அதிகாரம் 13
“பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டது”
விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதம் ஆளும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது
அப்போஸ்தலர் 15:1-12-ன் அடிப்படையில்
1-3. (அ) என்ன பிரச்சினைகள் புதிதாக பிறந்த கிறிஸ்தவ சபையின் ஒற்றுமையை ஆட்டம்காண வைத்தன? (ஆ) இந்த பைபிள் பதிவை ஆழமாக யோசிப்பதன் மூலம் நாம் எப்படி நன்மை அடையலாம்?
பவுலும் பர்னபாவும் தங்களுடைய முதல் மிஷனரி பயணத்தை முடித்துக்கொண்டு சீரியாவிலிருக்கும் அந்தியோகியாவுக்கு மகிழ்ச்சியான இதயத்துடன் இப்போதுதான் திரும்பியிருக்கிறார்கள். “விசுவாசக் கதவை மற்ற தேசத்து மக்களுக்கு [யெகோவா] திறந்துவிட்டதை” பார்த்து அவர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள். (அப். 14:26, 27) இன்னும் சொல்லப்போனால், நல்ல செய்தி சொல்லப்படுவதன் காரணமாக அந்தியோகியா நகரமே ஆரவாரத்தில் மிதந்துகொண்டிருக்கிறது; மற்ற தேசத்தை சேர்ந்த “ஏராளமான மக்கள்” சபையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.—அப். 11:20-26.
2 இந்தச் சந்தோஷ செய்தி சரசரவென யூதேயாவுக்குப் பரவுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியைக் கேள்விப்பட்டு எல்லாரும் பூரிப்படைவதில்லை; அதற்கு பதிலாக, விருத்தசேதனத்தைப் பற்றிய விவகாரம் எரிமலையாக வெடிக்கிறது. யூத விசுவாசிகளுக்கும் யூதராக இல்லாத விசுவாசிகளுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும்... யூதராக இல்லாதவர்கள் மோசேயின் திருச்சட்டத்தை எப்படிப் பார்க்க வேண்டும்... என்ற விவாதத்தினால் பயங்கர கருத்துவேறுபாடு வெடிக்கிறது; கிறிஸ்தவ சபை துண்டு துண்டாகும் அளவுக்கு ஒரு சூழலும் ஏற்படுகிறது. இந்த விவாதம் எப்படித் தீர்க்கப்படும்?
3 அப்போஸ்தலர் புத்தகத்தில் இந்தப் பதிவை நாம் சிந்திக்கும்போது பல முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்வோம். நம் நாளில் பிரிவினை உண்டாக்கும் விவாதங்கள் வந்தால் ஞானமாக செயல்பட இவை நமக்கு உதவும்.
“விருத்தசேதனம் செய்யாவிட்டால்” (அப். 15:1)
4. என்ன தவறான கருத்துகளை விசுவாசிகள் சிலர் பரப்பிக் கொண்டிருந்தார்கள், இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
4 சீஷரான லூக்கா இப்படி எழுதினார்: “யூதேயாவிலிருந்து சில ஆட்கள் [அந்தியோகியாவுக்கு] வந்து, ‘மோசேயின் சட்டத்தின்படி விருத்தசேதனம் செய்யாவிட்டால் மீட்புப் பெற முடியாது’ என்று சகோதரர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.” (அப். 15:1) “யூதேயாவிலிருந்து” வந்த “சில ஆட்கள்” கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு பரிசேயர்களாக இருந்தார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், எதற்கெடுத்தாலும் சட்டம் பேசுகிற அந்த யூத மதப் பிரிவினர் அவர்கள்மேல் செல்வாக்கு செலுத்தியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. அதோடு, எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களின் சார்பாக பேசுவதாகக்கூட அவர்கள் உரிமை பாராட்டியிருந்திருக்கலாம். (அப். 15:23, 24) ஆனால், விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களை கடவுளுடைய கட்டளையின்படி கிறிஸ்தவ சபைக்குள் அப்போஸ்தலன் பேதுரு வரவேற்று சுமார் 13 வருஷங்கள் உருண்டோடிய பின்பும் யூதக் கிறிஸ்தவர்கள் ஏன் விருத்தசேதனத்தை இன்னும் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்?a—அப். 10:24-29, 44-48.
5, 6. (அ) விருத்தசேதனம் செய்வதில் யூதக் கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் உடும்புப் பிடியாக இருந்திருக்கலாம்? (ஆ) விருத்தசேதன ஒப்பந்தம் ஆபிரகாமுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பாகமாக இருந்ததா? விளக்கவும். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
5 அதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஒரு காரணம், ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை யெகோவாவே ஆரம்பித்துவைத்தார்; அவருடன் விசேஷ உறவுக்குள் வருவதற்கு அது ஒரு அடையாளமாக இருந்தது. விருத்தசேதனம் செய்யும் பழக்கம் திருச்சட்டத்தின் பாகமாக ஆவதற்கு முன்பு, முதன்முதலில் ஆபிரகாம் மற்றும் அவருடைய வீட்டில் இருந்தவர்களில் இருந்து ஆரம்பமானது.b (லேவி. 12:2, 3) திருச்சட்டத்தின்படி, சில விசேஷங்களில் கலந்துகொள்வதற்கு முன்பு, உதாரணத்துக்கு பஸ்கா உணவை சாப்பிடுவதற்கு முன்பு, வேறு தேசத்து ஜனங்களும்கூட விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியிருந்தது. (யாத். 12:43, 44, 48, 49) அதனால், யூதர்களைப் பொறுத்தவரை, விருத்தசேதனம் செய்யப்படாத ஒருவன் அசுத்தமானவன், அருவருப்பானவன்.—ஏசா. 52:1.
6 அதனால், புதிதாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்துக்கு இசைவாக தங்கள் மனதை மாற்றிக்கொள்ள யூத விசுவாசிகளுக்கு விசுவாசமும் மனத்தாழ்மையும் தேவைப்பட்டது. திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு பதிலாக புதிய ஒப்பந்தம் வந்துவிட்டதால் யூதராக பிறக்கும் ஒருவர் தானாகவே கடவுளுடைய மக்களில் ஒருவராக ஆகிவிட முடியாது. யூத சமுதாயத்தில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவர்கள்—யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே—கிறிஸ்துவை தாங்கள் ஏற்றுக்கொண்டதை வெளிப்படையாக காட்டுவதற்கும் விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களை சக விசுவாசிகளாக ஏற்றுக்கொள்வதற்கும் தைரியம் தேவைப்பட்டது.—எரே. 31:31-33; லூக். 22:20.
7. என்ன உண்மைகளை “சில ஆட்கள்” புரிந்துகொள்ளவில்லை?
7 ஆனால், கடவுளுடைய நெறிமுறைகள் மாறவில்லை. அதனால்தான், புதிய ஒப்பந்தத்தில் திருச்சட்டத்தின் சாராம்சம் பொதிந்திருந்தது. (மத். 22:36-40) உதாரணத்துக்கு, விருத்தசேதனத்தைப் பற்றிப் பிற்பாடு பவுல் இப்படி எழுதினார்: “உள்ளத்தில் யூதனாக இருக்கிறவன்தான் யூதன். அவனுடைய விருத்தசேதனம் கடவுளுடைய சக்தியால் இதயத்தில் செய்யப்படுகிறது, எழுதப்பட்ட சட்டத்தால் செய்யப்படுவதில்லை.” (ரோ. 2:29; உபா. 10:16) யூதேயாவிலிருந்து வந்திருந்த அந்த “சில ஆட்கள்” இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், விருத்தசேதன சட்டத்தைக் கடவுள் ஒருபோதும் ஒதுக்கித்தள்ளவில்லை என்று அடித்துப் பேசினார்கள். நியாயத்துக்கு அவர்கள் செவிசாய்ப்பார்களா?
“பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும்” (அப். 15:2)
8. விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதம் ஏன் எருசலேமிலிருந்த ஆளும் குழுவிடம் எடுத்துச் செல்லப்பட்டது?
8 லூக்கா தொடர்ந்து சொல்கிறார்: “அவர்களுக்கும் [அந்த ‘சில ஆட்களுக்கும்’] பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டது. இந்த விஷயத்தை பற்றிப் பேசுவதற்காக பவுலையும் பர்னபாவையும் வேறு சிலரையும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.”c (அப். 15:2) “கருத்துவேறுபாடும் விவாதமும்” என்ற வார்த்தைகள், அந்த இரண்டு சாராருமே தங்கள் கருத்துகளில் உறுதியாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்றன. அந்தியோகியா சபையால் அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியவில்லை. சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் காப்பதற்காக இந்தப் பிரச்சினையை “எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும்,” அதாவது அன்றைய ஆளும் குழுவிடம், எடுத்துச் செல்லலாம் என்று சபை ஞானமாகத் தீர்மானித்தது. அந்தியோகியா மூப்பர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9, 10. அந்தியோகியா சகோதரர்கள் மற்றும் பவுலும் பர்னபாவும் இன்று நமக்கு எப்படிச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள்?
9 இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு முக்கியமான பாடம்: கடவுளுடைய அமைப்பின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இதை யோசித்துப் பாருங்கள்: ஆளும் குழுவிலிருந்த அனைவருமே யூத பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதை அந்தியோகியா சகோதரர்கள் தெரிந்திருந்தார்கள். இருந்தாலும், விருத்தசேதனம் பற்றிய விவாதத்தை வேதவசனங்களுக்கு இசைவாக அந்தக் குழு தீர்த்து வைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஏன்? யெகோவா தன்னுடைய சக்தியின் மூலமும் கிறிஸ்தவ சபையின் தலைவரான இயேசுவின் மூலமும் எல்லாவற்றையும் வழிநடத்துவார் என்பதில் அந்தச் சபையில் இருந்தவர்கள் உறுதியாக இருந்தார்கள். (மத். 28:18, 20; எபே. 1:22, 23) இன்று பெரிய பிரச்சினைகள் வரும்போது, நாமும்கூட அந்தியோகியா கிறிஸ்தவர்களின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றலாம்! கடவுளுடைய அமைப்பையும் அதன் ஆளும் குழுவையும் உறுதியாக நம்பலாம்!
10 அதோடு, மனத்தாழ்மை, பொறுமை ஆகிய குணங்களையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு நினைப்பூட்டப்படுகிறது. மற்ற தேசத்து மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்க பவுலும் பர்னபாவும் கடவுளுடைய சக்தியினால் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், அந்தியோகியாவில் வைத்தே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று நினைத்து அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. (அப். 13:2, 3) மேலும், பவுல் பிற்பாடு இப்படி எழுதினார்: “அங்கே [எருசலேமுக்கு] போகும்படி எனக்கு வெளிப்படுத்தப்பட்டதால் போனேன்”—இந்த விஷயத்தில் அவருக்குத் தெய்வீக வழிநடத்துதல் இருந்தது என்பதை இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. (கலா. 2:2) இன்றும் பிரிவினை உண்டாக்கும் சிக்கலான கேள்விகள் எழும்போது, பவுலையும் பர்னபாவையும் போல் மனத்தாழ்மையையும் பொறுமையையும் காட்ட மூப்பர்கள் முயற்சி செய்கிறார்கள். சொந்த கருத்துகளை வலியுறுத்துவதற்குப் பதிலாக, யெகோவாவின் உதவியை நாடுகிறார்கள்; வேதவசனங்களையும் அடிமை தரும் ஆலோசனைகளையும் ஆராய்கிறார்கள்.—பிலி. 2:2, 3.
11, 12. யெகோவா ஒளி வீசும்வரை நாம் காத்திருப்பது ஏன் முக்கியம்?
11 சில சந்தர்ப்பங்களில், ஒரு விஷயத்தைப் பற்றி யெகோவா கூடுதலான ஒளியை வீசும்வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். மறந்துவிடாதீர்கள்: மற்ற தேசத்து மக்கள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமா என்ற விவாதத்தை யெகோவா தீர்த்துவைப்பதற்கு முன்பு, பவுல் காலத்தில் வாழ்ந்த சகோதரர்கள் சுமார் 13 வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதாவது கி.பி. 36-ல் கொர்நேலியு அபிஷேகம் செய்யப்பட்டது முதல், கி.பி. 49 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன் அவ்வளவு காலம்? நல்மனமுள்ள யூதர்கள் இப்பேர்ப்பட்ட பெரிய மாற்றத்துக்குத் தங்களுடைய மனதைப் பக்குவப்படுத்திக்கொள்வதற்காக யெகோவா ஒருவேளை அத்தனை காலம் அனுமதித்திருக்கலாம். சொல்லப்போனால், 1,900 வருஷங்களுக்கு முன்பு, அவர்களுடைய அன்புக்குரிய மூதாதை ஆபிரகாமோடு ஏற்படுத்திய ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என்றால், அது நிச்சயம் ஒரு சாதாரண விஷயமல்ல!—யோவா. 16:12.
12 அன்பும் பொறுமையும் உருவான நம் பரலோகத் தகப்பனிடமிருந்து ஆலோசனை பெறுவதும் அவரால் வடிவமைக்கப்படுவதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இதெல்லாம் எப்போதுமே நம்முடைய நன்மைக்குத்தான், நம்முடைய பிரயோஜனத்துக்குத்தான்! (ஏசா. 48:17, 18; 64:8) அதனால், ஒருநாளும் நம் சொந்தக் கருத்துகளை வலியுறுத்தாமல் இருக்க வேண்டும். அமைப்பில் ஏதாவது மாற்றம் ஏற்படும்போது அல்லது சில வசனங்களுக்குப் புது விளக்கம் கொடுக்கப்படும்போது அதற்கு எதிராக நடக்க கூடாது. (பிர. 7:8) இதுபோன்ற மனப்பான்மை உங்கள் மனதில் லேசாக எட்டிப்பார்த்தாலும், உடனடியாக அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் காணப்படும் காலத்துக்கேற்ற நியமங்களைத் தியானித்துப் பார்த்து ஏன் கடவுளிடம் ஜெபம் செய்யக்கூடாது?d
13. ஊழியத்தில் நாம் எப்படி யெகோவாவைப் போல் பொறுமையாக இருக்கலாம்?
13 காலம்காலமாக கடைப்பிடித்துவரும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் விட்டுவர கஷ்டப்படும் ஆட்களோடு நாம் பைபிள் படிக்கும்போது நமக்குப் பொறுமை தேவைப்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், மாணாக்கரின் இதயத்தில் கடவுளுடைய சக்தி செயல்படும்வரை சிலகாலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கலாம். (1 கொ. 3:6, 7) அதோடு, கடவுளிடம் இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்வதும் நல்லது. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏதாவது ஒரு விதத்தில், அதேசமயம் ஏற்ற வேளையில், கடவுள் நமக்குத் தெரியப்படுத்துவார்.—1 யோ. 5:14.
உற்சாகமூட்டும் அனுபவங்களை “விவரமாகச் சொன்னார்கள்” (அப். 15:3-5)
14, 15. பவுலையும் பர்னபாவையும் மற்ற பயண ஊழியர்களையும் அந்தியோகியா சபையினர் எப்படிக் கௌரவித்தார்கள், அவர்களுடைய வருகை சக விசுவாசிகளுக்கு எவ்வாறு ஆசீர்வாதமாக அமைந்தது?
14 லூக்காவின் விவரமான பதிவு தொடர்கிறது: “சபையில் இருந்தவர்கள் கொஞ்சத் தூரத்துக்கு அவர்கள் கூடவே போய் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் பெனிக்கே மற்றும் சமாரியா வழியாகப் போய், மற்ற தேசத்து மக்களும் கடவுளிடம் திரும்பியதைப் பற்றிச் சகோதரர்களுக்கு விவரமாகச் சொன்னார்கள், இதைக் கேட்டு அவர்கள் எல்லாரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.” (அப். 15:3) சபையார் கூடவே போய் பவுலையும் பர்னபாவையும் மற்ற பயண ஊழியர்களையும் வழியனுப்பி வைத்ததிலிருந்து என்ன தெரிகிறது? அந்தப் பயணிகள்மீது அவர்கள் கிறிஸ்தவ அன்பைக் காட்டினார்கள்... மதிப்புமரியாதை வைத்திருந்தார்கள்... கடவுளுடைய ஆசி அவர்களுக்கு இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள்... என்பது தெரிகிறது. இந்த விஷயத்திலும், அந்தியோகியா சகோதரர்கள் நமக்கு சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்! உங்கள் சகோதர சகோதரிகளுக்கு, ‘அதுவும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிப் பேசுவதிலும் கற்றுக்கொடுப்பதிலும் கடுமையாக உழைக்கிற மூப்பர்களுக்கு’ நீங்கள் மரியாதை காட்டுகிறீர்களா?—1 தீ. 5:17.
15 பெனிக்கே மற்றும் சமாரியா வழியாகப் பயணம் செய்த இந்தச் சகோதரர்கள் அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு, யூதராக இல்லாத மற்ற தேசத்து மக்கள் மத்தியில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி ‘விவரமாகச் சொன்னார்கள்;’ இப்படி அந்தக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தார்கள். ஸ்தேவான் தியாக மரணமடைந்தபின் இந்தப் பகுதிகளுக்குத் தப்பிவந்த யூத விசுவாசிகளும் அவர்கள் மத்தியில் இருந்திருப்பார்கள். அதுபோலவே, இன்றும் சீஷராக்கும் வேலையை யெகோவா ஆசீர்வதித்திருப்பதைப் பற்றிய அனுபவங்கள் நம் சகோதரர்களுக்கு, குறிப்பாக சோதனைகளை எதிர்ப்படும் நம் சகோதரர்களுக்கு, உற்சாகத்தின் ஊற்றாக இருக்கின்றன. கிறிஸ்தவ கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நம் பிரசுரங்கள் மற்றும் jw.org வெப்சைட்டில் வெளிவரும் வாழ்க்கை சரிதைகளிலும் நிறைய அனுபவங்களை நாம் வாசிக்கிறோம் அல்லது கேட்கிறோம். அவற்றிலிருந்து நீங்கள் முழுமையாகப் பயனடைகிறீர்களா?
16. விருத்தசேதனத்தைப் பற்றிய பிரச்சினை பூதாகரமாகி இருந்தது என்பதை எது காட்டுகிறது?
16 தெற்கு நோக்கி கிட்டத்தட்ட 550 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, அந்தியோகியாவிலிருந்து அனுப்பப்பட்ட குழுவினர் கடைசியில் தங்களுடைய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். லூக்கா எழுதினார்: “அவர்கள் எருசலேமுக்கு வந்துசேர்ந்தபோது, சபையில் இருந்தவர்களும் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அவர்களை அன்பாக வரவேற்றார்கள். அப்போது, தங்கள் மூலம் கடவுள் செய்த பல காரியங்களைப் பற்றி அவர்கள் விவரித்துச் சொன்னார்கள்.” (அப். 15:4) ஆனால், “பரிசேய மதப்பிரிவிலிருந்து விலகி இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த சிலர் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து, ‘மற்ற தேசத்து மக்களுக்குக் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும், மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி கட்டளையிடவும் வேண்டும்’ என்று சொன்னார்கள்.” (அப். 15:5) யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைப் பற்றிய பிரச்சினை பூதாகரமாகி இருந்தது; அதனால் அதைக் கட்டாயம் தீர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
“அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒன்றுகூடினார்கள்” (அப். 15:6-12)
17. எருசலேமிலிருந்த ஆளும் குழுவில் யாரெல்லாம் இருந்தார்கள், அவர்களில் ஏன் “மூப்பர்களும்” இருந்தார்கள்?
17 பிறருடைய ‘ஆலோசனைகளை கேட்கிறவர்களிடம் ஞானம் இருக்கும்’ என்று நீதிமொழிகள் 13:10 சொல்கிறது. அந்தப் பொன்னான அறிவுரைக்கு இசைவாக, “[விருத்தசேதன] விஷயத்தைப் பற்றிக் கலந்துபேச அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒன்றுகூடினார்கள்.” (அப். 15:6) இன்றைய ஆளும் குழுவைப் போல, இந்த “அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்” முழு கிறிஸ்தவ சபைக்கும் பிரதிநிதிகளாக செயல்பட்டார்கள். ஆனால், அப்போஸ்தலர்களுடன் ஏன் ‘மூப்பர்களும்’ சேர்ந்து சேவை செய்தார்கள்? அப்போஸ்தலன் யாக்கோபு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதை மறந்துவிடாதீர்கள். அதோடு, சில காலத்துக்கு அப்போஸ்தலன் பேதுரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மற்ற அப்போஸ்தலர்களுக்கும் இதுபோன்று ஏதாவது ஏற்பட்டிருக்கலாம், இல்லையா? அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தகுதிவாய்ந்த மற்ற சகோதரர்களும் இருந்ததால்தான் சபையை சரியான விதத்தில் மேற்பார்வை செய்ய முடிந்தது.
18, 19. பேதுரு சொன்ன வலிமைமிக்க வார்த்தைகள் என்ன, அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்க வேண்டும்?
18 லூக்கா தொடர்ந்து சொல்கிறார்: “வெகு நேரம் தீவிரமாகக் கலந்துபேசிய பிறகு பேதுரு எழுந்து, ‘சகோதரர்களே, மற்ற தேசத்து மக்கள் என் மூலம் நல்ல செய்தியைக் கேட்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காக உங்களில் ஒருவனான என்னைப் பல நாட்களுக்கு முன்பே கடவுள் தேர்ந்தெடுத்தார். இது உங்களுக்கே நன்றாகத் தெரியும். இதயத்தில் இருப்பதைத் தெரிந்திருக்கிற கடவுள் தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டதற்குச் சாட்சி கொடுத்தார். அவர்களுக்கும் நமக்கும் இடையே அவர் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை, அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக அவர்களுடைய இதயங்களைச் சுத்தமாக்கினார்’” என்றார். (அப். 15:7-9) ஏழாவது வசனத்தில் வரும் “தீவிரமாகக் கலந்துபேசிய” என்பதற்குரிய கிரேக்க வார்த்தைக்கு, “தேடுவது,” ‘கேள்வி கேட்பது’ போன்ற அர்த்தங்களும் இருப்பதாக ஒரு புத்தகம் சொல்கிறது. அப்படியென்றால், அந்தச் சகோதரர்கள் மத்தியில் நியாயமான கருத்துவேறுபாடு இருந்தது; அதை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தார்கள், அவ்வளவுதான்!
19 விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்தை சேர்ந்தவர்களில் முதலாவதாக இருந்த கொர்நேலியுவும் அவருடைய உறவினர்களும் கி.பி. 36-ல் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டபோது பேதுருவே அங்கே இருந்தார் என்பதை அவருடைய வலிமைமிக்க வார்த்தைகள் எல்லாருக்கும் ஞாபகப்படுத்தின. அதனால், யூதருக்கும் யூதர்களாக இல்லாதவர்களுக்கும் இடையே வித்தியாசம் பார்ப்பதை யெகோவாவே விட்டுவிட்டார் என்றால் ஏன் மனிதர்கள் மட்டும் பார்க்க வேண்டும்? சொல்லப்போனால், திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிவதால் அல்ல, இயேசுமீது விசுவாசம் வைப்பதாலேயே ஒருவரின் இதயம் தூய்மையாகும்.—கலா. 2:16.
20. விருத்தசேதனத்தைத் தூண்டியவர்கள் எந்த விதத்தில் ‘கடவுளை சோதித்தார்கள்?’
20 எந்தக் கேள்விக்கும் இடமளிக்காத கடவுளுடைய வார்த்தையையும் பரிசுத்த சக்தியையும் சாட்சியாக வைத்து பேசிய பேதுரு, “இப்படியிருக்கும்போது, நம்முடைய முன்னோர்களாலும் நம்மாலும் சுமக்க முடியாமலிருந்த நுகத்தடியைச் சீஷர்களுடைய கழுத்தில் சுமத்தி கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணையால் மீட்புப் பெறுவோமென்று நாம் நம்புவதைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள்” என்று சொல்லி முடித்தார். (அப். 15:10, 11) சொல்லப்போனால், விருத்தசேதனத்தைத் தூண்டியவர்கள் ‘கடவுளை சோதித்தார்கள்,’ அல்லது மற்றொரு மொழிபெயர்ப்பின்படி, ‘கடவுளுடைய பொறுமையைப் பரீட்சித்தார்கள்.’ யூதர்களாலேயே முழுமையாக கடைப்பிடிக்க முடியாத சட்டத்தை, அவர்களையே மரணத்தீர்ப்புக்கு ஆளாக்கிய சட்டத்தை, மற்ற தேசத்து மக்கள்மீது திணிக்கப் பார்த்தார்கள். (கலா. 3:10) நியாயமாகப் பார்த்தால், இயேசுவின் மூலம் காட்டப்பட்ட அளவற்ற கருணைக்கு அந்த யூதர்கள் நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்.
21. இந்த விவாதத்தில் பவுல் மற்றும் பர்னபாவின் பங்களிப்பு என்ன?
21 பேதுரு சொன்ன வார்த்தைகள் அங்கே கூடியிருந்தவர்களின் பொறியில் தட்டின. ஏனென்றால், அவர்கள் ‘எல்லாரும் அமைதியானார்கள்.’ அதன் பிறகு, “மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பல அடையாளங்களையும் அற்புதங்களையும் கடவுள் தங்கள் மூலம் செய்ததை” பவுலும் பர்னபாவும் விவரித்துச் சொன்னார்கள். (அப். 15:12) இப்போது, அப்போஸ்தலர்களும் மற்ற மூப்பர்களும் எல்லா ஆதாரங்களையும் யோசித்துப் பார்த்து, விருத்தசேதனத்தைப் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குப் பிரியமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் நிலையில் இருந்தார்கள்.
22-24. (அ) ஆரம்பகால ஆளும் குழுவின் முன்மாதிரியை இன்றைய ஆளும் குழு எப்படிப் பின்பற்றுகிறது? (ஆ) யெகோவா ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்துக்கு மூப்பர்கள் அனைவரும் எப்படி மரியாதை காட்டலாம்?
22 இன்றும்கூட, ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் கூடிவரும்போது கடவுளுடைய வார்த்தையின் வழிநடத்தலை தேடுகிறார்கள், அதோடு கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்கள். (சங். 119:105; மத். 7:7-11) இதற்காகத்தான், ஆளும் குழுவின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் முன்கூட்டியே அஜென்டா, அதாவது என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றி சொல்லப்படுகிறது; இதனால், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் யோசித்துப் பார்த்து கடவுளுடைய வழிநடத்தலுக்காக அவர்களால் ஜெபம் செய்ய முடிகிறது. (நீதி. 15:28) பிறகு, ஒன்றுகூடி வரும்போது அபிஷேகம் செய்யப்பட்ட இந்தச் சகோதரர்கள் தங்களுடைய கருத்துகளை தாராளமாகவும் கண்ணியமாகவும் தெரிவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும்போது பைபிள் வசனங்களை அடிக்கடி எடுத்துப் பார்க்கிறார்கள்.
23 அவர்களுடைய முன்மாதிரியை சபை மூப்பர்களும் பின்பற்ற வேண்டும். முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி மூப்பர்களின் கூட்டத்தில் கலந்துபேசிய பிறகும் அதைத் தீர்க்க முடியவில்லையென்றால், கிளை அலுவலகத்திடமோ வட்டாரக் கண்காணிகள் போன்ற அதன் பிரதிநிதிகளிடமோ மூப்பர் குழு கேட்கலாம். தேவைப்பட்டால், கிளை அலுவலகம் ஆளும் குழுவுக்கு இதைப் பற்றி எழுதலாம்.
24 தேவராஜ்ய ஏற்பாடுகளை மதிக்கிறவர்களையும் மனத்தாழ்மை... உண்மைத்தன்மை... பொறுமை... போன்ற குணங்களைக் காட்டுகிறவர்களையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார். அப்படிச் செய்யும்போது, சபையில் உண்மையான சமாதானத்தையும் ஆன்மீகச் செழிப்பையும் ஒற்றுமையையும் கடவுள் தருகிறார்; இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
a பக்கம் 103-ல், “யூத மதவாதிகளின் போதனைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b ஆபிரகாமுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், அதாவது இந்நாள்வரை அமலில் இருக்கிற அந்த ஒப்பந்தத்தில், விருத்தசேதன ஒப்பந்தம் உட்படவில்லை. ஆபிரகாமுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் கி.மு. 1943-ல் அமலுக்கு வந்தது; அதாவது ஆபிரகாம் (அப்போது அபிராம் என்று அழைக்கப்பட்டார்) கானானுக்குச் செல்லும் வழியில் யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்தபோது அமலுக்கு வந்தது. அப்போது அவருக்கு 75 வயது. அதற்குப் பிற்பாடு, கி.மு. 1919-ல் ஆபிரகாமுக்கு 99 வயதாக இருந்தபோது விருத்தசேதன ஒப்பந்தம் செய்யப்பட்டது.—ஆதி. 12:1-8; 17:1, 9-14; கலா. 3:17.
c கிரேக்க கிறிஸ்தவரான தீத்து என்பவர் ‘வேறு சிலரில்’ ஒருவராக இருந்ததாகத் தெரிகிறது; இவர் பிற்பாடு பவுலின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் தூதுவராகவும் ஆனார். (கலா. 2:1; தீத். 1:4) விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து நபர் ஒருவர் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவராக ஆக முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த முன்மாதிரி.—கலா. 2:3.
d பக்கம் 105-ல் “பைபிள்தான் யெகோவாவின் சாட்சிகளுடைய உயிர்மூச்சு” என்ற பெட்டியைப் பாருங்கள்.