உலகை கவனித்தல்
புகையிலை நுகர்வு
சில நாடுகளில் புகையிலை நுகர்வு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருக்கிறபோதிலும், கடந்த இரண்டு பத்தாண்டுகளாக பெரும்பாலான நாடுகள் அதிகரிப்புகளைக் காண்பிக்கின்றன. உதாரணமாக, சீனா, இன்னும் உலகிலேயே மிக அதிகளவில் நுகரும் நாடாக இருக்கிறது; 297 சதவீத அதிகரிப்பைக் கொண்டிருந்தது. நுகர்வோர் வரிசையில் ஐக்கிய மாகாணங்களும் இந்தியாவும் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வகிக்கின்றன; அவை முறையே 27 சதவீதம் மற்றும் 50 சதவீத அதிகரிப்புகளைக் காண்பித்தன. அதிக அதிகரிப்புகளைக் கொண்டிருக்கும் வேறு சில நாடுகள், ருவாண்டா, 388 சதவீதம்; கிரீஸ், 331 சதவீதம்; வடகொரியா, 325 சதவீதம்; டான்ஜானியா, 227 சதவீதம்; ஹாங்காங், 214 சதவீதம்; இந்தோனீஷியா, 193 சதவீதம்; சிங்கப்பூர், 186 சதவீதம்; மற்றும் துருக்கி, 185 சதவீதம். ஏஷியாவீக்கில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைகள், 1970-க்கும் 1993-க்கும் இடையிலான சதவீத மாற்றத்தைக் காண்பிக்கின்றன. பட்டியலிடப்பட்டுள்ள 138 நாடுகளில், 26 மட்டுமே புகையிலை நுகர்வில் குறைவைக் காண்பிக்கின்றன.
இளைஞரும் துப்பாக்கிகளும்
துப்பாக்கிச்சூட்டின் காரணமாக ஏற்படும் மரணங்கள், வேறெந்த தொகுதியிலும் இருப்பதைவிட 10 முதல் 19 வயதுள்ள அமெரிக்க இளைஞர் மத்தியில் விரைவாக அதிகரித்து வருகின்றன என்று குழந்தைகள் தற்காப்பு நிதி தொகுதியின் அறிக்கை ஒன்று சொல்கிறது. தற்போது துப்பாக்கிகள், மரணத்திற்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கின்றன. விபத்துக்கள், பெரும்பாலும் வாகனத்தால் ஏற்படுகிறவை, முதல் காரணமாக இருக்கின்றன. 20 வயதுக்குக் குறைந்த அமெரிக்க இளைஞர்களில், சராசரியாக ஒவ்வொரு 92 நிமிடங்களுக்கும் ஒருவர், 1993-ல், துப்பாக்கிச்சூட்டால் இறந்தார்—முந்தின வருடத்தைக் காட்டிலும் 7 சதவீத அதிகரிப்பாக இருந்தது. எல்லா வயது தொகுதிகளையும் சேர்த்து ஒப்பிடுகையில், அதிகரிப்பு 4.8 சதவீதமாக மட்டுமே இருந்தது. துப்பாக்கிகளைப் பிள்ளைகளிடமிருந்தும் பள்ளிகளிலிருந்தும் விலக்கி வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைவானதையே செய்வதாக அந்தத் தற்காப்பு நிதி குற்றஞ்சாட்டியது. ஐ.மா. நீதித் துறை புள்ளிவிவரங்கள் அதற்கு இசைவாகவே இருப்பதாகத் தோன்றுகின்றன: கொலைகாரராக இருந்த சிறார்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டில் மூன்று மடங்காகி இருக்கிறது, 1994-ல் 26,000-த்தையும் விஞ்சிவிட்டது. கொலை செய்யும் கருவிகளாக, மற்ற கருவிகளைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இருந்தநிலையிலேயே இருந்தபோதிலும், துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை, அதே காலப்பகுதியில் நான்கு மடங்காக அதிகரித்திருக்கிறது. வெடிக்கும் கருவிகள் கிடைப்பதனால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் அழுத்திக் காண்பிக்கின்றன.
தற்கொலை மாதிரிப்போக்குகள்
“ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 அமெரிக்கர்கள் தங்களைத்தாங்களே [கொல்லுகின்றனர்],” என்பதாக ஸையன்டிஃபிக் அமெரிக்கன் குறிப்பிடுகிறது; மேலும் “பெண்களைவிட நான்கு மடங்கு அதிகமாக ஆண்கள் தங்கள் சொந்த உயிர்களை மாய்க்கும் சாத்தியம் இருக்கிறது.” மோசமான உடல்நலத்தாலும் எதிர்பார்ப்புகள் குலைக்கப்பட்டதாலும் விளைந்த அழுத்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வயதாகுதலோடுகூடவும் தற்கொலை வீதம் அதிகரிக்கிறது. பருவ வயதினர் மத்தியில் இருப்பதைவிட, 75 அல்லது அதற்கும் அதிகமான வயதானோர் மத்தியில் தற்கொலை வீதம் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஒருவர் உண்மையில் தற்கொலை செய்வாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை? குடும்ப மற்றும் சமுதாய ஆதரவின்மையும் மதத்தில் குறைந்த பங்கெடுப்பும் பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஐ.மா. தற்கொலை விகிதங்கள், ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் 11 தற்கொலைகள் என்ற விகிதத்துடன் நடுத்தர இடத்தை வகிக்கின்றன.
வன்முறை பயிற்சி
◼“தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதலைக் குறித்து, நான்கு பல்கலைக்கழகங்களில் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட ஒரு வருட ஆய்வு, ‘உளவியல்ரீதியில் கேடுவிளைவிக்கும்’ வன்முறை, ஒளிபரப்பு மற்றும் கேபிள் டிவி நிகழ்ச்சிகளில் ஊடுருவிப் பரவியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக,” தி வாஷிங்டன் போஸ்ட் சொல்லுகிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஏதாவது வன்முறையைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அது சித்தரிக்கப்பட்ட விதமும் பார்வையாளர்கள்மீது கெடுதலான பாதிப்புகளைக் கொண்டிருக்க முடியும் என்பதாக அந்த ஆய்வு கண்டறிந்தது. அப்படிப்பட்டவை, “வன்முறையாக நடந்துகொள்ள கற்றுக்கொள்ளுதல், வன்முறையின் கெடுதலான விளைவுகளைக் குறித்து அதிக உணர்வற்றவர்களாதல், தாக்கப்படுவதைக் குறித்து அதிக பயமுள்ளவர்களாதல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.” ஒரு காரணம் என்னவென்றால், டிவியில் 73 சதவீதமான வன்முறை நடவடிக்கை சம்பவங்களில் “வன்முறை வெற்றிகரமானது” என்ற செய்தியைக் கொடுக்கும்வண்ணம், குற்றஞ்செய்தவர்கள் தண்டனையின்றி விடப்படுகிறார்கள். மேலுமாக, வேதனை, அல்லது உணர்ச்சிப்பூர்வமான அல்லது பொருள்சம்பந்தமான பாதிப்பு போன்ற விதங்களில் தாக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை அநேக வர்ணிப்புகள் காண்பிப்பதில்லை. மேலுமாக, டிவியில் வன்முறை சம்பவங்களில் அடிக்கடி கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது, “பிறரைத் தாக்கும் எண்ணங்களையும் நடத்தைகளையும் தூண்டுவிக்க” முடியும் என்பதாக அந்த ஆய்வு சொல்லுகிறது.
◼தங்கள் இளம் வயதில் அதிக டிவி வன்முறையைப் பார்த்திருப்பவர்கள், 30 வயதிற்குள், “வன்முறைக்காக அதிகமான குற்றத்தீர்ப்புகளுக்கும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக பலமுறை கைதுசெய்யப்படுவதற்கும் உட்பட்டவராகவும், மதுபான செல்வாக்கின்கீழ் அதிகமாகத் தாக்கும் இயல்புள்ளவராகவும் தன் மணத்துணையிடமாக அதிக துர்ப்பிரயோகம் செய்பவராகவும், [மேலும்] அதிக தாக்கும் இயல்புடைய பிள்ளைகளை உடையவராகவும் இருப்பார்,” என்று மிச்சிகன் பல்கலைக்கழக சமூக ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியரும் ஆராய்ச்சி அறிவியலாளருமாகிய லென் எரான் வலியுறுத்துகிறார். வீடியோ விளையாட்டுகளும் அதுபோன்ற பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றன. தி டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் அறிக்கை செய்யப்பட்டபடி, ஒரு வீடியோ விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட அபாயம் என்னவென்றால், அது பரஸ்பர செயல்பாட்டை உடையதாகும் என்றார் எரான். ஆட்டக்காரர்கள் “ஒரு லீவரை நகர்த்தி அல்லது ஒரு பட்டனை அமுக்கி, அவர்கள்தாமே இந்த அச்சமூட்டும், வன்முறையான செயலை—ஒருவரைக் கொல்லுவதை—செய்கிறார்கள்.” பெற்றோரின் மேற்பார்வை கூடுதலாகத் தேவைப்படுகிறது என்று எரான் நினைக்கிறார். என்றாலும், “பல பெற்றோர் வெறுமனே கவலைப்படுவதில்லை,” என்று அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.
பிரான்ஸின் மதகுருக்கள் பாற்றாக்குறை அதிகரிக்கிறது
பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதகுருமார் எண்ணிக்கையில் அதிகரித்துவரும் பற்றாக்குறை இருக்கிறது. 1995-ல் பிரான்ஸ் முழுவதிலும் 96 பாதிரிமார் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர் என்றும் 1994-ல் 121 பேர் மட்டுமே என்றும் பாரிஸ் செய்தித்தாள் லா மாண்ட் அறிக்கை செய்கிறது. 1995-ல் ஜெஸ்யூட்டுகளில் 7 பேரும் டோமினிக்கர்களில் 25 பேரும் மட்டுமே புதிதாகப் பயிற்சிபெற சேர்ந்தனர். புதிதாகச் சேர்க்கப்படும் கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளைப் பொறுத்தமட்டிலும் அதே நிலைமையே இருக்கிறது. “1970-களிலிருந்து கன்னியாஸ்திரீகளின் எண்ணிக்கை, 1977-ல் 92,326 என்பதிலிருந்து சென்ற வருடம் வெறும் 51,164 என்பதாக தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது,” என லா மாண்ட் சொல்கிறது. மதகுருமாரில் பெரும்பாலானோர் வயதாகிக்கொண்டே வருவதையும் புதியவர்கள் வந்து சேரும்படியாக அவர்களைக் கவருவதில் சர்ச் தவறுவதையும் கருத்தில் கொள்கையில், 2005-ம் வருடத்திற்குள் பிரான்ஸில் சுமார் 9,000 பங்குத்தந்தைகள் மட்டுமே இருப்பார்கள் என்று முன்கணிக்கப்படுகின்றன. “சமூகத் தகுநிலையில் மதகுருக்களின் வீழ்ச்சியும், நெடுங்காலத்திற்கு ஒன்றிற்குக் கட்டுப்பட்டிருப்பதற்கான மக்களின் பயமும், மதகுருக்கள் ஏற்படுத்தியிருக்கும் வசீகரிக்க முடியாத பதிவும், சர்ச் தலைவர்களில் நம்பிக்கையின்மையும்” அந்த வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்பதாக லா மாண்ட் குறிப்பிடுகிறது.
உலகின் மிகத் துல்லியமான கடிகாரம்
நேரத்தின் சர்வதேச செந்தரத்தை நிர்ணயிப்பதற்காக இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் அணுக்கடிகாரங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக துல்லியமாக இருக்கும் ஒரு கடிகாரம், மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸஃபயர் கடிகாரம் என்றழைக்கப்பட்ட அதன் விலை சுமார் $2,00,000; ஏற்கெனவே பல உண்டாக்கப்பட்டிருக்கின்றன. கணநேரம் தோன்றி மறைகிற ஒரு ஃபெம்டோநொடி, அதாவது ஒரு நொடியில் 1,00,00,00,00,00,00,000 பாகங்களில் ஒரு பாகம் வரையாக அதால் அளக்க முடியும்! அதனால் என்ன பயன்? ஐன்ஸ்டைனின் பொது சார்பியல் கோட்பாட்டின்படி, ஒருவர் பூமியிலிருந்து மேலே போகப்போக நேரம் அதிக விரைவாகச் செல்கிறது. “சுமார் ஒரு மீட்டர் உயரத்தில்—வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுடைய பாதங்களுக்கும் உங்கள் தலைக்கும் இடையே—வேகத்தின் வித்தியாசத்தை அளப்பது எங்கள் நோக்கம்,” என்பதாக அந்தக் கடிகாரத்தை உருவாக்குவதில் வேலை செய்த இயற்பியலாளர் டேவட் ப்ளார் சொன்னார். என்றபோதிலும், அது ஒரு சமயத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே நேரத்தைத் துல்லியமாக அளக்கிறது.
சாதாரண ஸான்ட்விச்?
1762-ல், சூதாட்ட பழக்கமுள்ள பிரட்டனின் லார்ட் ஸான்ட்விச் என்பவர் ஒரு சூதாட்ட மேசையில் 24 மணிநேரம் இருந்தார். தன் பசியைப் போக்குவதற்காக, ஒரு துண்டு இறைச்சி இடையில் வைக்கப்பட்ட இரண்டு ஸ்லைஸ் ரொட்டியைக் கேட்டார். இந்தப் புதிய சிற்றுண்டி—ஸான்ட்விச்—உடனடியாக அவருடைய பெயரால் வழங்கப்பட்டது. தற்போது பிரிட்டிஷ்காரர்கள் ஒவ்வொரு நாளும் $79 லட்சத்தை ஸான்ட்விச்சுகளில் செலவிடுகின்றனர்; கடந்த ஐந்து வருடங்களில் இது 75 சதவீத அதிகரிப்பாக இருக்கிறது. “மொத்த விரைவு-உணவு சந்தையில் மூன்றில் ஒரு பாகம் ஸான்ட்விச்சுக்களால் ஆனதே,” என்பதாக லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது; அவை 8,000 ஸான்ட்விச் நிலையங்களிலிருந்து வழங்கப்படுகின்றன. சுமார் 130 கோடி தயார்நிலை ஸான்ட்விச்சுகள் ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் நுகரப்படுகின்றன. என்றாலும், குடும்பங்கள் நாட்டுப்புறத்திற்கோ கடற்கரைக்கோ பிக்னிக் போகும்போது எடுத்துச்செல்பவற்றிலிருந்து இந்த ஸான்ட்விச்சுகள் மிகவும் வித்தியாசப்பட்டவை. கங்காரு அல்லது அலிகேட்டர் இறைச்சி அல்லது ஸ்ட்ராபெரி மற்றும் க்ரீமுடன்கூட சாக்கலேட் ப்ரெட் ஸ்ப்ரெட் ஆகியவை உள்ளிட்ட தினுசுதினுசான ஸான்ட்விச்சுகளைச் சில முகவர்கள் அளிக்கிறார்கள்.
ஆசியாவின்
குழந்தை-பாலின வியாபாரம்
17 வயதுடையவர்களும் அதைவிட இளையவர்களுமாகிய பத்து லட்சத்துக்கும் மேலான பையன்களும் பெண் பிள்ளைகளும் ஆசியாவில், விபசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கங்களும் சமுதாய பணியாளர்களும் கணக்கிடுகிறார்கள் என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. சரியான எண்ணிக்கைகள் அறியப்படாவிட்டாலும், இந்தியா, கம்போடியா, சீனா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளில் பூப்புப்பருவத்தை அடைந்திராத குழந்தைகள்கூட விபசார விடுதிகளில் காணப்படலாம். அவ்வளவு இளம் பிள்ளைகளை ஏன் நாடுகிறார்கள்? ஒரு காரணம், எய்ட்ஸ் பற்றிய பயம். “ஆசியா எங்குமுள்ள ஆண்கள் மேன்மேலும் இளையவர்களாக இருக்கும் பிள்ளைகளிடம் திரும்புகின்றனர்; அதற்கு பகுதி காரணம், எய்ட்ஸை உண்டாக்கும் வைரஸாகிய ஹெச்ஐவி-யால் அவர்கள் தொற்றப்படுவதற்குக் குறைந்த சாத்தியம் இருப்பதாக நம்பப்படுவதாகும்,” என்று டைம்ஸ் சொல்லுகிறது. என்றாலும், இந்த நாடுகளில் விலைமகளிரின் மத்தியில் எய்ட்ஸ் விரைவாகப் பரவிக்கொண்டிருக்கிறது; அதற்கு பகுதி காரணம், எல்லைகளைக் கடந்து விலைமகளிர் வியாபாரம் நடப்பதாலும், பகுதி காரணம் பாலின உறவுகொள்வதற்கான பயணங்களில் வரும் வாடிக்கையாளர்கள், இடம் விட்டு இடம் பயணம் செய்வதாலும் ஆகும். சில பிள்ளைகள் கடத்திச்செல்லப்படுகின்றனர் என்றாலும், மற்றவர்கள் பொருள் சம்பந்தமான லாபத்திற்காகப் பெற்றோரால் விற்கப்படுகின்றனர்.
போட்டியா ஒற்றுமையா?
“கிறிஸ்துவுடைய பிறப்பின் 2000-வது ஆண்டு விழா கொண்டாட்டம், சர்ச்சுகள் மத்தியில் உணர்ச்சிவசப்படும் விவாதமாய் வேகமாக ஆகிக்கொண்டு வருகிறது,” என்று ENI [(Ecumenical News International) சர்வதேச திருச்சபை முழுமையும் சார்ந்த செய்தி] புல்லட்டின் அறிக்கை செய்கிறது. அந்த நிகழ்ச்சியை “கவனத்தைக் கவரும்படி போட்டிக்கான ஒரு நிகழ்வாகக் கருதுவதற்கு மாறாக ஒத்துழைப்புக்கும் ஒற்றுமைக்குமான ஒன்றாகக் கருதும்படி” உவர்ல்ட் கௌன்ஸில் ஆஃப் சர்ச்சஸின் பொது செயலராகிய கான்ராட் ரைஸர் சர்ச்சுக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். என்றாலும், சர்ச்சுக்கள் “பொது மக்களிடம் கொண்டிருக்கிற தங்கள் மோசமான நிலையை மேற்கொள்ளும்படி, . . . நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக அந்தத் தருணத்தை” பயன்படுத்திக்கொள்ளும் நோக்கை பெரும்பாலும் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதாக அவர் சொன்னார். 2000-வது ஆண்டு “கிறிஸ்தவ ஒற்றுமையைப் பலமாக ஊர்ஜிதம் செய்வதற்கான ஒரு தருணமாக ஆக்குவதற்கு” போப் விடுத்த அழைப்பைப் பாராட்டுகையில், ரைஸர் மேலுமாகச் சொன்னார்: “இந்தக் கனவுகளில் எத்தனையை 2000-வது ஆண்டிற்குள் நிறைவேற்ற முடியும் என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்—கடந்தகால அனுபவம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.”