வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மார்ச் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 12-14
“கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?”
it-1-E 55
பாசம்
கிறிஸ்தவச் சபையில் இருக்கும் எல்லாருமே சகோதர அன்பைக் காட்ட வேண்டும். சகோதர அன்பு என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஃபிலடெல்ஃபீயா; இதன் நேரடி அர்த்தம், “ஒரு சகோதரன்மேல் இருக்கும் பாசம்.” (ரோ 12:10; எபி 13:1; அதோடு, 1பே 3:8-ஐயும் பாருங்கள்.) சபையில் இருப்பவர்கள், ஒரே குடும்பம்போல் நெருக்கமாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஏற்கெனவே சகோதர அன்பைக் காட்டுகிறார்கள் என்றாலும், அதை இன்னும் முழுமையாகக் காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.—1தெ 4:9, 10.
ஃபிலோஸ்டார்காஸ் என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “கனிவான பாசத்தைக் காட்டுவது.” ஒருவர் இன்னொருவரிடம் நெருக்கமாகவும் அன்னியோன்னியமாகவும் இருப்பதைக் குறிப்பதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலவார்த்தைகளில் ஒன்று ஸ்டெர்கோ; குடும்பத்தாருக்கு இடையில் இருப்பதைப் போன்ற பந்தபாசத்தைக் குறிப்பதற்காக அது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட குணத்தை வளர்த்துக்கொள்ளும்படி அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (ரோ 12:10) கடைசி நாட்களில் மக்கள் “பந்தபாசம் (கிரேக்கில், ஏஸ்டோர்காய்) இல்லாதவர்களாக” இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்றும் பவுல் குறிப்பிட்டார்.—2தீ 3:3; ரோ 1:31, 32.
w09 10/15 8 ¶3
“எல்லாரோடும் சமாதானமாகுங்கள்”
3 ரோமர் 12:17-ஐ வாசியுங்கள். ஒருவர் நம்மைப் பகைத்தால் பதிலுக்கு நாம் அவரைப் பகைக்கக் கூடாதென்று பவுல் அறிவுறுத்தினார். இந்த அறிவுரையை, முக்கியமாக மத ரீதியில் பிளவுபட்டிருக்கிற குடும்பத்தார் கடைப்பிடிக்க வேண்டும். சத்தியத்தில் இல்லாத ஒருவர் சத்தியத்திலுள்ள தன் துணையை அன்பற்ற விதத்தில் நடத்தும்போது, சத்தியத்திலுள்ள துணை அவருக்குப் பதிலடி கொடுக்க மாட்டார். ஏனென்றால், ‘தீமைக்குத் தீமை செய்வதில்’ எந்தப் பிரயோஜனமும் இல்லை; அது சூழ்நிலையை இன்னும் மோசமாகவே ஆக்கும்.
‘ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்’
12 சத்தியத்தில் இல்லாதவர்களையும் மற்றவர்களையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதன்பேரில் பவுல் கொடுக்கும் அடுத்த அறிவுரை, “ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” என்பதாகும். இந்த அறிவுரை ‘தீமையை வெறுத்துவிடுங்கள்’ என்று அவர் முன்னே சொன்னதன் நியாயமான விளைவாக இருக்கிறது. மற்றவர்களுக்குத் தீமைக்குத் தீமை செய்யும்போது ஒருவர் உண்மையிலேயே தீமையை வெறுக்கிறார் என்று சொல்ல முடியுமா? அப்படித் தீமை செய்தால் அது “மாயமற்ற” அன்புக்கு எதிரானதாக இருக்கும். பிறகு பவுல், “எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்” என்று சொல்கிறார். (ரோமர் 12:9, 17) இந்த வார்த்தைகளை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
13 முன்னதாக கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலர்கள் சந்தித்த துன்புறுத்துதலைப்பற்றி பவுல் குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம். . . . வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்.” (1 கொரிந்தியர் 4:9-13) அதேபோல, இன்றும் இந்த உலகத்திலுள்ளவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அநியாயமாய் நாம் நடத்தப்படும்போதுகூட நன்மைகள் செய்வதை அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கவனிக்கையில் கிறிஸ்தவர்களாக நாம் அறிவிக்கிற நற்செய்திக்கு மிகவும் சாதகமாகப் பிரதிபலிக்கத் தூண்டப்படலாம்.—1 பேதுரு 2:12.
ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்
13 கிறிஸ்தவரல்லாத ஒருவர் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்திருக்கலாம்; அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரைச் சத்தியத்திடம் ஈர்க்க நீங்கள் முயற்சியெடுக்க நினைக்கலாம். “‘உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்.’ தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 12:20, 21) ஒருவர் உங்கள் கோபத்தைக் கிளறும்போது, அவரிடம் இனிமையாக... மென்மையாக... நடந்துகொண்டீர்களென்றால், எப்படிப்பட்ட கல்நெஞ்சமும் கரைந்துவிடும். உங்களைப் புண்படுத்தும் நபரைப் புரிந்துகொண்டீர்களென்றால்... அவரது இடத்தில் உங்களை வைத்துப் பார்த்தீர்களென்றால்... அவர்மேல் கரிசனை காட்டினீர்களென்றால்... ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அவர் சத்தியத்திடம் ஈர்க்கப்படுவார். அப்படி ஈர்க்கப்படுகிறாரோ இல்லையோ, நீங்கள் சாந்தமாக நடந்துகொள்வதற்கான காரணத்தை நிச்சயம் அவர் யோசித்துப் பார்ப்பார்.—1 பே. 2:12; 3:16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
5 வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நம் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்” என்று பவுல் சொன்னார். (ரோமர் 12:1) “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:30) நாம் எப்போதுமே யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறோம். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு ஒரு மிருகத்தைப் பலி செலுத்தியபோது, அது எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். குறையுள்ள மிருகத்தை அவர்கள் பலி செலுத்தியபோது அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (லேவியராகமம் 22:18-20) அதே போல, நம்முடைய வணக்கத்தையும் யெகோவா ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பிருக்கிறது. எப்படி?
6 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (1 பேதுரு 1:14-16; 2 பேதுரு 3:11) நம்முடைய வணக்கம் பரிசுத்தமாக, அதாவது தூய்மையாக, இருந்தால்தான் யெகோவா அதை ஏற்றுக்கொள்வார். (உபாகமம் 15:21) நாம் யெகோவா வெறுக்கிற விஷயங்களில் ஈடுபட்டால், அதாவது ஒழுக்கக்கேடான, வன்முறையான அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டால், அவருக்கு நாம் செலுத்தும் வணக்கம் சுத்தமானதாக இருக்காது. (ரோமர் 6:12-14; 8:13) அப்படிப்பட்ட விஷயங்கள் அடங்கிய பொழுதுபோக்குகளை நாம் அனுபவிப்பதையும் யெகோவா வெறுக்கிறார். அது நம் வணக்கத்தை அசுத்தமானதாக ஆக்கிவிடும். அந்த வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரோடு நமக்கிருக்கும் பந்தமும் ரொம்பவே பாதிக்கப்படும்.
ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
13:1—என்ன அர்த்தத்தில் மேலான அதிகாரங்கள் “தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது”? ஆட்சி செய்வதற்காக உலக அதிகாரங்களை கடவுள் அனுமதித்திருக்கிறார்; சில சமயங்களில், அவற்றின் ஆட்சியைக் குறித்தும் முன்னறிவித்திருக்கிறார். இந்த அர்த்தத்தில்தான் உலக அதிகாரங்கள் “தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” அநேக ஆட்சியாளர்களைக் குறித்து பைபிள் முன்னறிவித்த விஷயங்களிலிருந்து இது தெரிய வருகிறது.
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
w11-E 9/1 21-22
நீங்கள் வரி கட்ட வேண்டுமா?
வரி கட்டுவது என்றாலே நிறைய பேருக்கு வெறுப்பாக இருக்கிறது. அரசாங்கம் தங்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவோ, கொள்ளையடிப்பதாகவோ, மோசடி செய்வதாகவோ அவர்கள் நினைக்கிறார்கள். மற்றவர்களோ வரி கட்டுவதில் நியாயமோ தர்மமோ இல்லை என்று நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, “எங்க பிள்ளைங்கள கொல்ற தோட்டாக்கள வாங்குறதுக்கு நாங்க பணம் தர மாட்டோம்” என்று மத்தியக் கிழக்கிலுள்ள ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் சொன்னார்கள்.
அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல, எல்லா மக்களுமே இப்படித்தான் யோசிக்கிறார்கள்; அவர்கள் அப்படி யோசிப்பது புதிதும் கிடையாது. வரி கட்டுவதைப் பாவமாகக் கருதிய இந்தியத் தலைவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இப்படிச் சொன்னார்: “ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாட்டை நேரடியாக ஆதரித்தாலும் சரி, மறைமுகமாக ஆதரித்தாலும் சரி, அது பாவம்தான். நாட்டுக்காக வரி கட்டுகிற ஒவ்வொருவருமே, பெரியவரோ சிறியவரோ, இந்தப் பாவத்தில் பங்குகொள்கிறார்.”
இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானியான ஹென்ரி டேவிட் தோரோ என்பவரும் சொன்னார். வரிப்பணம் போருக்காகப் பயன்படுத்தப்பட்டதால் அவர் வரி கட்ட மறுத்தார். “சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறேன் என்ற பேரில் ஒரு குடிமகன் தற்காலிகமாகத் தன் மனசாட்சியை ஓரங்கட்டிவிடலாமா? பிறகு எதற்காக ஒவ்வொரு மனிதனுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது?” என்று அவர் கேட்டார்.
வரி கட்டுவது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் சரியான முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் எல்லா விஷயத்திலும் சுத்தமான மனசாட்சியோடு இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 1:3) அதேசமயத்தில், வரி வசூலிக்கும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது என்றும் பைபிள் சொல்கிறது. “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு [மனித அரசாங்கங்களுக்கு] எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை. தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார். அதனால், தண்டனை கிடைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, உங்களுடைய மனசாட்சியின் காரணமாகவும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாக இருக்கிறது. அதனால்தான், நீங்கள் வரியும் கட்டுகிறீர்கள். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கடவுளுடைய தொண்டர்களாக எப்போதும் சேவை செய்துவருகிறார்கள். அதனால், அவர்கள் எல்லாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுங்கள்: யாருக்கு வரி கொடுக்க வேண்டுமோ அவருக்கு வரி கொடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 13:1, 5-7.
இந்தக் காரணத்துக்காகத்தான் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தவறாமல் வரி கட்டினார்கள். அவர்கள் கட்டிய வரிப்பணத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்று தெரிந்தும் அப்படிச் செய்தார்கள். இன்று யெகோவாவின் சாட்சிகளும் தவறாமல் வரி கட்டுகிறார்கள். முன்னுக்குப்பின் முரணாகத் தெரியும் இந்த விஷயத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வரி செலுத்தும் விஷயத்தில் ஒரு கிறிஸ்தவர் தன் மனசாட்சியைக் குழிதோண்டி புதைக்க வேண்டுமா?
வரியும் மனசாட்சியும்
காந்தியையும் தோரோவையும் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். வரிப்பணத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்காகப் பயன்படுத்தப்படுவதால் வரி கட்ட அவர்களுடைய மனசாட்சி அவர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், தங்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிந்திருந்தும், மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக வரி செலுத்தினார்கள்.
அந்தக் கிறிஸ்தவர்கள், தண்டனை கிடைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, “மனசாட்சியின் காரணமாகவும்” ரோமர் 13-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். (ரோமர் 13:5) அப்படியென்றால், தாங்கள் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களுக்காகத் தங்கள் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்வதற்காக வரி கட்ட வேண்டியிருக்கிறது. இது நமக்கு முரணாகத் தோன்றலாம். இதைப் புரிந்துகொள்வதற்கு, மனசாட்சியைப் பற்றி (எது சரி, எது தவறு என்று மனதில் சொல்லும் குரலைப் பற்றி) நாம் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தோரோ சொன்னதுபோல், நம் ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இருக்கிறது. ஆனால், அதை எப்போதுமே நம்ப முடியாது. நாம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால், அவர் ஏற்படுத்தியிருக்கும் நெறிமுறைகளோடு நம் மனசாட்சி ஒத்துப்போக வேண்டும். நாம் யோசிக்கும் விதம், கடவுள் யோசிக்கும் விதத்தோடு ஒத்துப்போகிறதா என்று அடிக்கடி சோதித்துப் பார்த்து, அதை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் யோசிக்கும் விதத்தைவிட கடவுள் யோசிக்கும் விதம் ரொம்பவே உயர்ந்தது. (சங்கீதம் 19:7) அதனால், மனித அரசாங்கங்களைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியென்றால், அவற்றைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?
அரசாங்க அதிகாரிகளை ‘கடவுளுடைய தொண்டர்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (ரோமர் 13:6) இதற்கு என்ன அர்த்தம்? அரசாங்கங்கள் பொது மக்களுக்காகச் சட்ட ஒழுங்கைக் காக்கின்றன, பிரயோஜனமான பொதுப் பணிகளையும் செய்கின்றன. ஊழல் நிறைந்த அரசாங்கங்கள்கூட சட்ட ஒழுங்கைக் காக்க முயற்சி செய்கின்றன; அதோடு, அஞ்சல், கல்வி, தீயணைப்பு போன்ற சேவைகளை வழங்குகின்றன. மனித அரசாங்கங்களிடம் இருக்கும் குறைகளைப் பற்றிக் கடவுளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கொஞ்ச காலத்துக்கு ஆட்சி செய்ய அவற்றை அவர் அனுமதித்திருக்கிறார். அவருடைய ஏற்பாட்டுக்கு மதிப்புக் கொடுத்து நாம் வரி கட்ட வேண்டுமென்று அவர் கட்டளை கொடுத்திருக்கிறார்.
கொஞ்சக் காலத்துக்கு மட்டும்தான் கடவுள் இந்த அரசாங்கங்களை விட்டுவைத்திருக்கிறார். சீக்கிரத்தில் தன்னுடைய பரலோக அரசாங்கத்தின் மூலம் இந்த எல்லா அரசாங்கங்களுக்கும் அவர் முடிவுகட்டப் போகிறார். இத்தனை நூற்றாண்டுகளாக மனித ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளையெல்லாம் அவருடைய அரசாங்கம் சரிசெய்யும். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) அதுவரைக்கும், வரி கட்டுவது போன்ற அரசாங்கச் சட்டங்களுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்; அந்தச் சட்டங்களை மீறுவதற்கு அவர் கிறிஸ்தவர்களை அனுமதிப்பதில்லை.
காந்தி நினைத்ததுபோல், போரை ஆதரிக்கும் வரிப்பணத்தைக் கட்டுவது பாவம் என்று நீங்கள் இன்னமும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த உதாரணத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்: மலை அடிவாரத்தில் இருப்பவரைவிட மலை உச்சியில் இருப்பவரால் எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடியும். அதுபோலத்தான் நம்மைவிட கடவுளால் எல்லா விஷயங்களையும் நன்றாகப் பார்க்க முடியும். ஏனென்றால், நம்முடைய யோசனைகளைவிட அவருடைய யோசனைகள் ரொம்பவே உயர்ந்திருக்கின்றன. அதனால்தான், “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும், உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன” என்று ஏசாயா மூலம் கடவுள் சொன்னார். (ஏசாயா 55:8, 9) இதை நம் மனதில் வைத்திருந்தால், கடவுள் யோசிக்கும் விதத்துக்கு ஏற்றபடி நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதற்குத் தயங்க மாட்டோம்.
மார்ச் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 15-16
“சகிப்புத்தன்மைக்காகவும் ஆறுதலுக்காகவும் யெகோவாவையே நம்பியிருங்கள்”
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
11 லாசரு இறந்தபோது இயேசு அனுபவித்த பயங்கரமான வேதனையைப் பற்றிய பதிவு நமக்கு ஆறுதல் தருகிறது. ஆனால், பைபிளில் இருக்கிற ஆறுதலான வசனங்களில் இது ஒரு உதாரணம்தான். இது போல ஏராளமான வசனங்கள் பைபிளில் இருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால், “அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்குப் பலம் தருகின்றன.” (ரோ. 15:4) நீங்கள் துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்தால், கீழே கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்கள் உங்கள் மனதுக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கும்.
▪ “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங். 34:18, 19.
▪ “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் [யெகோவா] எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”—சங். 94:19.
▪ “நம்மேல் அன்பு காட்டி அளவற்ற கருணையால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும், உங்கள் இதயத்துக்கு ஆறுதல் தந்து . . . உங்களைப் பலப்படுத்துவார்களாக.”—2 தெ. 2:16, 17.
“உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்”
5 யெகோவாவிடம் உதவி கேளுங்கள். யெகோவாதான் “சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் அளிக்கிற கடவுள்.” (ரோ. 15:5) இயல்பாகவே நாம் எப்படிப்பட்ட நபர்களாக இருக்கிறோம், எப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்திருக்கிறோம், என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறோம், நாம் எப்படி உணர்கிறோம் என்பதையெல்லாம் அவரால் மட்டும்தான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அதனால், சகித்திருக்க நமக்கு என்ன தேவை என்பது யெகோவாவுக்கு நன்றாக தெரியும். “அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 145:19) சகித்திருக்க உதவி கேட்டு ஜெபம் செய்யும்போது யெகோவா நமக்கு எப்படி பதில் கொடுக்கிறார்?
‘யெகோவாமீது அன்பு காட்டுங்கள்’
11 யெகோவா கொடுக்கும் ‘நம்பிக்கை நம்மை சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புகிறது.’ (ரோ. 15:13) கடவுள்மீது நம்பிக்கை வைத்தால் கஷ்டங்களைச் சகிக்க முடியும். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘சாகும்வரை உண்மையுடன் இருந்தால், வாழ்வெனும் கிரீடத்தை’ பெறுவார்கள். (வெளி. 2:10) பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள். (லூக். 23:43) இதைக் கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! ‘நல்ல பரிசுகளையும், தலைசிறந்த அன்பளிப்புகளையும்’ தருகிற யெகோவாமீது நம் அன்பு அதிகரிக்கிறது, அல்லவா?—யாக். 1:17.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w89-E 12/1 24 ¶3
‘உங்களுடைய அன்பு உண்மையானதா என்பதற்கான சோதனை’
எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய மற்ற தேசத்தைச் சேர்ந்த அவர்களுடைய சகோதரர்கள் கண்டிப்பாக முன்வந்திருக்க வேண்டும். ஏனென்றால், இவர்கள் எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு விசேஷமான விதத்தில் கடன்பட்டிருந்தார்கள். எப்படி? எருசலேமில் இருந்தவர்கள்தான் மற்ற தேசங்களுக்குப் போய் நல்ல செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதனால், பவுல் இப்படி எழுதினார்: “கடவுளிடமிருந்து அந்தப் பரிசுத்தவான்கள் [யூதக் கிறிஸ்தவர்கள்] பெற்றுக்கொண்டதை மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள் தங்களுடைய பொருள்களைக் கொடுத்து அந்தப் பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள்.”—ரோமர் 15:27.
it-1-E 858 ¶5
முன்னறிவு, முன்தீர்மானித்தல்
மேசியாவாகிய கிறிஸ்துதான் வாக்குக் கொடுக்கப்பட்ட வாரிசு என்றும், அவர் மூலமாகத்தான் பூமியிலுள்ள எல்லா நீதிமான்களும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் சொல்லப்பட்டிருந்தது. (கலா 3:8, 14) ஏதேனில் கலகம் ஆரம்பித்த பிறகு (ஆனால், ஆபேல் பிறப்பதற்கு முன்பு) அந்த ‘வாரிசை’ பற்றி முதன்முதலில் கடவுள் சொன்னார். (ஆதி 3:15) அதன்பின், கிட்டத்தட்ட 4,000 வருஷங்களுக்குப் பிறகு ‘பரிசுத்த ரகசியம்’ வெளிப்படுத்தப்பட்டது; அதாவது, ‘வாரிசாகிய’ மேசியா தெளிவாக அடையாளம் காட்டப்பட்டார். அதனால்தான், பரிசுத்த ரகசியம் ‘நீண்ட காலம் மறைபொருளாக வைக்கப்பட்டிருந்தது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.—ரோ 16:25-27; எபே 1:8-10; 3:4-11.
மார்ச் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 1-3
“நீங்கள் உலகச் சிந்தையுள்ள மனிதரா ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதரா?”
ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?
4 உலகச் சிந்தையுள்ள ஒரு நபர் எப்படி யோசிப்பார்? இந்த உலகத்தில் பரவலாக இருக்கும் சுயநலமான ஆசைகளில்தான் அவருடைய முழு கவனம் இருக்கும். இந்த மனப்பான்மையைப் பற்றி பவுல் விளக்கியபோது, ‘கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்படுகிற சிந்தை’ என்று சொன்னார். (எபே. 2:2) இப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பதால்தான், இந்த உலகத்தில் இருக்கிற நிறையப் பேர், தங்களைச் சுற்றியுள்ள ஆட்களைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். கடவுளுடைய தராதரங்களைப் பற்றி யோசிக்காமல் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். உலகச் சிந்தையுள்ள ஒரு நபர், வேறு எதையும்விட, தன்னுடைய அந்தஸ்துக்கும் பணத்துக்கும் உரிமைகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
5 “பாவ இயல்புக்குரிய செயல்கள்” என்று பைபிள் எவற்றைக் குறிப்பிடுகிறதோ, அவற்றைத்தான் உலகச் சிந்தையுள்ள ஒரு நபர் பெரும்பாலும் செய்கிறார். (கலா. 5:19-21) கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்தில், இப்படிப்பட்டவர்கள் செய்யும் மற்ற விஷயங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். இவர்கள், ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள், பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள், கலகம் செய்ய மற்றவர்களைத் தூண்டுகிறார்கள், சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார்கள், தலைமை ஸ்தானத்தை மதிக்காமல் நடந்துகொள்கிறார்கள், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும்தான் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தவறு செய்வதற்கான தூண்டுதல் வரும்போது, உலகச் சிந்தையுள்ள ஒரு நபர் தன்னுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. (நீதி. 7:21, 22) உலகச் சிந்தையுள்ள நபர்கள் கடவுளுடைய சக்தியை இழந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக யூதாவும் குறிப்பிட்டிருக்கிறார்.—யூ. 18, 19.
ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?
6 ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபர், கடவுளோடு இருக்கும் பந்தத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவார்; உலகச் சிந்தையுள்ள நபரைப் போல் இருக்க மாட்டார். கடவுளுடைய சக்தி தன்னை வழிநடத்தும் விதத்தில் அவர் நடந்துகொள்வார். அதோடு, யெகோவாவைப் போல நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்வார். (எபே. 5:1) யெகோவா எப்படி யோசிக்கிறார் என்றும், ஒரு விஷயத்தை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்றும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வார். அவருக்கு, கடவுள் ஒரு நிஜமான நபராக இருப்பார். உலகச் சிந்தையுள்ள நபரைப் போல் நடந்துகொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் கடவுளுடைய தராதரங்களின்படி நடப்பார். (சங். 119:33; 143:10) ‘பாவ இயல்புக்குரிய செயல்களை’ செய்வதற்குப் பதிலாக, ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ வளர்க்க முயற்சி செய்வார். (கலா. 5:22, 23) ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபராக இருப்பதன் அர்த்தத்தை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு வியாபாரி, தன் வியாபாரத்தை இன்னும் எப்படி விரிவாக்கலாம் என்பதைப் பற்றியே எப்போதும் யோசிப்பார். அதேபோல், ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபர், கடவுளோடு தனக்கு இருக்கும் பந்தத்தை இன்னும் எப்படிப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றியே எப்போதும் யோசிப்பார்.
ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?
15 இயேசுவை நாம் எப்படிப் பின்பற்றலாம்? ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று 1 கொரிந்தியர் 2:16 சொல்கிறது. ‘கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தை’ நமக்கும் இருக்க வேண்டுமென்று ரோமர் 15:5-ம் சொல்கிறது. நாம் கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டுமென்றால், அவர் எப்படி யோசித்தார், உணர்ந்தார், நடந்துகொண்டார் என்பதைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எதையும்விட யெகோவாவோடு தனக்கு இருந்த பந்தத்தைத்தான் இயேசு முக்கியமாக நினைத்தார். நாமும் இயேசுவைப் போல நடந்துகொண்டால், யெகோவாவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்ற முடியும். அதனால்தான், இயேசு எப்படி யோசித்தார் என்பதை நாம் கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 1193 ¶1
ஞானம்
மக்கள் இந்த உலக ஞானத்தைச் சார்ந்திருந்ததால், கிறிஸ்துவின் மூலம் கடவுள் செய்த மீட்புவிலை என்ற ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அது அவர்களுக்கு முட்டாள்தனமாக இருந்தது. அவர்களுடைய ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருந்திருக்கலாம்; ஆனால் ‘மகிமையுள்ள நம் எஜமானைக் கொலை செய்துவிட்டார்கள்.’ (1கொ 1:18; 2:7, 8) அதனால், உலக ஞானம் உண்மையில் எந்தளவுக்கு முட்டாள்தனம் என்பதைக் கடவுள் நிரூபித்தார். உலகத்தின் பார்வையில் ஞானமாக இருந்தவர்களை அவர் வெட்கப்படுத்தினார். எப்படி? “கடவுளுடைய முட்டாள்தனம்” என்று அவர்கள் நினைத்ததையும், ‘முட்டாள்கள், பலவீனமானவர்கள், அற்பமானவர்கள்’ என்று அவர்கள் கருதியவர்களையும் பயன்படுத்தித் தன்னுடைய மகத்தான நோக்கத்தை நிறைவேற்றினார். (1கொ 1:19-28) ‘இந்த உலக ஞானமும், இந்த உலகத் தலைவர்களுடைய ஞானமும்’ அழியும் என்று கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். இந்த உண்மையை அவர் தெரிந்துவைத்திருந்ததால், உலக ஞானத்தைப் பற்றி அவர் பிரசங்கிக்கவில்லை. (1கொ 2:6, 13) “தத்துவங்கள் [ஃபிலோசோஃபியாஸ், நே.மொ., ஞானத்தின் மீதுள்ள பற்று] மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவை மனித பாரம்பரியங்களை . . . சார்ந்திருக்கின்றன” என்று கொலோசெயில் இருந்த கிறிஸ்தவர்களையும் அவர் எச்சரித்தார்.—கொலோ 2:8; வசனங்கள் 20-23-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:3-5. கிரேக்க தத்துவத்திற்கும் கல்விக்கும் மையமாயிருந்த கொரிந்துவில் சாட்சி கொடுக்கையில் கேட்போரை இணங்க வைக்கும் விதத்தில் தன்னால் பேச முடியுமா என பவுல் யோசித்திருக்கலாம். என்றாலும், தனக்கிருந்த குறைபாடோ பயமோ கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருந்த ஊழியத்தில் குறுக்கிட அவர் இடமளிக்கவில்லை. அவ்வாறே நாமும் அசாதாரணமான சூழ்நிலைகளில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்காமல் இருந்துவிடக் கூடாது. பவுலைப்போல் நாமும் நம்பிக்கையோடு யெகோவாவிடம் உதவி கேட்கலாம்.
மார்ச் 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 4-6
“புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்”
it-2-E 230
புளிப்பு
இயேசுவைப் போலவே அப்போஸ்தலன் பவுலும் புளித்த மாவை ஒரு விஷயத்துக்கு அடையாளமாகக் குறிப்பிட்டார். பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டவனைச் சபையிலிருந்து நீக்க வேண்டுமென்று கொரிந்து சபைக்குக் கட்டளை கொடுத்தபோது, “புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் புளிப்பில்லாத புதிய மாவாய் இருப்பதற்காக, பழைய புளித்த மாவை எறிந்துவிடுங்கள். சொல்லப்போனால், நீங்கள் புளிப்பில்லாத மாவாகத்தான் இருக்கிறீர்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறாரே” என்று சொன்னார். அதன் பிறகு, ‘புளித்த மாவு’ எதை அடையாளப்படுத்தியது என்று அவர் விளக்கினார்; “பஸ்கா பண்டிகையைப் பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக” என்று சொன்னார். (1கொ 5:6-8) பஸ்கா பண்டிகைக்கு அடுத்ததாக யூதர்கள் கொண்டாடிய புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் அடையாள அர்த்தத்தை அவர் சுட்டிக்காட்டினார். புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின்போது, புளித்துப்போன எதுவும் இஸ்ரவேலர்களின் வீடுகளில் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது போலவே, சபையில் ‘புளித்த மாவு’ (அதாவது, கெட்டது செய்கிறவன்) இருக்கக் கூடாது என்று பவுல் விளக்கினார். புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் எப்படிப் புளிக்க வைத்துவிடுமோ, அப்படித்தான் கெட்டது செய்கிறவன் சபை முழுவதையும் கெடுத்துவிடுவான்; அதனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டவனைச் சபையிலிருந்து நீக்காவிட்டால் யெகோவாவின் பார்வையில் சபை முழுவதும் அசுத்தமாக ஆகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
it-2-E 869-870
சாத்தான்
‘ஒருவனுடைய கெட்ட செல்வாக்கை ஒழிப்பதற்காக, அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்துவிட வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன?
கொரிந்து சபையிலிருந்த ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியோடு தவறான உறவு வைத்திருந்தான். அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பவுல் அந்தச் சபைக்கு அறிவுரை சொன்னார்; அப்போதுதான், “அந்த மனிதனுடைய கெட்ட செல்வாக்கை ஒழிப்பதற்காக, அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று எழுதினார். (1கொ 5:5) அவனைச் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவனோடு எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் அர்த்தப்படுத்தினார். (1கொ 5:13) அவன் சபையிலிருந்து நீக்கப்பட்டு இந்த உலகத்திடம் ஒப்படைக்கப்படும்போது உண்மையில் சாத்தானிடம் ஒப்படைக்கப்படுகிறான். ஏனென்றால், சாத்தான்தான் இந்த உலகத்தின் கடவுளாகவும் அதிபதியாகவும் இருக்கிறான். “புளிப்புள்ள கொஞ்சம் மாவு” பிசைந்த மாவு “முழுவதையும்” புளிக்க வைப்பதுபோல், அந்த மனிதன் சபையில் ‘கெட்ட செல்வாக்கு’ செலுத்தினான்; ஆன்மீகச் சிந்தையுள்ள சபை, தகாத உறவில் ஈடுபட்ட அந்த மனிதனைச் சபையிலிருந்து நீக்கினால் அவனுடைய “கெட்ட செல்வாக்கை” ஒழித்துக்கட்ட முடியும் என்று பவுல் சொன்னார். (1கொ 5:6, 7) அவனைப் போலவே இமெனேயுவையும் அலெக்சந்தரையும் பவுல் சாத்தானிடம் ஒப்படைத்தார். ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் ஒதுக்கிவிட்டு, தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடித்திருந்தார்கள்.—1தீ 1:20.
lvs 241, பின்குறிப்புகள்
சபைநீக்கம்
மோசமான பாவத்தைச் செய்த ஒருவர் மனம் திருந்தாமல், யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழ மறுத்தால் அவர் சபையின் அங்கத்தினராக இருக்க முடியாது. அவர் சபைநீக்கம் செய்யப்பட வேண்டும். ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டால் நாம் அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம். அவரோடு பேசக்கூட மாட்டோம். (1 கொரிந்தியர் 5:11; 2 யோவான் 9-11) சபைநீக்கம் என்ற ஏற்பாடு யெகோவாவின் பெயருக்கும் கிறிஸ்தவ சபைக்கும் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. (1 கொரிந்தியர் 5:6) சபைநீக்கம் என்ற ஏற்பாடு தவறு செய்தவரைக் கண்டித்துத் திருத்தவும் உதவுகிறது. அந்த நபர் மனம் திருந்தி யெகோவாவிடம் திரும்பி வர உதவுகிறது.—லூக்கா 15:17.
▸ அதிகாரம் 3, பாரா 19
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w09 5/15 24 ¶16
தேவதூதர்கள்—‘மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள்’
16 சோதனைக்கு ஆளாகும் கிறிஸ்தவர்கள் ‘தேவதூதர்களுக்கு . . . காட்சிப் பொருளாக’ இருக்கிறார்கள். (1 கொ. 4:9) நாம் உண்மைத்தன்மையோடு நடந்துகொள்வதைப் பார்த்து அவர்கள் அளவில்லா திருப்தியடைகிறார்கள்; ஒரேவொரு பாவி மனந்திரும்பினால்கூட மிகுந்த சந்தோஷப்படுகிறார்கள். (லூக். 15:10) கிறிஸ்தவ பெண்களின் பயபக்தியான நடத்தையைத் தேவதூதர்கள் கவனிக்கிறார்கள். “தேவதூதர்களை முன்னிட்டும், பெண் தன்னுடைய தலையில் கீழ்ப்படிதலின் அடையாளமாகிய முக்காட்டைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (1 கொ. 11:3, 10) ஆம், கிறிஸ்தவ பெண்களும் பூமியிலுள்ள கடவுளுடைய மற்ற ஊழியர்களும் தேவராஜ்ய ஒழுங்கிற்கும் தலைமைத்துவத்திற்கும் மதிப்புக் கொடுத்து நடப்பதைப் பார்க்கும்போது தேவதூதர்கள் அகமகிழ்கிறார்கள். இப்படிப்பட்ட கீழ்ப்படிதல், கடவுளுடைய பரலோகக் குமாரர்களுக்குச் சிறந்த நினைப்பூட்டுதலாக இருக்கிறது.
it-2-E 211
சட்டம்
தேவதூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டம். மனிதர்களைவிட உயர்ந்தவர்களான தேவதூதர்களுக்குக்கூட கடவுள் சட்டங்களையும் கட்டளைகளையும் கொடுத்திருக்கிறார். (எபி 1:7, 14; சங் 104:4) சாத்தானுக்குக்கூட கடவுள் கட்டளைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்தார். (யோபு 1:12; 2:6) தலைமைத் தூதராகிய மிகாவேலுக்கும் பிசாசுக்கும் விவாதம் ஏற்பட்டபோது, “யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்” என்று மிகாவேல் சொன்னார்; இப்படி, யெகோவாதான் மிகப் பெரிய நீதிபதி என்பதைப் புரிந்துகொண்டு அவருடைய அதிகாரத்துக்கு மிகாவேல் மதிப்புக் கொடுத்தார். (யூ 9; ஒப்பிட்டுப் பாருங்கள்: சக 3:2) மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு யெகோவா அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்; எல்லா தேவதூதர்களையும் இயேசுவின் கட்டுப்பாட்டுக்குள் அவர் கொண்டுவந்திருக்கிறார். (எபி 1:6; 1பே 3:22; மத் 13:41; 25:31; பிலி 2:9-11) அதனால், இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒரு தேவதூதர் யோவானைச் சந்தித்தார். (வெளி 1:1) ஆனாலும், கிறிஸ்துவின் ஆன்மீகச் சகோதரர்கள் தேவதூதர்களை நியாயந்தீர்க்கப்போவதாக 1 கொரிந்தியர் 6:3-ல் அப்போஸ்தலன் பவுல் சொல்லியிருக்கிறார். அநேகமாக, கெட்ட தேவதூதர்களைத் தண்டிப்பதில் அவர்களுக்கும் ஏதோவொரு விதத்தில் பங்கு இருக்கும் என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.