உங்களால் ‘நன்மை தீமையைப் பகுத்தறிய’ முடியுமா?
“கர்த்தருக்கு ஏற்கத்தகுந்தது இன்னதென்று தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:10, Nw.
1. எந்த விதத்தில் இன்று வாழ்க்கை சிக்கலாக இருக்கலாம், ஏன்?
“யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லையென்றும் தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23, தி.மொ.) எரேமியா உணர்ந்துகொண்ட இந்த முக்கிய உண்மை, இன்று நமக்கு அதிக அர்த்தமுள்ளது. ஏன்? ஏனென்றால், பைபிள் முன்னறிவித்தபடி, “கையாளுவதற்கு கடினமாயுள்ள கொடிய காலங்களில்” நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சிக்கலான சூழ்நிலைகளை தினமும் எதிர்ப்படுகிறோம். இந்தத் தீர்மானங்கள் பெரியவையோ சிறியவையோ, நம்முடைய நலனை—சரீர ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும்—பெரிதும் பாதிக்கலாம்.
2. என்ன தெரிவுகள் சர்வசாதாரணமானவையாக கருதப்படலாம், ஆனால் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் அவற்றை எப்படி கருதுகிறார்கள்?
2 அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தெரிவுகள் பல, வழக்கமானவையாக அல்லது சாதாரணமானவையாக இருக்கலாம். உதாரணமாக, எந்த டிரெஸ்ஸை போட்டுக்கொள்வது, என்ன உணவை சாப்பிடுவது, யாரை சந்திப்பது போன்றவற்றை ஒவ்வொரு நாளும் தவறாமல் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இவற்றைப் பற்றி பெரிதாக சிந்தித்துக் கொண்டிருக்காமல் பெரும்பாலும் இயல்பாகவே தெரிவு செய்கிறோம். ஆனால் இவையெல்லாம் உண்மையில் சர்வசாதாரணமானவையா? ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக, நம்முடைய உடையிலும் தோற்றத்திலும், புசிப்பதிலும் குடிப்பதிலும், பேச்சிலும் நடத்தையிலும் நாம் செய்யும் தெரிவுகள் எப்போதும் மகா உன்னதராகிய யெகோவா தேவனின் ஊழியர்களென நம்மை அடையாளம் காட்டும் என்பதைக் குறித்து அதிக கவனமாய் இருக்கிறோம். அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டப்படுகின்றன: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31; கொலோசெயர் 4:6; 1 தீமோத்தேயு 2:9, 10.
3. உண்மையிலேயே அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய தெரிவுகள் யாவை?
3 இன்னும் அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய தெரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக, மணமுடிப்பதா அல்லது மணமுடிக்காமலே இருப்பதா என்பதைத் தீர்மானிப்பது நிச்சயமாகவே ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான, நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. காலமெல்லாம் சேர்ந்து வாழ்வதற்காக மணமுடிக்க பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே சிறிய விஷயமல்ல.a (நீதிமொழிகள் 18:22) மேலும், நண்பர்கள், கூட்டாளிகள், கல்வி, வேலை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் நாம் செய்யும் தெரிவு, நம் ஆவிக்குரிய தன்மையையே தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்குச் செலுத்துகிறது; இவ்வாறாக அது நம்முடைய நித்திய நலனையும் பாதிக்கிறது.—ரோமர் 13:13, 14; எபேசியர் 5:3, 4.
4. (அ) என்ன திறமை அதிக பயனளிக்கும்? (ஆ) என்ன கேள்விகளை சிந்திப்பது அவசியம்?
4 இந்த எல்லா தெரிவுகளையும் நாம் எதிர்ப்படுவதால், நன்மை எது தீமை எது அல்லது நன்மையானதுபோல் தோன்றுவது எது உண்மையிலேயே நன்மையானது எது என்பவற்றை பகுத்தறியும் திறமை பெற்றிருப்பது நிச்சயம் நமக்கு பயனளிக்கும். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 14:12) ஆகவே, நாம் இவ்வாறு கேட்கலாம்: ‘நன்மையானதையும் தீமையானதையும் வேறுபடுத்திக் காணும் திறமையை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? தீர்மானம் செய்வதில் நமக்குத் தேவைப்படும் வழிநடத்துதலை நாம் எங்கே பெறலாம்? இதன் சம்பந்தமாக கடந்த காலத்திலும் தற்காலத்திலும் ஆட்கள் என்ன செய்திருக்கிறார்கள், அதன் விளைவு என்ன?’
இவ்வுலகின் ‘தத்துவ சாஸ்திரமும் மாயமான வஞ்சகமும்’
5. எத்தகைய உலகில் பூர்வ கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள்?
5 கிரேக்க-ரோம கொள்கைகளும் நெறிமுறைகளும் செல்வாக்கு செலுத்திய ஓர் உலகில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள். ஒரு பக்கத்தில், ரோமர்களின் வாழ்க்கை பிறர் பொறாமைப்படும் அளவுக்கு சொகுசாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. மறுபக்கத்தில், அன்றைய அறிவுஜீவிகள் மத்தியில், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவங்கள் மட்டுமல்லாமல், எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் போன்ற புதிய கோட்பாட்டாளர்களின் தத்துவ கிளர்ச்சியும் மிகுந்திருந்தது. தன் இரண்டாவது மிஷனரி பயணத்தில் அப்போஸ்தலன் பவுல் அத்தேனே பட்டணத்துக்கு வந்தபோது, எப்பிக்கூர, ஸ்தோயிக்க தத்துவஞானிகளை எதிர்ப்பட்டார்; “வாயாடி” பவுலைப் பார்க்கிலும் மேம்பட்டவர்கள் என இவர்கள் தங்களை எண்ணிக் கொண்டார்கள்.—அப்போஸ்தலர் 17:18.
6. (அ) ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சிலர் என்ன செய்வதற்கு கவர்ந்திழுக்கப்பட்டார்கள்? (ஆ) பவுல் என்ன எச்சரிக்கை கொடுத்தார்?
6 எனவே, தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் போலித்தனமான போக்குகளிலும் வாழ்க்கைப் பாணிகளிலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் கவர்ந்திழுக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் கஷ்டமேயில்லை. (2 தீமோத்தேயு 4:10) அந்த ஒழுங்குமுறையில் முழுமையாக மூழ்கியிருந்தவர்கள் பல நன்மைகளையும் அனுகூலங்களையும் அனுபவிப்பதுபோல் தோன்றியது. மேலும் அவர்கள் செய்த தெரிவுகள் சரியானவையாக தோன்றின. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவ வாழ்க்கை முறை அளிக்காத மதிப்புமிக்க ஏதோவொன்று இந்த உலகிடம் இருப்பதுபோல் தோன்றியது. எனினும், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “தத்துவ சாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரை முறைமைக்கும் உலகத்தின் பாலபோதனைகளுக்கும் இசைந்தவைகளேயன்றிக் கிறிஸ்துவுக்கு இசைந்தவைகளல்ல.” (கொலோசெயர் 2:8, தி.மொ.) பவுல் ஏன் அதைச் சொன்னார்?
7. இந்த உலக ஞானம் உண்மையில் எந்தளவு மதிப்புமிக்கது?
7 உலகத்தால் கவர்ந்திழுக்கப்பட்டவர்களுடைய சிந்தனையில் உண்மையில் ஆபத்து மறைந்திருந்ததை பவுல் உணர்ந்திருந்ததால் இந்த எச்சரிக்கையை கொடுத்தார். ‘தத்துவ சாஸ்திரம், மாயமான வஞ்சகம்’ என்று அவர் பயன்படுத்தின சொற்றொடர் முக்கியமாய் கவனிக்கத்தக்கவை. ஆங்கிலத்தில் ‘தத்துவ சாஸ்திரம்’ என்பது சொல்லர்த்தமாக “ஞானத்தை ஆர்வத்துடன் நாடித் தொடர்வதைக்” குறிக்கிறது. அதுவே பயனுள்ளதாக இருக்கலாம். பைபிள், முக்கியமாய் நீதிமொழிகளின் புத்தகம், சரியான வகை அறிவையும் ஞானத்தையும் நாடித் தேடும்படி உண்மையில் ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 1:1-7; 3:13-18) என்றபோதிலும், ‘தத்துவ சாஸ்திரத்தை’ ‘மாயமான வஞ்சகத்தோடு’ பவுல் இணைத்துப் பேசினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த உலகம் அளிக்கும் ஞானத்தை வெறுமையானதாகவும் வஞ்சகமானதாகவும் பவுல் கருதினார். காற்றடைக்கப்பட்ட ஒரு பலூனைப்போல், அது பார்வைக்கு விஷயம் நிறைந்ததாய் தோன்றினாலும், உண்மையில் அதில் நடைமுறை பயனேதுமில்லை. இந்த உலகின் ‘தத்துவ சாஸ்திரம், மாயமான வஞ்சகம்’ போன்று நடைமுறை பயனற்ற ஒன்றை அடிப்படையாக வைத்து நன்மை, தீமையைத் தெரிவு செய்வது உண்மையிலேயே பிரயோஜனமற்றது, ஆபத்தானதும்கூட.
“தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” சொல்வோர்
8. (அ) ஆலோசனை பெற ஆட்கள் யாரை நாடுகின்றனர்? (ஆ) என்ன வகையான ஆலோசனை வழங்கப்படுகிறது?
8 இன்று நிலைமை அதிகம் மாறிவிடவில்லை. பெரும்பாலும், மனிதன் முயற்சி எடுக்கும் ஒவ்வொரு துறையிலும் அநேக நிபுணர்கள் இருக்கிறார்கள். திருமண மற்றும் குடும்ப ஆலோசகர்கள், பத்திரிகை பத்தி எழுத்தாளர்கள், மருத்துவர்களாக தங்களை சொல்லிக்கொள்வோர், சோதிட கலைஞர்கள், ஆவியுலக மத்தியஸ்தர்கள் போன்ற இன்னுமநேகர் பணம் கொடுத்தால் ஆலோசனை கூற தயாராய் இருக்கிறார்கள். ஆனால், என்ன விதமான ஆலோசனை வழங்கப்படுகிறது? பெரும்பாலும், புதிய ஒழுக்கநெறி என அழைக்கப்படுவதற்கு இடமளிக்கும்படி, பைபிளின் ஒழுக்க தராதரங்கள் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. உதாரணமாக, “ஒரே பாலினத்தவர் திருமணங்களை” பதிவு செய்ய அரசாங்கம் மறுத்ததைப் பற்றி குறிப்பிடுகையில், கனடாவின் முக்கிய செய்தித்தாளான த குளோப் அண்ட் மெயில் பதிப்பாசிரியர் பகுதியில் இவ்வாறு சொல்லப்படுகிறது: “ஒருவருக்கொருவர் அன்பும் பரஸ்பர பற்றும் நிறைந்த இருவர், ஒரே பாலினத்தவராக இருப்பதன் காரணமாக அவர்களுடைய இதயப்பூர்வமான ஆவலை மறுப்பது இந்த 2000 ஆண்டில் நியாயமற்றதாக இருக்கிறது.” குறை காண்பதல்ல, பொறுத்துப் போவதே இன்றைய நிலை. நன்மை, தீமை என்ற விஷயத்திலும் திட்டவட்டமான தராதரம் இனிமேலும் இல்லை, ஒருவரின் நோக்குநிலையைப் பொறுத்து எல்லாம் சம்பந்தப்பட்டதாகவே கருதப்படுகிறது.—சங்கீதம் 10:3, 4.
9. சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களாக கருதப்படுகிறவர்கள் பெரும்பாலும் என்ன செய்கிறார்கள்?
9 வேறுசிலரோ தீர்மானங்களைச் செய்வதில் சமூக ரீதியிலும் பண ரீதியிலும் வெற்றி காண்பவர்களை—அதாவது, பணக்காரர்களையும் பிரபலமானவர்களையும்—பின்பற்றத்தக்க மாதிரிகளாக வைத்திருக்கிறார்கள். இன்றைய சமுதாயத்தில் பணக்காரர்களும் பிரபலமானவர்களும் மதிப்புமிக்கவர்களாக கருதப்பட்டாலும், நேர்மை, நம்பிக்கை போன்ற விஷயங்களில் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். பதவியையும் பண லாபத்தையும் நாடுகையில், ஒழுக்க நியமங்களை மீறும்போதும் மிதிக்கும்போதும் மனசாட்சியின் உறுத்தலை அநேகர் உணருவதில்லை. பேரையும் புகழையும் அடைவதற்காக, ஸ்தாபிக்கப்பட்ட நெறிமுறைகளையும் தராதரங்களையும் அக்கறையின்றி ஒதுக்கித் தள்ளிவிட்டு, வித்தியாசமாகவும் வெறுப்பூட்டும் விதமாகவும் சிலர் நடந்துகொள்கிறார்கள். இதன் விளைவு, ‘எதுவும் சம்மதம்’ என்ற குறிக்கோளுடைய லாபம் நாடும், கட்டுப்பாடற்ற சமுதாயம். நன்மை, தீமையைத் தீர்மானிப்பதைக் குறித்ததில் ஆட்கள் குழப்பமடைந்தவர்களாயும் தன்னம்பிக்கையற்றவர்களாயும் இருப்பதில் ஆச்சரியமேதும் இருக்கிறதா?—லூக்கா 6:39.
10. நன்மையையும் தீமையையும் பற்றிய ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வாறு உண்மையாய் நிரூபித்திருக்கின்றன?
10 தவறான வழிநடத்துதலின் அடிப்படையில் செய்யப்பட்ட ஞானமற்ற தீர்மானங்களின் வருந்தத்தக்க விளைவுகளை நாம் எங்கும் பார்க்கிறோம். பிரிவுற்ற மணவாழ்க்கைகளும் பிளவுபட்ட குடும்பங்களும், போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் துஷ்பிரயோகம், மூர்க்கத்தனமான இளைஞர் கும்பல்கள், முறையற்ற பாலுறவு, பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்கள் ஆகியவை அவற்றிற்கு சில உதாரணங்கள். உண்மையில், நன்மை தீமை பற்றிய விஷயத்திற்கு வருகையில், எல்லா தராதரங்களையும் அல்லது புரிந்துகொள்ள உதவும் ஏதுக்களையும் ஆட்கள் புறக்கணிக்கையில் வேறென்ன விளைவுகளை நாம் எதிர்பார்க்க முடியும்? (ரோமர் 1:28-32) இது, தீர்க்கதரிசி ஏசாயா சொன்னபடியே இருக்கிறது: “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!”—ஏசாயா 5:20, 21.
11. நன்மை தீமையை தீர்மானிப்பதில் ஒருவர் தன்னையே சார்ந்திருக்க நினைப்பது ஏன் ஞானமற்றது?
11 ‘தங்கள் பார்வைக்கு ஞானிகளாக’ இருந்த அந்தப் பூர்வ கால யூதர்களை தமக்கு கணக்குக் கொடுக்கும்படி கடவுள் எதிர்பார்த்தார்; இது, நன்மை, தீமையைத் தீர்மானிப்பதில் நம்மீது சாராமல் இருப்பதை இன்னும் அதிக முக்கியமானதாக்குகிறது. “உள் மனசு சொல்வதை தட்டாமல் கேள்,” அல்லது “உனக்கு சரியென தோன்றுவதை செய்” என்ற கருத்தை இன்று அநேகர் ஒப்புக்கொள்கிறார்கள், இப்படிப்பட்ட அணுகுமுறை சரியானதா? பைபிளின்படி சரியானதல்ல. “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது; அதை அறிபவன் யார்?” என அது தெளிவாக சொல்லுகிறது. (எரேமியா 17:9, தி.மொ.) தீர்மானம் செய்வதில் வஞ்சனை மிக்கவருடைய வழிநடத்துதலை நீங்கள் சார்ந்திருப்பீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள். உண்மையில், அப்படிப்பட்டவர் சொல்வதற்கு நேர்மாறானதை வேண்டுமானால் ஒருவேளை நீங்கள் செய்வீர்கள். இதன் காரணமாகவே, “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்” என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது.—நீதிமொழிகள் 3:5-7; 28:26.
கடவுள் ஏற்கத்தகுந்ததை கற்றுக்கொள்ளுதல்
12. ‘தேவனுடைய சித்தத்தை’ நாம் ஏன் பகுத்தறிய வேண்டும்?
12 நன்மை தீமையைத் தீர்மானிப்பதில் நாம் இவ்வுலக ஞானத்தின் மீதோ நம் மீதோ சார்ந்திருக்க கூடாது. அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலன் பவுலினிடமிருந்து வரும் ஒளிவுமறைவற்ற இந்தத் தெளிவான அறிவுரையை கவனியுங்கள்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) கடவுளுடைய சித்தத்தை நாம் ஏன் பகுத்தறிய வேண்டும்? நேரடியான ஆனால் பலமான காரணத்தை யெகோவா பைபிளில் கொடுக்கிறார்: “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” (ஏசாயா 55:9) ஆகையால் நம்முடைய சொந்த தீர்மானத்தின் மீதோ உணர்ச்சிகளின் மீதோ சார்ந்திருப்பதற்குப் பதிலாக, “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்” என்று நமக்கு அறிவுரை கூறப்படுகிறது.—எபேசியர் 5:10.
13. கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததை அறிவதன் அவசியத்தை யோவான் 17:3-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எவ்வாறு வலியுறுத்துகின்றன?
13 “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு கிறிஸ்து கூறியபோது இதற்கான தேவையை அறிவுறுத்தினார். (யோவான் 17:3) ‘அறிவது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல கிரேக்க சொல் வெறுமனே “அறிவதை”விட அதிக ஆழமான அர்த்தத்தை தருகிறது. வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி சொல்கிற பிரகாரம், “அறிந்துகொள்ளும் நபருக்கும் அறியப்படுகிற அந்த பொருளுக்கும் இடையேயுள்ள உறவைக் குறிக்கிறது; இந்த வகையில், அறியப்பட்டிருப்பது, அறிந்திருப்பவருக்கு மதிப்பு அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, அவ்வாறே ஸ்தாபிக்கப்பட்ட உறவும் உள்ளது.” ஒருவருடன் உறவு வைத்திருப்பது, அவர் யார், அவருடைய பெயர் என்ன என்பதை அறிவதைப் பார்க்கிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. அது அவருடைய விருப்பு வெறுப்புகளையும், நெறிமுறைகளையும் தராதரங்களையும் அறிந்து, அவற்றை மதித்து நடப்பதையும் உட்படுத்துகிறது.—1 யோவான் 2:3; 4:8.
பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவித்தல்
14. ஆவிக்குரிய குழந்தைகளுக்கும் முதிர்ச்சி அடைந்தோருக்கும் உள்ள முக்கிய வேறுபாடு எதுவென பவுல் சொன்னார்?
14 நன்மை தீமையை கண்டறியும் திறமையை நாம் எவ்வாறு பெறலாம்? முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதின பவுலின் வார்த்தைகள் அதற்கு பதில் அளிக்கின்றன. “பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறி பற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர். முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.” இதற்கு முந்தின வசனத்தில் பவுல், ‘கடவுளுடைய வாய்மொழிகளின் அரிச்சுவடி’ என்று விவரித்த ‘பாலை,’ ‘நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களை பயிற்றுவித்த,’ ‘முதிர்ச்சி அடைந்தோரின்’ ‘திட உணவிலிருந்து’ பவுல் வேறுபடுத்திக் காட்டினார்.—எபிரேயர் 5:12-14, பொ.மொ.
15. கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற ஏன் கடின உழைப்பு தேவை?
15 முதலாவதாக, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள அவருடைய தராதரங்களைத் திருத்தமாக புரிந்துகொள்வதற்கு கடினமாய் உழைப்பது அவசியம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. எவற்றை நாம் செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது என்பதை சொல்லும் சட்டதிட்டங்களின் பட்டியலை நாம் தேடுவதில்லை. பைபிள் அத்தகைய ஒரு புத்தகமுமல்ல. மாறாக, பவுல் இவ்வாறு விளக்கினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) இந்தப் போதனை, கடிந்துகொள்ளுதல், சீர்திருத்தல் ஆகியவற்றிலிருந்து பயனடைய நம் மனதையும் சிந்திக்கும் திறனையும் நாம் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இதற்கு முயற்சி தேவை, ஆனால் இதனால் வரும் பலனோ—“தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும்” இருப்பது—அப்படிப்பட்ட முயற்சிக்குத் தகுதியானதே.—நீதிமொழிகள் 2:3-6.
16. ஒருவருடைய பகுத்தறிவு ஆற்றல்களைப் பயிற்றுவிப்பது எதைக் குறிக்கிறது?
16 பின்பு, பவுல் குறிப்பிட்டுக் காட்டியபடி, முதிர்ச்சி அடைந்தவர்கள், ‘நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயிற்றுவித்தவர்களாக’ இருக்கிறார்கள். இங்கு நாம் தீர்மானிக்கும் முக்கிய குறிப்புக்கு வருகிறோம். ‘பகுத்தறிவதற்கான தங்கள் ஆற்றல்களைப் பயிற்றுவித்தவர்கள்’ என்ற சொற்றொடர் சொல்லர்த்தமாக, “(தேர்ந்த உடற்பயிற்சியாளனைப் போல்) தங்கள் புலனுணர்வுகள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பவர்கள்” என அர்த்தம் தருகிறது. (கிங்டம் இன்டர்லீனியர் டிரான்ஸ்லேஷன்) அனுபவமிக்க உடற்பயிற்சியாளன், வளையங்கள் அல்லது சமநிலை உத்தரம் (பேலன்ஸ் பீம்) போன்ற சில பொருட்களைத் தெரிந்துகொண்டு புவியீர்ப்பு விசைக்கோ இயற்கை நியதிகளுக்கோ சவால் விடும் தோரணையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதில் சாகசம் புரிந்து காட்டுகிறார். எல்லா சமயங்களிலும் உடல் உறுப்புகளை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தான் கையாளும் பாகத்தை வெற்றிகரமாய் செய்வதற்கு தேவையானவற்றை ஏறக்குறைய இயல்பாகவே செய்கிறார். இது கடுமையான பயிற்றுவிப்பும், தொடர்ச்சியான பயிற்சியும் தந்த பலன்.
17. எந்த அர்த்தத்தில் நாம் தேர்ந்த உடற்பயிற்சியாளர்களைப் போல் இருக்க வேண்டும்?
17 ஆவிக்குரிய விதத்தில், நாம் செய்யும் தீர்மானங்களும் தெரிவுகளும் எப்போதும் சரியானதாக இருக்க விரும்பினால் தேர்ந்த உடற்பயிற்சியாளனைப் போல் நாமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நம்முடைய புலனுணர்வுகளையும் உடல் உறுப்புகளையும் எப்போதும் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். (மத்தேயு 5:29, 30; கொலோசெயர் 3:5-10) உதாரணமாக, ஒழுக்கக்கேடானவற்றைக் காணாதிருக்கும்படி உங்கள் கண்களையும், இழிவான இசையையோ பேச்சையோ கேட்காதிருக்கும்படி உங்கள் காதுகளையும் கட்டுப்படுத்துகிறீர்களா? அத்தகைய தகாத காரியங்கள் நம்மைச் சுற்றிலும் இருப்பது உண்மைதான். இருப்பினும், அது நம் இருதயத்திலும் மனதிலும் வேர்கொள்ள அனுமதிக்கிறோமா என்பது இன்னமும் நம்முடைய தெரிவே. இவ்வாறு சொன்ன சங்கீதக்காரரின் மாதிரியை நாம் பின்பற்றலாம்: “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. . . . பொய் சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.”—சங்கீதம் 101:3, 7.
பகுத்தறிவு ஆற்றல்களை பயன்படுத்த பயிற்றுவியுங்கள்
18. ஒருவரின் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயிற்றுவிப்பது பற்றிய பவுலின் விளக்கத்தில், ‘பயன்படுத்துவதன்மூலம்’ என்ற வார்த்தை எதை குறிக்கிறது?
18 நன்மை தீமைகளை கண்டறிவதற்கு, நம்முடைய பகுத்தறிவு ஆற்றல்களை ‘பயன்படுத்துவதன்மூலம்’ பயிற்றுவிக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், தீர்மானம் செய்ய வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன பைபிள் நியமங்கள் உட்படுகின்றன, அவற்றை எவ்வாறு பொருத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள பகுத்தறியும் ஆற்றல்களை பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் அளிக்கும் பைபிள் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மத்தேயு 24:45, NW) முதிர்ந்த கிறிஸ்தவர்களின் உதவியை நாம் நிச்சயமாகவே நாடலாம். இருப்பினும், தனிப்பட்டோராய் கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சியோடுகூட, யெகோவாவின் வழிநடத்துதலையும் ஆவியையும் ஜெபத்தில் கேட்பதும் முடிவில் மிகுந்த பலனைத் தரும்.—எபேசியர் 3:14-19.
19 நம்முடைய பகுத்தறியும் ஆற்றல்களை நாம் படிப்படியாய்ப் பயிற்றுவிப்பதன் நோக்கம், “நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்” இருப்பதே. (எபேசியர் 4:14) மாறாக, கடவுளுக்கு ஏற்கத் தகுந்தது எது என்பதைப் பற்றிய நம் அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில், பெரிதும் சிறிதுமான ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியும்; அவை நமக்கு நன்மை பயக்கும், நம் உடன் வணக்கத்தாரைக் கட்டியெழுப்பும், எல்லாவற்றிற்கும் மேலாக நம் பரலோக தகப்பனுக்குப் பிரியமானதாக இருக்கும். (நீதிமொழிகள் 27:11) இந்தக் கொடிய காலங்களில் அது எத்தகைய ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது!
[அடிக்குறிப்பு]
a வாழ்க்கையில் மிகவும் கவலை தருகிற 40-க்கும் மேற்பட்ட அனுபவங்கள் அடங்கிய பட்டியலை டாக்டர்கள் தாமஸ் ஹோம்ஸும் ரிச்சர்ட் ரேவும் தொகுத்தனர்; அதில் மணத்துணையின் மரணம், விவாகரத்து, பிரிந்துபோதல் ஆகியவை முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. மணமுடிப்பது ஏழாவது இடத்தில் உள்ளது.
நீங்கள் விளக்க முடியுமா?
• சரியான தீர்மானங்களைச் செய்வதற்கு என்ன திறமை தேவை?
• நன்மை தீமையை தீர்மானிக்கும் விஷயத்தில் பிரபலமானவர்களை அல்லது நம் சொந்த உணர்ச்சிகளை சார்ந்திருப்பது ஏன் ஞானமற்றது?
• தீர்மானங்களைச் செய்கையில், கடவுளுக்கு ஏற்கத்தகுந்தது எது என்பதை ஏன் தெரிந்திருப்பது அவசியம், அதை எப்படி செய்யலாம்?
• ‘நம்முடைய பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவிப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
19. நம் பகுத்தறியும் ஆற்றல்களை நாம் படிப்படியாய்ப் பயிற்றுவித்தால் என்ன ஆசீர்வாதங்களைப் பெறலாம்?
[பக்கம் 9-ன் படம்]
வழிநடத்துதலுக்காக பணக்காரரையும் பிரபலமானவர்களையும் நோக்குவது பயனற்றது
[பக்கம் 10-ன் படம்]
தேர்ந்த உடற்பயிற்சியாளனைப் போல் நம்முடைய எல்லா புலனுணர்வுகளின் மீதும் உடல் உறுப்புகளின் மீதும் முழுக் கட்டுப்பாடு தேவை