கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிக்கிறீர்களா?
‘கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள், கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருக்கிறார்கள்.’—ரோ. 8:5.
1, 2. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ரோமர் 8-வது அதிகாரம் ஏன் முக்கியமானதாக இருக்கிறது?
ரோமர் 8:15-17 வரை உள்ள வசனங்களை இயேசுவுடைய நினைவு நாள் அனுசரிப்பு சமயத்தில் நீங்கள் ஒருவேளை வாசித்திருக்கலாம். தாங்கள் பரலோகத்தில் என்றென்றும் வாழப்போவது பற்றி பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு எப்படித் தெரியும் என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை, ‘கிறிஸ்து இயேசுவின் சீடர்கள்’ என்று ரோமர் 8:1 சொல்கிறது. ஆனால், ரோமர் 8-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் பொருந்துகிறதா அல்லது பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொருந்துகிறதா?
2 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்காகத்தான் ரோமர் 8-வது அதிகாரம் முக்கியமாக எழுதப்பட்டது. ‘கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்குக் காத்திருக்கிறவர்களாக, அதாவது [தங்களுடைய] உடலிலிருந்து விடுதலையாக்கப்படுவதற்குக் காத்திருக்கிறவர்களாக, அவர்கள் கடவுளுடைய சக்தியை பெறுகிறார்கள்.’ (ரோ. 8:23) எதிர்காலத்தில், அவர்கள் கடவுளுடைய மகன்களாக பரலோகத்தில் இருப்பார்கள். மீட்கும்பொருளின் அடிப்படையில் யெகோவா அவர்களுடைய பாவங்களை மன்னித்திருக்கிறார். தன்னுடைய மகன்களாக இருப்பதற்காக அவர்களை நீதிமான்கள் என்று அங்கீகரித்திருக்கிறார்.—ரோ. 3:23-26; 4:25; 8:30.
3. பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் ஏன் ரோமர் 8-வது அதிகாரத்தைப் படிக்க வேண்டும்?
3 ரோமர் நான்காவது அதிகாரத்தில், ஆபிரகாமைப் பற்றி பவுல் எழுதியிருக்கிறார். இயேசு தன்னுடைய உயிரை மீட்கும்பொருளாகக் கொடுப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பு ஆபிரகாம் வாழ்ந்தார். அவர் அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டியதால், அவர் அபிஷேகம் பண்ணப்படவில்லை என்றாலும் யெகோவாவால் நீதிமானாகக் கருதப்பட்டார். (ரோமர் 4:20-22-ஐ வாசியுங்கள்.) இன்றும்கூட, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கிறார்கள்; அதனால், யெகோவாவால் அவர்களை நீதிமான்களாக அங்கீகரிக்க முடியும். ரோமர் 8-வது அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகள் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் பொருந்துகின்றன என்பது இதிலிருந்து தெரிகிறது!
4. ரோமர் 8:21-ஐ வாசிக்கும்போது, நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
4 புதிய உலகம் நிச்சயம் வருமென்று ரோமர் 8:21-ல் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். ‘படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்’ என்று அந்த வசனம் சொல்கிறது. அதனால், ‘நாம் அந்தப் புதிய உலகத்தில் இருப்போமா, கடவுள் கொடுக்கப் போகும் அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்வோமா?’ என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். கடவுள் கொண்டுவரப்போகும் அந்தப் புதிய உலகத்தில் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.
பாவ காரியங்களைப் பற்றி யோசிப்பது
5. ரோமர் 8:4-13-ல் பவுல் எதைப் பற்றி எழுதினார்?
5 ரோமர் 8:4-13-ஐ வாசியுங்கள். ரோமர் 8-வது அதிகாரத்தில், இரண்டு விதமான மக்களைப் பற்றி பவுல் எழுதினார். அதில் ஒரு விதமான மக்கள், “பாவ வழியில்” நடக்கிறார்கள். இன்னொரு விதமான மக்கள், “கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில்” நடக்கிறார்கள். பாவ வழியில் நடக்கிறவர்கள், கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள் என்றும் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள், கிறிஸ்தவர்கள் என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால், “பரிசுத்தவான்களாகும்படி அழைப்புப் பெற்ற” கிறிஸ்தவர்களுக்குத்தான் பவுல் இந்த விஷயத்தை எழுதினார். (ரோ. 1:2) அதனால், அந்த இரண்டு விதமான மக்களும் கிறிஸ்தவர்கள்தான். அப்படியென்றால், அவர்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்கிறது?
6, 7. (அ) “பாவ வழியில்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு என்ன சில அர்த்தங்கள் இருக்கின்றன? (ஆ) “பாவ வழியில்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, ரோமர் 8:4-13-ல் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
6 “பாவ வழியில்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கலாம். சில சமயங்களில், அது நம்முடைய உடம்பில் இருக்கிற சதையை அர்த்தப்படுத்தலாம். (ரோ. 2:28; 1 கொ. 15:39, 50) அதோடு, அந்த வார்த்தை குடும்ப உறவுகளையும் அர்த்தப்படுத்தலாம். உதாரணத்துக்கு, யோசேப்பைப் பற்றி யூதா தன் சகோதரர்களிடம் இப்படிச் சொன்னார்: “நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே.”—ஆதி. 37:27.
7 “பாவ வழியில்” நடக்கிறவர்கள் என்று ரோமர் 8:4-13-ல் சொன்னபோது, பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? இதைப் புரிந்துகொள்ள ரோமர் 7:5-ஐ கவனியுங்கள். “நாம் பாவ இயல்பின்படி வாழ்ந்தபோது, மரணத்தை விளைவிக்கும் பாவ இச்சைகள் நம் உடலுறுப்புகளில் பொங்கி எழுந்தன; அந்த இச்சைகள் எவையென்று திருச்சட்டம் வெட்டவெளிச்சமாக்கியது” என்று பவுல் அந்த வசனத்தில் சொல்லியிருக்கிறார். தங்களுடைய பாவ ஆசைகளிலேயே மூழ்கியிருந்து, அந்த ஆசைகளின்படி செய்கிறவர்களைத்தான் “பாவ வழியில்” நடக்கிறவர்கள் என்று பவுல் விளக்கினார். இப்படிப்பட்டவர்கள், தங்களுடைய இஷ்டப்படி எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
8. “பாவ வழியில்” நடப்பதைப் பற்றி அன்றிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பவுல் ஏன் எச்சரிக்கை கொடுக்க வேண்டியிருந்தது?
8 “பாவ வழியில்” நடப்பதால் வரும் ஆபத்தைப் பற்றி பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு பவுல் ஏன் எச்சரிக்கை கொடுத்தார்? கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் இந்த எச்சரிக்கை ஏன் பொருந்துகிறது? ஏனென்றால், கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்யும் எந்தவொரு கிறிஸ்தவரும் தன்னுடைய ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிடலாம். உதாரணத்துக்கு, ரோமிலிருந்த சில சகோதரர்கள் “தங்கள் வயிற்றுக்கே அடிமைகளாக” இருந்தார்கள் என்று பவுல் எழுதினார். செக்ஸ் வைத்துக்கொள்வது, சாப்பிடுவது, குடிப்பது போன்ற விஷயங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமாக இருந்ததென்று பவுல் அர்த்தப்படுத்தியிருக்கலாம். (ரோ. 16:17, 18; பிலி. 3:18, 19; யூ. 4, 8, 12) கொரிந்து சபையில் இருந்த ஒரு சூழ்நிலையையும் கவனியுங்கள். அந்தச் சபையில் இருந்த ஒரு சகோதரர், ‘தன்னுடைய தகப்பனின் மனைவியோடு’ சிறிது காலம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தார். (1 கொ. 5:1) அதனால்தான், “பாவ வழியில்” நடப்பதைப் பற்றி அன்றிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எச்சரிக்கை கொடுக்க வேண்டியிருந்தது.—ரோ. 8:5, 6.
9. ரோமர் 8:6-ல் பவுல் எதை அர்த்தப்படுத்தவில்லை?
9 இந்த எச்சரிக்கை இன்றும் பொருந்துகிறது. யெகோவாவுக்குப் பல வருடங்களாகச் சேவை செய்கிறவர்களும்கூட “பாவ வழியில்” நடக்க ஆரம்பித்துவிடலாம். அப்படியென்றால் உணவு, வேலை, பொழுதுபோக்கு, காதல் போன்ற விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்கவே கூடாது என்று பவுல் அர்த்தப்படுத்தினாரா? இல்லை! இவையெல்லாம் வாழ்க்கையின் அன்றாட விஷயங்கள்தான். இயேசுவும்கூட உணவை ருசித்து சாப்பிட்டார்; அதோடு, மற்றவர்களுக்கும் உணவு கொடுத்தார். தனக்கு ஓய்வு தேவை என்பதையும் உணர்ந்திருந்தார். பவுலும், திருமண வாழ்க்கையில் செக்ஸ் முக்கியம் என்று எழுதினார்.
10. ‘பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பது’ என்றால் என்ன?
10 ‘பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பது’ என்று சொன்னபோது பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? பவுல் பயன்படுத்தின அந்த கிரேக்க வார்த்தை எதைக் குறிக்கிறது? ஒருவர் தன்னுடைய எல்லா எண்ணங்களையும் யோசனைகளையும் ஏதோ ஒரு விஷயத்தின் பேரில் ஒருமுகப்படுத்துவதைக் குறிக்கிறது. பாவ வழியில் நடக்கிறவர்கள், தங்களுடைய சுயநல ஆசைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும், தங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தைப் பற்றித்தான் எப்போதும் பேசிக்கொண்டிருப்பார்கள் என்றும் ஓர் அறிஞர் சொன்னார். சுயநல ஆசைகள் தங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்படி அவர்கள் விட்டுவிடுகிறார்கள்.
11. என்னென்ன விஷயங்கள் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக ஆகிவிடலாம்?
11 தங்கள் வாழ்க்கையில் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை ரோமிலிருந்த கிறிஸ்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருந்தது. அவர்கள் ‘பாவ காரியங்களுக்கு’ முக்கியத்துவம் கொடுத்தார்களா? இன்று நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? நாம் எதைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறோம்? நாம் எதைச் செய்ய ஆசைப்படுகிறோம்? விதவிதமான திராட்சமதுவைக் குடிப்பதைப் பற்றியோ, வீட்டை அலங்கரிப்பதைப் பற்றியோ, புது உடைகளை வாங்குவதைப் பற்றியோ, பணத்தை முதலீடு செய்வதைப் பற்றியோ அல்லது சுற்றுலா போவதைப் பற்றியோ தாங்கள் எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பதாக சிலர் உணரலாம். இவற்றைப் பற்றி யோசிப்பதில் எந்தத் தவறும் இல்லை; இவையெல்லாம் வாழ்க்கையின் அன்றாட விஷயங்கள்தான்! உதாரணத்துக்கு, ஒரு கல்யாண விருந்தில் இயேசு திராட்சமதுவைப் பரிமாறினார். உடல்நலத்துக்காக “கொஞ்சம் திராட்சமதுவை” குடிக்கும்படி பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (1 தீ. 5:23; யோவா. 2:3-11) ஆனால், அவர்களுடைய வாழ்க்கையில் திராட்சமதுதான் மிக முக்கியமானதாக இருந்ததா? இல்லை! நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நம் வாழ்க்கையில் எது மிக முக்கியமானதாக இருக்கிறது?
12, 13. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதில் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
12 “பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பது மரணம்” என்று பவுல் சொன்னார். (ரோ. 8:6) அவர் அப்படிச் சொன்னதற்கு என்ன அர்த்தம்? நாம் “பாவ வழியில்” நடந்தால், இப்போது யெகோவாவோடு இருக்கும் பந்தத்தையும், எதிர்காலத்தில் நம் வாழ்க்கையையும் இழந்துவிடலாம். ஆனால், “பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்கு” கண்டிப்பாக மரணம்தான் கிடைக்கும் என்று பவுல் அர்த்தப்படுத்தினாரா? இல்லை. ஏனென்றால், தவறு செய்யும் நபர் தன்னை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொரிந்து சபையிலிருந்த அந்த ஒழுக்கங்கெட்ட நபர் சபைநீக்கம் செய்யப்பட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஆனாலும், அந்த நபர் பிறகு தன்னை மாற்றிக்கொண்டார், தன்னுடைய பாவ ஆசைகளை விட்டுவிட்டு மறுபடியும் சரியான பாதையில் நடக்க ஆரம்பித்தார்.—2 கொ. 2:6-8.
13 “பாவ வழியில்” நடந்தவர்களிலேயே மிக மோசமான உதாரணம், கொரிந்துவில் இருந்த அந்த நபர்தான். ஆனால், அவராலேயே தன்னை மாற்றிக்கொள்ள முடிந்தது! அப்படியென்றால், யெகோவாவின் தராதரங்களின்படி நடக்காமல் தன்னுடைய பாவ ஆசைகளின்படி நடக்க ஆரம்பித்திருக்கும் ஒரு கிறிஸ்தவராலும் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். பவுல் கொடுத்த எச்சரிக்கையை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் நம்மால் செய்ய முடியும்.
கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிப்பது
14, 15. (அ) நாம் எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று பவுல் சொன்னார்? (ஆ) ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றி யோசிப்பது எதை அர்த்தப்படுத்துவது இல்லை?
14 பாவ காரியங்களை யோசிப்பதில் இருக்கும் ஆபத்துகளைப் பற்றி சொன்ன பிறகு, பவுல் இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பதோ வாழ்வும் சமாதானமும் ஆகும்.”
15 ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றி யோசிப்பதென்றால் எதார்த்தமான வாழ்க்கை வாழக் கூடாது என்று அர்த்தம் கிடையாது. எப்போது பார்த்தாலும் யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் யோசித்துக்கொண்டோ பேசிக்கொண்டோ இருக்க வேண்டும் என்றும் அர்த்தம் கிடையாது. கிறிஸ்தவர்கள் எதார்த்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள். உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும்கூட சாப்பிட்டார்கள், குடித்தார்கள், கல்யாணம் செய்தார்கள், பிள்ளைகளைப் பெற்றார்கள், பிழைப்புக்காக வேலை செய்தார்கள்.—மாற். 6:3; 1 தெ. 2:9.
16. பவுலுடைய வாழ்க்கையில் எது மிக முக்கியமானதாக இருந்தது?
16 பவுலும் மற்ற ஆரம்பக் கால கிறிஸ்தவர்களும், அன்றாட விஷயங்கள் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பதற்கு விடவில்லை. உதாரணத்துக்கு, பவுல் தன்னுடைய பிழைப்புக்காகக் கூடார வேலை செய்தார் என்று நமக்குத் தெரியும். ஆனால், அவர் செய்துகொண்டிருந்த வேலை அவருக்கு மிக முக்கியமானதாக இருக்கவில்லை. கடவுளுக்குச் சேவை செய்வதுதான் அவருக்கு மிக முக்கியமானதாக இருந்தது. பிரசங்க வேலையிலும், கற்பிக்கும் வேலையிலும் பவுல் தன்னுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தினார். (அப்போஸ்தலர் 18:2-4; 20:20, 21, 34, 35-ஐ வாசியுங்கள்.) ரோமிலிருந்த சகோதரர்களும் சகோதரிகளும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியிருந்தது. நாமும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.—ரோ. 15:15, 16.
17. ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி’ யோசித்துக்கொண்டிருந்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?
17 யெகோவாவுக்குச் சேவை செய்வதில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்தினால், நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பதோ வாழ்வும் சமாதானமும் ஆகும்” என்று ரோமர் 8:6 சொல்கிறது. யெகோவாவுடைய சக்தி நம்மை வழிநடத்த அனுமதிப்பதும், அவர் யோசிப்பது போல் யோசிக்கக் கற்றுக்கொள்வதும் ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றி யோசிப்பதில் அடங்குகின்றன. கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களின்படி நடந்தால், நாம் இப்போது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழலாம். அதோடு, எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்க்கையையும் அனுபவிக்கலாம்.
18. ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் நாம் எப்படிச் சமாதானமாக இருக்கலாம்?
18 “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்கு” சமாதானம் கிடைக்கும் என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? இன்று நிறைய பேர் மன சமாதானத்துக்காகப் போராடுகிறார்கள். ஆனால், நாம் ஏற்கெனவே மன சமாதானத்தோடுதான் இருக்கிறோம். வீட்டில் இருக்கிறவர்களோடும் சபையில் இருக்கிறவர்களோடும் நாம் சமாதானமாக இருக்கிறோம். நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், சில சமயங்களில் சகோதர சகோதரிகளோடு பிரச்சினைகள் வரலாம். அப்போது, “அவனிடம் [உன் சகோதரனோடு] சமாதானமாகு” என்று இயேசு கொடுத்த ஆலோசனையை நாம் பின்பற்றுகிறோம். (மத். 5:24) உங்கள் சகோதரரும் சகோதரியும் ‘சமாதானத்தின் தேவனாகிய’ யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள்.—ரோ. 15:33; 16:20.
19. ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் வேறு யாருடனும் நம்மால் சமாதானமாக இருக்க முடியும்?
19 ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் நம்மால் கடவுளோடும் சமாதானமாக இருக்க முடியும். “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் [யெகோவா] அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” என்று தீர்க்கதரிசியான ஏசாயா சொன்னார்.—ஏசா. 26:3; ரோமர் 5:1-ஐ வாசியுங்கள்.
20. ரோமர் 8-வது அதிகாரத்தில் இருக்கிற ஆலோசனைக்காக நீங்கள் ஏன் நன்றியோடு இருக்கிறீர்கள்?
20 நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, ரோமர் 8-வது அதிகாரத்தில் இருக்கிற ஞானமான ஆலோசனையிலிருந்து நாம் எல்லாரும் நன்மை அடையலாம். நம்முடைய ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக யெகோவாவின் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. இதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களை’ பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் நமக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். அதனால்தான், “நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லா வாழ்வு” என்று பவுல் எழுதினார்.—ரோ. 6:23.