யெகோவா, அநேக புத்திரரை மகிமைக்குக் கொண்டுவருகிறார்
“அநேகம் பிள்ளைகளை [புத்திரரை] மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது [கடவுளுக்கு ஏற்றதாயிருந்தது].”—எபிரெயர் 2:10.
1. மனிதவர்க்கத்திற்கான யெகோவாவின் நோக்கம் நிறைவேற்றப்படும் என்று நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
யெகோவா இந்தப் பூமியை, ஒரு பரிபூரண மனித குடும்பம், முடிவற்ற வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்குரிய நித்திய வீடாக இருக்கும்படி படைத்தார். (பிரசங்கி 1:4; ஏசாயா 45:12, 18) நம்முடைய முற்பிதாவாகிய ஆதாம் பாவம் செய்து, இவ்வாறு பாவத்தையும் மரணத்தையும் தன் சந்ததிக்குக் கடத்தினார் என்பது உண்மையே. ஆனால், மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கம், அவருடைய வாக்குபண்ணப்பட்ட வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நிறைவேற்றப்படும். (ஆதியாகமம் 3:15; 22:18; ரோமர் 5:12-21; கலாத்தியர் 3:16) உலக மக்கள் மீதான அன்பே, யெகோவாவை, “தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத்” தந்தருள தூண்டுவித்தது. (யோவான் 3:16) மேலும் அன்பே, “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” இயேசுவைத் தூண்டுவித்தது. (மத்தேயு 20:28) ஆதாம் இழந்த உரிமைகளையும் எதிர்கால வாய்ப்புகளையும் இந்த “இணையான மீட்கும்பொருள்” திரும்பவும் வாங்கி, நித்திய ஜீவனைச் சாத்தியமாக்குகிறது.—1 தீமோத்தேயு 2:5, 6, NW; யோவான் 17:3.
2. மீட்கும்பொருளாகிய இயேசுவின் பலியினுடைய பிரயோகம் இஸ்ரவேலின் வருடாந்தர பிராயச்சித்த நாளில் எவ்வாறு அடையாளமாகக் காட்டப்பட்டது?
2 மீட்கும்பொருளாகிய இயேசுவின் பலியினுடைய பிரயோகம், வருடாந்தர பிராயச்சித்த நாளில் அடையாளமாக முன்குறித்துக் காட்டப்பட்டது. அந்நாளில், இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன், முதலாவதாக ஒரு காளையை பாவநிவாரண பலியாகச் செலுத்தி, அதன் இரத்தத்தை, ஆசரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பரிசுத்த பெட்டியிருந்த இடத்தில் அளித்தார். பிற்பட்ட காலத்தில் ஆலயத்திலும் அவ்வாறே செய்தார். இது, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும், லேவி கோத்திரத்தாருக்காகவும் செய்யப்பட்டது. அவ்வாறே இயேசு கிறிஸ்து, முதலாவதாகத் தம்முடைய ஆவிக்குரிய ‘சகோதரரின்’ பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு, தம்முடைய இரத்தத்தின் விலைமதிப்பை கடவுளிடம் செலுத்தினார். (எபிரெயர் 2:12; 10:19-22; லேவியராகமம் 16:6, 11-14) பிராயச்சித்த நாளில், வெள்ளாட்டுக்கடா ஒன்றையும் பாவநிவாரண பலியாக பிரதான ஆசாரியன் செலுத்தி, அதன் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்தில் அளித்தார். இவ்வாறு, ஆசாரியரல்லாத இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாருடைய பாவங்களுக்காகப் பிராயச்சித்தம் செய்தார். இவ்வாறே, பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து, விசுவாசம் காட்டும் மனிதவர்க்கத்திற்கு தம்முடைய உயிர் இரத்தத்தைப் பிரயோகித்து, அவர்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்வார்.—லேவியராகமம் 16:15.
மகிமைக்குக் கொண்டுவரப்பட்டனர்
3. எபிரெயர் 2:9, 10-ன் பிரகாரம், 1,900 ஆண்டுகளாக கடவுள் என்ன செய்துவருகிறார்?
3 இயேசுவின் “சகோதரர்” சம்பந்தமாக தனி சிறப்பிற்குரிய ஒன்றை கடவுள், 1,900 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை [“புத்திரரை,” NW] மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கு [யெகோவா தேவனுக்கு] ஏற்றதாயிருந்தது.’ (எபிரெயர் 2:9, 10) பூமியில் மனிதனாக வாழ்ந்தபோது தாம் பட்ட பாடுகளினாலே பரிபூரண கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவே, இரட்சிப்பின் அதிபதியாக இருக்கிறார். (எபிரெயர் 5:7-10, NW) இயேசுவே, கடவுளுடைய ஆவிக்குரிய குமாரனாக முதலாவது பிறப்பிக்கப்பட்டார்.
4. இயேசு எப்போது மற்றும் எவ்வாறு கடவுளுடைய ஆவிக்குரிய குமாரனாகப் பிறப்பிக்கப்பட்டார்?
4 யெகோவா, இயேசுவை பரலோக மகிமைக்கு கொண்டுவரும்படி, தம்முடைய பரிசுத்த ஆவியை அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியைப் பயன்படுத்தி, அவரை தம்முடைய ஆவிக்குரிய குமாரனாக ஆக்கினார். முழுக்காட்டுபவராகிய யோவானுடன் தனியாக இருக்கையில், இயேசு, தம்மைக் கடவுளுக்கு அளிப்பதை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக முழுமையாக தண்ணீரில் முழுக்காட்டப்பட்டார். லூக்கா எழுதின சுவிசேஷ விவரம் இவ்வாறு சொல்லுகிறது: “எல்லா ஜனங்களும் முழுக்காட்டப்பட்டபோது, இயேசுவும் முழுக்காட்டப்பட்டு, அவர் ஜெபிக்கையில், வானம் திறக்கப்பட்டது, பரிசுத்த ஆவி புறாவைப்போன்ற உருவில் அவர்மீது இறங்கினது, வானத்திலிருந்து ஒரு குரல்: ‘நீர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர்; நான் உம்மை அங்கீகரித்தேன்’ என்றது.” (லூக்கா 3:21, 22, NW) பரிசுத்த ஆவி இயேசுவின்மேல் இறங்கினதை யோவான் கண்டார், யெகோவா அவரைத் தம்முடைய மிக நேசமான குமாரனாக வெளிப்படையாய் அங்கீகரித்து பேசினதையும் யோவான் கேட்டார். அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியால் யெகோவா இயேசுவை, ‘மகிமைக்குக் கொண்டுவரப்போகிற பல புத்திரரில்’ முதலானவராகப் பிறப்பித்தார்.
5. இயேசுவின் பலியிலிருந்து முதலாவதாக நன்மை அடைவோர் யார், அவர்களுடைய எண்ணிக்கை என்ன?
5 இயேசுவின் ‘சகோதரரே,’ அவருடைய பலியிலிருந்து முதலாவதாக நன்மையடைவோராக இருந்தனர். (எபிரெயர் 2:12-18) அவர்கள், பரலோக சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டியானவரோடு அதாவது உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் மகிமையில் இருப்பதை ஏற்கெனவே அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். அவர்களுடைய எண்ணிக்கையையும் யோவான் வெளிப்படுத்தி இவ்வாறு சொன்னார்: “பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். . . . இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் . . . மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 14:1-5) ஆகையால், பரலோகத்தில் ‘மகிமைக்குக் கொண்டுவரப்பட்ட அநேக புத்திரர்,’ இயேசுவும் அவருடைய ஆவிக்குரிய சகோதரருமாக மொத்தம் 1,44,001 பேரே.
‘தேவனால் பிறந்தவர்கள்’
6, 7. ‘தேவனால் பிறந்தவர்கள்’ யார், இது அவர்களுக்கு எதைக் குறிக்கிறது?
6 யெகோவாவினால் ஆவியால் ஜநிப்பிக்கப்பட்டவர்களே ‘தேவனால் பிறந்தவர்கள்.’ இத்தகைய ஆட்களைக் குறிப்பிட்டு அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய [யெகோவாவினுடைய] வித்து [“பிறப்பிக்கும் வித்து,” NW] அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.” (1 யோவான் 3:9) கடவுளுடைய பரிசுத்த ஆவியே இந்தப் “பிறப்பிக்கும் வித்து.” அவருடைய வார்த்தையுடன் இணைந்து கிரியை செய்வதாய் அது, இந்த 1,44,000 பேரான ஒவ்வொருவருக்கும், பரலோக நம்பிக்கைக்குரிய ஒரு ‘புதிய பிறப்பை’ அளித்திருக்கிறது.—1 பேதுரு 1:3-5, 23, NW.
7 பரிபூரண மனிதனாகிய ஆதாம் ‘கடவுளின் குமாரனாக’ இருந்ததுபோல், இயேசு மனிதனாக பிறப்பிலிருந்தே கடவுளுடைய குமாரனாக இருந்தார். (லூக்கா 1:35; 3:38, NW) எனினும், இயேசுவின் முழுக்காட்டுதலுக்குப் பின்பு, “நீர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர்; நான் உம்மை அங்கீகரித்தேன்,” என்று யெகோவா அறிவித்தது உட்கருத்து உடையதாக இருந்தது. (மாற்கு 1:11, NW) இந்த அறிவிப்பைப் பின்தொடர்ந்து பரிசுத்த ஆவி அவர்மீது ஊற்றப்பட்டதானது, அப்போது இயேசுவை, தம்முடைய ஆவிக்குரிய குமாரனாக கடவுள் பிறப்பித்தாரென்பதை தெள்ளத்தெளிவாக்கிற்று. அப்போது இயேசு அடையாளப் பூர்வமாய், பரலோகத்தில் கடவுளுடைய ஆவி குமாரனாக மறுபடியும் ஜீவனைப் பெறும் வகையில் ஒரு ‘புதிய பிறப்பு’ அளிக்கப்பட்டார். அவரைப்போல், அவருடைய ஆவிக்குரிய சகோதரர்களான 1,44,000 பேரும் ‘மறுபடியும் பிறந்தவர்களாக’ இருக்கிறார்கள். (யோவான் 3:1-8; காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1993, பக்கங்கள் 3-6-ஐக் காண்க.) மேலும் இயேசுவைப்போல், அவர்கள் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டு, நற்செய்தியை யாவரறிய அறிவிக்கும்படி பொறுப்பளிக்கப்பட்டு இருக்கிறார்கள்.—ஏசாயா 61:1, 2; லூக்கா 4:16-21; 1 யோவான் 2:20.
ஆவியால் பிறப்பிக்கப்படுவதன் அத்தாட்சி
8. இவர்களின் காரியத்தில் ஆவியால் பிறப்பிக்கப்பட்டதற்கு என்ன அத்தாட்சி இருந்தது: (அ) இயேசு (ஆ) அவருடைய பூர்வ சீஷர்கள்?
8 இயேசு ஆவியால் பிறப்பிக்கப்பட்டிருந்தார் என்பதற்கு அத்தாட்சி இருந்தது. முழுக்காட்டுபவராயிருந்த யோவான் இயேசுவின்மீது ஆவி இறங்கினதைக் கண்டார்; புதிதாக அபிஷேஞ்செய்யப்பட்ட மேசியா, ஆவிக்குரிய குமாரன் என்ற நிலையை அடைந்ததைப் பற்றிய கடவுளுடைய அறிவிப்பையும் அவர் கேட்டார். ஆனால், தாங்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்டார்கள் என்று இயேசுவின் சீஷர்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்? இயேசு, பரலோகத்திற்கு ஏறிச்சென்ற நாளில், அவர் இவ்வாறு சொன்னார்: “யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான், [“முழுக்காட்டினான்,” NW], நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் [“முழுக்காட்டுதல்,” NW] பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 1:4) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில், இயேசுவின் சீஷர்கள் ‘பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்பட்டார்கள்.’ ஆவி ஊற்றப்பட்டதோடு சேர்ந்து, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல், வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி,” “அக்கினிமயமான நாவுகள்” அந்த சீஷர்கள் ஒவ்வொருவர்மீதும் தங்கின. ஆவி ‘தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கின’ சீஷர்களின் இந்தத் திறமை மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஆகவே, கடவுளுடைய புத்திரராக பரலோக மகிமைக்குள் பிரவேசிப்பதற்கான வழி, கிறிஸ்துவைப் பின்பற்றினோருக்குத் திறந்தது என்பதற்கு, காணக்கூடியதும் செவியில் கேட்கக்கூடியதுமான அத்தாட்சி இருந்தது.—அப்போஸ்தலர் 2:1-4, 14-21; யோவேல் 2:28, 29.
9. முதல் நூற்றாண்டிலிருந்த சமாரியர், கொர்நேலியு, மற்றும் பலர் ஆவியால் பிறப்பிக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருந்தது?
9 இதற்குச் சிறிது காலத்திற்குப் பின்பு, சுவிசேஷகனாகிய பிலிப்பு, சமாரியாவில் பிரசங்கித்தார். சமாரியர்கள் அவருடைய செய்தியை ஏற்று, முழுக்காட்டப்பட்ட போதிலும், கடவுள் அவர்களைத் தம்முடைய புத்திரராகப் பிறப்பித்ததற்கு அத்தாட்சி எதுவும் இருக்கவில்லை. அப்போஸ்தலர் பேதுருவும் யோவானும் ஜெபித்து, அந்த விசுவாசிகளின்மீது தங்கள் கைகளை வைத்தபோது, “அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.” இது, அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரிய வந்தது. (அப்போஸ்தலர் 8:4-25) விசுவாசித்த அந்தச் சமாரியர்கள், கடவுளுடைய புத்திரராக ஆவியால் பிறப்பிக்கப்பட்டார்கள் என்பதற்கு இது அத்தாட்சியாக இருந்தது. அவ்வாறே, பொ.ச. 36-ல், கொர்நேலியுவும் மற்ற புறஜாதியாரும் கடவுளுடைய சத்தியத்தை ஏற்றார்கள். “அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்” பேதுருவும், அவரோடு சென்றிருந்த யூத விசுவாசிகளும் “கேட்டபோது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.” (அப்போஸ்தலர் 10:44-48) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பலர், பல பாஷைகளில் பேசுவதைப்போன்ற “ஆவிக்குரிய வரங்களை” பெற்றார்கள். (1 கொரிந்தியர் 14:12, 32) இவ்வாறு, இந்த ஆட்கள், தாங்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை உடையோராக இருந்தார்கள். ஆனால், பிறகுவந்த கிறிஸ்தவர்கள், தாங்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்டிருந்தார்களா இல்லையா என்பதை எவ்வாறு அறிவார்கள்?
ஆவியின் சாட்சி
10, 11. கிறிஸ்துவின் உடன்சுதந்தரவாளிகளாக இருப்போருக்கு ஆவி சாட்சி பகருகிறது என்பதை ரோமர் 8:15-17-ன் ஆதாரத்தின்பேரில், எவ்வாறு விளக்குவீர்கள்?
10 அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்கள் எல்லாரும், தாங்கள் கடவுளுடைய ஆவியை உடையோராக இருக்கிறார்கள் என்பதற்கு நிச்சயமான அத்தாட்சியை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். இதன் சம்பந்தமாக பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் . . . அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [“ஆவிதானே,” NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்[றது]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (ரோமர் 8:15-17) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்கள் பரலோகத் தகப்பனிடமாக மகனுக்குரிய மனப்பான்மையை, புத்திரர் என்று உறுத்துகிற உணர்ச்சியை உடையோராக இருக்கிறார்கள். (கலாத்தியர் 4:6, 7) பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடன்சுதந்தரவாளிகளாக, ஆவிக்குரிய புத்திரர் என்ற தகுதிக்கு கடவுளால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் முற்றிலும் நிச்சயமாயிருக்கிறார்கள். இதில், யெகோவாவின் பரிசுத்த ஆவி திட்டமான பாகத்தை வகிக்கிறது.
11 பரலோக நம்பிக்கையைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்வதற்கு இசைவாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செல்வாக்கின்கீழ், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் உடன்பாடான முறையில் பிரதிபலிக்கும்படி அவர்களது ஆவி அல்லது விஞ்சிய மனநிலை, அவர்களை உந்துவிக்கிறது. உதாரணமாக, யெகோவாவின் ஆவிக்குரிய பிள்ளைகளைப் பற்றிய வேதவசனங்களை அவர்கள் வாசிக்கையில், அத்தகைய வார்த்தைகள் தங்களுக்குத்தான் பொருந்துகின்றன என்று அவர்கள் இயல்பாகவே உணர்ந்துகொள்கிறார்கள். (1 யோவான் 3:2) ‘கிறிஸ்து இயேசுவுக்குள்ளும்’ அவருடைய மரணத்திற்குள்ளும் தாங்கள் ‘முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்’ என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (ரோமர் 6:3) தாங்கள் கடவுளுடைய ஆவிக்குரிய புத்திரர், இயேசுவைப்போல், மரித்து பரலோக மகிமைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பது அவர்களுடைய உறுதியான நம்பிக்கை.
12. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் கடவுளுடைய ஆவி எதைத் தோற்றுவித்திருக்கிறது?
12 ஆவிக்குரிய புத்திரர் நிலைக்கு அவர்கள் பிறப்பிக்கப்பட்டிருப்பது தாங்களாக உருவாக்கிக்கொண்ட ஆவல் அல்ல. பூமியில் இருக்கும் தற்போதைய இக்கட்டுகளின் நிமித்தமாக துயரப்படுவதனால் பரலோகத்திற்குச் செல்லும்படி, ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள் விரும்புகிறதில்லை. (யோபு 14:1) மாறாக, சாதாரண மனிதரிடத்தில் காணப்படாத ஓர் அசாதாரண நம்பிக்கையையும் ஆவலையும் உண்மையாக அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களில் யெகோவாவின் ஆவி தோன்றுவித்திருக்கிறது. பரதீஸ் பூமியில், மகிழ்ச்சியுள்ள குடும்பமும் நண்பர்களும் சூழ்ந்திருக்க, மனித பரிபூரணத்தில் அனுபவிக்கும் நித்திய வாழ்க்கை அருமையாய் இருக்கும் என்பதை இவ்வாறு ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள் அறிந்திருக்கிறார்கள். எனினும், அத்தகைய வாழ்க்கை அவர்களுடைய இருதயங்களின் முக்கிய ஆவலாக இல்லை. அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், அத்தகைய திடமான பரலோக நம்பிக்கையை உடையோராக இருப்பதனால், பூமிக்குரிய எல்லா எதிர்பார்ப்புகளையும் பிணைப்புகளையும் மனமார தியாகம் செய்கிறார்கள்.—2 பேதுரு 1:13, 14.
13. 2 கொரிந்தியர் 5:1-5-ன் பிரகாரம் எதன் பேரில் பவுல் “மிகவும் வாஞ்சை” உள்ளவராக இருந்தார் மற்றும் ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் இது எதைச் சுட்டிக்காட்டுகிறது?
13 அத்தகைய நபர்களில் கடவுளால் கொடுக்கப்பட்ட பரலோக வாழ்க்கைக்குரிய நம்பிக்கை அவ்வளவு திடமாக இருப்பதால், அவர்களுடைய மன உணர்ச்சி பின்வருமாறு எழுதின பவுலினுடையதைப்போல் இருக்கின்றன: “பூமிக்குரிய நமது கூடாரவீடு அழிந்துபோகுமாயினும் கடவுளிடமிருந்து ஒரு கட்டடம், கையாலமைக்கப்படாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்குண்டென்று அறிந்திருக்கிறோம். எப்படியெனில், இதில் நாம் தவித்து, நமது பரம வாசஸ்தலத்தைப் போர்த்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; நிர்வாணிகளாய்க் காணப்படாமல் போர்த்துக் கொண்டவர்களாகவே காணப்பட்டால் அப்படியாகும். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ் சுமந்தவர்களாய்த் தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோட விரும்பாமல், சாவுக்குரிய இது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக மேற்போர்வை தரித்துக்கொள்ள விரும்புகிறோம். இதற்கென்று நம்மை ஆயத்தப்படுத்தினவர் கடவுளே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.” (2 கொரிந்தியர் 5:1-5, தி.மொ.) அழிவில்லா ஆவி சிருஷ்டியாக பரலோகத்தில் இருப்பதற்கு உயிர்த்தெழுப்பப்பட வேண்டுமென்பதே பவுலின் ‘மிகுந்த வாஞ்சையாக’ இருந்தது. ஒரு வீட்டோடு ஒப்பிடுகையில், தற்காலிகமான, எளிதில் தகர்ந்துபோகும் வாசஸ்தலமான கூடாரம் என்று மனித உடலை உருவகமாகப் பயன்படுத்தினார். சாகும் தன்மையுள்ள மாம்ச உடலில் பூமியில் வாழ்கிற போதிலும், வரவிருக்கிற பரலோக வாழ்க்கைக்குரிய அச்சாரமாக பரிசுத்த ஆவியை உடைய கிறிஸ்தவர்கள், சாவாமையையும் அழியாமையையும் உடைய ஓர் ஆவி சரீரமாகிய, ‘கடவுளிடமிருந்து ஒரு கட்டடத்தை’ ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:50-53) பவுலைப்போல், அவர்கள் மிகுந்த வாஞ்சையுடன் இவ்வாறு சொல்லலாம்: ‘நாம் தைரியமாகவேயிருந்து, இந்த [மனித] தேகத்தை விட்டு [பரலோகத்தில்] குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.’—2 கொரிந்தியர் 5:8.
விசேஷ உடன்படிக்கைகளின் பங்காளிகள்
14. நினைவு ஆசரிப்பைத் தொடங்கி வைத்தபோது, என்ன உடன்படிக்கையை இயேசு முதலில் குறிப்பிட்டார், ஆவிக்குரிய இஸ்ரவேலர் சம்பந்தமாக இது என்ன பாகத்தை வகிக்கிறது?
14 ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், தாங்கள் விசேஷ இரண்டு உடன்படிக்கைகளின் பங்காளிகள் என்பதில் நிச்சயமாக இருக்கிறார்கள். சம்பவிக்கவிருந்த தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலை இயேசு தொடங்கிவைப்பதற்கு புளிப்பில்லாத அப்பத்தையும் திராட்ச மதுவையும் பயன்படுத்தினபோது, அவற்றில் ஒரு உடன்படிக்கையைக் குறிப்பிட்டு, திராட்சமது இருந்த பாத்திரத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.” (லூக்கா 22:20; 1 கொரிந்தியர் 11:25) இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கேற்பவர்கள் யாவர்? யெகோவா தேவனும், பரலோக மகிமைக்குக் கொண்டுவரும்படி யெகோவா நோக்கம் கொண்டிருக்கிற ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினருமே. (எரேமியா 31:31-34; கலாத்தியர் 6:15, 16; எபிரெயர் 12:22-24) இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் அமல்படுத்தப்பட்ட இந்தப் புதிய உடன்படிக்கை, தேசங்களிலிருந்து யெகோவாவின் பெயருக்காக ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்து, ஆவியால் பிறப்பிக்கப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களை, ஆபிரகாமுடைய “வித்தின்” பாகமாக்குகிறது. (கலாத்தியர் 3:26-29, NW; அப்போஸ்தலர் 15:14) ஆவிக்குரிய இஸ்ரவேலர் எல்லாரும் பரலோகத்தில் அழியாமைக்குரிய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டு, மகிமைக்குக் கொண்டுவரப்பட இந்தப் புதிய உடன்படிக்கை வழிவகுக்கிறது. இது ‘நித்திய உடன்படிக்கையாக’ இருப்பதால் இதன் நன்மைகள் என்றென்றுமாக நிலைத்திருக்கும். ஆயிர ஆண்டுகளின்போதும் அவற்றின் பின்பும் வேறு வழிகளிலும் இந்த உடன்படிக்கை ஒரு பாகம் வகிக்குமா என்பதை எதிர்காலம் வெளிப்படுத்தும்.—எபிரெயர் 13:20.
15. இயேசுவைப் பின்பற்றுவோரான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், லூக்கா 22:28-30-ன்படி, வேறு எந்த உடன்படிக்கைக்குள்ளும் ஏற்கப்பட ஆரம்பிக்கிறார்கள் எப்போது?
15 மகிமைக்குக் கொண்டுவரும்படி யெகோவா நோக்கம் கொண்டுள்ள இந்த ‘அநேக புத்திரர்’ பரலோக ராஜ்யத்திற்கான உடன்படிக்கைக்குள்ளும் தனிப்பட்டவர்களாயும்கூட சேர்க்கப்படுகிறார்கள். தமக்கும் தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினோருக்கும் இடையே செய்யப்பட்ட இந்த உடன்படிக்கையைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடு நிலைத்திருந்தவர்கள் நீங்களே; ராஜ்யத்துக்காக என் பிதா என்னுடன் ஓர் உடன்படிக்கை செய்திருக்கிறதுபோலவே, நீங்கள் என் ராஜ்யத்தில் என் மேசையில் சாப்பிட்டு பானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயந்தீர்க்கும்படி, சிங்காசனங்களில் உட்காருவதற்கு நான் உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.” (லூக்கா 22:28-30, NW) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில், இயேசுவின் சீஷர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்டபோது, இந்த ராஜ்ய உடன்படிக்கை தொடங்கிவைக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும் அவருடைய உடன் அரசர்களுக்கும் இடையே செயல்படுவதாய் என்றென்றுமாக நிலைத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 22:5) ஆகையால், தாங்கள் புதிய உடன்படிக்கையிலும் ராஜ்யத்திற்கான உடன்படிக்கையிலும் இருக்கிறார்கள் என்று, ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நிச்சயமாயிருக்கிறார்கள். ஆகையால், கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புகளின்போது, பூமியில் இன்னும் மீந்திருக்கிற சொற்பபேரான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் மாத்திரமே, இயேசுவின் பாவமில்லாத சரீரத்தை அடையாளமாகக் குறிக்கும் அப்பத்திலும், அவருடைய மரணத்தில் சிந்தப்பட்ட அவருடைய பரிபூரண இரத்தத்தை அடையாளமாகக் குறித்து, புதிய உடன்படிக்கையை அமலாக்கும் திராட்ச மதுவிலும் பங்குகொள்கிறார்கள்.—1 கொரிந்தியர் 11:23-26; ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1989, பக்கங்கள் 17-20-ஐக் காண்க.
அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களும்
16, 17. (அ) மகிமைக்குக் கொண்டுவரப்பட, 1,44,000 பேரான எல்லாரையும் குறித்ததிலும் எது உண்மையாக இருக்க வேண்டும்? (ஆ) ‘பத்து ராஜாக்கள்’ யார், பூமியில் கிறிஸ்துவின் ‘சகோதரரில்’ மீந்திருப்போரை இவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள்?
16 இயேசு அளித்த மீட்பின் கிரய பலியின் முதல் பிரயோகம், 1,44,000 பேர் பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்படுவதையும், கடவுள் அவர்களை ஆவியால் பிறப்பிப்பதன்மூலம் தெரிந்துகொள்ளப்படுவதையும் சாத்தியமாக்குகிறது. ‘மகிமைக்குக் கொண்டுவரப்பட,’ அவர்கள், நிச்சயமாகவே, ‘‘தங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளப்படுதலையும் நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி தங்களாலானவற்றையெல்லாம் செய்து,’ மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாக நிரூபிக்க வேண்டும். (2 பேதுரு 1:10, NW; எபேசியர் 1:3-7; வெளிப்படுத்துதல் 2:10) பூமியில் இன்னும் இருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் சொற்ப எண்ணிக்கையினர், அரசியல் வல்லரசுகள் யாவற்றையும் குறிக்கும் ‘பத்து ராஜாக்களால்’ எதிர்க்கப்படுகிறபோதிலும், தங்கள் உத்தமத்தைக் காத்து வருகிறார்கள். தேவதூதன் இவ்வாறு சொன்னார்: “இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆனால், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; மேலும், அவரோடிருக்கும் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமானவர்களும் அவ்வாறு ஜெயிப்பார்கள்.”—வெளிப்படுத்துதல் 17:12-14, NW.
17 ‘ராஜாதி ராஜாவாகிய’ இயேசுவுக்கு எதிராக மனித அரசர்கள் எதுவும் செய்ய முடியாது, ஏனெனில் அவர் பரலோகத்தில் இருக்கிறார். ஆனால், பூமியில் இன்னும் இருக்கிற அவருடைய ‘சகோதரரில்’ மீதியானோரிடம் அவர்கள் பகைமையை வெளிப்படுத்துகிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:17) இந்தப் பகைமை கடவுளுடைய போராகிய அர்மகெதோனில் முடிவடையும்; அப்போது, ‘ராஜாதி ராஜாவுக்கும்’ ‘அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமான’ அவருடைய ‘சகோதரருக்கும்’ வெற்றி உறுதியாக உள்ளது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) இதற்கிடையில், ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் சுறுசுறுப்பாய்ச் செயல்படுகிறார்கள். யெகோவா அவர்களை மகிமைக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக, இப்போது என்ன செய்கிறார்கள்?
உங்கள் பதில் என்ன?
◻ கடவுள் யாரை ‘பரலோக மகிமைக்குக் கொண்டுவருகிறார்’?
◻ ‘தேவனால் பிறந்தவர்கள்’ என்றால் அர்த்தமென்ன?
◻ எவ்வாறு சில கிறிஸ்தவர்களுக்கு ‘ஆவி சாட்சிகொடுக்கிறது’?
◻ ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்ன உடன்படிக்கைகளுக்குள் ஏற்கப்பட்டிருக்கிறார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
பரலோக மகிமைக்கு வழி திறக்கப்பட்டது என்பதற்கு, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் அத்தாட்சி அளிக்கப்பட்டது