முழுமையாய்ச் சாட்சி கொடுக்க பயிற்சி பெற்றிருத்தல்
“[நீங்கள்] எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8.
1, 2. பேதுருவுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டது, அதை அவருக்குக் கொடுத்தது யார்?
“நசரேயனாகிய இயேசு . . . உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.” (அப்போஸ்தலர் 10:38, 42) சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததைப் பற்றி கொர்நேலியுவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் அப்போஸ்தலன் பேதுரு விளக்கியபோது அவர் சொன்ன வார்த்தைகளே அவை.
2 இந்தப் பொறுப்பை இயேசு எப்போது கொடுத்தார்? உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்னர் இயேசு சொன்ன விஷயம் ஒருவேளை பேதுருவின் நினைவுக்கு வந்திருக்கலாம். அந்தச் சமயத்தில், உண்மையுள்ள சீஷர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: நீங்கள் “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) என்றாலும், ஒரு சீஷனாக தான் இயேசு மீது விசுவாசம் வைத்திருப்பதைப் பிறருக்கு அறிவிக்க வேண்டுமென்று அதற்கு முன்னரே பேதுரு அறிந்திருந்தார்.
மூன்று வருட பயிற்சி
3.இயேசு என்ன அற்புதத்தைச் செய்தார், பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் அவர் என்ன அழைப்பை விடுத்தார்?
3 பொ.ச. 29-ல் இயேசு முழுக்காட்டுதல் எடுத்து பல மாதங்களுக்கு பின், கலிலேய கடல் பகுதியில் அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். மீனவர்களான பேதுருவும் அவருடைய சகோதரன் அந்திரேயாவும் அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இரவு முழுக்க வலைவீசியும் ஒரு மீன்கூட அகப்படவில்லை. அந்தச் சமயத்தில், “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று அவர்களிடம் இயேசு சொன்னார். அவர் சொன்னபடியே செய்தபோது, “தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.” இந்த அற்புதத்தைக் கண்ட பேதுரு பயந்து போனார்; இயேசுவோ அவரைச் சாந்தப்படுத்தி, “பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்றார்.—லூக்கா 5:4-10.
4.(அ) சாட்சி கொடுப்பதற்குத் தம் சீஷர்களை இயேசு எப்படித் தயார்படுத்தினார்? (ஆ) இயேசுவின் ஊழியத்தோடு ஒப்பிட அவருடைய சீஷர்கள் எந்தளவு ஊழியம் செய்வார்கள்?
4 உடனடியாக, பேதுருவும் அந்திரேயாவும் தங்களுடைய படகுகளை விட்டுவிட்டு அவருக்குப் பின்சென்றார்கள், செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும்கூட அவ்வாறு சென்றார்கள். இயேசு ஏறக்குறைய மூன்று வருடங்கள் பிரசங்கித்தார்; அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் அவர்களும் கூடவே சென்றார்கள், சுவிசேஷகர்களாவதற்குப் பயிற்சியும் பெற்றார்கள். (மத்தேயு 10:7; மாற்கு 1:16, 18, 20, 38; லூக்கா 4:43; 10:9) அந்த மூன்று வருட காலத்தின் முடிவில், பொ.ச. 33, நிசான் 14 அன்று அவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” (யோவான் 14:12) ஆம், இயேசுவைப் போலவே, அவருடைய சீஷர்களும் முழுமையாய்ச் சாட்சி கொடுப்பார்கள், அதுவும் பெரிய அளவில் சாட்சி கொடுப்பார்கள். அதன் பிறகு அவர்களும், எதிர்கால சீஷர்களும் ‘சகல தேசத்தாருக்கும் இந்த ஒழுங்குமுறையின் முடிவுவரை’ சாட்சி கொடுப்பார்கள் என்பதை விரைவில் அறிந்துகொண்டார்கள்.—மத்தேயு 28:19, 20, NW.
5.இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்த பயிற்சியிலிருந்து நாம் எப்படிப் பயனடைய முடியும்?
5 நாம் ‘இந்த ஒழுங்குமுறையின் முடிவில்’ வாழ்கிறோம். (மத்தேயு 24:3, NW) இயேசு எப்படிப் பிரசங்கிக்கிறார் என்பதை அந்த முதல் சீஷர்களால் நேரடியாகப் பார்க்க முடிந்ததைப் போல் நம்மால் பார்க்க முடியாது. இருந்தாலும், அவர் கொடுத்த பயிற்சியிலிருந்து நாம் பயனடைய முடியும்; அவர் எப்படிப் பிரசங்கித்தார், தம் சீஷர்களுக்கு என்னென்ன அறிவுரைகளைக் கொடுத்தார் என்பதை பைபிளிலிருந்து வாசிப்பதன் மூலம் பயனடைய முடியும். (லூக்கா 10:1-11) என்றாலும், தம் சீஷர்களிடம் இயேசு வெளிக்காட்டிய மிக முக்கியமான ஒன்றைப் பற்றியும், அதாவது பிரசங்க வேலையில் காட்ட வேண்டிய சரியான மனப்பான்மை பற்றியும் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஜனங்களிடம் அக்கறை
6, 7. இயேசுவின் எந்தக் குணம் அவருடைய ஊழியத்தைத் திறம்பட்டதாக்கியது, இந்த விஷயத்தில் அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
6 இயேசு ஏன் அந்தளவு திறம்பட சாட்சி கொடுத்தார்? ஒரு காரணம், அவருக்கு மிகுந்த ஆர்வமும் ஜனங்கள் மீது அக்கறையும் இருந்தது. ‘பலவீனனுக்கும் ஏழைக்கும் இரக்கம் காட்டுவார்’ என சங்கீதக்காரன் அவரைப் பற்றி முன்னுரைத்தார். (சங்கீதம் 72:13, திருத்திய மொழிபெயர்ப்பு) அந்தத் தீர்க்கதரிசனத்தை அவர் அப்படியே நிறைவேற்றினார். ஒரு சந்தர்ப்பத்தில் என்ன நடந்ததென்று பைபிள் கூறுகிறது: “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.” (மத்தேயு 9:36) மகா பாவிகளிடம்கூட இயேசு அக்கறை காட்டியதால், அவரிடம் அவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.—மத்தேயு 9:9-13; லூக்கா 7:36-38; 19:1-10.
7 இன்று நாமும் அதேபோல் ஜனங்களிடம் அக்கறை காட்டும்போது நம்மால் திறம்பட சாட்சி கொடுக்க முடியும். ஊழியத்திற்குச் செல்லும் முன், நாம் சொல்லப்போகும் செய்தி ஜனங்களுக்கு எந்தளவு அவசியம் என்பதை ஒரு கணம் ஏன் யோசித்துப் பார்க்கக் கூடாது? அவர்களுடைய பிரச்சினைகளை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தால் மட்டுமே தீர்க்க முடிகிற பிரச்சினைகளைச் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய செய்திக்கு யார் செவிகொடுப்பார்கள் என்று தெரியாததால் எல்லாரிடமும் நம்பிக்கையான மனநிலையோடு பேசுங்கள். ஒருவேளை அடுத்து நீங்கள் சந்திக்கப்போகும் நபர், உங்களைப் போன்ற ஒருவர் யாராவது வந்து தனக்கு உதவும்படி ஜெபித்துக் கொண்டிருக்கலாம்!
அன்பால் தூண்டப்படுதல்
8.இயேசுவைப் போல நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அவருடைய சீஷர்களை எது தூண்டுகிறது?
8 இயேசு அறிவித்த நற்செய்தி மனிதர் எதிர்ப்படுகிற அதிமுக்கியமான விவாதங்களோடு சம்பந்தப்பட்டிருந்தது. அதாவது, யெகோவாவின் சித்தத்தைச் செய்வது, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது, அவருடைய பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வது ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருந்தது. (மத்தேயு 6:9, 10) பிதாவை அவர் நேசித்ததால், மரணம் வரை உத்தமத்தில் நிலைத்திருக்க அவர் தூண்டப்பட்டார்; அதோடு, அந்த விவாதங்களைத் தீர்க்கப் போகிற ராஜ்யத்தைப் பற்றி சாட்சி கொடுக்கவும் தூண்டப்பட்டார். (யோவான் 14:31) இன்று இயேசுவைப் பின்பற்றுவோருக்கும் அதே தூண்டுதல் இருப்பதால், அவர்களும் ஊழியத்தில் ஊக்கமாக ஈடுபடுகிறார்கள். “தேவனுடைய கற்பனைகளைக் [அதாவது கட்டளைகளைக்] கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” என அப்போஸ்தலன் யோவான் சொன்னார். நற்செய்தியைப் பிரசங்கித்து சீஷர்களை உருவாக்குவதும் அந்தக் கட்டளைகளில் அடங்கும்.—1 யோவான் 5:3; மத்தேயு 28:19, 20.
9, 10. கடவுளுடைய அன்போடு வேறு யாருடைய அன்பும்கூட முழுமையாய்ச் சாட்சி கொடுக்க நம்மைத் தூண்டுகிறது?
9 “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்” என இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். (யோவான் 14:15, 21) ஆகவே அவர் மீதுள்ள அன்பு, சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கும் அவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்வதற்கும் நம்மைத் தூண்ட வேண்டும். உயிர்த்தெழுப்பப்பட்ட பின் தம் சீஷர்கள் முன் தோன்றிய ஒரு சந்தர்ப்பத்தில் பேதுருவை அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்: “என் ஆட்டுக்குட்டிகளைப் போஷிப்பாயாக. . . . என் ஆடுகளை மேய்ப்பாயாக. . . . என் ஆடுகளைப் போஷிப்பாயாக.” அதைச் செய்வதற்கு பேதுருவை எது தூண்ட வேண்டும்? “நீ என்னில் அன்புகூருகிறாயா . . . நீ என்னில் அன்புகூருகிறாயா . . . நீ என்னை நேசிக்கிறாயா” என திரும்பத் திரும்ப பேதுருவிடம் அவர் கேட்டபோது அதற்கான பதிலை சுட்டிக்காட்டினார். ஆம், இயேசுவின் மீதிருந்த அன்பும் பாசமுமே முழுமையாய்ச் சாட்சி கொடுப்பதற்கும் இயேசுவின் ஆடுகளைக் கண்டுபிடித்து, பின்னர் ஆன்மீக அர்த்தத்தில் அவற்றை மேய்ப்பதற்கும் அவரைத் தூண்ட வேண்டும்.—யோவான் 21:15-17.
10 பேதுருவைப் போல இன்று நாம் இயேசுவுடன் தனிப்பட்ட விதமாக நெருங்கிப் பழக முடிவதில்லை. என்றாலும், நமக்காக அவர் செய்தவற்றை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்” அளவுக்கு அவர் ஈடிணையற்ற அன்பைக் காட்டியிருப்பது நம் இருதயங்களைத் தூண்டுவிக்கிறது. (எபிரெயர் 2:9; யோவான் 15:13) பவுலைப் போலவே நாமும் உணருகிறோம், அவர் இவ்வாறு எழுதினார்: ‘கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தார்.’ (2 கொரிந்தியர் 5:14, 15) முழுமையாய்ச் சாட்சி கொடுக்கும் வேலையை ஊக்கமாக செய்வதன் மூலம் இயேசு நம்மீது வைத்துள்ள அன்பை உயர்வாக மதிக்கிறோம் என்பதையும் அவரை நேசிக்கிறோம் என்பதையும் நாம் வெளிப்படையாகக் காட்டுகிறோம். (1 யோவான் 2:3-5) பிரசங்க வேலையில் நாம் ஒருபோதும் ஏனோதானோ என்ற மனப்பான்மையுடன் ஈடுபட மாட்டோம், அப்படிச் செய்தால், அவரது பலியைத் துச்சமாகக் கருதுகிறோம் என்று அர்த்தமாகும்.—எபிரெயர் 10:29.
குறி தவறுவதற்கு அனுமதிக்காதீர்கள்
11, 12. என்ன நோக்கத்திற்காக இயேசு பூமிக்கு வந்தார், இதை முக்கியமான வேலையாகக் கருதியதை அவர் எப்படிக் காட்டினார்?
11 பொந்தியு பிலாத்துவுக்கு முன் நிற்கையில் இயேசு இவ்வாறு கூறினார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதைவிட்டு தம்மை திசைதிருப்ப அவர் எதையும் அனுமதிக்கவில்லை. அவர் அப்படிச் சாட்சி கொடுக்க வேண்டுமென்பதே கடவுளுடைய சித்தமாக இருந்தது.
12 இந்த விஷயத்தில் இயேசுவை சாத்தான் சோதித்தான் என்பதில் சந்தேகமில்லை. அவர் முழுக்காட்டுதல் பெற்ற சில காலத்திற்குப் பிறகு அவரை இந்த உலகத்திலேயே ஒரு முக்கியமான ஆளாக்குவதற்கும் “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” அவருக்குக் கொடுக்கவும் அவன் முன்வந்தான். (மத்தேயு 4:8, 9) பிற்பாடு, யூதர்கள் அவரை ராஜாவாக்க விரும்பினார்கள். (யோவான் 6:15) அந்த வாய்ப்புகளை இயேசு மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் மனிதர்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும் என இன்று சிலர் நினைக்கக்கூடும், ஒரு ராஜாவாக மனிதகுலத்திற்கு மிகுந்த நன்மைகளை அவர் செய்திருக்க முடியுமென்றும் அவர்கள் ஒருவேளை நியாயவிவாதம் செய்யக்கூடும். ஆனால், அப்படிப்பட்ட எண்ணத்தையே இயேசு தவிர்த்தார். சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதே அவருடைய குறியாக இருந்தது.
13, 14. (அ) இயேசுவை அவரது குறியிலிருந்து எது திசைதிருப்பவில்லை? (ஆ) பொருளாதார ரீதியில் அவர் ஏழையாக இருந்தபோதிலும், எதைச் சாதித்தார்?
13 அதுமட்டுமல்ல செல்வத்தைப் பற்றிய நாட்டமும் இயேசுவைத் திசைதிருப்பவில்லை. அதனால்தான், அவர் ஒரு செல்வச் சீமானாக வாழவில்லை. சொந்த வீடும்கூட அவருக்கு இருக்கவில்லை. “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்று ஒரு சமயம் அவர் சொன்னார். (மத்தேயு 8:20) மரித்தபோது அவரிடம் இருந்த விலைமதிப்புள்ள ஒரே பொருள் அவருடைய உடைதான் என பைபிள் சொல்கிறது; அதை எடுத்துக்கொள்வதற்காக ரோம படைவீரர்கள் சீட்டுப் போட்டார்கள். (யோவான் 19:23, 24) அப்படியானால், இயேசு தம் வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என அர்த்தமா? இல்லை, அப்படி அர்த்தமாகாது!
14 பெரிய கொடை வள்ளல்களால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியத்தை இயேசு சாதித்தார். அவரைக் குறித்து பவுல் இவ்வாறு சொன்னார்: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானார்.’ (2 கொரிந்தியர் 8:9; பிலிப்பியர் 2:5-8) பொருளாதார ரீதியில் அவர் ஏழையாக இருந்தபோதிலும், தாழ்மையுள்ளவர்கள் என்றென்றும் பரிபூரணராக வாழ்வதற்கு வாய்ப்பளித்தார். அவருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் அவர் குறியாக இருந்ததால் அவருக்குக் கிடைத்த வெகுமதியைக் குறித்து நாம் எவ்வளவாய் மகிழ்கிறோம்!—சங்கீதம் 40:8; அப்போஸ்தலர் 2:32, 33, 36.
15. செல்வத்தைவிட மிகவும் மதிப்புமிக்கது எது?
15 இன்று இயேசுவைப் பின்பற்ற முயலுகிற கிறிஸ்தவர்களும்கூட செல்வத்தின் மீதுள்ள நாட்டம் தங்களைத் திசைதிருப்ப அனுமதிப்பதில்லை. (1 தீமோத்தேயு 6:9, 10) செல்வம் இருந்தால் சொகுசாக வாழலாம் என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டாலும், நித்திய எதிர்கால வாழ்க்கைக்கு அது உதவாது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இயேசு மரித்தபோது அவருடைய உடை எப்படி அவருக்குப் பயனற்றதாக இருந்ததோ அப்படியே ஒரு கிறிஸ்தவர் மரிக்கையில்கூட, அவருடைய செல்வம் அவருக்குப் பயனற்றதாக இருக்கும். (பிரசங்கி 2:10, 11, 17-19; 7:12) ஒரு கிறிஸ்தவர் மரிக்கும்போது அவருக்கு உண்மையில் மதிப்புமிக்கதாக இருப்பது, யெகோவாவோடும் இயேசு கிறிஸ்துவோடும் உள்ள பந்தம் மட்டுமே.—மத்தேயு 6:19-21; லூக்கா 16:9.
எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதிருத்தல்
16. எதிர்ப்பை சந்தித்தபோது இயேசு எப்படிப் பிரதிபலித்தார்?
16 எதிர்ப்பு, சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதிலிருந்து இயேசுவைத் திசைதிருப்பவில்லை. தம்முடைய பூமிக்குரிய ஊழியம் தமது தியாக மரணத்தோடுதான் முடிவடையும் என்பதை அறிந்திருந்தாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. அவரைப் பற்றி பவுல் இவ்வாறு சொன்னார்: “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரெயர் 12:2) இயேசு ‘அவமானத்தை எண்ணவில்லை’ என்பதைக் கவனியுங்கள். விரோதிகள் தம்மை எப்படிக் கருதினர் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே அவருடைய ஒரே குறியாக இருந்தது.
17. இயேசுவின் சகிப்புத்தன்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 இயேசுவின் சகிப்புத்தன்மையைப் பொருத்திக்காட்டி, கிறிஸ்தவர்களை பவுல் இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” (எபிரெயர் 12:3) உண்மைதான், எதிர்ப்பையோ ஏளனத்தையோ தினம் தினம் சகிப்பது நம்மைச் சோர்ந்து போகச் செய்யலாம். இந்த உலகின் வசீகர வலைகளில் சிக்காமல் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பது நம்மைக் களைப்படையச் செய்யலாம். ஆனால் நாம் ‘பெரிய ஆளாக’ வர வேண்டுமென ஆசைப்படுகிற சொந்தபந்தங்களுக்கு அது பெருத்த ஏமாற்றமாக இருக்கலாம். என்றாலும், தளர்ந்துவிடாமல் நம் வாழ்க்கையில் ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுக்கும்போது இயேசுவைப் போல யெகோவாவின் ஆதரவை நாம் பெறலாம்.—மத்தேயு 6:33; ரோமர் 15:13; 1 கொரிந்தியர் 2:4.
18. பேதுருவுக்கு இயேசு அளித்த பதிலிலிருந்து என்ன சிறந்த பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
18 இயேசு தாம் மரிக்கப் போவதைப் பற்றி சீஷர்களிடம் சொல்ல ஆரம்பித்தபோது, அவருடைய குறிக்கோளிலிருந்து திசைதிரும்பவே மாட்டார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. எப்படியெனில் ‘இது உமக்கு வேண்டாம்’ என்றும், “இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றும் பேதுரு சொன்னபோது யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்ற தம் தீர்மானத்தைக் குலைத்துப்போடுகிற அத்தகைய எந்த வார்த்தைகளையும் கேட்க அவர் மறுத்தார். ஆகவே, பேதுருவை அவர் திரும்பிப் பார்த்து “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்றார். (மத்தேயு 16:21-23; பொது மொழிபெயர்ப்பு) நாம் மனிதருடைய சிந்தைகளைத் தவிர்ப்பதில் எப்போதும் அதே தீர்மானத்துடன் இருப்போமாக. கடவுளுடைய சிந்தைகளால் எப்போதும் வழிநடத்தப்படுவோமாக.
நித்திய நன்மைகள்
19. இயேசு பல அற்புதங்கள் செய்தபோதிலும், எது அவருடைய ஊழியத்தின் முக்கிய அம்சமாக இருந்தது?
19 தாமே மேசியா என்பதை நிரூபித்துக் காட்ட இயேசு பல அற்புதங்களைச் செய்தார். மரித்தோரையும்கூட அவர் உயிர்த்தெழுப்பினார். அந்த அற்புதங்கள் ஜனக்கூட்டத்தாரைக் கவர்ந்தன; ஆனால் வெறுமனே சமூக சேவை செய்வதற்காக அவர் பூமிக்கு வரவில்லை. சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கவே அவர் பூமிக்கு வந்தார். ஜனங்களுக்கு தாம் அளித்த நன்மைகளெல்லாம் தற்காலிகமானதே என்பதை அறிந்திருந்தார். அவரால் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்கூட மீண்டும் மரித்தார்கள். சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுத்ததன் மூலம் மட்டுமே நித்திய ஜீவனைப் பெற சிலருக்கு அவரால் உதவ முடிந்தது.—லூக்கா 18:28-30.
20, 21. நற்பணிகளைச் செய்வதில் மெய்க் கிறிஸ்தவர்கள் எப்படிச் சமநிலையைக் காத்துக்கொள்கிறார்கள்?
20 இன்று சிலர், ஏழைகளுக்காக ஆஸ்பத்திரிகளைக் கட்டிக்கொடுப்பதன் மூலம் அல்லது வேறு பல சேவைகளைச் செய்வதன் மூலம் இயேசுவைப் போல நற்பணிகளைச் செய்ய முயலுகிறார்கள். இன்னும் சிலரோ இதற்காகப் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள், அவர்களுடைய பெரிய மனதைப் பாராட்ட வேண்டும்; ஆனால் அவர்கள் அளிக்கிற எந்த உதவியும் தற்காலிகமானதே. நிரந்தர உதவியை கடவுளுடைய ராஜ்யத்தால் மட்டுமே அளிக்க முடியும். ஆகவே, இயேசு செய்தது போல யெகோவாவின் சாட்சிகளும் அந்த ராஜ்யத்தின் சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
21 உண்மைதான், மெய்க் கிறிஸ்தவர்கள் நற்பணிகளையும் செய்து வருகிறார்கள். “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என பவுல் எழுதினார். (கலாத்தியர் 6:10) நம் அக்கம்பக்கத்தாரோ கிறிஸ்தவ சகோதரர்களோ நெருக்கடி நிலையில் அல்லது அவசரத் தேவையில் இருக்கையில் அவர்களுக்கு “நன்மை செய்ய” நாம் தயங்குவதில்லை. இருந்தாலும், சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கே நாம் முக்கிய கவனம் செலுத்துகிறோம்.
இயேசுவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
22. தங்களுடைய அக்கம்பக்கத்தாரிடம் கிறிஸ்தவர்கள் ஏன் பிரசங்கிக்கிறார்கள்?
22 “சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” என பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 9:16) நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அவர் ஏனோதானோ என்ற மனப்பான்மையுடன் ஈடுபடவில்லை; ஏனெனில் இந்தப் பிரசங்க வேலை அவருக்கும் அவர் சொல்வதைக் கேட்போருக்கும் ஜீவன் அளிப்பதாய் இருந்தது. (1 தீமோத்தேயு 4:16) நாமும்கூட ஊழியத்தை அதேவிதமாகவே கருதுகிறோம். நம் அக்கம்பக்கத்தாருக்கு உதவி செய்ய விரும்புகிறோம். யெகோவா மீதுள்ள அன்பை வெளிக்காட்ட விரும்புகிறோம். இயேசுவின் மீதுள்ள அன்பையும் நம்மீது அவர் காட்டிய ஈடிணையற்ற அன்புக்குப் போற்றுதலையும் வெளிக்காட்ட விரும்புகிறோம். ஆகவே, நாம் நற்செய்தியைப் பிரசங்கித்து அதன் மூலம் ‘மனுஷருடைய இச்சைகளுக்காக அல்ல, ஆனால் கடவுளுடைய சித்தத்திற்காக’ வாழ்கிறோம்.—1 பேதுரு 4:1, 2.
23, 24. (அ) அற்புதமாக மீன் கிடைத்த விஷயத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? (ஆ) இன்று முழுமையாய்ச் சாட்சி கொடுப்பவர்கள் யார்?
23 மற்றவர்கள் நம்மை ஏளனம் செய்தாலோ நம் செய்தியைக் கேட்காமல் கோபத்தோடு மறுத்துவிட்டாலோ இயேசுவைப் போல நாமும் நம் குறியைவிட்டு விலகுவதில்லை. தம்மைப் பின்பற்றும்படி பேதுருவையும் அந்திரேயாவையும் அழைத்த சமயத்தில் அவர் செய்த அற்புதத்திலிருந்து நாம் பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். பலனற்றதாகத் தோன்றும் அடையாளப்பூர்வமான தண்ணீரில் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நாம் நம்முடைய வலைகளை வீசும்போது நமக்கும் ஏராளமான பலன்கள் கிடைக்கலாம். பல ஆண்டுகளாகப் பலன் தராதிருந்த பிராந்தியங்களில் அநேக கிறிஸ்தவர்கள் சிறந்த பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். இன்னும் சிலரோ அதிக பலன்தரும் பிராந்தியங்களுக்கு மாறிச் சென்று அங்கே சிறந்த பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். நாம் எதைச் செய்தாலும், சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுப்பதை நிறுத்தவே மாட்டோம். பூமியில் எந்தவொரு பகுதியிலும் பிரசங்க வேலை முடிந்து விட்டதென இயேசு இன்னும் அறிவிக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.—மத்தேயு 24:14.
24 அறுபது லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் மேலான நாடுகளில் இப்போது சுறுசுறுப்பாக ஊழியம் செய்து வருகிறார்கள். 2004 ஊழிய ஆண்டில் உலகமுழுவதிலும் அவர்கள் செய்த ஊழியத்தைப் பற்றிய வருடாந்தர அறிக்கை பிப்ரவரி 1, 2005 இதழில் இடம்பெறும். பிரசங்க வேலையை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்திருப்பதை அந்த அறிக்கை காட்டும். “வசனத்தை அவசர உணர்வுடன் பிரசங்கம் பண்ணு” என பவுல் சொன்னார்; இந்த ஒழுங்குமுறை முடியப்போகிற இக்காலத்தில் ஊக்கமூட்டும் அவ்வார்த்தைகளை எப்போதும் மனதில் வைப்போமாக. (2 தீமோத்தேயு 4:2, NW) வேலை முடிந்தது என யெகோவா சொல்லும் வரையில் தொடர்ந்து நாம் முழுமையாய்ச் சாட்சி கொடுத்து வருவோமாக.
இந்த ஆண்டு முதற்கொண்டு உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை ஜனவரி 1, காவற்கோபுரத்தில் இடம்பெறாது. மாறாக, பிப்ரவரி 1 இதழில் வெளியிடப்படும்.
பதிலளிக்க முடியுமா?
• இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்த பயிற்சியிலிருந்து நாம் எப்படி நன்மையடைய முடியும்?
• ஜனங்களிடம் பிரசங்கித்தபோது இயேசு என்ன மனப்பான்மையைக் காட்டினார்?
• முழுமையாய்ச் சாட்சி கொடுப்பதற்கு எது நம்மை உந்துவிக்கிறது?
• இயேசுவைப் போல, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் என்னென்ன வழிகளில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்?
[பக்கம் 15-ன் படம்]
ஜனங்களிடம் இயேசு அக்கறை காட்டிய விதமாகவே நாமும் காட்டினால், நம் ஊழியம் திறம்பட்டதாக இருக்கும்
[பக்கம் 16, 17-ன் படம்]
சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கவே இயேசு பூமிக்கு வந்தார்
[பக்கம் 17-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் முழுமையாய்ச் சாட்சி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்