யெகோவா, ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிற’ கடவுள்
“யெகோவாவே, நீர் நல்லவராயும் மன்னிப்பதற்கு ஆயத்தமாயும் இருக்கிறீர்.”—சங்கீதம் 86:5, NW.
1. கனமான என்ன பாரத்தை தாவீது சுமந்தார், துக்கமடைந்த தன் இருதயத்திற்கு எவ்வாறு ஆறுதலைக் கண்டடைந்தார்?
குற்றமுள்ள மனசாட்சியின் பாரம் எந்தளவு கனத்ததாக இருக்கும் என்பதை, பூர்வ இஸ்ரவேலின் அரசனான தாவீது அறிந்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “என் அக்கிரமங்கள் என் தலைக்குமேல் பெருகின; அவைகள் சுமையைப்போல் பாரமாயின, என்னால் தாங்கமுடியாதவையாயின. நான் பலமற்றுப்போனேன், நொறுங்கிப்போனேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினிமித்தம் கதறுகிறேன்.” (சங்கீதம் 38:4, 8, திருத்திய மொழிபெயர்ப்பு) எனினும், தாவீது, துக்கமடைந்த தன் இருதயத்திற்கு ஆறுதலைக் கண்டடைந்தார். பாவத்தை யெகோவா வெறுக்கிற போதிலும், பாவியை—அவன் உண்மையில் மனந்திரும்பி, தன் பாவப் போக்கை விட்டொழித்தால்—அவர் வெறுக்கிறதில்லை என்று தாவீது அறிந்திருந்தார். (சங்கீதம் 32:5; 103:3) மனந்திரும்பினவர்களுக்கு இரக்கத்தைக் காட்ட யெகோவா மனமுள்ளவராக இருப்பதில் முழு நம்பிக்கை வைத்தவராக, தாவீது இவ்வாறு சொன்னார்: “யெகோவாவே, நீர் நல்லவராயும் மன்னிப்பதற்கு ஆயத்தமாயும் இருக்கிறீர்.”—சங்கீதம் 86:5, NW.
2, 3. (அ) நாம் பாவம் செய்கையில், அதன் விளைவாக என்ன பாரத்தைச் சுமக்கக்கூடும், இது ஏன் நன்மையாக இருக்கிறது? (ஆ) குற்ற உணர்ச்சிக்குள் ‘அமிழ்ந்துவிடுகையில்’ என்ன ஆபத்து உள்ளது? (இ) யெகோவா மன்னிப்பதற்கு மனமுடையவராக இருப்பதைப் பற்றி பைபிள் நமக்கு என்ன உறுதியளிக்கிறது?
2 நாம் பாவம் செய்கையில், அதன் விளைவாக, வேதனைதரும் மனசாட்சியின் நொறுக்கும் பாரத்தை, நாமுங்கூட சுமக்கக்கூடும். இவ்வாறு மனவேதனைப்படுவது இயல்பானது, நன்மையாகவும் இருக்கிறது. நம்முடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள, சரியான நடவடிக்கைகள் எடுக்கும்படி இது நம்மைத் தூண்டலாம். எனினும், சில கிறிஸ்தவர்கள் குற்ற உணர்ச்சியில் மூழ்கியவர்களாக ஆகியிருக்கின்றனர். தாங்கள் எவ்வளவாக மனம்வருந்தி, திரும்பினாலும் கடவுள் தங்களை முழுமையாக மன்னிக்க மாட்டார் என்று அவர்களுடைய தற்கண்டன இருதயம் உறுத்திக்கொண்டிருக்கலாம். “ஒருவேளை யெகோவா உங்களை இனிமேலும் நேசிக்க மாட்டார் என்று நினைக்கையில் உண்டாகும் உணர்ச்சி தாங்கமுடியாததாய் இருக்கிறது” என்று ஒரு சகோதரி, தான் செய்த ஒரு தவறை நினைவுபடுத்தி சொன்னார்கள். அவர்கள் மனந்திரும்பி, சபை மூப்பர்களின் உதவியான அறிவுரையை ஏற்ற பின்பும்கூட, கடவுளுடைய மன்னிப்புக்குத் தகுதியற்றவர்களாக தொடர்ந்து உணர்ந்துகொண்டிருந்தார்கள். “யெகோவாவின் மன்னிப்புக்காக ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்கிறேன்” என்று விவரித்து சொல்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் ‘அமிழ்ந்தவர்களாக’ நாம் ஆகிவிட்டால், யெகோவாவைச் சேவிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று, சாத்தான் எண்ண வைத்து, அதை நாம் விட்டுவிடும்படி செய்ய முயற்சி செய்யலாம்.—2 கொரிந்தியர் 2:5-7, 11.
3 ஆனால், நிச்சயமாகவே, யெகோவா காரியங்களை அவ்வாறு நோக்குவதில்லை! உண்மையான இருதயப்பூர்வ மனந்திரும்புதலை நாம் காட்டுகையில், யெகோவா மன்னிப்பதற்கு மனமுள்ளவராக, ஆம், ஆயத்தமாக இருக்கிறார் என்று அவருடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (நீதிமொழிகள் 28:13) ஆகையால், கடவுளுடைய மன்னிப்பை நீங்கள் பெற முடியாததுபோல் எப்போதாவது தோன்றினால், அவர் ஏன், எவ்வாறு மன்னிக்கிறார் என்பதைப் பற்றி மேலும் நன்றாக புரிந்துகொள்வதே ஒருவேளை தேவைப்படுவதாக இருக்கலாம்.
யெகோவா ஏன் ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாக’ இருக்கிறார்?
4. நம்முடைய எந்த இயல்பை யெகோவா நினைவில் வைக்கிறார், அவர் நம்மை நடத்தும் முறையை இது எவ்வாறு பாதிக்கிறது?
4 நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நமது மீறுதல்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.” யெகோவா, ஏன் இரக்கம் காண்பிப்பதற்கு மனமுள்ளவராக இருக்கிறார்? அடுத்த வசனம் பதிலளிக்கிறது: “நமது உருவம் இன்னதென்று அவருக்குத் தெரியும்; நாம் மண்ணே என்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:12-14, தி.மொ.) ஆம், நாம் அபூரணத்தின் விளைவாக, குறைபாடுகளை, அல்லது பலவீனங்களையுடைய தூசியான சிருஷ்டிகளாய் இருப்பதை யெகோவா மறந்துவிடுகிறதில்லை. யெகோவாவை ஒரு குயவனுக்கும், நம்மை அவன் உருவாக்குகிற மண்பாண்டங்களுக்கும் பைபிள் ஒப்பிடுகிறதை, “நம் உருவம் இன்னதென்று” அவர் அறிந்திருக்கிறார் என்ற சொற்கள், நமக்கு நினைப்பூட்டுகின்றன.a (எரேமியா 18:2-6) குயவன் தன் மண்பாண்டங்களை உறுதியாகவும், அதே சமயத்தில் அவற்றின் இயல்பை மனதில் வைத்து, மென்மையாகவும் கையாளுகிறான். அவ்வாறே, பெரிய குயவராகிய யெகோவா, நம்மைக் கையாளும்போது நம்முடைய பாவத் தன்மையின் பலவீனத்திற்குத் தக்கவாறு இரக்கத்துடன் நடத்துகிறார்.—2 கொரிந்தியர் 4:7-ஐ ஒப்பிடுக.
5. நம்முடைய அபூரண மாம்ச இயல்பில் பாவத்தின் வலிமையான பிடியை, ரோமருக்கு எழுதின நிருபம் எவ்வாறு விவரிக்கிறது?
5 பாவம் எவ்வளவு வல்லமை வாய்ந்ததென்று யெகோவாவுக்குத் தெரியும். சாவுக்கேதுவான கொடிய பிடியில் மனிதனை வைத்திருக்கும் ஆற்றல்மிகுந்த சக்தியாக, வேதவசனங்கள் பாவத்தை விவரிக்கின்றன. பாவத்தின் பிடி எந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது? ரோமருக்கு எழுதின நிருபத்தில், தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலர் பவுல் இதைத் தெளிவான சொற்களில் விவரிக்கிறார்: போர்ச்சேவகர்கள் தங்கள் படைத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பதுபோல், நாம் ‘பாவத்திற்குட்பட்டவர்களாக’ இருக்கிறோம் (ரோமர் 3:9); அது ஓர் அரசனைப்போல் மனிதவர்க்கத்தின்மீது ‘ஆண்டு’ வந்திருக்கிறது (ரோமர் 5:21); அது நமக்குள் ‘வாசமாயிருக்கிறது’ (ரோமர் 7:17, 20); அதன் ‘பிரமாணம்’ நம்மில் தொடர்ந்து செயல்படுகிறது, உண்மையில் நம்முடைய போக்கை அடக்கியாள முயன்றுகொண்டிருக்கிறது. (ரோமர் 7:23, 25) நம்முடைய அபூரண மாம்ச இயல்பில், பாவத்தின் வலிமையான பிடியை எதிர்ப்பதற்கு எத்தகைய கடும் போராட்டத்தை உடையோராக இருக்கிறோம்!—ரோமர் 7:21, 24.
6. நொறுங்குண்ட இருதயத்தோடு யெகோவாவின் இரக்கத்தை நாடுவோரை அவர் எவ்வாறு கருதுகிறார்?
6 ஆகையால், கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருக்கும்படி நம்முடைய இருதயங்கள் எவ்வளவு அதிகமாய் விரும்பினாலும், அது சாத்தியமாக இல்லை என்பதை நம்முடைய இரக்கமுள்ள கடவுள் அறிந்திருக்கிறார். (1 இராஜாக்கள் 8:46) மனம் வருந்தி திரும்பும் இருதயத்தோடு, தகப்பனுக்குரிய இயல்பான அவருடைய இரக்கத்தை நாம் நாடினால், மன்னிப்பை அருளுவார் என்று அன்புடன் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு சொன்னார்: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” (சங்கீதம் 51:17) குற்றத்தின் பாரத்தால் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஓர் இருதயத்தை, யெகோவா ஒருபோதும் தள்ளிவிடமாட்டார், அல்லது அணுகுவதை தடை செய்யமாட்டார். யெகோவா, மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருப்பதை எவ்வளவு அழகாக அது விவரிக்கிறது!
7. கடவுளுடைய இரக்கத்தின்பேரில் நாம் ஏன் தகா சலுகை எடுத்துக்கொள்ளக்கூடாது?
7 எனினும், நம் பாவ இயல்பை, பாவம் செய்வதற்குச் சாக்காக பயன்படுத்திக்கொண்டு, கடவுளுடைய இரக்கத்தின்பேரில் தகா சலுகை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இது குறிக்கிறதா? இல்லவே இல்லை! வெறும் உணர்ச்சிவசப்பட்டு யெகோவா செயல்படுகிறவரல்ல. அவருடைய இரக்கத்திற்கு எல்லைகள் உண்டு. மனந்திரும்பாமல், கடின இருதயத்தோடு, வன்மையாக, வேண்டுமென்றே பழக்கமாய் பாவம் செய்வோரை அவர் நிச்சயமாகவே மன்னிக்கப்போவதில்லை. (எபிரெயர் 10:26-31) மறுபட்சத்தில், ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமாக’ ஓர் இருதயம் இருப்பதை அவர் காண்கையில், ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.’ (நீதிமொழிகள் 17:3, தி.மொ.) முற்றிலுமாக கடவுள் மன்னிப்பதை விவரிப்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள தெளிவான மொழிநடையில் சிலவற்றை நாம் சிந்திக்கலாம்.
யெகோவா எந்தளவு முற்றிலுமாக மன்னிக்கிறார்?
8. நம்முடைய பாவங்களை யெகோவா மன்னிக்கையில், அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார், இது நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
8 மனந்திரும்பின அரசனாகிய தாவீது இவ்வாறு சொன்னார்: ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உம்மிடம் ஒப்புக்கொண்டேன்; என் மீறுதல்களை யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.’ (சங்கீதம் 32:5, தி.மொ.) “மன்னித்தீர்” என்ற பதம், “தூக்கு,” “தாங்கு, கொண்டுசெல்” என்று அடிப்படையாக அர்த்தப்படுகிற எபிரெயச் சொல்லின் மொழிபெயர்ப்பாக உள்ளது. இங்கே அது பயன்படுத்தப்பட்டிருப்பது, ‘குற்றப்பழியை, பாவத்தை, மீறுதலை எடுத்துப்போடுவதை’ குறிக்கிறது. ஆகையால் யெகோவா, தாவீதின் பாவங்களை தூரமாய் எடுத்துச் சென்றுவிட்டார் என்பதுபோல் உள்ளது. (லேவியராகமம் 16:20-22-ஐ ஒப்பிடுக.) சந்தேகமில்லாமல் இது, தாவீது சுமந்த குற்றப் பழிக்குரிய உணர்ச்சிகளை அகற்றியது. (சங்கீதம் 32:3-ஐ ஒப்பிடுக.) இயேசு கிறிஸ்துவினுடைய, மீட்கும் பலியின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தின் ஆதாரத்தில், தம்முடைய மன்னிப்பை நாடுகிறவர்களின் பாவங்களை மன்னிக்கிற கடவுள்மீது, நாமுங்கூட முழு நம்பிக்கை உடையோராக இருக்கலாம். (மத்தேயு 20:28; ஏசாயா 53:12-ஐ ஒப்பிடுக.) யாருடைய பாவங்களை யெகோவா தூரமாய் எடுத்துச் சென்று விடுகிறாரோ அவர்கள், தங்களுடைய கடந்தகால பாவங்களுக்கான குற்ற உணர்ச்சிகளின் சுமையை தொடர்ந்து சுமக்க வேண்டியதில்லை.
9. “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற இயேசுவின் வார்த்தைகளினுடைய அர்த்தமென்ன?
9 யெகோவா எவ்வாறு மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள செய்வதற்கு, கடன் கொடுப்போருக்கும் கடன் வாங்குவோருக்குமுள்ள சம்பந்தத்தை இயேசு உதாரணமாக பயன்படுத்தினார். உதாரணமாக, “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபிக்கும்படி இயேசு நம்மை ஊக்குவித்தார். (மத்தேயு 6:12) இவ்வாறு, ‘பாவங்களை’ ‘கடன்களுக்கு’ இயேசு ஒப்பிட்டார். (லூக்கா 11:4) நாம் பாவம் செய்கையில், யெகோவாவுக்குக் ‘கடன்பட்டவர்களாக’ ஆகிறோம். “மன்னியும்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல், “ஒரு கடனை, வற்புறுத்திக் கேட்காமல் போகவிடுதல், விட்டுவிடுதல்” என அர்த்தப்படலாம். ஒரு கருத்தில், யெகோவா மன்னிக்கையில், நியாயப்படி நம் கணக்கில் சுமத்த வேண்டிய கடனை அவர் நீக்கிவிடுகிறார். மனந்திரும்பின பாவிகள் இதனால் ஆறுதலடையலாம். தாம் நீக்கிவிட்ட கடனைச் செலுத்தும்படி ஒருபோதும் யெகோவா கேட்கமாட்டார்!—சங்கீதம் 32:1, 2; மத்தேயு 18:23-35.
10, 11. (அ) அப்போஸ்தலர் 3:19-ல் காணப்படுகிற, “அழிக்கப்படும்பொருட்டு” என்ற பதத்தால் என்ன கருத்துப்படிவம் குறிப்பிடப்படுகிறது? (ஆ) யெகோவா முற்றிலுமாக மன்னிப்பது எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?
10 கடவுளுடைய மன்னிப்பை விவரிப்பதற்கு, அப்போஸ்தலர் 3:19-ல் (தி.மொ.), மற்றொரு தெளிவான சொல்லணியை பைபிள் பயன்படுத்துகிறது: “உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.” “அழிக்கப்படும்பொருட்டு” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல், உருவகமாய்ப் பயன்படுத்தப்படுகையில், “துடைத்தழிப்பது, தடம் இல்லாமல் செய்வது, ரத்து செய்வது அல்லது அழிப்பது” என அர்த்தப்படலாம். சில நிபுணர்கள் சொல்லுகிறபடி, கையெழுத்துத் துடைத்தழிக்கப்படுவதை இந்தக் கருத்துப்படிவம் குறிப்பிடுகிறது. இது எவ்வாறு சாத்தியமாக இருந்தது? எழுதுவதற்கு, பூர்வ காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட மை, கரிப்பொருளும் பிசினும் தண்ணீரும் சேர்ந்த ஒரு கலவையால் உண்டாக்கப்பட்டது. அத்தகைய மையால் எழுதின பின்பு, ஒரு ஈரமான பஞ்சால் அந்த எழுத்துக்களை ஒருவர் எளிதாக துடைத்தழித்து விடலாம்.
11 யெகோவா முற்றிலும் மன்னிப்பதற்கு அது ஓர் அழகிய விவரிப்பாக இருக்கிறது. நம்முடைய பாவங்களை அவர் மன்னிக்கையில், ஒரு பஞ்சை அவர் எடுத்து, அவற்றைத் துடைத்தழித்துவிடுவதுபோல் அது இருக்கிறது. எதிர்காலத்தில் நமக்கு விரோதமாக அத்தகைய பாவங்களைக் கணக்கில் வைத்திருப்பார் என்று நாம் பயப்பட வேண்டியதில்லை; ஏனெனில், மெய்யாகவே கவனிக்கத்தக்கதாயுள்ள, யெகோவாவின் இரக்கத்தைப் பற்றிய ஒரு குறிப்பை பைபிள் வெளிப்படுத்துகிறது: அவர் மன்னிக்கையில், அதை மறந்துவிடுகிறார்!
“அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்”
12. நம்முடைய பாவங்களை யெகோவா மறந்து விடுகிறார் என்று பைபிள் சொல்கையில், அவற்றை நினைவுக்குக் கொண்டுவர அவரால் முடிகிறதில்லை என்று அர்த்தப்படுகிறதா, நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
12 புதிய உடன்படிக்கையில் இருப்போரைக் குறித்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலமாய், யெகோவா இவ்வாறு வாக்குறுதியளித்தார்: “அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.” (எரேமியா 31:34) யெகோவா மன்னிக்கையில், அந்தப் பாவங்களை திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவர முடியாதவராக அவர் இருக்கிறாரென இது அர்த்தப்படுகிறதா? அவ்வாறு இருக்க முடியாது. தாவீது உட்பட, யெகோவா மன்னித்த பல நபர்களின் பாவங்களைக் குறித்து பைபிள் நமக்குச் சொல்கிறது. (2 சாமுவேல் 11:1-17; 12:1-13) அவர்கள் செய்த தவறுகளைப் பற்றி அவர் இன்னும் உணர்வுடையவராக இருப்பது தெளிவாயிருக்கிறது; நாமும் அவ்வாறே இருக்க வேண்டும். அவர்களுடைய பாவங்களையும், அதோடுகூட, அவர்கள் மனந்திரும்பியதையும், கடவுள் அவர்களை மன்னித்ததையும் பற்றிய பதிவு, நம்முடைய நன்மைக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. (ரோமர் 15:4) தாம் மன்னிக்கிறவர்களின் பாவங்களை யெகோவா ‘நினைப்பது’ இல்லை என்று பைபிள் சொல்கையில் எதைக் குறிக்கிறது?
13. (அ) ‘நான் நினைப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வினைச்சொல்லின் அர்த்தத்தில் எது உட்பட்டிருக்கிறது? (ஆ) “அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” என்று யெகோவா சொல்கையில், நமக்கு என்ன உறுதியளிக்கிறார்?
13 ‘நான் நினைப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வினைச்சொல், சென்ற காலத்தை நினைவுபடுத்துவதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. தியாலஜிக்கல் உவர்ட்புக் ஆஃப் தி ஓல்ட் டெஸ்ட்டமென்ட் சொல்லுகிறபடி, “கூடுதலாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பதை” குறிப்பதாகவும் அது இருக்கிறது. ஆகவே, இந்தக் கருத்தில், பாவத்தை ‘நினைப்பது,’ பாவிகளுக்கு விரோதமாக நடவடிக்கை எடுப்பதை குறிக்கிறது. தாறுமாறாக நடந்த இஸ்ரவேலரைக் குறித்து, “அவர்களுடைய அக்கிரமத்தை அவர் [யெகோவா] நினைப்பார்” என்று தீர்க்கதரிசியாகிய ஓசியா சொன்னபோது, அவர்கள் மனந்திரும்பாமல் இருந்ததற்காக, யெகோவா அவர்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுப்பார் என்பதைக் குறிப்பிட்டார். ஆகவே, இந்த வசனத்தின் மீதிபாகம் இவ்வாறு மேலும் சொல்கிறது: “அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.” (ஓசியா 9:9) மறுபட்சத்தில், “அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” என்று யெகோவா சொல்கையில், மனந்திரும்பின பாவியை மன்னிக்கையில், அந்தப் பாவங்களுக்காக எதிர்காலத்தில் எப்போதாயினும் அவனுக்கு விரோதமாக தாம் நடவடிக்கை எடுக்காதிருப்பதை நமக்கு உறுதியளிக்கிறார். (எசேக்கியேல் 18:21, 22) நம்மைக் குற்றம்சாட்ட அல்லது தொடர்ந்து தண்டிக்க, நம்முடைய பாவங்களை அவர் எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பதில்லை என்ற கருத்தில் அவ்வாறு மறந்துவிடுகிறார். இவ்வாறு, மற்றவர்களுடனான நம் தொடர்பில், பார்த்துப் பின்பற்றுவதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியை நமக்கு யெகோவா வைக்கிறார். கருத்து வேறுபாடுகள் எழும்புகையில், மன்னிப்பதற்கு நீங்கள் முன்பு ஒப்புக்கொண்ட சென்றகால குற்றங்களை திரும்ப நினைவுபடுத்தாமல் இருப்பது நல்லது.
விளைவுகளைப் பற்றியதென்ன?
14. மன்னிக்கப்பட்டதால், மனந்திரும்பின பாவி தன் தவறான போக்கின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறான் என்று ஏன் அர்த்தப்படுகிறதில்லை?
14 மன்னிப்பதற்கு யெகோவா ஆயத்தமாயிருப்பது, மனந்திரும்பின பாவி, தன் தவறான போக்கின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதைக் குறிக்கிறதா? இல்லவே இல்லை. நாம் பாவம் செய்துவிட்டு தண்டனையில் இருந்து விடுபடமுடியாது. பவுல் இவ்வாறு எழுதினார்: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) நம்முடைய நடத்தையின் சில விளைவுகளை அல்லது பிரச்சினைகளை நாம் எதிர்ப்படலாம், ஆனால், மன்னித்த பின்பு, யெகோவா நமக்கு இன்னல்களை அளிப்பதில்லை. துன்பங்கள் எழும்புகையில், ‘சென்ற கால பாவங்களுக்காக யெகோவா என்னை தண்டிக்கிறார் போலும்’ என்பதாக ஒரு கிறிஸ்தவன் உணரக்கூடாது. (யாக்கோபு 1:13-ஐ ஒப்பிடுக.) மறுபட்சத்தில், நம்முடைய தவறான செயல்களின் எல்லா விளைவுகளிலிருந்தும் யெகோவா நம்மைக் காப்பதில்லை. மணவிலக்கு, வேண்டாத கர்ப்பந்தரித்தல், பாலுறவால் கடத்தப்பட்ட நோய், மற்றவர்களுக்கு நம்மீதிருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் இழத்தல்—இவை யாவும் பாவத்தின் விசனகரமான விளைவுகளாக இருக்கலாம்; இவற்றிலிருந்து யெகோவா நம்மைப் பாதுகாப்பதில்லை. பத்சேபாளும் உரியாவும் சம்பந்தப்பட்டதில் தாவீது செய்த பாவங்களை யெகோவா மன்னித்தபோதிலும், பின்தொடர்ந்த துக்ககரமான விளைவுகளிலிருந்து தாவீதை அவர் பாதுகாக்கவில்லை என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.—2 சாமுவேல் 12:9-14.
15, 16. லேவியராகமம் 6:1-7-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரமாணம், களவாடப்பட்டவன், களவாடினவன் ஆகிய இருவருக்குமே எவ்வாறு நன்மை செய்தது?
15 நம்முடைய பாவங்களினால் மற்ற விளைவுகளும் ஏற்படலாம். உதாரணமாக, லேவியராகமம் 6-ம் அதிகாரத்திலுள்ள இந்த விவரத்தைக் கவனியுங்கள். இங்கே, ஒருவன், தன் உடன் இஸ்ரவேலனின் பொருட்களைக் களவாடுதல், பலாத்காரமாகப் பறித்துக்கொள்ளுதல், அல்லது வஞ்சித்து எடுத்துக்கொள்ளுதல் போன்ற வினைமையான தவறு செய்யும் ஒரு சந்தர்ப்ப நிலையை மோசேயின் நியாயப்பிரமாணம் குறிப்பிடுகிறது. பின்பு அந்தப் பாவம் செய்தவன், தன் குற்றத்தை மறுக்கிறான். பொய்யாணையிடுவதற்கும்கூட துணிகரம் கொள்கிறான். இது இரு தரப்பிலும் நிரூபணம் இல்லாத விவாதமாக இருக்கிறது. எனினும், பின்பு, அந்தக் குற்றம் செய்தவன் மனசாட்சியால் வாதிக்கப்பட்டு, தன் பாவத்தை ஒப்புக்கொள்கிறான். கடவுளுடைய மன்னிப்பைப் பெறுவதற்கு அவன் இன்னும் மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும்: தான் எடுத்ததைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், களவாடப்பட்டவனுக்கு அதன் மதிப்பின் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும், ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரண பலியாகச் செலுத்த வேண்டும். பின்பு அந்த நியாயப்பிரமாணம் இவ்வாறு கூறுகிறது: “ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் அவனுக்குப் பிராயச்சித்தம் செய்யவே அவன் பாவம் மன்னிக்கப்படும்.”—லேவியராகமம் 6:1-7, தி.மொ.; மத்தேயு 5:23, 24-ஐ ஒப்பிடுக.
16 இந்தப் பிரமாணம் கடவுள் அளித்த இரக்கமுள்ள ஏற்பாடாக இருந்தது. களவாடப்பட்டவனுக்கு நன்மையாக இருந்தது; பொருளுடைமை அவனுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது; மேலும், களவாடினவன் கடைசியாகத் தன் பாவத்தை ஒப்புக்கொண்டபோது, அவன் சந்தேகமில்லாமல் மிகுந்த மன அமைதியை உணர்ந்திருப்பான். அதேசமயத்தில், கடைசியாக, தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தன் தவறைத் திருத்திக்கொள்ளும்படி மனசாட்சி தூண்டுவிக்கப்பட்ட இந்தப் பிரமாணம் நன்மை செய்தது. நிச்சயமாகவே, அவ்வாறு செய்ய அவன் மறுத்திருந்தால், கடவுளிடமிருந்து அவனுக்கு மன்னிப்பு கிடைத்திருக்காது.
17. நம்முடைய பாவங்களால் மற்றவர்கள் தீங்கிழைக்கப்பட்டிருக்கையில், நாம் என்ன செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்?
17 நாம் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்களாய் இராதபோதிலும், மன்னிப்பின்பேரில் யெகோவாவின் நோக்குநிலை உட்பட, யெகோவாவின் சிந்தனையின்பேரில் மதிப்புமிகுந்த உட்பார்வையை இது நமக்கு அளிக்கிறது. (கொலோசெயர் 2:13, 14) நம்முடைய பாவங்களால் மற்றவர்களுக்கு தீங்கு உண்டாகியிருக்கையில் அல்லது மற்றவர்கள் இக்கட்டுக்குள் ஆகியிருக்கையில், நாம் ‘அந்தத் தவறை சரிசெய்வதற்கு’ நம்மால் இயன்றதைச் செய்கையில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார். (2 கொரிந்தியர் 7:11, NW) இது, நம்முடைய பாவத்தை நாம் ஒப்புக்கொண்டு, நம்முடைய குற்றத்தை ஏற்று, தீங்கிழைக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்பதையும்கூட உட்படுத்துகிறது. பின்பு, இயேசுவின் பலியினுடைய ஆதாரத்தின்பேரில் மன்னிப்புக்காக யெகோவாவிடம் வேண்டி, சுத்தமான மனசாட்சியினால் உண்டாகும் நிம்மதியையும், கடவுளால் மன்னிக்கப்பட்டதன் உறுதியையும் அனுபவிக்கலாம்.—எபிரெயர் 10:21, 22.
18. யெகோவாவின் மன்னிப்பைப் பெறுவதோடுகூட என்ன சிட்சையும் சேர்ந்து வரலாம்?
18 அன்புள்ள எந்தப் பெற்றோரையும் போல், யெகோவா, மன்னிப்பை ஓரளவு சிட்சையோடுகூட அளிக்கலாம். (நீதிமொழிகள் 3:11, 12) மனந்திரும்பின கிறிஸ்தவர், மூப்பராகவோ, உதவி ஊழியராகவோ, பயனியராகவோ சேவிக்கும் தன் சிலாக்கியத்தை இழக்க வேண்டியதாக இருக்கலாம். தனக்கு மிக அருமையாக இருந்த சிலாக்கியங்களை குறிப்பிட்ட காலத்திற்கு இழந்திருப்பது அவருக்கு வேதனையாக இருக்கலாம். எனினும், யெகோவாவின் தயவை அவர் இழந்துவிட்டதாகவோ, அல்லது மன்னிப்பு அளிக்க யெகோவா மறுத்துவிட்டதாகவோ, இத்தகைய சிட்சை அர்த்தப்படுகிறதில்லை. அதோடுகூட, யெகோவாவிடமிருந்து வரும் சிட்சை, நம்மிடமாக அவருக்கு இருக்கும் அன்பின் நிரூபணமாக இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். அதை ஏற்று, பொருத்தி பயன்படுத்துவது நம்முடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்குரியதாக இருக்கிறது; அது நித்திய ஜீவனுக்கும் வழிநடத்தலாம்.—எபிரெயர் 12:5-11.
19, 20. (அ) நீங்கள் தவறுகள் செய்துவிட்டால், யெகோவாவின் இரக்கத்தைப் பெற முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாக நீங்கள் ஏன் உணரக்கூடாது? (ஆ) அடுத்தக் கட்டுரையில் என்ன ஆலோசிக்கப்படும்?
19 ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிற’ கடவுளை நாம் சேவிக்கிறோம் என்பதை அறிவது எவ்வளவு இளைப்பாறுதல் அளிப்பதாக இருக்கிறது! நம்முடைய பாவங்களையும் தவறுகளையும் பார்க்கிலும் அதிகமானதை யெகோவா காண்கிறார். (சங்கீதம் 130:3, 4) நம்முடைய இருதயங்களில் இருப்பதை அவர் அறிகிறார். கடந்த கால தவறுகளின் காரணமாக உங்கள் இருதயம் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமாக இருக்கிறதென்று நீங்கள் உணர்ந்தால், யெகோவாவின் இரக்கத்தைப் பெற முடியாத நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டதாக முடிவு செய்துவிடாதீர்கள். நீங்கள் செய்த தவறுகள் என்னவாயினும், நீங்கள் உண்மையில் மனந்திரும்பி, தவறை சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்து, இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் யெகோவாவின் மன்னிப்புக்காக ஊக்கமாய் ஜெபித்திருந்தால், 1 யோவான் 1:9-ல் உள்ள இவ்வார்த்தைகள் உங்களுக்குப் பொருந்தும் என்று முழு நம்பிக்கையோடிருக்கலாம்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
20 ஒருவருக்கொருவருடனான நம் தொடர்புகளில், யெகோவாவின் மன்னிக்கும் பண்பை பின்பற்றும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. எனினும், மற்றவர்கள் நமக்கு விரோதமாகப் பாவம் செய்கையில் எந்த அளவுக்கு மன்னித்து மறந்துவிடும்படி நாம் எதிர்பார்க்கப்படலாம்? பின்வரும் கட்டுரையில் இது ஆலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a கவனத்தைக் கவருவதாக, “நம் உருவம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெயச் சொல், ஒரு குயவனால் உருவாக்கப்பட்ட மண்பாண்டங்கள் சம்பந்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.—ஏசாயா 29:16.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா ஏன் ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாக’ இருக்கிறார்?
◻ யெகோவா முற்றிலுமாக மன்னிப்பதை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
◻ யெகோவா மன்னிக்கையில், என்ன அர்த்தத்தில் அவர் மறந்துவிடுகிறார்?
◻ நம்முடைய பாவங்களால் மற்றவர்கள் தீங்கிழைக்கப்பட்டிருக்கையில் நாம் என்ன செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்?
[பக்கம் 12-ன் படம்]
நம்முடைய பாவங்களால் மற்றவர்களுக்குத் தீங்கு உண்டாகையில், நாம் திருத்தங்கள் செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்