ரோமருக்குக் கடிதம்
9 கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நான் உண்மையைத்தான் பேசுகிறேன், பொய் பேசவில்லை. ஏனென்றால், கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற என் மனசாட்சி என்னோடுகூட சாட்சி சொல்கிறது. 2 இதயத்தில் எனக்கு மிகுந்த துக்கமும் தீராத வேதனையும் இருக்கிறது. 3 என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்காக நானே கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து சாபத்துக்குள்ளாக முடியுமானால் அதற்கும் தயாராயிருக்கிறேன். 4 அவர்கள்தான் இஸ்ரவேலர்கள், அவர்கள்தான் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டவர்கள்,+ மகிமையையும் ஒப்பந்தங்களையும்+ திருச்சட்டத்தையும்+ பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தையும்+ வாக்குறுதிகளையும்+ பெற்றவர்கள். 5 அவர்கள்தான் முன்னோர்களின் வழியில் வந்தவர்கள்;+ அவர்களுடைய வம்சத்தில்தான் கிறிஸ்து வந்தார்.+ எல்லாவற்றுக்கும் மேலான கடவுள் என்றென்றும் போற்றப்படுவாராக. ஆமென்.*
6 ஆனாலும், கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென்று அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் வருகிற எல்லாரும் உண்மையில் “இஸ்ரவேலர்கள்” கிடையாது.+ 7 அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாரும் உண்மையில் அவருடைய பிள்ளைகளும் கிடையாது.+ ஆனால், “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்”+ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. 8 அதனால், இயல்பான முறையில் ஆபிரகாமுக்குப் பிறந்த பிள்ளைகள் கடவுளுடைய பிள்ளைகள் கிடையாது,+ வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்தான்+ ஆபிரகாமின் சந்ததியாகக் கடவுளால் கருதப்படுகிறார்கள். 9 “இதே சமயம் நான் வருவேன், அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது.+ 10 அதுமட்டுமல்ல, நம்முடைய மூதாதையான ஈசாக்கின் மூலம் ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தபோது,+ 11 அதாவது இன்னும் அந்தக் குழந்தைகள் பிறக்காமலும் நல்லதோ கெட்டதோ செய்யாமலும் இருந்தபோது, “பெரியவன் சின்னவனுக்கு அடிமையாக இருப்பான்” என்று அவளிடம் சொல்லப்பட்டது.+ 12 “யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டும் இருக்கிறது.+ 13 அதனால், கடவுளுடைய நோக்கத்தின்படி மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுடைய செயல்களைச் சார்ந்தில்லை, தேர்ந்தெடுக்கிற அவரையே எப்போதும் சார்ந்திருக்கிறது.
14 அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா? இல்லவே இல்லை!+ 15 ஏனென்றால் அவர் மோசேயிடம், “யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யாருக்குக் கரிசனை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்”+ என்று சொன்னார். 16 அதனால், தேர்ந்தெடுக்கப்படுவது இரக்கமுள்ள கடவுளைத்தான் சார்ந்திருக்கிறது,+ ஒருவருடைய விருப்பத்தையோ முயற்சியையோ* சார்ந்தில்லை. 17 பார்வோனிடம் கடவுள், “உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று சொன்னதாக வேதவசனம் குறிப்பிடுகிறது.+ 18 அதனால், அவர் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ அவருக்கு இரக்கம் காட்டுகிறார், யாரைப் பிடிவாதக்காரராக இருக்கும்படி விட்டுவிட விரும்புகிறாரோ அவரைப் பிடிவாதக்காரராக இருக்கும்படி விட்டுவிடுகிறார்.+
19 அப்படியானால், “மனிதர்கள்மீது கடவுள் குற்றம் கண்டுபிடிப்பது நியாயமா? அவர் தீர்மானித்திருப்பதை யாராலும் மாற்ற முடியாது, இல்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். 20 ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+ 21 ஒரே களிமண் உருண்டையை வைத்து கண்ணியமான காரியத்துக்காக ஒரு பாத்திரத்தையும் கண்ணியமற்ற காரியத்துக்காக இன்னொரு பாத்திரத்தையும் செய்ய அந்தக் களிமண்மீது குயவனுக்கு அதிகாரம் இல்லையா?+ 22 தன்னுடைய கடும் கோபத்தையும் வல்லமையையும் வெளிக்காட்ட கடவுளுக்கு விருப்பம் இருந்தாலும், கடும் கோபத்துக்கும் அழிவுக்கும் உரிய பாத்திரங்களைப் பொறுமையோடு சகித்துக்கொண்டார் என்றால், யார் என்ன சொல்ல முடியும்? 23 மகிமை பெறும்படி தான் உண்டாக்கியிருந்த இரக்கத்துக்குரிய பாத்திரங்கள்மீது+ தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக, 24 அதாவது யூதர்களிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற தேசத்து மக்களிலிருந்தும் அழைக்கப்பட்டவர்களாகிய+ நம்மீது தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக, அப்படிப் பொறுமையோடு இருந்தார் என்றால், யார் என்ன சொல்ல முடியும்? 25 அதுபோலவே, “என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களை+ ‘என் ஜனங்கள்’ என்றும், அன்புக்குரியவளாக இல்லாதவளை ‘அன்புக்குரியவள்’ என்றும் அழைப்பேன்” என்று ஓசியா புத்தகத்தில்கூட அவர் சொல்லியிருக்கிறாரே.+ 26 அதோடு, “‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’ என்று எந்த இடத்தில் சொன்னேனோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’ என்று அழைப்பேன்” என்றும் சொல்லியிருக்கிறாரே.+
27 அதோடு, இஸ்ரவேலர்களைப் பற்றி ஏசாயா, “இஸ்ரவேல் ஜனங்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப் போல் இருந்தாலும், மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள்.+ 28 ஏனென்றால், இந்தப் பூமியில் வாழும் மக்களிடம் யெகோவா* கணக்குக் கேட்பார், அதைச் சீக்கிரமாகச் செய்து முடிப்பார்”+ என்று சொன்னார். 29 அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவா* நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காமல் போயிருந்தால், நாம் சோதோமைப் போலவும், கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்”+ என்று அவர் முன்கூட்டியே சொன்னார்.
30 அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? மற்ற தேசத்து மக்கள் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாதபோதிலும்,+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் நீதிமான்களானார்கள்.+ 31 ஆனால் இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தபோதிலும், நீதிமான்களாகவில்லை. 32 ஏன்? ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாமல், செயல்களால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தார்கள். “தடைக்கல்” மீது அவர்கள் தடுக்கி விழுந்தார்கள்.+ 33 இதைப் பற்றித்தான், “இதோ! தடைக்கல்லை,+ அதாவது தடுக்கி விழ வைக்கும் கற்பாறையை, நான் சீயோனில் வைக்கிறேன். அதன்மீது விசுவாசம் வைக்கிறவன் ஏமாற்றம் அடைய மாட்டான்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.