பாடம் 38
உயிர் ஓர் அற்புதமான பரிசு—அதற்கு மதிப்புக் கொடுங்கள்
வாழ்க்கை ஒரு வரம். பிரச்சினைகள் இருந்தாலும், சந்தோஷம் தருகிற எத்தனையோ விஷயங்களும் இருக்கின்றன. உயிர் இருப்பதால்தான் அதையெல்லாம் நம்மால் அனுபவிக்க முடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான உயிருக்கு நாம் எப்படி மதிப்புக் காட்டலாம்? அதற்கு மதிப்புக் காட்டுவதற்கு ரொம்ப முக்கியமான காரணம் என்ன?
1. நாம் ஏன் உயிருக்கு மதிப்புக் காட்ட வேண்டும்?
உயிர் என்பது நம் அன்பான அப்பா யெகோவா தந்திருக்கும் ஒரு பரிசு. அதனால், நாம் அதற்கு மதிப்புக் காட்ட வேண்டும். யெகோவாதான் “உயிரின் ஊற்று,” அதாவது அவர்தான் உயிருள்ள எல்லாவற்றையும் படைத்தார். (சங்கீதம் 36:9) “அவர்தான் எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார்.” (அப்போஸ்தலர் 17:25, 28) நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் படைத்திருக்கிறார். அதுவும், நம் வாழ்க்கையை ரசித்து வாழும்படி அதையெல்லாம் படைத்திருக்கிறார்.—அப்போஸ்தலர் 14:17-ஐ வாசியுங்கள்.
2. உயிருக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
நீங்கள் கருவில் உருவான சமயத்திலிருந்தே யெகோவா உங்கள்மேல் அக்கறையாக இருந்திருக்கிறார். “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன” என்று யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு தாவீது சொன்னார். (சங்கீதம் 139:16) யெகோவா உங்கள் உயிரை உயர்வாக மதிக்கிறார். (மத்தேயு 10:29-31-ஐ வாசியுங்கள்.) யாராவது வேண்டுமென்றே கொலை செய்தாலோ தற்கொலைa செய்துகொண்டாலோ யெகோவா ரொம்ப வேதனைப்படுவார். (யாத்திராகமம் 20:13) அதுமட்டுமல்ல, நம் உயிருக்கோ மற்றவர்களுடைய உயிருக்கோ ஆபத்து வரும்படி நாம் கவனக்குறைவாக நடந்துகொண்டால்கூட அவர் மனம் கஷ்டப்படும். அதனால் நம் உயிரையும் சரி, மற்றவர்களுடைய உயிரையும் சரி, கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த அற்புதமான பரிசை மதிக்கிறோம் என்று காட்ட முடியும்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
உயிர் என்ற அற்புதமான பரிசுக்கு நீங்கள் எப்படியெல்லாம் மதிப்புக் காட்டலாம் என்று பார்க்கலாம்.
3. உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்
யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்யும்போது, நம் முழு வாழ்க்கையையும் அவருடைய சேவைக்காகப் பயன்படுத்துவதாக வாக்குக் கொடுக்கிறோம். ஒரு விதத்தில், நம் உடலையே அவருக்குப் பலியாக அர்ப்பணிக்கிறோம். அதனால், அதை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். ரோமர் 12:1, 2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
உடல்நலத்தை நீங்கள் ஏன் கவனித்துக்கொள்ள வேண்டும்?
எப்படியெல்லாம் உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளலாம்?
4. முன்னெச்சரிக்கை முக்கியம்
நமக்கோ மற்றவர்களுக்கோ காயம் ஏற்படுத்தும்படி அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்படி நாம் எதையும் செய்யக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. நீங்கள் எப்படிப் பாதுகாப்பாக நடந்துகொள்ளலாம் என்று தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.
நீதிமொழிகள் 22:3-ஐப் படித்துவிட்டு, நீங்களும் மற்றவர்களும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கலந்துபேசுங்கள் . . .
வீட்டில்.
வேலை செய்யும் இடத்தில்.
விளையாடும்போது.
வாகனத்தை ஓட்டும்போது அல்லது அதில் பயணம் செய்யும்போது.
5. கருவில் இருக்கும் உயிருக்கும் மதிப்புக் கொடுங்கள்
தாயின் வயிற்றில் கரு உருவாவதையும் வளருவதையும் யெகோவா ஆர்வமாகக் கவனிப்பதாக தாவீது ஒரு கவிதையில் வர்ணித்தார். சங்கீதம் 139:13-17-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவின் பார்வையில் ஒரு குழந்தையின் உயிர் எப்போது உருவாகிறது? கருவாக உருவாகும்போதா, பிறக்கும்போதா?
இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள் தாயை மட்டுமல்ல, தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதுகாத்தன. யாத்திராகமம் 21:22, 23-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் சாவுக்கு தெரியாத்தனமாகக் காரணமாகிவிட்ட ஒருவரைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார்?
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையைத் தெரிந்தே கொலை செய்யும் ஒருவரைப் பற்றி அவர் என்ன நினைப்பார்?b
யெகோவா அப்படி நினைப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?
உயிருக்கு மதிப்புக் காட்டும் ஒரு பெண்கூட, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, கருக்கலைப்பு செய்வதுதான் ஒரே வழி என்று நினைக்கலாம். ஏசாயா 41:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கருக்கலைப்பு செய்யும்படி யாராவது வற்புறுத்தும்போது ஒரு பெண் யாரிடம் உதவி கேட்க வேண்டும்? ஏன்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கருக்கலைப்பு செய்றதும் செய்யாததும் அவங்கவங்க இஷ்டம்.”
தாயின் உயிரை மட்டுமல்ல, அவளுடைய வயிற்றிலுள்ள குழந்தையின் உயிரையும் யெகோவா மதிக்கிறார் என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?
சுருக்கம்
உயிர் என்பது யெகோவா தந்த பரிசு. அதனால், நம்முடைய உயிரையும் சரி, மற்றவர்களுடைய உயிரையும் சரி, நாம் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்.
ஞாபகம் வருகிறதா?
நம் உயிரை யெகோவா ஏன் உயர்வாக மதிக்கிறார்?
யாராவது வேண்டுமென்றே கொலை செய்தாலோ தற்கொலை செய்தாலோ யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?
உயிர் என்ற பரிசை நீங்கள் ஏன் மதிக்கிறீர்கள்?
அலசிப் பாருங்கள்
உயிர் என்ற அற்புதமான பரிசைத் தந்ததற்காக நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றி காட்டலாம்?
கருக்கலைப்பு செய்த ஒரு பெண்ணை யெகோவா மன்னிப்பாரா என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“கருக்கலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)
உயிரைக் கடவுள் எந்தளவுக்கு மதிக்கிறார் என்று தெரிந்துகொள்வது, உயிருக்கு ஆபத்தான பொழுதுபோக்குகளைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவும் என்று பாருங்கள்.
“‘சாகச விளையாட்டுக்கள்’ சாக துணியலாமா?” (விழித்தெழு!, நவம்பர் 8, 2000)
தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எப்படி உதவி செய்யும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எனக்கு உதவுமா?” (ஆன்லைன் கட்டுரை)
a மனம் உடைந்தவர்கள்மேல் யெகோவா அக்கறையாக இருக்கிறார். (சங்கீதம் 34:18) வேதனை தாங்காமல் தற்கொலை செய்ய நினைக்கிறவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்கிறார். அவர்களுக்கு உதவ விரும்புகிறார். அவருடைய உதவியோடு எப்படித் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடலாம் என்று தெரிந்துகொள்ள, “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்: “தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எனக்கு உதவுமா?”
b ஏற்கெனவே கருக்கலைப்பு செய்தவர்கள் குற்ற உணர்ச்சியால் தவிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், யெகோவா அவர்களை மன்னிப்பார். இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள இந்தப் பாடத்தில் “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்: “கருக்கலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?”