வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆபிரகாமுடன் யெகோவா உடன்படிக்கை செய்தது ஊரிலா ஆரானிலா?
ஆபிரகாமுடன் யெகோவா செய்த உடன்படிக்கையைப் பற்றிய முதல் பதிவு ஆதியாகமம் 12:1-3-ல் காணப்படுகிறது, அது இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்[குவேன்.] . . . பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”a ஆபிரகாம் ஊர் பட்டணத்தில் இருந்தபோது அவருடன் யெகோவா இந்த உடன்படிக்கையை செய்து, பிற்பாடு ஆபிரகாம் ஆரானில் இருந்தபோது அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கலாம்.
கானானுக்கு குடிபெயர்ந்து செல்லும்படி ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த கட்டளையை ஸ்தேவான் முதல் நூற்றாண்டில் குறிப்பிட்டார். நியாயசங்கத்திற்கு முன்பு பேசும்போது அவர் இவ்வாறு சொன்னார்: ‘நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே [ஆரானிலே] குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.’ (அப்போஸ்தலர் 7:2, 3) ஆபிரகாமின் சொந்த பட்டணம் ஊர்; ஸ்தேவான் சொல்கிறபடி, அங்கேதான் கானானுக்குப் போக வேண்டும் என்ற கட்டளையை முதன்முதலில் அவர் கேட்டார். (ஆதியாகமம் 15:7; நெகேமியா 9:7) ஆபிரகாமுடன் யெகோவா செய்த உடன்படிக்கையை ஸ்தேவான் குறிப்பிடவில்லை, ஆனால் ஆதியாகமம் 12:1-3-ல், கானானுக்குப் போகும்படி சொல்லப்பட்ட கட்டளையோடு அந்த உடன்படிக்கையும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே, ஆபிரகாம் ஊர் பட்டணத்தில் வசித்தபோது யெகோவா அவருடன் உடன்படிக்கை செய்தார் என்று நம்புவது நியாயமானதே.
இருப்பினும், ஆபிரகாம் ஆரானில் இருந்தபோது யெகோவா தம்முடைய உடன்படிக்கையை மீண்டும் அவரிடம் சொன்னார் என ஆதியாகம பதிவை கவனமாக வாசிப்பது சுட்டிக்காட்டுகிறது; கானானில் யெகோவா பிற்பாடு அந்த உடன்படிக்கையை மீண்டும் குறிப்பிட்டு அதில் பல அம்சங்களை சேர்த்ததைப் போலவே இதையும் குறிப்பிட்டிருப்பார். (ஆதியாகமம் 15:5; 17:1-5; 18:18; 22:16-18) ஆதியாகமம் 11:31, 32 சொல்கிறபடி, ஆபிரகாமின் தகப்பன் தேராகு, ஆபிரகாமையும் சாராளையும் லோத்துவையும் கூட்டிக்கொண்டு ஊர் பட்டணத்தைவிட்டு கானானுக்குச் சென்றார். அவர்கள் ஆரானுக்கு வந்து தேராகு இறக்கும்வரை அங்கே தங்கியிருந்தார்கள். பெரும் செல்வத்தை சேர்க்கும் அளவுக்கு ஆபிரகாம் ஆரானிலே நீண்ட காலம் தங்கியிருந்தார். (ஆதியாகமம் 12:5) ஏதோவொரு சந்தர்ப்பத்தில், ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரும் அவர்களுடன் அங்கே வந்து தங்கியிருந்தார்.
தேராகுவின் இறப்பை பைபிள் பதிவு செய்தபின், ஆபிரகாமிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளை அறிவித்து, இவ்வாறு தொடர்ந்து கூறுகிறது: “கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்.” (ஆதியாகமம் 12:4) ஆகவே, தேராகுவின் இறப்புக்குப் பிறகு ஆதியாகமம் 12:1-3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளை யெகோவா பேசினார் என்ற பலமான கருத்தை ஆதியாகமம் 11:31–12:4 கொடுக்கிறது. அப்படியானால், அப்போது தனக்கு கிடைத்த கட்டளைக்கும் ஊர் பட்டணத்தில் சில வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்த கட்டளைக்கும் இசைவாக ஆபிரகாம் ஆரானைவிட்டு புறப்பட்டு யெகோவா காட்டிய தேசத்திற்குச் சென்றார்.
ஆதியாகமம் 12:1 சொல்கிறபடி, ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.” ஒருகாலத்தில் ஆபிரகாமின் ‘தேசம்’ ஊர், அவர் தகப்பனுடைய ‘வீடு’ அங்கே இருந்தது. என்றபோதிலும், ஆபிரகாமின் தகப்பன் தன்னுடைய வீட்டாரை ஆரானுக்கு அழைத்துக் கொண்டுபோனார், அதனால் அந்த இடத்தை தன்னுடைய தேசம் என ஆபிரகாம் அழைக்கத் தொடங்கினார். பல வருடங்கள் கானானில் தங்கியிருந்தபின், ஈசாக்குக்கு பெண் தேடுவதற்காக அவர் தன்னுடைய ஊழியக்காரனை ‘தன் தேசத்துக்கும் தன் இனத்தாரிடத்துக்கும்’ அனுப்பினார், அந்த ஊழியக்காரன் ‘நாகோருடைய ஊருக்கு’ (அதாவது ஆரானுக்கு அல்லது அதற்கு அருகிலுள்ள இடத்திற்கு) போனான். (ஆதியாகமம் 24:4, 10) அங்கே நாகோரின் பெரிய குடும்பமாகிய ஆபிரகாமின் இனத்தாரில் ரெபேக்காளை அந்த ஊழியக்காரன் கண்டுபிடித்தான்.—ஆதியாகமம் 22:20-24; 24:15, 24, 29; 27:42, 43.
நியாயசங்கத்திற்கு முன்பு ஸ்தேவான் பேசுகையில் ஆபிரகாமைப் பற்றி இவ்வாறு கூறினார்: “அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக் கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.” (அப்போஸ்தலர் 7:4) ஆபிரகாமிடம் யெகோவா ஆரானில் பேசினார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அந்தச் சமயத்தில், ஆதியாகமம் 12:1-3-ல் சொல்லப்பட்டுள்ளபடி, தம்முடைய உடன்படிக்கையை ஆபிரகாமிடம் யெகோவா மீண்டும் கூறினார் என நம்புவது நியாயமானதே; ஏனென்றால் ஆபிரகாம் கானானுக்கு குடிபெயர்ந்து சென்றபோது இந்த உடன்படிக்கை அமலுக்கு வந்தது. இவ்வாறு, எல்லா உண்மைகளையும் ஆராய்வது, ஆபிரகாமிடம் யெகோவா முதலில் ஊர் பட்டணத்தில் தம்முடைய உடன்படிக்கையை செய்து அதற்குப் பிறகு அதை ஆரானில் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்ற முடிவுக்கு வரச் செய்கிறது.
[அடிக்குறிப்பு]
a கானானில் ஆபிரகாம் 99 வயதாக இருந்த சமயத்தில் ஆபிராம் என்ற அவருடைய பெயரை ஆபிரகாம் என யெகோவா மாற்றினார்.—ஆதியாகமம் 17:1, 5.