அப்போஸ்தலரின் செயல்கள்
9 சவுலோ, எஜமானின் சீஷர்களை இன்னமும் மிரட்டிக்கொண்டும் கொல்லத் துடித்துக்கொண்டும் இருந்தான்.+ அதனால் அவன் தலைமைக் குருவிடம் போய், 2 இந்த மார்க்கத்தை*+ சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் தமஸ்கு நகரத்திலிருந்து எருசலேமுக்குக் கட்டியிழுத்து வருவதற்காக, அந்த நகரத்திலிருந்த ஜெபக்கூடங்களுக்குக் கொடுக்க அனுமதிக் கடிதங்களைக் கேட்டு வாங்கினான்.
3 பின்பு, அங்கிருந்து புறப்பட்டு தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தான்; அப்போது, திடீரென்று வானத்திலிருந்து ஓர் ஒளி தோன்றி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது.+ 4 அவன் தரையில் விழுந்தான்; அப்போது, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தன்னோடு பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். 5 அதற்கு அவன், “எஜமானே, நீங்கள் யார்?” என்றான். அப்போது அவர், “நீ துன்புறுத்துகிற+ இயேசு நான்தான்.+ 6 நீ எழுந்து நகரத்துக்குள் போ; நீ என்ன செய்ய வேண்டுமென்று அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். 7 அவனோடு பயணம் செய்த ஆட்கள் வாயடைத்து நின்றார்கள். அவர்கள் அந்தக் குரலின் சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் எந்த மனிதனையும் பார்க்கவில்லை.+ 8 சவுல் தரையிலிருந்து எழுந்தான்; அவனுடைய கண்கள் திறந்திருந்தும் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், அவனைக் கைத்தாங்கலாக தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். 9 மூன்று நாட்கள் அவன் எதையும் பார்க்கவுமில்லை,+ சாப்பிடவுமில்லை, குடிக்கவுமில்லை.
10 தமஸ்குவில் அனனியா+ என்ற ஒரு சீஷர் இருந்தார். ஒரு தரிசனத்தில் எஜமான் அவரை, “அனனியாவே!” என்று கூப்பிட்டார். அதற்கு அவர், “இதோ இருக்கிறேன், எஜமானே” என்று சொன்னார். 11 அப்போது எஜமான் அவரிடம், “நீ எழுந்து, நேர் தெரு என்ற தெருவுக்குப் போ; யூதாஸ் என்பவருடைய வீட்டில் தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல்+ என்ற ஒருவன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார். அவன் இப்போது ஜெபம் செய்துகொண்டிருக்கிறான். 12 அனனியா என்ற ஒருவர் வந்து அவன்மேல் கைகளை வைத்து மறுபடியும் பார்வை தருவது போன்ற ஒரு தரிசனம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது”+ என்று சொன்னார். 13 அதற்கு அனனியா, “எஜமானே, இந்த மனுஷன் எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லா கொடுமைகளைப் பற்றியும் பல பேரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். 14 உங்கள் பெயரில் நம்பிக்கை வைக்கிற* எல்லாரையும் கைது செய்ய முதன்மை குருமார்கள் அவனுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்”+ என்று சொன்னார். 15 ஆனால் எஜமான் அவரிடம், “நீ புறப்பட்டுப் போ, ஏனென்றால், மற்ற தேசத்து மக்களுக்கும்+ ராஜாக்களுக்கும்+ இஸ்ரவேல் மக்களுக்கும் என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+ 16 என் பெயருக்காக அவன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமென்பதை நான் அவனுக்குத் தெளிவாகக் காட்டுவேன்”+ என்று சொன்னார்.
17 அதனால், அனனியா அங்கிருந்து புறப்பட்டு அந்த வீட்டுக்குப் போனார். பின்பு, சவுல்மேல் கைகளை வைத்து, “சவுலே, சகோதரனே, நீ வந்துகொண்டிருந்த வழியில் உனக்குக் காட்சி கொடுத்த எஜமானாகிய இயேசுதான் என்னை அனுப்பியிருக்கிறார், உனக்கு மறுபடியும் பார்வை கிடைப்பதற்காகவும் நீ கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுவதற்காகவும் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். 18 உடனே, சவுலுடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை கீழே விழுந்தன, அப்போது அவருக்குப் பார்வை கிடைத்தது; அவர் எழுந்துபோய் ஞானஸ்நானம் எடுத்தார். 19 பின்பு, சாப்பிட்டுப் பலம் பெற்றார்.
சவுல் தமஸ்குவில் இருந்த சீஷர்களோடு சில நாட்கள் தங்கி,+ 20 இயேசுதான் கடவுளுடைய மகன் என்று ஜெபக்கூடங்களில் உடனடியாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார். 21 அவர் பேசுவதைக் கேட்ட எல்லாரும் திகைத்துப்போய், “எருசலேமில் இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைக்கிறவர்களை* கொடூரமாகத் துன்புறுத்தியவன் இவன்தானே?+ அவர்களைக் கைது செய்து முதன்மை குருமார்களிடம் கொண்டுபோவதற்கு இங்கே வந்தவன் இவன்தானே?”+ என்று பேசிக்கொண்டார்கள். 22 ஆனால், சவுல் மேலும் மேலும் வல்லவராகி, இயேசுதான் கிறிஸ்து என்று தமஸ்குவில் இருந்த யூதர்களுக்குத் தர்க்கரீதியில் நிரூபித்துக்+ காட்டி, அவர்களைத் திணறடித்தார்.
23 பல நாட்களுக்குப் பின்பு, சவுலைக் கொல்ல யூதர்கள் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்கள்.+ 24 ஆனால், அவர்களுடைய சதித்திட்டம் சவுலுக்குத் தெரியவந்தது. அவரைக் கொல்வதற்காக நகரவாசல்களைக்கூட ராத்திரி பகலாக அவர்கள் உன்னிப்பாய்க் கண்காணித்தார்கள். 25 அதனால் ஒருநாள் ராத்திரி, அவருடைய சீஷர்கள் அவரைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையில் உட்கார வைத்து, நகரத்தின் மதிலிலிருந்த ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிட்டார்கள்.+
26 அவர் எருசலேமுக்கு வந்தபோது,+ மற்ற சீஷர்களோடு சேர்ந்துகொள்ள முயற்சி செய்தார். ஆனால், அவர் ஒரு சீஷர் என்பதை நம்பாததால் அவர்கள் எல்லாரும் அவரைப் பார்த்துப் பயந்தார்கள். 27 அப்போது, பர்னபா+ அவருடைய உதவிக்கு வந்து, அவரை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு போனார்; வழியில் சவுலுக்கு எஜமான் காட்சி கொடுத்ததையும்,+ அவரோடு பேசியதையும், சவுல் தமஸ்குவில் இருந்தபோது இயேசுவின் பெயரில் தைரியமாகப் பிரசங்கித்ததையும்+ பற்றி விவரமாக அவர்களிடம் சொன்னார். 28 சவுல் அவர்கள் கூடவே இருந்து, எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் போய், எஜமானுடைய பெயரில் தைரியமாகப் பிரசங்கித்துவந்தார். 29 கிரேக்க மொழி பேசிய யூதர்களிடம்கூட பிரசங்கித்துக்கொண்டும் வாதாடிக்கொண்டும் இருந்தார். ஆனால் அவர்கள் சவுலைக் கொல்வதற்கு முயற்சி செய்துவந்தார்கள்.+ 30 சகோதரர்களுக்கு இது தெரியவந்தபோது, அவரை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய் அங்கிருந்து தர்சுவுக்கு+ அனுப்பி வைத்தார்கள்.
31 பின்பு யூதேயா, கலிலேயா, சமாரியா+ முழுவதிலும் இருந்த சபை சமாதானக் காலத்தை அனுபவித்தது, விசுவாசத்திலும் பலப்பட்டு வந்தது. அதோடு, யெகோவாவுக்கு* பயந்து நடந்ததாலும், அவருடைய சக்தியின்+ மூலம் ஆறுதல் பெற்று அதன்படி நடந்ததாலும் சபை வளர்ந்துகொண்டே போனது.
32 பேதுரு எல்லா இடங்களுக்கும் போனபோது, லித்தா ஊரில்+ வாழ்ந்துவந்த பரிசுத்தவான்களிடமும் போனார். 33 அங்கே ஐனேயா என்ற ஒருவனைப் பார்த்தார்; அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, எட்டு வருஷங்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்.+ எழுந்து உன் படுக்கையை மடித்துவை”+ என்று சொன்னார். உடனே அவன் எழுந்தான். 35 லித்தாவிலும் சாரோன் சமவெளியிலும் வாழ்ந்துவந்த எல்லாரும் அவன் குணமானதைப் பார்த்து, எஜமான்மேல் நம்பிக்கை வைத்தார்கள்.
36 யோப்பா நகரத்தில் தபீத்தாள் என்ற ஒரு சிஷ்யை இருந்தாள்; தபீத்தாள் என்ற பெயரின் கிரேக்க மொழிபெயர்ப்பு “தொற்காள்.”* அவள் நிறைய நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும் செய்துவந்தாள். 37 ஒருநாள் அவள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனாள். அதனால் அவளைக் குளிப்பாட்டி, ஒரு மாடி அறையில் வைத்தார்கள். 38 லித்தா ஊரில் பேதுரு இருக்கிறார் என்பதைச் சீஷர்கள் கேள்விப்பட்டார்கள். அது யோப்பா நகரத்துக்குப் பக்கத்தில் இருந்ததால், “தயவுசெய்து சீக்கிரமாக வாருங்கள்” என்று இரண்டு ஆட்களிடம் சொல்லி அனுப்பினார்கள். 39 பேதுருவும் புறப்பட்டு அவர்களோடு வந்தார். அவர் வந்து சேர்ந்ததும், அவரை அந்த மாடி அறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்; விதவைகள் எல்லாரும் அவரிடம் வந்து, தொற்காள் தங்களோடிருந்த காலத்தில் தைத்துக் கொடுத்திருந்த நிறைய உடைகளையும் அங்கிகளையும்* காட்டி அழுதார்கள். 40 பேதுரு எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு,+ மண்டிபோட்டு ஜெபம் செய்தார்; பின்பு, அவளுடைய உடலைப் பார்த்து, “தபீத்தாளே, எழுந்திரு!” என்று சொன்னார். அப்போது அவள் தன்னுடைய கண்களைத் திறந்தாள், பேதுருவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.+ 41 அவர் அவளுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட்டார்; பின்பு, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் அவளை உயிரோடு ஒப்படைத்தார்.+ 42 யோப்பா நகரம் முழுவதும் இந்தச் செய்தி பரவியது; நிறைய பேர் எஜமானின் சீஷர்களானார்கள்.+ 43 அதன் பின்பு, தோல் பதனிடுபவரான சீமோன் என்பவரோடு யோப்பாவில் பேதுரு பல நாட்கள் தங்கினார்.+