பைபிளின் கருத்து
பிணைக்கும் அந்த அன்பு
வடஅட்லாண்டிக்கில் ஏற்பட்ட பெரும் புயல், 1978-ல், குவீன் எலிசபெத் 2 என்ற சொகுசு கப்பலைத் தாக்கியது. பத்து மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு அலைகள் கப்பலின்மீது மோதி, தக்கையைப்போன்று மேலும்கீழும் அதை அசையவைத்தன. கப்பல் கட்டுமீறி அசைந்து, சாமான்களையும் பயணிகளையும் அங்குமிங்கும் வீசி எறிந்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், 1,200 பயணிகளுக்கும் வெறுமனே சிறு காயங்கள்தான் ஏற்பட்டன. நல்ல பொறியியலும் பொருட்களும் கட்டமைப்பும், கப்பல் உடைந்துவிடாமலிருக்க உதவின.
பல நூற்றாண்டுகளுக்கு முன், மற்றொரு கப்பல் கடும் புயலின் தாக்குதலுக்கு ஆளானது. அப்போஸ்தலனாகிய பவுலும் மற்ற 275 பேரும் கப்பலில் இருந்தனர். புயலின் தீவிரத்தால் கப்பல் துண்டுதுண்டாக உடைந்துவிடுமோ என்று பயந்து, கப்பலோட்டிகள், அந்த வியாபாரக் கப்பலின் அடிபாகத்தை உண்டுபண்ணிய மரப்பலகைகளை கெட்டியாக பிடித்துக்கொள்வதற்கு ‘உபாயங்களை’—சங்கிலிகளை அல்லது கயிறுகளை—கப்பலுக்குக் கீழ் ஒரு பக்கத்திலிருந்து மற்றொன்றுக்கு இழுத்துக்கட்டினர் என்பதாக தோன்றுகிறது. கப்பல் காப்பாற்றப்படவில்லையென்றாலும் கப்பலிலிருந்த அனைத்து பயணிகளுமே காப்பாற்றப்பட்டனர்.—அப்போஸ்தலர், அதிகாரம் 27.
வாழ்க்கையில் வரும் சோதனைகள், ஒருவேளை கொந்தளிக்கும் கடலுக்குள் இருக்கும் ஒரு கப்பலில் நாம் இருப்பதுபோல் நம்மை உணரச்செய்யலாம். கவலை, ஏமாற்றம், சோர்வு ஆகியவற்றின் அலைகள் நம்மீது மோதி, நமது அன்பை முழுமையாக சோதிக்கலாம். அப்படிப்பட்ட புயல் காற்றுகளை மேற்கொள்ளவும் குலைந்துபோவதைத் தவிர்ப்பதற்கும் நமக்கும்கூட சில உபாயங்கள் தேவைப்படுகின்றன.
புயல்கள் எழும்பும்போது
அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசமும் சகிப்புத்தன்மையும் பைபிளில் நல்ல விதத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. அவர் பூர்வ கிறிஸ்தவ சபைகளுக்காக உழைத்தார். (2 கொரிந்தியர் 11:24-28) கர்த்தருடைய வேலையில் அவர் செய்த சாதனைகள், அவரது அயலகத்தார்மீது அவருக்கிருந்த ஆழமான அன்பிற்கும் கடவுளோடு அவருக்கிருந்த பலமான உறவிற்கும் தெளிவான சாட்சியளிக்கின்றன. ஆயினும், பவுலின் வாழ்க்கைப் பயணம் எப்போதுமே சுமூகமாக இல்லை. சொல்லர்த்தமாகவும் அடையாளப்பூர்வமாகவும், அந்த அப்போஸ்தலன் அநேக புயல்களை மேற்கொண்டார்.
பவுலின் காலத்தில், தீவிரமான ஒரு புயலை கப்பல் எதிர்ப்பட்டபோது, பயணிகளும் அந்தக் கப்பலும் பாதுகாக்கப்படுவதானது, கப்பலோட்டிகளின் திறமையின்மீதும் கப்பல் எவ்வளவு நன்றாக பிணைக்கிறது என்பதன்மீதும்கூட சார்ந்திருந்தது. அடையாளப்பூர்வமான புயல்களை அப்போஸ்தலன் எதிர்ப்பட்டபோதும் இதுவே உண்மையாய் இருந்தது. சரீரப்பிரகாரமான இழப்பு, சிறைவாசம், துன்புறுத்துதல் ஆகியவற்றை பவுல் மேற்கொண்டிருந்தபோதிலும், அவரது ஆவிக்குரிய உறுதியையும் மன உறுதியையும் தொடர்ந்து அன்புகூருவதற்கான திறமையையும் சவால்விட்ட மிகத் தீவிரமான புயல்கள் கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்து உருவாயின.
உதாரணத்திற்கு, கொரிந்து பட்டணத்தில் சபையை ஏற்படுத்த பவுல் ஒன்றரை ஆண்டுகளாக சளைக்காமல் உழைத்தார். கொரிந்தியர்களோடு அவருக்கிருந்த அனுபவங்கள் மந்தையினிடமாக இரக்க உணர்ச்சிகளை வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவின. அவர்களுக்கு தான் தகப்பனாக இருப்பதாகவும்கூட பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 4:15) ஆயினும், சபையின் சார்பாக அவர் காண்பித்த அன்பு மற்றும் கடின உழைப்பின் மத்தியிலும், கொரிந்துவிலிருந்த சிலர் பவுலை நிந்தித்துப் பேசினர். (2 கொரிந்தியர் 10:10) அவரது சுய-தியாக உழைப்புகளை முன்னிட்டுப் பார்க்கையில், அது எவ்வளவு சோர்வூட்டுவதாய் இருந்திருக்கும்!
பவுலின் அளவற்ற அன்பைப் பெற்றிருந்தவர்கள் எப்படி அந்தளவுக்கு இரக்கமற்றும் இழிவாக பேசுவோராகவும் இருக்க முடியும்? புயலின் பிடியிலுள்ள ஒரு கப்பலைப்போல், தான் சிதைந்துபோனதாக பவுல் உணர்ந்திருப்பார். நம்பிக்கையிழந்துவிட்டிருப்பதோ, தான் எடுத்திருந்த முயற்சிகள் யாவும் வீண் என நினைத்திருப்பதோ கோபங்கொண்டிருப்பதோ அவருக்கு எவ்வளவு சுலபமானதாக இருந்திருக்கும்! பவுலை எது கலங்காமல் இருக்க செய்தது? ஏமாற்றத்தால் குலைந்துபோவதிலிருந்து எது அவரை தடுத்தது?
நம்மை ஒன்றாக பிணைக்கும் அந்த அன்பு
பவுல், தனது பலம், உள்நோக்கம் ஆகிய இரண்டினுடைய மூலத்தைக் குறித்தும் தனது வாசகர்களின் மனதில் எந்தச் சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. அவர் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.” (2 கொரிந்தியர் 5:14) பலம் மற்றும் உந்துவிப்பின் ஒப்புயர்வற்ற மூலத்தை பவுல் சுட்டிக்காட்டினார். நெருக்கி ஏவும் சக்தி “கிறிஸ்துவினுடைய அன்பு.” இந்த வசனத்தைக் குறித்து பைபிள் கல்விமான் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்துவின்பேரிலான நம் அன்பு ஊழியத்தில் நம்மை நிலைத்திருக்கச் செய்கிறது என்பதாக பவுல் சொல்லவில்லை . . . அது, அதன் ஒரு பாகமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்துவின்பேரிலான நமது அன்பு, நம்மீது இருக்கும் அவரது அன்பினால் தூண்டப்பட்டு தொடர்ந்து பேணிக் காக்கப்படுகிறது.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
கழுமரத்தின்மீது வேதனையுண்டாக்கும் மரணத்திற்கு தம்மைக் கீழ்ப்படுத்தி, இவ்வாறு விசுவாசிக்கும் அனைத்து மனிதவர்க்கத்தையும் காப்பாற்ற தமது பரிபூரண மனித உயிரை மீட்கும்பொருளாக அளித்ததன் மூலம் கிறிஸ்து காண்பித்த அன்பு, கிறிஸ்து மற்றும் சகோதரத்துவத்தின் அக்கறைகளுக்காக தொடர்ந்து சேவிக்கும்படி பவுலை தூண்டுவித்து, நெருக்கி ஏவி, கட்டுப்படுத்தியது. இவ்வாறு, கிறிஸ்துவின் அன்பு, பவுலை கட்டுப்படுத்தி, சுயநலத்திலிருந்து அவரை தடுத்து, கடவுளுக்கும் சகமனிதர்களுக்கும் சேவை செய்வதையே அவரது குறிக்கோளாக ஆக்கியது.
உண்மையில், ஒரு கிறிஸ்தவனின் உண்மையுள்ள வாழ்க்கை போக்குக்குப் பின் இருக்கும் உந்துவிப்பு சக்தி கிறிஸ்துவினுடைய அன்பாகும். சரீர ரீதியிலும் மன ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் நமக்குத் தளர்வுண்டாக்கக்கூடிய பிரச்சினைகளை நாம் எதிர்ப்படும்போது, கிறிஸ்துவினுடைய அன்பின் நெருக்கி ஏவும் சக்தி, இயல்புக்கும் அப்பாற்பட்டு செல்ல நமக்கு உதவுகிறது; குறைவாக உந்துவிக்கப்பட்டவர்கள் அப்படிப்பட்ட நிலையில் விட்டுக்கொடுத்துவிடுவர். சகித்துக்கொள்வதற்கான பலத்தை அது நமக்கு தருகிறது.
நம்மை காத்துப்பேணவும் உந்துவிக்கவும் நமது அபூரண உணர்ச்சிகளின்பேரில் நாம் சார்ந்திருக்க முடியாது. நமது பிரச்சினைகள் ஏமாற்றத்தின் விளைவாகவோ கவலையின் விளைவாகவோ ஏற்பட்டிருக்கும்போது இது விசேஷமாக அவ்வாறு இருக்கிறது. மறுபட்சத்தில், கிறிஸ்துவின் அன்பு, நம்மை, நம் தனிப்பட்ட சோதனை என்னவாயிருந்தாலும் ஊழியத்தைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்வதற்கும் காத்துப்பேணுவதற்கும் உந்துவிப்பதற்குமான சக்தியைப் பெற்றுள்ளது. கிறிஸ்துவினுடைய அன்பு, மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாக மாத்திரமல்ல, ஆனால் ஒருவேளை தன்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக சகித்துக்கொள்வதற்கு ஒரு கிறிஸ்தவருக்கு உதவுகிறது.
மேலும், கிறிஸ்துவின் அன்பு என்றென்றும் நிலைத்திருப்பதால், விளைவு முடிவற்றதாக இருக்கிறது. அது, அலைபாயாததும் குறையாததுமான நெருக்கி ஏவுகிற சக்தியாகும். “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:8) என்ன நடந்தாலும் தொடர்ந்து அவரை உண்மையோடு பின்பற்ற அது நமக்கு உதவுகிறது.
உணர்ச்சிப்பூர்வமான சோதனைகள், நம்மை சிதைந்துவிடச் செய்யும் சக்தியை செலுத்துகின்றன. ஆகவே, நமக்காக கிறிஸ்து காண்பித்த அன்பைக் குறித்து நாம் தியானிப்பது எவ்வளவு முக்கியமானது. கிறிஸ்துவின் அன்பு நம்மை ஒன்றாக சேர்த்துப் பிணைக்கும். நமது விசுவாசமாகிய கப்பலுக்கு சேதம் உண்டாவதைத் தவிர்ப்பதன் சாத்தியத்தை அவரது அன்பு உண்டாக்குகிறது. (1 தீமோத்தேயு 1:14-19) கூடுதலாக, கிறிஸ்துவினுடைய அன்பின் வெளிக்காட்டை சாத்தியமாக்கியவராகிய யெகோவா தேவனை மகிமைப்படுத்த நம்மாலான அனைத்தையும் செய்வதற்கு கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது.—ரோமர் 5:6-8.