அதிகாரம் 18
கடவுளை ‘தேடி . . . கண்டுபிடிக்க வேண்டும்’
மற்றவர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களை பவுல் முதலில் சொல்கிறார், பேசும் விதத்தை அவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்கிறார்
அப்போஸ்தலர் 17:16-34-ன் அடிப்படையில்
1-3. (அ) அத்தேனே நகரத்தில் பவுல் எதைப் பார்த்துக் கொதித்துப்போனார்? (ஆ) பவுலுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்வோம்?
பவுல் கிரேக்கு தேசத்திலுள்ள அத்தேனே நகரத்தில் இருக்கிறார். இது கல்விக்குப் பேர்போன இடம். தத்துவஞானிகளான சாக்ரட்டீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் வாழ்ந்த இடம். அத்தேனே நகரவாசிகள் அதிக மதப்பற்றுள்ளவர்கள். அவர்கள் கணக்குவழக்கில்லாத தெய்வங்களை வணங்கிவருகிறார்கள்; கோவில்கள், பொதுச் சதுக்கங்கள், தெருக்கள் என்று திரும்புகிற திசையெல்லாம் அந்த நகரத்தில் சிலைகளே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்து பவுல் கொதித்துப்போகிறார். உண்மைக் கடவுளான யெகோவா சிலைகளை அருவருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். (யாத். 20:4, 5) அதனால், அவரும் சிலைகளை அருவருக்கிறார்!
2 முக்கியமாக, சந்தையில் பார்க்கிற காட்சி அவரை அதிர்ச்சியில் தள்ளுகிறது. அதன் வடமேற்கு மூலையில், முக்கிய வாசலுக்கு பக்கத்தில், ஹெர்மஸ் தெய்வத்தின் ஆண்குறி சிலைகள் ஏராளமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சந்தை கோவில்மயமாகக் காட்சி அளிக்கிறது. சிலை வணக்கத்தில் ஊறிப்போயிருக்கிற இந்த மக்களிடம் பக்திவைராக்கியமுள்ள அப்போஸ்தலன் பவுல் எப்படிப் பிரசங்கிப்பார்? தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களை அவரால் பேச முடியுமா? உண்மைக் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க அவர்களில் யாருக்காவது உதவ முடியுமா?
3 அத்தேனே நகரத்தின் மேதைகளிடம் பவுல் கொடுத்த சொற்பொழிவு அப்போஸ்தலர் 17:22-31 வசனங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திறமையாக, சாதுரியமாக, விவேகமாகப் பேசுவதற்கு இந்தச் சொற்பொழிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! நாம் எப்படி மற்றவர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களை முதலில் பேசி அவர்களை யோசிக்க வைக்கலாம் என்பதை பவுலுடைய உதாரணத்திலிருந்து அதிகம் கற்றுக்கொள்வோம்.
“சந்தையில்” கற்றுக்கொடுத்தார் (அப். 17:16-21)
4, 5. அத்தேனே நகரத்தில் பவுல் எங்கே பிரசங்கித்தார், சந்தையில் இருந்த மக்களிடம் சாட்சி கொடுப்பது அவருக்கு ஏன் சவாலாக இருந்தது?
4 சுமார் கி.பி. 50-ல் தன்னுடைய இரண்டாம் மிஷனரி பயணத்தின்போது பவுல் அத்தேனே நகரத்துக்குப் போனார்.a சீலாவும் தீமோத்தேயுவும் பெரோயாவிலிருந்து வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது பவுல் தன் வழக்கப்படி ‘ஜெபக்கூடத்தில் யூதர்களிடம் . . . நியாயங்காட்டிப் பேசினார்.’ அதோடு, யூதரல்லாதவர்களையும் சந்தித்துப் பேச ‘சந்தைக்கு’ போனார். (அப். 17:17) அக்ரோபோலிஸ் குன்றின் வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த இந்தச் சந்தை கிட்டத்தட்ட 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. இது வெறுமனே வியாபார ஸ்தலமாக மட்டுமல்ல, நகரத்தின் பொதுச் சதுக்கமாகவும் இருந்தது. இந்தச் சந்தை “பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக... நகரத்தின் மையமாக... இருந்தது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. இங்கே கூடிவந்து அறிவுப்பூர்வமாகப் பேசுவதென்றால் அத்தேனே நகரத்து மக்களுக்கு அவ்வளவு இஷ்டம்!
5 சந்தையில் இருந்த மக்களிடம் சாட்சி கொடுப்பது பவுலுக்குச் சவாலாக இருந்தது. ஏனென்றால், அவர் அங்கே எப்பிக்கூரர்களையும் ஸ்தோயிக்கர்களையும் சந்தித்தார்.b இவர்களுடைய நம்பிக்கைகள் எதிரும் புதிருமாக இருந்தன. உயிர் தற்செயலாகத் தோன்றியது என்று எப்பிக்கூரர்கள் நம்பினார்கள். வாழ்க்கையைப் பற்றிய அவர்கள் கண்ணோட்டம் இப்படி விவரிக்கப்பட்டது: “கடவுள் பயம் தேவையில்லை; மரண பயம் தேவையில்லை; நன்மையை அடைய முடியும்; தீமையைச் சகிக்க முடியும்.” ஸ்தோயிக்கர்கள், எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அலசிப் பார்க்க விரும்பினார்கள்; கடவுளை ஒரு நபராக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவின் சீஷர்கள் கற்றுக்கொடுத்து வந்த உயிர்த்தெழுதலை இந்த இரண்டு பிரிவினரும் நம்பவில்லை. அப்படியென்றால், பவுல் கற்றுக்கொடுத்த போதனைகளுக்கும், அதாவது உண்மைக் கிறிஸ்தவத்தின் உயர்ந்த போதனைகளுக்கும், இவர்களுடைய தத்துவங்களுக்கும் கொஞ்சங்கூடச் சம்பந்தம் இருக்கவில்லை.
6, 7. பவுலின் போதனைகளை கிரேக்க மேதைகள் சிலர் எப்படிப் பார்த்தார்கள், இன்று நம்மையும் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
6 பவுலின் போதனைகளை அந்தக் கிரேக்க மேதைகள் எப்படிப் பார்த்தார்கள்? சிலர் அவரை “உளறுவாயன்” என்று அழைத்தார்கள். இதற்கான கிரேக்க வார்த்தையை நேரடியாக மொழிபெயர்த்தால், “விதைகளைப் பொறுக்குகிறவன்” என்ற அர்த்தம் தரும். (அப். 17:18) இந்த கிரேக்க வார்த்தையைப் பற்றி ஒரு அறிஞர் சொல்கிறார்: “அங்குமிங்கும் பறந்து தானியங்களைப் பொறுக்குகிற ஒரு சிறு பறவையைக் குறிப்பதற்காக ஆரம்பத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. பின்பு, சந்தையில் சிந்திக்கிடந்த உணவுப் பொருள்களையும் தூக்கியெறியப்பட்ட ஓட்டை உடைசல்களையும் பொறுக்குகிற மனிதர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதன்பின், சம்பந்தமில்லாத விஷயங்களைப் பொறுக்கியெடுக்கும் நபரை, அதுவும் அவற்றைக் கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாத நபரைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.” அப்படியென்றால், ‘பவுல் ஒரு முட்டாள், யாரோ சொல்வதைக் கேட்டு இங்கு வந்து அப்படியே ஒப்பிக்கிறான்’ என்று அந்த மேதைகள் மறைமுகமாகச் சொன்னார்கள். இருந்தாலும், நாம் பார்க்கப்போகிறபடி, இப்படிப்பட்ட கேலி கிண்டலுக்கெல்லாம் பவுல் பயப்படவில்லை.
7 இன்று யெகோவாவின் சாட்சிகளான நம்மையும் சிலர் கேலி கிண்டல் செய்கிறார்கள்; நம்முடைய பைபிள் நம்பிக்கைகளுக்காக நமக்குப் பட்டப்பெயர் வைக்கிறார்கள். உதாரணத்துக்கு, பரிணாமம் உண்மை என்று கற்றுக்கொடுக்கிற சில ஆசிரியர்கள், ‘நீங்கள் புத்திசாலிகள் என்றால் பரிணாமத்தை நம்புவீர்கள்’ என்று சொல்கிறார்கள். அப்படியானால், அதை நம்பாதவர்களெல்லாம் முட்டாள்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். அதனால், படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கு பைபிளிலிருந்தும் இயற்கையிலிருந்தும் நாம் அத்தாட்சிகள் கொடுக்கும்போது, ‘உளறுகிறவர்கள்’ என்று நம்மை முத்திரை குத்திவிடுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பயப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, பூமியில் இருக்கிற உயிர்கள் எல்லாம் ஞானமான படைப்பாளரான யெகோவா தேவனின் கைவண்ணமே என்பதை நம்பிக்கையோடு சொல்கிறோம்.—வெளி. 4:11.
8. (அ) பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னும் சிலர் என்ன சொன்னார்கள்? (ஆ) அரியோபாகுவுக்கு பவுல் அழைத்து செல்லப்பட்டதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? (பக்கம் 142-ல் உள்ள அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
8 சந்தையில் பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னும் சிலர், “இவன் அன்னிய தெய்வங்களைப் பற்றி அறிவிக்கிறவன்போல் தெரிகிறது” என்று சொன்னார்கள். (அப். 17:18) உண்மையில் பவுல் புதிய தெய்வங்களைப் பற்றி அவர்களுக்கு சொன்னாரா? இல்லை. அது பயங்கரமான குற்றச்சாட்டாக இருந்தது; ஏனென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீஸ் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, அதற்காக அவர் விசாரணை செய்யப்பட்டு மரண தண்டனையை அனுபவித்தார். அதனால், பவுல் அரியோபாகுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி... அதுவும் அத்தேனே நகர மக்களுக்கு விசித்திரமாகத் தெரிந்த தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி... விளக்கும்படி கேட்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.c வேதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத நபர்களிடம் பவுல் தன் நம்பிக்கைகளைப் பற்றி எப்படி விளக்கினார்?
“அத்தேனே நகர மக்களே...” (அப். 17:22, 23)
9-11. (அ) அத்தேனே நகரத்து மக்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களைப் பற்றி பவுல் எப்படி பேச ஆரம்பித்தார்? (ஆ) ஊழியத்தில் நாம் எப்படி பவுலின் உதாரணத்தைப் பின்பற்றலாம்?
9 திரும்பிய பக்கமெல்லாம் சிலைகளைப் பார்த்து பவுல் கொதித்துப்போனார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆனாலும், சிலைகளை வணங்கியவர்களிடம் அவர் படபடவெனப் பொரிந்து தள்ளாமல், தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு நிதானமாகப் பேசினார். அவர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களை முதலில் சொல்லி, மிகுந்த சாதுரியத்தோடு அவர்கள் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தார். “அத்தேனே நகர மக்களே, மற்ற மக்களைவிட நீங்கள் எல்லா விதத்திலும் தெய்வங்கள்மேல் பயபக்தி உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன்” என்று சொல்லி தன் பேச்சை ஆரம்பித்தார். (அப். 17:22) வேறு வார்த்தைகளில், ‘நீங்கள் எந்தளவு மதப்பற்றுள்ளவர் என்பதை என்னால் பார்க்க முடிகிறது’ என்று சொன்னார். பவுல் இப்படி அவர்களைப் பாராட்டியது ஞானமான ஒரு விஷயம். பொய்மத நம்பிக்கைகளின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் மத்தியிலே ஆர்வமுள்ள சிலர் இருப்பார்கள் என்பதை அவர் தெரிந்திருந்தார். சொல்லப்போனால், தானும்கூட ஒரு காலத்தில் ‘அறியாமையின் காரணமாக விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதை’ அறிந்திருந்தார்.—1 தீ. 1:13.
10 அத்தேனே நகர மக்கள் ஒத்துக்கொள்கிற இன்னொரு விஷயத்தையும் பவுல் சொன்னார். அவர்களுடைய மதப்பற்றுக்கு அத்தாட்சியாக, “அறியப்படாத கடவுளுக்கு” என்று பொறிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தைப் பார்த்ததாக சொன்னார். ஒரு புத்தகம் இப்படி சொல்கிறது: “‘அறியப்படாத கடவுளுக்கு’ பலிபீடங்களை அர்ப்பணிப்பது கிரேக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழக்கமாக இருந்தது; தாங்கள் ஏதோவொரு கடவுளை வணங்காமல் விட்டிருக்கலாம் என்றும், அந்தக் கடவுள் தங்கள்மேல் கோபப்படலாம் என்றும் நினைத்துப் பயந்ததே அதற்குக் காரணம்.” அதனால், அத்தேனே நகர மக்கள் அப்படிப்பட்ட பலிபீடத்தை அமைத்ததன் மூலம், தங்களுக்குத் தெரியாத ஒரு கடவுள் இருக்கலாம் என்பதை ஒத்துக்கொண்டார்கள். பவுல் இந்தக் குறிப்பை வைத்தே அவர்களுடைய கவனத்தை நல்ல செய்தி பக்கம் திருப்பினார். “நீங்கள் அறியாமல் வணங்குகிற அந்தக் கடவுளைப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று விளக்கினார். (அப். 17:23) பவுல் இப்படி சாதுரியமாக, அதே சமயத்தில் வலிமையாக நியாயங்காட்டிப் பேசினார். சிலர் குற்றம்சாட்டியபடி அவர் ஏதோவொரு புதிய தெய்வத்தைப் பற்றி அறிவிக்கவில்லை. அவர்கள் அறியாத கடவுளை, அதாவது உண்மைக் கடவுளை, பற்றியே அறிவித்தார்.
11 ஊழியத்தில் நாம் எப்படி பவுலின் உதாரணத்தைப் பின்பற்றலாம்? நாம் கூர்ந்து கவனிப்பவர்களாக இருந்தால், வீட்டுக்காரர் மதப்பற்றுள்ளவரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்; ஒருவேளை, அவர் அணிந்திருக்கிற பொருள்களை அல்லது வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ வைத்திருக்கிற பொருள்களைக் கவனித்தால் அதைத் தெரிந்துகொள்ளலாம். அவர் மதப்பற்றுள்ளவர் என்றால், ‘நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரென நினைக்கிறேன். உங்களைப் போன்ற பக்தியுள்ள ஒருவரைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்’ என்று சொல்லலாம். இப்படி அந்த நபரின் பக்தியை சாதுரியமாக பாராட்டுவது, இரண்டு பேரும் தொடர்ந்து சுமுகமாகப் பேசுவதற்குக் கைகொடுக்கும். மற்றவர்களுடைய மத நம்பிக்கைகளை வைத்து முன்கூட்டியே அவர்களைப் பற்றித் தவறான முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. பொய்மத போதனைகளை மனதார நம்பிக்கொண்டிருந்த எத்தனையோ பேர் இப்போது நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள், இல்லையா?
கடவுள் ‘நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ (அப். 17:24-28)
12. பவுல் எப்படி அத்தேனே நகர மக்களுக்கு ஏற்றபடி பேசும் முறைகளை பல விதங்களில் மாற்றிக்கொண்டார்?
12 மற்றவர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களை பவுல் பேச ஆரம்பித்திருந்தாலும் தொடர்ந்து சுமுகமான விதத்தில் பேசினாரா? கூடியிருந்தவர்கள் கிரேக்கத் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருந்தார்கள், ஆனால் வேதவசனங்களைக் கடுகளவுகூட அறியாதிருந்தார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது; அதனால், பேசும் முறையை அவர்களுக்கு ஏற்றபடி பல விதங்களில் மாற்றிக்கொண்டார். முதலாவதாக, வசனங்களிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டாமல் பைபிள் போதனைகளை விளக்கினார். இரண்டாவதாக, “நம்,” “நாம்” என்று சொன்னதன் மூலம் தானும் அவர்களில் ஒருவன் என்ற உணர்வை ஏற்படுத்தினார். மூன்றாவதாக, கிரேக்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி, தான் குறிப்பிட்ட சில விஷயங்கள் அவர்களுடைய புத்தகங்களிலேயே இருக்கிறது என்று காட்டினார். பவுலுடைய அந்த வலிமையான பேச்சை இப்போது அலசிப் பார்க்கலாம். அத்தேனே நகர மக்கள் அறியாமல் இருந்த அந்தக் கடவுளைப் பற்றி அவர் என்ன முக்கியமான உண்மைகளைச் சொன்னார் என்று பார்க்கலாம்.
13. இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று பவுல் விளக்கினார், அவர் சொல்லவந்த விஷயம் என்ன?
13 கடவுளே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார். “உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுள் வானத்துக்கும் பூமிக்கும் எஜமானாக இருப்பதால், மனுஷர்களால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை” என்று பவுல் சொன்னார்.d (அப். 17:24) இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றவில்லை. உண்மைக் கடவுளே எல்லாவற்றையும் படைத்தார். (சங். 146:6) அத்தீனாள் போன்ற தெய்வங்களின் மகிமை அவற்றின் கோவில்களையும் பலிபீடங்களையும் சார்ந்திருந்தன; ஆனால், உண்மைக் கடவுளின் மகிமை அவற்றைச் சார்ந்தில்லை. சொல்லப்போனால், பிரபஞ்சத்தைப் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுளான அவரை மனிதர்களால் கட்டப்பட்ட கோவில்களில் குடிவைக்க முடியாதே! (1 ரா. 8:27) அதனால், பவுல் சொல்லவந்த விஷயம் இதுதான்: மனிதர்கள் உருவாக்கிய எந்தவொரு கோவில் சிலையையும் மகா மகிமையுள்ள உண்மைக் கடவுளோடு ஒப்பிடவே முடியாது.—ஏசா. 40:18-26.
14. மனிதர்கள்மீது கடவுள் சார்ந்திருப்பதில்லை என்பதை பவுல் எப்படி விளக்கினார்?
14 மனிதர்கள்மீது கடவுள் சார்ந்திருப்பதில்லை. சிலைகளை வணங்கியவர்கள் விலை உயர்ந்த ஆடைகளால் அந்த சிலைகளை அலங்கரித்தார்கள், அவற்றுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளி கொடுத்தார்கள், உணவையும் பானத்தையும் படைத்தார்கள்; இவையெல்லாம் அந்தச் சிலைகளுக்குத் தேவை என்று நினைத்தார்கள். ஆனால், பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சில கிரேக்கத் தத்துவஞானிகள், கடவுளுக்கு மனிதர்களிடமிருந்து எதுவும் தேவைப்படாது என்று நினைத்திருக்கலாம். அப்படியென்றால், “மனுஷர்களுடைய கைகளால் அவர் எந்தப் பணிவிடையையும் பெற்றுக்கொள்வதில்லை, அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை” என்று பவுல் சொன்னதை அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கலாம். உண்மையைச் சொன்னால், கடவுளுக்கு மனிதரிடமிருந்து ஒரு சிறு துரும்புகூடத் தேவையில்லை! அதற்குப் பதிலாக, மனிதர்களுக்குத் தேவைப்படுகிற “உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும்,” அதாவது சூரியன், மழை, விளைநிலம் போன்ற எல்லாவற்றையும், தருகிறவர் அவர்தான். (அப். 17:25; ஆதி. 2:7) அதனால், மனிதர்கள்மீது கடவுள் சார்ந்திருப்பதில்லை, மனிதர்கள்தான் அவர்மீது சார்ந்திருக்கிறார்கள்.
15. அத்தேனே நகரவாசிகளின் எண்ணத்தைச் சரிசெய்ய பவுல் என்ன சொன்னார், இதிலிருந்து நாம் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
15 கடவுளே மனிதர்களைப் படைத்தார். மற்ற எல்லாரையும்விட கிரேக்கர்களாகிய தாங்கள்தான் மேலானவர்கள் என்ற எண்ணம் அத்தேனே நகரத்து மக்களுக்கு இருந்தது. ஆனால், தேசப்பற்றும் இனப்பற்றும் பைபிள் போதனைகளுக்கு நேர் எதிரானது. (உபா. 10:17) அதனால், பவுல் இந்த விஷயத்தைச் சாதுரியமாகவும் திறமையாகவும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னார். ‘ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணினார்’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் அங்கு கூடியிருந்தவர்களை நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும். (அப். 17:26) மனிதர்களின் தந்தையான ஆதாமைப் பற்றிய ஆதியாகமப் பதிவைத்தான் அவர் சொன்னார். (ஆதி. 1:26-28) எல்லாரும் ஒரே மனிதனிடமிருந்து தோன்றியிருப்பதால், எந்தவொரு இனமும் தேசமும் மற்றொன்றைவிட உயர்ந்ததாக இருக்க முடியாது; இந்த உண்மையை பவுல் இதைவிடத் தெளிவாக விளக்கியிருக்க முடியாது. அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். ஊழியத்தில் நாம் சாதுரியமாகப் பேசுவதும் நியாயத்தன்மை காட்டுவதும் அவசியமென்றாலும், மற்றவர்கள் விரும்பிக் கேட்க வேண்டும் என்பதற்காக பைபிள் சத்தியங்களைப் பூசிமெழுகக் கூடாது, உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும்.
16. மனிதர்களுக்கான கடவுளுடைய விருப்பம் என்ன?
16 மனிதர்கள் தன்னோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம். கிரேக்கத் தத்துவஞானிகள் மனித வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி காலங்காலமாக விவாதித்திருந்தாலும்கூட அவர்களால் திருப்தியான பதிலைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், மனிதர்களுக்கான கடவுளுடைய விருப்பத்தை பவுல் தெள்ளத்தெளிவாக விளக்கினார்; “உண்மையில், [கடவுள்] நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும், அவரை நாம் தேட வேண்டும், . . . அதுவும் தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க வேண்டும்” என்பதே அவருடைய விருப்பம் என்று விளக்கினார். (அப். 17:27) அத்தேனே மக்கள் அறியாதிருந்த அந்தக் கடவுள், ஒருவராலும் அறிந்துகொள்ள முடியாத கடவுள் அல்ல. அதற்குப் பதிலாக, அவரைத் தேடி அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அவர் பக்கத்திலேயே இருக்கிறார். (சங். 145:18) இந்த வசனத்தில் பவுல் “நாம்” என்று சொன்னதைக் கவனியுங்கள்; கடவுளை ‘தேடி . . . தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க’ வேண்டியவர்களில் தானும் ஒருவன் என்று அவர் சொல்லாமல் சொன்னார்.
17, 18. மனிதர்களுக்குக் கடவுளோடு ஏன் ஒரு பந்தம் இருக்க வேண்டும், கேட்போரின் கவனத்தைக் கவரும் விதத்தில் பவுல் பேசியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 மனிதர்களுக்குக் கடவுளோடு ஒரு பந்தம் இருக்க வேண்டும். கடவுளாலேயே “நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” என்று பவுல் சொன்னார். கி.மு. 6-ம் நூற்றாண்டில் கிரேத்தா தீவில் வாழ்ந்த எப்பிமெனடிஸ் (“அத்தேனே மக்களின் மத பாரம்பரியங்களில் தனி இடம் பெற்றவர்”) என்ற கவிஞரின் கருத்தையே பவுல் சொன்னார் என்று சில அறிஞர்கள் நினைக்கிறார்கள். அடுத்ததாக பவுல், மனிதர்களுக்குக் கடவுளோடு ஏன் ஒரு பந்தம் இருக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு காரணத்தையும் சொன்னார்: “உங்கள் கவிஞர்களில் சிலர்கூட, ‘நாம் அவருடைய பிள்ளைகள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.” (அப். 17:28) மனிதர்களுக்குக் கடவுளோடு ஒரு பாசப்பிணைப்பு இருக்க வேண்டும், ஏனென்றால் எல்லா மனிதர்களுக்கும் தகப்பனான முதல் மனிதனை அவரே படைத்தார் என்பதுதான் பவுலுடைய கருத்து. கேட்பவர்களின் கவனத்தைக் கவருவதற்காக அவர்கள் உயர்வாக மதித்த கிரேக்க இலக்கியங்களை நேரடியாக மேற்கோள் காட்டி பவுல் பேசினார்.e அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நாமும் அவ்வப்போது சரித்திரப் புத்தகங்கள், கலைக்களஞ்சியங்கள், நம்பகமான வேறு புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டலாம். உதாரணத்துக்கு, பொய்மத பழக்கங்களோ பண்டிகைகளோ தோன்றிய விதத்தைப் பற்றி ஒரு நம்பகமான புத்தகத்திலிருந்து பொருத்தமான மேற்கோளைக் காட்டும்போது கேட்பவர்கள் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளலாம்.
18 பவுல் இதுவரை கடவுளைப் பற்றிய மிக முக்கியமான சத்தியங்களைப் பேசினார்; அதுவும் அத்தேனே மக்களுக்கு ஏற்ற மாதிரி திறமையாகப் பேசினார். இதைக் கேட்டு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்? பவுல் அடுத்ததாக அதைத்தான் சொன்னார்.
“மனம் திருந்தும்படி எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குச் சொல்கிறார்” (அப். 17:29-31)
19, 20. (அ) மனிதர்களின் கைவேலையான சிலைகளை வணங்குவது தவறு என்பதை பவுலின் சாதுரியமான பேச்சு எப்படிக் காட்டியது? (ஆ) பவுல் பேசியதைக் கேட்டவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?
19 கேட்போரைச் செயல்பட வைப்பதற்கு பவுல் களமிறங்கினார். கிரேக்க இலக்கியங்களின் மேற்கோளை மீண்டும் சுட்டிக்காட்டி இப்படி சொன்னார்: “நாம் கடவுளுடைய பிள்ளைகளாக இருப்பதால், மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது.” (அப். 17:29) கடவுளுடைய கைவண்ணத்தால்தான் மனிதர்கள் உருவானார்கள் என்றால், மனிதர்களுடைய கைவண்ணத்தால் உருவான சிலைகள் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? மனிதர்களின் கைவேலையான சிலைகளை வணங்குவது தவறு என்பதை பவுலின் சாதுரியமான பேச்சு அம்பலப்படுத்தியது. (சங். 115:4-8; ஏசா. 44:9-20) “நாம் . . . நினைக்கக் கூடாது” என்று பவுல் தன்னையும் உட்படுத்திச் சொன்னது கசப்பான மருந்தில் கொஞ்சம் தேன் கலந்து தந்ததுபோல் இருந்தது.
20 அடுத்து, கேட்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் சொன்னார்: “மக்கள் அறியாமையில் இருந்த காலங்களை [அதாவது, சிலைகளை வணங்கியவர்களை கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்று மனிதர் நினைத்திருந்த காலங்களை] கடவுள் கண்டும்காணாதவர்போல் விட்டுவிட்டார். ஆனால், இப்போது மனம் திருந்தும்படி எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குச் சொல்கிறார்.” (அப். 17:30) மனந்திருந்த வேண்டும் என்று பவுல் சொன்னதைக் கேட்ட சிலர் அதிர்ச்சி ஆகியிருக்கலாம். ஆனால், அவர்கள் உயிரோடு இருப்பதற்குக் கடவுளே காரணம் என்பதால் அவருக்கே அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அவருடைய வலிமையான பேச்சு தெளிவாகக் காட்டியது. கடவுளை அவர்கள் தேடி, அவரைப் பற்றிய சத்தியத்தைக் கற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சிலைகளை வணங்குவது ஒரு பெரிய பாவம் என்பதை அத்தேனே மக்கள் உணர்ந்து அதை விட்டுவிட வேண்டியிருந்தது.
21, 22. பவுல் என்ன வலிமையான வார்த்தைகளால் தன் பேச்சை முடித்தார், அந்த வார்த்தைகள் இன்று நமக்கு எப்படிப் பொருந்தும்?
21 பவுல் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் சுத்தியால் அடித்ததுபோல் வலிமையாக இருந்தன: “தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க [கடவுள்] ஒரு நாளைக் குறித்திருக்கிறார். இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.” (அப். 17:31) நியாயத்தீர்ப்பு நாள் வரப்போகிறது! கடவுளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம்!! உலகத்தை நியாயந்தீர்க்க கடவுள் யாரை நியமித்திருக்கிறார் என்று பவுல் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், அப்படி நியமிக்கப்பட்டவரைப் பற்றிய ஆச்சரியமான விஷயத்தைத் தெரியப்படுத்தினார்; அதாவது, அவர் மனிதராக வாழ்ந்து, இறந்து, பின்பு கடவுளால் உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதைத் தெரியப்படுத்தினார்.
22 உள்ளத்தைத் தூண்டும் இந்த முடிவான வார்த்தைகள் இன்று நமக்கும் பொருந்தும். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையே உலகத்தை நியாயந்தீர்க்க கடவுள் நியமித்திருக்கிறார் என்று அறிந்திருக்கிறோம். (யோவா. 5:22) அதோடு, நியாயத்தீர்ப்பு நாள் ஆயிரம் வருஷங்கள் நீடிக்கும் என்றும், அது சீக்கிரமாக வந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்திருக்கிறோம். (வெளி. 20:4, 6) நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி நாம் பயப்படுவதில்லை; காரணம், உண்மையுள்ளவர்களுக்கு அந்த நாள் ஏராளமான ஆசீர்வாதங்களை அள்ளி தரப்போகிறது. இந்த ஒளிமயமான எதிர்காலத்துக்கு எது உத்தரவாதம்? அற்புதங்களிலேயே மகா அற்புதமான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே.
‘சிலர் இயேசுவின் சீஷர்களானார்கள்’ (அப். 17:32-34)
23. பவுலுடைய பேச்சுக்கு எப்படிப்பட்ட பிரதிபலிப்பு கிடைத்தது?
23 பவுலுடைய பேச்சைக் கேட்டவர்கள் வெவ்வேறு விதத்தில் பிரதிபலித்தார்கள். உயிர்த்தெழுதலைப் பற்றிக் கேட்டபோது “சிலர் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.” வேறு சிலர், “இன்னொரு சமயத்திலும் இதைப் பற்றி மறுபடியும் கேட்கிறோம்” என்று ஒரு மரியாதைக்காக மட்டும் சொன்னார்கள், இயேசுவின் சீஷர்களாக ஆக அவர்கள் விரும்பவில்லை. (அப். 17:32) “இருந்தாலும், சில ஆட்கள் அவரோடு சேர்ந்துகொண்டு இயேசுவின் சீஷர்களானார்கள். அவர்களில் அரியோபாகு நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான தியொனீசியு என்பவரும், தாமரி என்ற பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.” (அப். 17:34) இன்று நாம் சொல்கிற செய்திக்கும் இதுபோல் வித்தியாசமான பிரதிபலிப்பு வருகிறது, இல்லையா? சிலர் நம்மைக் கிண்டல் செய்கிறார்கள், சிலர் நாம் சொல்வதை ஒரு மரியாதைக்காக மட்டும் கேட்கிறார்கள். ஆனால், சிலர் நல்ல செய்தியைக் கேட்டு இயேசுவின் சீஷர்களாக ஆகிறார்கள்; இப்படி அவர்கள் மாறும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!
24. அரியோபாகுவில் பவுல் கொடுத்த பேச்சிலிருந்து நாம் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம்?
24 பவுலின் பேச்சை ஆழமாக சிந்தித்து பார்த்ததிலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொண்டோம்; நியாயங்காட்டி பேசுவது, ஒத்துக்கொள்கிற விதத்தில் பேசுவது, கேட்போருக்கு ஏற்றபடி பேசும் முறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொண்டோம். அதோடு, பொய்மத போதனைகளைக் குருட்டுத்தனமாக நம்புகிறவர்களிடம் பொறுமையாகவும் சாதுரியமாகவும் பேசுவதன் அவசியத்தையும் கற்றுக்கொண்டோம். அதுமட்டுமல்ல, கேட்கிறவர்களின் மனதைக் கவர வேண்டும் என்பதற்காக பைபிள் சத்தியங்களைப் பூசிமெழுகாமல் உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும் என்ற முக்கியமான பாடத்தையும் கற்றுக்கொண்டோம். பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினால் ஊழியத்தில் நாம் இன்னும் திறமையாகப் பேச முடியும்; கண்காணிகள்கூட சபையில் இன்னும் சிறந்த போதகர்களாக ஆக முடியும். இப்படி, கடவுளை “தேடி . . . கண்டுபிடிக்க” மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் எல்லாருமே திறமைசாலிகளாக இருக்க முடியும்.—அப். 17:27.
a “அத்தேனே நகரம்—பூர்வகால உலகத்தின் கலாச்சார மையம்” என்ற பெட்டியை, பக்கம் 142-ல் பாருங்கள்.
b “எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களும்” என்ற பெட்டியை, பக்கம் 144-ல் பாருங்கள்.
c அரியோபாகு என்பது அக்ரோபோலிஸின் வடமேற்கு பகுதியில் இருந்த ஒரு குன்று. பொதுவாக அங்குதான் அத்தேனே நகரத்தின் உச்ச நீதிமன்றம் கூடியது. அதனால், “அரியோபாகு” என்ற வார்த்தை அந்த நீதிமன்றத்தையும் குறிக்கலாம், அந்தக் குன்றையும் குறிக்கலாம். இதனால்தான், பவுல் உண்மையில் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார் என்பதன் பேரில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது; அவர் அந்தக் குன்றுக்கோ அதற்குப் பக்கத்திலோ அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்; இன்னும் சிலர், அவர் உச்ச நீதிமன்ற விசாரணைக்காக வேறொரு இடத்துக்கு, ஒருவேளை சந்தைக்கு, அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
d ‘உலகம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை காஸ்மோஸ்; இந்தப் பிரபஞ்சத்தைக் குறிப்பதற்காகக் கிரேக்கர்கள் இதைப் பயன்படுத்தினார்கள். ஆனால், பைபிளில் இந்த வார்த்தை பொதுவாக மக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், கிரேக்கர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களைப் பேச பவுல் முயற்சி செய்ததால் பிரபஞ்சம் என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை அவர் இங்கே பயன்படுத்தியிருக்கலாம்.
e வானவீதியைப் பற்றி ஸ்தோயிக்க கவிஞரான அராடஸ் எழுதிய ஃபினோமினா என்ற கவிதையிலிருந்து பவுல் மேற்கோள் காட்டினார். மற்றொரு ஸ்தோயிக்க கவிஞரான கிலென்தஸ் எழுதிய சீயுஸ் தெய்வப் பக்திப்பாடல்கள் உட்பட வேறு கிரேக்க இலக்கியங்களிலும் அதேபோன்ற வார்த்தைகள் காணப்படுகின்றன.