தேவனுடைய மகிமையை படைப்பு வெளிப்படுத்துகிறது!
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”—சங்கீதம் 19:1.
1, 2. (அ) தேவனுடைய மகிமையை மனிதர்களால் ஏன் நேரடியாக பார்க்க முடியாது? (ஆ) 24 மூப்பர்கள் தேவனை எப்படி மகிமைப்படுத்துகிறார்கள்?
“என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது.” (யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 33:20, பொது மொழிபெயர்ப்பு) இப்படித்தான் மோசேயை யெகோவா எச்சரித்தார். மனிதரின் மாம்சம் பலவீனமானது என்பதால் கடவுளுடைய மகிமையை நேரடியாக பார்க்கும் எவரும் உயிருடன் இருக்க முடியாது. இருந்தாலும், யெகோவா தமது மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அற்புத காட்சியை அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தரிசனத்தில் கண்டார்.—வெளிப்படுத்துதல் 4:1-3.
2 ஆனால் மனிதர்களைப் போலன்றி, உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளால் யெகோவாவின் முகத்தைப் பார்க்க முடியும். அவர்களில், யோவான் தரிசனத்தில் கண்ட ‘இருபத்துநான்கு மூப்பர்களும்’ அடங்குவர்; அவர்கள் 1,44,000 பேரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். (வெளிப்படுத்துதல் 4:4; 14:1-3) தேவனுடைய மகிமையைக் கண்டதும் அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெளிப்படுத்துதல் 4:11-ன்படி அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள்: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”
ஏன் “போக்குச் சொல்ல இடமில்லை”
3, 4. (அ) கடவுள் நம்பிக்கை ஏன் அறிவியலுக்கு முரணானதல்ல? (ஆ) சிலர் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதற்குக் காரணம் என்ன?
3 தேவனை மகிமைப்படுத்தும்படி உங்கள் உள்ளம் தூண்டுகிறதா? பெரும்பாலோருக்கு அந்தத் தூண்டுதல் இல்லை, சொல்லப்போனால் அவர் இருப்பதையே சிலர் மறுக்கிறார்கள். உதாரணமாக, வானவியல் நிபுணர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “கடவுள்தான் தலையிட்டு நம் நன்மைக்காக இந்தப் பிரபஞ்சத்தை அவ்வளவு நன்றாக வடிவமைத்தாரா? . . . அருமையான நினைப்புதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஏமாற்றுப் பேச்சு. . . . படைப்புக்கு கடவுள் காரணம் என்பது சரியான விளக்கமே அல்ல.”
4 அறிவியல் ஆராய்ச்சி, வரம்புகளுக்கு உட்பட்டது; அது மனிதர்களால் கவனிக்க அல்லது ஆராய முடிந்தவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அல்லது கோட்பாடாகவோ ஊகமாகவோ மட்டுமே இருக்கிறது. “தேவன் ஆவியாயிருக்கிறார்” என்பதால் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி அவரை ஆராய முடியாது. (யோவான் 4:24) ஆகவே, கடவுள் நம்பிக்கை அறிவியலுக்கு முரணானதென கருதுவது அகந்தையான நினைப்பு. அறிவியல் முறையே “ஒரு மத அணுகுமுறைதான்” என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வின்சென்ட் விகல்ஸ்வர்த் கூறினார். அது எப்படி? “இயற்கை நிகழ்வுகள் ‘இயற்கை சட்டங்களை’ அடிப்படையாகக் கொண்டவை என்ற உறுதியான நம்பிக்கையை சார்ந்ததே அறிவியல் முறை” என அவர் விளக்கினார். ஆகவே ஒருவர் கடவுள் நம்பிக்கையை நிராகரித்தால், ஒரு நம்பிக்கைக்குப் பதிலாக இன்னொரு நம்பிக்கையை ஏற்கிறார் என்றுதானே அர்த்தமாகும்? சிலரோ, உண்மையை வேண்டுமென்றே ஏற்க மறுப்பதால்தான் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாகத் தெரிகிறது. ‘துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே’ என சங்கீதக்காரன் எழுதினார்.—சங்கீதம் 10:4.
5. கடவுளை நம்பாதவர்கள் ஏன் போக்குச் சொல்ல இடமில்லை?
5 இருந்தாலும் கடவுள் நம்பிக்கை குருட்டாம்போக்கானது அல்ல; ஏனென்றால் கடவுள் உண்மையில் இருக்கிறார் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன. (எபிரெயர் 11:1) வானவியல் நிபுணர் ஆலன் சன்டேஜ் இவ்வாறு சொன்னார்: “[பிரபஞ்சத்தில்] நாம் காணும் இப்பேர்ப்பட்ட ஒழுங்கும் சீரும், கன்னாபின்னாவென்று கிடந்தவற்றிலிருந்து திடீரென உருவானது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அது ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு கடவுள் ஒரு மர்மம், ஆனால் சகலமும் அற்புதமாக உண்டாயிருப்பதற்கான விளக்கம்; ஒன்றுமில்லாதிருப்பதற்குப் பதிலாக ஏதேதோ இருப்பதற்கான காரணம்.” அப்போஸ்தலனாகிய பவுல் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு சொன்னார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் [அவிசுவாசிகள்] போக்குச் சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20) “உலகமுண்டானது” முதற்கொண்டு—முக்கியமாக, கடவுள் இருப்பதை உணர முடிந்த புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள் படைக்கப்பட்டது முதற்கொண்டு—அளவிலா சக்தி படைத்த ஒரு படைப்பாளர் இருக்கிறார், அதாவது நம் பக்தியைப் பெற தகுதியான ஒரு கடவுள் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி இருந்து வந்திருக்கிறது. ஆகவே தேவனுடைய மகிமையை ஒப்புக்கொள்ளத் தவறுகிறவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை. ஆனால், படைப்பு என்ன அத்தாட்சியை அளிக்கிறது?
தேவனுடைய மகிமையை பிரபஞ்சம் அறிவிக்கிறது
6, 7. (அ) வானங்கள் எவ்வாறு தேவனுடைய மகிமையை அறிவிக்கின்றன? (ஆ) எதற்காக வானங்கள் ‘அளவுநூலை’ நிறுவியிருக்கின்றன?
6 அதற்கான பதிலை சங்கீதம் 19:1 இவ்வாறு அளிக்கிறது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” “ஆகாயவிரிவு” அல்லது வளிமண்டலம் வழியாக மின்னிய நட்சத்திரங்களும் கிரகங்களும் மகிமையான கடவுள் இருப்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி அளித்ததாக தாவீது உணர்ந்தார். அவர் தொடர்ந்து சொன்னதாவது: “பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.” (சங்கீதம் 19:2) பகலுக்கு பகல் மற்றும் இரவுக்கு இரவு கடவுளுடைய ஞானத்தையும் படைப்பாற்றலையும் வானம் பறைசாற்றுகிறது. வானங்கள் கடவுளுக்கு சப்தமாக துதிகளை ‘பொழிவது’ போல் இருக்கிறது.
7 ஆனாலும் இந்த துதிகளைக் கேட்க விவேகம் வேண்டும். “அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.” இருந்தாலும் வானங்களின் மௌனமான சாட்சி வலிமைமிக்கது. “அவைகளின் சத்தம் [“அளவுநூல்,” NW] பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது.” (சங்கீதம் 19:3, 4) வானங்கள், அவற்றின் சாட்சி பூமியின் மூலைமுடுக்கெல்லாம் கேட்கப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக ‘அளவுநூலை’ நிறுவியிருப்பது போல் இருக்கிறது.
8, 9. சூரியனைக் குறித்த சிறப்பு வாய்ந்த உண்மைகள் சில யாவை?
8 அடுத்ததாக தாவீது யெகோவாவுடைய படைப்பின் மற்றொரு அற்புதத்தை விவரிக்கிறார்: “அவைகளில் [காணக்கூடிய வானங்களில்] சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.”—சங்கீதம் 19:4-6.
9 மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட சூரியன் நடுத்தரமான அளவுடையதுதான். ஆனாலும் இது குறிப்பிடத்தக்க ஒரு நட்சத்திரம் ஆகும்; அதனைச் சுற்றி வலம் வரும் கிரகங்கள் அதற்குப் பக்கத்தில் மிகச் சிறியவையாக தெரிகின்றன. “2-க்கு பக்கத்தில் 27 பூஜ்யங்கள் சேர்த்தால் எத்தனையோ அத்தனை டன் நிறையுடையது அது”—நம் முழு சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் அது 99.9 சதவீதம்! அதன் ஈர்ப்பு சக்தியினால் பூமி அதைவிட்டு தூர விலகாமலும் அதன் கிட்டே நெருங்காமலும் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. சூரிய ஆற்றலில் சுமார் 200 கோடியில் ஒரு பங்குதான் நம் கிரகத்தை எட்டுகிறது; ஆனால் உயிரைக் காக்க அதுவே போதுமானது.
10. (அ) சூரியன் எவ்வாறு தன் ‘கூடாரத்திற்கு’ உள்ளே சென்று, அங்கிருந்து வெளியே வருகிறது? (ஆ) அது எவ்வாறு “பராக்கிரமசாலியைப்போல்” ஓடுகிறது?
10 சங்கீதக்காரன் சூரியனை அடையாள மொழியில் குறிப்பிடுகிறார்; பகலில் ஒரு அடிவானத்திலிருந்து மறு அடிவானம் வரை ஓடி, இரவிலோ ‘கூடாரத்தில்’ தங்கும் ‘பராக்கிரமசாலியாக’ அதை அவர் சித்தரிக்கிறார். அந்த வல்லமைமிக்க நட்சத்திரம் அடிவானத்திற்கு கீழே இறங்கும்போது, பூமியிலிருந்து பார்க்கையில், அது இளைப்பாறுவதற்காக ஒரு ‘கூடாரத்திற்குள்’ போவதுபோல் தெரிகிறது. காலையில் ‘அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல்’ பிரகாசமாக திடீரென வெளியே வருகிறது. தாவீது மேய்ப்பனாக இருந்ததால் இரவின் கடுங்குளிரை நன்கு அறிந்திருந்தார். (ஆதியாகமம் 31:40) சூரியக் கதிர்கள் வேகமாக தன்னையும் தன்னைச் சூழ்ந்த நிலப்பரப்பையும் எவ்வாறு வெதுவெதுப்பாக்கும் என்பதை அவர் நினைவுகூர்ந்தார். நிச்சயமாகவே, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி “பயணிப்பதால்” சூரியன் களைப்படைவதில்லை; மாறாக அது “பராக்கிரமசாலியைப்போல்” மறுபடியும் பயணிக்க தயாராயிருக்கிறது.
பிரமிக்கத்தக்க நட்சத்திரங்களும் நட்சத்திர மண்டலங்களும்
11, 12. (அ) நட்சத்திரங்களையும் கடற்கரை மணலையும் பைபிள் சம்பந்தப்படுத்திப் பேசுவது ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) நம் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதாக இருக்கலாம்?
11 டெலஸ்கோப் இல்லாததால் சில ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையே தாவீதால் பார்க்க முடிந்தது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியின்படி, நவீன டெலஸ்கோப்புகளின் மூலம் தெரியும் இப்பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 70,00,00,000,00,00,000,00,00,000—அதாவது 7-க்கு பக்கத்தில் 22 பூஜ்யங்கள்! நட்சத்திரங்களின் எண்ணிக்கையை ‘கடற்கரை மணலுக்கு’ ஒப்பிடுவதன் மூலம் அவை மாபெரும் எண்ணிக்கையில் இருப்பதை யெகோவா சுட்டிக்காட்டினார்.—ஆதியாகமம் 22:17.
12 பல காலமாக வானவியல் நிபுணர்கள் “ஒளிவீசும் சிறிய பகுதிகளை” கவனித்தார்கள்; ஆனால் அவை “மங்கலாக, தெளிவின்றி இருந்தன.” இந்த “சுருள்வடிவ விண்மீன் படலம்” நம் பால்வீதி மண்டலத்தின் பாகமாய் இருந்ததாக விஞ்ஞானிகள் ஊகித்தார்கள். ஆனால் 1924-ல், அப்படிப்பட்ட விண்மீன் படலத்தில் மிக அருகிலுள்ள ஒன்றான ஆன்ட்ரோமீடா உண்மையில் ஒரு நட்சத்திர மண்டலம் என்பதை கண்டுபிடித்தார்கள்; அது சுமார் 20 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது! நூறு கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக இப்போது விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்; அந்த நட்சத்திர மண்டலங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான, சிலசமயம் நூற்றுக் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கலாமென சொல்கிறார்கள். இருந்தாலும் யெகோவா “நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.”—சங்கீதம் 147:4.
13. (அ) விண்மீன் குழுக்கள் சம்பந்தமாக எது குறிப்பிடத்தக்கது? (ஆ) “வானத்தின் நியமங்களை” விஞ்ஞானிகள் அறியாதது எப்படி தெளிவாக தெரிகிறது?
13 யெகோவா யோபுவிடம் இவ்வாறு கேட்டார்: “கீமா விண்மீன் குழுவின் பந்தத்தை நீ இணைத்துக் கட்ட முடியுமோ, அல்லது கெசில் விண்மீன் குழுவின் கயிறுகளை நீ அவிழ்க்க முடியுமோ?” (யோபு 38:31, NW) விண்மீன் குழு என்பது ஒரு தெளிவான வடிவத்தில் அமைந்திருக்கும் நட்சத்திரத் தொகுதியாகும். நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மிகத் தொலைவில் இருந்தாலும் பூமியிலிருந்து பார்க்கையில் அவற்றின் நிலைகள் எப்போதும் மாறாதிருக்கின்றன. நட்சத்திரங்களின் நிலைகள் அவ்வளவு துல்லியமாக இருப்பதால்தான் அவை “கடற்பயணத்திற்கும், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கலங்களை திசைதிருப்புவதற்கும், நட்சத்திரங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும் உபயோகமான வழிகாட்டிகளாக” இருக்கின்றன. (தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா) இருந்தாலும் விண்மீன் குழுக்களை இணைத்துப் பிடிக்கும் ‘பந்தத்தை’ பற்றி இன்னும் ஒருவராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆம், “வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ?” என யோபு 38:33-ல் கேட்கப்படும் கேள்விக்கு விஞ்ஞானிகளால் இன்னும் பதிலளிக்க முடியவில்லை.
14. ஒளி பரவும் விதம் எவ்விதத்தில் மர்மமாயிருக்கிறது?
14 ‘வெளிச்சம் பரவுகிறதற்கு . . . வழி எங்கே?’ என யோபுவிடம் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கும் விஞ்ஞானிகளால் பதிலளிக்க முடியவில்லை. (யோபு 38:24) வெளிச்சத்தைப் பற்றிய இக்கேள்வி “மிக நவீன அறிவியல் கேள்வி” என ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்மாறாக, மனித கண்களிலிருந்து ஒளி வெளிப்பட்டதாக சில கிரேக்க தத்துவஞானிகள் நினைத்தார்கள். நவீன காலங்களிலோ, ஒளியில் சின்னஞ்சிறிய துகள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நினைத்தார்கள். மற்றவர்கள், அது அலைகளாக பயணிப்பதாக நினைத்தார்கள். ஆனால் இன்று, ஒளியானது அலையாகவும் செயல்படுகிறது துகளாகவும் செயல்படுகிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இருந்தாலும், ஒளியின் இயல்பும் அது எவ்வாறு ‘பரவுகிறது’ என்பதும் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.
15. வானங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கையில் தாவீதைப் போல் நாம் எவ்வாறு உணர வேண்டும்?
15 இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கையில், இவ்வாறு சொன்ன சங்கீதக்காரன் தாவீதைப் போலவே உணர தூண்டப்படுகிறோம்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்.”—சங்கீதம் 8:3, 4.
பூமியும் அதிலுள்ள சிருஷ்டிகளும் யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன
16, 17. ‘கடலின் ஆழங்களில்’ உள்ள பிராணிகள் எவ்வாறு யெகோவாவை துதிக்கின்றன?
16 கடவுளுடைய மகிமையை படைப்பு அறிவிக்கும் மற்ற விதங்களை சங்கீதம் 148 பட்டியலிடுகிறது. வசனம் 7 இவ்வாறு வாசிக்கிறது: “பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே [அவரை துதியுங்கள்].” ஆம், கடலின் ‘ஆழங்கள்’ கடவுளுடைய ஞானத்தையும் வல்லமையையும் சிறப்பித்துக் காட்டும் அற்புத படைப்புகளால் நிரம்பி வழிகின்றன. நீலத் திமிங்கலத்தின் சராசரி எடை 120 டன்—இது 30 யானைகளின் எடைக்குச் சமம்! அதன் இருதயம் மட்டுமே 450 கிலோவுக்கும் அதிக எடையுள்ளது; அது சுமார் 6,400 கிலோ இரத்தத்தை உடலில் பம்ப் செய்யும் ஆற்றல் மிக்கது! இந்த இராட்சத மகாமச்சங்கள் நீரில் மெதுவாகவும் அலங்கோலமாகவும் நீந்துகின்றனவா? இல்லவே இல்லை. அவை வியத்தகு வேகங்களில் “சூம் சூம் என நீரைக் கிழித்துக்கொண்டு செல்கின்றன” என யூரோப்பியன் சிட்டேஷன் பைகாட்ச் காம்ப்பெய்ன் அறிக்கை செய்கிறது. “ஒரு நீலத் திமிங்கலம் பத்து மாதங்களில் 16,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் நீந்திச் சென்றதாய்” செயற்கைக் கோள் தடயம் (satellite tracking) காட்டியது.
17 பாட்டில்நோஸ் டால்ஃபின் பொதுவாக 150 அடி ஆழத்திற்கு டைவ் அடிக்கும், ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிகபட்சமாக 1,795 அடி ஆழத்திற்கு டைவ் அடித்திருக்கிறது! இந்தப் பாலூட்டியால் எப்படி இந்தளவு டைவ் அடிக்க முடிகிறது? அவ்வாறு டைவ் அடிக்கும்போது அதன் இதயத்துடிப்பு மெதுவாகிறது, இரத்தம் இதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் மூளைக்கும் திசைதிருப்பப்படுகிறது. அதோடு, அதன் தசைகளில் ஆக்ஸிஜனை சேமித்து வைக்கும் ஒரு ரசாயனம் இருக்கிறது. யானைக் கடல்நாயும் ஸ்பெர்ம் திமிங்கலமும் அதைவிட அதிக ஆழத்திற்கு டைவ் அடிக்கின்றன. “அவை அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக தங்கள் நுரையீரல்கள் முழுமையாக செயலிழந்து போகும்படி விட்டுவிடுகின்றன” என்று டிஸ்கவர் பத்திரிகை கூறுகிறது. தேவைப்படும் ஆக்ஸிஜனில் பெரும்பாலானவற்றை தங்கள் தசைகளில் சேமித்து வைக்கின்றன. தெளிவாகவே, இந்தப் பிராணிகள் சர்வவல்லமை படைத்த கடவுளின் ஞானத்திற்கு உயிருள்ள அத்தாட்சியாக இருக்கின்றன!
18. கடல்நீர் எவ்வாறு யெகோவாவின் ஞானத்தை வெளிப்படுத்துகிறது?
18 கடல்நீரும்கூட யெகோவாவின் ஞானத்தை வெளிப்படுத்துகிறது. சைன்டிஃபிக் அமெரிக்கன் இவ்வாறு சொல்கிறது: “கடலின் மேற்பரப்பிலிருந்து 100 மீட்டர் ஆழத்திற்கு உள்ள நீரை எடுத்துக்கொண்டால், அதன் ஒவ்வொரு துளியிலும் ஃபைட்டோப்ளாங்க்டன் என்ற ஆயிரக்கணக்கான நுண்ணிய தாவரங்கள் மிதக்கின்றன.” இந்த “கண்ணுக்குத் தெரியாத காடு” நூற்றுக் கோடிக்கணக்கான டன் எடையுள்ள கார்பன்டைஆக்ஸைடை அகற்றுவதன் மூலம் நம் காற்றை சுத்தப்படுத்துகிறது. அது நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பாதிக்கும் அதிகத்தை வெளிவிடுகிறது.
19. அக்கினியும் வெண்பனியும் எவ்வாறு யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுகின்றன?
19 “அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே [“வெண்பனியே,” NW], மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே” என சங்கீதம் 148:8 சொல்கிறது. ஆம், யெகோவா தம் சித்தத்தை நிறைவேற்ற உயிரற்ற இயற்கை சக்திகளையும் பயன்படுத்துகிறார். அக்கினியை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம், காட்டுத் தீ அழிவுண்டாக்குவதாக மட்டுமே நினைக்கப்பட்டது. ஆனால் இப்போதோ சூழியல் அமைப்பில் அந்தத் தீ முக்கிய பங்காற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்; அது பழைய அல்லது அழுகிக்கொண்டு வரும் மரங்களை அகற்றி, அநேக விதைகளை முளைக்க செய்து, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்து, பார்க்கப்போனால் கட்டுக்கடங்கா தீ பரவும் ஆபத்தை குறைக்கவும் செய்கிறது. வெண்பனியும் முக்கியமானது; ஏனென்றால் அது நிலத்திற்கு நீரும் வளமும் தந்து, ஆறுகளை மீண்டும் நிரப்பி, செடிகொடிகளையும் மிருகங்களையும் கடுங்குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
20. மலைகளும் மரங்களும் எவ்வாறு மனிதனுக்கு நன்மையளிக்கின்றன?
20 “மலைகளே, சகல மேடுகளே [“குன்றுகளே,” NW], கனிமரங்களே, சகல கேதுருக்களே” என சங்கீதம் 148:9 குறிப்பிடுகிறது. கம்பீரமான மலைகள் யெகோவாவின் மகா வல்லமைக்கு அத்தாட்சியாகும். (சங்கீதம் 65:6) அதேசமயத்தில் அவை நடைமுறையான ஒரு நோக்கத்தையும் சேவிக்கின்றன. சுவிட்சர்லாந்திலுள்ள பெர்னில் இருக்கும் நிலயியல் நிறுவனம் இவ்வாறு சொல்கிறது: “உலகிலுள்ள எல்லா மகாநதிகளுக்கும் பிறப்பிடம் மலைகள்தான். மனிதவர்க்கத்தில் பாதிக்கும் அதிகமானோர், மலைகளில் சேரும் நல்ல தண்ணீரையே சார்ந்திருக்கின்றனர். . . . இந்தத் ‘தண்ணீர் டாங்க்குகள்’ மனிதனின் நலனுக்கு மிக அவசியமானவை.” சாதாரண மரம்கூட அதன் படைப்பாளருக்கு மகிமை சேர்க்கிறது. ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: மரங்கள் “அனைத்து நாட்டு மக்களின் நலனுக்கும் இன்றியமையாதவை. . . . மரத்துண்டுகள், கனிகள், கொட்டைகள், மரப்பிசின்கள், பசைகள் ஆகியவற்றை தருவதால் அநேக மரங்கள் பெருமளவு பொருளாதார முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. உலகெங்கும் 200 கோடி மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் மரங்களை சார்ந்திருக்கிறார்கள்.”
21. ஒரு சாதாரண இலை எவ்வாறு ஒருவரால் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறதென விளக்கவும்.
21 மரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே ஞானமுள்ள படைப்பாளர் இருப்பதற்கு அத்தாட்சி. ஒரு சாதாரண இலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வெளிப்புறத்தில் மெழுகுப் பூச்சு இருக்கிறது; இது இலை காய்ந்துவிடாதிருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. இலையின் மேல்பகுதியில் அந்த பூச்சுக்கு அடிப்பகுதியில் க்ளோரோப்ளாஸ்டுகள் உள்ள செல் வரிசை இருக்கிறது. இவற்றில் உள்ள க்ளோரோஃபில் சூரிய ஆற்றலை உறிஞ்சுகிறது. ஒளிச்சேர்க்கை என்ற செயல்முறையின்போது இலைகள் “உணவு தொழிற்சாலைகள்” போல் இயங்குகின்றன. எப்படியெனில், மரத்தின் வேர்கள் மூலம் தண்ணீர் மேலே உறிஞ்சப்பட்டு சிக்கலான “குழாய் அமைப்பு” மூலம் இலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இலைகளின் அடிப்பகுதியில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய “வால்வுகள்” (ஸ்டோமாட்டா என்று பெயர்) திறந்து திறந்து மூடி, கார்பன்டைஆக்ஸைடை உள்ளிழுக்கின்றன. தண்ணீரும் கார்பன்டைஆக்ஸைடும் சேர்ந்து கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்கத் தேவையான ஆற்றலை அவற்றிற்கு ஒளி அளிக்கிறது. இப்போது செடி, தான் தயாரித்த உணவையே சாப்பிடத் தயார்! இந்த “தொழிற்சாலை” அமைதியானது, அழகானது. அதோடு, தூய்மைக்கேட்டை உண்டாக்குவதற்கு பதிலாக ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது!
22, 23. (அ) சில பறவைகளும் நிலத்தில் வாழும் மிருகங்களும் என்ன குறிப்பிடத்தக்க திறமைகளைப் பெற்றிருக்கின்றன? (ஆ) மேலும் என்ன கேள்விகளை நாம் கலந்தாலோசிக்க வேண்டும்?
22 “காட்டுமிருகங்களே, சகலநாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே” என சங்கீதம் 148:10 சொல்கிறது. அநேக பறவைகளும் நிலத்தில் வாழும் மிருகங்களும் அதிசய திறமைகளை வெளிக்காட்டுகின்றன. லேசான் ஆல்பட்ராஸ் என்ற பறவை தொலைதூரங்களுக்கு பறந்து செல்கிறது. (ஒருசமயம் அது வெறும் 90 நாட்களில் 40,000 கிலோமீட்டர் தூரம் பறந்தது). ப்ளாக்போல் பாடும்பறவை வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு பயணிக்கையில் 80 மணிநேரத்திற்கும் அதிக தூரம் ஒரே மூச்சில் பறந்து செல்கிறது. ஒட்டகம், பொதுவாக நினைக்கப்படுவதுபோல் தன் திமிலில் அல்லாமல், தன் செரிமான அமைப்பில் தண்ணீரை சேமித்து வைத்து பல நாட்களுக்கு நீரிழப்பின்றி தாக்குப் பிடிக்கிறது. ஆக, இயந்திரங்களையும் புதிய பொருட்களையும் வடிவமைக்கையில் எஞ்சினியர்கள் விலங்கினங்களை கவனமாக ஆராய்வதில் ஆச்சரியமே இல்லை. “நீங்கள் திறம்பட இயங்கும் ஒன்றை, . . . சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத ஒன்றை வடிவமைக்க விரும்பினால், அதற்கான நல்ல உதாரணத்தை இயற்கையில் எங்காவது காண்பது பெரும்பாலும் உறுதி” என எழுத்தாளர் கேல் க்ளிர் சொல்கிறார்.
23 ஆம், படைப்பு உண்மையிலேயே கடவுளுடைய மகிமையை அறிவிக்கிறது! நட்சத்திரங்கள் நிறைந்த வானங்கள் முதற்கொண்டு செடிகொடி மிருகங்கள் வரை அனைத்தும் அவற்றிற்கே உரிய விதங்களில் படைப்பாளருக்கு துதி சேர்க்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நம்மைப் பற்றியென்ன? இயற்கையைப் போல் நாம் எவ்வாறு கடவுளுக்கு துதியை ஏறெடுக்கலாம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுள் இருப்பதை மறுப்பவர்கள் ஏன் போக்குச் சொல்ல இடமில்லை?
• நட்சத்திரங்களும் கிரகங்களும் எவ்வாறு கடவுளை மகிமைப்படுத்துகின்றன?
• கடலிலும் நிலத்திலும் வாழும் மிருகங்கள், அன்பான படைப்பாளர் இருப்பதற்கு எவ்வாறு அத்தாட்சி அளிக்கின்றன?
• உயிரற்ற இயற்கை சக்திகள் எவ்வாறு யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுகின்றன?
[பக்கம் 10-ன் படம்]
பார்க்க முடிந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 70,00,00,000,00,00,000,00,00,000 என விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர்!
[படத்திற்கான நன்றி]
Frank Zullo
[பக்கம் 12-ன் படம்]
பாட்டில்நோஸ் டால்ஃபின்
[பக்கம் 13-ன் படம்]
வெண்பனித் திவலை
[படத்திற்கான நன்றி]
snowcrystals.net
[பக்கம் 13-ன் படம்]
இளம் லேசான் ஆல்பட்ராஸ்