்கிறீர்களா? அப்போது உங்களுக்குத் தாங்க முடியாத வேதனை உண்டாகலாம், அழுகை பீறிட்டுக்கொண்டு வரலாம், நிர்க்கதியாய் நிற்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இப்படிப்பட்ட சமயங்களில், ஆறுதலுக்காக கடவுளுடைய வார்த்தையை நாட வேண்டும். (2 கொரிந்தியர் 1:3, 4) சாவைப் பற்றி யெகோவாவும் இயேசுவும் எவ்வாறு உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. தம்முடைய பிதாவை அப்படியே பிரதிபலித்த இயேசுவுக்கு, மரணத்தில் ஒருவரை இழக்கும்போது ஏற்படுகிற வேதனை எப்படியிருக்குமென்று தெரிந்திருந்தது. (யோவான் 14:9) எருசலேமில் இயேசு தங்கியிருந்தபோது, பக்கத்து ஊரான பெத்தானியாவில் வாழ்ந்துவந்த லாசருவையும் அவருடைய சகோதரிகளான மார்த்தாளையும், மரியாளையும் போய்ச் சந்தித்து வந்தார். அவர்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” என பைபிள் சொல்கிறது. (யோவான் 11:5) ஆனால், முந்தைய அதிகாரத்தில் பார்த்தபடி, லாசரு இறந்துபோனார்.
5, 6. (அ) துக்கத்திலிருந்த லாசருவின் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் இயேசு இருந்தபோது, தமது உணர்ச்சிகளை எப்படி வெளிக்காட்டினார்? (ஆ) இயேசு துக்கப்பட்டது நம்மை ஏன் ஊக்கப்படுத்துகிறது?
5 தம்முடைய நண்பன் இறந்தபோது இயேசு எப்படி உணர்ந்தார்? லாசருவின் உறவினர்களும் நண்பர்களும் அவருடைய இழப்பை எண்ணி துக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இயேசு அங்கு சென்றார் என அந்தப் பதிவு நமக்குச் சொல்கிறது. அவர்களைப் பார்த்ததும் அவர் மனதுருகினார். ‘ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.’ அச்சமயத்தில் அவர் “கண்ணீர் விட்டார்” எனவும் அந்தப் பதிவு சொல்கிறது. (யோவான் 11:33, 35) இயேசு துக்கப்பட்டு அழுதது அவருக்கு நம்பிக்கையே இருக்கவில்லை என்பதையா காட்டியது? இல்லை, அப்படியில்லை! சொல்லப்போனால், ஓர் அற்புதமான காரியம் நடக்கப் போவதை அவர் அறிந்திருந்தார். (யோவான் 11:3, 4) என்றபோதிலும், மரணம் ஏற்படுத்துகிற வேதனையையும் துயரத்தையும் அவர் அனுபவித்தார்.
6 இயேசு துக்கப்பட்டது ஒருவிதத்தில் நம்மை ஊக்கப்படுத்துகிறது என்றே சொல்லலாம். ஏனெனில், இயேசுவும் அவருடைய பிதாவான யெகோவாவும் மரணத்தை வெறுக்கிறார்கள் என்பதை அது நமக்குக் காட்டுகிறது. அதேசமயத்தில், மரணம் என்ற அந்த எதிரியை யெகோவா தேவனால் வெல்ல முடியும் என்பதையும் அது காட்டுகிறது. அதற்காக என்ன செய்யும்படி இயேசுவுக்கு அவர் அதிகாரமளித்தார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
“லாசருவே, வெளியே வா”
7, 8. லாசருவின் விஷயத்தில், அங்கிருந்த ஜனங்களுக்கு ஏன் எந்த நம்பிக்கையும் இல்லாதது போல் தெரிந்தது, ஆனால் இயேசு என்ன செய்தார்?
7 லாசருவின் உடல் ஒரு குகையில் வைக்கப்பட்டிருந்தது; அந்தக் குகையின் வாசலை மூடியிருந்த கல்லை எடுத்துப் போடும்படி இயேசு சொன்னார். லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன, எனவே அவரது உடல் அழுக ஆரம்பித்திருக்கும் என்பதால் கல்லை எடுத்துப் போட வேண்டாமென மார்த்தாள் கூறினாள். (யோவான் 11:39) மனித கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், எந்த நம்பிக்கையும் இல்லாதது போலவே தெரிந்தது.
8 என்றாலும், கல் எடுத்துப் போடப்பட்டது, அப்போது இயேசு உரத்த குரலில் “லாசருவே, வெளியே வா” என்று கூப்பிட்டார். என்ன நடந்தது? “மரித்தவன் வெளியே வந்தான்.” (யோவான் 11:43, 44) அங்கிருந்த ஜனங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்கள் லாசருவின் உறவினர்களாகவோ சகோதரர்களாகவோ நண்பர்களாகவோ பக்கத்து வீட்டுக்காரர்களாகவோ இருந்திருக்கலாம்; அவர்கள் அனைவருக்குமே லாசரு மரித்துப்போயிருந்தது தெரியும். ஆனால், இப்போது அவர்—பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய அதே நபர்—மீண்டும் அவர்கள் முன் உயிரோடு நின்று கொண்டிருந்தார். நிச்சயமாகவே அது அவர்களுக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் இருந்திருக்கும். ஆம், அநேகர் லாசருவை சந்தோஷத்தோடு கட்டித் தழுவியிருப்பார்கள். மரணத்தின் மீது எப்பேர்ப்பட்ட ஒரு வெற்றி!
9, 10. (அ) லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கான வல்லமையைத் தமக்கு அளித்தவர் யார் என்பதை இயேசு எப்படி வெளிப்படுத்தினார்? (ஆ) உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் பதிவுகளை வாசிப்பதால் வரும் சில நன்மைகள் யாவை?
9 தம் சொந்த சக்தியால் இந்த அற்புதத்தைச் செய்ததாக இயேசு சொல்லவில்லை. லாசருவை வெளியே வருமாறு கூப்பிடுவதற்கு முன் அவர் செய்த ஜெபத்தில், யெகோவாதான் உயிர்த்தெழுதலுக்குக் காரணமானவர் என்பதைத் தெளிவுபடுத்தினார். (யோவான் 11:41, 42) அந்த ஒரு முறை மட்டுமல்ல, யெகோவா பல முறை தமது வல்லமையை அவ்விதத்தில் பயன்படுத்தியிருந்தார். லாசரு உட்பட, ஒன்பது ஆட்கள் உயிர்த்தெழுப்பப்பட்டது பற்றிய பதிவுகள் கடவுளுடைய வார்த்தையில் உள்ளன.a அந்தப் பதிவுகளை வாசிப்பதும் ஆராய்வதும் மனதிற்கு மகிழ்வூட்டும். கடவுள் பாரபட்சமற்றவர் என்பதை அவை நமக்குக் கற்பிக்கின்றன, ஏனெனில் இளையோர் முதியோர், ஆண் பெண், இஸ்ரவேலர் இஸ்ரவேலரல்லாதவர் என பல தரப்பினரைக் கடவுள் உயிர்த்தெழுப்பியிருந்தார். எப்பேர்ப்பட்ட ஆனந்தத்தை அந்தப் பதிவுகள் விவரிக்கின்றன! உதாரணத்திற்கு, இறந்துபோன ஒரு சிறுமியை இயேசு உயிர்த்தெழுப்பியபோது, அவளுடைய பெற்றோர் “மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்,” அதாவது ஆனந்தப் பரவசமடைந்தார்கள் என ஒரு பதிவு காண்பிக்கிறது. (மாற்கு 5:42) ஆம், வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத ஒரு சந்தோஷத்தை அவர்களுக்கு யெகோவா கொடுத்தார்.
10 இயேசு உயிர்த்தெழுப்பிய அந்த ஆட்கள் காலப்போக்கில் மறுபடியும் இறந்துபோனார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக, அவர்களை உயிர்த்தெழுப்பியதே வீணென்று நினைக்கலாமா? இல்லை, அப்படி நினைக்கக் கூடாது. பைபிளிலுள்ள இந்தப் பதிவுகள் முக்கியமான உண்மைகளை நமக்கு ஊர்ஜிதப்படுத்துகின்றன, அதோடு நம்பிக்கையையும் அளிக்கின்றன.
உயிர்த்தெழுதல் பதிவுகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
11. பிரசங்கி 9:5-ல் உள்ள உண்மையை லாசருவின் உயிர்த்தெழுதல் பதிவு எப்படி உறுதிப்படுத்துகிறது?
11 “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என பைபிள் கற்பிக்கிறது. அவர்கள் உயிரோடுமில்லை, வேறெங்கும் உணர்வோடுமில்லை. லாசருவைப் பற்றிய பதிவு இதை உறுதிப்படுத்துகிறது. லாசரு உயிர்பெற்று வந்ததுமே, பரலோகத்தைப் பற்றி வர்ணித்து ஜனங்களை மெய்சிலிர்க்க வைத்தாரா? அல்லது எரிநரகத்தைப் பற்றிய பயங்கரமான கதைகளைச் சித்தரித்து அவர்களை நடுநடுங்க வைத்தாரா? இல்லை. அப்படி எதுவும் அவர் சொன்னதாக பைபிளில் பதிவில்லை. கல்லறையில் இருந்த அந்த நான்கு நாட்களுக்கு அவர் ‘ஒன்றுமே அறியாதவராகத்தான்’ இருந்தார். (பிரசங்கி 9:5) லாசரு மரணத்தில் வெறுமனே தூங்கிக் கொண்டிருந்தார்.—யோவான் 11:11.
12. லாசரு உண்மையிலேயே உயிர்த்தெழுப்பப்பட்டார் என நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
12 உயிர்த்தெழுதல் என்பது வெறுமனே கற்பனையல்ல, அது நிஜமான ஒன்று என்பதையும்கூட லாசருவைப் பற்றிய பதிவு நமக்குக் கற்பிக்கிறது. திரளான ஜனங்களின் கண்ணெதிரில்தான் லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பினார். இயேசுவை வெறுத்த மதத் தலைவர்கள்கூட இந்த அற்புதத்தை மறுக்கவில்லை. மாறாக, “நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் [இயேசு] அநேக அற்புதங்களைச் செய்கிறானே” என்று சொன்னார்கள். (யோவான் 11:47) உயிர்த்தெழுப்பப்பட்ட லாசருவை அநேக ஜனங்கள் போய்ப் பார்த்தார்கள். அதன் விளைவாக, இன்னும் அநேகர் இயேசுவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இயேசு, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு லாசரு ஓர் உயிருள்ள அத்தாட்சியாக இருப்பதைக் கண்டார்கள். இந்த அத்தாட்சி அவ்வளவு மறுக்க முடியாததாய் இருந்ததால், கல்நெஞ்சமிக்க யூத மதத் தலைவர்களில் சிலர் இயேசுவை மட்டுமல்ல, லாசருவையும் கொல்ல சதித்திட்டம் போட்டார்கள்.—யோவான் 11:53; 12:9-11.
13. இறந்தவர்களை யெகோவாவினால் மீண்டும் உயிரோடு எழுப்ப முடியுமென நம்புவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
13 உயிர்த்தெழுதல் நிஜம் என்று ஏற்றுக்கொள்வது நம்ப முடியாத ஒன்றா? இல்லை, ஏனெனில் “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்” என்றாவது ஒருநாள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று இயேசுதாமே கற்பித்தார். (யோவான் 5:28) எல்லாருக்கும் உயிர் அளித்தவர் யெகோவா. அப்படியானால், மீண்டும் உயிரளிப்பது அவருக்குக் கஷ்டமா என்ன? உண்மைதான், யெகோவாவின் ஞாபக சக்தியே முக்கியமாய் இதில் உட்பட்டிருக்கிறது. அப்படியானால், இறந்தவர்களை அவரால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? கோடானுகோடி நட்சத்திரங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கின்றன, என்றாலும் அந்த ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கடவுள் ஒரு பெயர் வைத்திருக்கிறாராம்! (ஏசாயா 40:26) எனவே, நம் பிரியமானவர்களைப் பற்றிய விஷயங்களையும்கூட யெகோவா தேவனால் ஒன்றுவிடாமல் ஞாபகம் வைத்து, அவர்களை மீண்டும் உயிரோடு எழுப்ப முடியும்.
14, 15. யோபுவின் வார்த்தைகளில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்புவது பற்றி யெகோவா எப்படி உணருகிறார்?
14 என்றாலும், இறந்துபோனவர்களை உயிர்த்தெழுப்புவதைப் பற்றி யெகோவா எவ்வாறு உணருகிறார்? இறந்துபோனவர்களை உயிருக்குக் கொண்டுவர அவர் வெகு ஆவலாய் இருக்கிறார் என பைபிள் கற்பிக்கிறது. விசுவாசமிக்க மனிதரான யோபு இவ்வாறு கேட்டார்: “மனுஷன் செத்த பின் பிழைப்பானோ?” யெகோவா நினைவுகூரும்வரை தான் பிரேதக்குழியில் காத்திருக்கப் போவதைப் பற்றி யோபு பேசிக் கொண்டிருந்தார். யெகோவாவிடம் அவர் இவ்வாறு சொன்னார்: ‘என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைக்கிறீர் [அதாவது, மிகுந்த ஆவலாய் இருக்கிறீர்].’—யோபு 14:13-15.
15 சற்று யோசித்துப் பாருங்கள்! இறந்தவர்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவர உண்மையிலேயே யெகோவா ஆவலாய் இருக்கிறார். யெகோவா இவ்வாறு உணருவதை அறிவது மனதிற்கு இதமாக இருக்கிறது அல்லவா? ஆனால், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அப்படிப்பட்ட உயிர்த்தெழுதலில் யார் யார் உயிரோடு வருவார்கள்? அவர்கள் எங்கே உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
“பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்”
16. இறந்தவர்கள் எப்படிப்பட்ட உலகில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
16 உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் பதிவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதலைக் குறித்து நிறைய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன. முன்பு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் இதே பூமியில் தங்கள் பிரியமானவர்களுடன் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதல்கூட அதுபோலத்தான் இருக்கும்; ஏன், அதைவிட சிறந்ததாகவே இருக்கும். அதிகாரம் மூன்றில் நாம் கற்றுக்கொண்டபடி, இந்த முழு பூமியும் ஒரு பரதீஸாய் ஆக வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கம். எனவே, இறந்துபோனவர்கள் போர், குற்றச்செயல், வியாதி ஆகியவை நிறைந்த ஓர் உலகில் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். மாறாக, சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த ஓர் உலகில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
17. யார் யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
17 யார் யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்டு . . . எழுந்திருப்பார்கள்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 5:28, 29) அதேபோல, வெளிப்படுத்துதல் 20:13 இவ்வாறு சொல்கிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” ‘பாதாளம்’ என்பது மனிதகுலத்தின் பொதுப் பிரேதக்குழியைக் குறிக்கிறது. (பக்கங்கள் 212-13-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.) இந்தப் பிரேதக்குழி வெறுமையாக்கப்படும். அதில் தூங்கிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கானோர் திரும்ப உயிரடைவார்கள். ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்’ என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (அப்போஸ்தலர் 24:15) அதன் அர்த்தம் என்ன?
18. உயிர்த்தெழுப்பப்படும் ‘நீதிமான்களில்’ யாரெல்லாம் இருப்பர், தனிப்பட்ட விதமாக இந்த நம்பிக்கை உங்களுக்கு எப்படி நன்மை அளிக்கலாம்?
18 இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு முன் வாழ்ந்த ஏராளமானோர் அந்த ‘நீதிமான்களில்’ அடங்குவர்; அவர்களைப் பற்றி நாம் பைபிளில் வாசிக்கிறோம். உதாரணத்திற்கு, நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, ரூத், எஸ்தர் போன்ற இன்னும் பலர் உங்கள் ஞாபகத்திற்கு வரலாம். விசுவாசமிக்க ஆண்கள் பெண்கள் சிலரைப் பற்றி எபிரெய புத்தகத்தின் 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. என்றாலும், நம் நாளில் இறந்துபோகிற யெகோவாவின் ஊழியர்களும் அந்த ‘நீதிமான்களில்’ அடங்குவர். இந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கை காரணமாக மரண பயத்திலிருந்தே நாம் விடுபடலாம்.—எபிரெயர் 2:15.
19. ‘அநீதிமான்கள்’ யார், அவர்களுக்கு யெகோவா என்ன அன்பான வாய்ப்பை அளிக்கிறார்?
19 யெகோவாவைப் பற்றிக் கேள்விப்படாததால் அவருக்குச் சேவை செய்திராத அல்லது கீழ்ப்படிந்திராத ஜனங்களைப் பற்றி என்ன? கோடிக்கணக்கான இந்த ‘அநீதிமான்கள்’ மறக்கப்பட மாட்டார்கள், அவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். மெய்க் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் அவர்களுக்குக் காலம் அனுமதிக்கப்படும். ஆயிரவருட காலப்பகுதியின்போது, மரித்தோர் உயிர்த்தெழுப்பப்பட்டு பூமியிலுள்ள விசுவாசமிக்க ஆட்களோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். அது ஓர் அருமையான காலமாக இருக்கும். அந்தக் காலப்பகுதியைத்தான் நியாயத்தீர்ப்பு நாள் என்று பைபிள் அழைக்கிறது.b
20. கெஹென்னா என்பது என்ன, அங்கே செல்வது யார்?
20 அப்படியானால், இதுவரை பூமியில் வாழ்ந்த அனைவருமே உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று அர்த்தமாகுமா? இல்லை. இறந்தவர்களில் சிலர் “கெஹென்னா”வில் இருப்பதாக பைபிள் சொல்கிறது. தமிழ் பைபிளில், லூக்கா 12:5-ம் வசனத்தில் கெஹென்னா என்ற வார்த்தை ‘நரகம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹென்னா என்பது பூர்வ எருசலேமுக்கு வெளியே இருந்த குப்பைக்கூளங்கள் கொட்டும் ஓர் இடத்தைக் குறித்தது. பிணங்களும் குப்பைக்கூளங்களும் அங்கு எரிக்கப்பட்டன. அங்கே தூக்கி வீசப்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கும் உயிர்த்தெழுதலுக்கும் தகுதியற்றவையாக யூதர்களால் கருதப்பட்டன. ஆகவே, கெஹென்னா என்பது நித்திய அழிவுக்குப் பொருத்தமான ஓர் அடையாளமாக இருக்கிறது. உயிரோடிருப்போரையும் மரித்தோரையும் நியாயந்தீர்ப்பதில் இயேசுவுக்கு ஒரு பங்கு இருந்தாலும், இறுதியான நியாயத்தீர்ப்பை யெகோவாவே வழங்குவார். (அப்போஸ்தலர் 10:42) பொல்லாதவர்களையும் மனந்திரும்ப மனமில்லாதவர்களையும் அவர் உயிர்த்தெழுப்பவே மாட்டார்.
பரலோக உயிர்த்தெழுதல்
21, 22. (அ) வேறு என்ன வகையான உயிர்த்தெழுதல் இருக்கிறது? (ஆ) ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்பட்ட முதல் நபர் யார்?
21 மற்றொரு வகையான உயிர்த்தெழுதலைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது, அதாவது ஓர் ஆவி சிருஷ்டியாக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றி அது குறிப்பிடுகிறது. இந்த வகையான உயிர்த்தெழுதலுக்கு ஒரேவொரு உதாரணமே பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அது இயேசு கிறிஸ்துவுடைய உயிர்த்தெழுதலாகும்.
22 தம்முடைய உத்தம குமாரனான இயேசு கொல்லப்பட்ட பிறகு, அவரை யெகோவா பிரேதக்குழியிலேயே விட்டுவிடவில்லை. (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 13:34, 35) மாறாக, அவரை உயிர்த்தெழுப்பினார், ஆனால் ஒரு மனிதனாக அல்ல. கிறிஸ்து “மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” என அப்போஸ்தலன் பேதுரு விளக்கினார். (1 பேதுரு 3:18) இது உண்மையிலேயே மாபெரும் ஓர் அற்புதமாக இருந்தது. இயேசு மறுபடியும் வல்லமைமிக்க ஓர் ஆவி ஆளாக ஆனார்! (1 கொரிந்தியர் 15:3-6) இப்படி மகத்தான விதத்தில் உயிர்த்தெழுப்பப்பட்ட முதல் நபர் இயேசுவே. (யோவான் 3:13) ஆனால், அப்படி உயிர்த்தெழுப்பப்படுவதில் அவரே கடைசி அல்ல.
23, 24. இயேசுவின் “சிறுமந்தை” யார், அவர்கள் எத்தனை பேர்?
23 இயேசு தாம் சீக்கிரத்தில் பரலோகத்திற்குத் திரும்பிப் போகவிருந்ததை அறிந்திருந்தார்; ஆகவே, தம்முடைய உண்மையுள்ள சீஷர்களுக்கு அங்கு ‘ஒரு ஸ்தலத்தை . . . ஆயத்தம் பண்ணப்’ போவதாகச் சொன்னார். (யோவான் 14:2) பரலோகத்திற்குச் செல்பவர்களைத் தம்முடைய “சிறுமந்தை” என இயேசு அழைத்தார். (லூக்கா 12:32) உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய, ஓரளவு சிறிதான இத்தொகுதியில் எத்தனை பேர் இருப்பார்கள்? வெளிப்படுத்துதல் 14:1-ல் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொல்கிறார்: “நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும் [இயேசு கிறிஸ்துவையும்], அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக் கண்டேன்.”
24 இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் அடங்கிய இந்த 1,44,000 பேர் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். எப்போது? கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது இவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 15:23, NW) 9-ம் அதிகாரத்தில் கற்றுக்கொள்ளப்போகிற விதமாக, இப்போது நாம் அந்தப் பிரசன்னத்தின்போதுதான் வாழ்ந்து வருகிறோம். ஆகையால், 1,44,000 பேரில் மீதமுள்ள சிலர் நம் நாளில் மரிக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (1 கொரிந்தியர் 15:51-55) ஆனால், மனிதகுலத்தில் பெரும்பாலோருக்கு பரதீஸ் பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
25. அடுத்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிக் கற்றுக்கொள்வோம்?
25 ஆம், நம்முடைய எதிரியான மரணத்தை யெகோவா உண்மையிலேயே வெல்லப் போகிறார், இனி அது என்றென்றும் இல்லாமல் ஒழிந்து போகும்! (ஏசாயா 25:8) ஆனால், ‘பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் அங்கு போன பிறகு என்ன செய்வார்கள்?’ என ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். பரலோகத்திலுள்ள அருமையான ஒரு ராஜ்யத்தின், அதாவது அரசாங்கத்தின் பாகமாக அவர்கள் ஆகப்போகிறார்கள். அந்த அரசாங்கத்தைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் அதிகமாக நாம் கற்றுக்கொள்வோம்.
a மற்ற பதிவுகளை, 1 இராஜாக்கள் 17:17-24; 2 இராஜாக்கள் 4:32-37; 13:20, 21; மத்தேயு 28:5-7; லூக்கா 7:11-17; 8:40-56; அப்போஸ்தலர் 9:36-42; 20:7-12 ஆகிய வசனங்களில் காணலாம்.
b நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றியும், எதன் அடிப்படையில் நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும் என்பதைப் பற்றியும் கூடுதலான தகவல்களுக்கு, தயவுசெய்து பக்கங்கள் 213-15-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.