மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுதல்
“திறமையுள்ள வழிநடத்துதலைக் கொண்டு யுத்தம் பண்ணு” என்கிறது நீதிமொழிகள் 24:6 (NW). வெறுமென நல்லெண்ணங்கள் மாத்திரமல்ல, யுத்தத்தில் வெற்றி பெற திறமை அவசியமாயிருக்கிறது. நிச்சயமாகவே, சோர்வுற்றிருக்கையில் அதை அசட்டை செய்வதன் மூலம் நீங்கள் இன்னும் அதிக மோசமாக உணர விரும்பமாட்டீர்கள். உதாரணமாக 1984-ல் சோர்வுற்றிருந்த ஆட்களை வைத்து செய்த ஆராய்ச்சி, சிலர் ‘மற்றவர் மீது கோபத்தைக் காட்டுவதன் மூலமும், அதிகமாக குடிப்பதனால் மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் அதிகமாக சாப்பிடுவதன் மூலமும் நோவகற்றும் மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமும்’ தங்கள் மனச்சோர்வை சமாளிக்க முற்பட்டதைக் காண்பித்தது. விளைவு: “அதிகமான மனச்சோர்வும் சரீர சம்பந்தமான நோய்க் குறிகளும்.”
மனச்சோர்வுற்ற சிலர் தாங்கள் மனோபலமற்றவர்கள் என்பதாக கருதப்பட்டுவிடுவார்களோ என்ற பயத்தினால் நல்யோசனையை நாட தவறுகிறார்கள். என்றபோதிலும் பெரிய அளவிலான மனச்சோர்வு மனோபலக் குறைவுக்கோ ஆன்மீக தோல்விக்கோ அறிகுறியாக இல்லை. மூளையில் குறிப்பிட்ட ஒரு இரசாயன கோளாற்றின் காரணமாக இந்த தொந்தரவு ஏற்படக்கூடும் என்பதை ஆராய்ச்சி சுட்டிக் காண்பிக்கிறது. சரீர நோய் இதற்கு காரணமாக இருக்கக்கூடுமாதலால் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்தச் சோர்வு தொடர்ந்திருக்குமேயானால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும். சரீர நோய் எதுவும் பிரச்னைக்கு காரணமாயில்லை என்பது தெரிய வந்தால், பொருத்தமான மருந்துகள் அல்லது ஊட்டச் சத்தின் உதவியோடுகூட சிந்திக்கும் ரீதியை சீர் செய்வதன் மூலமும் அநேகமான கோளாறை சரி செய்துவிடலாம்.a மனச்சோர்வுக்கு எதிரான போரட்டத்தில் வெற்றி பெறுதல், மீண்டும் ஒருபோதும் நீங்கள் சோர்வடையமாட்டீர்கள் என்பதை அர்த்தப்படுத்தாது. துயரம் வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கிறது. என்றபோதிலும், தாக்குதல்களை திறமையோடு கையாளுவது, மனச்சோர்வை சமாளிக்க உங்களுக்கு உதவி செய்யும்.
சோர்வைக் குறைக்கும் மருந்துகளை அநேகமாக ஒரு மருத்துவர் பரிந்துரை செய்வார். இரசாயன சமநிலைச் சீர்குலைவை சரி செய்யவே இந்த மருந்துகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த எலிசபெத் இவைகளை எடுத்துக் கொண்டாள். ஒரு சில வாரங்களுக்குள் அவளுடைய மனநிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. “இன்னும் மருந்துகளோடுகூட நான் வேலையினிடமாக ஒரு உடன்பாடான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது,” என்று அவள் சொன்னாள். “மருந்து கொடுத்த ‘தெம்போடு’கூட, நான் நலம் பெற தீர்மானமாயிருந்தேன். தினந்தோறும் நான் உடற்பயிற்சி செய்வதையுங்கூட காத்துக் கொண்டேன்.”
என்றபோதிலும், சோர்வைக் குறைக்கும் மருந்துகள் எப்பொழுதும் பயனுள்ளதாக இருப்பதில்லை. தொந்தரவு தரும் பக்க பாதிப்புகளுங்கூட சிலருக்கு ஏற்படுகிறது. இரசாயன சீர்க்குலைவு சரி செய்யப்பட்டாலும் கூட ஒருவரின் சிந்தனை சரி செய்யப்பட்டாலொழிய மனச்சோர்வு திரும்பி வந்துவிடக்கூடும். என்றபோதிலும் மனம் திறந்து உணர்ச்சிகளை வெளியிட மனமுள்ளவர்களாயிருப்பதன் மூலம் மிகுதியான துயரம் மறைந்து விடக்கூடும்.
மனம் திறந்து உங்கள் உணர்ச்சிகளை வெளியிடுங்கள்
தனியாக குடும்ப பொறுப்புகளின் சுமையையும் அதே சமயத்தில் ஒரு உலகப்பிரகாரமான வேலையின் அழுத்தங்களையும் தாங்கிக் கொள்ளவேண்டியிருந்ததைக் குறித்து சாராளுக்கு மனகசப்பு இருந்தது. (பக்கம் 15-ஐப் பார்க்கவும்.) “ஆனால் என்னுடைய உணர்ச்சிகளை நான் எனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தேன்” என்று சாராள் விளக்குகிறாள். “பின்னர் ஒரு நாள் இரவு என்னால் சமாளிக்கவே முடியாததுபோல் தோன்றியபோது, என்னுடைய தங்கையோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக என்னுடைய உணர்ச்சிகளை கொட்ட ஆரம்பித்தேன். அந்தப் பேச்சுத்தொடர்பு எனக்கு அப்பேர்பட்ட ஒரு மன நிம்மதியைக் கொடுத்ததால் இது ஒரு திரும்புக் கட்டமாக அமைந்துவிட்டது.”
ஆகவே உங்களுக்கு சோர்வாக இருந்தால் நீங்கள் முழுவதுமாக நம்பக்கூடிய, உங்களிடத்தில் தன்னை வைத்துப் பார்க்கக்கூடிய ஒருவரை கண்டுபிடியுங்கள். இது விவாக துணைவராக, நெருங்கிய நண்பராக, உறவினராக, ஊழியராக, மருத்துவராக அல்லது பயிற்சி பெற்ற ஆலோசகராக இருக்கக்கூடும். விவாகமும் குடும்பமும் என்ற பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சி ஒன்றின்படி “வாழ்க்கையின் இன்னல்களை பகிர்ந்து கொள்வதற்கு எப்பொழுதுமிருக்கும் ஆதரவான ஒரு துணையைக்” கொண்டிருப்பதே சோர்வை முறியடிப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
உணர்ச்சிகளை வார்த்தைகளாக மாற்றுவது, பிரச்னை அல்லது இழப்பின் உண்மை நிலையை மறுதலிக்க முற்பட்டு, இவ்விதமாக இது தீர்க்கப்படாமலே இருப்பதிலிருந்து உங்கள் மனதை தடை செய்வதால் இது ரணத்தை ஆற்றும் செயலாக இருக்கிறது. ஆனால் உங்கள் உண்மையான உணர்ச்சிகளை வெளியிடுங்கள். எதற்கும் அஞ்சாதவன் என்ற ஒரு தோற்றத்தை கொண்டிருக்க விரும்பி, போலியான ஒரு பெருமை உணர்ச்சி உங்களை தடுத்து நிறுத்த அனுமதியாதீர்கள். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்,” என்கிறது நீதிமொழிகள் 12:25. என்றபோதிலும், மனம்விட்டு பேசுவதன் மூலமாக மட்டுமே மற்றவர்கள் உங்கள் “கவலை”யை புரிந்து கொள்ள ஆரம்பித்து உற்சாகமூட்டும் “நல்வார்த்தையை” சொல்லமுடியும்.
“என்னுடைய தங்கையிடம் பேசியபோது அவளிடமிருந்து நான் வெறுமென அனுதாபத்தையே பெற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு அதிகம் கிடைத்தது,” என்பதாக சாராள் நினைவுபடுத்தி சொல்கிறாள். “என்னுடைய சிந்தனையில் தவறு எங்கே இருந்தது என்பதைக் காண அவள் எனக்கு உதவி செய்தாள். நான் அளவுக்கு அதிகமாக என் மீதே பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதாக அவள் சொன்னாள். ஆரம்பத்தில் இதைக் கேட்க நான் விரும்பாத போதிலும் அவளுடைய ஆலோசனையின்படி நான் செய்ய ஆரம்பித்த போது பெரும் சுமை ஒன்று என்னிடமிருந்து விலகுவதை என்னால் உணரமுடிந்தது.” நீதிமொழிகள் 27:9 லுள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மையுள்ளவையாக இருக்கின்றன: “பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.”
ஒளிவு மறைவின்றி பேசி காரியங்களை சரியான நிலையில் வைப்பதற்கு உங்களுக்கு உதவிச் செய்யக்கூடிய நண்பரை அல்லது துணையைக் கொண்டிருப்பதில் இன்பமிருக்கிறது. ஒரு சமயத்தில் ஒரே ஒரு பிரச்னையின் மீது கவனத்தைச் செலுத்த இது உங்களுக்கு உதவக் கூடும். ஆகவே தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக இப்படிப்பட்ட “திறமையான வழிநடத்துதலுக்கு” மதிப்புக் கொடுங்கள். பலமுறை கலந்து பேசிய பின்பு உங்கள் உணர்ச்சிப் பூர்வமான அழுத்தத்துக்கு மூலக்காரணமாயிருக்கும் காரியத்தை குறைக்கும் அல்லது நீக்கும் பொருட்டு உங்கள் நிலைமையை மாற்ற அல்லது சிறிது மாற்றி அமைக்க நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை சுட்டிக் காட்டும் ஒரு சில குறுகிய கால இலக்குகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒருவர் உங்களுக்கு தேவைப்படலாம்.b
சோர்வை எதிர்த்து சமாளிப்பது, அநேகமாக குறைந்த சுயமதிப்புணர்ச்சியோடு போராடுவதை தேவைப்படுத்துகிறது. இவற்றை எவ்விதமாக திறம்பட்ட வகையில் எதிர்க்க முடியும்?
தன்னையே குறைவாக மதிப்பிட்டுக்கொள்ளுதலை மேற்கொள்ள போராடுதல்
உதாரணமாக முந்தின கட்டுரை காண்பிக்கிறவிதமாக, மரியா அவளுடைய குடும்பத்தினுள் ஏற்பட்ட பிணக்கங்களுக்கு பிறகே சோர்வுற்றவளானாள். ‘நான் மிகவும் பயங்கரமான ஒரு நபராக இருக்கிறேன். எதையும் என்னால் சரியாகச் செய்யமுடியாது’ என்ற முடிவுக்கு வந்திருந்தாள். இது தவறாகும். இந்த முடிவை மாத்திரம் அவள் அலசிப் பார்த்திருப்பாளேயானால், பின்வருமாறு யோசித்துப் பார்ப்பதன் மூலம் இதை தவிர்த்திருக்கலாம்: ‘மற்ற ஆட்களைப் போலவே நான் சில காரியங்களை சரியாகவும் சிலவற்றை தவறாகவும் செய்கிறேன். ஒரு சில பிழைகளை நான் செய்துவிட்டேன். இனி அதிக யோசனையுடன் காரியங்களைச் செய்ய நான் உழைப்பது அவசியம். ஆனால் இப்பொழுது இவை அனைத்தையும் நான் சீர்குலைத்துவிட மாட்டேன்.’ இவ்விதமாக சீர்தூக்கிப் பார்ப்பது அவளுடைய தன் மதிப்பை குலைத்துவிடாதிருந்திருக்கும்.
அநேக சமயங்களில் அளவுக்கு அதிகமாக குறைகாணும், நம்மை கண்டனம் செய்கின்ற அந்த உட்குரல் தவறாக இருக்கிறது! சோர்வுக்கு காரணமாயிருக்கும் சில தவறான எண்ணங்கள் இதோடு வரும் பெட்டியில் வரிசைப்படுத்தி காண்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட பிழையான கருத்துக்களை உணர்ந்து கொள்ள கற்றுக் கொண்டு அவைகளை ஒப்புக் கொள்ளமுடியுமா என்பதை மனதிலேயே கணக்குப் போட்டு பாருங்கள்.
குறைந்த தன்மதிப்புக்கு ஆளான மற்றொரு பெண் 37 வயது நிரம்பிய ஒற்றைப் பெற்றோரான ஜீன். “இரண்டு பையன்களை வளர்க்கும் அழுத்தத்தின் கீழ் நான் இருந்து வந்தேன். ஆனால் ஒற்றைப் பெற்றோராக இருந்த மற்றவர்கள் விவாகம் செய்துக் கொள்வதை நான் பார்த்த போது, ‘ஏதோ எனக்கு ஒரு கோளாறு இருக்க வேண்டும்’ என்று நான் நினைத்தேன்,” என்பதாக அவள் விளக்குகிறாள். “இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களில் மனதை ஊன்ற வைத்ததினால் இவை வளர்ந்து, கடைசியில் மனச்சோர்வுக்கு சிகிச்சைப் பெற மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.”
“மருத்துவமனையிலிருந்து வெளியேறியப் பின்பு, செப்டம்பர் 8, 1981 ஆங்கில விழித்தெழு!வில் ‘மனச்சோர்வுக்கு ஒருவரை கொண்டு செல்லக்கூடிய எண்ணங்களின்’ பட்டியலை வாசித்தேன். ஒவ்வொரு இரவும் நான் அந்தப் பட்டியலை வாசித்தேன். தவறான எண்ணங்களில் சில பின்வருமாறு: ‘ஒரு தனி நபராக என்னுடைய மதிப்பு, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன யோசிக்கிறார்கள் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது.’ ‘நான் ஒருபோதும் புண்பட்டவளாக உணரக்கூடது. எப்பொழுதும் நான் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும்.’ ‘குறையேயில்லாத ஒரு பெற்றோராக நான் இருக்கவேண்டும்.’ பரிபூரணத்துவத்தையே நான் விரும்பினேன். ஆகவே அவ்விதமாக நான் நினைக்க ஆரம்பித்தவுடனே யெகோவாவிடம் உதவிக்காக ஜெபித்தேன். எதிர்மறையாக சிந்திப்பது குறைந்த தன்மதிப்புக்கு வழிநடத்துவதை நான் அறிந்துகொண்டேன். ஏனென்றால் அவ்விதமாக சிந்திக்கையில் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கும் நன்மைகளை பார்க்காமல், வாழ்க்கையின் துன்பங்களை மாத்திரமே பார்க்கிறீர்கள். ஒரு சில தவறான எண்ணங்களைத் தவிர்க்க என்னை கட்டாயப்படுத்துவதன் மூலம், என்னுடைய சோர்வை நான் மேற்கொண்டேன்.” உங்களுடைய சில எண்ணங்கள் மறுக்கப்பட வேண்டுமா அல்லது தள்ளப்படவேண்டுமா?
இது என்னுடைய தவறா?
அலெக்சாண்டர் மிகவும் சோர்வுற்றிருந்தபோதிலும் பள்ளியில் எப்படியோ சமாளித்து ஒரு வகுப்பை நடத்தி வந்தார். (பக்கம் 11-ஐப் பார்க்கவும்.) மிக முக்கியமான ஓரு வாசிப்பு சோதனையில் அவருடைய மாணவர்களில் சிலர் தோல்வியடைந்த போது அவர் தற்கொலை சிந்தனையில் சென்று விட்டார். “அவரே தோல்வியடைந்து விட்டதுபோல உணர்ந்தார்,” என்று அவருடைய மனைவி எஸ்தர் தெரிவித்தாள். “அது உங்களுடைய தவறு இல்லை. 100 சதவிகிதம் தேர்ச்சிப் பெற முடியாது என்பதாக நான் அவரிடம் சொன்னேன்.” என்றபோதிலும், மேற்கொள்ள முடியாத குற்றவுணர்வு அவருடைய மனதைக் குருடாக்க, இது தற்கொலைக்கு வழிநடத்தியது. அநேக சமயங்களில் மற்ற ஆட்களின் நடத்தைக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது மிதமிஞ்சிய குற்றவுணர்வுக்கு காரணமாகிறது.
ஒரு சிறுபிள்ளையின் விஷயத்திலுங்கூட, பெற்றோரால் அவனுடைய வாழ்கையில் பலமான செல்வாக்கை செலுத்திட முடிந்தாலும் அதை முழுமையாக கட்டுப்படுத்திட முடியாது. நீங்கள் நினைத்தபடி ஏதாவது நடக்கவில்லையென்றால், உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: என்னுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாலிருந்த எதிர்பாராத சம்பவங்களை நான் எதிர்ப்பட்டேனா? (பிரசங்கி 9:11) என்னுடைய உடலின், மனதின் மற்றும் உணர்ச்சிகளின் வளஆதாரங்களின் வரம்புகளுக்குள் நியாயமாக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்தேனா? என்னுடைய எதிர்பார்ப்புகள் மிகவும் உயர்ந்தவையாக இருந்தனவா? நான் இன்னும் அதிக நியாயமாகவும் அளவாகவும் இருக்கக் கற்றுக் கொள்வது அவசியமா?—பிலிப்பியர் 4:5.
ஆனால் நீங்கள் ஒரு வினைமையான குற்றத்தைச் செய்து, தவறு உங்களுடையதாக இருந்தால் என்ன? மனதை தொடர்ந்து அலட்டிக் கொண்டிருப்பது குற்றத்தை மாற்றிவிடுமா? நீங்கள் உண்மையில் மனம்திரும்பினால் உங்களை மன்னிக்கிறதற்கு கடவுள் “தயை பெருத்திருக்கிறார்” அல்லவா? (ஏசாயா 55:7) கடவுள் “எப்பொழுதும் கடிந்துகொள்ளார்” என்றால், இப்படிப்பட்ட ஒரு தவறை முன்னிட்டு வாழ்நாள் முழுவதும் ஏன் மனவேதனையை தண்டனையாக நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்? (சங்கீதம் 103:8-14) மாறாத வருத்தம் அல்ல, ஆனால் தவறை சரி செய்வதற்காக நேர்நிலையான நடவடிக்கையை எடுப்பதே யெகோவாவை பிரியப்படுத்துவதாயும் உங்கள் மனச்சோர்வை தணிப்பதாகவும் இருக்கும்.—2 கொரிந்தியர் 7:8-11.
‘பின்னான காரியங்களை மறத்தல்’
உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட நம்முடைய பிரச்னைகளில் சில, கடந்த காலத்தில் வேரூன்றியவையாக இருக்கக்கூடும். விசேஷமாக நாம் அநியாயமாக நடத்தப்பட்டிருப்போமேயானால் இது இப்படி இருக்கும். மன்னித்து மறந்துவிட மனமுள்ளவர்களாயிருங்கள். ‘மறப்பது எளிதல்ல!’ என்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மைதான், ஆனால் மாற்றமுடியாத ஒன்றைப் பற்றியே நினைத்துக் கொண்டு மீதமுள்ள வாழ்க்கையை அழித்துவிடுவதைவிட இது மேலானதாகும்.
“பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்,” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். (பிலிப்பியர் 3:13, 14) கொலைக்கு உடந்தையாயிருந்தது உட்பட யூதேய மதத்தில் அவன் பின்பற்றி வந்திருந்த தவறான போக்கைப் பற்றியே பவுல் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டில்லை. (அப்போஸ்தலர் 8:1) இல்லை, எதிர்கால பரிசாகிய நித்திய ஜீவனைப் பெற தகுதியுள்ளவனாக்கிக் கொள்வதிலேயே தன்னுடைய சக்திகளை அவன் ஒருமுகப்படுத்தினான். மரியாவும்கூட கடந்த காலத்திலேயே கவனத்தை ஊன்ற வைக்காதிருக்க கற்றுக் கொண்டாள். ஒரு சமயம் தன் அம்மா தன்னை வளர்த்த விதத்தை குறைகூறிக் கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா முதல் தரத்தையும் உடலழகையும் வலியுறித்தியிருந்தாள், ஆகவே மரியா குறையற்றிருக்க விரும்பியவளாகவும் கவர்ச்சியாக இருந்த தன் சகோதரியின் மீது பொறாமைக் கொண்டவளாகவும் இருந்தாள்.
“அடிமனதிலிருந்த இந்த பொறாமையே பிணக்கங்களுக்கு காரணமாக இருந்தது. ஆனால் என்னுடைய நடத்தைக்கு என்னுடைய குடும்பத்தின் மீதே பழிசுமத்தினேன். பின்னர் ‘உண்மையில் யாருடைய தவறாக இருந்தாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணப்போகிறது?’ அம்மா என்னை வளர்த்த வளர்ப்பினால் சில கெட்ட குணங்கள் எனக்கு இருக்கலாம், ஆனால் குறிப்பானது அதைக் குறித்து எதையாவது செய்ய வேண்டும்! தொடர்ந்து அவ்விதமாக நடந்து கொள்ளக்கூடது, என்பதாக சிந்திக்கும் கட்டத்துக்கு வந்தேன்.” இந்த உணர்வு மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிப் பெற மனதின் பிரகாரமான சரிப்படுத்தல்களைச் செய்ய அவளுக்கு உதவியது.—நீதிமொழிகள் 14:30.
உங்கள் உண்மையான மதிப்பு
அனைத்து காரியங்களையும் சிந்திக்கையில், மனச்சோர்வை வெற்றிகரமாக எதிர்த்து போராடுவதற்கு உங்கள் சொந்த மதிப்பைப் பற்றிய சமநிலையான நோக்கு தேவையாக இருக்கிறது. “நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனாகிலும் தன்னைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் அவனவன் தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். (ரோமர் 12:3) போலியான பெருமை, நமது வரம்புகளை அசட்டைச் செய்தல் மற்றும் பரிபூரணத்துவம் ஆகியவை நம்மைப் பற்றி மிஞ்சி எண்ணுவதாகும். இந்த மனச்சாய்வுகளை எதிர்த்திடுங்கள். என்றபோதிலும் மறுமுனைக்குச் சென்று விடுவதை தவிர்த்திடுங்கள்.
இயேசு கிறிஸ்து பின்வருமாறு சொல்வதன் மூலம் தம்முடைய சீஷர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மதிப்பையும் வலியுறுத்தினார்: “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 12:6, 7) நாம் கடவுளுக்கு அத்தனை மதிப்புள்ளவர்களாக இருப்பதால் நம்மைப் பற்றிய மிக நுட்பமான விவரங்களையுங்கூட அவர் கவனிக்கிறார். நம்மைப் பற்றி நாமே அறியாத காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனென்றால், அவர் வெகுவாக நம் ஒவ்வொருவர் மீதும் அக்கறையுள்ளவராக இருக்கிறார்.—1 பேதுரு 5:7.
தன்மீது கடவுளின் தனிப்பட்ட அக்கறையை உணர்ந்து கொண்டது, சுய மதிப்புணர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ள சாராளுக்கு உதவியது. “சிருஷ்டிகரிடமாக எனக்கு எப்பொழுதும் பயபக்தி உண்டு. ஆனால் தனிப்பட்ட ஒரு ஆளாக அவர் என்னில் அக்கறையுடையவராய் இருப்பதை நான் அறிந்து கொண்டேன். என்னுடைய பிள்ளைகள் என்ன செய்தாலும், என்னுடைய கணவன் என்ன செய்தாலும், என்னுடைய அப்பா அம்மா என்னை எப்படி வளர்த்திருந்தாலும் சரி, எனக்கு யெகோவாவிடம் தனிப்பட்ட ஒரு உறவு இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். அதன் பின்பு என்னுடைய சுய மதிப்பு உண்மையில் வளர ஆரம்பித்தது.”
கடவுள் தம்முடைய ஊழியர்களை விலையேறப் பெற்றவர்களாக கருதுவதன் காரணமான நம்முடைய மதிப்பு மற்றொரு மனிதனின் அங்கீகாரத்தை சார்ந்ததாயில்லை. வெறுத்து ஒதுக்கப்படுவது நிச்சயமாகவே இன்பமாயிருப்பதில்லை. ஆனால் நம்முடைய சொந்த மதிப்பை அளவிட, மற்றவர் ஏற்றுக் கொள்வதை அல்லது ஏற்றுக் கொள்ள மறுப்பதை அளவுகோலாக பயன்படுத்துவோமேயானால் நாம் எளிதில் மனச்சோர்வுக்குள்ளாகும் நிலையில் நம்மை வைத்துக்கொள்கிறோம். யெகோவாவின் சொந்த இருதயத்துக்கு விருப்பமுள்ளவனாக கருதப்பட்ட தாவீது ராஜா ஒரு சமயம் “எதற்கும் உதவாதவன்,” உண்மையில் பிரயோஜனமற்றவன் என்பதாக அழைக்கப்பட்டான். என்றபோதிலும், தாவீது இவ்விதமாக தன்னை அழைத்தவனுக்கு ஏதோ பிரச்னை இருப்பதை உணர்ந்தான். தன்னுடைய சொந்த மதிப்பைப் பற்றிய இறுதியான தீர்ப்பாக இதை அவன் கருதவில்லை. உண்மையில் அடிக்கடி மனிதர்கள் செய்கிற விதமாகவே சீமேயி பின்னால் இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். எவராவது ஒருவர் நியாயமாகவே உங்களைக் குறைக் கூறினாலும் கூட, உங்கள் மதிப்பை அல்ல, ஆனால் நீங்கள் செய்த குறிப்பிட்ட ஒரு காரியத்தையே கருத்தில் கொண்டு அது சொல்லப்படுகிறது.—2 சாமுவேல் 16:7; 19:18, 19.
சாராள் பைபிளையும் பைபிள் ஆதாரமுள்ள பிரசுரங்களையும் தனிப்பட்ட விதமாக படித்ததும், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் சென்றதும் கடவுளோடு ஒரு உறவுக்கு அஸ்திபாரத்தைப் போட அவளுக்கு உதவியது. “ஆனால் ஜெபத்தைப் பற்றிய என்னுடைய வித்தியாசமான மனநிலையே மிகப் பெரிய உதவியாக இருந்தது” என்று சாராள் சொல்கிறாள். “பெரிய காரியங்களைக் குறித்து மட்டுமே நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும் என்றும் அற்பமான பிரச்னைகளில் அவரை தொந்தரவு செய்யக்கூடது என்றும் ஒரு சமயம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதோ நான் அவரிடம் எதைக்குறித்தும் பேசமுடியும் என்று நினைக்கிறேன். தீர்மானம் ஒன்றை செய்வதற்கு எனக்கு தைரியமில்லையென்றால், அமைதியாகவும் நியாயமாகவும் நான் இருப்பதற்கு அவரிடம் உதவிக்காக கேட்கிறேன். என்னுடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பதையும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சோதனையான சூழ்நிலைமையிலும், துணையாக அவர் இருப்பதையும் காண்கையில் நான் இன்னும் அவரிடம் நெருங்கி வருகிறேன்.”—1 யோவான் 5:14; பிலிப்பியர் 4:7.
ஆம், கடவுள் தனிப்பட்டவராக உங்களில் அக்கறையுடையவராய் இருக்கிறார், உங்கள் வரம்புகளை புரிந்து கொள்கிறார், ஒவ்வொரு நாளையும் சமாளிக்க உங்களுக்கு பலத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையே மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் இன்றியமையாததாக இருக்கிறது. என்றபோதிலும் சில சமயங்களில் நீங்கள் என்ன செய்தாலும்கூட மனச்சோர்வு நீங்காமலிருக்கிறது.
‘ஒவ்வொரு மணிதோறும்’ சகித்துக் கொண்டிருப்பது
வருடக்கணக்கில் மனச்சோர்வோடு போராடிக் கொண்டிருந்த 47 வயதுள்ள தாயான எலீன், “குறைவை நிறைவாக்கும் ஊட்டச்சத்தும், மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகளும் உட்பட அனைத்தையும் நான் முயன்றுவிட்டேன்,” என்று வருந்துகிறாள். “தவறான யோசனைகளை சரிசெய்துகொள்ள நான் கற்றுக் கொண்டுவிட்டேன். அதிக நியாயமான ஒரு ஆளாக இருக்க இது உதவியிருக்கிறது. ஆனாலும் சோர்வு இன்னும் இருந்து வருகிறது.”
சோர்வு மறையவில்லை என்பதுதானே, நீங்கள் அதற்கு எதிராக வெற்றிகரமாகப் போராடிக்கொண்டில்லை என்று அர்த்தமாகாது. இந்த கோளாறுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்களுக்கு எல்லா விடைகளும் தெரியாது. சிலருடைய விஷயத்தில், மனச்சோர்வு, ஒரு கவலைக்கிடமான நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் சில மருந்துகளின் பக்க பாதிப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவே, இப்படிப்பட்ட மருந்துகள் வேறு ஒரு மருத்துவ பிரச்னையில் பயனுள்ளதாக இருப்பதால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
நிச்சயமாகவே புரிந்து கொள்ளக்கூடிய மற்றொரு நபரிடமாக உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டிவிடுவது உதவியாக இருக்கிறது. இருந்தாலும், உங்கள் வேதனையின் ஆழத்தை வேறு எந்த மனிதராலும் உண்மையில் அறிந்துக் கொள்ள முடியாது. என்றபோதிலும் கடவுள் அதை அறிவார். உதவியும் செய்வார். “தொடர்ந்து முயற்சிசெய்ய யெகோவா எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார். நான் முயற்சியைக் கைவிட என்னை அனுமதியாமல் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்,” என்று எலீன் சொல்கிறாள்.
கடவுளின் உதவியாலும், மற்றவர்களுடைய உணர்ச்சிப்பூர்வமான ஆதரவாலும், உங்களுடைய சொந்த முயற்சியாலும் நீங்கள் நம்பிக்கையிழந்துவிடும் அளவுக்கு திணறிப் போய்விடமாட்டீர்கள். காலப்போக்கில், தீராத ஒரு நோய்க்கு ஏற்ப உங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போலவே மனச்சோர்வுக்கும் செய்துகொள்வீர்கள். சகித்துக்கொள்வது எளிதல்ல, ஆனால் அது கூடிய காரியமாகும்! நீண்டகாலமாக சோர்வுற்றிருந்த ஜீன் சொல்வதாவது: “நாள்தோறும் என்பதாக கூட நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அது மணிதோறும் என்பது போல இருந்தது.” எலீன் மற்றும் ஜீனின் விஷயத்தில், பைபிள் உறுதியளிக்கும் நம்பிக்கை அவர்களை முழு அளவில் செயல்படச் செய்தது. அந்த நம்பிக்கை என்ன?
விலையேறப்பெற்ற ஒரு நம்பிக்கை
சமீப எதிர்காலத்தில், சம்பவிக்கப்போவதை பைபிள் இவ்விதமாகச் சொல்லுகிறது: “அவர்களுடைய (மனிதவர்க்கத்தினுடைய) கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்பொழுது கடவுளுடைய ராஜ்யம் அதனுடைய பூமிக்குரிய எல்லா பிரஜைகளின் சரீரத்தையும் மனதையும் பூரணமாக குணப்படுத்தும்-—சங்கீதம் 37:10, 11, 29.
சரீர உபாதைகள் நீக்கப்படுவது மட்டுமல்லாமல், துன்பந்தரும் தொல்லைகளும் மனவேதனையுங்கூட மறைந்துவிடும். யெகோவா பின்வருமாறு வாக்களிக்கிறார்: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” (ஏசாயா 65:17, 18) கடந்த கால துயரங்களிலிருந்து விடுபட்டவர்களாய், அன்றைய நாளின் வேலைகளை சமாளிக்க ஆவலுள்ளவர்களாய் தெளிவான மனதோடு ஒவ்வொரு நாளும் விழித்துக் கொள்வது மனிதவர்க்கத்துக்கு எத்தனை நிம்மதியளிப்பதாக இருக்கும்! இனிமேலும் மனிதர்களுக்கு சோர்வான மனகுழப்பம் இடையூறாக இருக்காது.
‘மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை’ என்பதால், இப்பொழுது சோர்வுக்கு வழிநடத்தக்கூடிய துயரமான இழப்புகளின் உணர்வோ தினசரி ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான அழுத்தங்களோ இருக்காது. மக்கள் ஒருவரோடொருவர் கொள்ளும் செயல் தொடர்புகளில் கிருபையும் சத்தியமும் சமாதானமும் மேலோங்கி காணப்பட போவதால் கசப்பான போராட்டங்கள் இல்லாமற் போகும். (சங்கீதம் 85:10, 11) பாவத்தின் பாதிப்புகள் நீக்கப்படுகையில், கடவுளுடைய நீதியான தராதரங்களை பரிபூரணமாய் கடைசியாக எட்டி உள்ளான முழு சமாதானத்தைக் கொண்டிருப்பது எத்தனை மகிழ்ச்சிக்குரியது!
கிளர்ச்சியூட்டும் இந்த எதிர்பார்ப்பு, சோர்வு எத்தனை தீவிரமாக ஆனாலும், அதை மேற்கொள்ள தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க மாபெரும் தூண்டுதலாக இருக்கிறது. ஏனென்றால் கடவுளுடைய புதிய ஒழுங்கில், பரிபூரணமாக்கப்பட்ட மனிதர்கள் மனச்சோர்வை முற்றிலுமாக வென்றுவிட்டிருப்பர். அது எப்பேர்ப்பட்ட நற்செய்தி!
(g87 10⁄22)
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! எந்த ஒரு சிகிச்சை முறையையும் ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ செய்யாமல், பிரயோஜனமாயிருக்க, நடைமுறையிலுள்ள தகவலையே அளிக்கின்றது. “தாக்குதல் செய்யும் பெரிய அளவிலான சோர்வு—நிபுணர்களின் சிகிச்சை”யை எமது அக்டோபர் 22, 1981 ஆங்கில பிரதியில் பார்க்கவும். பெரிய அளவிலான சோர்விலிருந்து வெகுவாக வித்தியாசமாயிருக்கும் இயல்பான வருத்தத்தை மேற்கொள்ள, அக்டோபர் 8, 1982 ஆங்கில பிரதியில், “வருத்தத்திலிருந்து எவ்விதமாக விடுபடலாம்?” கட்டுரையைப் பார்க்கவும்.
b சோர்விலிருக்கும் ஆளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ஒருவருடைய குற்ற உணர்வையும் அவர் பிரயோஜனமற்றவராக உணர்வதையும் அதிகரிக்கக்கூடிய கண்டன வார்த்தைகளை தவிர்ப்பது மட்டுமல்லமல், நடைமுறைக்கு ஒத்துவராத நன்நம்பிக்கையையும் தவிர்க்க வேண்டும். சோர்விலிருப்பவர்களுக்கு மற்றவர்கள் எவ்வாறு உதவலாம் என்பதன் பேரில் அக்டோபர் 8, 1982 ஆங்கில விழித்தெழு! தகவலை அளிக்கிறது.
[பக்கம் 21-ன் பெட்டி]
தவறான சிந்தனை மாதிரிகள்
அனைத்தையும் சிந்திப்பது அல்லது ஒன்றையுமே சிந்தியாதிருப்பது: நீங்கள் காரியங்களை கருப்பு வெள்ளை வகையினமாகவே காண்கிறீர்கள். உங்கள் சாதனைகள் முழுநிறைவிலிருந்து சற்றே குறைவுப்பட்டாலுங்கூட முழு தோல்வியை தழுவி விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.
வரம்பின்றி பொதுவாக நினைத்துவிடுதல்: தனி ஒரு நிகழ்ச்சியை முடிவில்லா தோல்வியாக நீங்கள் கருதுகிறீர்கள். உதாரணமாக, ஒரு நண்பரோடு தர்க்கம் செய்துவிட்ட பின்பு ‘நான் என்னுடைய எல்லா நண்பர்களையும் இழந்து கொண்டு வருகிறேன். எதுவுமே எனக்கு சாதகமாக அமைவதில்லை,’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடக் கூடும்.
நம்பிக்கையான மனநிலையை ஏற்க மறுத்தல்: நல்ல அனுபவங்களை அவை “முக்கியத்துவமற்றவை” அல்லது, “இதற்கு நான் தகுதியற்றவன்,” என்பதாக ஆணித்தரமாகச் சொல்வதன் மூலம் நீங்கள் தள்ளிவிடுகிறீர்கள். இப்படியாக தனி ஒரு எதிர்மறையான விவரத்தின் மீது மனதை ஊன்ற வைப்பதன் மூலம், உங்கள் எதிர்காலம் பற்றிய முழு கருத்தும் இருளடைந்துவிடுகிறது.
அவசரப்பட்டு முடிவெடுத்தல்: எவரோ ஒருவர் உங்களை விரும்புவதில்லை என்பதாக உங்கள் மனம் போன போக்கின்படி நீங்கள் முடிவெடுக்கிறீர்கள். நீங்கள் இதைக் கண்டுபிடிக்க அக்கறை எடுத்துக் கொள்வதில்லை அல்லது காரியங்களின் முடிவு எப்பொழுதும் மோசமாகவே இருக்கும் என்று நீங்கள் முழுமையாக நம்புகிறீர்கள்.
பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்: சில காரியங்களின் (உங்களுடைய சொந்த விரும்பத்தக்க பண்புகளை அல்லது மற்றவரின் அபூரணங்களை) அவை மிகவும் அற்பமாகத் தோன்றும்வரை அவை அவ்வளவு முக்கியத்துவமற்றவை என்பதாக தோன்றும்படிச் செய்கிறீர்கள். சாதாரணமாக தடையாக ஏற்படும் நிகழ்ச்சிகளை ஓயாது வந்து வருத்தும் தொல்லைகளாக நீங்கள் கருதுகிறீர்கள்.
தனதாக்கிக் கொள்ளுதல்: வெளியே நடைபெறும் ஒரு எதிர்மறையான சம்பவத்துக்கு உண்மையில் நீங்கள் பொறுப்பாயிராவிட்டாலும், அதற்கு உங்களையே காரணமாக கருதுகிறீர்கள்.
டேவிட் D. பர்ன்ஸ் M.D. எழுதிய நலமாய் உணருதல்—புதிய மனநிலை சிகிச்சையின் அடிப்படையில்.
[பக்கம் 20-ன் படம்]
உங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய நம்பகமான ஒரு நபரிடமாக உங்கள் உணர்ச்சிகளை கொட்டிவிடுவது குணமாக்க வல்லதாக இருந்து பெரும் நிம்மதியை அளிக்கக்கூடும்.
[பக்கம் 23-ன் படம்]
சிறிய சிட்டுக்குருவிகளைக்கூட கடவுள் மதிப்புள்ளதாக கருதுகையில் நம்மை அவர் இன்னும் எத்தனை அதிக மதிப்புள்ளவர்களாக கருதுவார்?