ரோமருக்குக் கடிதம்
5 விசுவாசத்தால் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால்,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கலாம்.*+ 2 கிறிஸ்துமீதுள்ள விசுவாசத்தால் நாம் இப்போது இந்த அளவற்ற கருணையை அனுபவிக்கிறோம்.+ அதனால், கடவுள் நம்மை மகிமைப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் சந்தோஷப்படலாம்.* 3 அதுமட்டுமல்ல, உபத்திரவங்களிலும் சந்தோஷப்படலாம்.*+ ஏனென்றால், உபத்திரவம் சகிப்புத்தன்மையையும்,+ 4 சகிப்புத்தன்மை கடவுளுடைய அங்கீகாரத்தையும், கடவுளுடைய அங்கீகாரம்+ நம்பிக்கையையும்+ உண்டாக்குகிறது என்பது நமக்குத் தெரியும். 5 அந்த நம்பிக்கை ஏமாற்றம் தராது.+ ஏனென்றால், கடவுள் தன்னுடைய சக்தியை நமக்குத் தந்து தன்னுடைய அன்பை நம் இதயங்களில் பொழிந்திருக்கிறார்.+
6 உண்மையில், நாம் பலவீனர்களாக* இருந்தபோதே+ கடவுள்பக்தி இல்லாத மனிதர்களுக்காகக் குறித்த காலத்தில் கிறிஸ்து தன்னுடைய உயிரைக் கொடுத்தார். 7 நீதிமானுக்காக ஒருவர் உயிரைக் கொடுப்பது அபூர்வம். ஒருவேளை நல்லவனுக்காக யாராவது தன் உயிரைக் கொடுக்கத் துணியலாம். 8 ஆனாலும், நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்.+ 9 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலம் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதால்,+ கடவுளுடைய கடும் கோபத்துக்குத் தப்பி அவர் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா?+ 10 நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவருடைய மகனின் மரணத்தின் மூலம் அவரோடு சமரசம் செய்யப்பட்டோம்+ என்றால், இப்போது சமரசம் செய்யப்பட்டிருக்கிற நாம் அவருடைய மகனின் வாழ்வின் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா? 11 அதுமட்டுமல்ல, நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு நாம் இப்போது சமரசம் செய்யப்பட்டிருப்பதற்காகச்+ சந்தோஷமும் அடைகிறோம், இல்லையா?
12 ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.+ இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.+ 13 திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கு முன்பே இந்த உலகத்தில் பாவம் இருந்தது. ஆனால், திருச்சட்டம் இல்லாத காலத்தில் பாவத்துக்காக யார்மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.+ 14 இருந்தாலும், ஆதாம்முதல் மோசேவரை வாழ்ந்தவர்கள் ஆதாம் செய்ததுபோல் கடவுளுடைய கட்டளையை மீறி பாவம் செய்யாதபோதிலும், மரணம் ஒரு ராஜாவாக அவர்கள்மீது ஆட்சி செய்துவந்தது. அந்த ஆதாம் பிற்பாடு வரவிருந்தவருக்கு ஒப்பாக இருந்தான்.+
15 குற்றத்தால் வந்த விளைவும் இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒரே மனிதனுடைய குற்றத்தால் நிறைய பேருக்கு மரணம் வந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து என்ற ஒரே மனிதன் மூலம் கடவுள் கொடுத்த இலவச அன்பளிப்பாலும் அளவற்ற கருணையாலும்+ நிறைய பேருக்கு ஏராளமான நன்மை கிடைத்தது.*+ 16 ஒரே மனிதனுடைய பாவத்தால்+ வந்த விளைவும் கடவுளுடைய இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒருவனுடைய குற்றத்தால் மனிதர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது.+ ஆனால், பலருடைய குற்றங்களுக்குப் பின்பு கொடுக்கப்பட்ட அன்பளிப்பால் அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.+ 17 ஒருவனுடைய குற்றத்தால் அந்த ஒருவன் மூலம் மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது;+ அப்படியென்றால், அளவற்ற கருணையையும் நீதியாகிய அன்பளிப்பையும்+ ஏராளமாகப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம்+ வாழ்வு பெற்று ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது+ அதிக நிச்சயம், இல்லையா?
18 அதனால், ஒரே மனிதன் குற்றம் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது+ போல, ஒரே மனிதன் நீதியான செயலைச் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.+ அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+ 19 ஒரே மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது+ போல, ஒரே மனிதன் கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.+ 20 இப்படிப்பட்ட நிலையில், குற்றங்களை வெட்டவெளிச்சமாக்குவதற்குத் திருச்சட்டமும் வந்தது.+ ஆனால், பாவங்கள் பெருகப்பெருக அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது. 21 எதற்காக? மரணத்தோடு சேர்ந்து பாவம் ராஜாவாக ஆட்சி செய்ததுபோல்+ நீதியின் மூலம் அளவற்ற கருணை ராஜாவாக ஆட்சி செய்வதற்காகத்தான். அந்த அளவற்ற கருணை நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முடிவில்லாத வாழ்வைத் தருகிறது.+