நம்பிக்கையின் கடவுளைக் கனம்பண்ணுதல்
“யெகோவா சொல்லுகிறதைக் கேள், . . . என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன், என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்.”—1 சாமுவேல் 2:30, தி.மொ.
பைபிளில் ஆதாரங்கொண்ட, நமக்கிருக்கும் எதிர்பார்ப்புகளைக் கருதுகையில், “நம்பிக்கையின் தேவனை,” “நம்பிக்கையளிக்கும் கடவுளை” கனப்படுத்துவது நமக்கு முற்றிலும் பொருத்தமாயும் நியாயமாயும் இருக்கிறது. (ரோமர் 15:13, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு; புதிய உலக மொழிபெயர்ப்பு) ஏன்? வெறும் அற்ப, அபூரண மனிதராயிருக்கும் நாம், சர்வலோகம் முழுவதன் மகா உன்னத சிருஷ்டிகரை எவ்வாறு கனப்படுத்த முடியும்? அதற்குப் பதிலாக அவர் நம்மைக் கனப்படுத்துவாரா?
2 இயேசுவின் காரியத்தில் நடந்ததிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். தம்முடைய தகப்பன் கனப்படுத்தப்பட வேண்டும், மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்றே இயேசு எப்பொழுதும் விரும்பினார் என்பதை நம்மில் எவரும் மறுக்கமாட்டோம். (யோவான் 5:23; 12:28; 15:8) உண்மையில், ‘தங்கள் உதடுகளினால் கடவுளைக் கனம்பண்ணி, ஆனால் அவர்கள் இருதயமோ அவருக்குத் தூரமாய் விலகியிருந்த’ பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு கண்டித்துக் கூறினார். அவர்கள் கடவுளைக் கனம்பண்ணாதது தகாத உள்நோக்கங்களும் செயல்களும் உட்பட்டிருந்ததைத் தயவுசெய்து கவனியுங்கள். (மத்தேயு 15:7-9) எனினும், கிறிஸ்து கடவுளைக் கனப்படுத்தினதில் அவருடைய நம்பிக்கை உட்பட்டிருந்ததென்று நாம் சொல்லக்கூடுமா? மேலும் யெகோவா தாம் இவ்வாறு கனப்படுத்தப்பட்டதற்கு எப்படிப் பதிலளித்தார்?
3 இயேசு, சங்கீதம் 16:10-லுள்ள தாவீதின் வார்த்தைகளை நினைவில் வைத்து நடந்தார்: “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் [குழியில், NW] விடீர்; உமது பக்தன் அழிவைக் காணவொட்டீர்.” (தி.மொ.) உயிர்த்தெழுப்பப்படும் இந்த நம்பிக்கைத் தமக்கு இருந்ததனால் இயேசு கிறிஸ்து, தமக்கு அருகில் கழுமரத்தில் அறையப்பட்ட தீயோனுக்குப் பின்வரும் கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளைச் சொல்ல முடிந்தது: “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.” (லூக்கா 23:39-43, NW) அந்தத் தீயோன் சீக்கிரத்தில் மரித்துப்போனான், ஆகவே மூன்று நாட்களுக்கப்பால் உயிர்த்தெழுப்பப்படும் இயேசுவின் நம்பிக்கை நிறைவேறினதை அவன் காணமுடியவில்லை. ஆனால் கண்கூடாகக் கண்ட ஒரு சாட்சி பின்வருமாறு அறிவித்தான்: “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 2:31, 32) இது நடந்த உண்மை.
4 இயேசு ஊழியஞ்செய்த பொதுமக்களில் பலர், அவர் மதிப்புக்கு அல்லது கனத்துக்குத் தகுதியுள்ளவரென அறிந்திருந்தார்கள். (லூக்கா 4:15; 19:36-38; 2 பேதுரு 1:17, 18) பின்பு அவர் குற்றவாளியைப் போல் மரித்தார். இது காரியங்களை மாற்றிவிட்டதா? இல்லை, ஏனெனில் இயேசு, தாம் நம்பிக்கை வைத்திருந்தக் கடவுளின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார். இதனால், யெகோவா அவரைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவந்தார். “நம்பிக்கையின் தேவன்” தம்முடைய குமாரனை உயிர்த்தெழுப்பி, ஆவி மண்டலத்தில் அழியாமையைக் கொண்டு அவரை அணிவித்த இந்த உண்மை, பிதா தம்முடைய குமாரனைத் தொடர்ந்து கனப்படுத்தினார் என்று நிரூபிக்கிறது. பவுல் சொல்வதாவது: “தேவனுடைய கிருபையினால் [தகுதியற்றத் தயவினால், NW] ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு . . . இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”—எபிரெயர் 2:7, 9; பிலிப்பியர் 2:9-11.
5 யெகோவாவைக் கனப்படுத்தின இயேசு, பிதா தம்மைக் கனப்படுத்தின ஒரு விசேஷித்த முறையைக் குறிப்பிட்டார். தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலருக்குத் தோன்றின ஒரு சமயத்தில், அவர் பின்வருமாறு கூறினார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து [முழுக்காட்டி, NW] . . . உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் [இந்தக் காரிய ஒழுங்குமுறையின், NW] முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:18-20) ஆகவே பிதா, அவருக்குத் தனித்தன்மை வாய்ந்த அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலம், குமாரனை மேலுமாகக் கணப்படுத்தினார். இது, இயேசு யாரைக் கனப்படுத்த உழைக்கிறாரோ அவருக்குக் கனத்தைக் கொண்டுவரும் வேலையைச் செய்யும் மனிதரின் சார்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படியானால், அபூரண மனிதராகிய நாம் ஏதோ ஒரு முறையில் பிதாவைக் கனப்படுத்தவும், அதற்குப் பதிலாக அவரால் நாம் கனப்படுத்தப்படவும் முடியுமென இது குறிக்கிறதா?
மனிதர் கடவுளைக் கனப்படுத்துகிறார்கள்
6 மனிதர் பெரும்பான்மையர் கடவுளை முதலாவதாகக் கனம்பண்ணுவதைப்பற்றி நினைப்பதும் அரிதே, ஏனெனில் அவர்கள் தங்களுக்கே கனத்தைப் பெறுவதில் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள். கனப்படுத்தப்பட விரும்புவது நமக்கு இயல்பானதே என்றும் சிலர் சொல்லக்கூடும். இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. நற்பெயரை விரும்புவதும், அதிலிருந்து ஓரளவு கனத்தைப் பெறுவதும் இயல்பானதே. (1 தீமோத்தேயு 3:2, 13; 5:17; அப்போஸ்தலர் 28:10) எனினும், மனிதரிடமிருந்து கனத்தைப் பெறுவதற்கான ஆசையை எளிதாய் மிகைப்படுத்தலாம். என்ன ஆனாலுஞ்சரி புகழடைந்துவிட வேண்டுமென நாடித் தொடரும் பலரில் அல்லது மதிப்பைக் காத்துக்கொள்வதற்கு எதையும் செய்ய தயாராயிருப்பவர்களில் இதை நாம் காணலாம்.
7 இதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கையில், மனிதரிடமிருந்து வரும் மிக உயர்ந்த கனமும் விரைவில் சென்று மறைந்துவிடுகிறது, எப்படியெனில் எல்லாரும் சீக்கிரத்தில் மரித்துப்போகிறார்கள். ஒருசில வீரர்களின் நினைவு சிறிது காலத்துக்குக் கனப்படுத்தப்படலாம், ஆனால் மரித்தோரில் பெரும்பான்மையர் மறக்கப்படுகிறார்கள். தங்கள் பாட்டனாரின் பெற்றோருடைய பெயர் அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தங்கள் நாட்டின் தலைவர்கள் யாரென எத்தனை பேருக்குத் தெரியும்? உண்மையில், ஒருவர் வாழ்ந்ததோ வாழாததோ, காரியங்களை மாற்றுகிறதில்லை. காலத் தராசிலுள்ள ஒரு நுட்பப் பொடி தூசியைப் போலும், வாழ்க்கை நீரோட்டத்தில் ஒரு சின்னஞ்சிறு துளியைப்போலும் அவன் இருக்கிறான். அவனுடைய மரணத்துக்குப் பின் அவன் சிறிதுகாலம் கனப்படுத்தப்பட்டாலும், அவன் அதை அறியான். (யோபு 14:21; 2 நாளாகமம் 32:33; பிரசங்கி 9:5; சங்கீதம் 49:12, 20) கடவுள் அளிக்கிற நம்பிக்கையைக் கொண்டிருப்பதே, அவரைக் கனப்படுத்துவதும், பதிலுக்கு அவரால் கனப்படுத்தப்படுவதுமே வேறுபாட்டை உண்டுபண்ணக்கூடிய ஒரே காரியம். இதை நாம் பூர்வ இஸ்ரவேலில் ஒரே காலத்தில் வாழ்ந்த இருவரின் காரியத்திலிருந்து கண்டுகொள்ளலாம்.
8 இவர்களில் ஏலி ஒருவன். இவன் பிரதான ஆசாரியனாகத் தனிச் சிறப்புவாய்ந்த இந்த நிலையில் நாற்பது ஆண்டுகள் கடவுளைச் சேவித்தான். இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கும் சிலாக்கியமும் அவனுக்கு இருந்தது. (1 சாமுவேல் 1:3, 9; 4:18) எனினும், காலப்போக்கில், ஒப்னி, பினேகாஸ் ஆகிய தன்னுடைய குமாரர் சம்பந்தமாக அவன் பலவீனத்தைக் காட்டினான். இவர்கள் ஆசாரியராக இருந்தபோதிலும், தங்கள் ஊழிய பொறுப்பை, பலிகளிலிருந்து பாகங்களைத் திருடுவதற்கும் ஒழுக்கக்கேடான பாலுறவில் ஈடுபடுவதற்கும் துர்ப்பிரயோகம் செய்தார்கள். அவர்கள் தகப்பன் உறுதியற்ற முறையில் அவர்களைக் கண்டித்துக் கூறினதைத் தவிர அதிகம் ஒன்றும் செய்யாமற்போனபோது, ஏலி ‘தம்மைப் பார்க்கிலும், தன் குமாரரையே மேலாக மதித்துக் கொண்டிருப்பதாகக்’ கடவுள் அறிவித்தார். ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தொடர்ந்திருக்கச் செய்வாரென யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார், ஆனால் ஏலியின் வீட்டை பிரதான ஆசாரியத்துவ ஊழியத்திலிருந்து அவர் தறித்துப்போடுவார். ஏன்? “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்,” என்று யெகோவா விளக்கினார்.”—1 சாமுவேல் 2:12-17, 29-36, தி.மொ.; 3:12-14,
9 சாமுவேல் இதற்கு வேறுபட்டான். சாமுவேலைச் சிறு வயதில், சீலோவிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படி அவனுடைய பெற்றோர் கொண்டுவந்து விட்டது உங்களுக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும். ஓர் இரவில் யெகோவா அந்தச் சிறுவனிடம் பேசினார். இந்த விவரத்தை 1 சாமுவேல் 3:1-14-ல் வாசிப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடையலாம். அச்சிறுவன், இடிமுழக்கக் குரலால் அல்ல, தாழ்ந்த மென் குரலால் எழுப்பப்பட்டதால், அது முதிர்வயதான ஏலியின் குரலென தவறாகக் கருதிக்கொண்டதைக் கற்பனை செய்துபார்த்து வாசியுங்கள். பின்பு, ஏலியின் வீட்டைத் தண்டிப்பதற்குக் கடவுள் தீர்மானித்திருந்ததை வயதுமுதிர்ந்த பிரதான ஆசாரியனுக்குச் சொல்ல வேண்டியது சிறுவன் சாமுவேலுக்கு எவ்வளவு பயத்தைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். என்றபோதிலும் சாமுவேல் அதைச் செய்தான்; கீழ்ப்படிவதன்மூலம் அவன் கடவுளைக் கனம்பண்ணினான்.—1 சாமுவேல் 3:18, 19.
10 சாமுவேல் தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் பல ஆண்டுகள் யெகோவாவைக் கனம்பண்ணினான், கடவுள் அவனைக் கனம்பண்ணினார். இதை 1 சாமுவேல் 7:7-13-ல் கவனியுங்கள். பெலிஸ்தரை முறியடிப்பதற்கு உதவிகேட்டு விண்ணப்பித்த சாமுவேலின் ஜெபத்துக்கு யெகோவா விரைவில் பதிலளித்தார். இத்தகைய தெய்வீக அங்கீகாரத்தைப் பெறுவதில் நீங்கள் கனப்படுத்தப்பட்டதாக உணருவீர்களல்லவா? சாமுவேலின் குமாரர் அவனுடைய வழிநடத்துதலைப் பின்பற்றாதபோது, கடவுள் ஏலியைத் தள்ளிவிட்டதுபோல் சாமுவேலைத் தள்ளிவிடவில்லை. இது ஏனென்றால் கடவுளைக் கனப்படுத்த சாமுவேல் தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்தான் எனத் தெரிகிறது. மேலும் மனித அரசன் வேண்டுமென ஜனங்கள் கேட்டதைக் கண்டனம் பண்ணினதிலும் சாமுவேல் இதைத் தெரிவித்தான். (1 சாமுவேல் 8:6, 7) சவுலையும் தாவீதையும் அபிஷேகஞ் செய்யும்படியும் கடவுள் சாமுவேலை உபயோகித்தார். சாமுவேல் மரித்தபோது இஸ்ரவேலர் அவனுக்காகப் புலம்புவதில் அவனைக் கனம் பண்ணினார்கள். எனினும், எல்லாவற்றிலும் மிக முக்கியமாய், உயிர்த்தெழுப்புவதாலும் கடவுள் அவர்களுக்காகச் சேமிப்பில் வைத்திருக்கிற நல்ல காரியங்களாலும் ஆசீர்வதிக்கப்பட போகிற விசுவாசமுள்ள மனிதருக்குள் பைபிளில் அவனைக் குறிப்பிடுவதன் மூலம் கடவுள் அவனைக் கனப்பண்ணினார். (சங்கீதம் 99:6; எரேமியா 15:1; எபிரெயர் 11:6, 16, 32, 39, 40) “நம்பிக்கையின் தேவனைக்” கனம்பண்ணுவது மிகுந்த மதிப்புவாய்ந்ததென இது காட்டுகிறதல்லவா?
“நம்பிக்கையின் தேவனை” நீங்கள் கனம்பண்ணுவீர்களா?
11 வெறும் இரண்டு பைபிள் முன்மாதிரிகளை மாத்திரமே கொடுக்க, இயேசுவின் காரியமும் சாமுவேலின் காரியமும், மனிதர் தங்கள் நம்பிக்கையின் கடவுளைக் கனம்பண்ணுவதை வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த முதலிடத்தில் வைக்க முடியுமென உறுதிப்படுத்துகின்றன. மேலும் நாம் அப்படிச் செய்வதால் கடவுளிடமிருந்து கனத்தை நாடிப் பெற முடியுமெனவும் இந்த இருவருடைய காரியங்கள் காட்டுகின்றன. ஆனால், நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்துவீர்கள், அவரால் கனப்படுத்தப்படுவீர்கள், மேலும் பைபிளில் ஆதாரங்கொண்ட உங்கள் நம்பிக்கையை அடைவீர்கள் என்ற நியாயமான உறுதியுடன் இதை எப்படிச் செய்யலாம்?
12 கடவுளுக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோ என்ற உண்மையான, மரியாதையுள்ள பயம் ஒரு வழியாகும். (மல்கியா 1:6) இந்தக் கூற்றை நாம் அநேகமாய் உடனடியாக ஒப்புக்கொள்ளலாம். என்றாலும், ஏலியின் குமாரரை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். கடவுளுக்கு மரியாதையுடன் பயந்து அவரைக் கனம்பண்ண தாங்கள் விரும்பினார்களாவென நீங்கள் அவர்களைக் கேட்டிருந்தால், அவர்கள் பெரும்பாலும், ஆம், என்றே சொல்லியிருப்பார்கள். கடவுளுக்குப் பயந்து நடப்பதால் அவரைக் கனம்பண்ண வேண்டுமென்ற நம்முடைய ஆவலை, அனுதின வாழ்க்கையில் மெய்ம்மையாகும் செயல்களாக மாற்றுவதிலேயே பிரச்னை வருகிறது.
13 பொதுவில் மற்றவர் அறியாதபடி நாம் திருடக்கூடிய அல்லது பால் சம்பந்த ஏதோ தகாத நடத்தையில் ஈடுபடக்கூடிய சோதனையான சந்தர்ப்ப நிலையை நாம் எதிர்ப்பட்டால் கடவுளைக் கனம்பண்ண வேண்டுமென்ற நம்முடைய ஆவல் நம்முடைய செயல்களைப் பாதிக்குமா? ‘அந்தத் தவறான செயல் வெளிப்படாமல் மறைவாகவே இருக்கக்கூடுமென்றாலும், அத்தகைய பாவத்துக்கு நான் இணங்கி உட்படுவதே, அவருடைய பெயரைத் தாங்கியிருக்கும் “நம்பிக்கையின் தேவனுக்கு” அவமதிப்பைக் கொண்டுவருகிறது’ என்ற உணர்ச்சியை நாம் நம்மில் வளர்க்க வேண்டும். உண்மை என்னவெனில், ஏலியின் குமாரர் செய்த காரியங்கள் மறைந்திராததைப் போலவே அந்தத் தவறு நிலையாய் எப்போதுமே மறைந்திராது. “தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பைப்” பற்றிக் கூறும் பவுலின் வார்த்தைகளில் இது குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. “தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும்.”—ரோமர் 2:5-8.
14 மறுபட்சத்தில், பவுல், கடவுளைக் கனப்படுத்துகிறதும் அவரிடமிருந்து “மகிமையையும் கனத்தையும்” அடைவதில் பலன் தருகிறதுமான “நற்கிரியை”யில் பங்குகொள்வதைக் குறிப்பிடுகிறான். இன்று இவ்வகை முதன்மையான வேலை, மத்தேயு 28:19, 20-ல் இயேசு குறிப்பிட்டதாகும்: ‘சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கி, அவர்களை முழுக்காட்டி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.’ (NW) உலகமெங்கும் இலட்சக்கணக்கில் யெகோவாவின் சாட்சிகள் கடவுளைக் கனப்படுத்தும் இந்தப் பிரசங்க மற்றும் கற்பிக்கும் வேலையில் சுறுசுறுப்பாய் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலர், பயனியர்களாக, ஒழுங்காகவோ, அல்லது உலகப்பிரகாரமான வேலையிலிருந்து அல்லது பள்ளியிலிருந்து ஓய்ந்திருக்கும் விடுமுறையின்போதோ முழுநேர ஊழியத்தில் உழைக்கத் தங்களை ஈடுபடுத்துகிறார்கள். இதை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் இந்த வேலையில் எவ்வாறு நிலைநிற்கிறோமென நன்மை பயக்கும் வண்ணமாய்ச் சிந்தித்துப் பார்க்கலாம். உதாரணமாக: ‘பிரசங்க வேலையில் முழு பங்குகொள்வதன்மூலம் “நம்பிக்கையின் தேவனை” நான் கனம்பண்ணுகிறேனா?’ என்று உங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.
15 பல ஆண்டுகள் சுறுசுறுப்பாய்ப் பிரசங்க ஊழியஞ்செய்த கிறிஸ்தவர்கள் சிலர் படிப்படியாய்க் கிளர்ச்சியற்றுப் போயிருக்கின்றனர். சீஷராக்கும் இந்த முக்கியமான வேலையில் ஒரு சிறிய அல்லது ஏதோ ஒரு சமயத்தில் மாத்திரமே பங்குகொள்ளும் ஒரு மாதிரிக்குள் தங்களை நிலையாய் அமர்த்திக்கொண்டிருக்கின்றனர். உடல் சம்பந்தக் கட்டுப்பாடுடையவர்களும் முதுமையின் பாதிப்புகளால் தளர்வுற்றவர்களுமான ஆட்களை நாங்கள் குறிக்கிறதில்லை. அவர்களில்லாமல், பல்வேறு வயதுகளில் உள்ள சாட்சிகள் சிலருக்குள் படிப்படியாய்ச் செயலூக்கங் குன்றிபோவது காணப்படுகிறது. கவனிக்கத்தக்கதாய், பவுல், ‘தளர்ந்து போவதற்கு’ எதிராகக் கிறிஸ்தவர்களை எச்சரித்தபோது, ஒரு தனி வயது தொகுதியாரைக் குறிப்பிடவில்லை. அதைப் பார்க்கிலும், ஒருவரின் வயது என்னவாயிருந்தாலுஞ்சரி, முக்கிய குறிப்பு என்னவென்றால் ஊழியத்தில் தவறாமல் பங்குகொண்டு வருவதற்குத் தொடர்ந்த முயற்சி தேவை. பவுலின் நாளில் நடந்ததாகத் தோன்றுவதுபோல், இன்று சிலர், ‘கடந்த ஆண்டுகளிலெல்லாம் என் பங்கை நான் செய்துவிட்டேன், ஆகவே இப்பொழுது, புதிதாயிருக்கும் கிறிஸ்தவர்கள் தங்களை முயற்சியில் ஈடுபடுத்தலாம்,’ என்று சிந்திக்கிறார்கள்.—கலாத்தியர் 6:9; எபிரெயர் 12:3.
16 இம்முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறவர்கள் நிச்சயமாகவே, சிறுபான்மையோரே, ஆனால் நீங்கள் உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இத்தகைய ஏதாவது மனப்போக்கை என் காரியத்தில் நான் ஒளிவு மறைவில்லாமல் கண்டறிகிறேனா? ஊழியத்தில் நான் எடுக்கும் என் பங்கு கடந்த காலத்தில் நான் செய்ததோடு ஒப்பிட எவ்வாறு இருக்கிறது?’ ஏதாவது தளர்வு ஏற்பட்டிருப்பினும் இல்லாவிடினும், “எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும்” அருளுவாரென நம்முடைய “நம்பிக்கையின் தேவன்” வாக்குக் கொடுத்திருப்பதை நாம் எல்லாரும் மனதில் வைக்க வேண்டும். (ரோமர் 2:10) “ஏதோ வேலை செய்ய, உண்டுபண்ண, நடப்பிக்க” என்றர்த்தங்கொள்ளும் கிரேக்கச் சொல்லைப் பவுல் பயன்படுத்தினான். வெறுமென ஒருவகை உதடுகளின் சேவையாகக் கடவுளைக் கனம்பண்ணின பரிசேயர் வேதபாரகருக்கு நேரிட்டதை நாம் தவிர்ப்பது எவ்வளவு இன்றியமையாதது. (மாற்கு 7:6; வெளிப்படுத்துதல் 2:10) இதற்கு நேர்மாறாக, இருதயத்திலிருந்து நாம் செயல்பட்டு வெளி ஊழியத்தில் சுறுசுறுப்பாய்ப் பங்குகொள்கையில், நமக்கு நிச்சயமாகவே மெய்யான ஒரு நம்பிக்கை இருக்கிறதென நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் உறுதிப்படுத்துகிறோம். நம்முடைய சிருஷ்டிகரும் உயிரளிப்பவருமானவரை நாம் கனம்பண்ணுகிறோம். மேலும், இப்பொழுதும் முடிவில்லாமலும், அவரால் கனப்படுத்தப்படும் நிலையில் நாம் வருகிறோம்.—லூக்கா 10:1, 2, 17-20.
நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களைக் கொண்டு
17 நம்முடைய “நம்பிக்கையின் தேவனை” நாம் கனம்பண்ணக்கூடிய மற்றொரு வழியைக் குறித்து நீதிமொழிகள் 3:9-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “யெகோவாவை உன் [விலை மதிப்புள்ள, NW] பொருளாலும் உன் சகல விளைச்சலின் முதற்பலனாலும் கனம்பண்ணு.” ஸ்பரல் என்பவர் இந்த வசனத்தைப் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறார்: “உன் செல்வத்தைக் கொண்டும், உன்னுடைய எல்லா பெருக்கத்தின் மிகச் சிறந்ததைக் கொண்டும் யெகோவாவை மகிமைப்படுத்து.”—மூல எபிரெயுவிலிருந்து மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு வேதாகமங்களின் ஒரு மொழிபெயர்ப்பு.
18 பல்வேறு பாதிரிமார் தங்கள் அளவற்றப் பேராசைக்கும் செல்வம் மிகுந்த வாழ்க்கை நடைபாங்குக்கும் வசைப்பெயர் பெற்றிருப்பதனால், வெறுமென செல்வத்தைப் பெறவேண்டுமென்பதே தங்கள் நோக்கமாகத் தெளிவாய்த் தோன்றுகிற சர்ச்சுகளுக்கும் மத அமைப்புகளுக்கும் கொடுக்க பல ஆட்கள் தயங்கலாம். (வெளிப்படுத்துதல் 18:4-8) எனினும், இத்தகைய துர்ப்பிரயோகங்கள், நீதிமொழிகள் 3:9-ன் நேர்மைத் தகுதியை மாற்றுகிறதில்லை. தேவாவியால் ஏவப்பட்ட இந்த அறிவுரைக்கு இணங்க, நாம் நம்முடைய “நம்பிக்கையின் தேவனாகிய” “யெகோவாவைக் கனம் பண்ண” நம் “விலைமதிப்புள்ள பொருட்களை” எவ்வாறு பயன்படுத்தலாம்?
19 மேலும் மேலும் மிகுதியான ஆட்கள் ராஜ்ய செய்தியை ஏற்றுச் செயல்பட்டு வருவது ராஜ்ய மன்றங்களை விரிவாக்குவதை அல்லது புதிய மன்றங்களைக் கட்டுவதைத் தேவைப்படுத்துகிறதென யெகோவாவின் சாட்சிகள் காண்கிறார்கள். அப்படியானால், “உன் செல்வத்தைக் கொண்டு யெகோவாவை மகிமைப்படுத்த” இங்கே ஒரு வழி இருக்கிறது. கட்டட நிதிகளுக்குத் தங்கள் சொந்தமாய்ப் பங்களிக்கத் தீர்மானிப்பது போன்ற முறையில் இளைஞரும் முதியோரும் இதைச் செய்வதில் பங்குகொண்டிருக்கின்றனர். இத்தகைய மறைவான தீர்மானங்களைத் தொடர்ந்து நிறைவேற்றத் தனிப்பட்ட கட்டுப்பாடு அல்லது ஏதோ தியாகமுங்கூட தேவைப்படலாம், முக்கியமாய்க் கட்டட ஏற்பாட்டைத் திட்டமிடுவதும் செய்து முடிப்பதும் நெடுங்காலம் நீடித்தால் அந்நிலை ஏற்படலாம். (2 கொரிந்தியர் 9:6, 7) ஆயினும், பணத்தை இம்முறையில் பயன்படுத்துவது யெகோவாவை உண்மையில் கனப்படுத்துகிறது, எப்படியெனில், ராஜ்ய மன்றங்கள் யெகோவாவை வணங்குவதற்குரிய இடங்கள், அங்கே கிறிஸ்தவர்களும் அவர்களோடு கூடி வருபவர்களும் அவரைப் பற்றிய அறிவை அடைகிறார்கள். இவ்வாறு தம்மைக் கனப்படுத்தினவர்களைக் கடவுள் கனப்படுத்துவார் என்று நம்புவதற்கு, மத்தேயு 6:3, 4-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நல்ல காரணத்தைக் கொடுக்கின்றன.
20 என்றபோதிலும், ஒரு எச்சரிக்கை: கடவுளைக் கனம்பண்ணுவதை முதல் வைக்கவில்லையென இயேசு சொன்ன பரிசேயரும் வேதபாரகரும், அவருடைய செல்வத்திலிருந்து நன்மையடைவதற்குத் தாங்கள் முதல்வராயிருக்கும்படி நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். ஆகவே மத்தேயு 15:4-8-ல் உள்ள அறிவுரை, ‘நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணுவதைக்’ குறித்ததில் தன்னாராய்ச்சிக்கு நம்மை உட்படுத்தும்படி ஆலோசனை கூறுகிறது. (எரேமியா 17:9, 10) உதாரணமாக, தன் வாணிக நடவடிக்கையின் மூலம் ஓரளவு செல்வந்தனாகியிருக்கும் ஒரு கிறிஸ்தவன் தான் தொடர்ந்து முழுநேரம் வேலைசெய்து இன்னுமதிகம் சம்பாதிப்பதற்கு விளக்கங் கூறலாம். ‘மற்றவர்கள் பயனியர் ஊழியத்தை மேற்கொள்கிறார்கள் அல்லது பிரசங்கிகள் முக்கியமாய்த் தேவைப்படும் இடங்களில் சேவிக்கச் செல்கிறார்கள், ஆனால் கடவுளைச் சேவிக்க என்னுடைய தனிப்பட்ட முறையானது, அதிகம் சம்பாதித்து பின்பு நன்கொடை அளிப்பதற்கு நிறைய கொண்டிருப்பதே’ என அவன் வாதிட்டு முடிவுசெய்யலாம். உண்மையில், அவனுடைய நன்கொடைகள் அதிக நன்மை செய்யலாம். ஆனால், அவன் தன்னைப் பின்வருமாறு கேட்கலாம்: ‘மேலும் மேலும் அதிகம் சம்பாதிப்பதற்கு என்னுடைய முதல் முக்கிய நோக்கம் கடவுளைக் கனப்படுத்துவதே என்று என் தனிப்பட்ட வாழ்க்கை நடைபாணி காட்டுகிறதா?’ (லூக்கா 12:16-19; மாற்கு 12:41-44-ஐ ஒத்துப் பாருங்கள்.) மேலும், ‘நம்முடைய நாளுக்குரிய மிக அதிக முக்கியமான வேலையாகிய—நற்செய்தியை அறிவிப்பதில்—மேலுமதிக தனிப்பட்ட பங்குகொள்ளும்படி நான் என் விவகாரங்களை ஒழுங்குபடுத்தக்கூடுமா?’ உண்மையில், வாழ்க்கையில் நம்முடைய சூழ்நிலைமைகள் என்னவாயிருந்தாலுஞ்சரி, நாம் நம்முடைய உள்நோக்கங்களையும் செயல்களையும் சோதித்துப் பார்த்து, ‘என் உயிரளிப்பவரும் “நம்பிக்கையின் தேவனுமானவரை” நான் மேலும் முழுமையாய் எப்படிக் கனம்பண்ணலாம்?’ என்று கேட்கலாம்.
21 யெகோவா நம்மை ஏமாற விடமாட்டார். அவர் உண்மையுள்ள இஸ்ரவேலுக்குப் பின்வருமாறு சொன்னதுபோல், நம்மைப்பற்றி இப்பொழுதும் எதிர்காலத்திலும் சொல்லக்கூடியது எத்தகைய மகிழ்ச்சி நிரம்பிய எதிர்பார்ப்பு: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன் [நேசித்தேன், NW].” (ஏசாயா 43:4) “மகிமையையும் கனத்தையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்ப”தாக அவர்தாமே வாக்குகொடுக்கிறார். சோர்ந்துபோகாமல் “நற்கிரியைகளைச்” செய்துகொண்டிருக்கிறவர்களுக்கே இந்த வாக்கை அவர் கொடுக்கிறார். எத்தகைய நம்பிக்கையின் கடவுள்! (w87 12/15)
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ மனிதர் யெகோவாவைக் கனம்பண்ணுவதைக் குறித்ததில், இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ கடவுளைக் கனம்பண்ணுவதைக் குறித்ததில் ஏலியும் சாமுவேலும் எவ்வாறு வேறுபட்டார்கள்?
◻ நீங்கள் கடவுளுக்குக் கொண்டுவரும் கனத்தை அதிகரிக்கக்கூடிய சில வழிகள் யாவை? இதற்கு என்ன பதிலளிப்பை நீங்கள் பெறக்கூடும்?
◻ நம்முடைய “நம்பிக்கையின் தேவனைக்” கனம்பண்ணுவதை முதலாவது வைப்பவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?
[கேள்விகள்]
1. யெகோவாவைக் கனம்பண்ண விரும்புவதற்கு என்ன காரணம் நமக்கு உண்டு? (1 தீமோத்தேயு 1:17; வெளிப்படுத்துதல் 4:11)
2. கடவுளுக்குக் கனத்தைக் கொடுப்பதைப் பற்றி இயேசு எவ்வாறு உணர்ந்தார்?
3. இயேசு யெகோவாவில் நம்பிக்கைக் கொண்டிருந்ததை நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
4. இயேசு என்ன கனத்துக்குத் தகுதியாயிருந்து அதைப் பெற்றார்? (வெளிப்படுத்துதல் 5:12)
5. எந்த விசேஷித்த முறையில் இயேசு கனப்படுத்தப்பட்டார், இது கடவுளுக்கு மேலும் என்ன கனம் உண்டாவதில் பலன் தந்தது?
6. கனப்படுத்தப்பட வேண்டுமென விரும்புவது சரியா, ஆனால் இதில் என்ன ஆபத்து இருக்கிறது? (லூக்கா 14:10)
7. மனிதரால் கனப்படுத்தப்படுவது ஏன் இத்தகைய மட்டுப்பட்ட மதிப்புடையது?
8. கனம்பண்ணுவது உட்பட்ட என்ன வலைக்குள் ஏலி விழுந்தான்?
9. யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கான வாய்ப்பு சாமுவேலுக்கு எவ்வாறு கொடுக்கப்பட்டது?
10. தாம் கனம்பண்ணப்பட்டதற்குப் பதிலளித்து, கடவுள் சாமுவேலை எவ்வாறு கனப்படுத்தினார்?
11, 12. யெகோவாவைக் கனம்பண்ணுவதைப் பற்றி நாம் எதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்? அதைச் செய்வதற்கு ஒரு வழி என்ன?
13. கடவுளுக்குப் பயப்படுவதன் மூலம் அவரைக் கனப்படுத்த வேண்டுமென்ற ஆவல் எவ்வாறு நமக்கு உதவிசெய்யுமென்பதை விளக்குங்கள்.
14. நாம் கடவுளைக் கனம்பண்ணக்கூடிய மற்றொரு வழி என்ன, நம்மைநாமே என்ன கேட்டுக்கொள்ளலாம்?
15. வெளி ஊழியத்தின் மூலம் யெகோவாவைக் கனப்படுத்துவதைக் குறித்ததில் சிலருக்கு என்ன நடந்திருக்கிறது?
16. இதன் சம்பந்தமாக நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்பது ஏன் நன்மை பயக்கலாம்?
17, 18. கடவுளைக் கனப்படுத்துவதற்கு மற்றொரு வழி என்ன? இவ்வாறு செய்ய அரைமனதுடன் தயங்குவது ஏன் முழுமையாய் நேர்மைத் தகுதிவாய்ந்ததல்ல?
19. நீதிமொழிகள் 3:9-ஐ சிலர் பொருத்திப் பிரயோகித்திருக்கும் முறையை விளக்குங்கள்.
20. (எ) நீதிமொழிகள் 3:9-ஐப் பொருத்திப் பிரயோகிப்பதில் ஏன் தன்னாராய்ச்சி செய்தல் தகுதியாயிருக்கிறது? (பி) என்ன கேள்விகளை நாம் நம்மைக் கேட்டுக்கொள்ளலாம்?
21. கடவுளைக் கனம்பண்ணுவதனால் என்ன எதிர்பார்ப்பை நாம் கொண்டிருக்கலாம்?
[பக்கம் 29-ன் பெட்டி]
நன்கொடைகளைப் பற்றிக் கடிதங்கள்
தி உவாட்ச் டவர் சொஸையட்டியின் புரூக்லின், நியூ யார்க் அலுவலகம் பெற்றக் கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்:
“என் பெயர் அபைஜா. எனக்கு 9 வயது. ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதில் வேலைசெய்யும் சகோதரருக்காக நான் உங்களுக்கு 4 டாலர்கள் (ரூ49/.) கொடுக்க விரும்புகிறேன். இதை அவர்கள் மரப்பலகை வாங்குவதற்கோ அல்லது மிட்டாய் வாங்குவதற்கோ பயன்படுத்தலாம், எதுவும் எனக்குச் சம்மதம்தான்.”—ஓரிகான்.
‘இத்துடன் என் சொந்தக் காசோலை [செக்] வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனக்குத் 96 வயது கடந்துவிட்டது, காது கேட்பது மிகக் கடினம், ஆனால் இதற்காக என் பணத்தைச் சேமித்து வைப்பதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இரண்டாந்தரமான பழைய காரை நான் ஓட்டுகிறேன் என்பது எனக்குத் தெரியும், என் குளிர்காலங்களை ஃபிளாரிடாவிலோ கலிஃபோர்னியாவிலோ நான் செலவிடுகிறதில்லை. கதவுகளைத் தட்டி ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நான் வெகு சொற்பமே செய்ய முடிகிறது. ஆனால் என் பணத்தைச் சேமித்து உங்களுக்குக் கொஞ்சத்தை அனுப்புவதில், எனக்கு இன்னும் அதில் பங்கிருப்பது போல் நான் உணருகிறேன்.—ஒஹையோ.
‘ராஜ்ய மன்றத்துக்காக நீங்கள் செய்த எல்லாவற்றிற்காகவும் உங்களுக்கு நன்றி. இந்தப் பணம் [5 டாலர்கள் (ரூ60/-)] நாங்கள் வாசிப்பதற்குப் புத்தகங்களையும் காவற்கோபுரங்களையும் செய்ய உங்களுக்கு உதவிசெய்வதற்காகும். இந்தப் பணம் என் சேமிப்புப் பெட்டியிலிருந்து எடுத்தது. போதை பொருட்களைப் பற்றி எங்களுக்குச் சொல்ல ஸ்கூல் (பள்ளி) புரோஷூருக்காக நன்றி.’
“இதில் ஒரு காசோலை [செக்] வைத்திருப்பதைத் தயவுசெய்து காணுங்கள். அதில் இருநூறு டாலர்கள் [ரூ2,450] ராஜ்ய மன்றக் கட்டட நிதிக்கு. மீதி, பிரசங்க வேலையை முன்னேற்றுவதற்கு நீங்கள் சிறந்ததாகக் காணும் எந்த முறையிலாவது பயன்படுத்துவதற்கு.”—மிஸெளரி.