யெகோவா நம்முடைய அரசர்!
“மனிதருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் கடவுள் அரசர் என்று நாம் அவருக்கே கீழ்ப்படியவேண்டும்.”—அப்போஸ்தலர் 5:29, NW.
1, 2. மனிதர் கேட்பது தெய்வீக சித்தத்துக்கு முரணாக அமையும்போது, யெகோவாவின் சாட்சிகள் அப்போஸ்தலரின் என்ன நிலைநிற்கையை எடுக்கின்றனர்?
யெகோவா தேவன் 12 மனிதரை ஒரு நீதிமன்றத்திற்கு முன் கொண்டுசெல்லப்படுவதற்கு அனுமதித்தார். அந்த ஆண்டு பொ.ச. 33, யூத மத ஆலோசனைச் சங்கம்தானே அந்த நீதிமன்றம். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள். கவனியுங்கள்! ‘நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம் பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டோம்,’ என்கிறார் அந்தப் பிரதான ஆசாரியர், ‘ஆனால் இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பினீர்கள்.’ அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், “மனிதருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் கடவுள் அரசர் என்று நாம் அவருக்கே கீழ்ப்படியவேண்டும்,” என்று அறிக்கை செய்தார்கள். (அப்போஸ்தலர் 5:27–29, NW) அதாவது, “யெகோவா எங்கள் அரசர்,” என்று அவர்கள் சொன்னார்கள்.
2 ஆம், யெகோவா தாமே இயேசுவை உண்மையில் பின்பற்றுகிறவர்களின் அரசர். இது அப்போஸ்தலர் நடபடிகள் என்ற பைபிள் புத்தகத்தில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் பொ.ச. 61-ல் “பிரியமான வைத்தியனாகிய லூக்கா”வால் எழுதப்பட்டது. (கொலோசெயர் 4:14) மனிதர் கேட்பது கடவுளுடைய சித்தத்திற்கு முரணாக இருக்கும்போது இன்று யெகோவாவின் மக்களும் அப்போஸ்தலரைப் போலவே தங்களுடைய பரலோக அரசருக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஆனால் நாம் அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேறு எதுவும் கற்றுக்கொள்ளக்கூடும்? (தனிப்பட்ட படிப்பில், தடித்த எழுத்துக்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பகுதியை நீங்கள் வாசிக்கும்படி நாங்கள் ஆலோசனைக் கூறுகிறோம்.)
இயேசு சாட்சிகளை அனுப்புகிறார்
3. இயேசுவைப் பின்பற்றியவர்கள் “பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்பட்ட” போது, அவர்களுடைய முக்கிய அக்கறை எதுவாக இருந்தது?
3 அப்போஸ்தலர்கள் கடவுளுக்காக உறுதியான ஒரு நிலைநிற்கையை எடுக்க முடியும், காரணம், அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பலப்படுத்தப்பட்டிருந்தனர். கிறிஸ்து ஒரு கழுமரத்தில் மரித்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (1:1–5) இயேசு “தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” மற்றும் மாம்ச உடல்களில் 40 நாட்களாக ராஜ்ய சத்தியங்களை அவர் கற்பித்துக்கொண்டிருந்தார். எருசலேமில் “பரிசுத்த ஆவி”யால் முழுக்காட்டப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும்படியாகவும் அவர் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கு இருப்பதுபோலவே பிரசங்கிப்பதுதான் அவர்களுடைய முக்கிய அக்கறைக்குரிய காரியமாக இருக்கும்.—லூக்கா 24:27, 49; யோவான் 20:19–21:24.
4. இயேசுவைப் பின்பற்றியவர்கள் மீது பரிசுத்த ஆவி இறங்கிய போது என்ன நடப்பதாயிருந்தது?
4 இன்னும் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டுதல் பெறாதவர்களாய், பூமிக்குரிய ஆட்சி ரோமரின் ஆதிக்கத்திற்கு முடிவைக் கொண்டுவந்துவிடும் என்ற தவறான எண்ணத்துடன், “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலருக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். (1:6–8) அதற்கு இயேசு இல்லை என்றார், ஏனென்றால் ‘காலங்களையும் வேளைகளையும் அறிகிறது அவர்களுக்குரியது அல்ல.’ ‘பரிசுத்த ஆவி அவர்களிடத்தில் வரும்போது,’ பூமியின்மேல் ராஜ்யத்தைக் குறித்து அல்ல, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தைக் குறித்து சாட்சி சொல்வதற்கு அது அவர்களைப் பெலப்படுத்தும். அவர்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், “பூமியின் கடையாந்தரமட்டும்” பிரசங்கிப்பார்கள். அந்த ஆவியின் உதவியால், யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கடைசி நாட்களில் அப்படிப்பட்ட வேலையைப் பூகோள அளவில் செய்துவருகின்றனர்.
5. இயேசு எப்படி தாம் பிரிந்துபோன விதமாகவே திரும்பிவருகிறவராயிருந்தார்?
5 இயேசு பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் அந்தச் சமயத்தில்தானே அந்த உலகளாவிய பிரசங்க வேலையைக் கொடுத்தார். பரலோகத்துக்கு ஏறிச்செல்லும் அந்தக் காரியம் சீஷர்களை விட்டு மேல் நோக்கிச் செல்வதுடன் ஆரம்பித்தது, பின்பு இயேசு தம்முடைய பரலோக அரசரின் பிரசன்னத்திற்கும் ஆவிப்பிரதேசத்தில் செயல்படுவதற்கும் பிரவேசித்தார். (1:9–11) அப்போஸ்தலரின் பார்வையிலிருந்து ஒரு மேகம் இயேசுவை மறைத்தப்பின்பு, அவர் தாம் தரித்துக்கொண்டிருந்த மாம்ச உடலை விட்டுவிட்டார். இரண்டு தேவ தூதர்கள் காட்சியளித்து, அவர் ‘அதேவிதமாக வருவார்’ என்று சொன்னார்கள். அது அப்படியே இருந்திருக்கிறது. அவர் காணக்கூடாதவராய்த் திரும்பிவந்ததை யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே கண்டுணர முடிகிறது போல, இயேசுவின் சீஷர்கள் மட்டுமே அவர் செல்வதைப் பார்த்தனர்.
யெகோவா ஒரு தெரிவைச் செய்கிறார்
6. யூதாஸ்காரியோத்துக்குப் பதிலாக ஒருவர் எப்படித் தெரிந்துகொள்ளப்பட்டார்?
6 சீக்கிரத்திலேயே அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிவிட்டார்கள். (1:12–26) ஒரு மேலறையில், (ஒருவேளை மாற்குவின் தாயார் மரியாள் வீட்டில்), 11 உண்மையுள்ள அப்போஸ்தலரும் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்களுடனும், அவருடைய மற்ற சீஷர்களுடனும், அவருடைய தாயார் மரியாளுடனும் ஜெபத்தில் தரித்திருந்தனர். (மாற்கு 6:3; யாக்கோபு 1:1) ஆனால் யூதாஸின் “கண்காணிப்பு ஸ்தானத்தை” யார் பெறுவது? (சங்கீதம் 109:8) இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸுக்குப் பதிலாக அப்போஸ்தலரின் எண்ணிக்கையாகிய 12-ஐப் பூர்த்திசெய்வதற்குக் கடவுள் ஒருவரைத் தெரிந்துகொண்ட சமயத்தில் ஏறக்குறைய 120 சீஷர்கள் அங்கிருந்தார்கள். அந்தத் தெரிவு, இயேசுவின் ஊழியத்தின்போது சீஷனாகவும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாகவும் இருந்த ஒருவனாக இருக்கவேண்டியதாயிருந்தது. உண்மைதான், அந்த மனிதன் யெகோவாவைத் தன்னுடைய அரசராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயுமிருந்தது. ஜெபத்திற்குப் பின்பு, மத்தியா மற்றும் யோசேப்பு பர்சபா ஆகிய இருவர் பேரிலும் சீட்டுப்போட்டார்கள். கடவுள் மத்தியா பெயருக்குச் சீட்டு விழும்படியாகச் செய்தார்.—நீதிமொழிகள் 16:33.
7. (எ) யூதாஸ் எப்படி “அநீதத்தின் கூலியினால் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான்”? (பி) யூதாஸ் எப்படி மரித்தான்?
7 நிச்சயமாகவே யூதாஸ்காரியோத்து யெகோவாவைத் தன்னுடைய அரசராக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன், அவன் கடவுளுடைய குமாரனை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக்கொடுத்தானே! யூதாஸ் அந்தப் பணத்தைப் பிரதான ஆசாரியனிடம் திருப்பிக்கொடுத்துவிட்டான், ஆனால் அந்தத் துரோகி “அநீதத்தின் கூலியினால் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான்,” என்று பேதுரு கூறினான். எப்படி? “இரத்தநிலம்” என்று அழைக்கப்பட்ட நிலத்தை வாங்குவதற்கு அவன் பணமும் காரணமும் தந்தான். அது இன்னோம் பள்ளத்தாக்கின் தெற்கே ஒரு சமநிலையான நிலப்பகுதியாக அடையாளங்காட்டப்படுகிறது. பரலோக அரசருடன் அவனுக்கிருந்த உறவு முற்றிலுமாக அற்றுப்போயிற்று, யூதாஸ் “நான்றுகொண்டு செத்தான்.” (மத்தேயு 27:3–10) ஒருவேளை அந்தக் கயிறு அல்லது மரத்தின் கிளை முறிந்திருக்கலாம், அவன் பாறைகளுக்குள் ‘தலைகீழாக விழுந்தான், அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.’ நம்மில் எவரும் போலிச் சகோதரராக இருக்க வேண்டாம்!
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர்!
8. இயேசுவின் சீஷர்கள் எப்பொழுது பரிசுத்த ஆவியால் முழுக்காட்டுதல் பெற்றார்கள்? என்ன விளைவுகளோடு?
8 வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுதலைப் பற்றியதென்ன? அது இயேசு பரலோகத்திற்கு ஏறிச்சென்று பத்து நாட்களுக்குப் பின்னர் பொ.ச. 33-ல் நிகழ்ந்தது. (2:1–4) அந்த முழுக்காட்டுதல் என்னே ஒரு கிளர்ச்சிமிகுந்த சம்பவமாயிருந்தது! அந்தக் காட்சியைக் கற்பனைசெய்து பாருங்கள். ஏறக்குறைய 120 பேர் மேலறையில் இருக்க, ‘பலத்தகாற்று அடிக்கிற முழக்கம்போல், வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.’ அது ஒரு காற்று அல்ல, ஆனால் ஏற்பட்ட முழக்கம் அதுபோல இருந்தது. “அக்கினிமயமான நாவுகளைப்போல” ஒரு நாவு ஒவ்வொரு சீஷர் மீதும் அப்போஸ்தலர் மீதும் அமர்ந்தது. “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு . . . வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.” அந்த முழுக்காட்டுதல் நிகழ்ந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியால் பிறப்பிக்கப்பட்டார்கள், அபிஷேகம்பண்ணப்பட்டார்கள், மற்றும் ஓர் ஆவிக்குரிய சுதந்தரத்துக்கு அடையாளமாய் முத்திரிக்கப்பட்டார்கள்.—யோவான் 3:3–5; 2 கொரிந்தியர் 1:21, 22; 1 யோவான் 2:20.
9. ஆவியால் நிரம்பிய சீஷர்கள் எதைக் குறித்துப் பேசினார்கள்?
9 இந்தச் சம்பவம் ‘வானத்தின்கீழிருக்கிற சகல தேசங்களிலிருந்தும்’ வந்து எருசலேமில் இருந்த யூதர்களையும் யூத மதத்திற்கு மதம் மாறியவர்களையும் பாதித்தது. (2:5–13) ‘நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷையிலே இவர்கள் பேச கேட்கிறோமே, இதெப்படி?’ என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். அவை (யூதேயாவுக்குக் கிழக்கிலுள்ள) மேதியா, (சிறிய ஆசியாவிலுள்ள) பிரிகியா, (ஐரோப்பாவிலுள்ள) ரோம் போன்ற இடங்களில் பேசப்படும் மொழிகளாக இருந்திருக்கலாம். அந்தச் சீஷர்கள் “தேவனுடைய மகத்துவங்களைப்” பல்வேறு மொழிகளில் பேசுகையில், அதைக் கேட்ட அநேகர் ஆச்சரியப்பட்டனர், ஆனால் அவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று பரியாசக்காரர் கூறினார்கள்.
பேதுரு ஓர் எழுப்புதலான சாட்சியைக் கொடுக்கிறான்
10. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே சம்பவம் எந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதாயிருந்தது? இதற்கு ஒரு நவீன நாளைய இணைவுப்பொருத்தம் உண்டா?
10 காலை ஒன்பது மணிக்கு மதுபானம் அருந்தி போதைக்கொள்வதற்கு அது வெகு சீக்கிரம் என்று காண்பிப்பதுடன் பேதுரு தன்னுடைய சாட்சியை ஆரம்பிக்கிறான். (2:14–21) மாறாக, இந்தச் சம்பவம், தம்முடைய மக்கள் மீது பரிசுத்த ஆவியைப் பொழியப்பண்ணுவார் என்ற கடவுளுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாயிருந்தது. “கடைசி நாட்கள்,” மற்றும் “அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்” என்ற வார்த்தைகளைக் கூட்டுவதன் மூலம் நம்முடைய காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிப்பதற்காகக் கடவுள் பேதுருவைத் தம்முடைய ஆவியினால் ஏவினார். (யோவேல் 2:28–32) தம்முடைய மகா நாளுக்கு முன்பு யெகோவா வானத்தில் அடையாளங்களையும் பூமியில் அடையாளங்களையும் கொடுப்பார், அப்பொழுது அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிறவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள். அதுபோன்று அபிஷேகம்பண்ணப்பட்டிருப்பவர்கள் மீது தம்முடைய ஆவியை ஊற்றியது அவர்கள் அதிக பெலத்துடனும் திறமையுடனும் “தீர்க்கதரிசனம்” சொல்வதைக் கூடியகாரியமாக்கியிருக்கிறது.
11. இயேசுவைக் குறித்ததில், யூதர்களாலும் கடவுளாலும் என்ன செய்யப்பட்டது?
11 பேதுரு அடுத்து மேசியாவை அடையாளங்காட்டுகிறான். (2:22–28) பலத்த செய்கைகளையும், அடையாளங்களையும் செய்வதற்கான வல்லமையைக் கொடுப்பதன் மூலம் இயேசு மேசியா என்பதற்குக் கடவுள் சான்றளித்தார். (எபிரெயர் 2:3, 4) ஆனால் யூதர்களோ அவரை “அக்கிரமக்காரருடைய கைகளினாலே,” கடவுளுடைய பிரமாணத்திற்குச் செவிசாய்க்காத ரோமரின் கைகளினாலே ஒரு மரத்தில் கட்டினார்கள். இயேசு “தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்”டார், இது தெய்வீகச் சித்தமாயிருந்தது. என்றாலும், கடவுள் இயேசுவை உயிர்த்தெழுப்பி, அவருடைய மானிட சரீரம் அழிவைக் காணாதிருக்கும் வகையில் அதை அவர் அப்புறப்படுத்தினார்.—சங்கீதம் 16:8–11.
12. தாவீது எதை முன்கண்டான்? இரட்சிப்பு எதன்பேரில் சார்ந்திருக்கிறது?
12 பேதுருவின் சாட்சி தொடர்ந்தது, மேசியானிய தீர்க்கதரிசனம் மேலுமாக வலியுறுத்தப்பட்டது. (2:29–36) தம்முடைய மிகப் பெரிய குமாரனின், மேசியாவாகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை தாவீது முன்காண்பவனாயிருந்தான் என்று அவன் சொன்னான். பரலோகத்தில் கடவுளுடைய வலதுபாரிசத்திற்கு உயர்த்தப்பட்ட ஒரு நிலையில் இயேசு தம்முடைய பிதாவிடமிருந்து பெற்ற பரிசுத்த ஆவியை ஊற்றினார். (சங்கீதம் 110:1) பேதுருவின் சாட்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் சீஷர்களின் தலைகள் மேல் அக்கினிமயமான நாவுகளையும் அவர்கள் பேசின அந்நிய மொழிகளையும் ‘கண்டார்கள் மற்றும் கேட்டார்கள்.’ இயேசுவை ஆண்டவராகவும் மேசியாவாகவும் ஏற்றுக்கொள்வதில் இரட்சிப்பு சார்ந்திருக்கிறது என்றும் அவன் எடுத்துக்காண்பித்தான்.—ரோமர் 10:9; பிலிப்பியர் 2:9–11.
யெகோவா அதிகரிப்பைத் தருகிறார்
13. (எ) சரியாக முழுக்காட்டப்படுவதற்கு, யூதர்களும் யூத மதத்துக்கு மதமாறியவர்களும் எதை ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிருந்தது? (பி) எத்தனை பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்? எருசலேமில் விளைவு என்னவாயிருந்தது?
13 பேதுருவின் வார்த்தைகள் எவ்வளவு திறம்பட்டவையாயிருந்தன! (2:37–42) மேசியாவுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைத்தீர்ப்புக்குத் தாங்கள் இணங்கியதற்காக அவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இருதயத்தில் குத்துண்டவர்களானார்கள். எனவே அவன் இப்படியாகத் துரிதப்படுத்தினான்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல், NW) பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” யூதர்களும் யூத மதத்துக்கு மதமாறியவர்களும் ஏற்கெனவே யெகோவாவைத் தங்களுடைய தேவனாகவும், அவருடைய ஆவி தங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தனர். இப்பொழுது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் (ஸ்தானத்தை அல்லது செயலை மதித்துணர்ந்து) முழுக்காட்டப்படுவதற்கு அவர்கள் மனந்திரும்பி, இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. (மத்தேயு 28:19, 20) அந்த யூதர்களுக்கும் யூத மதத்துக்கு மதமாறியவர்களுக்கும் சாட்சிகொடுப்பதன் மூலம், பேதுரு, விசுவாசமுள்ள யூதர்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்குரிய அறிவு மற்றும் வாய்ப்பு என்னும் இயேசு கொடுத்த முதல் ஆவிக்குரிய திறவுகோலைப் பயன்படுத்தினான். (மத்தேயு 16:19) அந்த ஒரு நாளில்தானே 3,000 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர்! அந்தச் சிறிய பிராந்தியமாகிய எருசலேமில் யெகோவாவின் அத்தனை அநேக சாட்சிகள் பிரசங்கிப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்!
14. ஏன் மற்றும் எந்த வகையில் விசுவாசிகள் “சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்”?
14 தூரத்திலிருந்து வந்திருந்தவர்கள் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பதற்கு வேண்டிய உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறைவுபடுவதைக் கண்டார்கள், ஆனால் தங்களுடைய புதிய விசுவாசத்தைக் குறித்து இன்னும் அதிகம் அறியவும் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கவும் ஆர்வமாயிருந்தார்கள். எனவே இயேசுவின் அந்த ஆரம்பக்கால சீஷர்கள், இன்று யெகோவாவின் சாட்சிகளைப் போலவே, அன்போடு ஒருவருக்கொருவர் உதவிசெய்தனர். (2:43–47) விசுவாசிகள் தற்காலிகமாக “சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.” சிலர் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள், அதில் கிடைத்த பணம் தேவையிலிருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இது சபை ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொண்டிருக்கச் செய்தது. ‘இரட்சிக்கப்படுகிறவர்களை யெகோவா அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டிருந்தார்.’
ஒரு சுகப்படுத்துதலும் அதன் விளைவுகளும்
15. பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்குள் பிரவேசித்தபோது என்ன சம்பவித்தது? ஆட்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
15 இயேசுவைப் பின்பற்றியவர்களை யெகோவா “அடையாளங்கள்” மூலம் ஆதரித்துவந்தார். (3:1–10) இப்படியாக, பேதுருவும் யோவானும் மாலை வேளைப் பலியோடு சம்பந்தப்பட்டிருந்த மணிநேரமாயிருந்த மாலை 3 மணிக்கு தேவாலயத்திற்குள் பிரவேசித்தபோது, அலங்கார வாசல் அருகில் பிறப்பிலிருந்து சப்பாணியாயிருந்த ஒரு மனிதன் “பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.” ‘வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை,’ என்றான் பேதுரு, ‘ஆனால் என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட.’ அந்த மனிதன் உடனே சுகமடைந்தான்! அவன் “நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு” தேவாலயத்திற்குள் பிரவேசிப்பதைக் கண்ட ஆட்கள் ‘ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.’ “முடவன் மானைப்போல் குதிப்பான்,” என்ற இந்த வார்த்தைகளைச் சிலர் ஒருவேளை நினைவுகூர்ந்திருப்பார்கள்.—ஏசாயா 35:6.
16. அப்போஸ்தலர்கள் எவ்வாறு ஒரு முடவனைக் குணப்படுத்த முடிந்தது?
16 ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள் சாலொமோன் மண்டபத்தில், தேவாலயத்தின் கிழக்கே அமைந்திருந்த ஒரு மூடிய கூடத்தில் கூடினார்கள். அந்த இடத்தில் பேதுரு ஒரு சாட்சி கொடுத்தான். (3:11–18) அந்த முடவனைக் குணப்படுத்துவதற்குக் கடவுள் தம்முடைய மகிமைப்படுத்தப்பட்ட ஊழியராகிய இயேசுவின் மூலம் அப்போஸ்தலருக்கு வல்லமை தந்தார் என்பதை அவன் எடுத்துக்காண்பித்தான். (ஏசாயா 52:13–53:12) யூதர்கள் “பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை” மறுதலித்தனர்; என்றாலும் யெகோவா அவரை உயிர்த்தெழுப்பினார். தாங்கள் மேசியாவைக் கொலை செய்கிறார்கள் என்பதை அந்த மக்களும் அவர்களுடைய ஆட்சியாளரும் அறியாதபோதிலும், இப்படியாகக் “கிறிஸ்து பாடுபடவேண்டும்” என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர் நிறைவேற்றினார்.—தானியேல் 9:26.
17. (எ) யூதர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிருந்தது? (பி) நம்முடைய நாளில் ‘கிறிஸ்துவை அனுப்பியதிலிருந்து’, என்ன நடந்திருக்கிறது?
17 மேசியாவை அந்தவிதத்தில் நடத்தியதற்காக யூதர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பேதுரு எடுத்துக்காண்பித்தான். (3:19–26) அவர்கள் “மனந்திரும்ப” வேண்டியதாயிருந்தது, அல்லது தங்களுடைய பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, “முற்றும் திரும்பி,” அல்லது மதம்மாறி, ஓர் எதிர் பாதையை மேற்கொள்ள வேண்டும். இயேசுவை மீட்கும்பொருளாக ஏற்று மேசியாவாக விசுவாசிப்பார்களானால், பாவமன்னிப்பைப் பெற்றவர்களுக்கு இருப்பது போன்று யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சிப் பெறுவார்கள். (ரோமர் 5:6–11) யூதர்கள் கடவுள் அவர்களுடைய முற்பிதாக்களிடம் செய்த உடன்படிக்கையின் புத்திரர்கள் என்று ஞாபகப்படுத்தப்பட்டனர். அவர் ஆபிரகாமிடம் இப்படியாகச் சொன்னார்: “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” எனவே மனந்திரும்பிய யூதரை மீட்டுக்கொள்வதற்காகக் கடவுள் முதலாவது தம்முடைய மேசியானிய ஊழியரை அனுப்பினார். அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், 1914-ல் பரலோக ராஜ்ய வல்லமையில் ‘கிறிஸ்து அனுப்பப்பட்டது’ முதல் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் புத்துயிரூட்டும் சத்தியங்களும் தேவராஜ்ய ஒழுங்கமைப்பும் திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிறது.—ஆதியாகமம் 12:3; 18:18; 22:18.
அவர்கள் நிறுத்தப்போவதில்லை!
18. யூதராயிருந்த “வீடுகட்டுகிறவர்களால்” எந்தக் “கல்” தள்ளப்பட்டது? யாரில் மட்டுமே இரட்சிப்பு இருக்கிறது?
18 பேதுருவும் யோவானும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அறிவித்ததால் பிரதான ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் கோபமடைந்து அவர்களைக் காவலில் வைத்தார்கள். (4:1–12) சதுசேயர் உயிர்த்தெழுதலில் நம்பவில்லை, ஆனால் மற்ற அநேகர் விசுவாசிகளானார்கள், அவர்களில் ஆண்கள்மட்டும் ஏறக்குறைய 5,000 பேராயிருந்தார்கள். எருசலேமின் உயர்நீதிமன்றத்துக்கு முன்னால் விசாரிக்கப்பட்டபோது, அந்த முடவன், அவர்கள் கழுமரத்தில் அறைந்த ஆனால் கடவுளால் உயிர்த்தெழுப்பப்பட்ட “நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே” குணமடைந்தான் என்று பேதுரு சொன்னான். யூதராயிருந்த “வீடுகட்டுகிறவர்களால்” தள்ளப்பட்ட இந்தக் “கல்” “மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.” (சங்கீதம் 118:22) “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை,” என்றும் பேதுரு சொன்னான்.
19. பிரசங்கிப்பதை நிறுத்தும்படி கட்டளை கொடுக்கப்பட்ட சமயத்தில் அப்போஸ்தலர்கள் எவ்விதம் பதிலளித்தார்கள்?
19 அவ்விதமான பேச்சை நிறுத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (4:13–22) குணப்படுத்தப்பட்ட மனிதன் அங்கே இருக்க, இந்த “வெளியரங்கமான அற்புதத்தை” மறுக்கமுடியவில்லை, என்றாலும் பேதுருவும் யோவானும் ‘இயேசுவின் நாமத்தில் எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாது,’ என்று கட்டளையிடப்பட்டார்கள். அவர்களுடைய பதில் என்னவாயிருந்தது? ‘நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமல் இருக்கமுடியாது.’ அவர்கள் யெகோவாவை அரசராக ஏற்று அவருக்கே கீழ்ப்படிந்தார்கள்!
ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன!
20. சீஷர்கள் எதற்காக ஜெபித்தார்கள்? என்ன பலன்களுடன்?
20 யெகோவாவின் சாட்சிகள் கூட்டங்களில் ஜெபிப்பதுபோல, விடுதலை செய்யப்பட்ட அப்போஸ்தலர்கள் நடந்ததை அறிவித்தபோது சீஷர்களும் ஜெபித்தனர். (4:23–31) ஆட்சியாளர்களாயிருந்த ஏரோது அந்திப்பாவும் பொந்தியு பிலாத்தும், புறஜாதிகளான ரோமருடனும் இஸ்ரவேல் மக்களுடனும் சேர்ந்து மேசியாவுக்கு எதிராகக் கூட்டங்கூடினார்கள். (சங்கீதம் 2:1, 2; லூக்கா 23:1–12) அவர்களுடைய ஜெபத்திற்குப் பதிலளிப்பவராய், யெகோவா சீஷர்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்பினார், எனவே அவர்கள் கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசினார்கள். துன்புறுத்தலை நிறுத்தும்படி அல்ல, ஆனால் அதன் மத்தியிலும் தைரியமாகப் பிரசங்கிக்க அநுக்கிரகஞ்செய்யும்படியே தங்களுடைய அரசரிடம் கேட்டார்கள்.
21. பர்னபா யார்? அவனுக்கு என்ன குணங்கள் இருந்தன?
21 விசுவாசிகள் சகலத்தையும் பொதுவாகக் கொண்டிருந்தனர், ஒருவர்கூட தேவையில் இல்லை. (4:32–37) அப்படி நன்கொடை அளித்தவர்களில் ஒருவன்தான் சீப்புருவைச் சேர்ந்த யோசே என்னும் லேவியன். அப்போஸ்தலர் அவனுக்கு பர்னபா என்னும் பெயர் கொடுத்தனர், அதன் அர்த்தம் “ஆறுதலின் மகன்”, அவன் அதிக உதவியாகவும் அனல்கொண்ட இருதயமுடையவனாகவும் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாகவே நாம் அனைவருமே அப்படிப்பட்டவர்களாயிருக்க விரும்புகிறோம்.—அப்போஸ்தலர் 11:22–24.
பொய்யர்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள்
22, 23. அனனியா மற்றும் சப்பீராளின் பாவம் என்ன? அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் எவ்விதம் நன்மையைப் பெறலாம்?
22 என்றபோதிலும் அனனியாவும், சப்பீராளும் யெகோவாவைத் தங்களுடைய அரசராக ஏற்றுக்கொள்வதிலிருந்து விலகினார்கள். (5:1–11) அவர்கள் ஒரு நிலத்தை விற்று, அதில் எல்லாவற்றையும் கொடுப்பதாகப் பாசாங்குசெய்து கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டனர். கடவுளுடைய ஆவி பேதுருவுக்கு அறியப்படுத்திய காரியத்தின்பேரில் அவர்களுடைய மாய்மாலத்தைப் பேதுரு பகுத்தறிய முடிந்தது. இது அவர்களுடைய மரணத்துக்கு வழிநடத்தியது. வஞ்சிப்பவர்களாயிருக்கும்படி சாத்தான் சோதிக்கும் ஆட்களுக்கு என்னே ஓர் எச்சரிப்பு!—நீதிமொழிகள் 3:32; 6:16–19.
23 இந்தச் சம்பவத்திற்குப் பின்பு, சீஷர்களைச் சேர்ந்துகொள்ளும் தைரியம், கெட்ட உள்நோக்கமுடைய எவருக்குமே இருக்கவில்லை. மற்றவர்கள் விசுவாசிகளானார்கள். (5:12–16) மேலும், பிணியாளர்களும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் கடவுளுடைய வல்லமையில் விசுவாசம் கொள்ள, ‘அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.’
மனிதருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் கடவுளுக்கே கீழ்ப்படியுங்கள்
24, 25. யூத மதத் தலைவர்கள் அப்போஸ்தலரை ஏன் துன்புறுத்தினர்? ஆனால் எல்லா யெகோவாவின் சாட்சிகளுக்கும் இந்த விசுவாசிகள் என்ன தராதரத்தை வைத்தார்கள்?
24 அனைத்து அப்போஸ்தலர்களையும் சிறையில் போடுவதன் மூலம் பிரதான ஆசாரியரும் சதுசேயரும் மகத்தான வளர்ச்சியைத் தடை செய்வதற்கு முயன்றனர். (5:17–25) ஆனால் அந்த இராத்திரியில் கடவுளுடைய தூதன் அவர்களை விடுதலைச்செய்தான். காலையில் அவர்கள் தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார்கள்! துன்புறுத்தல் யெகோவாவின் ஊழியர்களை நிறுத்திட முடியாது.
25 என்றபோதிலும், அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, அழுத்தம் கொடுக்கப்பட்டது. (5:26–42) ஆனால், போதிப்பதை நிறுத்தும்படிக் கட்டளையிடப்பட்ட போது அவர்கள் சொன்னார்கள்: “மனிதருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் கடவுள் அரசர் என்று நாம் அவருக்கே கீழ்ப்படியவேண்டும்.” இது இயேசுவின் சீஷர்களுக்கு ஒரு தராதரமாக அமைந்தது, இன்றும் யெகோவாவின் சாட்சிகளால் பின்பற்றப்பட்டுவருகிறது. நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் எச்சரித்தப்பின்பு, சேனைத் தலைவர்கள் அப்போஸ்தலரை அடித்து, பிரசங்கிப்பதை நிறுத்தக் கட்டளையிட்டு, அவர்களை விடுவித்தார்கள்.
26. அப்போஸ்தலரின் ஊழியம் இன்றைய யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படி ஒப்பாக இருக்கிறது?
26 இயேசுவின் நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டிருந்ததற்கு அப்போஸ்தலர் சந்தோஷப்பட்டார்கள். “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி . . . பிரசங்கித்தார்கள்.” ஆம், அவர்கள் வீடுவீடாகப் பிரசங்கிக்கும் ஊழியர்களாயிருந்தனர். அப்படியே கடவுளுக்குக் கீழ்ப்படிவதாலும், “யெகோவா எங்கள் அரசர்!” என்று சொல்வதாலும் கடவுளுடைய நவீன நாளைய சாட்சிகளும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார்கள். (w90 6/1)
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
◻ இயேசுவின் கடந்தகால மற்றும் தற்கால சீஷர்களால் என்ன வேலை நிறைவேற்றப்படவேண்டும்?
◻ பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று என்ன நடந்தது?
◻ இயேசு கொடுத்த அந்த முதல் ஆவிக்குரிய திறவுகோலைப் பேதுரு எப்பொழுது மற்றும் எவ்விதம் பயன்படுத்தினான்?
◻ அனனியா, சப்பீராளின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ பிரசங்கிப்பதை நிறுத்தும்படியாகக் கட்டளையிடப்பட்டபோது, யெகோவாவின் எல்லாச் சாட்சிகளுக்கும் அப்போஸ்தலர்கள் என்ன தராதரத்தை அமைத்தார்கள்?