‘சகித்திருந்து பலன் கொடுக்கிறவர்களை’ யெகோவா நேசிக்கிறார்
“நல்ல நிலத்தைப் போல் இருப்பவர்களோ . . . சகித்திருந்து பலன் கொடுக்கிறார்கள்.” —லூக். 8:15.
1, 2. (அ) மக்கள் காதுகொடுத்துக் கேட்காத பகுதிகளிலும் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து ஊழியம் செய்பவர்களைப் பார்க்கும்போது நமக்கு ஏன் உற்சாகமாக இருக்கிறது? (ஆரம்பப் படம்) (ஆ) தன்னுடைய “சொந்த ஊரில்” ஊழியம் செய்வதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
செர்ஸோ மற்றும் ஒலின்டா தம்பதி, அமெரிக்காவில் பயனியர் சேவை செய்கிறார்கள். அவர்களுக்கு 80 வயதுக்கும் மேல் ஆகிறது. கொஞ்ச நாட்களாக, கால் வலியால் அவர்கள் அவதிப்படுகிறார்கள்; அதனால், நடப்பது அவர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. இருந்தாலும், பல வருஷங்களாகச் செய்துவருவது போல், காலை ஏழு மணிக்கெல்லாம் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு இடத்துக்கு நடந்து போகிறார்கள். அங்கிருக்கும் ஒரு பஸ் நிறுத்தத்துக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, அங்கே வந்துபோகிறவர்களுக்கு நம் பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால், நிறைய பேர் அவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் ஊழியம் செய்கிறார்கள். ஜனங்களைப் பார்த்து அன்போடு புன்னகைக்கிறார்கள். மதியம்வரை ஊழியம் செய்துவிட்டு, இரண்டு பேரும் மெதுவாக நடந்து தங்கள் வீட்டுக்குப் போகிறார்கள். அடுத்த நாள் காலையில், மறுபடியும் ஏழு மணிக்கெல்லாம் அந்தப் பஸ் நிறுத்தத்துக்கு வந்துவிடுகிறார்கள். இப்படி, வருஷம் முழுவதும், வாரத்துக்கு ஆறு நாட்கள் ஊழியம் செய்கிறார்கள்.
2 செர்ஸோ மற்றும் ஒலின்டாவைப் போல, இன்று நிறைய சகோதர சகோதரிகள் தங்களுடைய சொந்த ஊரில் பல வருஷங்களாக ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் காதுகொடுத்துக் கேட்காதபோதும் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்கிறார்கள். ஒருவேளை, நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பகுதியில் ஊழியம் செய்துகொண்டிருக்கலாம். அந்த மாதிரியான இடங்களில் ஊழியம் செய்வது கஷ்டமாக இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து சகிப்புத்தன்மையோடு இருப்பதற்காக உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உங்களுடைய முன்மாதிரி, பல வருஷ அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் உட்பட, எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறது. சில வட்டாரக் கண்காணிகள் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுளுக்கு உண்மையா சேவை செய்ற சகோதர சகோதரிகளோட சேர்ந்து ஊழியம் செய்றது எனக்கு சந்தோஷமா இருக்கு; அவங்களோட முன்மாதிரி எனக்கு புதுத்தெம்ப கொடுக்குது.” “அவங்க விசுவாசத்த பார்க்குறப்போ தொடர்ந்து தைரியமா ஊழியம் செய்யணுங்கற எண்ணம் எனக்கு வருது.” “அவங்க முன்மாதிரி, என் மனசுக்கு சந்தோஷத்த தருது.”
3. என்ன மூன்று கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்வோம், ஏன்?
3 இந்தக் கட்டுரையில், மூன்று கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்வோம்: சிலசமயங்களில் நாம் ஏன் சோர்ந்துபோகலாம்? பலன் கொடுப்பது என்றால் என்ன? சகித்திருந்து பலன் கொடுக்கிறவர்களாக இருக்க எது நமக்கு உதவும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, இயேசு நமக்குக் கொடுத்த பிரசங்க வேலையை நம்மால் தொடர்ந்து செய்ய முடியும்.
நாம் ஏன் சோர்ந்துபோகலாம்?
4. (அ) தான் சொன்ன செய்தியைப் பெரும்பாலான யூதர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது பவுல் எப்படி உணர்ந்தார்? (ஆ) அவர் ஏன் அப்படி உணர்ந்தார்?
4 நீங்கள் ஊழியம் செய்யும் பகுதியில் இருக்கிற மக்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் காதுகொடுத்துக் கேட்காத சமயங்களில், நீங்கள் எப்போதாவது சோர்ந்துபோயிருக்கிறீர்களா? அப்படியென்றால், பவுலுடைய உணர்ச்சிகளை உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவர் கிட்டத்தட்ட 30 வருஷங்கள் ஊழியம் செய்தார்; நிறைய பேர் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு உதவினார். (அப். 14:21; 2 கொ. 3:2, 3) இருந்தாலும், யூதர்களில் நிறைய பேரை அவரால் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக்கமுடியவில்லை. பவுல் சொல்வதை அவர்கள் கொஞ்சம்கூட காதுகொடுத்துக் கேட்கவில்லை; சொல்லப்போனால், சிலர் அவரைத் துன்பப்படுத்தினார்கள். (அப். 14:19; 17:1, 4, 5, 13) இதைப் பற்றி பவுல் எப்படி உணர்ந்தார்? “இதயத்தில் எனக்கு மிகுந்த துக்கமும் தீராத வேதனையும் இருக்கிறது” என்று அவர் சொன்னார். (ரோ. 9:1-3) பிரசங்க வேலையையும் மக்களையும் அவர் ரொம்ப நேசித்தார், யூதர்கள்மேல் அக்கறையாக இருந்தார்; அதனால்தான் அவர் இப்படி உணர்ந்தார். கடவுளுடைய தயவை அவர்கள் ஒதுக்கித்தள்ளியதை நினைத்து பவுல் ரொம்ப வேதனைப்பட்டார்.
5. (அ) மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க எது நம்மைத் தூண்டுகிறது? (ஆ) சிலசமயங்களில் சோர்ந்துபோவது இயல்பான ஒரு விஷயம்தான் என்று ஏன் சொல்லலாம்?
5 பவுலைப் போல நாமும் மக்களை நேசிக்கிறோம், அவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறோம்; அதனால்தான் பிரசங்கிக்கிறோம். (மத். 22:39; 1 கொ. 11:1) யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் சிறந்த வாழ்க்கைமுறை என்பதை நம்முடைய சொந்த அனுபவத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்களும் அதை அனுபவிக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுவதால், அவர்களுக்கு உதவ நினைக்கிறோம். அதனால்தான், யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்படி மக்களை உற்சாகப்படுத்துகிறோம். பிரசங்க வேலை செய்வது, அழகான ஒரு பரிசைக் கொண்டுபோய், ‘தயவுசெஞ்சு இத வாங்கிக்கோங்க’ என்று மக்களிடம் சொல்வதைப் போல் இருக்கிறது. அவர்கள் அந்தப் பரிசை ஏற்றுக்கொள்ளாதபோது, பவுலைப் போல நமக்கும் ‘தீராத வேதனை’ ஏற்படலாம்; இது இயல்புதான். அதற்காக, நமக்கு விசுவாசம் இல்லையென்று அர்த்தம் கிடையாது. நாம் வேதனைப்படுவதற்குக் காரணம், நாம் மக்கள்மீது வைத்திருக்கும் அன்புதான்! அதனால்தான், சிலசமயங்களில் நாம் சோர்ந்துபோனாலும் தொடர்ந்து ஊழியம் செய்கிறோம். 25 வருஷங்களுக்கும்மேல் பயனியர் சேவை செய்யும் சகோதரி எலியேனா இப்படிச் சொல்கிறார்: “ஊழியம் செய்றது எனக்கு கஷ்டமாதான் இருக்கு. ஆனா, இதவிட ஒரு நல்ல வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.” எலியேனா சொல்வதை நாமும் ஒத்துக்கொள்கிறோம், இல்லையா?
பலன் கொடுக்கிறவர்களாக இருப்பது எதைக் குறிக்கிறது?
6. எந்தக் கேள்விக்கான பதிலை நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்?
6 நாம் எங்கே ஊழியம் செய்தாலும் நம்மால் பலன் கொடுக்க முடியும். எப்படி? இதற்கான பதிலை, இயேசு சொன்ன இரண்டு உவமைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ‘பலன் தருவது’ எவ்வளவு முக்கியம் என்பதை அவர் அந்த உவமைகளில் விளக்கியிருக்கிறார். (மத். 13:23) முதலில், திராட்சைக் கொடியைப் பற்றிய உவமையைப் பார்க்கலாம்.
7. (அ) இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டிருக்கும் திராட்சைத் தோட்டக்காரர் யார், திராட்சைக் கொடி மற்றும் கிளைகள் யாரைக் குறிக்கின்றன? (ஆ) எந்தக் கேள்விக்கு நாம் பதில் தெரிந்துகொள்ளப்போகிறோம்?
7 யோவான் 15:1-5, 8-ஐ வாசியுங்கள். இந்த உவமையில், யெகோவாதான் அந்தத் திராட்சைத் தோட்டக்காரர் என்றும், தான்தான் அந்தத் திராட்சைக் கொடி என்றும், சீஷர்கள்தான் கிளைகள் என்றும் இயேசு விளக்குகிறார்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பிறகு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், “நீங்கள் அதிகமதிகமாகக் கனி தந்து, என்னுடைய சீஷர்கள் என்று நிரூபிக்கும்போது, என் தகப்பன் மகிமைப்படுகிறார்” என்று சொன்னார். அப்படியென்றால், கனி தருவது என்றால் என்ன? இந்த உவமையில், அதைப் பற்றி இயேசு நேரடியாகச் சொல்லவில்லை என்பது உண்மைதான்; ஆனால், அதைத் தெரிந்துகொள்வதற்கு உதவுகிற ஒரு குறிப்பைச் சொல்லியிருக்கிறார்.
8. (அ) திராட்சைக் கொடி பற்றிய உவமையில், கனி கொடுப்பது என்பது, புதிய சீஷர்களை உருவாக்குவதைக் குறிக்கிறதா? விளக்கவும். (ஆ) யெகோவா நம்மிடமிருந்து எதை மட்டுமே எதிர்பார்க்கிறார்?
8 “கனி தராத என்னுடைய கிளைகள் எல்லாவற்றையும் அவர் வெட்டிப்போடுகிறார்” என்று தன்னுடைய அப்பாவைப் பற்றி இயேசு சொன்னார். வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் கனி கொடுத்தால் மட்டுமே, அதாவது பலன் கொடுத்தால் மட்டுமே, யெகோவாவுடைய ஊழியர்களாக இருக்க முடியும். (மத். 13:23; 21:43) இந்த உவமையில், புதிய சீஷர்களை உருவாக்குவதை கனி கொடுப்பதற்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. (மத். 28:19) அப்படிச் சொல்லியிருந்தால், மற்றவர்களை கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக்க முடியாத எத்தனையோ உண்மையுள்ள சகோதர சகோதரிகளை பலன் தராத கிளைகளுக்கு ஒப்பிட்டுச் சொல்வதுபோல் ஆகிவிடும்! அப்படிச் சொல்வது சரியாகவும் இருக்காது. ஏனென்றால், சீஷராகும்படி மற்றவர்களை நாம் கட்டாயப்படுத்த முடியாது! யெகோவா அன்புள்ள கடவுளாக இருப்பதால், நம்மால் முடியாத ஒரு விஷயத்தை நாம் செய்ய வேண்டுமென்று சொல்ல மாட்டார். நம்மால் செய்ய முடிந்ததைத்தான் அவர் கேட்பார்.—உபா. 30:11-14.
9. (அ) நாம் எப்படிப் பலன் கொடுக்கலாம்? (ஆ) அடுத்ததாக நாம் எந்த உவமையைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
9 அப்படியென்றால், பலன் தருவது எதைக் குறிக்கிறது? நம் எல்லாராலும் செய்ய முடிந்த ஒரு வேலையைத்தான் அது குறிக்க வேண்டும்! தன்னுடைய ஊழியர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிற ஒரு வேலையை, அதாவது அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற வேலையை, அது குறிக்க வேண்டும்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (மத். 24:14) இயேசு சொன்ன விதைக்கிறவன் பற்றிய உவமையிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். இப்போது, அந்த உவமையைப் பற்றிப் பார்க்கலாம்.
10. (அ) விதைப்பவனைப் பற்றிய உவமையில் சொல்லப்பட்டிருக்கிற விதையும் நிலமும் எதைக் குறிக்கின்றன? (ஆ) கோதுமைப் பயிர் எதை உருவாக்குகிறது?
10 லூக்கா 8:5-8, 11-15-ஐ வாசியுங்கள். விதைப்பவனைப் பற்றிய உவமையில் சொல்லப்பட்டிருக்கிற விதை, ‘கடவுளுடைய செய்தியை’ அல்லது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் குறிப்பதாக இயேசு விளக்கினார். நிலம், ஒருவருடைய இதயத்தைக் குறிக்கிறது. நல்ல நிலத்தில் விழுந்த விதை, வேர்கள்விட்டு, முளைத்து, செடியாக வளருகிறது. பிறகு, ‘100 மடங்கு பலன் தருகிறது.’ ஒருவேளை அது கோதுமைப் பயிராக இருந்தால், என்ன பலனைத் தரும்? சிறிய கோதுமைப் பயிர்களையா? இல்லை! அது கோதுமை மணிகளைத்தான் பலனாகத் தரும். பிறகு, அந்தக் கோதுமை மணிகள் வளர்ந்து கோதுமைப் பயிராக ஆகும். இந்த உவமையில், ஒரு விதை 100 விதைகளை உருவாக்குகிறது! நம்முடைய ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இது எதைக் குறிக்கிறது?
11. (அ) விதைப்பவனைப் பற்றிய உவமை நம்முடைய ஊழியத்தைப் பற்றி நமக்கு என்ன கற்றுத்தருகிறது? (ஆ) நாம் எப்படி புதிய விதைகளை உருவாக்குகிறோம்?
11 நம்முடைய அப்பா அம்மாவோ வேறு சகோதர சகோதரிகளோ, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முதல்முதலில் நமக்குச் சொன்னபோது, நல்ல நிலத்தில் விதை விதைத்தார்கள் என்று சொல்லலாம். நாம் அதை ஏற்றுக்கொண்டபோது, அவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் விதைத்த விதை, பலன் தரும்வரை தொடர்ந்து வளர்ந்தது. கோதுமைப் பயிர், கோதுமைப் பயிர்களை உருவாக்குவதில்லை என்பதை முந்தின பாராவில் பார்த்தோம். அதேபோல், நாமும் புதிய சீஷர்களை உருவாக்குவதில்லை; புதிய விதைகளைத்தான் உருவாக்குகிறோம்.d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) எப்படி? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை நாம் சொல்கிற ஒவ்வொரு தடவையும், நம்முடைய இதயத்தில் விதைக்கப்பட்ட விதையை பலமடங்கு பெருகச் செய்கிறோம்; மற்ற இடங்களில் தூவுகிறோம். (லூக். 6:45; 8:1) அதனால், நாம் தொடர்ந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைப் பிரசங்கிக்கும்போது, ‘சகித்திருந்து பலன் கொடுக்கிறோம்’ என்று அர்த்தம்!
12. (அ) இயேசு சொன்ன திராட்சைக் கொடி மற்றும் விதைப்பவனுடைய உவமைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) இதைத் தெரிந்துகொள்வதால் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
12 இயேசு சொன்ன திராட்சைக் கொடி மற்றும் விதைப்பவனுடைய உவமைகளிலிருந்து நாம் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்: ‘பலன் கொடுப்பது’ என்பது, நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து அல்ல, நாம் தொடர்ந்து பிரசங்கிக்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இதே போன்ற கருத்தை பவுலும் சொல்லியிருக்கிறார். “ஒவ்வொருவனும் தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவான்” என்று அவர் சொன்னார். (1 கொ. 3:8) நம்முடைய உழைப்பைப் பார்த்துதான் யெகோவா நம்மை ஆசீர்வதிக்கிறார், நம்முடைய உழைப்பால் ஏற்படுகிற பலனைப் பார்த்து அல்ல! 20 வருஷங்களாகப் பயனியர் சேவை செய்யும் மெட்டில்டா என்ற சகோதரி, இப்படிச் சொல்கிறார்: “நாம எடுக்குற முயற்சிகளுக்காக யெகோவா நம்மள ஆசீர்வதிக்கிறாருங்குறத நினைக்குறப்போ, எனக்கு சந்தோஷமா இருக்கு.”
நாம் எப்படி சகித்திருந்து பலன் தரலாம்?
13, 14. ரோமர் 10:1, 2-ன்படி, பிரசங்கிப்பதை பவுல் ஏன் நிறுத்தவே இல்லை?
13 ‘சகித்திருந்து பலன் தருவதற்கு’ நமக்கு எது உதவும்? அதைத் தெரிந்துகொள்வதற்கு, பவுலுடைய உதாரணத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கலாம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை யூதர்கள் ஒதுக்கித்தள்ளியபோது, பவுலுக்கு வேதனையாக இருந்தது என்று முன்பே கவனித்தோம். இருந்தாலும், பிரசங்கிப்பதை அவர் நிறுத்தவே இல்லை. “இஸ்ரவேலர்கள் மீட்புப் பெற வேண்டும் என்பது என் இதயப்பூர்வமான ஆசை, அதற்காகவே நான் கடவுளிடம் மன்றாடுகிறேன். அவர்களுக்குக் கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது என்று சாட்சி சொல்கிறேன்; ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற வைராக்கியம் கிடையாது” என்று அவர் சொன்னார். (ரோ. 10:1, 2) இதிலிருந்து, யூதர்களைப் பற்றி பவுல் எப்படி உணர்ந்தார் என்பது நமக்குப் புரிகிறது. அவர் தொடர்ந்து பிரசங்கித்ததுக்கு என்ன காரணம்?
14 முதலாவதாக, தனக்கு இருந்த ‘இதயப்பூர்வமான ஆசைதான்’ யூதர்களுக்கு பிரசங்கிக்கத் தன்னைத் தூண்டியதாக பவுல் சொன்னார். அவர்கள் மீட்புப் பெற வேண்டுமென்று பவுல் உண்மையிலேயே ஆசைப்பட்டார். (ரோ. 11:13, 14) இரண்டாவதாக, ‘[அவர்களுக்காக] கடவுளிடம் மன்றாடுவதாக’ அவர் சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்ள ஒவ்வொரு யூதனுக்கும் உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சினார். மூன்றாவதாக, “அவர்களுக்குக் கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது” என்று சொன்னார். யூதர்களிடமிருந்த நல்ல விஷயங்களை அவர் பார்த்தார், யெகோவாவுக்குச் சேவை செய்யும் தகுதி அவர்களுக்கு இருப்பதைக் கவனித்தார். வைராக்கியமுள்ள அந்த யூதர்கள், தன்னைப் போலவே வைராக்கியமுள்ள கிறிஸ்தவ சீஷர்களாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது.
15. நாம் எப்படி பவுலைப் பின்பற்றலாம்? சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.
15 நாம் எப்படி பவுலைப் பின்பற்றலாம்? முதலாவதாக, ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்களை’ கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் ஊழியம் செய்யும்போது, நேர்மையான ஆட்களுடைய இதயத்தைத் திறக்கச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும். (அப். 13:48; 16:14) கிட்டத்தட்ட 30 வருஷங்களாக பயனியர் சேவை செய்கிற சில்வானா என்ற சகோதரி அதைத்தான் செய்தார். “பிரசங்கிக்குறதுக்காக ஒரு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, நம்பிக்கையான மனநிலைய தரச்சொல்லி நான் யெகோவாகிட்ட ஜெபம் செய்வேன்” என்று அவர் சொல்கிறார். காதுகொடுத்துக் கேட்பதற்கு மனமுள்ளவர்களிடம் தேவதூதர்கள் நம்மை வழிநடத்த வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்; அதற்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். (மத். 10:11-13; வெளி. 14:6) ராபர்ட் என்ற சகோதரர், 30 வருஷங்களுக்கும்மேல் பயனியர் சேவை செய்கிறார். “ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் என்ன நடக்குதுனு தேவதூதர்களுக்கு தெரியும். அவங்களோட சேர்ந்து வேலை செய்றது நினைச்சாவே பிரமிப்பா இருக்கு” என்று அவர் சொல்கிறார். மூன்றாவதாக, மக்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், யெகோவாவுக்குச் சேவை செய்யும் தகுதி அவர்களுக்கு இருப்பதை நாம் உணர வேண்டும். கார்ல் என்ற மூப்பர், ஞானஸ்நானம் எடுத்து 50 வருஷங்களுக்கும்மேல் ஆகிறது. “ஜனங்களுக்கு உண்மையிலயே ஆர்வம் இருக்கானு தெரிஞ்சுக்க, அவங்ககிட்ட ஏதாவது ஒரு சின்ன அறிகுறியாவது தெரியுதானு பார்ப்பேன். உதாரணத்துக்கு, அவங்களோட புன்னகை... அன்பான பார்வை... இல்லனா, உண்மையிலயே பதில் தெரிஞ்சுக்கறதுக்காக அவங்க கேட்குற ஏதாவது ஒரு கேள்வி... இப்படி ஏதாவது ஒரு அறிகுறியாவது தெரியுதானு கவனிப்பேன்” என்று அவர் சொல்கிறார். நாமும் இப்படிச் செய்தால், பவுலைப் போல நம்மாலும் ‘சகித்திருந்து பலன் தர முடியும்.’
‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்’
16, 17. (அ) பிரசங்கி 11:6-லிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? (ஆ) நம்முடைய பிரசங்க வேலை, அதைக் கவனித்துக்கொண்டிருக்கிறவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
16 நம்முடைய செய்தி யாருடைய மனதுக்குள்ளும் போகவில்லை என்று நாம் நினைக்கலாம். இருந்தாலும், நம்முடைய வேலை ஜனங்கள்மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. (பிரசங்கி 11:6-ஐ வாசியுங்கள்.) நாம் நன்றாக உடுத்தியிருப்பதையும், மரியாதையாகவும் நட்பாகவும் பழகுவதையும் மக்கள் கவனிக்கிறார்கள். இவையெல்லாம் அவர்களைக் கவரலாம். காலப்போக்கில், நம்மைப் பற்றித் தவறாக நினைத்தவர்கள்கூட, நம்மைப் பற்றி நல்லவிதமாக நினைக்க ஆரம்பிக்கலாம். செர்ஸோ மற்றும் ஒலின்டா தம்பதி, இதை அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள்.
17 “உடம்பு சரியில்லாததால, ஊழியத்துக்காக நாங்க எப்பவும் போற இடத்துக்கு கொஞ்ச நாள் போகல. திரும்பவும் அங்க போனப்போ, ‘என்னாச்சு, கொஞ்ச நாளா உங்கள காணமே?’ அப்படினு அந்தப் பக்கம் போறவங்க வர்றவங்கெல்லாம் கேட்டாங்க” என்று செர்ஸோ சொல்கிறார். ஒலின்டா இப்படிச் சொல்கிறார்: “பஸ் டிரைவர்கள் எங்கள பார்த்து, ‘பை’ சொன்னாங்க. டிரைவர் சீட்ல உட்கார்ந்துகிட்டே ‘நீங்க அருமையான ஒரு வேலை செய்றீங்க’னு சொன்னாங்க, பத்திரிகைகளகூட கேட்டாங்க.” ஒரு நபர், பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்த வீல் ஸ்டேண்டுக்குப் பக்கத்தில் வந்து, அவர்களுக்கு ஒரு பூங்கொத்து கொடுத்தார்; பிறகு, அவர்கள் செய்கிற வேலைக்கு நன்றி சொன்னார். செர்ஸோ மற்றும் ஒலின்டாவுக்கு அது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
18. ‘சகித்திருந்து பலன் கொடுப்பதில்’ நீங்கள் ஏன் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
18 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை ‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்.’ அப்போது, ‘எல்லா தேசத்தாருக்கும் சாட்சி’ கொடுப்பதில் உங்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். (மத். 24:14) எல்லாவற்றையும்விட, நீங்கள் யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துவதால், உங்களுக்கு அளவில்லாத சந்தோஷம் கிடைக்கும். ‘சகித்திருந்து பலன் கொடுக்கிற’ எல்லாரையும் யெகோவா நேசிக்கிறார்!
a தன்னுடைய சொந்த ஊரில் ஊழியம் செய்வது கஷ்டமாக இருந்ததென்று இயேசுவும் சொன்னார். இதைப் பற்றி நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.—மத். 13:57; மாற். 6:4; லூக். 4:24; யோவா. 4:44
b இந்த உவமையில் வரும் கிளைகள், பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கிறது; இருந்தாலும், கடவுளுடைய ஊழியர்கள் எல்லாரும் இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
c ‘பலன் கொடுப்பது’ என்பது, ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ காட்டுவதையும் குறிக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும், ‘நம்முடைய உதடுகளின் கனியை’ பற்றி அல்லது நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.—கலா. 5:22, 23; எபி. 13:15.
d மற்ற சமயங்களில், சீஷராக்கும் வேலையைக் குறிப்பதற்காக, விதை விதைப்பது மற்றும் அறுவடை செய்வதைப் பற்றிய உவமையை இயேசு பயன்படுத்தியிருக்கிறார்.—மத். 9:37; யோவா. 4:35-38.