“உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்”
“உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், எந்தக் குறைவும் இல்லாமல் எல்லா வகையிலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்.”—யாக். 1:4.
1, 2. (அ) கிதியோனும் அவரோடு இருந்த 300 பேரும் கடைசிவரை போராடியதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்) (ஆ) லூக்கா 21:19 சொல்வது போல் சகிப்புத்தன்மை ஏன் ரொம்ப முக்கியம்?
பயங்கரமான போர் நடந்துகொண்டிருந்தது. நியாயாதிபதி கிதியோன் தலைமையில் இஸ்ரவேலர்கள் மீதியானியர்களோடும் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்தவர்களோடும் போர் செய்துகொண்டு இருந்தார்கள். இஸ்ரவேலர்கள் இரவு முழுவதும் கிட்டத்தட்ட 32 கி.மீ. (20 மைல்) வரை அவர்களை துரத்திக்கொண்டு போனார்கள். பிறகு, ‘கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தார்கள் [அதாவது, களைப்பாக இருந்தார்கள்]’ என்று பைபிள் சொல்கிறது. போரில் ஜெயிக்க அவர்கள் இன்னும் 15,000 வீரர்களோடு சண்டைபோட வேண்டியிருந்தது. இந்த எதிரி நாட்டு மக்கள் ரொம்ப வருஷமாக இஸ்ரவேலர்களை கொடுமைப்படுத்தினார்கள். அதனால், போரிலிருந்து பின்வாங்க கூடாது என்பதில் இஸ்ரவேலர்கள் உறுதியாக இருந்தார்கள். எதிரிகளை தொடர்ந்து துரத்திக்கொண்டு போய் சண்டை போட்டார்கள், கடைசியில் போரில் ஜெயித்தார்கள்.—நியா. 7:22; 8:4, 10, 28.
2 நாமும் இன்று சாத்தானோடும்... இந்த உலகத்தோடும்... போராட வேண்டியிருக்கிறது. அதோடு, நாம் பாவம் செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதும் நமக்கு ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. நம்மில் சிலர் இப்படி ரொம்ப வருஷங்களாக போராடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், யெகோவாவுடைய உதவியோடு நாம் நிறைய பிரச்சினைகளை சமாளித்திருக்கிறோம். இருந்தாலும், நாம் அந்த போராட்டத்தில் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை. இப்படி போராடும்போது நாம் சிலநேரம் சோர்ந்துபோகலாம். உலக முடிவுக்காக ரொம்ப நாளாக காத்திருப்பதாலும் நாம் சோர்ந்துபோகலாம். கடைசிநாட்களில் நமக்கு பயங்கரமான கஷ்டங்களும் துன்புறுத்தல்களும் வரும் என்று இயேசு எச்சரித்தார். ஆனால், நாம் சகித்திருந்தால்தான் வெற்றி பெற முடியும். (லூக்கா 21:19-ஐ வாசியுங்கள்.) சகித்திருப்பது என்றால் என்ன? சகித்திருக்க எது நமக்கு உதவும்? கஷ்டங்களை சகித்தவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம்மிடம் “சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்ய” நாம் என்ன செய்யலாம்?—யாக். 1:4.
சகித்திருப்பதன் அர்த்தம் என்ன?
3. சகித்திருப்பது என்றால் என்ன?
3 பைபிளில், சகித்திருப்பது என்பது கஷ்டங்களை பொறுத்துக்கொள்வதை அல்லது தாங்கிக்கொள்வதை மட்டுமே குறிப்பதில்லை. நமக்கு வரும் கஷ்டங்களைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் எப்படி உணர்கிறோம் என்பதையும் குறிக்கிறது. நமக்கு சகிப்புத்தன்மை இருந்தால் தைரியமாக, உண்மையாக, பொறுமையாக இருப்போம். ஒரு ஆராய்ச்சி புத்தகம் இந்த குணத்தை இப்படி விளக்குகிறது: எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் நாம் நம்பிக்கை இழக்கவோ பின்வாங்கவோ மாட்டோம். நாம் சோர்ந்துபோகாமல் உறுதியாக இருப்போம். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். நம்முடைய கஷ்டங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காமல் நம்முடைய குறிக்கோளை அடைய முயற்சி செய்வோம்.
4. சகிப்புத்தன்மையை காட்டுவதற்கு அன்பு எப்படி உதவும்?
4 அன்பு இருந்தால் நம்மால் சகிப்புத்தன்மையை காட்ட முடியும். (1 கொரிந்தியர் 13:4, 7-ஐ வாசியுங்கள்.) எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் சகிப்புத்தன்மையை காட்டலாம்? யெகோவாமீது அன்பு இருந்தால், அவர் அனுமதிக்கிற எந்தவொரு பிரச்சினையையும் நாம் சகிப்போம். (லூக். 22:41, 42) நம் சகோதர சகோதரிகள்மீது அன்பு இருந்தால், அவர்கள் செய்யும் தவறுகளை பொறுத்துக்கொள்வோம். (1 பே. 4:8) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசித்தால், கல்யாண வாழ்க்கையில் வரும் ‘உபத்திரவங்களை’ சகிக்க முடியும். அதோடு, திருமண பந்தத்தையும் பலப்படுத்த முடியும்.—1 கொ. 7:28.
சகித்திருக்க எது நமக்கு உதவும்?
5. சகித்திருக்க நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத்தான் நன்றாக தெரியும் என்று எப்படி சொல்லலாம்?
5 யெகோவாவிடம் உதவி கேளுங்கள். யெகோவாதான் “சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் அளிக்கிற கடவுள்.” (ரோ. 15:5) இயல்பாகவே நாம் எப்படிப்பட்ட நபர்களாக இருக்கிறோம், எப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்திருக்கிறோம், என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறோம், நாம் எப்படி உணர்கிறோம் என்பதையெல்லாம் அவரால் மட்டும்தான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அதனால், சகித்திருக்க நமக்கு என்ன தேவை என்பது யெகோவாவுக்கு நன்றாக தெரியும். “அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 145:19) சகித்திருக்க உதவி கேட்டு ஜெபம் செய்யும்போது யெகோவா நமக்கு எப்படி பதில் கொடுக்கிறார்?
6. சோதனையை சகித்துக்கொள்ள யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்கிறார்?
6 யெகோவாவிடம் உதவி கேட்டால், சோதனையை சகித்துக்கொள்ள நிச்சயம் ‘வழிசெய்வதாக’ அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.) அதை எப்படி செய்கிறார்? சிலசமயம் அவர் அந்த சோதனையை முழுவதுமாக நீக்கிவிடுகிறார். ஆனால், நிறைய சமயங்களில் அந்த சோதனையை “சகித்துக்கொள்வதற்காகவும் நீடிய பொறுமையைச் சந்தோஷத்தோடு காண்பிப்பதற்காகவும்” அவர் நமக்கு உதவி செய்கிறார். (கொலோ. 1:11) உடலளவிலும் மனதளவிலும் நம்மால் எந்தளவுக்கு கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியும் என்று யெகோவாவுக்கு நன்றாக தெரியும். அதனால், அவருக்கு உண்மையாக இல்லாமல் போகும் அளவுக்கு ஒரு பிரச்சினையை அவர் அனுமதிக்க மாட்டார்.
7. யெகோவாவைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்வது சகித்திருப்பதற்கு எப்படி உதவும்? உதாரணம் சொல்லுங்கள்.
7 விசுவாசத்தை பலப்படுத்த யெகோவாவைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளுங்கள். அவரைப் பற்றி தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? அதை புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள். மிக உயரமான எவரஸ்ட் மலைமீது ஒருவர் ஏறுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதற்காக அந்த நபர் ஒரு நாளைக்கு 6,000 கலோரி உணவை சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது, மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு சாப்பிடும் உணவை அவர் ஒரே நாளில் சாப்பிட வேண்டியிருக்கும். அப்படி சாப்பிட்டால்தான் அவருடைய குறிக்கோளை அடைய முடியும். அதேபோல் நாமும் கஷ்டங்களை கடைசிவரை சகிக்கவும், நம்முடைய குறிக்கோளை அடையவும் யெகோவாவைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதற்கும் கூட்டங்களுக்கு போவதற்கும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் நம் விசுவாசம் பலப்படும்.—யோவா. 6:27.
8, 9. (அ) நமக்கு ஒரு சோதனை வரும்போது யோபு 2:4, 5 சொல்கிறபடி எது நமக்கு சவாலாக இருக்கலாம்? (ஆ) உங்களுக்கு ஒரு சோதனை வரும்போது நீங்கள் எதை கற்பனை செய்து பார்க்கலாம்?
8 யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள். சோதனைகள் வரும்போது அதை சமாளிப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது அதைவிட இன்னும் சவாலாக இருக்கும். சோதனைகள் வரும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை வைத்துத்தான் யெகோவாவை நம் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை காட்ட முடியும். ஏன் அப்படி சொல்கிறோம்? யெகோவாவுடைய ஆட்சியை எதிர்க்கிற சாத்தான் அவரை பழித்துப் பேசினான். மக்கள் எல்லாரும் சுயநல காரணங்களுக்காகத்தான் யெகோவாவை வணங்குகிறார்கள் என்று சொன்னான். அதனால்தான், “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் [யோபுவின்] எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்று சொன்னான். (யோபு 2:4, 5) சாத்தான் இன்றுவரை அப்படித்தான் யெகோவாவிடம் சவால்விட்டுக்கொண்டு இருக்கிறான். அவன் பூமிக்கு தள்ளப்பட்டதிலிருந்து கடவுளுடைய உண்மை ஊழியர்கள்மீது குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கிறான். (வெளி. 12:10) இன்றும் மக்கள் சுயநல காரணங்களுக்காகத்தான் யெகோவாவை வணங்குகிறார்கள் என்று அவன் சொல்கிறான். யெகோவாவுடைய ஆட்சியை நாம் ஒதுக்கிவிட வேண்டும், அவரை சேவிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
9 உங்களுக்கு ஒரு சோதனை வரும்போது இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒருபக்கம் சாத்தானும் அவனுடைய பேய்களும் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிய மாட்டீர்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் யெகோவா, நம் ராஜா இயேசு, உயிர்த்தெழுப்பப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், கோடிக்கணக்கான தேவதூதர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். நீங்கள் கஷ்டப்படுவதை பார்க்கிறார்கள். ஆனால், நீங்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நீங்கள் சோதனைகளை சகிப்பதையும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதையும் பார்க்கும்போது அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். யெகோவா அந்த சமயத்தில், “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்று சொல்வதை உங்களால் உணர முடியும்.—நீதி. 27:11.
10. இயேசுவைப் போல் நாம் எப்படி சகிப்புத்தன்மை காட்டலாம்?
10 கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள்மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு இடத்துக்கு பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் ஒரு நீளமான சுரங்கப் பாதை வழியாக போகிறீர்கள். அந்த சுரங்கப் பாதை கும்மிருட்டாக இருக்கிறது! ஆனால், சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சத்தைப் பார்க்க முடியும் என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையும் அந்த பயணத்தைப் போல்தான் இருக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கலாம். சிலநேரம் பிரச்சினைகளில் நீங்கள் மூழ்கிப்போயிருக்கலாம். ஒருவேளை இயேசுவும் அப்படி உணர்ந்திருக்கலாம். அவரை கழுமரத்தில் அறைந்தபோது அவர் ரொம்ப வேதனையையும் வலியையும் அனுபவித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டமான சமயமாக இருந்திருக்கும்! இருந்தாலும் இதையெல்லாம் சகிக்க எது அவருக்கு உதவியது? “தம்முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக” எல்லாவற்றையும் சகித்தார் என்று பைபிள் சொல்கிறது. (எபி. 12:2, 3) சகித்திருப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை இயேசு யோசித்துப் பார்த்தார். அதோடு, யெகோவாவுடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதும் அவருக்கு மட்டும்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிப்பதும் எவ்வளவு முக்கியம் என்று யோசித்துப் பார்த்தார். அவர் அனுபவித்த சோதனைகள் எல்லாம் முடிவுக்கு வரும், ஆனால், பரலோகத்தில் யெகோவா கொடுக்கப்போகும் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்கும் என்பதில் இயேசு உறுதியாக இருந்தார். நீங்களும் உங்களுக்கு வரும் கஷ்டங்களை நினைத்து ரொம்பவே வேதனைப்படலாம். இருந்தாலும், அதெல்லாம் நிரந்தரம் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
‘சகிப்புத்தன்மை காட்டியவர்கள்’
11. ‘சகிப்புத்தன்மை காட்டியவர்களுடைய’ அனுபவத்தை நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?
11 நம்மை போலவே நிறையப் பேர் கஷ்டங்களை சகித்துக்கொண்டிருக்கிறார்கள். சாத்தானால் வரும் சோதனைகளை சகிப்பதற்காக அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களை இப்படி உற்சாகப்படுத்தினார்: “நீங்களோ விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனை எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரர்கள் அனைவரும் உங்களைப் போலவே துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களே.” (1 பே. 5:9) ‘சகிப்புத்தன்மை காட்டியவர்களுடைய’ அனுபவத்தில் இருந்து யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். அதோடு, சோதனைகளை நம்மால் வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்பதையும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் நிச்சயம் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். (யாக். 5:11) யெகோவாவுக்கு உண்மையாக இருந்த சிலருடைய உதாரணங்களை நாம் இப்போது பார்க்கலாம்.[1]—பின்குறிப்பு.
12. கேருபீன்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 கேருபீன்கள். இவர்கள் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் தேவதூதர்கள். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு யெகோவா சில கேருபீன்களுக்கு பூமியில் ஒரு புதிய வேலையை கொடுத்தார். ‘ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது. [2] (பின்குறிப்பு) (ஆதி. 3:24) பரலோகத்தில் அவர்கள் செய்த வேலையிலிருந்து இது வித்தியாசமாக இருந்தது. இருந்தாலும், திறமைக்கு தகுந்த வேலையை கொடுக்கவில்லை என்று அவர்கள் நினைக்கவில்லை; அந்த வேலையை செய்ய முடியாது என்றும் சொல்லவில்லை. அதோடு, அதைப் பற்றி குறை சொல்லவில்லை, அதை அவர்கள் சலிப்போடும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, பெருவெள்ளம் வரும்வரை, அதாவது 1,600 வருஷங்களுக்கும் அதிகமாக அவர்கள் அந்த வேலையை சகிப்புத்தன்மையோடு செய்து முடித்தார்கள். கஷ்டமான ஒரு நியமிப்பு நமக்கு கிடைத்தால் நாம் எப்படி சகிப்புத்தன்மையோடு அதை செய்யலாம் என்பதை இந்த கேருபீன்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
13. கஷ்டங்களை சகிக்க யோபுவுக்கு எது உதவியது?
13 உண்மையுள்ள யோபு. சிலசமயம் குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ அல்லது உங்கள் நண்பரோ உங்கள் மனதை கஷ்டப்படுத்தி இருக்கலாம். அல்லது நீங்கள் ஏதாவது தீராத வியாதியால் கஷ்டப்படலாம். இல்லையென்றால், உங்களுடைய பாசத்துக்குரிய யாராவது இறந்துபோயிருக்கலாம். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யோபுவின் உதாரணம் உங்களுக்கு நிச்சயம் ஆறுதலை கொடுக்கும். (யோபு 1:18, 19; 2:7, 9; 19:1-3) இந்த கஷ்டங்கள் எல்லாம் ஏன் திடீரென்று வந்தது என்று யோபுவுக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவர் கஷ்டங்களை சகித்துக்கொண்டு கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அப்படி சகித்திருக்க எது அவருக்கு உதவியது? முதலில், அவர் யெகோவாவை நேசித்தார், யெகோவாவுக்கு பிடிக்காத எதையும் செய்யக் கூடாது என்று நினைத்தார். (யோபு 1:1) எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் யெகோவாவை பிரியப்படுத்தவே அவர் விரும்பினார். தான் படைத்த சில பிரம்மாண்டமான விஷயங்களை காட்டி தனக்கு எந்தளவு சக்தி இருக்கிறது என்பதை யெகோவா யோபுவுக்கு புரியவைத்தார். அதனால், சரியான நேரத்தில் யெகோவா கஷ்டங்களுக்கு முடிவு கொண்டுவருவார் என்று யோபு நம்பினார். (யோபு 42:1, 2) அவர் நம்பியது போலவே அவருடைய வாழ்க்கையில் நடந்தது. “கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.” யோபு ரொம்ப வருஷம் உயிரோடு இருந்தார்; திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தார்.—யோபு 42:10, 17.
14. இரண்டு கொரிந்தியர் 1:6 சொல்வது போல் பவுல் காட்டிய சகிப்புத்தன்மை மற்றவர்களுக்கு எப்படி உதவியாக இருந்தது?
14 அப்போஸ்தலன் பவுல். யெகோவாவை வணங்குவதற்காக நீங்கள் துன்புறுத்தப்படுகிறீர்களா? மூப்பராக அல்லது வட்டாரக் கண்காணியாக நிறைய பொறுப்புகளை செய்வது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், பவுலின் உதாரணம் உங்களுக்கு உதவியாக இருக்கும். பவுல் பயங்கரமான துன்புறுத்துதல்களை அனுபவித்தார். அதோடு, சபையில் இருந்த சகோதர சகோதரிகளைப் பற்றி அவர் எப்போதும் கவலைப்பட்டார். (2 கொ. 11:23-29) இருந்தாலும், பவுல் சோர்ந்துபோகவில்லை, நம்பிக்கையோடு இருந்தார். அவருடைய உதாரணம் நிறையப் பேரை பலப்படுத்தியது. (2 கொரிந்தியர் 1:6-ஐ வாசியுங்கள்.) அதேபோல், நீங்கள் காட்டும் சகிப்புத்தன்மையும் மற்றவர்களை பலப்படுத்தும்.
‘உங்களிடம் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்கிறதா?’
15, 16. (அ) சகிப்புத்தன்மை எப்படி நம்மிடம் முழுமையாக “வேலை” செய்யும்? (ஆ) சகிப்புத்தன்மை நம்மிடம் முழுமையாக வேலை செய்வதற்கு நாம் எப்படி அனுமதிக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.
15 கடவுளுடைய சக்தியின் உதவியோடு இயேசுவின் சீடரான யாக்கோபு இப்படி எழுதினார்: “உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், எந்தக் குறைவும் இல்லாமல் எல்லா வகையிலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்.” (யாக். 1:4) சகிப்புத்தன்மை எப்படி நம்மிடம் முழுமையாக “வேலை” செய்யும்? நமக்கு ஏதாவது ஒரு சோதனை வரும்போதுதான் நம்மிடம் என்ன குறை இருக்கிறது... இன்னும் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்... என்பதை தெரிந்துகொள்ள முடியும். நாம் சோதனைகளை சகித்துக்கொள்ளும்போது இன்னும் நிறைய கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும், அதை முழுமையாக காட்டவும் முடியும். உதாரணத்துக்கு பொறுமையுள்ளவர்களாக, அன்பானவர்களாக, நன்றியுள்ளவர்களாக முடியும்.
16 சகிப்புத்தன்மையை நாம் காட்டினால் இன்னும் சிறந்த கிறிஸ்தவர்களாக வாழ முடியும். சோதனைகள் தீர வேண்டும் என்பதற்காக யெகோவாவுடைய சட்டங்களை மீற மாட்டோம். உதாரணத்துக்கு, கெட்ட விஷயங்களை யோசிப்பது உங்களுக்கு ஒரு சோதனையாக இருந்தால், அதையெல்லாம் யோசிக்காமல் இருக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவாவை சேவிப்பதால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் யாராவது உங்களை எதிர்த்தால் சோர்ந்துவிடாதீர்கள். யெகோவாவை தொடர்ந்து சேவிக்க தீர்மானமாக இருங்கள். அப்படி செய்தால், யெகோவாமீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் பலமாகும். நமக்கு “கடவுளுடைய அங்கீகாரம்” வேண்டும் என்றால் சகித்திருப்பது முக்கியம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.—ரோ. 5:3-5; யாக். 1:12.
17, 18. (அ) கடைசிவரை சகித்திருப்பது ஏன் முக்கியம் என்பதற்கு உதாரணம் கொடுங்கள். (ஆ) முடிவு நெருங்கும் இந்த சமயத்தில் நாம் எதைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கலாம்?
17 கொஞ்ச காலத்துக்கு மட்டுமல்ல, கடைசிவரை நாம் சகித்திருக்க வேண்டும். ஒரு கப்பல் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். அதில் இருப்பவர்கள் தப்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் கரை வரைக்கும் நீந்தி செல்ல வேண்டும். கொஞ்ச தூரத்திலேயே ஒருவர் நீந்துவதை நிறுத்திவிட்டால் அவர் தண்ணீரில் மூழ்கிவிடுவார். அல்லது, கரையை நெருங்கிக்கொண்டு இருக்கும் ஒருவரும் நீந்துவதை நிறுத்திவிட்டால் அவரும் மூழ்கிவிடுவார். அதேபோல், புதிய உலகத்தில் வாழ ஆசைப்படும் ஒவ்வொருவரும் கடைசிவரை சகித்திருக்க வேண்டும். “நாங்கள் சோர்ந்துபோவதில்லை” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் இருக்க வேண்டும்.—2 கொ. 4:1, 16.
18 கடைசிவரை சகித்திருக்க யெகோவா உதவி செய்வார் என்று பவுலைப் போலவே நாமும் உறுதியாக நம்பலாம். “நம்மீது அன்பு காட்டியவரின் உதவியுடன் இவை எல்லாவற்றிலும் நாம் முழு வெற்றி பெற்று வருகிறோம். சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ, உயர்வான காரியங்களோ தாழ்வான காரியங்களோ வேறெந்தப் படைப்போ நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பவுல் எழுதினார். (ரோ. 8:37-39) சிலசமயங்களில் நாம் சோர்ந்து போவோம் என்பது உண்மைதான். இருந்தாலும், கிதியோன் மற்றும் அவரோடு இருந்தவர்களின் உதாரணத்தை நாம் பின்பற்றலாம். ஏனென்றால், அவர்கள் சோர்ந்துபோனாலும் நம்பிக்கை இழக்காமல் “விடாமல் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போனார்கள்.”—நியா. 8:4, NW.
^ [1] (பாரா 11) கடவுளுடைய மக்கள் சோதனைகளை எப்படி சகித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது உங்களுக்கு தெம்பளிக்கும். உதாரணத்துக்கு எத்தியோப்பியா, மலாவி, ரஷ்யாவில் உள்ள சகோதர சகோதரிகள் சோதனைகளை எப்படி சகித்தார்கள் என்று 1992, 1999, 2008 (தமிழ்) இயர்புக்கில் பாருங்கள். அதோடு, ஜூன் 15, 2015 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 30, 31-ஐயும் பாருங்கள்.
^ [2] (பாரா 12) இந்த வேலைக்கு யெகோவா எத்தனை கேருபீன்களை நியமித்தார் என்று பைபிள் சொல்வது இல்லை.