‘தீமையை நன்மையினாலே தொடர்ந்து வெல்லுங்கள்’
“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே [தொடர்ந்து] வெல்லு.”—ரோமர் 12:21.
1. தீமையை வெல்ல முடியுமென்று நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?
உண்மை வணக்கத்தைத் தீவிரமாக எதிர்ப்பவர்களை உறுதியாய் எதிர்த்து நிற்க முடியுமா? இந்தத் தேவபக்தியற்ற உலகத்திற்குள் நம்மை மறுபடியும் இழுத்துக்கொள்ள முயலுகிற சக்திகளை வெல்ல முடியுமா? முடியும் என்பதே இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்! நாம் ஏன் அவ்வாறு சொல்கிறோம்? ஏனென்றால், “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” என்று ரோமருக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுவதாலேயே சொல்கிறோம். (ரோமர் 12:21) நாம் யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்து, இந்த உலகம் நம்மை வென்றுவிடாதிருக்கத் தீர்மானமாய் இருப்போமானால் அதன் தீய சக்தி நம்மை வெல்லாது. மேலுமாக, ‘தீமையைத் தொடர்ந்து வெல்லு’ என்று சொல்லும்போது, அதற்கு எதிராக நாம் தொடர்ந்து ஆன்மீகப் போர் செய்தால் அதை வெல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது. அப்படிப் போர் செய்யாமல் தங்களுடைய விழிப்புணர்வை இழப்பவர்களே இந்தப் பொல்லாத உலகத்தாலும் அதன் கெட்ட ஆட்சியாளனான பிசாசாகிய சாத்தானாலும் வெல்லப்படுவார்கள்.—1 யோவான் 5:19.
2. நெகேமியாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நாம் ஏன் சிந்திக்கப் போகிறோம்?
2 பவுல் வாழ்ந்ததற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுளுடைய ஊழியர் ஒருவர் எருசலேமில் இருந்தார்; அவர், தீமைக்கு எதிரான போராட்டத்தில் பவுலுடைய வார்த்தையில் காணப்படும் உண்மையை நிரூபித்தார். அவர் தேவபக்தியற்ற மக்களிடமிருந்து வந்த எதிர்ப்பை சமாளித்ததோடு தீமையை நன்மையினால் வென்றார்; அவர்தான் நெகேமியா. அவர் என்ன சவால்களைச் சந்தித்தார்? அவரால் எப்படி தீமையை வெல்ல முடிந்தது? அவருடைய முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் காண நெகேமியாவின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைச் சிந்திப்போம்.a
3. நெகேமியாவின் வாழ்க்கைப் பின்னணி என்ன, அவர் என்ன வியத்தகு சாதனை செய்தார்?
3 நெகேமியா பெர்சிய ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் வேலை செய்தார். அவர் உண்மைக் கடவுளை வணங்காதவர்களின் மத்தியில் வாழ்ந்தாலும் அன்றைய “பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” இருந்தார். (ரோமர் 12:2) யூதாவுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபோது வசதியான வாழ்க்கையைத் தியாகம் செய்தார், எருசலேமுக்குச் செல்ல கடினமான பயணத்தை மேற்கொண்டார், நகரத்தின் மதிலைத் திரும்பக் கட்டும் பிரமாண்டமான வேலையைத் தொடங்கினார். (ரோமர் 12:1) எருசலேமின் ஆளுநராக அவர் இருந்தபோதிலும் சக இஸ்ரவேலரோடு சேர்ந்து தினமும் “கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும்” வேலை செய்தார். அதனால், இரண்டே மாதங்களுக்குள் அந்த வேலை முடிந்துவிட்டது! (நெகேமியா 4:21; 6:15) இது வியத்தகு சாதனை ஆகும்; ஏனென்றால், கட்டுமான வேலையின்போது இஸ்ரவேலர் பல விதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். நெகேமியாவின் எதிரிகள் யாவர், அவர்களுடைய குறிக்கோள் என்னவாய் இருந்தது?
4. நெகேமியா புத்தகத்தில் என்ன மோதல் விளக்கப்பட்டிருக்கிறது?
4 யூத தேசத்துக்கு அருகில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த சன்பல்லாத்து, தொபியா, கேஷேம் ஆகியோரே முக்கிய எதிரிகளாக இருந்தார்கள். இவர்கள் கடவுளுடைய மக்களின் எதிரிகளாக இருந்ததால், “இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் [நெகேமியா] வந்தான் என்பது இவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.” (நெகேமியா 2:10, 19) நெகேமியாவின் எதிரிகள் அவருடைய கட்டுமானத் திட்டங்களைக் குலைத்துப்போடத் தீர்மானித்தார்கள்; அதற்காக சதித் திட்டங்களையும் கையாண்டார்கள். ‘தன்னை தீமை வெல்ல’ நெகேமியா இடங்கொடுப்பாரா?
‘கோபங்கொண்டு, மிகவும் எரிச்சலடைதல்’
5, 6. (அ) கட்டுமான வேலையைப் பார்த்து நெகேமியாவின் எதிரிகள் என்ன செய்தார்கள்? (ஆ) அவர்களைக் கண்டு நெகேமியா ஏன் அஞ்சி நடுங்கவில்லை?
5 “எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்” என்று தைரியமாய் நெகேமியா தன்னுடைய மக்களை அழைத்தார். அவர்களும் “கட்டுவோம்” என்று பதிலளித்தார்கள். அவர்கள், “அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்” என்று நெகேமியா சொல்கிறார். எதிரிகளோ “எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணப்போகிறீர்களோ” என்று சொன்னார்கள். அவர்களின் கேலிப்பேச்சையும் பொய் குற்றச்சாட்டையும் கண்டு நெகேமியா அஞ்சி நடுங்கவில்லை. “பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்” என்று எதிரிகளிடம் அவர் கூறினார். (நெகேமியா 2:17-20) நெகேமியா அந்த ‘நல்ல வேலையைச்’ செய்யத் தீர்மானமாயிருந்தார்.
6 அந்த எதிரிகளில் ஒருவனான சன்பல்லாத்து, ‘கோபங்கொண்டு, மிகவும் எரிச்சலடைந்து’ வார்த்தைகளை வாரியிறைத்தான். “அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன,” “மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ” என்று ஏளனம் செய்தான். அவனுடைய ஏளனப்பேச்சில் தொபியாவும் சேர்ந்துகொண்டு, “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” என்றான். (நெகேமியா 4:1-3) நெகேமியா எவ்வாறு பிரதிபலித்தார்?
7. எதிரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நெகேமியா எவ்வாறு பிரதிபலித்தார்?
7 நெகேமியா அந்த ஏளனப் பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. கடவுளுடைய கட்டளையை அவர் பின்பற்றினார், பழிவாங்க முயற்சி செய்யவில்லை. (லேவியராகமம் 19:18) மாறாக, அவர் காரியத்தை யெகோவாவின் கைகளில் விட்டுவிட்டார்; ‘எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பும்’ என்று ஜெபம் செய்தார். (நெகேமியா 4:4) “பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது” என்ற யெகோவாவின் வாக்குறுதியில் நெகேமியா நம்பிக்கை வைத்தார். (உபாகமம் 32:35) அதோடு, நெகேமியாவும், மக்களும் ‘அலங்கத்தைக் கட்டிவந்தார்கள்.’ கவனச்சிதறலுக்கு அவர்கள் இடங்கொடுக்கவில்லை. உண்மையில், “அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.” (நெகேமியா 4:6) உண்மை வணக்கத்தை எதிர்த்தவர்கள் கட்டுமான வேலையை நிறுத்துவதில் தோல்வி கண்டார்கள். நெகேமியாவை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
8. (அ) எதிரிகள் நம்மீது பொய் குற்றம்சாட்டும்போது நாம் எப்படி நெகேமியாவைப் பின்பற்றலாம்? (ஆ) பழிவாங்காமல் இருப்பதே ஞானமானது என்பதை விளக்குகிற உங்களுடைய அனுபவத்தையோ நீங்கள் கேள்விப்பட்ட அனுபவத்தையோ கூறவும்.
8 இன்று எதிரிகள், பள்ளியில், வேலை செய்யும் இடத்தில், ஏன் வீட்டிலும்கூட நம்மைப் பழிதூற்றி, நம்மீது குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். என்றாலும், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை, “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு” என்ற வேதப்பூர்வ நியமத்தைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பாக சமாளிக்கலாம். (பிரசங்கி 3:1, 7) எனவே, நெகேமியாவைப்போல நாமும் குத்தலான பேச்சுகளால் பழிவாங்காமல் இருக்க வேண்டும். (ரோமர் 12:17) “நானே பதிற்செய்வேன்” என்று உறுதியளித்திருக்கிற கடவுளை நம்பி அவரிடம் ஜெபிக்கலாம். (ரோமர் 12:19; 1 பேதுரு 2:19, 20) இதன்மூலம், இன்று நடைபெற வேண்டிய மிக முக்கியமான வேலையாகிய கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையிலிருந்து நம்மை வழிவிலகச் செய்ய எதிரிகளை நாம் அனுமதிக்கிறதில்லை. (மத்தேயு 24:14; 28:19, 20) எதிர்ப்பைக் கண்டு பயப்படாமல் பிரசங்க வேலையில் நாம் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் நெகேமியா காண்பித்த அதே மனப்பான்மையை வெளிக்காட்டுகிறோம்.
‘உன்னைக் கொன்றுபோடுவோம்’
9. நெகேமியாவின் எதிரிகள் எந்த விதத்தில் எதிர்க்க ஆரம்பித்தார்கள், அதற்கு அவர் எவ்வாறு பிரதிபலித்தார்?
9 நெகேமியாவின் காலத்தில் உண்மை வணக்கத்திற்கு எதிராக செயல்பட்ட எதிரிகள், “எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்று” கேள்விப்பட்டபோது, அவர்கள் பட்டயங்களை எடுத்துக்கொண்டு “எருசலேமின்மேல் யுத்தம்பண்ண” வந்தார்கள். யூதர்களின் நிலைமை நம்பிக்கையற்றதாகத் தோன்றியது. வடக்கில் சமாரியரும், கிழக்கில் அம்மோனியரும், தெற்கில் அரபியரும், மேற்கில் அஸ்தோத்தியரும் இருந்தார்கள். எருசலேம் சுற்றிவளைக்கப்பட்டபோது அதைக் கட்டுகிறவர்கள் மாட்டிக்கொண்டதுபோல் தோன்றியது! அவர்கள் என்ன செய்வார்கள்? ‘நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினோம்’ என்று நெகேமியா சொல்கிறார். எதிரிகளோ, ‘அவர்களைக் கொன்றுபோட்டு . . . வேலையை ஓயப்பண்ண’ போவதாக மிரட்டினார்கள். நகரத்தைப் பாதுகாப்பதற்காக வேலை செய்பவர்களிடம், “பட்டயங்களையும் ஈட்டிகளையும், வில்லுகளையும்” எடுத்துக்கொள்ளும்படி நெகேமியா சொன்னார். மனிதக் கண்ணோட்டத்தில் பார்த்தால், திரண்டு வந்திருந்த எதிரி படைகளுக்கு முன்னாள் கொஞ்சப் பேராக மட்டுமே இருந்த யூதர்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பது உண்மைதான்; ஆனாலும் ‘அவர்களுக்குப் பயப்படாதிருங்கள் . . . நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை [அதாவது, யெகோவாவை] நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று நெகேமியா துரிதப்படுத்தினார்.—நெகேமியா 4:7-9, 11, 13, 14.
10. (அ) நெகேமியாவின் எதிரிகள் திடீரென என்ன தலைகீழ் மாற்றத்தை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) நெகேமியா என்ன நடவடிக்கைகளை எடுத்தார்?
10 இப்பொழுதோ தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. எதிரிகள் தாக்குதலை நிறுத்திக்கொண்டார்கள். ஏன்? ‘உண்மையான தேவன் அவர்களுடைய ஆலோசனையை அபத்தமாக்கினாரென்று’ நெகேமியா கூறுகிறார். என்றாலும், எதிரிகள் தொடர்ந்து பயமுறுத்துவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால், கட்டுபவர்கள் வேலை செய்த முறையை அவர் ஞானமாக மாற்றியமைத்தார். அது முதற்கொண்டு, “அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.” மேலும், எதிரிகள் தாக்க வரும்போது வேலை செய்கிறவர்களை எச்சரிக்க ‘எக்காளம் ஊதுகிற’ ஒருவனையும் நெகேமியா நியமித்தார். இவற்றிற்கெல்லாம் மேலாக, “நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார்” என்று அவர் உறுதி அளித்தார். (நெகேமியா 4:15-20) ஊக்கம் பெற்றதாலும், தாக்குதலைச் சந்திக்க தயாராக இருந்ததாலும் அவர்கள் கட்டுமானப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். இந்தப் பதிவுகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
11. ராஜ்ய வேலை தடைசெய்யப்பட்ட நாடுகளில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு தீமையை எதிர்த்து நிற்கிறார்கள், எவ்வாறு தீமையை நன்மையினால் வெல்கிறார்கள்?
11 சில சமயங்களில், உண்மைக் கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்கலாம். சொல்லப்போனால், சில நாடுகளில் உண்மை வணக்கத்தை எதிர்ப்பவர்கள் ஏராளமான எதிரிப் படைகளை அமைத்திருக்கிறார்கள். மனிதக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அங்குள்ள நம்முடைய சக விசுவாசிகள் அவர்களை எதிர்த்து நிற்க முடியாது என்பதுபோல் தோன்றலாம். என்றாலும், அந்த உண்மைக் கிறிஸ்தவர்கள், ‘தேவன் தங்களுக்காக யுத்தம்பண்ணுவார்’ என்று நம்புகிறார்கள். தங்களுடைய மத நம்பிக்கைகளுக்காகத் துன்புறுத்தலைச் சகிப்பவர்கள், தங்களுடைய ஜெபங்களுக்கு யெகோவா பதில் அளிக்கிறதையும், வலிமை வாய்ந்த எதிரிகளின் ‘ஆலோசனையை அபத்தமாக்குகிறதையும்’ அடிக்கடி காண்கிறார்கள். ராஜ்ய வேலை தடைசெய்யப்பட்ட நாடுகளிலும்கூட நற்செய்தியைப் பிரசங்கித்து வர கிறிஸ்தவர்கள் வழிகளைக் காண்கிறார்கள். எருசலேமில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கள் வேலை செய்த முறையை மாற்றியமைத்ததைப் போலவே, இன்று யெகோவாவின் சாட்சிகளும் தாக்குதலை எதிர்ப்படும்போது பிரசங்க ஊழியம் செய்கிற முறையை ஞானமாக மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நிஜ ஆயுதங்களை அவர்கள் கையில் எடுக்க மாட்டார்கள் என்பது உண்மையே. (2 கொரிந்தியர் 10:4) அடித்து, உதைத்து பயமுறுத்தினாலும்கூட அவர்கள் பிரசங்க வேலையை நிறுத்திவிடுவதில்லை. (1 பேதுரு 4:16) அதற்கு மாறாக, நெஞ்சுரமிக்க அந்தச் சகோதர, சகோதரிகள் ‘தீமையை நன்மையினாலே வெல்கிறார்கள்.’
“ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும்”
12, 13. (அ) என்ன தந்திரத்தை நெகேமியாவின் எதிரிகள் பயன்படுத்தினார்கள்? (ஆ) எதிரிகளைச் சந்திக்க நெகேமியா ஏன் மறுத்துவிட்டார்?
12 நேரடித் தாக்குதலில் தோல்வி கண்ட நெகேமியாவின் எதிரிகள், எதிர்ப்பதற்கு இப்பொழுது வேறொரு சூழ்ச்சி முறையைக் கையாளுகிறார்கள். உண்மையில், மூன்று சதித் திட்டங்களை அவர்கள் முயற்சி செய்து பார்த்தார்கள். அவை யாவை?
13 முதலாவது, நெகேமியாவின் எதிரிகள் அவரை வஞ்சிக்க முயற்சி செய்தார்கள். “நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும்” என்று அவர்கள் சொன்னார்கள். அது எருசலேமுக்கும் சமாரியாவுக்கும் இடையில் அமைந்திருந்தது. அதனால், இரு நகரங்களுக்கிடையே பாதி தூரத்தில் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாமென எதிரிகள் நெகேமியாவிடம் சொன்னார்கள். ‘இது நியாயமாகத் தெரிகிறது; சண்டை போடுவதைவிட பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது’ என்பதாக நெகேமியா ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனாலும் அவர் போவதற்கு மறுத்துவிட்டார். காரணத்தை அவரே விளக்குகிறார்: “அவர்களோவென்றால் எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.” அவர்களுடைய சதித் திட்டத்தை அறிந்துகொண்டதால் அவர் ஏமாந்து போகவில்லை. அவர் எதிரிகளுக்கு நான்கு முறை இவ்வாறு சொல்லி அனுப்பினார்: “நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன்.” நெகேமியாவைச் சம்மதிக்க வைக்க எதிரிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அவர், கட்டுமானப் பணியிலேயே தன் கவனத்தை ஒருமுகப்படுத்தி இருந்தார்.—நெகேமியா 6:1-4.
14. பொய் குற்றம்சாட்டியவர்களிடம் நெகேமியா எவ்வாறு நடந்துகொண்டார்?
14 இரண்டாவது, அர்தசஷ்டா ராஜாவுக்கு எதிராக நெகேமியா “கலகம்பண்ண” போவதாக அவருடைய எதிரிகள் பொய் வதந்திகளைப் பரப்பினார்கள். நெகேமியாவிடம் அவர்கள் மீண்டும் இவ்வாறு சொன்னார்கள்: ‘நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை பண்ணுவோம்.’ எதிரிகளின் உள்நோக்கத்தை அறிந்துகொண்ட நெகேமியா மீண்டும் மறுத்துவிட்டார். “அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப் பார்த்தார்கள்” என்று நெகேமியா விவரிக்கிறார். என்றாலும், இந்த முறை எதிரிகளின் குற்றச்சாட்டு தவறென எடுத்துரைப்பவராக அவர் இவ்வாறு சொன்னார்: “நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல.” மேலும், “என் கைகளைத் திடப்படுத்தியருளும்” என்று யெகோவாவிடம் உதவிகேட்டு ஜெபம் செய்தார். அவருடைய உதவியால் அந்தச் சதித் திட்டத்தைத் தகர்த்துவிட முடியுமென்றும் கட்டுமானப் பணியை விரைவாகத் தீர்க்க முடியுமென்றும் நெகேமியா நம்பினார்.—நெகேமியா 6:5-9.
15. என்ன தவறான ஆலோசனையை ஒரு பொய் தீர்க்கதரிசி சொன்னான், நெகேமியா அதை ஏன் மறுத்தார்?
15 மூன்றாவது, கடவுளுடைய சட்டத்தை நெகேமியா மீறும்படி செய்வதற்கு இஸ்ரவேலனான செமாயா என்னும் துரோகியை எதிரிகள் பயன்படுத்தினார்கள். நெகேமியாவிடம் அவன் இவ்வாறு சொன்னான்: “நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள்.” நெகேமியாவை கொலை செய்யப் போகிறார்கள் என்றும், ஆலயத்தில் மறைந்து கொள்வதன்மூலம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றும் செமாயா கூறினான். என்றாலும், நெகேமியா ஓர் ஆசாரியர் அல்ல. கடவுளுடைய ஆலயத்தில் ஒளிந்துகொண்டால் அவர் பாவம் செய்தவராவார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கடவுளின் சட்டத்தை மீறுவாரா? நெகேமியா இவ்வாறு பதில் அளித்தார்: “என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை.” தனக்கு விரித்த வலையில் நெகேமியா ஏன் விழவில்லை? ஏனென்றால், செமாயா ஓர் இஸ்ரவேலனாக இருந்தாலும், “தேவன் அவனை அனுப்பவில்லை” என்பதை அவர் அறிந்திருந்தார். மெய் தீர்க்கதரிசி கடவுளுடைய சட்டத்தை மீறும்படி ஆலோசனை கொடுக்க மாட்டார் என்பது உண்மையல்லவா? பொல்லாத எதிரிகள் தன்னை வெல்வதற்கு நெகேமியா மீண்டும் இடங்கொடுக்கவில்லை. பிறகு விரைவிலேயே, “அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந் தேதியிலே முடிந்தது” என்று அவர் கூறுகிறார்.—நெகேமியா 6:10-15; எண்ணாகமம் 1:51; 18:7.
16. (அ) போலி நண்பர்கள், பொய் குற்றம்சாட்டுகிறவர்கள், கள்ளச் சகோதரர்கள் ஆகியோரிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) குடும்பத்தில், பள்ளியில், வேலை செய்யுமிடத்தில் உங்களுடைய மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மறுப்பதை எவ்வாறு காட்டுகிறீர்கள்?
16 நெகேமியாவைப் போலவே நாமும், போலி நண்பர்கள், பொய் குற்றம்சாட்டுகிறவர்கள், கள்ளச் சகோதரர்கள் ஆகியோரின் உருவில் எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். சிலர் ‘பாதி தூரத்தில்’ சந்தித்துப் பேசுவதற்கு நம்மை அழைக்கலாம். யெகோவாவுக்குச் சேவை செய்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டோமானால் அதே சமயத்தில் உலகப்பிரகாரமான குறிக்கோள்களையும் அடைய முடியும் என்று சொல்லி நம்மை இணங்க வைக்க அவர்கள் முயற்சி செய்யலாம். என்றாலும், நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுப்பதால் இணங்கிப்போக மறுக்கிறோம். (மத்தேயு 6:33; லூக்கா 9:57-62) மேலும், எதிரிகள் பொய் குற்றச்சாட்டுகளையும் பரப்புகிறார்கள். ராஜாவுக்கு எதிராக நெகேமியா கலகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது போலவே சில நாடுகளில் நாமும் அரசாங்கத்திற்கு ஆபத்தை விளைவிப்பவர்களென குற்றம்சாட்டப்படுகிறோம். சில குற்றச்சாட்டுகள் தவறானவையென நீதிமன்றங்களில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தனிப்பட்ட விதத்தில் என்ன விளைவை எதிர்ப்பட்டாலும், தம்முடைய சித்தத்திற்கு இசைவாகக் காரியங்களை வழிநடத்தும்படி நாம் யெகோவாவிடம் நம்பிக்கையோடு ஜெபிக்க வேண்டும். (பிலிப்பியர் 1:7) யெகோவாவைச் சேவிப்பதுபோல் நடிப்பவர்களிடமிருந்தும் எதிர்ப்பு வரலாம். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கடவுளின் சட்டத்தை நெகேமியா மீறும்படி செய்வதற்கு ஒரு சக யூதன் முயற்சி செய்தான்; அதுபோல, முன்னர் யெகோவாவின் சாட்சிகளாக இருந்த விசுவாசதுரோகிகள் நம்மை இணங்க வைக்க ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு வழியென முயற்சி செய்யலாம். என்றாலும், விசுவாசதுரோக கருத்துகளை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம்; ஏனென்றால், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே நம்முடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும், அவற்றை மீறுவதால் அல்ல என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 4:1) ஆம், யெகோவாவின் உதவியுடன் எந்த விதமான தீமையையும் நம்மால் வெல்ல முடியும்.
தீமையைச் சந்தித்தாலும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்
17, 18. (அ) சாத்தானும் அவனுடைய பிரதிநிதிகளும் எதைச் சாதிக்க முயற்சி செய்கிறார்கள்? (ஆ) நீங்கள் என்ன செய்ய தீர்மானமாய் இருக்கிறீர்கள், ஏன்?
17 கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் ‘தங்கள் சாட்சியின் வசனத்தினால் அவனை [சாத்தானை] ஜெயித்தார்கள்’ என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 12:11) எனவே, தீமையின் பிறப்பிடமான சாத்தானை வெல்வதற்கும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் நேரடியான சம்பந்தம் இருக்கிறது. அதனாலேயே, எதிர்ப்பைப் பூகம்பம்போல் கிளப்பிவிடுவதன்மூலம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும், ‘திரளான கூட்டத்தாரையும்’ சாத்தான் கொடூரமாகத் தாக்குகிறான் என்பதில் ஆச்சரியமேதுமில்லை!—வெளிப்படுத்துதல் 7:9; 12:17.
18 நாம் இதுவரை பார்த்தபடி எதிர்ப்பு என்பது, சொல்லால் தாக்குவது, உடல் ரீதியாகத் தாக்குவது, சதித் திட்டம் தீட்டுவது ஆகிய வடிவில் வரலாம். எவ்வித தாக்குதலாக இருந்தாலும், எப்பொழுதும் சாத்தானுடைய குறிக்கோள் பிரசங்க வேலையைத் தடைசெய்வதுதான். என்றாலும், அவன் பரிதாபகரமாகத் தோற்றுப்போவான்; ஏனென்றால், நெகேமியாவைப் போலவே கடவுளுடைய மக்கள் ‘தீமையை நன்மையினாலே வெல்வதற்குத்’ தீர்மானமாய் இருக்கிறார்கள். ‘போதும், இனி ஊழியம் செய்ய வேண்டாம்’ என்று யெகோவா சொல்லும்வரை நற்செய்தியைப் பிரசங்கித்து வருவதன்மூலம் அவர்கள் அதைச் செய்வார்கள்.—மாற்கு 13:10; ரோமர் 8:31; பிலிப்பியர் 1:27, 28.
[அடிக்குறிப்புகள்]
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பூர்வ கால கடவுளுடைய ஊழியர்கள் என்ன எதிர்ப்பைச் சந்தித்தார்கள், இன்றுள்ள கிறிஸ்தவர்கள் என்ன எதிர்ப்பைச் சந்திக்கிறார்கள்?
• நெகேமியாவுடைய எதிரிகளின் முக்கிய குறிக்கோள் என்ன, இன்று கடவுளுடைய எதிரிகளின் குறிக்கோள் என்ன?
• நாம் இன்று தீமையை நன்மையால் எவ்வாறு வெல்கிறோம்?
[பக்கம் 29-ன் பெட்டி/படம்]
நெகேமியா புத்தகம் புகட்டுகிற பாடங்கள்
கடவுளுடைய ஊழியர்கள் இவற்றை எதிர்ப்படுகிறார்கள்
• ஏளனம்
• பயமுறுத்துதல்
• வஞ்சித்தல்
இவர்களால் வஞ்சிக்கப்படுகிறோம்
• போலி நண்பர்கள்
• பொய் குற்றம்சாட்டுபவர்கள்
• கள்ளச் சகோதரர்கள்
கடவுளுடைய ஊழியர்கள் இதன்மூலம் தீமையை வெல்கிறார்கள்
• கடவுள் தந்த வேலையில் மும்முரமாய் ஈடுபடுவதன்மூலம்
[பக்கம் 27-ன் படம்]
பயங்கரமான எதிர்ப்பின் மத்தியிலும் நெகேமியாவும் அவருடைய சக பணியாளர்களும் எருசலேமின் மதிலைக் கட்டினார்கள்
[பக்கம் 31-ன் படம்]
உண்மைக் கிறிஸ்தவர்கள் அஞ்சாமல் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்