‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே’
“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் (முழுக்காட்டுதல், NW) கொடுங்கள்.”—மத்தேயு 28:19.
1. பரிசுத்த ஆவியின் சம்பந்தமாக முழுக்காட்டுபவனாகிய யோவான் என்ன புதிய சொற்றொடரை பயன்படுத்தினார்?
நம்முடைய பொது சகாப்தம் 29-ம் ஆண்டு, முழுக்காட்டுபவனாகிய யோவான் இஸ்ரவேலில் மேசியாவுக்கு வழியை ஆயத்தம்பண்ணுவதில் சுறுசுறுப்பாக இருந்தார், தன்னுடைய ஊழியத்தின் போது பரிசுத்த ஆவியைப் பற்றி புதிய ஏதோவொன்றை அவர் அறிவித்தார். நிச்சயமாகவே யூதர்கள் ஆவியைப் பற்றி எபிரெய வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். ஆனால் யோவான் பின்வருமாறு சொன்ன போது அவர்கள் ஆச்சரியமடைந்திருக்கக்கூடும்: “மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் [முழுக்காட்டுதல், NW] கொடுக்கிறேன்; எனக்குப் பின் வருகிறவரோ . . . பரிசுத்த ஆவியினால் . . . உங்களுக்கு ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல், NW] கொடுப்பார்.” (மத்தேயு 3:11) ‘பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம்’ [முழுக்காட்டுதல், NW] புதிய ஒரு சொற்றொடராக இருந்தது.
2. பரிசுத்த ஆவியை உட்படுத்தும் என்ன புதிய சொற்றொடரை இயேசு அறிமுகப்படுத்தினார்?
2 பின் வருகிறவர் இயேசுவாக இருந்தார். தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் போது, இயேசு ஆவியைப் பற்றி அநேக தடவைகள் பேசிய போதிலும், எவருக்கும் அவர் பரிசுத்த ஆவியினால் உண்மையில் முழுக்காட்டுதல் கொடுக்கவில்லை. மேலுமாக, அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, பரிசுத்த ஆவியை மேலுமாக மற்றொரு புதிய முறையில் அவர் குறிப்பிட்டார். அவர் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் [முழுக்காட்டுதல், NW] கொடுங்கள்.” (மத்தேயு 28:19) “நாமத்திலே” என்ற சொற்றொடர், “ஏற்றுக்கொள்ளும் விதத்திலே” என்று பொருள்படுகிறது. பிதா குமாரன் பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தண்ணீர் முழுக்காட்டுதல், பரிசுத்த ஆவியின் முழுக்காட்டுதலிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டியதாக இருந்தது. அது பரிசுத்த ஆவியை உட்படுத்துகிற புதிய ஒரு சொற்றொடராகவும்கூட இருந்தது.
பரிசுத்த ஆவியினாலே முழுக்காட்டுதல்
3, 4. (எ) பரிசுத்த ஆவியிலே முதல் முழுக்காட்டுதல் எப்பொழுது நடந்தேறியது? (பி) அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதைத் தவிர பரிசுத்த ஆவி எவ்விதமாக பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது இயேசுவின் சீஷர்களிடமாக செயல்பட்டது?
3 பரிசுத்த ஆவியினாலே முழுக்காட்டுதலைப் பொறுத்ததில், இயேசு மேலே ஏறிச் செல்வதற்கு சற்று முன்பாக தம் சீஷர்களுக்கு இவ்விதமாக வாக்களித்தார்: “நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல், NW] பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 1:4, 8) அதற்குப் பின் விரைவிலேயே அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. இயேசு பரலோகத்திலிருந்து கொண்டு பரிசுத்த ஆவியினாலே தம்முடைய முதல் முழுக்காட்டுதலை நடப்பித்த போது எருசலேமில் மேலறையில் கூடியிருந்த சுமார் 120 சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி வந்திறங்கியது. (அப்போஸ்தலர் 2:1-4, 33) என்ன விளைவோடு? சீஷர்கள் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தின் பாகமாக ஆனார்கள். பவுல் அப்போஸ்தலன் விளக்குகிற வண்ணமாகவே, “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக [அவர்கள்] ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல், NW] பண்ணப்”பட்டார்கள். (1 கொரிந்தியர் 12:13) அதே சமயத்தில், அவர்கள் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் எதிர்கால அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் இருக்கும்படி அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். (எபேசியர் 1:13, 14; 2 தீமோத்தேயு 2:12; வெளிப்படுத்துதல் 20:6) பரிசுத்த ஆவி, அந்த மகத்தான எதிர்கால சுதந்திரத்துக்கு முதல் முத்திரையாகவும் அடையாளமாகவும்கூட சேவித்தது. ஆனால் அதுவே எல்லாமுமாக இருக்கவில்லை.—2 கொரிந்தியர் 1:21, 22.
4 ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் இயேசு நிக்கொதேமுவிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் . . . ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்.” (யோவான் 3:3, 5) இப்பொழுது 120 மனிதர்கள் மறுபடியுமாக பிறந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக, அவர்கள் கடவுளின் ஆவிக்குரிய குமாரர்களாக, கிறிஸ்துவின் சகோதரர்களாக சுவிகாரம் செய்துக்கொள்ளப்பட்டிருந்தார்கள். (யோவான் 1:11-13; ரோமர் 8:14, 15) பரிசுத்த ஆவியின் இந்த எல்லா நடவடிக்கைகளும் அற்புதங்களைவிட அவைகளின் ஈடிணையற்ற விதத்தில் அதிக ஆச்சரியம் தரக்கூடியதாய் இருந்தன. மேலுமாக ஒரு காலத்தில் நடைபெற்ற அற்புதங்களைப் போல் இல்லாமல், பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பின் முடிவுக்கு வந்துவிடாமல், ஆனால் நம்முடைய நாள் வரையாகவும்கூட இவ்வகையில் தொடர்ந்து சுறுசுறுப்பாய் இருந்து வருகிறது. கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட உறுப்பினர்களில் கடைசியானவர்களை தங்கள் மத்தியில் கொண்டிருப்பது யெகோவாவின் சாட்சிகளுடைய சிலாக்கியமாக உள்ளது. இவர்களே ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவை அருளிச் செய்வதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யாக சேவிக்கிறார்கள்.—மத்தேயு 24:45-47.
‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டுதல்’
5, 6. பரிசுத்த ஆவியில் முதல் முழுக்காட்டுதல்கள் எவ்விதமாக தண்ணீர் முழுக்காட்டுதல்களுக்கு வழிநடத்தின?
5 ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே வாக்களிக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுக்காட்டுதலைப் பற்றி என்ன? ஆவியில் முழுக்காட்டப்பட்டிருந்த அந்த ஆரம்ப கால சீஷர்கள் இப்படிப்பட்ட தண்ணீர் முழுக்காட்டுதலுக்கு உட்படாதவர்களாக இருந்தனர். அவர்கள் ஏற்கெனவே யோவானின் முழுக்காட்டுதலைப் பெற்றிருந்தார்கள், அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அது யெகோவாவுக்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இருந்தபடியால், அவர்கள் மறு-முழுக்காட்டுதல் பெற தேவை இருக்கவில்லை. ஆனால் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே சமயத்தில், திரள் கூட்டமான ஆத்துமாக்கள் புதிய தண்ணீர் முழுக்காட்டுதலை நிச்சயமாகவே பெற்றுக்கொண்டனர். இது எவ்விதமாக சம்பவித்தது?
6 120 பேர் பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்பட்ட போது, திரளான ஜனங்களைக் கவர்ந்த ஒரு பெரிய சத்தம் அதை பின்தொடர்ந்தது. சீஷர்கள் அங்கே கூடியிருந்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்ட அந்நிய பாஷைகளைப் பேசுவதைக் கேட்டு இவர்கள் வியப்படைந்தார்கள். மரித்தோரிலிருந்து எழுந்து இப்பொழுது பரலோகத்தில் கடவுளுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கும் இயேசுவினால் கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த அற்புதம் அத்தாட்சியாக இருப்பதை பேதுரு அப்போஸ்தலன் விளக்கினார். பேதுரு தனக்கு செவிகொடுத்து கொண்டிருந்தவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.” பின்னர் அவர் இவ்விதமாகச் சொல்லி முடித்தார்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புகென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல், NW] பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” சுமார் 3,000 ஆத்துமாக்கள் பிரதிபலித்தார்கள்.—அப்போஸ்தலர் 2:36, 38, 41.
7. பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது முழுக்காட்டப்பட்ட 3,000 பேர் எவ்விதமாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டப்பட்டார்கள்?
7 இவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே (ஏற்றுக்கொள்ளும் விதத்திலே) முழுக்காட்டப்பட்டார்கள் என்று சொல்லப்படக்கூடுமா? ஆம், பேதுரு அவர்களைப் பிதாவின் நாமத்திலே முழுக்காட்டுதல் பெறும்படியாக அவர்களிடம் சொல்லாத போதிலும், அவர்கள் இயற்கையான யூதர்களாக, அவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த ஒரு ஜனத்தின் அங்கத்தினர்களாக இருந்தபடியால் அவர்கள் யெகோவாவை ஏற்கெனவே பேரரசரும் ஆண்டவருமாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். பேதுரு, ‘இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,’ என்பதாக சொன்னது உண்மையே. ஆகவே அவர்களுடைய முழுக்காட்டுதல் இயேசுவை ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் அவர்கள் ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்தியது. இப்பொழுது அவர்கள் அவருடைய சீஷர்களாக இருந்து, இது முதற்கொண்டு அவர் மூலமாகவே பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கடைசியாக முழுக்காட்டுதல், பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தது, ஆவியை அவர்கள் இலவசமான ஈவாக பெற்றுக்கொள்வார்கள் என்ற வாக்குறுதிக்கு பிரதிபலிப்பாக, அது செய்யப்பட்டது.
8. (எ)தண்ணீர் முழுக்காட்டுதலோடுகூட, வேறு என்ன முழுக்காட்டுதலை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கிறார்கள்? (பி) 1,44,000 பேரைத் தவிர வேறு யார் பரிசுத்த ஆவியின் நாமத்திலே தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்கிறார்கள்?
8 பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டவர்கள் ஆவியினாலும்கூட முழுக்காட்டப்பட்டார்கள். பரலோக ராஜ்யத்தில் எதிர்கால அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் படி, இவர்கள் 1,44,000 பேராக மாத்திரமே இருக்கிறார்கள். ஆகவே பரிசுத்த ஆவியிலே முழுக்காட்டப்பட்டு ராஜ்ய சுதந்தரவாளிகளாக கடைசியாக ‘முத்தரிக்கப்படுகிறவர்கள்’ எண்ணிக்கையில் 1,44,000 பேராக மாத்திரமே இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:4; 14:1) என்றபோதிலும் எல்லாப் புதிய சீஷர்களும்—அவர்களுடைய நம்பிக்கை என்னவாக இருந்தபோதிலும்—பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே தண்ணீரில் முழுக்காட்டப்படுகிறார்கள். (மத்தேயு 28:19, 20) அப்படியென்றால், “சிறு மந்தை”யாக இருந்தாலும் அல்லது “வேறே ஆடு”களாக இருந்தாலும் சரி, பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டுதல் என்பது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் எதைக் குறிக்கிறது? (லூக்கா 12:32; யோவான் 10:16) அதற்கு பதிலளிப்பதற்கு முன்பாக, கிறிஸ்தவ சகாப்தத்தில் ஆவியின் செயல்களை நாம் கவனிப்போமாக.
ஆவியின் கனி
9. பரிசுத்த ஆவியின் என்ன செயல் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமாக இருக்கிறது?
9 பரிசுத்த ஆவியின் முக்கியமான ஒரு செயல், கிறிஸ்தவ ஆள்தன்மையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவிசெய்வதாகும். உண்மைதான், அபூரணத்தின் காரணமாக, நாம் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது. (ரோமர் 7:21-23) ஆனால் நாம் உண்மையாக மனந்திரும்புவோமேயானால், கிறிஸ்துவினுடைய பலியின் அடிப்படையில் யெகோவா நம்மை மன்னிக்கிறார். (மத்தேயு 12:31, 32; ரோமர் 7:24, 25; 1 யோவான் 2:1, 2) மேலுமாக, பாவம் செய்வதற்கு நமக்கிருக்கும் மனச்சாய்வுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார், பரிசுத்த ஆவி இதைச் செய்ய நமக்கு உதவி செய்கிறது. “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்,” என்று பவுல் சொன்னார். “அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” (கலாத்தியர் 5:16) ஆவி நம்மில் மிகச் சிறந்த பண்புகளை உண்டுபண்ணக்கூடும் என்பதை பவுல் தொடர்ந்து காண்பித்தார். அவர் எழுதினார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.”—கலாத்தியர் 5:22, 23.
10. ஆவியின் கனி ஒரு கிறிஸ்தவனில் எவ்வாறு வளருகிறது?
10 ஆவி எவ்விதமாக ஒரு கிறிஸ்தவனில் இப்படிப்பட்ட கனிகளை சாத்தியமாக்குகிறது? நாம் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கும் காரணத்தால் அது தானாகவே வந்து விடுவதில்லை. அதற்காக நாம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த குணங்களை வெளிப்படுத்தும் மற்ற கிறிஸ்தவர்களோடு நாம் கூட்டுறவுக்கொண்டால், குறிப்பிட்ட குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள நாம் கடவுளிடம் ஜெபித்தால், கெட்ட கூட்டுறவுகளைத் தவிர்த்து, ஆலோசனைக்காகவும் நல்ல முன்மாதிரிகளுக்காகவும் பைபிளைப் படித்தால், அப்பொழுது ஆவியின் கனி நம்மில் வளருகிறது.—நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33; கலாத்தியர் 5:24-26; எபிரெயர் 10:24, 25.
பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்படுதல்
11. எவ்விதத்தில் மூப்பர்கள் பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்படுகிறார்கள்?
11 பவுல் எபேசுவிலுள்ள மூப்பர்களிடம் பேசுகையில் பரிசுத்த ஆவியின் மற்றொரு செயலை அறிமுகப்படுத்தினார். அவர் சொன்னார்: “உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சொந்த குமாரனின் ரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) ஆம், சபை கண்காணிகள் அல்லது மூப்பர்கள் பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்படுகிறார்கள். என்ன விதத்தில்? நியமிக்கப்படும் மூப்பர்கள் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட பைபிளில் கொடுக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-13; தீத்து 1:5-9) அவர்கள் அந்தத் தகுதிகளை பரிசுத்த ஆவியின் உதவியினால் மாத்திரமே வளர்த்துக் கொள்ள முடியும். மேலுமாக, ஒரு புதிய மூப்பரை சிபாரிசு செய்யும் மூப்பர் குழு, அவர் தகுதிகளை பூர்த்தி செய்கிறாரா இல்லையா என்பதை பகுத்துணர பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காக ஜெபிக்கிறார்கள். உண்மையான நியமனம், ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் மேற்பார்வையின் கீழ் செய்யப்படுகிறது.
ஆவியினால் வழிநடத்தப்பட்டிருங்கள்
12. பைபிளின் மூலமாக ஆவி நம்மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?
12 பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினுடைய செல்வாக்கின் கீழ் எழுதப்பட்டது என்பதை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, அவர்கள் கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் செய்தது போலவே, ஆவியால்-ஏவப்பட்ட ஞானத்துக்காக அவைகளை ஆராய்ந்துப் படிக்கிறார்கள். (நீதிமொழிகள் 2:1-9) அவர்கள் அவைகளை வாசிக்கிறார்கள், அவைகளைத் தியானிக்கிறார்கள், அவைகள் தங்கள் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிக்கிறார்கள். (சங்கீதம் 1:1-3; 2 தீமோத்தேயு 3:16) இவ்விதமாக அவர்கள் ஆவியினால் ‘தேவனுடைய ஆழமான காரியங்களை ஆராய’ உதவப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 2:10, 13; 3:19) கடவுளுடைய ஊழியர்களை இவ்விதமாக வழிநடத்துவது, நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியின் முக்கியமான செயலாக இருக்கிறது.
13, 14. சபையில் பிரச்னைகளை கையாளுவதற்கு இயேசு எதை பயன்படுத்தினார்? அவர் எவ்விதமாக இன்று அதையே செய்கிறார்?
13 மேலுமாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சிறிய ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் செய்திகளை அனுப்பியிருக்கிறார். (வெளிப்படுத்துதல் அதிகாரம் 2 மற்றும் 3) இவைகளில், அவர் சபைகளை பார்வையிட்டு அவர்களின் ஆவிக்குரிய நிலைமையை அறிந்து கொண்டதாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சிலர், விசுவாசத்தில் நல்ல முன்மாதிரியாக இருப்பதை அவர் கண்டார். மற்றவைகளில், பிரிவினைகளும், ஒழுக்கக்கேடும், வெதுவெதுப்பான தன்மையும் மந்தையை கெடுத்துப் போடுவதற்கு மூப்பர்கள் அனுமதித்துவிட்டிருந்தார்கள். சர்தை சபை, ஒரு சில உண்மையுள்ள ஆத்துமாக்களைத் தவிர, ஆவிக்குரிய வகையில் மரித்துவிட்டிருந்தது. (வெளிப்படுத்துதல் 3:1, 4) இயேசு இந்தப் பிரச்னைகளை எவ்வாறு கையாண்டார்? பரிசுத்த ஆவியின் உதவியோடு. ஏழு சபைகளுக்கும் புத்திமதி கொடுக்கையில், இயேசுவின் செய்தி ஒவ்வொருவரின் விஷயத்திலும் பின்வரும் வார்த்தைகளோடு முடிவடைந்தது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 2:7, 11, 17, 29; 3:6, 13, 22.
14 இன்றும்கூட, இயேசு சபைகளைப் பார்வையிடுகிறார். பிரச்னைகளை அவர் கண்டுணருகையில், இக்காலத்திலும்கூட அவர் பரிசுத்த ஆவியின் மூலமாகவே அவைகளைக் கையாளுகிறார். நம்முடைய பைபிள் வாசிப்பின் மூலமாக நேரடியாக பிரச்னைகளை கண்டுணரவும் மேற்கொள்ளவும் ஆவி நமக்கு உதவக்கூடும். ஆவியால்-அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையும் விவேகமுமுள்ள அடிமை பிரசுரிக்கும் பைபிள் பிரசுரங்கள் மூலமாகக் கூட உதவி வரக்கூடும். அல்லது அது சபையில் ஆவியால் நியமிக்கப்பட்ட மூப்பர்களிடமிருந்து வரக்கூடும். காரியம் எவ்விதமாக இருப்பினும், புத்திமதி தனிநபருக்காக இருந்தாலும் சரி அல்லது முழு சபைக்குமாக இருந்தாலும் சரி, “ஆவியானவர் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்,” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்கிறோமா:
ஆவியும் பிரசங்க வேலையும்
15. ஆவி எவ்விதமாக பிரசங்க வேலையின் சம்பந்தமாக இயேசுவிடம் செயல்பட்டது?
15 ஒரு சமயம் இயேசு நாசரேத்திலிருந்த தேவாலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அவர் ஆவியின் இன்னும் மற்றொரு செயலைக் காண்பித்தார். பதிவு நமக்குச் சொல்கிறது: “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் என்னை அனுப்பினார் என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்தார். அவர் அவர்களுடனே பேச தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.” (லூக்கா 4:17, 18, 21; ஏசாயா 61:1, 2) ஆம், இயேசு நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார்.
16. முதல் நூற்றாண்டில் பரிசுத்த ஆவி எவ்விதமாக நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதில் ஆழமாக உட்பட்டிருந்தது?
16 இயேசு தமது மரணத்துக்குச் சற்று முன்பாக, அவரை பின்பற்றுகிறவர்களால் செய்து முடிக்கப்பட இருந்த மகத்தான ஒரு பிரசங்க வேலையை முன்னுரைத்தார். அவர் சொன்னார்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்.” (மாற்கு 13:10) இந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் ஓர் ஆரம்ப நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன, பரிசுத்த ஆவி வகித்த பாகம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பிலிப்புவை எத்தியோப்பிய மந்திரியிடம் பிரசங்கிக்க வழிநடத்தியது பரிசுத்த ஆவியே. பரிசுத்த ஆவி பேதுருவை கொர்நேலியுவிடமும் வழிநடத்தியது. பரிசுத்த ஆவியே அப்போஸ்தலர்களாக அந்தியோகியாவிலிருந்து பவுலும் பர்னபாவும் அனுப்பப்பட வழிநடத்தியது. பின்னால் பவுல் ஆசியாவிலும் பித்தினியாவிலும் பிரசங்கிக்க விரும்பிய போது, பரிசுத்த ஆவி ஏதோ ஒருவகையில் அவரைத் தடைசெய்தது. சாட்சி வேலை ஐரோப்பாவுக்குள்ளும் முன்னேறி செல்ல வேண்டும் என்று கடவுள் விரும்பினார்.—அப்போஸ்தலர் 8:29; 10:19; 13:2; 16:6, 7.
17. இன்று, பரிசுத்த ஆவி எவ்விதமாக பிரசங்க வேலையில் உட்பட்டிருக்கிறது?
17 இன்று மறுபடியும் பரிசுத்த ஆவி பிரசங்க வேலையில் ஆழமாக உட்பட்டிருக்கிறது. ஏசாயா 61:1, 2-ன் கூடுதலான நிறைவேற்றத்தில், யெகோவாவின் ஆவி கிறிஸ்துவின் சகோதரர்களை பிரசங்கிப்பதற்காக அபிஷேகம் செய்திருக்கிறது. மாற்கு 13:10-ன் முடிவான நிறைவேற்றத்தில், அபிஷேகம் பண்ணப்பட்ட இவர்கள், திரள் கூட்டத்தாரின் உதவியோடு சொல்லர்த்தமாகவே “சகல ஜாதிகளுக்கும்” நற்செய்தியை பிரசங்கித்துவிட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) மேலும் இதில் இவர்கள் அனைவருக்கும் ஆவி உதவி செய்கிறது. முதல் நூற்றாண்டில் இருந்தது போலவே, அது பிராந்தியங்களை திறந்து வைத்து, வேலையின் பொதுவான முன்னேற்றத்தை வழிநடத்துகிறது. அது தனிநபர்களைப் பலப்படுத்தி, கோழைத்தனத்தை மேற்கொள்ளவும் போதனா திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் அவர்களுக்கு உதவிபுரிகிறது. மேலுமாக இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்விதமாகச் சொன்னார்: “அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது: எப்படி பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; . . . பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.”—மத்தேயு 10:18-20.
18, 19. என்ன விதத்தில் “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள” தாழ்மையான இருதயமுள்ள ஆட்களை அழைப்பதில் ஆவி மணவாட்டியை சேர்ந்துகொள்கிறது?
18 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பைபிள் மறுபடியுமாக பிரசங்க வேலையில் பரிசுத்த ஆவியின் ஈடுபாட்டை அழுத்திக் கூறுகிறது. அங்கே அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதமாக அறிவிக்கிறார்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) பூமியின் மீது இன்னும் இருக்கும் 1,44,000 பேரில் மீதியானோரால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மணவாட்டி, ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளும்படி அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியும்கூட “வா” என்று சொல்வதை கவனியுங்கள். என்ன விதத்தில்?
19 மணவாட்டியினாலும்—இன்று வேறே ஆடுகளின் திரள் கூட்டமான ஜனங்களின் உதவியோடும்—பிரசங்கிக்கப்படும் செய்தி பரிசுத்த ஆவியினுடைய நேரடியான செல்வாக்கின் கீழ் எழுதப்பட்ட பைபிளிலிருந்து வரும் விதத்தில். அதே ஆவிதானே ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு விளக்கவும் மணவாட்டி வகுப்பினுடைய இருதயங்களையும் மனங்களையும் திறந்திருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் புதிய சீஷர்களாக முழுக்காட்டப்படுகிறவர்கள் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்னும் மற்றவர்களுக்கு “வா!” என்று சொல்வதில் ஆவியோடும் மணவாட்டியோடும் ஒத்துழைப்பதற்கு அவர்கள் கிளர்ச்சியடைகிறார்கள். இன்று 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆவியோடு இந்த வேலையில் பங்கு கொள்கிறார்கள்.
நம்முடைய முழுக்காட்டுதலுக்கு ஏற்ப வாழ்தல்
20, 21. பரிசுத்த ஆவியின் நாமத்திலே நம்முடைய முழுக்காட்டுதலுக்கேற்ப நாம் எவ்விதமாக வாழலாம்? இந்த முழுக்காட்டுதலை நாம் எவ்விதம் கருத வேண்டும்?
20 பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டுதல் என்பது நாம் பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்வதையும் யெகோவாவின் நோக்கங்களில் அது வகிக்கும் பங்கை ஒப்புக்கொள்வதையும் வெளிப்படையாக அறிவிப்பதாக இருக்கிறது. யெகோவாவின் மக்கள் மத்தியில் அது கிரியை செய்வதைத் தடை செய்ய எதையும் செய்யாமல் ஆவியோடு நாம் ஒத்துழைப்போம் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. இவ்விதமாகவே, நாம் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை ஏற்றுக்கொண்டு அதோடு ஒத்துழைக்கிறோம். சபையில் மூப்பர் ஏற்பாட்டோடு நாம் ஒத்துழைக்கிறோம். (எபிரெயர் 13:7, 17; 1 பேதுரு 5:1-4) நாம் மாம்சபிரகாரமான ஞானத்திற்கேற்ப அல்ல, ஆவிக்குரிய ஞானத்திற்கேற்ப வாழ்ந்து, ஆவி நம்முடைய ஆள்தன்மையை உருபடுத்தி அதை அதிகமாக கிறிஸ்துவினுடையதைப் போல் ஆக்க நாம் அனுமதிக்கிறோம். (ரோமர் 13:14) இன்னும் பிரதிபலிக்கக்கூடிய இலட்சக்கணக்கானோரை “வா!” என்றழைப்பதில் நாம் ஆவியோடும் மணவாட்டியோடும் உள்ளப்பூர்வமாக சேர்ந்துக்கொள்ளுகிறோம்.
21 ‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே’ முழுக்காட்டப்படுவது என்னே பொறுப்புணர்ச்சி வாய்ந்த ஒரு காரியம்! என்றபோதிலும், என்னே ஆசீர்வாதங்கள் விளைவடையக்கூடும்! முழுக்காட்டப்படுகிறவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கட்டும். நாம் யெகோவாவுக்கு ஊழியஞ் செய்து, “ஆவியிலே அனலாயிரு”க்கையில் நாம் அனைவருமே தொடர்ந்து அந்த முழுக்காட்டுதலின் பொருளுக்கேற்ப வாழ்ந்து வருவோமாக.—ரோமர் 12:11. (w92 2/1)
பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு என்ன நினைவில் இருக்கிறது?
◻பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது பரிசுத்த ஆவி என்ன விதங்களில் செயல்பட்டுக்கொண்டிருந்தது?
◻ஆவியின் கனிகளை நாம் எவ்வாறு பிறப்பிக்கலாம்?
◻என்ன விதத்தில் மூப்பர்கள் பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்படுகிறார்கள்?
◻இயேசு எவ்விதமாக பரிசுத்த ஆவியின் மூலமாக சபையிலுள்ள பிரச்னைகளைக் கையாளுகிறார்?
◻ஆவி எவ்விதமாக பிரசங்க வேலையில் ஆழமாக உட்பட்டிருக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
பேதுரு பிரசங்கித்த முழுக்காட்டுதலும்கூட பிதா மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்திலே இருந்தது
[பக்கம் 17-ன் படம்]
நற்செய்தியின் பிரசங்கிப்பில் ஆவி ஆழமாக உட்பட்டிருக்கிறது