‘யெகோவாவின் வார்த்தை தொடர்ந்து வளர்ந்தது’
“அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.”—சங்கீதம் 147:15.
1, 2. இயேசு தம் சீஷர்களுக்கு என்ன வேலையைக் கொடுத்தார், அதை நிறைவேற்ற அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
பைபிளின் வியப்பூட்டும் தீர்க்கதரிசனங்களுள் ஒன்று அப்போஸ்தலர் 1:8-ல் உள்ளது. பரலோகத்திற்கு ஏறிப்போவதற்கு சற்று முன்பு இயேசு தம் சீஷர்களிடம் கூறியதாவது: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, . . . பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” இது என்னே பிரமாண்டமான வேலை!
2 கடவுளுடைய வார்த்தையை பூமி முழுவதிலும் பிரசங்கிப்பது மாபெரும் சவால் என்றே சீஷர்கள் நினைத்திருப்பர். ஏனெனில், அந்தக் கட்டளையைப் பெறுகையில் அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவே. அதை நிறைவேற்ற அவர்கள் என்னென்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவ வேண்டும். (மத்தேயு 24:14) இயேசுவிற்கு சாட்சிகளாய் இருப்பவர்கள் அவருடைய ஆற்றல்மிக்க போதனைகளை மற்றவர்களுக்கு அறிவித்து, யெகோவாவின் நோக்கங்களில் அவருடைய பங்கைப் பற்றியும் விளக்க வேண்டும். அதோடு, ஜனங்களை சீஷராக்கி, முழுக்காட்டுதலும் கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் உலகம் முழுவதிலும் செய்ய வேண்டும்!—மத்தேயு 28:19, 20.
3. இயேசு தம் சீஷர்களுக்கு என்ன உறுதியளித்தார், அந்த வேலையை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றினர்?
3 என்றபோதிலும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிக்க பரிசுத்த ஆவி அவர்களுக்கு உதவும் என இயேசு உறுதியளித்தார். அதனால்தான், அந்த வேலை மிகவும் பிரமாண்டமாக இருந்தபோதிலும், அவர்களை தடுத்து நிறுத்த எதிரிகள் சளைக்காமல் கொடூரமாக முயற்சி செய்தபோதிலும், இயேசுவின் ஆரம்பகால சீஷர்களால் அதை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. அது சரித்திரத்தில் பதிவான ஓர் உண்மை, அதை யாராலும் மறுக்க முடியாது.
4. மற்றவர்களுக்கு பிரசங்கித்து போதிக்கும் இந்த வேலையில் கடவுளுடைய அன்பு எவ்வாறு வெளிப்பட்டது?
4 பூமி முழுவதிலும் பிரசங்கித்து போதித்தது, கடவுளை அறியாதவர்களிடம் அவர் காட்டிய அன்பிற்கு அத்தாட்சி அளித்தது. அது, யெகோவாவிடம் நெருங்கி வரவும் பாவ மன்னிப்பைப் பெறவும் அவர்களுக்கு வாய்ப்பளித்தது. (அப்போஸ்தலர் 26:18) பிரசங்கித்து போதிக்கும் இந்த வேலை, அதைப் பிரசங்கித்தவர்களிடம் கடவுள் காட்டிய அன்பிற்கும் அத்தாட்சியாக இருந்தது. எப்படியென்றால், யெகோவாவிடம் அவர்களுக்கிருந்த பயபக்தியையும் சக மனிதர்களிடம் வைத்திருந்த அன்பையும் வெளிக்காட்ட வாய்ப்பளித்தது. (மத்தேயு 22:37-39) இந்தக் கிறிஸ்தவ ஊழியத்தை அவ்வளவு உயர்வாக மதித்ததால்தான் அப்போஸ்தலன் பவுல் அதை ‘பொக்கிஷம்’ என்றே கூறினார்.—2 கொரிந்தியர் 4:7.
5. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்களின் நம்பத்தகுந்த பதிவை எங்கே காண்கிறோம், அதில் என்ன வளர்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளது? (ஆ) இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு அப்போஸ்தலர் புத்தகம் ஏன் அர்த்தமுள்ளது?
5 ஆரம்பகால கிறிஸ்தவர்களின் பிரசங்க வேலை பற்றிய முற்றிலும் நம்பத்தகுந்த பதிவு அப்போஸ்தலர் புத்தகத்தில் காணப்படுகிறது. ஏவப்பட்ட இந்தப் புத்தகத்தை சீஷனாகிய லூக்கா எழுதினார். அதிசயிக்கத்தக்க விதத்தில், அதிவேகமாக நிகழ்ந்த வளர்ச்சியைப் பற்றி இந்தப் பதிவு கூறுகிறது. கடவுளுடைய வார்த்தை பற்றிய அறிவு இவ்வளவு வேகமாக வளர்ந்தது சங்கீதம் 147:15-ஐ நமக்கு நினைப்பூட்டுகிறது. அங்கே பின்வருமாறு வாசிக்கிறோம்: “[யெகோவா] தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.” பரிசுத்த ஆவியின் உதவியைப் பெற்ற ஆரம்பகால கிறிஸ்தவர்களின் இந்தப் பதிவு ஆர்வமூட்டுவதாகவும் இன்று நமக்கு அதிக அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. ஏனெனில், பிரசங்கித்து சீஷராக்கும் அதே வேலையைத்தான் யெகோவாவின் சாட்சிகளும் செய்கிறார்கள், அதுவும் மிகப் பெரியளவில் செய்கிறார்கள். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டதைப் போன்ற பிரச்சினைகளையே நாமும் எதிர்ப்படுகிறோம். யெகோவா அவர்களை எவ்வாறு ஆசீர்வதித்து, பலப்படுத்தினார் என்பதை சிந்தித்துப் பார்க்கையில் நம்மையும் பாதுகாப்பார் என்ற நம் விசுவாசம் பலப்படும்.
சீஷர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
6. வளர்ச்சி சம்பந்தப்பட்ட எந்த சொற்றொடர் அப்போஸ்தலர் புத்தகத்தில் மூன்று முறை வருகிறது, அது எதைக் குறிக்கிறது?
6 அப்போஸ்தலர் 1:8-ன் நிறைவேற்றத்தை கண்டறிய ஒரு வழி, ‘யெகோவாவின் வார்த்தை தொடர்ந்து வளர்ந்தது’ என்ற சொற்றொடரை ஆராய்வதாகும். இந்தச் சொற்றொடர் சில வேறுபாடுகளுடன் பைபிளில் மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகிறது; அவை எல்லாமே அப்போஸ்தலர் புத்தகத்தில்தான் உள்ளன. (அப்போஸ்தலர் 6:7; 12:24; 19:20) இந்த வசனங்களில் உள்ள ‘யெகோவாவின் வார்த்தை’ அல்லது ‘தேவ வசனம்’ என்பது நற்செய்தியைக் குறிக்கிறது. தெய்வீக சத்தியம் அடங்கிய இந்தக் கிளர்ச்சியூட்டும் செய்தி, அதை ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கையை மாற்றிய உயிருள்ள, வல்லமையுள்ள செய்தியாகும்.—எபிரெயர் 4:12.
7. அப்போஸ்தலர் 6:7-ல் கடவுளுடைய வார்த்தை பரவியது எதோடு சம்பந்தப்பட்டுள்ளது, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று என்ன நடந்தது?
7 கடவுளுடைய வார்த்தை பரவியதைப் பற்றி கூறும் சொற்றொடர் அப்போஸ்தலர் 6:7-ல் முதன்முறையாக வருகிறது. அந்த வசனம் கூறுவதாவது: “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.” இங்கே பரவுதல் என்பது சீஷர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று மேலறையில் கூடியிருந்த சுமார் 120 சீஷர்கள்மீது கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. அதற்கு பிறகு அப்போஸ்தலன் பேதுரு உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கொடுத்தார். அதைக் கேட்டவர்களில் சுமார் 3,000 பேர் அன்றைய தினமே விசுவாசிகளானார்கள். ஆயிரக்கணக்கானோர் முழுக்காட்டுதல் பெறுவதற்காக எருசலேமிலும் அதைச் சுற்றிலுமுள்ள குளங்களுக்கு விரைகையில் என்னே சந்தடி ஏற்பட்டிருக்கும்! ஐம்பது நாட்களுக்கு முன்னர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு கழுமரத்தில் அறையப்பட்ட இயேசுவின் பெயரிலேயே இவர்கள் முழுக்காட்டுதல் பெற்றனர்.—அப்போஸ்தலர் 2:41.
8. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளுக்கு பிறகு சீஷர்களின் எண்ணிக்கை எவ்வாறு அதிகரித்தது?
8 ஆனால் அது ஆரம்பம்தான். பிரசங்க வேலையை நிறுத்த யூத மத தலைவர்கள் தொடர்ந்து பிரயாசப்பட்டும் முடியவில்லை. மாறாக, “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் [சீஷர்களுடன்] சேர்த்துக்கொண்டு வந்த”து அவர்களுக்கு பெரும் எரிச்சலாக இருந்தது. (அப்போஸ்தலர் 2:47) சீக்கிரத்திலேயே, ஆண்களின் “தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.” அதற்கு பிறகு “திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 4:4; 5:14) இன்னும் சிறிது காலம் கழித்து, “யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின” என்று வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 9:31) சில வருடங்கள் கழித்து சுமார் பொ.ச. 58-ல், ‘அநேகமாயிரம் பேர் விசுவாசிகளாய்’ இருந்ததாக வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 21:20) அந்தச் சமயத்தில் அநேக புறஜாதியினரும் விசுவாசிகளாக மாறியிருந்தனர்.
9. ஆரம்பகால கிறிஸ்தவர்களை எவ்வாறு விவரிப்பீர்கள்?
9 அநேகர் புதிதாக மதம் மாறியதே சீஷர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். இது புதிதாக தோன்றிய மதம் என்றாலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தது. அதன் சீஷர்கள், செயலற்ற சர்ச் அங்கத்தினர்களைப் போலில்லாமல் யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் முழு பக்தியைக் காண்பித்தனர். சில சமயங்களில், கொடூரமான துன்புறுத்துதலை சகித்தவர்களிடமிருந்தே அவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டனர். (அப்போஸ்தலர் 16:23, 26-33) அவர்கள் நியாயமாய் சிந்தித்து, மனசாட்சிக்கு கட்டுப்பட்டே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். (ரோமர் 12:1, NW) அவர்கள் கடவுளுடைய வழிகளைக் கற்றுக்கொண்டிருந்தனர்; மனதிலும் இருதயத்திலும் சத்தியத்தை போற்றிப் பாதுகாத்தனர். (எபிரெயர் 8:10, 11) அவர்கள் நம்பிய சத்தியத்திற்காக மரிக்கவும் தயாராய் இருந்தனர்.—அப்போஸ்தலர் 7:51-60.
10. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் என்ன பொறுப்பை ஏற்றுக்கொண்டனர், அதற்கு இணையான எதை இன்று காண்கிறோம்?
10 கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றவர்களிடமும் சத்தியத்தை பேச வேண்டிய பொறுப்பை உணர்ந்தனர். இதன் விளைவாக இன்னும் அதிகமான சீஷர்கள் சேர்க்கப்பட்டனர். பைபிள் கல்விமான் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “விசுவாசத்தை அறிவிப்பது, அதிக வைராக்கியமுள்ள அல்லது அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட சுவிசேஷகன் மட்டுமே செய்ய வேண்டிய வேலை என அவர்கள் நினைக்கவில்லை. சுவிசேஷத்தை அறிவிப்பது சர்ச் அங்கத்தினர் ஒவ்வொருவரின் சிலாக்கியமாகவும் கடமையாகவும் கருதப்பட்டது. . . . ஒவ்வொரு கிறிஸ்தவனும் தானே முன்வந்து நற்செய்தியை பிரசங்கித்ததால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்த இயக்கம் பெரும் உந்துவிப்பை பெற்றது.” அவர் மேலும், “சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது ஆரம்பகால கிறிஸ்தவர்களின் உயிர்மூச்சாகவே இருந்தது” என்றும் எழுதினார். இன்றைய உண்மை கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மை.
பிராந்தியங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
11. அப்போஸ்தலர் 12:24-ல் என்ன விதமான அதிகரிப்பு விவரிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்தது?
11 கடவுளுடைய வார்த்தை பரவியதைப் பற்றி இரண்டாவது முறையாக அப்போஸ்தலர் 12:24-ல் (NW) வாசிக்கிறோம். “யெகோவாவின் வார்த்தை தொடர்ந்து வளர்ந்து எங்கும் பரவியது” என அங்கு கூறப்பட்டுள்ளது. இங்கே அந்தச் சொற்றொடர் பிராந்தியங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்க வேலை செழித்தோங்கியது. பரிசுத்த ஆவி முதலில் ஊற்றப்பட்டது எருசலேமில்தான் என்றாலும் நற்செய்தி சீக்கிரத்திலேயே அங்கிருந்து வேகமாக பரவியது. எருசலேமில் துன்புறுத்துதல் ஏற்பட்டதால் சீஷர்கள் யூதேயா, சமாரியா நாடுகள் எங்கும் சிதறிப் போனார்கள். அதன் விளைவு? “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 8:1, 4) ஒரு மனிதனிடம் பிரசங்கிக்கும்படி பிலிப்பு அனுப்பப்பட்டார், அவர் முழுக்காட்டுதல் பெற்றதும் எத்தியோப்பியாவிற்கு நற்செய்தியை எடுத்துச் சென்றார். (அப்போஸ்தலர் 8:26-28, 38, 39) சீக்கிரத்திலேயே லித்தா, சாரோன் சமவெளி, யோப்பா போன்ற இடங்களிலும் சத்தியம் கால் பதித்தது. (அப்போஸ்தலர் 9:35, 42) பின்னர், அப்போஸ்தலன் பவுல் கடல் மார்க்கமாகவும் கரை மார்க்கமாகவும் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள அநேக நாடுகளில் சபைகளை ஸ்தாபித்தார். அப்போஸ்தலன் பேதுரு பாபிலோனுக்கு சென்றார். (1 பேதுரு 5:13) இதனால்தான், பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதிலிருந்து 30 வருடங்களுக்குள்ளாக நற்செய்தி, “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு”விட்டது என அப்போஸ்தலன் பவுலால் எழுத முடிந்தது. அந்தச் சமயம் பொதுவாக அறியப்பட்டிருந்த பகுதிகளைப் பற்றியே பவுல் பேசியிருக்கலாம்.—கொலோசெயர் 1:23.
12. கடவுளுடைய வார்த்தை அதிகமான பிராந்தியங்களுக்கு பரவியதை கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்கள் எவ்வாறு ஒப்புக்கொண்டனர்?
12 கடவுளுடைய வார்த்தை ரோம பேரரசு முழுவதும் பரவியதை கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும் ஒப்புக்கொண்டனர். உதாரணமாக, வட கிரீஸிலுள்ள தெசலோனிக்கேயில், “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்” என எதிரிகள் புலம்பியதாக அப்போஸ்தலர் 17:6 கூறுகிறது. மேலுமாக, இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பித்தினியாவிலிருந்து இளைய பிளைனி ரோம பேரரசனான டிராஜனுக்கு கடிதம் எழுதினான். அதில் கிறிஸ்தவம், “மாநகரங்களில் மட்டுமல்ல அக்கம்பக்கத்திலுள்ள நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும்கூட பரவியுள்ளது” என புகார் செய்தான்.
13. பிராந்தியங்களின் அதிகரிப்பு, மனிதவர்க்கம் மீது கடவுள் வைத்திருந்த அன்பை எவ்வாறு சுட்டிக்காண்பித்தது?
13 பிராந்தியங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, மீட்புக்குத் தகுதியான மனிதவர்க்கத்தின் மீது யெகோவா வைத்திருந்த ஆழ்ந்த அன்பையே சுட்டிக்காட்டியது. புறமதத்தானாகிய கொர்நேலியு மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதை கவனித்த பேதுரு, “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” என்று கூறினார். (அப்போஸ்தலர் 10:34, 35) ஆம், அன்றும் இன்றும் நற்செய்தி எல்லா மக்களுக்கும் உரியதே. ஆகவே, கடவுளுடைய வார்த்தை பல பிராந்தியங்களுக்கு பரவியது எங்குமுள்ள எல்லா ஜனங்களும் கடவுளுடைய அன்பை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்தது. இந்த 21-ம் நூற்றாண்டிலோ கடவுளுடைய வார்த்தை சொல்லர்த்தமாகவே பூமியின் மூலைமுடுக்குகளையும் சென்று எட்டியுள்ளது.
வெற்றிகொண்ட வளர்ச்சி
14. அப்போஸ்தலர் 19:20-ல் என்ன விதமான வளர்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது, கடவுளுடைய வார்த்தை எதன் மீது வெற்றி கொண்டது?
14 கடவுளுடைய வார்த்தை பரவியதைப் பற்றி மூன்றாவது முறையாக அப்போஸ்தலர் 19:20-ல் வாசிக்கிறோம்: “இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது [“வெற்றி கொண்டது,” NW].” “பலத்தை உபயோகித்தல்” என அர்த்தம் கொடுக்கும் மூல கிரேக்க வார்த்தையே “வெற்றி கொண்டது” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எபேசுவிலிருந்த அநேகர் விசுவாசிகளாயினர் என்றும், மாயவித்தையில் ஈடுபட்டிருந்த அநேகர் அது சம்பந்தப்பட்ட தங்கள் புத்தகங்களை அனைவருக்கும் முன்பாக எரித்தனர் என்றும் அதற்கு முந்தைய வசனங்களில் வாசிக்கிறோம். இவ்வாறு, கடவுளுடைய வார்த்தை பொய் மத நம்பிக்கைகள்மீது வெற்றி கொண்டது. துன்புறுத்துதல் போன்ற மற்ற தடைகளையும் நற்செய்தி வெற்றிகொண்டது. எதுவுமே அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நம்முடைய நாட்களிலும் உண்மை கிறிஸ்தவம் இதேபோல் வெற்றி கொண்டுள்ளது.
15. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் பற்றி பைபிள் சரித்திராசிரியர் ஒருவர் எழுதியது என்ன? (ஆ) தங்களுடைய வெற்றிக்கு காரணர் யார் என சீஷர்கள் கூறினர்?
15 அப்போஸ்தலர்களும் மற்ற ஆரம்பகால கிறிஸ்தவர்களும் கடவுளுடைய வார்த்தையை வைராக்கியத்துடன் பிரசங்கித்தனர். அவர்களைப் பற்றி பைபிள் சரித்திராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “தங்களுடைய ஆண்டவரைப் பற்றி பேச வேண்டும் என விரும்புகிறவர்கள் அதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்துவிடுகின்றனர். அவர்கள் உபயோகிக்கும் வழிகளைவிட அவர்கள் காட்டும் ஊக்கமே நம் கவனத்தைக் கவருகிறது.” என்றாலும், தங்களுடைய முயற்சிகளால் மட்டுமே அந்த ஊழியம் வெற்றி பெறாது என்பதை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தனர். அந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய கடவுளே அவர்களுக்கு கட்டளை கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றவும் அவரே அவர்களுக்கு உதவினார். ஆவிக்குரிய வளர்ச்சிக்கு கடவுளே காரணர். இதை, கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதிய தன் கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் ஒப்புக்கொண்டார். “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். நாங்கள் தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம்” என்று எழுதினார்.—1 கொரிந்தியர் 3:6, 9.
பரிசுத்த ஆவி செயல்படுகிறது
16. தைரியத்தோடு பேச பரிசுத்த ஆவி சீஷர்களுக்கு பலமளித்ததை எது காட்டுகிறது?
16 கடவுளுடைய வார்த்தை பரவ பரிசுத்த ஆவி உதவிசெய்யும் என இயேசு தம் சீஷர்களிடம் உறுதியளித்ததை சற்று நினைத்துப் பாருங்கள். பிரசங்க வேலையை செய்ய பரிசுத்த ஆவியே அவர்களுக்கு பலமளிக்கும். (அப்போஸ்தலர் 1:8) அது எப்படி நிறைவேறியது? சீஷர்கள்மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பெந்தெகொஸ்தே நாளுக்கு பிறகு யூத நியாய சங்கத்திற்கு முன்பாக பேசும்படி பேதுருவும் யோவானும் கட்டளையிடப்பட்டனர்; அதுவே தேசத்தின் உச்சநீதி மன்றமாகும். அதன் நியாயாதிபதிகளே இயேசு கிறிஸ்துவின் கொலைக்கு காரணகர்த்தாக்கள். எதிரிகள் நிறைந்த இந்த மாபெரும் கூட்டத்தைக் கண்டு அப்போஸ்தலர்கள் மிரண்டுவிடுவார்களா? மிரளவே மாட்டார்கள்! எதிரிகளே வாயடைத்து போகும்படி பேச பேதுருவுக்கும் யோவானுக்கும் பரிசுத்த ஆவி பலம் கொடுத்தது. அதனால்தான், ‘அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.’ (அப்போஸ்தலர் 4:8, 13) பரிசுத்த ஆவியின் உதவியினாலேயே ஸ்தேவானும் யூத நியாய சங்கத்தாரிடம் தைரியமாய் சாட்சி கொடுத்தார். (அப்போஸ்தலர் 6:12; 7:55, 56) இதற்கு முன்பும்கூட சீஷர்கள் தைரியத்தோடு பிரசங்கிக்க பரிசுத்த ஆவி அவர்களுக்கு பலமளித்தது. அதைப் பற்றி லூக்கா அறிவிப்பதாவது: “அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.”—அப்போஸ்தலர் 4:31.
17. வேறு என்ன வழிகளில் பரிசுத்த ஆவி சீஷர்களின் ஊழியத்திற்கு உதவியது?
17 யெகோவா தமது வல்லமையுள்ள பரிசுத்த ஆவி மூலம் பிரசங்க வேலையை வழிநடத்தினார், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவும் அவருக்கு உதவினார். (யோவான் 14:28; 15:26) கொர்நேலியு, அவருடைய உறவினர்கள், மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆகியோர் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது, இயேசுவின் நாமத்தில் முழுக்காட்டுதல் பெற விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாரும் தகுதி பெற்றதை அப்போஸ்தலன் பேதுரு அறிந்தார். (அப்போஸ்தலர் 10:24, 44-48) பின்னர், மிஷனரி ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் (அப்போஸ்தலன் பவுலையும்) நியமித்ததும் அவர்கள் எங்கே போக வேண்டும், எங்கே போகக்கூடாது என வழிநடத்தியதும் அந்தப் பரிசுத்த ஆவியே. (அப்போஸ்தலர் 13:2, 4; 16:6, 7) எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் மூப்பரும் சரியான தீர்மானம் செய்ய உதவியதும் பரிசுத்த ஆவியே. (அப்போஸ்தலர் 15:23, 28, 29) கிறிஸ்தவ சபையில் கண்காணிகளை நியமிக்க வழிநடத்தியதும் பரிசுத்த ஆவியே.—அப்போஸ்தலர் 20:28.
18. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு அன்பைக் காண்பித்தனர்?
18 அன்பு போன்ற தெய்வீக குணங்களை கிறிஸ்தவர்கள் தங்களில் வளர்க்கவும் பரிசுத்த ஆவி உதவியது. (கலாத்தியர் 5:22, 23) அன்பின் காரணமாகவே சீஷர்கள் எல்லாவற்றையும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொண்டனர். உதாரணமாக, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்கு பிறகு எருசலேமில் வசித்த சீஷர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய ஒரு பொது நிதி ஸ்தாபிக்கப்பட்டது. அதைப் பற்றி பைபிள் கூறுவதாவது: “நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.” (அப்போஸ்தலர் 4:34, 35) இந்த அன்பை உடன் விசுவாசிகளிடம் மட்டுமல்ல மற்றவர்களிடமும் காண்பித்தனர். நற்செய்தியைப் பிரசங்கிப்பதோடு நன்மைகள் பல செய்வதன் மூலமும் இதை வெளிக்காட்டினர். (அப்போஸ்தலர் 28:8, 9) சுயதியாக அன்பே தம் சீஷர்களின் அடையாளம் என இயேசு கூறினார். (யோவான் 13:34, 35) அன்பு என்ற முக்கிய குணமே மக்களை கடவுளிடம் கவர்ந்திழுத்தது, முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது. இன்றும் அதுவே காரணமாக உள்ளது.—மத்தேயு 5:14, 16.
19. (அ) முதல் நூற்றாண்டில் கடவுளுடைய வார்த்தை எந்த மூன்று வழிகளில் அதிகரித்தது? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி கலந்தாராய்வோம்?
19 “பரிசுத்த ஆவி” என்ற சொற்றொடர் அப்போஸ்தலர் புத்தகத்தில் மொத்தம் 41 தடவை வருகிறது. முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட உண்மை கிறிஸ்தவர்களின் வளர்ச்சிக்கு காரணம் பரிசுத்த ஆவியின் வல்லமையும் வழிநடத்துதலுமே என்பது தெளிவாக இல்லையா? சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, கடவுளுடைய வார்த்தை பல தேசங்களுக்கு பரவியது, அக்கால மதங்கள் மீதும் தத்துவங்கள் மீதும் அது வெற்றி கொண்டது. முதல் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி, இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திலும் காணப்படுகிறது. அன்றுபோல் இன்றும் கடவுளுடைய வார்த்தை எவ்வளவு அதிகமாக பரவியுள்ளது என்பதை அடுத்த கட்டுரையில் கலந்தாராயலாமா?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆரம்பகால கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எவ்வாறு?
• கடவுளுடைய வார்த்தை எவ்வாறு பல தேசங்களுக்கு பரவியது?
• முதல் நூற்றாண்டில் கடவுளுடைய வார்த்தை எவ்வாறு வெற்றி கொண்டது?
• கடவுளுடைய வார்த்தை பரவுவதற்கு பரிசுத்த ஆவி எவ்வாறு உதவியது?
[பக்கம் 12-ன் படம்]
பிலிப்பு ஓர் எத்தியோப்பியனுக்கு பிரசங்கித்ததால் நற்செய்தி பரவியது
[பக்கம் 13-ன் படம்]
எருசலேமிலிருந்த அப்போஸ்தலரையும் மூப்பரையும் பரிசுத்த ஆவி வழிநடத்தியது
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
மேல் வலது மூலை: Reproduction of the City of Jerusalem at the time of the Second Temple - located on the grounds of the Holyland Hotel, Jerusalem