தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
‘யெகோவாவே, அவர்கள் உமக்கு முன்பாக பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.’—சங்கீதம் 86:9.
1. உயிரற்ற படைப்புகளைக் காட்டிலும் மேம்பட்ட விதங்களில் நம்மால் கடவுளை மகிமைப்படுத்த முடிவது ஏன்?
யெகோவா, தமது படைப்புகள் அனைத்திடமிருந்தும் துதியைப் பெறுவதற்கு பாத்திரமானவர். உயிரற்ற படைப்புகள் அவருக்கு மெளனமாக துதியை ஏறெடுக்கும் வேளையில், மனிதர்களாகிய நாம் பகுத்தறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும், நன்றிதெரிவிப்பதற்கும், வணங்குவதற்கும் திறமை பெற்றிருக்கிறோம். ஆகவே நம்மிடம் சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.”—சங்கீதம் 66:1, 2.
2. கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துமாறு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு யார் கீழ்ப்படிந்திருக்கிறார்கள், ஏன்?
2 மனிதரில் பெரும்பான்மையர் கடவுளை ஏற்றுக்கொள்வதும் இல்லை, அவரை மகிமைப்படுத்துவதும் இல்லை. ஆனாலும் 235 நாடுகளில் 60 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள், “காணப்படாதவைகளாகிய” கடவுளுடைய பண்புகளை அவரது படைப்புகளில் காண்கிறார்கள், அவற்றின் மௌனமான சாட்சியை ‘கேட்கிறார்கள்.’ இதை நிரூபித்தும் இருக்கிறார்கள். (ரோமர் 1:20; சங்கீதம் 19:2, 3) அதோடு, பைபிளை படிப்பதன் மூலம் யெகோவாவை அறிந்து, அவரை நேசிக்கிறார்கள். சங்கீதம் 86:9, 10 இவ்வாறு முன்னறிவித்தது: “ஆண்டவரே [“யெகோவாவே,” NW], நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.”
3. “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” எவ்வாறு ‘இரவும் பகலும் சேவிக்கிறார்கள்’?
3 அதேபோல் “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” “இரவும் பகலும் [தேவனுடைய] ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்” என வெளிப்படுத்துதல் 7:9, 15 விவரிக்கிறது. தமது ஊழியர்கள் தம்மை இடைவிடாமல் துதிக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்ப்பதாக இது அர்த்தப்படுத்தாது, ஆனால் அவரது வணக்கத்தார் உலகளாவிய அமைப்பாக செயல்படுகிறார்கள் என்பதையே குறிக்கிறது. ஆகவே பூமியின் சில பகுதிகளில் இரவு நேரமாக இருக்கையில், மற்ற பகுதிகளில் கடவுளுடைய ஊழியர்கள் சுறுசுறுப்பாக சாட்சி கொடுக்கிறார்கள். ஆக, யெகோவாவை மகிமைப்படுத்துகிறவர்களுக்கு சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என சொல்லலாம். விரைவில், “சுவாசமுள்ள யாவும்” யெகோவாவிற்கு துதியை ஏறெடுக்கும். (சங்கீதம் 150:6) இதற்கிடையே, நாம் எவ்வாறு தனிப்பட்ட விதமாக தேவனை மகிமைப்படுத்தலாம்? நாம் என்ன சவால்களை எதிர்ப்படுவோம்? தேவனை மகிமைப்படுத்துகிறவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன? இவற்றிற்கு பதில் காண, காத் என்ற இஸ்ரவேல் கோத்திரத்தைப் பற்றிய பைபிள் பதிவை கவனிப்போம்.
அன்றைய சவால்
4. காத் கோத்திரம் எதிர்ப்பட்ட சவால் என்ன?
4 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு, இஸ்ரவேலின் காத் கோத்திரத்தார், யோர்தானுக்கு கிழக்கே கால்நடைகளுக்கு ஏற்றதாயிருந்த நாட்டில் குடியேற அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். (எண்ணாகமம் 32:1-5) அங்கே அவர்கள் மிகப் பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மேற்கேயிருந்த கோத்திரங்களுக்கு யோர்தான் பள்ளத்தாக்கு இயற்கை அரணாக இருந்து படையெடுப்பிலிருந்து காத்தது. (யோசுவா 3:13-17) ஆனால் யோர்தானுக்கு கிழக்கே இருந்த இடங்களைப் பற்றி த ஹிஸ்டாரிக்கல் ஜியோகிராஃபி ஆஃப் த ஹோலி லேண்ட் என்ற புத்தகத்தில் ஜார்ஜ் ஆடம் ஸ்மித் இவ்வாறு விவரித்திருக்கிறார்: அவை “அரேபிய மகா பீடபூமியில் எவ்வித தடுப்பும் இல்லாத தட்டையான, சமதள பரப்பாகவே இருந்தன. ஆகவே எல்லா காலங்களிலும் கோரப் பசியுள்ள நாடோடிகளால் படையெடுக்கப்படும் ஆபத்தில் இருந்தன; சில நாடோடிக் கூட்டங்கள் வருடா வருடம் அவ்வாறு படையெடுக்கின்றன.”
5. தாக்கப்படும்போது என்ன செய்யுமாறு காத் கோத்திரத்தாருக்கு யாக்கோபு கட்டளையிட்டார்?
5 அப்படிப்பட்ட ஓயாத தொல்லையை காத் கோத்திரத்தார் எப்படி சமாளித்தார்கள்? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முற்பிதா யாக்கோபு மரணப் படுக்கையில் இவ்வாறு தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்: “காத் என்பவன்மேல் கொள்ளைக்கூட்டம் தாக்கும், ஆனால் அவன் அக்கூட்டத்தின் கடைக்கோடியை தாக்குவான்.” (ஆதியாகமம் 49:19, NW) முதலில் படிக்கும்போது இந்த வார்த்தைகள் நம்பிக்கையற்றவையாக தொனிக்கலாம். ஆனால் உண்மையில் திருப்பித் தாக்க வேண்டும் என்ற கட்டளையே காத் கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வாறு அவர்கள் தாக்கினால், கொள்ளைக்கூட்டத்தார் அவமானப்பட்டு புறமுதுகு காட்டி ஓடுவார்கள், அவர்களது கடைக்கோடியை இவர்கள் துரத்திச் செல்வார்கள் என யாக்கோபு உறுதியளித்தார்.
நம் வணக்கத்திற்கு இன்றைய சவால்கள்
6, 7. இன்று கிறிஸ்தவர்களுடைய நிலைமை எவ்வாறு காத் கோத்திரத்தாருக்கு ஒத்திருக்கிறது?
6 காத் கோத்திரத்தாரைப் போல் இன்று கிறிஸ்தவர்கள் சாத்தானுடைய உலகில் அழுத்தங்களை எதிர்ப்படுகிறார்கள், பாரங்களை சுமக்கிறார்கள்; அவற்றிலிருந்து எவ்வித அற்புத பாதுகாப்பும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. (யோபு 1:10-12) பள்ளிக்கு செல்வது, பிழைப்புக்காக வேலை பார்ப்பது, பிள்ளைகளை வளர்ப்பது ஆகிய அழுத்தங்களை நம்மில் அநேகர் சமாளிக்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட அல்லது உள்ளான அழுத்தங்களையும் குறிப்பிடாதிருக்க முடியாது. சிலர் கொடிய ஊனத்தால் அல்லது நோயால் ‘மாம்சத்தில் ஒரு முள்ளை’ சகிக்க வேண்டியிருக்கிறது. (2 கொரிந்தியர் 12:7-10) மற்றவர்கள் தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார்கள். வயதான கிறிஸ்தவர்களோ முதிர் வயதின் ‘தீங்குநாட்களால்’ பலமிழந்து, ஒருகாலத்தில் யெகோவாவை சேவித்தளவுக்கு இப்போது சேவிக்க முடியாமல் வருந்தலாம்.—பிரசங்கி 12:1.
7 “வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். (எபேசியர் 6:12) நாம் தினந்தோறும் “உலகத்தின் ஆவியை” எதிர்ப்படுகிறோம்; அதாவது சாத்தானும் அவனுடைய பேய்களும் ஊக்குவிக்கும் கலக மனப்பான்மையையும் ஒழுக்க சீர்குலைவையும் எதிர்ப்படுகிறோம். (1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2, 3) தேவபயமுள்ள லோத்துவைப் போல், நம்மைச் சூழ்ந்துள்ள மக்கள் சொல்லும் அல்லது செய்யும் ஒழுக்கக்கேடான காரியங்களைப் பார்த்து இன்று நாம் வருத்தப்படலாம். (2 பேதுரு 2:7) சாத்தான் நம்மை நேரடியாகவும் தாக்குகிறான். “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடன் சாத்தான் யுத்தம் செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) தடைகள், துன்புறுத்தல்கள் என்ற வடிவில் இயேசுவின் “வேறே ஆடுகளும்” சாத்தானின் தாக்குதலை சந்திக்கிறார்கள்.—யோவான் 10:16.
இணங்கிவிடுவதா, எதிர்த்துப் போராடுவதா?
8. சாத்தானுடைய தாக்குதல்களுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும், ஏன்?
8 சாத்தானுடைய தாக்குதல்களுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? காத் கோத்திரத்தாரைப் போலவே, நாமும் ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவர்களாக இருந்து, கடவுள் தரும் வழிநடத்துதல்களுக்கு இசைவாக சாத்தானை எதிர்த்துப் போராட வேண்டும். வருத்தகரமாக, வாழ்க்கையின் அழுத்தங்களால் சிலர் தங்களுடைய ஆவிக்குரிய பொறுப்புகளை புறக்கணித்து, சோர்ந்துபோக ஆரம்பித்திருக்கிறார்கள். (மத்தேயு 13:20-22) தன் சபையில் கூட்டங்களுக்கு ஆஜராவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணத்தை ஒரு சாட்சி இவ்வாறு சொன்னார்: “சகோதரர்கள் உண்மையிலேயே சோர்ந்து போயிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் கவலையிலும் அழுத்தத்திலும் தொய்ந்து போயிருக்கிறார்கள்.” சோர்ந்துபோக இன்று மக்களுக்கு அநேக காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதனால் கடவுளுடைய வணக்கத்தை அழுத்தம் தரும், பாரமான இன்னொரு கடமையாக எளிதில் நினைத்துவிடலாம். ஆனால் அப்படி நினைப்பது சரியா?
9. இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்வது எவ்வாறு இளைப்பாறுதல் தரும்?
9 இயேசுவின் நாட்களிலிருந்த மக்களும் அதேபோல் வாழ்க்கையின் அழுத்தங்களால் அலுத்துக் களைத்துப் போயிருந்தார்கள்; அவர்களிடம் இயேசு சொன்னதை கவனியுங்கள்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” கடவுளுக்கு சேவை செய்வதை நிறுத்திவிடுவதன் மூலம் இளைப்பாறுதல் கிடைக்கும் என்றா இயேசு சொன்னார்? இல்லை. மறுபட்சத்தில், “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என அவர் சொன்னார். நுகம் என்பது, கனமான ஒன்றை மனிதரோ மிருகமோ சுமக்க உதவும் மரத்தாலான அல்லது உலோகத்தாலான சட்டமாகும். அப்படிப்பட்ட ஒரு நுகத்தை யார் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்? நாம் ஏற்கெனவே ‘பாரஞ்சுமக்கிறோம்’ அல்லவா? ஆம், ஆனால் கிரேக்க மொழியில் இவ்வாக்கியம் இவ்வாறும் வாசிக்கப்படலாம்: “என்னுடன்கூட என் நுகத்தின்கீழ் வாருங்கள்.” சற்று யோசித்துப் பாருங்கள்: நம் பாரத்தை இழுத்துச் செல்ல நமக்கு உதவுவதற்கு இயேசு முன்வருகிறார்! அதை நம் சொந்த பலத்தில் செய்ய வேண்டியதில்லை.—மத்தேயு 9:36; 11:28, 29, NW அடிக்குறிப்பு; 2 கொரிந்தியர் 4:7.
10. கடவுளை மகிமைப்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளால் என்ன விளையும்?
10 சீஷர்களுக்குரிய நுகத்தை நாம் ஏற்றுக்கொள்கையில், சாத்தானுக்கு எதிராக போராடுகிறோம். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என யாக்கோபு 4:7 வாக்குறுதி தருகிறது. ஆனால் அது சுலபம் என்பதை இது குறிப்பதில்லை. கடவுளை சேவிக்க கணிசமான முயற்சி தேவை. (லூக்கா 13:24) இருந்தாலும் சங்கீதம் 126:5-ல் பைபிள் இவ்வாறு வாக்குறுதி தருகிறது: “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” ஆம், நன்றியில்லாத ஒரு கடவுளை நாம் சேவிப்பதில்லை. அவர் ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’; தம்மை மகிமைப்படுத்துகிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார்.—எபிரெயர் 11:6.
ராஜ்ய பிரஸ்தாபிகளாக கடவுளை மகிமைப்படுத்துதல்
11. வெளி ஊழியம் சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து நம்மை எவ்வாறு காக்கிறது?
11 ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என இயேசு கட்டளையிட்டார். கடவுளுக்கு “ஸ்தோத்திரபலியை” ஏறெடுக்கும் முக்கிய வழி பிரசங்கிப்பதாகும். (மத்தேயு 28:19; எபிரெயர் 13:15) ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்திருப்பது’ சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து நம்மை காக்கும் ‘சர்வாயுதவர்க்கத்தின்’ இன்றியமையாத பாகமாகும். (எபேசியர் 6:11-15) வெளி ஊழியத்தில் தேவனை துதிப்பது நம் விசுவாசத்திற்கு வளமூட்டும் சிறந்த வழியாகும். (2 கொரிந்தியர் 4:13) எதிர்மறையானவற்றை யோசிக்காதபடி நம் மனதை காக்கும். (பிலிப்பியர் 4:8) வெளி ஊழியத்தில் பங்குகொள்வது உடன் வணக்கத்தாருடன் கட்டியெழுப்பும் கூட்டுறவு கொள்ள வழிசெய்கிறது.
12, 13. வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது குடும்பங்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கிறது? விளக்குக.
12 பிரசங்க வேலை, கட்டியெழுப்பும் குடும்ப நடவடிக்கையாகவும் இருக்கலாம். சிறியவர்களுக்கு சமநிலையான பொழுதுபோக்கு அவசியம்தான். இருந்தாலும் குடும்பமாக வெளி ஊழியத்தில் செலவிடும் நேரம் அலுப்புத்தட்டுவதாக இருக்க வேண்டியதில்லை. திறம்பட்ட விதத்தில் பேசுவதற்கு பிள்ளைகளை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் ஊழியத்தை அனுபவித்து மகிழ பெற்றோர் உதவலாம். இளையவர்கள் தாங்கள் நன்றாக செய்யும் காரியங்களை பொதுவாக மகிழ்ந்து அனுபவிப்பார்கள் அல்லவா? பெற்றோர் அவர்களுடைய வரம்புகளுக்கும் அதிகமாக எதிர்பார்க்காமல் சமநிலையைக் காட்டுவதன் மூலம் அவர்கள் ஊழியத்தில் சந்தோஷத்தைக் கண்டடைய உதவலாம்.—ஆதியாகமம் 33:13, 14.
13 கூடுதலாக, கடவுளை ஒன்றுசேர்ந்து துதிக்கும் குடும்பத்தில் நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவிசுவாசியான கணவர் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். அந்த சகோதரிக்கோ ஐந்து பிள்ளைகள். ஏதாவது வேலையை தேடிக்கண்டுபிடித்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய சவாலை அவர் சந்தித்தார். அவர் அந்தளவு திக்குமுக்காடிப்போய் பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனை புறக்கணித்துவிட்டாரா? அவர் சொல்கிறார்: “நான் பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் ஊக்கமாக படித்தேன். படித்ததை கடைப்பிடிக்கவும் முயற்சி செய்தேன். பிள்ளைகளை கூட்டங்களுக்கும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கும் தவறாமல் அழைத்துச் சென்றேன். என் முயற்சிக்கு பலன் கிடைத்தது. என் ஐந்து பிள்ளைகளும் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்.” அதேபோல் நீங்களும் ஊழியத்தில் முழுமையாக பங்குகொள்வது, பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்க்கும் முயற்சியில் உங்களுக்கு கைகொடுக்கும்.—எபேசியர் 6:4.
14. (அ) இளைஞர்கள் எவ்வாறு பள்ளியில் கடவுளை மகிமைப்படுத்தலாம்? (ஆ) ‘சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாதிருக்க’ இளைஞர்களுக்கு எது உதவும்?
14 இளைஞர்களே, நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டம் அனுமதித்தால், பள்ளியில் சாட்சி கொடுப்பதன் மூலம் கடவுளை மகிமைப்படுத்துகிறீர்களா? அல்லது மனித பயத்தின் காரணமாக தயங்குகிறீர்களா? (நீதிமொழிகள் 29:25) பியூர்டோ ரிகோவில் உள்ள 13 வயது சாட்சி இவ்வாறு சொல்கிறாள்: “ஸ்கூலில் சாட்சி கொடுப்பதற்கு நான் எப்போதுமே வெட்கப்பட்டதில்லை. ஏனென்றால் இதுதான் சத்தியம் என்பது எனக்கு தெரியும். வகுப்பில் நான் எப்போதும் கையைத் தூக்கி பைபிளிலிருந்து கற்றிருக்கும் விஷயங்களை சொல்வேன். ஃப்ரீ டைம் கிடைக்கும்போது லைப்ரரிக்கு போய் இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை வாசிப்பேன்.”a யெகோவா அவளது முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறாரா? “என்னோடு படிக்கும் மாணவர்கள் சிலசமயங்களில் என்னிடம் கேள்விகள் கேட்டு அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைக்கூட வாங்கிக்கொள்கிறார்கள்” என அவள் சொல்கிறாள். இந்த விஷயத்தில் நீங்கள் இதுவரை தயங்கியிருந்தால் ஊக்கமான தனிப்பட்ட படிப்பின் மூலம் “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று” உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். (ரோமர் 12:2) நீங்கள் கற்றிருப்பது சத்தியம்தான் என்று நிச்சயமாக இருந்தீர்களென்றால் ஒருபோதும் ‘சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்பட’ மாட்டீர்கள்.—ரோமர் 1:16.
ஊழியத்திற்கான ‘திறந்த வாசல்’
15, 16. சில கிறிஸ்தவர்கள் நுழைந்திருக்கும் ‘பெரிதும் வேலைக்கு அநுகூலமுமான வாசல்’ எது, அதனால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள்?
15 “பெரிதும் வேலைக்கு அநுகூலமுமான வாசல்” தனக்கு திறக்கப்பட்டிருந்ததாக அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 16:9, திருத்திய மொழிபெயர்ப்பு) கூடுதலான வேலையென்ற வாசலில் நுழைய உங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை அனுமதிக்குமா? உதாரணத்திற்கு, ஒழுங்கான பயனியராக அல்லது துணைப் பயனியராக சேவிப்பது மாதந்தோறும் 70 அல்லது 50 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிடுவதை உட்படுத்துகிறது. பயனியர்கள் செய்யும் உண்மையுள்ள சேவைக்காக உடன் கிறிஸ்தவர்கள் அவர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதால் மற்ற சகோதர சகோதரிகளைவிட தாங்கள் உசத்தியானவர்கள் என அவர்கள் நினைப்பதில்லை. மாறாக, இயேசு ஊக்குவித்த மனப்பான்மையையே அவர்கள் வளர்க்கிறார்கள்: “நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்.”—லூக்கா 17:10.
16 சுயசிட்சை, தனிப்பட்ட ஒழுங்கு, தியாகங்கள் செய்வதற்கான விருப்பம் ஆகியவை பயனியர் ஊழியத்திற்குத் தேவை. ஆனால் அதன் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடுகையில் அவை அனைத்தும் தகும். “கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை சரியாக போதிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்” என இளம் பயனியரான டாமிக்கா சொல்கிறார். “பயனியர் செய்யும்போது மிக அடிக்கடி பைபிளை பயன்படுத்துகிறோம். இப்போது நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் பொருந்தும் வசனங்களை எடுத்துக் காட்ட முடிகிறது.” (2 தீமோத்தேயு 2:15, NW) மைக்கா என்ற மற்றொரு பயனியர் சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “சத்தியம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை பார்ப்பது மற்றொரு அற்புத ஆசீர்வாதம்.” மேத்யூ என்ற இளைஞரும் அதேவிதமாக “சத்தியத்திற்குள் ஒருவர் வருவதைப் பார்க்கும்” சந்தோஷத்தைப் பற்றி சொல்கிறார். “வேறெந்த சந்தோஷமும் இதற்கு ஈடாகாது” என்று குறிப்பிடுகிறார்.
17. பயனியர் ஊழியத்தைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை ஒரு கிறிஸ்தவர் எப்படி மேற்கொண்டார்?
17 பயனியர் ஊழியம் என்ற வாசலில் நுழைவதைப் பற்றி சிந்திப்பீர்களா? ஒருவேளை அவ்வாறு நுழைய நீங்கள் விரும்பலாம், ஆனால் அதற்கு தகுதியில்லாதவர்களாக உணரலாம். “பயனியர் ஊழியத்தைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் எனக்கிருந்தன” என ஒப்புக்கொள்கிறார் இளம் சகோதரியான கென்யாட்டா. “அதை செய்ய எனக்கு தகுதியில்லை என நினைத்தேன். எப்படி பேச ஆரம்பிப்பது அல்லது பைபிளிலிருந்து நியாயங்காட்டி பேசுவது என எனக்குத் தெரியவில்லை” என்கிறார். ஆனால் அவரோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஒரு முதிர்ச்சியுள்ள பயனியர் சகோதரியை மூப்பர்கள் நியமித்தார்கள். “அவர்களோடு ஊழியம் செய்தது அருமையான அனுபவம். பயனியர் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது” என்கிறார். ஒருவேளை நீங்கள்கூட கொஞ்சம் உற்சாகமும் பயிற்சியும் கிடைத்தால் பயனியர் செய்ய ஆசைப்படலாம்.
18. மிஷனரி ஊழியத்தில் கால்பதிப்பவர்கள் என்ன ஆசீர்வாதங்களைப் பெறலாம்?
18 பயனியர் ஊழியம், மற்ற ஊழிய சிலாக்கியங்களுக்கான வாசலையும் திறக்கலாம். உதாரணத்திற்கு மணமான தம்பதிகள் சிலர் வெளிநாட்டில் ஊழியம் செய்வதற்காக மிஷனரி பயிற்சியைப் பெறும் தகுதியைப் பெற்றிருக்கலாம். மிஷனரிகள் புதிய நாடு, ஒருவேளை புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய உணவு ஆகியவற்றையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டும். ஆனால் அதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்குப் பக்கத்தில் அசௌகரியங்கள் துரும்பாகிவிடலாம். மெக்சிகோவிலுள்ள அனுபவமிக்க மிஷனரியான மில்டிரட் இவ்வாறு சொல்கிறார்: “மிஷனரி ஊழியத்தை தேர்ந்தெடுத்ததற்காக நான் ஒருபோதும் மனம் வருந்தியது கிடையாது. சிறுமியாக இருந்த சமயத்திலிருந்தே அதுதான் என் ஆசையாக இருந்தது.” அவர் அடைந்த ஆசீர்வாதங்கள் என்ன? “என் சொந்த நாட்டில் பைபிள் படிப்பு கிடைப்பது கஷ்டம். ஆனால் இங்கே மெக்சிகோவில் என்னுடைய பைபிள் மாணாக்கர்களில் நான்கு பேர் வரை ஒரேசமயத்தில் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பித்ததுண்டு!”
19, 20. பெத்தேல் சேவை, சர்வதேச ஊழியம், ஊழியப் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றிலிருந்து எவ்வாறு அநேகர் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள்?
19 யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் பெத்தேல் சேவை செய்வோருக்கும் அபரிமிதமான ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. ஜெர்மனி நாட்டு பெத்தேலில் வேலை செய்யும் ஓர் இளம் சகோதரர் ஸ்வென் இவ்வாறு சொல்கிறார்: “நிரந்தர மதிப்புள்ள ஒன்றை நான் செய்வதாக உணருகிறேன். என் திறமைகளை உலக காரியங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அது திவாலாகப்போகும் ஒரு வங்கியில் பணத்தைப் போடுவதுபோல் இருந்திருக்கும்.” உண்மைதான், சம்பளம் வாங்காத வாலண்டியர் சேவை செய்வதில் தியாகம் உட்பட்டிருக்கிறது. ஆனால் ஸ்வென் சொல்கிறார்: “வேலையை முடித்து திரும்பும்போது, அன்றைய தினம் நீங்கள் அனைத்தையும் யெகோவாவுக்காக செய்திருக்கிறீர்கள் என்ற உணர்வால் கிடைக்கும் சந்தோஷமே தனி.”
20 சில சகோதரர்கள் சர்வதேச ஊழியம் செய்யும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள்; வெளிநாடுகளில் கிளை அலுவலகங்கள் கட்டுவதற்கு உதவியிருக்கிறார்கள். எட்டு நாடுகளில் அதுபோல் சேவை செய்த ஒரு தம்பதியர் இவ்வாறு எழுதினார்கள்: “இங்கே உள்ள சகோதரர்கள் தங்கமானவர்கள். அவர்களை விட்டுப் பிரிய மனமே வராது.—இப்படி எங்களுடைய மனம் ‘உடைந்திருப்பது’ எட்டாவது தடவை. ஆனால் அருமையான அனுபவத்தை பெற்றிருக்கிறோம்!” இன்னொன்று, ஊழியப் பயிற்சிப் பள்ளியாகும். தகுதிவாய்ந்த, மணமாகாத சகோதரர்களுக்கு அது ஆவிக்குரிய பயிற்சி அளிக்கிறது. அப்பள்ளியில் பயின்ற ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இப்படிப்பட்ட அருமையான பள்ளிக்காக எப்படித்தான் உங்களுக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. இத்தகைய பயிற்சியளிக்க வேறெந்த அமைப்பு இவ்வளவு முயற்சி எடுக்கும்?”
21. கடவுளுக்கு செய்யும் சேவையில் என்ன சவாலை எல்லா கிறிஸ்தவர்களும் எதிர்ப்படுகிறார்கள்?
21 ஆம், வேலைக்கு அனுகூலமான அநேக வாசல்கள் திறந்திருக்கின்றன. நம்மில் பெரும்பாலோருக்கு பெத்தேலில் அல்லது வெளிநாட்டில் சேவை செய்ய முடியாதிருக்கலாம். கிறிஸ்தவர்கள் தத்தம் சூழ்நிலைகள் காரணமாக வெவ்வேறு அளவுகளில் “பலன்” தருவார்கள் என இயேசுவே சொன்னார். (மத்தேயு 13:23) ஆக, கிறிஸ்தவர்களாக நம் சவால், நம் சூழ்நிலையை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதாகும்; அதாவது நம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவுக்கு யெகோவாவின் சேவையில் முழுமையாக பங்குகொள்வதாகும். நாம் அப்படி செய்கையில் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம், அது அவரை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது என நாம் நிச்சயமாயிருக்கலாம். நர்ஸிங் ஹோமிலுள்ள எத்தெல் என்ற வயதான சகோதரியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே தங்கியுள்ள மற்றவர்களிடம் அவர் தவறாமல் சாட்சி கொடுக்கிறார், அதோடு தொலைபேசியிலும் சாட்சி கொடுக்கிறார். அவருடைய வரம்புகளின் மத்தியிலும் முழு இருதயத்தோடு சேவை செய்கிறார்.—மத்தேயு 22:37.
22. (அ) வேறெந்த வழிகளில் நாம் தேவனை மகிமைப்படுத்த முடியும்? (ஆ) என்ன அருமையான காலம் நமக்கு முன் இருக்கிறது?
22 பிரசங்கிப்பது, நாம் யெகோவாவை மகிமைப்படுத்தும் ஒரு வழிதான் என்பதை நினைவில் வையுங்கள். வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், வீட்டில் என எங்கிருந்தாலும் நடத்தையிலும் தோற்றத்திலும் முன்மாதிரியாக இருப்பதன் மூலம் நாம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறோம். (நீதிமொழிகள் 27:11) “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்” என நீதிமொழிகள் 28:20 வாக்குறுதி அளிக்கிறது. ஆகவே ஆசீர்வாதங்களை பெருக அறுப்போம் என்ற நம்பிக்கையோடு கடவுளுடைய சேவையில் நாம் ‘பெருக விதைக்க’ வேண்டும். (2 கொரிந்தியர் 9:6) அவ்வாறு செய்தோமாகில், யெகோவாவுக்கு மிக மிகப் பாத்திரமான மகிமையை “சுவாசமுள்ள யாவும்” அவருக்கு செலுத்தப்போகும் அந்த அருமையான காலத்தின்போது உயிரோடிருக்கும் பாக்கியத்தை நாம் பெறுவோம்!—சங்கீதம் 150:6.
[அடிக்குறிப்பு]
a இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் மக்கள் அவரை எவ்வாறு “இரவும் பகலும்” சேவிக்கிறார்கள்?
• காத் கோத்திரத்தார் எதிர்ப்பட்ட சவால் என்ன, அது இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?
• வெளி ஊழியம் எவ்வாறு சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது?
• சிலர் எந்தெந்த ‘திறந்த வாசலில்’ நுழைந்திருக்கிறார்கள், அதனால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
காத் கோத்திரத்தார் கொள்ளைக்கூட்டங்களுக்கு எதிராக சண்டையிட்டது போல் கிறிஸ்தவர்கள் சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்து போராட வேண்டும்
[பக்கம் 17-ன் படம்]
வெளி ஊழியத்தில் நாம் உற்சாகமூட்டும் கூட்டுறவை அனுபவிக்கிறோம்
[பக்கம் 18-ன் படங்கள்]
பின்வருபவை உட்பட அநேக ஊழிய சிலாக்கியங்களுக்கான வாசலை பயனியர் ஊழியம் திறந்து வைக்கலாம்:
1. சர்வதேச ஊழியம்
2. பெத்தேல் ஊழியம்
3. மிஷனரி ஊழியம்