பைபிள் புத்தக எண் 1—ஆதியாகமம்
எழுத்தாளர்: மோசே
எழுதப்பட்ட இடம்: வனாந்தரம்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1513
காலப்பகுதி: “ஆதியிலே” இருந்து பொ.ச.மு. 1657 வரை
சுருக்கமான 50 அதிகாரங்களே அடங்கிய ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள். மனிதனின் ஆதி சரித்திரத்தைப் பற்றிய திருத்தமான விவரமளித்து, படைப்பாளரோடும் கோடானு கோடி படைப்புகளைக் கொண்ட இந்த பூமியோடும் மனிதனுக்கு உள்ள உறவைக் காட்டும் ஒரே பதிவை அதன் முதல் ஓரிரண்டு பக்கங்களிலேயே காண்கிறீர்கள்! பூமியில் மனிதனை குடிவைத்ததில் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய ஆழமான அறிவையும் அந்த சில பக்கங்களிலேயே அறிந்துகொள்கிறீர்கள். இன்னும் சில பக்கங்களைப் புரட்டுகிறீர்கள். மனிதன் ஏன் மரிக்கிறான் என்பதையும், அவனுடைய தற்போதைய துன்பநிலைக்குக் காரணத்தையும் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் உண்மையான ஆதாரத்தையும், மீட்புக்கான கடவுளுடைய கருவியை, அதாவது வாக்குப்பண்ணப்பட்ட வித்தை அடையாளம் கண்டுகொள்வதைப் பற்றியும் அறிவொளியூட்டப்படுகிறீர்கள். இவையெல்லாம் அடங்கிய தனிச்சிறப்புக்குரிய புத்தகமே ஆதியாகமம். இது பைபிளின் 66 புத்தகங்களில் முதல் புத்தகம்.
2 “ஆதியாகமம்” என்பதன் பொருள் “தொடக்கம்; பிறப்பு.” இந்தப் பெயர் இப்புத்தகத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் (Septuagint) மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது. “ஆதியில்” (கிரேக்கில், எனார்க்கேய் [en ar·kheiʹ]) என்ற அர்த்தமுடைய ஆரம்ப வார்த்தையாகிய பெரிஷித் (Bereʼ·shithʹ) என்பதே எபிரெய கையெழுத்துப் பிரதிகளில் இப்புத்தகத்தின் தலைப்பு. பென்டாடெக்கின் (“ஐந்து சுருள்கள்” அல்லது “ஐந்தொகுதி” எனப் பொருள்படும் ஆங்கிலமயமான ஒரு கிரேக்கச் சொல்) முதல் புத்தகமே ஆதியாகமம். இது, முதன்முதலில் தோரா (நியாயப்பிரமாணம்) அல்லது ‘மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகம்’ என்றழைக்கப்பட்டது. ஆனால், கையாளுவதற்கு எளிதாக இருப்பதற்காக பிற்பாடு ஐந்து சுருள்களாகப் பிரிக்கப்பட்டது.—யோசு. 23:6; எஸ்றா 6:18.
3 யெகோவா தேவனே பைபிளின் ஆசிரியர், ஆனால் ஆதியாகமத்தை எழுதும்படி மோசேயை ஏவினார். ஆதியாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவலை மோசே எங்கிருந்து பெற்றார்? சிலவற்றை கடவுளுடைய வெளிப்படுத்துதலால் நேரடியாக பெற்றிருக்கலாம், இன்னும் சிலவற்றை பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் வாய்வழியாக கடத்தப்பட்டதிலிருந்து பெற்றிருக்கலாம். மனிதவர்க்கத்தின் தோற்றத்தைப் பற்றிய மதிப்புமிகுந்த விலைமதியா பதிவுகளாக அவருடைய முற்பிதாக்கள் பாதுகாத்துவைத்த எழுதப்பட்ட ஆவணங்களை மோசே வைத்திருக்கலாம் என்பதும் சாத்தியமே.a
4 ஆவியின் ஏவுதலால் பெரும்பாலும் பொ.ச.மு. 1513-ல் சீனாய் வனாந்தரத்தில் மோசே தன் பதிவை எழுதி முடித்திருக்கலாம். (2 தீ. 3:16; யோவா. 5:39, 46, 47) ஆதியாகமத்தின் கடைசி பாகத்திற்குரிய தகவல் மோசேக்கு எங்கிருந்து கிடைத்தது? அவருடைய பூட்டன் லேவி என்பவர் யோசேப்பின் ஒன்றுவிட்ட சகோதரனாக இருந்ததால், இந்த நுட்பவிவரங்கள் அவருடைய சொந்த குடும்பத்துக்குள்ளேயே திருத்தமாய் அறியப்பட்டிருக்கும். லேவியின் வாழ்க்கை மோசேயின் தகப்பனாகிய அம்ராமின் வாழ்க்கை காலம் வரை எட்டியிருக்கலாம். அதோடு, வேதவாக்கியங்களின் இந்தப் பகுதி திருத்தமாக பதிவுசெய்யப்படுவதை யெகோவாவின் ஆவி மறுபடியும் உறுதிப்படுத்தியிருக்கும்.—யாத். 6:16, 18, 20; எண். 26:59.
5 ஆதியாகமத்தை யார் எழுதினார் என்பதைக் குறித்து சந்தேகமே இல்லை. மோசேக்குப் பின் வந்தவரான யோசுவாவின் காலம் முதற்கொண்டே, ஆதியாகமம் புத்தகம் உள்ளிட்ட பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன. ‘மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகம்’ என்றோ இதுபோல் மற்ற விதங்களிலோ அவை குறிப்பிடப்படுகின்றன. சொல்லப்போனால், பைபிளின் பிற்பட்ட 27 புத்தகங்களில் மோசேயைக் குறிப்பிடும் 200 மேற்கோள்கள் உள்ளன. மோசே எழுதினார் என்பதைக் குறித்து யூதருக்குள் ஒருபோதும் சந்தேகம் எழும்பவில்லை. மோசே ‘நியாயப்பிரமாணத்தின்’ எழுத்தாளர் என கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, மணிமகுடமாக திகழும் அத்தாட்சி இயேசு கிறிஸ்துவின் அத்தாட்சியாகும். யெகோவாவின் நேரடியான கட்டளையாலும் அவருடைய ஏவுதலாலும் மோசே எழுதினார்.—யாத். 17:14; 34:27; யோசு. 8:31; தானி. 9:13; லூ. 24:27, 44.
6 ஆனால் சந்தேகவாதிகள் சிலர், மோசேயும் அவருக்கு முன்பு இருந்தவர்களும் எப்படி எழுத முடிந்தது, எழுதுவது பிற்காலத்தில் தோன்றிய ஒன்றல்லவா என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எழுதுவது மனித சரித்திரத்தின் ஆரம்ப காலத்திலேயே, ஒருவேளை பொ.ச.மு. 2370-ல் சம்பவித்த நோவா காலத்து ஜலப்பிரளயத்துக்கு முன்பே துவங்கிவிட்டதாய் தெரிகிறது. ஆரம்ப காலத்திலேயே மனிதனுக்கு எழுதும் திறமை இருந்ததற்கு ஏதாவது அத்தாட்சி உள்ளதா? தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் தோண்டியெடுத்த களிமண் பலகைகள் (clay tablets) சிலவற்றிற்கு பொ.ச.மு. 2370-க்கும் முற்பட்ட தேதிகளைக் கொடுத்திருப்பது உண்மைதான் என்றாலும், அத்தகைய தேதிகள் வெறும் யூகத்தின் அடிப்படையிலானவையே. இருப்பினும், நகரங்களைக் கட்டுவதும் இன்னிசைக் கருவிகளை தயாரிப்பதும் உலோக கருவிகளை உருவாக்குவதும் ஜலப்பிரளயத்துக்கு வெகுகாலத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டதை பைபிள் தெளிவாக காட்டுவது கவனிக்கத்தக்கது. (ஆதி. 4:17, 21, 22) அப்படியென்றால், எழுத்து முறையை தோற்றுவிப்பது மனிதருக்குக் கடினமாக இருந்திராது என்று சொல்வது நியாயமானதே.
7 வேறுபல அம்சங்களிலும், ஆதியாகமம் புத்தகம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளுடன் வியத்தகு விதத்தில் ஒத்திருக்கிறது. ஜலப்பிரளயத்தையும் மனிதர்கள் அதிலிருந்து (பெரும்பாலும், ஒரு படகில் பாதுகாக்கப்பட்டதன் பலனாக) தப்பிப்பிழைத்ததையும் பற்றிய விவரங்கள் மனித குடும்பத்தின் பல கிளைகளின் புராணக் கதைகளில் இருக்கின்றன. என்றபோதிலும், ஜலப்பிரளயத்தையும் அதில் தப்பிப்பிழைத்தவர்களையும் பற்றிய மெய்யான, கண்கூடான விவரப்பதிவை ஆதியாகமம் மாத்திரமே அளிக்கிறது. சேம், காம், யாப்பேத் என்ற நோவாவின் மூன்று குமாரர்களிலிருந்து தோன்றிய மனிதவர்க்கத்தின் வெவ்வேறு கிளைகளின் ஆரம்ப குடியிருப்பையும் ஆதியாகம விவரப்பதிவு குறிப்பிடுகிறது.b அமெரிக்காவில் மிஸ்ஸெளரியிலுள்ள ஸீனியா இறையியல் செமினரியைச் சேர்ந்த டாக்டர் மெல்வின் ஜி. கைல் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “மைய இடமாகிய மெசொபொத்தேமியாவில் ஏதோ ஓரிடத்திலிருந்து, காமின் சந்ததியினர் தென்மேற்குக்கும், யாப்பேத்தின் சந்ததியினர் வடமேற்குக்கும், சேமின் சந்ததியினர் ‘கிழக்கே’ ‘சிநேயார் தேசத்துக்கும்’ இடம்பெயர்ந்து சென்றனர் என்பது மறுக்க முடியாதது.”c
8 தெய்வீகப் பதிவின் ஒரு பாகமாகிய ஆதியாகமத்தின் நம்பகத்தன்மையை உட்புற ஒத்திசைவும், தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் மற்ற பதிவுகளோடு உள்ள முழுமையான ஒத்திசைவும் காட்டுகிறது. அதன் ஒளிவுமறைவற்றத் தன்மை, யெகோவாவுக்குப் பயந்தவரும் சத்தியத்தை நேசித்தவரும் இஸ்ரவேலர் மற்றும் அதில் பிரபலமாக இருந்தவர்களின் பாவங்களைத் தயங்காமல் எழுதியவருமாகிய ஓர் எழுத்தாளரை படம்பிடித்துக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அதிகாரத்தின் முடிவில் காட்டப்பட்டுள்ளபடி, ஆதியாகமத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் துளிகூட பிசகாமல் நிறைவேற்றமடைந்திருப்பது, யெகோவா தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.—ஆதி. 9:20-23; 37:18-35; கலா. 3:8, 16.
ஆதியாகமத்தின் பொருளடக்கம்
9 வானங்களையும் பூமியையும் படைத்தல், மனித குடியிருப்புக்காக பூமியை ஆயத்தம் செய்தல் (1:1–2:25). கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பே நடந்தவற்றை, மனதில் பதிய வைக்கும் எளிமையுடன் சொல்கிறது: “தொடக்கத்தில் கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்.” (NW) இந்த ஆரம்ப வாக்கியம், கடவுளை சிருஷ்டிகராகவும், வானங்களையும் பூமியையும் அவருடைய படைப்புகளாகவும் அடையாளம் காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்த முதல் அதிகாரம், தனிச்சிறப்புடைய, நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில், பூமி சம்பந்தமான படைப்பு வேலையைப் பற்றிய பொதுவான விவரத்தை தொடர்ந்து சொல்கிறது. நாட்கள் எனப்படும் ஆறு காலப்பகுதிகளில் படைப்பு வேலை நிறைவேற்றப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சாயங்காலத்தோடு தொடங்குகிறது, அப்போது அந்தக் காலப்பகுதிக்குரிய படைப்பு வேலை தெளிவற்றதாக உள்ளது. பின்பு காலையின் பிரகாசத்தில் முடிகிறது. அப்போது படைப்பு வேலையின் மகிமை தெள்ளத் தெளிவாகிறது. ஒன்றன்பின் ஒன்றாக தொடரும் ‘நாட்களில்’ ஒளி; ஆகாயவிரிவு; வெட்டாந்தரையும் தாவரங்களும்; பகலையும் இரவையும் பிரிப்பதற்குச் சுடர்களும்; மச்சங்களும் பறவைகளும்; நிலத்தில் வாழும் மிருகங்களும் தோன்றுகின்றன, முடிவாக மனிதன் தோன்றுகிறான். இங்கே, இனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை, அதாவது ஓர் இனம் வேறொரு இனமாக பரிணமிக்கவே முடியாதபடி அமைந்திருக்கும் பெரும் பிளவை கடவுள் தெரியப்படுத்துகிறார். பூமியில் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கிய பின்பு, மூன்று அம்சங்களைக் கொண்ட தம் நோக்கத்தை அறிவிக்கிறார்: பூமியை நீதியுள்ள சந்ததியால் நிரப்புவது, அதைக் கீழ்ப்படுத்துவது, மிருக ஜீவன்களை ஆண்டுகொள்வது. ஏழாம் “நாள்” யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டு பரிசுத்தமானதென கூறப்படுகிறது. இப்பொழுது அவர், ‘தாம் உண்டாக்கின தம்முடைய எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருக்க தொடங்குகிறார்.’ (NW) அடுத்து இந்த விவரப்பதிவு, மனிதனை கடவுள் படைத்ததைப் பற்றிய விவரமான காட்சியை அளிக்கிறது. ஏதேன் தோட்டத்தையும் அது அமைந்திருந்த இடத்தையும் வர்ணிக்கிறது. விலக்கப்பட்ட மரத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டத்தைக் கூறுகிறது, ஆதாம் மிருகங்களுக்குப் பெயரிடுவதை விவரிக்கிறது, பின்னர் ஆதாமின் சொந்த உடலிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை ஆதாமிடம் அழைத்துவந்து முதல் திருமணத்தை அவர் ஏற்பாடு செய்வதைப் பற்றிய விவரத்தையும் கொடுக்கிறது.
10 பாவமும் மரணமும் உலகத்துக்குள் பிரவேசிக்கின்றன; விடுதலை செய்பவராகிய “வித்து” முன்னறிவிக்கப்படுகிறார் (3:1–5:5). விலக்கப்பட்ட கனியை அந்த ஸ்திரீ சாப்பிட்டு, தன் கணவனும் தன்னோடு கலகத்தில் சேர்ந்துகொள்ளும்படி தூண்டுகிறாள். இவ்வாறு, கீழ்ப்படியாமையால் ஏதேனின் தூய்மை கெடுக்கப்படுகிறது. தம்முடைய நோக்கம் நிறைவேற்றப்படும் அந்த வழிவகையை கடவுள் உடனடியாக குறிப்பிடுகிறார்: “யெகோவா தேவன் சர்ப்பத்தினிடம் [அந்தக் கலகத்தைத் தூண்டிய காணக்கூடாத சாத்தானிடம்]: ‘ . . . உனக்கும் ஸ்திரீக்குமிடையிலும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையிலும் நான் பகைமையை உண்டாக்குவேன். அவர் உன்னை தலையில் நசுக்குவார், நீ அவரைக் குதிங்காலில் நசுக்குவாய்’ என்று சொன்னார்.” (3:14, 15, NW) முட்களுக்கும் குருக்குகளுக்கும் மத்தியில் வேதனையோடும் வியர்வையோடும் பாடுபட்டு உழைத்து வாழும்படி தோட்டத்திலிருந்து மனிதன் வெளியேற்றப்படுகிறான். கடைசியாக, அவன் மரித்து தான் எடுக்கப்பட்டிருந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டும். அவனுடைய சந்ததி மாத்திரமே வாக்குப்பண்ணப்பட்ட வித்தில் நம்பிக்கை கொள்ளலாம்.
11 பாவத்தின் கோர விளைவுகள் ஏதேனுக்கு வெளியில் தொடர்ந்தன. தலைமகனாகிய காயீன், யெகோவாவின் உண்மையுள்ள ஊழியனும் தன் சகோதரனுமாகிய ஆபேலை கொன்றுவிடுகிறான். காயீனை அகதிகளுக்குரிய தேசத்திற்கு யெகோவா துரத்திவிடுகிறார். அங்கே அவன் சந்ததியைப் பிறப்பிக்கிறான், பின்னால் அது ஜலப்பிரளயத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டுப்போகிறது. ஆதாமுக்கு இப்பொழுது சேத் என்னும் மற்றொரு குமாரன் இருக்கிறான், இவன் ஏனோஸுக்கு தகப்பனாகிறான். இந்தச் சமயத்தில், யெகோவாவின் பெயரில் மனிதர்கள் பாசாங்குத்தனமாக கூப்பிடத் தொடங்குகின்றனர். ஆதாம் 930 வயதில் மரிக்கிறான்.
12 பொல்லாத மனிதரும் தூதரும் பூமியைப் பாழ்ப்படுத்துகின்றனர்; கடவுள் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவருகிறார் (5:6–11:9). இங்கே, சேத்தின் வழிவரும் வம்சாவளி பட்டியல் கொடுக்கப்படுகிறது. சேத்தின் இந்தப் பரம்பரையினருக்குள் முக்கியமானவர் ஏனோக்கு. இவர் ‘உண்மையான கடவுளோடு நடப்பதால்’ யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறார். (5:22, NW) விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் மற்றொரு மனிதன் நோவா; இவர் ஆதாமின் படைப்புக்கு 1,056 ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர், ஏனோக்கின் கொள்ளுப் பேரன். இந்தக் காலப்பகுதியில் பூமியில் வன்முறையை அதிகரிக்கும் ஒன்று நேரிடுகிறது. அழகிய தோற்றமுள்ள குமாரத்திகளை மணம் செய்வதற்காக தேவதூதர்கள் தங்கள் பரலோக வாசஸ்தலத்தை விட்டுவிடுகின்றனர். அங்கீகரிக்கப்படாத இந்த முறைகேடான வாழ்க்கை, இனக்கலப்புப் பிறவிகளான நெபிலிம் (“வீழ்த்துவோர்” எனப் பொருள்படும்) எனப்படும் இராட்சதர் இனத்தை பிறப்பிக்கிறது, இவர்கள் கடவுளுக்கு அல்ல, தங்களுக்கே பெயரும் புகழும் உண்டுபண்ணிக் கொள்கிறார்கள். மனிதவர்க்கத்தில் துன்மார்க்கம் தொடர்ந்ததால், மனிதரையும் மிருகங்களையும் அழிக்கப்போவதாக நோவாவிடம் யெகோவா அறிவிக்கிறார். நோவா மாத்திரமே யெகோவாவின் தயவை பெறுகிறார்.
13 நோவா சேம், காம், யாப்பேத்துக்குத் தகப்பனாகிறார். பூமியில் வன்முறைச் செயல்களும் நாச வேலைகளும் தொடருகின்றன. ஆகவே, ஒரு பெரிய ஜலப்பிரளயத்தால் சீக்கிரத்தில் தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தப்போவதாக நோவாவுக்கு யெகோவா தெரியப்படுத்துகிறார். பாதுகாப்புக்காக ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவுக்குக் கட்டளையிட்டு, கட்டுவதற்கு நுட்பவிவரங்களையும் கொடுக்கிறார். நோவா உடனடியாக கீழ்ப்படிந்து, எட்டு பேரடங்கிய தன் குடும்பத்தை, மிருகங்களோடும் பறவைகளோடுங்கூட அதனுள் கூட்டிச் சேர்க்கிறார். பின்பு, அவருடைய 600-வது வயதில் (பொ.ச.மு. 2370) ஜலப்பிரளயம் தொடங்குகிறது. உயரமான மலைகளும் 15 முழங்கள் (ஏ. 22 அடி) உயரத்திற்கு தண்ணீரால் மூடப்படும் வரையில் 40 நாட்கள் விடாமல் பெருமழை பெய்கிறது. ஒரு வருடத்திற்கு பின்பு, நோவா கடைசியாக தன் குடும்பத்தைப் பேழையிலிருந்து வெளியில் கொண்டுவர முடிகிறது. அப்போது, யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலில் ஒரு பெரிய பலி செலுத்துகிறார்.
14 நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் யெகோவா ஆசீர்வதித்து, பூமியைத் தங்கள் சந்ததியால் நிரப்பும்படி கட்டளையிடுகிறார். மாமிசம் புசிக்கும்படி கடவுளுடைய கட்டளை அனுமதிக்கிறது. ஆனால் இரத்தம் மாம்சத்தின் ஆத்துமா அல்லது உயிர் என்பதால் அதற்கு விலகியிருக்க வேண்டும் என்றும் கொலையாளிக்கு மரணதண்டனை என்றும் கட்டளையிடுகிறது. பூமியின்மீது இனி ஒருபோதும் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவரப்போவதில்லை என்ற கடவுளுடைய உடன்படிக்கையை வானவில் உறுதிப்படுத்துகிறது. பின்பு, யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய நோவாவுக்கு காம் அவமரியாதை காட்டுகிறான். நோவா இதை அறிந்தபோது காமின் குமாரனாகிய கானானை சபிக்கிறார். ஆனால் சேமுக்கு தனிப்பட்ட முறையில் தயவு காட்டப்படும் என்றும், யாப்பேத்தும்கூட ஆசீர்வதிக்கப்படுவார் என்றும் சொல்கிறார். நோவா 950-ம் வயதில் மரிக்கிறார்.
15 பலுகிப் பெருக வேண்டுமென்ற கடவுளுடைய கட்டளையை நோவாவின் மூன்று குமாரர்கள் நிறைவேற்றி, 70 குடும்பங்களை பிறப்பிக்கின்றனர். இந்தக் குடும்பங்களே தற்போதைய மனித குலத்தின் மூதாதையர். காமின் பேரனாகிய நிம்ரோது இதில் சேர்க்கப்படுவதில்லை, “யெகோவாவுக்கு விரோதமாக பலத்த வேட்டைக்காரனாக” ஆனதால் சேர்க்கப்படுவதில்லை என தெரிகிறது. (10:9, NW) அவன் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தி நகரங்களைக் கட்டுகிறான். இந்தச் சமயத்தில் பூமி முழுவதும் ஒரே மொழியே இருந்தது. பூமியை நிரப்பி அதைப் பண்படுத்தி காப்பதற்கு எங்கும் சிதறிச் செல்வதற்குப் பதிலாக, தங்களுக்காக பெயரும் புகழும் உண்டுபண்ண ஒரு நகரத்தையும் வானளாவிய ஒரு கோபுரத்தையும் கட்டத் தீர்மானிக்கின்றனர். என்றபோதிலும், யெகோவா அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுகிறார். இவ்வாறு அவர்களுடைய நோக்கத்தைத் தடைசெய்து, அவர்களை சிதறிப்போகச் செய்கிறார். அந்த நகரம் (“குழப்பம்” எனப் பொருள்படும்) பாபேல் என்று அழைக்கப்படுகிறது.
16 ஆபிரகாமுடன் கடவுளுடைய தொடர்புகள் (11:10–25:26). சேமிலிருந்து தேராகின் குமாரன் ஆபிராம் வரைக்கும் முக்கிய வம்சாவளி கொடுக்கப்படுகிறது, காலக்கிரம இணைப்புகளும் கொடுக்கப்படுகின்றன. ஆபிராம் தனக்கு பேரும் புகழும் உண்டாக்கிக்கொள்ள நாடாமல் கடவுளில் விசுவாசம் காட்டுகிறார். கடவுளுடைய கட்டளையின்படி, ஊர் என்னும் கல்தேய நதரத்தைவிட்டு வெளியேறுகிறார். 75 வயதில் கானான் தேசத்துக்குச் செல்லும் வழியில் ஐப்பிராத்து நதியைக் கடந்து, யெகோவாவின் பெயரில் வேண்டிக்கொள்கிறார். அவருடைய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் நிமித்தம், “யெகோவாவின் நண்பன் [நேசமானவன்]” என அழைக்கப்படுகிறார். கடவுள் அவரோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். (யாக். 2:23, NW; 2 நா. 20:7; ஏசா. 41:8, NW) ஆபிராமும் அவருடைய மனைவியும் எகிப்தில் சிறிது காலம் தங்குகையில் கடவுள் அவர்களைப் பாதுகாக்கிறார். கானானுக்குத் திரும்பிவந்த சமயத்தில், தேசத்தின் மிக வளமான பகுதியை தன் சகோதரன் மகனும் உடன் வணக்கத்தானுமாகிய லோத்து தெரிந்தெடுப்பதற்கு அனுமதிப்பதன்மூலம் ஆபிராம் தன் தயாளத்தையும் சமாதான குணத்தையும் காட்டுகிறார். பின்னால், லோத்தை சிறைபிடித்துக் கொண்டுசென்ற நான்கு அரசர்களிடமிருந்து அவனை மீட்கிறார். போரிட்டு திரும்பி வரும்போது சாலேமின் அரசர் மெல்கிசேதேக்கை சந்திக்கிறார். கடவுளுடைய ஆசாரியராகிய இவர் ஆபிராமை ஆசீர்வதிக்கிறார், அவருக்கு ஆபிராம் தசமபாகங்களைச் செலுத்துகிறார்.
17 பின்பு ஆபிராமுக்கு கடவுள் தோன்றி, தாம் ஆபிராமின் கேடகம் என அறிவிக்கிறார். ஆபிராமின் வித்து எண்ணிக்கையில் வானத்தின் நட்சத்திரங்களைப்போல் பெருகும் என்பதை வெளிப்படுத்தி அந்த உடன்படிக்கை வாக்குறுதியை மேலும் விரித்துரைக்கிறார். ஆபிராமின் சந்ததியினர் 400 ஆண்டுகள் உபத்திரவப்படுவார்கள், அதன் பின்னரோ கடவுளால் விடுவிக்கப்படுவார்கள், அவர்களை உபத்திரவப்படுத்தும் தேசம் நியாயந்தீர்க்கப்படும் என ஆபிராமுக்கு சொல்லப்படுகிறது. ஆபிராம் 85 வயதாயிருக்கும்போது, அவருடைய மனைவி சாராய் இன்னும் பிள்ளை பெறாமல் இருக்கிறாள். ஆகவே, எகிப்திய வேலைக்காரியாகிய ஆகார் மூலம் அவருக்கு ஒரு பிள்ளை உண்டாகும்படி அவளை கொடுக்கிறாள். இஸ்மவேல் பிறக்கிறான், இவன் சுதந்தரவாளியாகும் சாத்தியம் இருப்பதாய் கருதப்படுகிறது. எனினும், யெகோவாவின் நோக்கம் வேறுவிதமாக இருக்கிறது. ஆபிராம் 99 வயதாக இருக்கையில், யெகோவா அவருடைய பெயரை ஆபிரகாம் என மாற்றுகிறார். சாராயின் பெயரை சாராள் என மாற்றுகிறார். சாராள் ஒரு குமாரனை பெறுவாள் என்ற வாக்குறுதியையும் தருகிறார். விருத்தசேதன உடன்படிக்கை ஆபிரகாமுக்குக் கொடுக்கப்படுகிறது, அவர் உடனடியாக தன் வீட்டாருக்கு விருத்தசேதனம் செய்கிறார்.
18 சோதோம் கொமோரா பட்டணத்தாருடைய மிகுந்த பாவத்தினிமித்தம் அவர்களை அழிக்க தீர்மானித்திருப்பதை தம்முடைய நண்பன் ஆபிரகாமுக்கு கடவுள் இப்பொழுது அறிவிக்கிறார். யெகோவாவின் தூதர்கள் லோத்தை எச்சரித்து, அவன் தன் மனைவியோடும் இரண்டு குமாரத்திகளோடும் சோதோமைவிட்டு தப்பியோட உதவி செய்கிறார்கள். என்றபோதிலும், அவனுடைய மனைவி உடைமைகளை விட்டுப்பிரிய மனமில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத் தூணாகிறாள். சந்ததியைப் பிறப்பிப்பதற்காக லோத்தின் குமாரத்திகள் தங்கள் தகப்பனுக்கு திராட்சமதுவை கொடுத்து அவர் மயக்கவெறியுடன் இருக்கும்போது அவருடன் உடலுறவு கொண்டு இரண்டு குமாரர்களைப் பெறுகிறார்கள், இவர்கள் மோவாப் மற்றும் அம்மோன் நாட்டினரின் பிதாக்களாகின்றனர்.
19 சாராளை பெலிஸ்தியனாகிய அபிமெலேக் கற்பழித்து விடாதபடி கடவுள் அவளை பாதுகாக்கிறார். ஆபிரகாம் 100 வயதாயும் சாராள் ஏறக்குறைய 90 வயதாயும் இருக்கையில் வாக்குப்பண்ணப்பட்ட சுதந்தரவாளியாகிய ஈசாக்கு பிறக்கிறான். இதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 19 வயது இஸ்மவேல், சுகந்தரவாளியாகிய ஈசாக்கைப் பரியாசம் பண்ணுகிறான். இதனால், கடவுளுடைய ஒப்புதலோடு ஆகாரும் இஸ்மவேலும் அனுப்பிவிடப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்குப் பின், மொரியா மலைகளில் ஒன்றில் தன் குமாரன் ஈசாக்கை பலி செலுத்தும்படி ஆபிரகாமுக்கு கடவுள் கட்டளையிடுவதன் மூலம் அவரை சோதிக்கிறார். யெகோவாவில் ஆபிரகாம் வைத்திருக்கும் மிகுந்த விசுவாசம் தடுமாறுகிறதில்லை. தன் குமாரனும் சுதந்தரவாளியுமாகிய ஈசாக்கை பலிசெலுத்த போகையில், யெகோவா அதை தடுத்துவிடுகிறார். அவனுக்குப் பதிலாக பலிசெலுத்த ஒரு செம்மறி ஆட்டுக்கடாவை தருகிறார். ஆபிரகாமின் வித்தை வானத்தின் நட்சத்திரங்களையும் கடற்கரை மணலையும் போல பெருகச் செய்வதாக கூறுகிறார். இவ்வாறு, ஆபிரகாமிடம் கடவுள் தம்முடைய வாக்குறுதியை மறுபடியும் உறுதிப்படுத்துகிறார். இந்த வித்து அவருடைய சத்துருக்களின் வாசலை சுதந்தரித்துக்கொள்ளும் என்றும், பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் இந்த வித்தின் மூலம் தங்களை நிச்சயமாகவே ஆசீர்வதித்துக்கொள்வார்கள் என்றும் அவர் காட்டுகிறார்.
20 சாராள் 127 வயதில் மரிக்கிறாள், ஆபிரகாம் ஏத்தின் புத்திரரிடமிருந்து ஒரு நிலத்தை விலைக்கு வாங்கி அதில் அவளை அடக்கம் பண்ணுகிறார். இப்போது ஆபிரகாம் தன் உறவினரின் நாட்டிலிருந்து ஈசாக்குக்கு ஒரு மனைவியை கண்டுபிடிப்பதற்காக தன்னுடைய குடும்பத்தின் தலைமை ஊழியக்காரனை அனுப்புகிறார். நாகோரின் குமாரன் பெத்துவேலின் குடும்பத்துக்கு யெகோவா இந்த ஊழியக்காரனை வழிநடத்துகிறார். ரெபேக்காள் அவனோடு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ரெபேக்காள் தன் குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், மனமுவந்து சென்று ஈசாக்கின் மணவாட்டியாகிறாள். ஆபிரகாமோ கேத்தூராள் என்ற மற்றொரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்கிறார். அவள் ஆறு குமாரர்களைப் பெறுகிறாள். ஆனால், ஆபிரகாம் இவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தனுப்பிவிட்டு, ஈசாக்கை தன்னுடைய ஒரே சுதந்தரவாளியாக்குகிறார். பின்பு 175 வயதில் ஆபிரகாம் மரிக்கிறார்.
21 யெகோவா முன்னறிவித்தபடியே, ஈசாக்கின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய இஸ்மவேல், தலைமைப் பதவி வகிக்கும் தன் 12 குமாரர்கள்மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு பெரிய ஜனத்துக்குத் தலைவனாகிறான். 20 ஆண்டுகளாக ரெபேக்காள் மலடியாக இருக்கிறாள், ஆனால் ஈசாக்கு தொடர்ந்து யெகோவாவிடம் மன்றாடி கேட்டுக்கொண்டிருக்கிறார். கடைசியில், ஏசா, யாக்கோபு என்ற இரட்டைக் குழந்தைகளை ரெபேக்காள் பெற்றெடுக்கிறாள். மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று அவளிடம் யெகோவா சொல்லியிருந்தார். ஈசாக்குக்கு இப்பொழுது 60 வயது.
22 யாக்கோபும் அவருடைய 12 குமாரர்களும் (25:27–37:1). ஏசா வேட்டை பிரியனாகிறான். ஆபிரகாமுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையை மதித்துணர தவறி, ஒரு நாள் அவன் வேட்டையாடிவிட்டு வந்தபோது வெறும் கூழுக்காக தன் பிறப்புரிமையை யாக்கோபுவிடம் விற்றுவிடுகிறான். மேலும், இரண்டு ஏத்தியப் பெண்களை (பின்பு ஒரு இஸ்மவேல பெண்ணை) மணம் செய்துகொள்கிறான், இவர்கள் அவனுடைய பெற்றோருக்கு மனக்கசப்புண்டாக்குகின்றனர். முதற்பேறானவனுக்குரிய உரிமையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, யாக்கோபு தன் தாயின் உதவியால் ஏசாவைப் போல மாறுவேடம் போட்டுக்கொள்கிறான். தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டதை ஈசாக்குக்குத் தெரியப்படுத்தாத ஏசா, யாக்கோபு செய்ததை அறிந்து அவனை கொலைசெய்ய திட்டமிடுகிறான். ஆகவே, ரெபேக்காள் தன்னுடைய சகோதரனாகிய லாபான் வசிக்குமிடமாகிய ஆரானுக்குத் தப்பியோடும்படி யாக்கோபுக்கு ஆலோசனை கூறுகிறாள். யாக்கோபு செல்வதற்கு முன் ஈசாக்கு அவனை மறுபடியும் ஆசீர்வதித்து, புறமத பெண்ணை அல்ல, தன் தாயின் வீட்டாரிலிருந்து ஒரு பெண்ணையே மணமுடிக்க வேண்டும் என அவனுக்கு அறிவுரை கொடுக்கிறார். அவன் ஆரானுக்குச் செல்லும் வழியில் பெத்தேலில் இருந்த சமயத்தில் ஒரு சொப்பனத்தில் யெகோவாவை காண்கிறான். அவர் அவனுக்கு மீண்டும் நம்பிக்கையளித்து உடன்படிக்கை வாக்குறுதியை அவனிடம் உறுதிப்படுத்துகிறார்.
23 ஆரானில் லாபானுக்கு யாக்கோபு வேலை செய்துவருகிறான். அவனுடைய இரண்டு குமாரத்திகளாகிய லேயாளையும் ராகேலையும் மணம் செய்துகொள்கிறான். இந்தப் பலதார மணம் லாபான் செய்த சூழ்ச்சியால் ஏற்படுகிறது. என்றபோதிலும், இந்த மனைவியரின் மூலமும் சில்பாள், பில்காள் எனப்படும் இவர்களுடைய வேலைக்காரிகளின் மூலமும் யாக்கோபுக்கு 12 குமாரர்களையும் ஒரு குமாரத்தியையும் கொடுத்து கடவுள் ஆசீர்வதிக்கிறார். யாக்கோபின் மந்தைகள் மிகுதியாக பெருகும்படி கடவுள் செய்கிறார். பின்பு தன் முற்பிதாக்களின் தேசத்துக்குத் திரும்பும்படி அவனிடம் கட்டளையிடுகிறார். லாபான் அவனை பின்தொடர்ந்து பிடிக்க வருகிறான், ஆனால் கலயெத் மற்றும் காவற்கோபுரம் (எபிரெயுவில், ஹம் மிட்ஸ்பா [ham·Mits·pahʹʹ]) என்ற இடத்தில் அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்துகொள்கின்றனர். திரும்ப பயணத்தைத் தொடருகையில், தேவதூதர்கள் யாக்கோபுக்கு மீண்டும் உறுதியளிக்கின்றனர். இரவில் ஒரு தூதனோடு யாக்கோபு போராடுகிறார், கடைசியில் அந்தத் தூதன் அவனை ஆசீர்வதித்து, யாக்கோபு என்ற பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். ஏசாவுடன் சமாதானமாவதற்கு யாக்கோபு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடுசெய்து, சீகேமுக்குப் பயணப்படுகிறார். இங்கே அவருடைய குமாரத்தி தீனாள், ஏவிய பிரபுவின் குமாரனால் கற்பழிக்கப்படுகிறாள். அவளுடைய சகோதரர் சிமியோனும் லேவியும் சீகேமின் ஆண்களை வெட்டிப்போட்டு பழிதீர்க்கின்றனர். இது யாக்கோபுக்கு வருத்தமுண்டாக்குகிறது. ஏனெனில் யெகோவாவின் பிரதிநிதியாக அந்த நாட்டில் அவனுக்கு இது கெட்ட பெயரை உண்டாக்குகிறது. பெத்தேலுக்குச் சென்று அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி கடவுள் அவனுக்குச் சொல்கிறார். பெத்தேலைவிட்டு வெளியே பயணப்படும் வழியில் யாக்கோபுக்கு 12-வது குமாரனான பென்யமீனை ராகேல் பிரசவிக்கையில் இறந்துவிடுகிறாள். ராகேலின் வேலைக்காரி பில்காளை ரூபன் கற்பழிக்கிறான். இவள் யாக்கோபின் குமாரர் இருவருக்குத் தாயானவள், இதனால் முதற்பேறானவனின் உரிமையை இழக்கிறான். இதற்கு சிறிது காலத்துக்குப் பின் ஈசாக்கு 180 வயதில் மரிக்கிறார், ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்கின்றனர்.
24 ஏசாவும் அவனுடைய குடும்பத்தாரும் சேயீர் மலைப் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். ஏசாவும் யாக்கோபும் சேகரித்திருந்த செல்வம் மிகப் பேரளவாக இருந்ததால், அவர்கள் இனிமேலும் ஒன்றாக வாசம் செய்ய முடியவில்லை. ஏசாவின் சந்ததியாருடைய பட்டியலும், ஏதோமின் பிரபுக்கள் மற்றும் ராஜாக்களுடைய பட்டியலும் கொடுக்கப்படுகின்றன. யாக்கோபு கானானில் தொடர்ந்து வாசம் செய்கிறான்.
25 ஜீவனை பாதுகாக்க எகிப்துக்கு (37:2–50:26). யெகோவாவினுடைய தயவின் நிமித்தமும் யோசேப்புக்கு அவர் அருளிய சில சொப்பனங்களின் நிமித்தமும், மூத்த சகோதரர் யோசேப்பை பகைக்கின்றனர். அவனை கொலை செய்யவும் சதி செய்கின்றனர். ஆனால் அதற்குப் பதிலாக, வழியே சென்ற இஸ்மவேல் வர்த்தகரிடம் அவனை விற்றுப்போடுகின்றனர். யோசேப்பின் பலவர்ண கோடுபோட்ட அங்கியை ஓர் ஆட்டின் இரத்தத்தில் தோய்த்து, அந்த 17 வயது இளைஞன் ஒரு காட்டு மிருகத்தால் கொல்லப்பட்டான் என்பதற்கு அத்தாட்சியாக அதை யாக்கோபினிடம் கொடுக்கின்றனர். யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனாகிய போத்திபாரிடம் விற்கப்படுகிறான்.
26 38-வது அதிகாரம் சற்று திசைதிரும்புகிறது. தாமாருக்குப் பாரேஸ் பிறந்ததைப் பற்றிய விவரத்தைக் கொடுக்கிறது. தாமாரின் மாமனார் யூதா. இவருடைய குமாரன் செய்திருக்க வேண்டிய மணக் கடனை ஒரு சூழ்ச்சியால் யூதா தன்னிடம் நடப்பிக்க செய்கிறாள் தாமார். வாக்குப்பண்ணப்பட்ட வித்து பிறப்பதற்கு வழிநடத்தும் படிப்படியான ஒவ்வொன்றையும் வேதவசனங்கள் மிகக் கவனமாக பதிவு செய்வதை இந்த விவரப்பதிவு மறுபடியும் வலியுறுத்துகிறது. யூதாவின் குமாரன் பாரேஸ் இயேசுவின் முற்பிதாக்களில் ஒருவனாகிறான்.—லூக்கா 3:23, 33.
27 இதற்கிடையில், எகிப்தில் யோசேப்பை யெகோவா ஆசீர்வதிக்கிறார். போத்திபாரின் குடும்பத்தில் யோசேப்பு பெரும் மதிப்புடையவனாகிறான். போத்திபாரின் மனைவி வேசித்தனம் செய்ய அழைக்கையில், அதனால் கடவுளுடைய பெயருக்கு வரும் இழுக்கை அறிந்து தப்பியோடுகிறான். அதனால் கஷ்டங்கள் அவனுக்கு தொடர்ந்து வருகின்றன. அவன் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படுகிறான். அங்கே பார்வோனின் பானபாத்திரக்காரனும் ரொட்டி சுடுபவனும் இருக்கின்றனர். சக கைதிகளாகிய இந்த இருவருடைய சொப்பனங்களின் உட்பொருளை விடுவிக்க யெகோவா அவனை பயன்படுத்துகிறார். பின்னால், பார்வோன் ஒரு சொப்பனம் காண்கிறான், அது அவனை மிகவும் அலைக்கழிக்கிறது. யோசேப்பின் திறமை அவனுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. உடனடியாக யோசேப்பு சிறைக் கிடங்கிலிருந்து பார்வோனிடம் கொண்டுவரப்படுகிறான். கடவுளுக்கே மதிப்பு கொடுத்து, யோசேப்பு அந்தச் சொப்பனத்தின் உட்பொருளைக் கூறுகிறான்: ஏழு ஆண்டுகள் அமோக விளைச்சலும், அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சமும் உண்டாகும் என்று முன்னறிவிக்கிறான். யோசேப்பின்மீது “தேவ ஆவி” இருப்பதை பார்வோன் உணர்ந்து, அந்த நிலைமையை கையாள அவனை முக்கிய மந்திரியாக நியமிக்கிறான். (ஆதி. 41:38) இப்போது யோசேப்புக்கு 30 வயது. அமோக விளைச்சல் காலமாகிய ஏழு ஆண்டுகளில் உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதன் மூலம் யோசேப்பு ஞானமாய் நிர்வாகம் செய்கிறான். பின்பு உலகளாவிய பஞ்சக்காலம் வருகிறது; அப்போது, எகிப்தியருக்கும் உணவுக்காக எகிப்துக்கு வரும் பிற தேசத்தாருக்கும் தானியத்தை விற்கிறான்.
28 ஒருநாள் யாக்கோபு தன் பத்து மூத்த குமாரர்களைத் தானியம் வாங்க எகிப்துக்கு அனுப்புகிறார். யோசேப்பு அவர்களை அடையாளம் கண்டுகொள்கிறான். ஆனால் அவர்கள் இவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. சிமியோனை பணயமாக வைத்துக்கொண்டு, அடுத்தப் பயணத்தின்போது தங்கள் கடைசி சகோதரனையும் அழைத்துவரும்படி கட்டளையிடுகிறான். அந்த ஒன்பது குமாரர்களும் பென்யமீனுடன் திரும்பி வந்தபோது, யோசேப்பு தன்னை வெளிப்படுத்தி, குற்றமுள்ள அந்தப் பத்துப்பேருக்கும் மன்னிப்பு அளிக்கிறான். யாக்கோபை அழைத்து வரவும் பஞ்சத்தின்போது தங்கள் சுகநலத்துக்காக எகிப்துக்கு வந்துவிடவும் அறிவுரைகள் கொடுக்கிறான். அவ்வாறே, யாக்கோபு தன்னுடைய 66 குடும்ப அங்கத்தினரோடு எகிப்துக்கு வருகிறார். அவர்கள் குடியிருப்பதற்கு, தேசத்திலேயே மிகச் சிறந்த இடமாகிய கோசேனை அவர்களுக்கு பார்வோன் கொடுக்கிறான்.
29 யாக்கோபு மரண தறுவாயில் இருக்கும்போது, யோசேப்பின் குமாரரான எப்பிராயீமையும் மனாசேயையும் ஆசீர்வதிக்கிறார். பின்பு, “கடைசி நாட்களில்” நடக்கப்போவதை தன் சொந்த 12 குமாரர்களுக்கு சொல்வதற்காக அவர்களை ஒன்றாக கூடிவரும்படி அழைக்கிறார். (49:1) இப்பொழுது, தொடர்ச்சியான தீர்க்கதரிசனங்களை விவரமாக கூறுகிறார். அவை யாவும் அப்போது முதற்கொண்டு கவனிக்கத்தக்க நிறைவேற்றத்தை அடைந்திருக்கின்றன.d வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய ஷைலோ (“அது எவருடையதோ அவர்; அது எவருக்கு உரியதோ அவர்” என்பது பொருள்) வரும்வரை, செங்கோல் யூதாவின் கோத்திரத்தில் நிலைத்திருக்குமென இங்கே அவர் முன்னறிவிக்கிறார். இவ்வாறு 12 கோத்திர தலைவர்களை ஆசீர்வதித்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தான் அடக்கம் செய்யப்படுவது பற்றிய கட்டளைகள் கொடுத்தப் பின்பு, 147 வயதில் யாக்கோபு இறந்துவிடுகிறார். யோசேப்பு 110 வயதில் இறக்கும்வரை, தன் சகோதரரையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். இஸ்ரவேலரை கடவுள் மீண்டும் அவர்களுடைய தேசத்துக்குள் கொண்டுவருவார் என்பதில் தனக்கு இருந்த விசுவாசத்தை மரண தறுவாயில் யோசேப்பு வெளிப்படுத்துகிறார். எனவே, தன்னுடைய எலும்புகளையும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறார்.
ஏன் பயனுள்ளது
30 கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் ஆரம்ப நூலாகிய ஆதியாகமம், யெகோவா தேவனுடைய மகிமையான நோக்கங்களை அறிமுகப்படுத்துவதால் மதிப்புமிகு பயனை தருகிறது. பைபிளின் பிற்பட்ட புத்தகங்களைப் புரிந்துகொள்வதற்கு எப்பேர்ப்பட்ட ஓர் ஆதாரமாக விளங்குகிறது! ஏதேனில் நீதியான உலகம் ஆரம்பமானதையும் முடிவடைந்ததையும் ஆதியாகமம் விவரிக்கிறது. தேவபக்தியற்ற ஜனமாகிய அந்த முதல் உலகத்தின் வளர்ச்சியையும் அது முற்றிலும் அழிக்கப்பட்டதையும் தற்போதைய பொல்லாத உலகம் எழும்புவதையும் விவரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்குப்பண்ணப்பட்ட ‘வித்தால்’ ஆளப்படும் ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் அரசாதிகாரம் நியாய நிரூபணம் செய்யப்படும் என்ற முழு பைபிளின் பொருளை அளிக்கிறது. மனிதன் மரிப்பதற்கான காரணத்தை சொல்கிறது. ஆதியாகமம் 3:15 முதற்கொண்டு—முக்கியமாக ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் கடவுளின் செயல்தொடர்புகளைப் பற்றிய பதிவில்—வித்தால் ஆளப்படும் ராஜ்யத்தின்கீழ் புதிய உலகில் வாழும் நம்பிக்கையை தருகிறது. முழு மனிதவர்க்கமும் மனதில் வைக்கவேண்டிய சரியான நோக்கத்தை—உத்தமத்தைக் காப்போராகவும் யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்துவோராகவும் இருக்க வேண்டியதை—குறிப்பிட்டுக் காட்டுவதால் இது பயனுள்ளதாக இருக்கிறது.—ரோ. 5:12, 18; எபி. 11:3-22, 39, 40; 12:1; மத். 22:31, 32.
31 ஆதியாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு முக்கிய சம்பவத்தையும் நபரையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் மேற்கோளாக குறிப்பிடுகிறது. மேலும், வேதவசனங்கள் முழுவதிலும் காட்டப்படுகிறபடி, ஆதியாகமத்தில் பதிவுசெய்யப்பட்ட தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறியிருக்கின்றன. ஆபிரகாமின் வித்தின்மீது உண்டான “நானூறு வருஷ” துன்பம் இவற்றில் ஒன்று. இது, ஈசாக்கை இஸ்மவேல் பரியாசம் செய்த சமயமாகிய பொ.ச.மு. 1913-ல் தொடங்கி, பொ.ச.மு. 1513-ல் எகிப்திலிருந்து விடுதலையானதோடு முடிவடைந்தது.e (ஆதி. 15:13) அர்த்தம் பொதிந்த மற்ற தீர்க்கதரிசனங்களுக்கும் அவற்றின் நிறைவேற்றத்திற்குமான உதாரணங்களை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் காணலாம். மேலும், விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதிலும் புரிந்துகொள்வதிலும் ஆதியாகமத்தில் முதன்முதல் கூறப்பட்ட தெய்வீக நியமங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. பண்டைய தீர்க்கதரிசிகளும், இயேசுவும் அவருடைய சீஷர்களும்கூட, அடிக்கடி ஆதியாகமத்தின் பகுதிகளை மேற்கோள் காட்டி பேசினார்கள், பொருத்தியும் பயன்படுத்தினார்கள். நாம் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது நல்லது, இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை ஆராய்வது இதற்கு உதவி செய்யும்.
32 திருமணம், கணவன் மனைவிக்கு இடையே சரியான உறவு, தலைமை வகிப்பு நியமங்கள், குடும்பப் பயிற்றுவிப்பு ஆகியவை சம்பந்தமாக கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் ஆதியாகமம் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இயேசுதாமே இதற்கு கவனத்தை திருப்பி, ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தையும் இரண்டாம் அதிகாரத்தையும் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?” (மத். 19:4, 5; ஆதி. 1:27; 2:24) மனித குடும்பத்தின் வம்சவரலாற்றை அளிப்பதிலும், மனிதன் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடுவதிலும் ஆதியாகமத்திலுள்ள பதிவு இன்றியமையாதது.—ஆதி., அதி. 5, 7, 10, 11.
33 மேலும், ஆதியாகமம் தருகிற கோத்திரப் பிதா சமுதாயத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் பைபிள் மாணாக்கருக்கு பயனுள்ளது. கோத்திரப் பிதா சமுதாயம், நோவாவின் நாளிலிருந்து சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட வரையில் கடவுளுடைய ஜனத்துக்குள் இயங்கிய குடும்ப அரசாங்க சமுதாய முறையாகும். நியாயப்பிரமாண உடன்படிக்கையில் சேர்க்கப்பட்ட நுட்பங்கள் பல ஏற்கெனவே கோத்திரப் பிதா சமுதாயத்தில் அனுசரிக்கப்பட்டு வந்தன. சரித்திரம் முழுவதும் மனிதவர்க்கத்தை சில நியமங்கள் பாதித்திருக்கின்றன. அவை: சமுதாய மதிப்பு (18:32), சமுதாய பொறுப்பு (19:15), கொலைக்குற்றத் தண்டனையும் இரத்தத்தின் மற்றும் உயிரின் பரிசுத்தத்தன்மையும் (9:4-6), மனிதரை மகிமைப்படுத்துவதை கடவுள் வெறுப்பது (11:4-8) போன்றவை. சட்டப்பூர்வமான செயல்களும் ஒப்பந்தங்களும், பிற்காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை, இயேசுவின் நாட்கள் வரையாகவும்கூட நிகழ்ந்த சம்பவங்களை புரிந்துகொள்ள உதவுகின்றன. பைபிளை தெளிவாக புரிந்துகொள்வதற்கு, பின்வரும் அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும்: தனிநபர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு சம்பந்தமான கோத்திரப் பிதா சமுதாய சட்டம் (ஆதி. 31:38, 39; 37:29-33; யோவா. 10:11, 15; 17:12; 18:9), ஆஸ்தியை விற்கும் முறைமை (ஆதி. 23:3-18), முதற்பேறானவனுக்குரிய உரிமை பெற்றவன் உடைமையைப் பெறுவது சம்பந்தமான சட்டம் (48:22). நியாயப்பிரமாணத்தில் சேர்க்கப்பட்ட கோத்திரப் பிதா சமுதாயத்தின் மற்ற பழக்கவழக்கங்கள் இவை: பலிகள், விருத்தசேதனம் (முதலாவது ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டது), உடன்படிக்கைகள் செய்வது, மைத்துனன் மணம் (38:8, 11, 26), ஒரு காரியத்தை உறுதிசெய்வதற்கு ஆணையிடுவது.—22:18; 24:4.f
34 பைபிளின் ஆரம்ப புத்தகமாகிய ஆதியாகமம், உத்தமத்தைக் காத்தல், விசுவாசம், உண்மையுடனிருத்தல், கீழ்ப்படிதல், மரியாதை காட்டுதல், நல்லொழுக்கங்கள், தைரியம் ஆகியவற்றில் பல பாடங்களை அளிக்கிறது. பின்வருபவை ஒருசில உதாரணங்கள்: மூர்க்கத்தனமான சத்துருக்களின் மத்தியிலும் கடவுளோடு நடப்பதில் ஏனோக்கின் விசுவாசமும் தைரியமும்; நோவாவின் நீதியும் குற்றமற்றத் தன்மையும் முழுமையான கீழ்ப்படிதலும்; ஆபிரகாமின் விசுவாசம், அவருடைய உறுதி, அவருடைய சகிப்புத்தன்மை, குடும்பத் தலைவராக இருப்பதிலும் தன் பிள்ளைகளுக்குக் கடவுளுடைய கட்டளைகளைப் போதிப்பதிலும் அவருடைய பொறுப்புணர்வு, அவருடைய தயாள குணம், அன்பு; சாராள் தனக்கு தலைவரான கணவனுக்குக் காட்டிய கீழ்ப்படிதலும் அவளுடைய அயராத உழைப்பும்; யாக்கோபின் சாந்த குணமும் கடவுளுடைய வாக்குறுதியின்பேரில் அவருடைய அக்கறையும்; யோசேப்பு தன் தகப்பனுக்குக் காட்டிய கீழ்ப்படிதலும், அவருடைய நல் ஒழுக்கமும், தைரியமும், சிறைச்சாலையில் அவருடைய நன்னடத்தையும், மேலதிகாரிகளுக்கு காட்டிய மரியாதையும், கடவுளுக்கே மகிமை கொடுப்பதில் மனத்தாழ்மையும், தன் சகோதரருக்கு அளித்த இரக்கமான மன்னிப்பும்; யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்த வேண்டுமென்ற இந்த மனிதர் எல்லாருடைய உள்ளார்ந்த ஆவலும். ஆதியாகம பதிவில் அடங்கியிருக்கிறபடி, ஆதாம் படைக்கப்பட்டதிலிருந்து யோசேப்பின் மரணம் வரை 2,369 ஆண்டுகளடங்கிய அந்த நீண்ட காலப்பகுதியின்போது கடவுளோடு நடந்தவர்களின் வாழ்க்கையில் இந்த முன்மாதிரியான பண்புகள் பளிச்சென்று தெரிகின்றன.
35 ஆதியாகமம் விசுவாசத்திற்கான இத்தகைய சிறப்பான முன்மாதிரிகளை அளிக்கிறது. ஆகவே, அது நிச்சயமாகவே நம் விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதில் பிரயோஜனமாக உள்ளது. யெகோவாவின் உன்னத பெயரை பரிசுத்தப்படுத்துவதில் முதன்மையாக விளங்குபவர் வாக்குப்பண்ணப்பட்ட வித்தே. அந்த வித்தின் மூலம் வெகுகாலத்திற்கு முன்பே அவருடைய ராஜ்ய அரசாங்கத்தை, கடவுளே கட்டி உண்டாக்கிய நகரத்தை சென்றடைய தேவைப்படும் பரீட்சிக்கப்பட்ட விசுவாசத்தின் முன்மாதிரிகளை இது அளிக்கிறது.—எபி. 11:8, 10, 16.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 919-20; தொகுதி 2, பக்கம் 1212.
b வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கங்கள் 328-9.
c தொல்பொருள் கண்டுபிடிப்பில் பைபிள்பூர்வ சரித்திரம் (ஆங்கிலம்), 1934, டி. ஈ. ஹார்ட் டேவிஸ், பக்கம் 5.
d ஆங்கில காவற்கோபுரம் 1962, பக்கங்கள் 360-74, 392-408.
e வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 460-1, 776.
f ஆங்கில காவற்கோபுரம், 1952, பக்கங்கள் 432-45.
[கேள்விகள்]
1. ஆதியாகமத்தில் அடங்கியுள்ள முக்கிய விஷயங்கள் யாவை?
2. ஆதியாகமம் என்ற பெயரின் உட்பொருள் என்ன, இது எதன் முதல் பாகமாக உள்ளது?
3. (அ) ஆதியாகமத்தின் ஆசிரியர் யார், ஆனால் அதை எழுதியவர் யார்? (ஆ) ஆதியாகமத்தில் எழுதிய தகவலை மோசே எவ்வாறு பெற்றிருக்கலாம்?
4. (அ) மோசே தன்னுடைய பதிவை எங்கே மற்றும் எப்போது எழுதி முடித்தார்? (ஆ) ஆதியாகமத்தின் கடைசி பாகத்திற்குரிய தகவலை மோசே எவ்வாறு பெற்றிருக்கலாம்?
5. எழுத்தாளர் மோசே என்பதை பைபிளின் என்ன அத்தாட்சி நிரூபிக்கிறது?
6. எழுதுவது மனித சரித்திரத்தின் ஆரம்ப காலத்திலேயே தோன்றியது என்பதை எது காட்டுகிறது?
7. பைபிள் பதிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பூகோள ஜலப்பிரளயம் மற்றும் மனித குலத்தின் மூன்று கிளைப் பிரிவுகள் சம்பந்தமாக உலகப்பிரகாரமான என்ன அத்தாட்சி உள்ளது?
8. ஆதியாகமத்தின் நம்பகத்தன்மைக்கு வேறு என்ன வகையான அத்தாட்சிகள் இருக்கின்றன?
9. (அ) கடவுளுடைய படைப்பைப் பற்றி ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரத்தில் என்ன விவரிக்கப்பட்டுள்ளது? (ஆ) மனிதனைக் குறித்து இரண்டாம் அதிகாரம் கூடுதலான என்ன நுட்பவிவரங்களை அளிக்கிறது?
10. பாவம் மற்றும் மரணத்தின் தொடக்கத்தை ஆதியாகமம் எவ்வாறு விளக்குகிறது, மேலும் என்ன முக்கியமான நோக்கம் இங்கே தெரியப்படுத்தப்படுகிறது?
11. எவ்வாறு பாவத்தின் மோசமான விளைவுகள் ஏதேனுக்கு வெளியில் தொடர்கின்றன?
12. எவ்வாறு நோவாவின் நாட்களில் பூமி பாழ்ப்பட்டதாகிறது?
13. எவ்வாறு யெகோவா இப்போது தம்முடைய பெயரை பரிசுத்தப்படுத்துகிறார்?
14. யெகோவா இப்பொழுது என்ன கட்டளையிடுகிறார், என்ன உடன்படிக்கை செய்கிறார், என்ன சம்பவங்களோடு நோவாவின் வாழ்க்கை முடிகிறது?
15. மனிதர் தங்களுக்கு பெயரும் புகழும் உண்டாக்கிக்கொள்ள எவ்வாறு முயற்சி செய்கின்றனர், யெகோவா எவ்வாறு அவர்கள் நோக்கத்தைத் தடைசெய்கிறார்?
16. (அ) சேமின் குடும்பவழிப் பட்டியல் ஏன் முக்கியமானது? (ஆ) ஆபிராம் “யெகோவாவின் நண்பன்” என அழைக்கப்படலானது எவ்வாறு, என்ன ஆசீர்வாதங்களை அவர் பெறுகிறார்?
17. கடவுள் தம்முடைய உடன்படிக்கையை எவ்வாறு விரிவாக்குகிறார், ஆபிராமின் வித்தைப் பற்றி என்ன வெளிப்படுத்தப்படுகிறது?
18. கவனிக்கத்தக்க என்ன சம்பவங்கள் லோத்தின் பிற்கால வாழ்க்கையில் நடக்கின்றன?
19. வித்தின் சம்பந்தமாக என்ன சோதனையை ஆபிரகாம் வெற்றிகரமாக எதிர்ப்படுகிறார், யெகோவா தம்முடைய வாக்கை உறுதிசெய்வதில் மேலும் எதை வெளிப்படுத்துகிறார்?
20. ஈசாக்குக்கு ஒரு மனைவியை கண்டுபிடிக்க ஆபிரகாம் என்ன கவனம் செலுத்துகிறார், எவ்வாறு ஈசாக்கு மாத்திரமே சுதந்தரவாளியாக்கப்படுகிறான்?
21. ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் எவ்வாறு இரட்டைக் குமாரர்கள் பிறக்கின்றனர்?
22. ஆபிரகாமுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையை ஏசா மற்றும் யாக்கோபு எவ்வாறு கருதுகின்றனர், அதன் விளைவுகள் யாவை?
23. (அ) யாக்கோபுக்கு எவ்வாறு 12 குமாரர்கள் பிறக்கின்றனர்? (ஆ) ரூபன் எவ்வாறு முதற்பேறானவனுக்குரிய தன் உரிமையை இழக்கிறான்?
24. ஏசாவும் அவனுடைய குடும்பத்தினரும் ஏன் சேயீர் மலைப் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்?
25. என்ன சம்பவங்கள் யோசேப்பு எகிப்தில் அடிமையாவதற்கு வழிநடத்துகின்றன?
26. பாரேஸின் பிறப்பைப் பற்றிய விவரம் ஏன் முக்கியமானது?
27. யோசேப்பு எவ்வாறு எகிப்தின் முக்கிய மந்திரியாகிறான்?
28. யாக்கோபின் குடும்பத்தினர் எகிப்துக்கு இடம்பெயர்ந்து வந்ததற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்கள் யாவை?
29. யாக்கோபு தன் மரணப்படுக்கையில், தொடர்ச்சியான என்ன முக்கியமான தீர்க்கதரிசனங்களை உரைக்கிறார்?
30. (அ) பைபிளின் பிற்பட்ட புத்தகங்களைப் புரிந்துகொள்வதற்கு ஆதியாகமம் என்ன ஆதாரத்தை அளிக்கிறது? (ஆ) என்ன சரியான நோக்கத்தை ஆதியாகமம் குறிப்பிட்டுக் காட்டுகிறது?
31. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி, ஆதியாகமத்தில் இவை பதிவுசெய்யப்பட்டிருப்பதை காட்டுங்கள்: (அ) உட்பொருளுள்ள தீர்க்கதரிசனங்கள் மற்றும் (ஆ) மதிப்புவாய்ந்த நியமங்கள்.
32. திருமணம், வம்சவரலாறு, காலக் கணக்கு ஆகியவற்றின் சம்பந்தமாக ஆதியாகமத்தில் உள்ள முக்கிய தகவல்கள் யாவை?
33. பைபிளைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமாயுள்ள கோத்திரப்பிதா சமுதாயத்தின் சில நியமங்களையும் பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுங்கள்.
34. ஆதியாகமத்தைப் படிப்பதன் மூலம் கிறிஸ்தவர்கள் பயனுள்ள என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
35. விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதில், ஆதியாகமம் எதை முன்குறித்துக் காட்டுகிறது?
[பக்கம் 18-ன் அட்டவணை]
ஆதியாகமம்—ஏவப்பட்டதும் பயனுள்ளதும்
ஆதியாகம நியமம் மற்ற எழுத்தாளர்களுடைய
வசனங்கள் மேற்கோள்கள்
பரிசுத்தத்தன்மை, நிலையானத்தன்மை மத். 19:4, 5
2:7 மனிதன் ஓர் ஆத்துமா 1 கொ. 15:45
2:22, 23 தலைமைத்துவம் 1 தீ. 2:13; 1 கொ. 11:8
9:4 இரத்தத்தின் பரிசுத்தத்தன்மை அப். 15:20, 29
24:3; 28:1-8 விசுவாசியை மாத்திரமே மணம் செய்தல் 1 கொ. 7:39
28:7 பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் எபே. 6:1
தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதும் தீர்க்கதரிசன இணைப் பொருத்தங்களும்
12:1-3; 22:15-18 ஆபிரகாமின் வித்து அடையாளம் கலா. 3:16, 29
காட்டப்படுதல்
14:18 மெல்கிசேதேக்கு கிறிஸ்துவுக்கு எபி. 7:13-15
படமாக இருக்கிறார்
16:1-4, 15 சாராள், ஆகார், இஸ்மவேல், ஈசாக்கு கலா. 4:21-31
அடையாள குறிப்பான பொருள்
49:1-28 12 கோத்திரங்களின்மீது யாக்கோபின் யோசு. 14:1–21:45
ஆசீர்வாதம்
49:9 யூதா கோத்திர சிங்கம் வெளி. 5:5
உதாரணத்தில், பொருத்தத்தில், அல்லது எடுத்துக்காட்டில் தீர்க்கதரிசிகள், இயேசு மற்றும் சீஷர்களால் பயன்படுத்தப்பட்ட மற்ற வசனங்கள், ஆதியாகமத்தின் நம்பகத் தன்மையை மேலும் நிரூபிக்கின்றன
1:1 கடவுள் வானத்தையும் பூமியையும் ஏசா. 45:18; வெளி. 10:7
படைத்தார்
1:26 மனிதன் கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டான் 1 கொ. 11:7
1:27 ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் மத். 19:4; மாற். 10:6
2:2 ஏழாம் நாளில் கடவுள் ஓய்ந்திருந்தார் எபி. 4:4
3:1-6 சர்ப்பம் ஏவாளை வஞ்சித்தது 2 கொ. 11:3
3:20 முதல் ஜோடியிலிருந்தே மனிதவர்க்கம் அப். 17:26
முழுவதும் வந்தது
4:8 ஆபேலை காயீன் கொன்றான் யூ. 11; 1 யோ. 3:12
4:9, 10 ஆபேலின் இரத்தம் மத். 23:35
அதி. 5, 10, 11 வம்சவரலாறு லூக். அதி. 3
5:29 நோவா எசே. 14:14;
6:13, 17-20 ஜலப்பிரளயம் ஏசா. 54:9; 2 பே. 2:5
12:1-3, 7 ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை கலா. 3:15-17
15:6 ஆபிரகாமின் விசுவாசம் ரோ. 4:3; யாக். 2:23
15:13, 14 எகிப்தில் தங்கியிருத்தல் அப். 7:1-7
19:24, 25 சோதோமும் கொமோராவும் அழிக்கப்பட்டன 2 பே. 2:6; யூ. 7
19:26 லோத்தின் மனைவி லூக். 17:32
20:7 ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி சங். 105:9, 15
21:9 இஸ்மவேல் ஈசாக்கை நிந்திக்கிறான் கலா. 4:29
22:10 ஈசாக்கை ஆபிரகாம் பலியிடமுன்வருகிறார் எபி. 11:17
25:23 யாக்கோபும் ஏசாவும் ரோ. 9:10-13;
25:32-34 பிறப்புரிமையை ஏசா விற்கிறான் எபி. 12:16, 17
28:12 பரலோகத்துடன் பேச்சுத்தொடர்பு யோவா. 1:51
எனும் ஏணி
37:28 யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார் சங். 105:17
41:40 யோசேப்பு முக்கிய மந்திரியாக்கப்பட்டார் சங். 105:20, 22