கிறிஸ்தவ ஒழுக்கத்தைக் கற்று, கற்பியுங்கள்
“இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?”—ரோமர் 2:21.
1, 2. பைபிளைப் படிக்க நீங்கள் விரும்புவதற்கு என்ன காரணங்கள் உள்ளன?
கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு உங்களுக்கு அநேக காரணங்கள் உள்ளன. ஒருவேளை அதில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களையும், சம்பவங்களையும், இடங்களையும் மற்ற விஷயங்களையும் பற்றிய உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம். திரித்துவம் அல்லது எரிநரகம் போன்ற பொய் கோட்பாடுகளிலிருந்து சத்தியத்தை தெரிந்துகொள்ள விரும்பலாம். (யோவான் 8:32) அதிகமதிகமாக யெகோவாவைப் போல இருப்பதற்கும் அவர் முன் நேர்மையாக நடப்பதற்கும், அவரைப் பற்றி நீங்கள் இன்னும் நன்கு அறிந்துகொள்ள விரும்ப வேண்டும்.—1 இராஜாக்கள் 15:4, 5.
2 கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதுடன் சம்பந்தப்பட்ட முக்கிய காரணம், நேசத்துக்குரியவர்களுக்கும், பழக்கமானவர்களுக்கும், ஏன் முன்பின் தெரியாதவர்களுக்கும்கூட கற்பிக்க உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்வதற்காகவே. இதை செய்வதும் செய்யாதிருப்பதும் உண்மை கிறிஸ்தவர்களின் விருப்பத்துக்கு விடப்படவில்லை. “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார்.—மத்தேயு 28:19, 20.
3, 4. இயேசு கட்டளையிட்டபடி கற்பிப்பது ஏன் உங்களுக்கு மதிப்புமிக்கது?
3 மற்றவர்களுக்குக் கற்பிக்கும் விருப்பத்துடன் பைபிளைப் படிப்பது மதிப்புமிக்கது; அது நித்திய திருப்தியின் ஊற்றுமூலமாகவும் இருக்கும். கற்பித்தல் மதிப்புமிக்க பணியாக இருந்து வருகிறது. என்கார்ட்டா என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறபடி: “யூதர்களின் மத்தியிலிருந்த அநேக பெரியவர்கள், போதகர்களை இரட்சிப்பின் வழிகாட்டிகளாக கருதினார்கள்; தங்கள் பெற்றோருக்கும் மேலாக போதகர்களுக்கு மரியாதை காட்டும்படி பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.” பைபிளைப் படிப்பதன் மூலம் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கற்பிப்பது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் மதிப்புவாய்ந்தது.
4 “வேறு எந்தப் பணியையும்விட கற்பிக்கும் பணியில் அநேகர் ஈடுபடுகிறார்கள். உலகில் சுமார் 4.8 கோடி ஆண்களும் பெண்களும் ஆசிரியராக பணிபுரிகிறார்கள்.” (த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா) சிறுபிள்ளைகளுக்கு கற்பிக்கும் பொறுப்பு பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அவர்கள் கற்பிக்கும் விதம் பல ஆண்டுகளுக்கு செல்வாக்கு செலுத்தலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கும்படி சொன்ன இயேசுவின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிகையில் அதன் பலன் இன்னும் அதிகமாய் இருக்கும்; நீங்கள் கற்பிப்பவை அவர்களுடைய நித்திய எதிர்காலத்தை பாதிக்கலாம். தீமோத்தேயுவை பின்வருமாறு தூண்டுவிக்கையில் அப்போஸ்தலன் பவுல் இதை வலியுறுத்தினார்: “உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16) உங்கள் கற்பித்தல் இரட்சிப்போடு சம்பந்தப்பட்டுள்ளது.
5. கிறிஸ்தவ கற்பித்தல் ஏன் தலைசிறந்தது?
5 உங்களுக்கு கற்பித்துக்கொண்டு பின்பு மற்றவர்களுக்கும் கற்பிப்பது, உன்னத ஊற்றுமூலராகிய சர்வலோக பேரரசரால் அதிகாரம் அளிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. பள்ளியில் ஆரம்ப பாடங்களை, பயிற்சி கல்வியை, அல்லது மருத்துவ தனிச்சிறப்பு கல்வியை என எதைக் கற்பிப்பதைக் காட்டிலும் இந்தப் பணியை அதிக முக்கியமானதாக ஆக்குவதற்கு இந்த உண்மை ஒன்றே போதும். கிறிஸ்தவ கற்பித்தல் என்பது கடவுளுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை தனிப்பட்ட விதத்தில் பின்பற்ற மாணாக்கர் கற்றுக்கொள்வதையும், மற்றவர்களும் அதை செய்யும்படி அவர்களுக்குக் கற்பிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—யோவான் 15:10.
உங்களுக்கு நீங்களே ஏன் கற்பித்துக்கொள்ள வேண்டும்?
6, 7. (அ) நமக்கு நாமே ஏன் முதலாவது கற்பித்துக்கொள்ள வேண்டும்? (ஆ) எந்த விதத்தில் முதல் நூற்றாண்டு யூதர்கள் கற்பிக்கிறவர்களாக இருக்க தவறினார்கள்?
6 நமக்கு முதலாவதாக கற்பித்துக்கொள்ள வேண்டுமென ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? முதலாவது நமக்கு நாமே கற்பித்துக்கொள்ளாவிட்டால் மற்றவர்களுக்கு சரிவர நம்மால் கற்பிக்க முடியாது. அன்று யூதர்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும், இன்று கிறிஸ்தவர்களுக்கு முக்கிய செய்தி அடங்கியதாகவும் உள்ள சிந்தனையைத் தூண்டும் வசனப் பகுதியில் இந்த உண்மையை பவுல் வலியுறுத்தினார். “இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம் பண்ணலாமா?” என பவுல் கேட்டார்.—ரோமர் 2:21-23.
7 பத்துக் கட்டளைகளில் நேரடியாக சொல்லப்பட்டிருந்த இரண்டு குற்றங்களாகிய களவையும் விபசாரத்தையும் பற்றி பவுல் குறிப்பிடுகையில் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைப் பயன்படுத்தினார். (யாத்திராகமம் 20:14, 15) கடவுளுடைய நியாயப்பிரமாணம் தங்களிடம் இருப்பதாக பவுலின் நாளிலிருந்த சில யூதர்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் தங்களை ‘நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவர்களாகவும், தங்களை குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும் குழந்தைகளுக்கு உபாத்தியாயராகவும் எண்ணினார்கள்.’ (ரோமர் 2:17-20) எனினும், சிலர் களவை அல்லது விபசாரத்தை அந்தரங்கமாக செய்து வந்ததால் வேடதாரிகளாகவே இருந்தார்கள். அவ்வாறு செய்வது நியாயப்பிரமாணத்தையும் பரலோகத்திலிருக்கும் அதன் எழுத்தாளரையும் அவமதிப்பதாக இருக்கும். அவர்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்க துளியும் தகுதியற்றவர்களாய் இருந்ததை உங்களால் காண முடியும்; அவர்கள் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக்கொள்ளவும் இல்லை.
8. பவுலின் நாளிலிருந்த யூதர்கள் சிலர் எந்த விதத்தில் ‘கோவிலைக் கொள்ளையடித்திருக்கலாம்’?
8 கோவிலைக் கொள்ளையடிப்பதைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். நிஜமாகவே சில யூதர்கள் அப்படி செய்தார்களா? எதை மனதில் வைத்து பவுல் இதைச் சொன்னார்? இந்த வசனத்தில் காணப்படும் ஓரளவு தகவலை வைத்து அந்த யூதர்கள் உண்மையில் எப்படி ‘கோவிலைக் கொள்ளையடித்தார்கள்’ என நம்மால் சொல்ல முடியாது. பவுலின் தோழர்கள் ‘கோவில் கொள்ளையர்’ அல்ல என எபேசுவிலிருந்த ஒரு சம்பிரதி முன்னர் ஒருமுறை சொன்னதிலிருந்து, யூதர்கள்மீது அப்படிப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டது என்பதை சிலராவது நம்பியது தெரிகிறது. (அப்போஸ்தலர் 19:29-37) வெற்றி வாகை சூடியவர்கள் அல்லது மத தீவிரவாதிகள் பொய் மத கோவில்களிலிருந்து கொள்ளையடித்து வந்த விலையுயர்ந்த பொருட்களை தனிப்பட்ட விதத்தில் அல்லது வாணிகத்தில் உபயோகித்தார்களா? கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின்படி விக்கிரகங்களிலுள்ள பொன்னையும் வெள்ளியையும் அழித்துவிட வேண்டும், சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொள்ளக்கூடாது. (உபாகமம் 7:25)a எனவே, கடவுளுடைய கட்டளையை மதிக்காமல் புறமத கோவில்களுக்குரிய பொருட்களை பயன்படுத்திய அல்லது அவற்றிலிருந்து லாபம் சம்பாதித்த யூதர்களைப் பற்றி பவுல் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம்.
9. எருசலேமிலிருந்த ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட என்ன தவறான காரியங்கள் கோவிலைக் கொள்ளையிடுவதற்குச் சமமாக இருந்தன?
9 மறுபட்சத்தில், ரோமில் நியாயப்பிரமாண போதகரின் தலைமையில் நான்கு யூதர்கள் ஈடுபட்ட அவச்செயல் பற்றி ஜொஸிஃபஸ் குறிப்பிட்டார். பொன்னையும் மற்ற விலையுயர்ந்த பொருட்களையும் எருசலேமிலிருந்த ஆலயத்திற்கு காணிக்கையாக கொண்டு வந்து தங்களிடம் தரும்படி, யூத மதத்திற்கு மாறியிருந்த ஒரு ரோம பெண்ணை இந்த நால்வரும் இணங்க வைத்தார்கள். இவற்றை அவளிடமிருந்து பெற்றுக்கொண்ட போதோ அந்தப் பொன்னையும் பொருளையும் தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்—இவ்வாறு ஒரு விதத்தில் கோவிலைக் கொள்ளையடித்தார்கள்.b குறைபாடுள்ளவற்றை பலி செலுத்தி, ஆலயத்திற்குள் பேராசையுடன் வியாபாரம் செய்வதன் மூலம் ஆலயத்தைக் ‘கள்ளர் குகையாக்கிய’ அர்த்தத்தில் மற்றவர்கள் கடவுளுடைய ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.—மத்தேயு 21:12, 13; மல்கியா 1:12-14; 3:8, 9.
கிறிஸ்தவ ஒழுக்கத்தை கற்பியுங்கள்
10. ரோமர் 2:21-23-ல் காணப்படும் பவுலின் வார்த்தைகளிலுள்ள என்ன குறிப்பை நாம் தவறவிடக்கூடாது?
10 பவுல் மறைமுகமாக குறிப்பிட்ட திருடுதல், விபசாரம் செய்தல், கோவில்களைக் கொள்ளையிடுதல் போன்ற முதல் நூற்றாண்டு பழக்கவழக்கங்கள் எதனுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளிலுள்ள முக்கிய குறிப்பை நாம் தவறவிடக்கூடாது. “இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?” என அவர் கேட்டார். பவுல் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுகள் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இந்த அப்போஸ்தலன் பைபிள் கோட்பாடுகளிடம் அல்லது சரித்திரத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்தவில்லை. தனக்குத் தானே கற்பித்துக்கொள்வதும் மற்றவர்களுக்குக் கற்பிப்பதும் பற்றி பவுல் குறிப்பிட்டது, கிறிஸ்தவ ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது.
11. கடவுளுடைய வார்த்தையைப் படிக்கையில் கிறிஸ்தவ ஒழுக்கத்துக்கு நீங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
11 ரோமர் 2:21-23-லுள்ள பாடத்தை நாம் பின்பற்றுவது என்பது கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் கிறிஸ்தவ ஒழுக்கத்தை நாம் கற்றுக்கொள்வதையும், அதற்கு இசைய நடப்பதையும், அதையே மற்றவர்களும் செய்யும்படி கற்பிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. எனவே, பைபிளைப் படிக்கையில் உண்மை கிறிஸ்தவ ஒழுக்கத்துக்கு அடிப்படையாய் அமையும் யெகோவாவின் தராதரங்களைக் கண்டுகொள்ள கவனமாய் இருங்கள். பைபிளில் காணப்படும் புத்திமதியையும் அது புகட்டும் பாடங்களையும் தியானியுங்கள். பின்னர் தைரியமாய் அவற்றைப் பின்பற்றுங்கள். உண்மையில், அதை செய்வதற்கு தைரியத்துடன் உறுதியும் தேவை. ஒரு சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவ ஒழுக்கத்தை மீறுவதை சூழ்நிலை ஏன் அனுமதிக்கிறது அல்லது மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதற்கு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடித்து அதை நியாயப்படுத்த முயலுவது அபூரண மனிதர்களுக்கு சுலபம். பவுல் குறிப்பிட்ட யூதர்கள் ஒருவேளை தாங்கள் செய்ததை நியாயப்படுத்த அல்லது மற்றவர்களை ஏமாற்ற அத்தகைய தந்திரமான நியாய விவாதங்களை பயன்படுத்துவதில் பழக்கப்பட்டவர்களாக இருந்திருக்கலாம். எனினும், விருப்பம்போல் கிறிஸ்தவ ஒழுக்கத்தின் தரத்தைக் குறைக்கவோ அசட்டை செய்யவோ கூடாதென பவுலுடைய வார்த்தை காட்டுகிறது.
12. நன்னடத்தை அல்லது தீய நடத்தை யெகோவா தேவனின் பெயரை எப்படி பாதிக்கும், இந்த உண்மையை நினைவில் வைத்திருப்பது ஏன் பயனுள்ளது?
12 பைபிளிலுள்ள ஒழுக்கநெறியை கற்றுக்கொள்வதற்கும் பின்னர் பின்பற்றுவதற்குமான முக்கிய காரணத்தை அந்த அப்போஸ்தலன் சிறப்பித்துக் காட்டினார். யூதர்களின் மோசமான நடத்தை யெகோவாவை தவறாக சித்தரித்துக் காட்டியது: “நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம் பண்ணலாமா? . . . தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.” (ரோமர் 2:23, 24) இன்று நாம் கிறிஸ்தவ ஒழுக்கத்தை மீறி நடப்பது, அதன் ஊற்றுமூலரை உண்மையில் அவமதிப்பதற்கு சமமாக இருக்கும். மறுபட்சத்தில், கடவுளுடைய தராதரங்களைத் தவறாமல் பின்பற்றினால் அது அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தி, கனத்தைச் சேர்க்கும். (ஏசாயா 52:5; எசேக்கியேல் 36:20) இதை நீங்கள் அறிந்திருப்பது, கிறிஸ்தவ ஒழுக்கத்தை அசட்டை செய்வது எளிதானதாகவோ வசதியானதாகவோ இருக்கும் சோதனைகளை அல்லது சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில் உங்கள் தீர்மானத்தில் உறுதியோடிருக்க உதவும். மேலும், பவுலின் வார்த்தைகள் வேறொன்றையும் நமக்குக் கற்பிக்கின்றன. உங்கள் நடத்தை கடவுளுடைய பெயரை பாதிக்கும் என்பதை உணர்ந்திருப்பதோடு மற்றவர்களுக்குக் கற்பிக்கையில் அவர்களுக்கும் அதை உணர்த்த வேண்டும்; அதாவது, கற்றுக்கொள்ளும் ஒழுக்க தராதரங்களை அவர்கள் எப்படி கடைப்பிடிக்கிறார்கள் என்பது யெகோவாவின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள உதவுங்கள். கிறிஸ்தவ ஒழுக்கநெறி திருப்தியை அளித்து, ஒருவருடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டுமே செய்வதில்லை. அந்த ஒழுக்கநெறியை ஏற்படுத்தி, அதைப் பின்பற்ற ஊக்குவிப்பவர் மீதுள்ள அபிப்பிராயத்தை அது பாதிக்கும்.—சங்கீதம் 74:10; யாக்கோபு 3:17.
13. (அ) ஒழுக்க விஷயத்தில் பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது? (ஆ) 1 தெசலோனிக்கேயர் 4:3-7-ல் காணப்படும் புத்திமதியின் சாராம்சத்தைச் சொல்லவும்.
13 ஒழுக்கநெறி மற்ற மனிதர்களையும் பாதிக்கிறது. கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுவதன் மதிப்பையும் அவற்றை மீறி நடப்பதால் ஏற்படும் பாதிப்பையும் சுட்டிக்காட்டும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள உதாரணங்களிலிருந்து அதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். (ஆதியாகமம் 39:1-9, 21; யோசுவா 7:1-25) ஒழுக்க விஷயத்தில் இது போன்ற தெளிவான புத்திமதியையும் நீங்கள் அதில் காணலாம்: “நீங்கள் பரிசுத்தமாக வேண்டுமென்பது, நீங்கள் வேசித்தனத்துக்கு விலகியிருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம்; தேவனை அறியாத தேசத்தாரைப் போல பாலியல் வேட்கைக்கு பெரும் ஆர்வம் காட்டாமல் உங்களில் ஒவ்வொருவரும் தன் உடலை பரிசுத்தத்திலும் கனத்திலும் ஆள அறிந்திருக்க வேண்டும்; இந்த விஷயத்தில் தன் சகோதரனின் உரிமைகளில் வரம்புமீறி, தீங்கு செய்யும் அளவுக்கு யாரும் செல்லாதிருக்க வேண்டும்; . . . தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தமாவதற்கே அழைத்திருக்கிறார்.”—1 தெசலோனிக்கேயர் 4:3-7, NW.
14. ஒன்று தெசலோனிக்கேயர் 4:3-7-லுள்ள புத்திமதியைக் குறித்து உங்களை நீங்களே என்ன கேட்டுக்கொள்ளலாம்?
14 பாலியல் ஒழுக்கக்கேடு கிறிஸ்தவ ஒழுக்க சட்டத்திற்கு முரணானது என்பதை இந்த வசனங்களிலிருந்து ஏறக்குறைய அனைவரும் தெரிந்துகொள்ளலாம். எனினும், இந்த வசனங்களை இன்னும் ஆழமாகவும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஆழமான, திருத்தமான புரிந்துகொள்ளுதலைப் பெறும் விதத்தில் கருத்துடன் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் சில வசனங்கள் வழிசெய்கின்றன. உதாரணமாக, வேசித்தனத்தில் ஈடுபடுகையில், “இந்த விஷயத்தில் தன் சகோதரனின் உரிமைகளில் வரம்புமீறி, தீங்கு செய்யும் அளவுக்கு” ஒருவர் செல்லலாம் என பவுல் குறிப்பிடுகையில் எதை அர்த்தப்படுத்தினார் என நீங்கள் யோசிக்கலாம். என்ன உரிமைகள் உட்பட்டுள்ளன, இதை நன்கு புரிந்துகொள்வது கிறிஸ்தவ ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதில் மேலுமாக ஊக்குவிப்பைப் பெற எப்படி உதவும்? இத்தகைய ஆராய்ச்சியின் பலன்கள் மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலும் கடவுளை கனம் பண்ணும்படி அவர்களுக்கு உதவுவதிலும் எப்படி மேலும் உங்களைத் தயார்படுத்தும்?
கற்பிப்பதற்காக படியுங்கள்
15. தனிப்பட்ட படிப்பின் வாயிலாக உங்களுக்கு கற்பித்துக்கொள்வதற்கு என்ன உபகரணங்களை நீங்கள் பயன்படுத்தலாம்?
15 தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் படிக்கையில் எழும் கேள்விகளை அல்லது விவாதங்களை ஆராய்வதற்கு அவர்கள் வசம் உபகரணங்கள் உள்ளன. பல மொழிகளில் உள்ள ஓர் உபகரணம் உவாட்ச்டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ். இது உங்களிடம் இருந்தால் யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலிருந்து தகவலைக் கண்டுபிடிப்பதற்கு இதை நீங்கள் பயன்படுத்தலாம். தலைப்பின் அடிப்படையில் அல்லது பைபிள் வசனத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம். யெகோவாவின் சாட்சிகளுக்கு அநேக முக்கிய மொழிகளில் கிடைக்கும் மற்றொரு உபகரணம் உவாட்ச்டவர் லைப்ரரி ஆகும். சிடி-ராமில் கிடைக்கும் இந்த கம்ப்யூட்டர் புரோகிராமில் மின்னணுவியல் வடிவில் பெருமளவு பிரசுரங்களின் தொகுப்பு உள்ளது. இந்தப் புரோகிராம், பல்வேறு விஷயங்களையும் வசனங்களையும் ஒருவர் ஆராய்வதற்கு உதவுகிறது. இந்த உபகரணங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ உங்களிடம் இருந்தால் மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி கடவுளுடைய வார்த்தையை நீங்கள் படிக்கையில் அவற்றைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
16, 17. (அ) 1 தெசலோனிக்கேயர் 4:6-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் உரிமைகள் பற்றிய தகவல் நிறைந்த குறிப்புகளை நீங்கள் எங்கே காணலாம்? (ஆ) எந்த விதங்களில் வேசித்தனம் மற்றவர்களின் உரிமைகளில் வரம்பு மீறுவதாக இருக்கும்?
16 மேலே குறிப்பிடப்பட்ட 1 தெசலோனிக்கேயர் 4:3-7-ன் உதாரணத்தைக் கவனிப்போம். அதில் உரிமைகள் சம்பந்தமான கேள்வி எழுந்தது. யாருடைய உரிமைகள்? அந்த உரிமைகளின் வரம்பை எப்படி மீறலாம்? மேற்குறிப்பிடப்பட்ட படிப்பு உபகரணங்களின் உதவியோடு அந்த வசனங்களின் பேரில் தகவல் நிறைந்த அநேக குறிப்புகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம்; அவற்றில் பவுல் குறிப்பிட்ட அந்த உரிமைகளைப் பற்றியும்கூட அறிந்துகொள்ளலாம். அது சம்பந்தப்பட்ட குறிப்புகளை பின்வரும் பிரசுரங்களில் நீங்கள் வாசித்து தெரிந்துகொள்ளலாம்: வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 863-4; உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்?, பக்கம் 145; ஆங்கில காவற்கோபுரம், 1989, நவம்பர் 15, பக்கம் 31.
17 இப்படி தொடர்ந்து படிக்கையில், பவுலின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை அந்தப் பிரசுரங்களிலிருந்து நீங்கள் காண்பீர்கள். வேசித்தனம் செய்பவர் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்கிறார், தனக்குத் தானே வியாதிகளை வருவித்துக்கொள்கிறார். (1 கொரிந்தியர் 6:18, 19; எபிரெயர் 13:4) வேசித்தனத்தில் ஈடுபடும் நபர் அவரோடு பாவத்திற்குட்பட்ட பெண்ணின் பல்வேறு உரிமைகளில் வரம்பு மீறுகிறார். ஒழுக்க விஷயத்தில் சுத்தமான நிலைநிற்கையையும் நல்மனசாட்சியையும் அவள் இழக்கும்படி செய்கிறார். அவள் மணமாகாதவளாக இருந்தால் ஒரு கன்னியாக மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவளுடைய உரிமையிலும், அவ்வாறு கன்னியாக இருக்கும்படி எதிர்பார்க்கும் அவளுடைய வருங்கால கணவனின் உரிமையிலும் அவர் வரம்பு மீறுகிறார். அந்தப் பெண்ணின் பெற்றோரையும் மணமானவளாக இருந்தால் அவளுடைய கணவனையும் அவர் புண்படுத்திவிடுகிறார். இந்த ஒழுக்கங்கெட்ட நபர், சுத்தமான ஒழுக்கப் பதிவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் தன் குடும்பத்தின் உரிமையை இழக்கும்படி செய்கிறார். அவர் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராக இருந்தால் அதற்கு அவமானத்தை ஏற்படுத்தி அதன் நற்பெயரைக் கெடுக்கிறார்.—1 கொரிந்தியர் 5:1.
18. கிறிஸ்தவ ஒழுக்கம் பற்றிய பைபிள் படிப்பிலிருந்து நீங்கள் எப்படி பலனடைகிறீர்கள்?
18 உரிமைகள் பற்றிய அத்தகைய குறிப்புகள் அந்த வசனத்தின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறதல்லவா? அத்தகைய படிப்பு உண்மையில் அதிக பலன்மிக்கது. அவ்வாறு படிக்கையில் உங்களுக்கு நீங்களே கற்பித்துக்கொள்கிறீர்கள். உண்மைத் தன்மையின் பேரில் புரிந்துகொள்ளுதலும் கடவுளுடைய செய்தியின் பலமான பாதிப்பும் உங்களில் அதிகரிக்கும். எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், கிறிஸ்தவ ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதற்கான உங்கள் தீர்மானத்தைப் பலப்படுத்திக் கொள்வீர்கள். கற்பிப்பவராக நீங்கள் எந்தளவுக்கு இன்னும் மேம்பட்டவராக ஆகலாம் என்பதை எண்ணிப் பாருங்கள்! உதாரணமாக, பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்குக் கற்பிக்கையில், 1 தெசலோனிக்கேயர் 4:3-7-ஐ முழுமையாக புரிந்துகொள்வதற்கான வழியைக் காட்டி கிறிஸ்தவ ஒழுக்கத்தின் பேரில் அவர்களுடைய புரிந்துகொள்ளுதலையும் மதிப்பையும் அதிகரிக்கலாம். இவ்வாறு உங்கள் படிப்பு கடவுளை கனப்படுத்த உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். இங்கு நாங்கள் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரேவொரு உதாரணத்தையே உங்களுக்கு சுட்டிக்காட்டினோம். கிறிஸ்தவ ஒழுக்கத்துக்கு இன்னும் அநேக அம்சங்கள் உள்ளன; அதே போல, நீங்கள் படிக்கவும், பின்பற்றவும், கற்பிக்கவும் உதவும் இன்னும் அநேக பைபிள் உதாரணங்களும் புத்திமதிக்குரிய தகவல்களும் உள்ளன.
19. நீங்கள் ஏன் கிறிஸ்தவ ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்?
19 கிறிஸ்தவ ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வது ஞானமானது என்பதில் சந்தேகமேதுமில்லை. ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளது [“கற்புள்ளது,” NW]’ என யாக்கோபு 3:17 சொல்கிறது. அது கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக அர்த்தப்படுத்துகிறது. சொல்லப்போனால், தம்மை பிரதிநிதித்துவம் செய்து பைபிளைக் கற்பிப்பவர்களே ‘கற்புக்கு’ நல்ல முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என கடவுள் எதிர்பார்க்கிறார். (1 தீமோத்தேயு 4:12) பவுல், தீமோத்தேயு போன்ற ஆரம்ப கால சீஷர்களின் வாழ்க்கை முறைகள் அவர்கள் அவ்வாறு வாழ்ந்ததாக நிரூபிக்கின்றன; அவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகியிருந்தார்கள். “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்” என்றும் பவுல் எழுதினார்.—எபேசியர் 5:3, 4.
20, 21. நீங்கள் 1 யோவான் 5:3-ல் அப்போஸ்தலன் யோவான் எழுதியதை ஏன் ஆமோதிக்கிறீர்கள்?
20 கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ஒழுக்க தராதரங்கள் தெளிவாகவும் குறிப்பாகவும் இருப்பதால் அவை பின்பற்றுவதற்கு அதிக கடினமானவை அல்ல. அப்போஸ்தலர்களில் நீண்ட காலம் வாழ்ந்த யோவானுக்கு அது தெளிவாக தெரிந்திருந்தது. பல ஆண்டுகளாக தான் கவனித்து வந்தவற்றின் அடிப்படையில் கிறிஸ்தவ ஒழுக்கம் தீங்கற்றது என்பதை அறிந்திருந்தார். மாறாக அது நல்லொழுக்கமிக்கதாகவும், பயனுள்ளதாகவும், பலனளிப்பதாகவும் நிரூபித்தது. பின்வருமாறு எழுதுகையில் யோவான் அதை வலியுறுத்தினார்: “அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.”—1 யோவான் 5:3, பொ.மொ.
21 ஆனாலும், கிறிஸ்தவ ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படிவது பிரச்சினைகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் நம்மைக் காக்கும் என்பதற்காக மட்டுமே அது சிறந்த வழி என யோவான் குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். அது, யெகோவா தேவனுக்கான நம் அன்பின் வெளிக்காட்டு, அவரிடமுள்ள நம் அன்பை காட்டுவதற்கான அருமையான வாய்ப்பு என முதலாவது குறிப்பிடுவதன் மூலம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதை சரியான நோக்குநிலையில் அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார். கடவுளை நேசிக்கும்படி ஒருவர் தனக்குத் தானே கற்பித்துக்கொள்ள அல்லது மற்றவர்களுக்கு கற்பிக்க, அவருடைய உயர்ந்த தராதரங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பின்பற்றுவது அவசியம். இது நமக்கு நாமே கற்பித்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கற்பிப்பதை அர்த்தப்படுத்துகிறது.
[அடிக்குறிப்புகள்]
a பரிசுத்த காரியங்களை யூதர்கள் அவமதிக்காதவர்கள் என்பதைப் போல் ஜொஸிஃபஸ் விவரித்தாலும் பின்வருமாறு அவர் கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்தை சற்று மாற்றி குறிப்பிட்டார்: “யாரும் பிற நகரத்தார் வணங்கும் கடவுட்களை தூஷிக்காதிருப்போமாக, புறமத கோவில்களை கொள்ளையடிக்காதிருப்போமாக, எந்தவொரு தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொக்கிஷத்தையும் எடுத்துக்கொள்ளாதிருப்போமாக.” (சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.)—ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ், புத்தகம் 4, அதிகாரம் 8, பாரா 10.
b ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ், புத்தகம் 18, அதிகாரம் 3, பாரா 5.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கு முன்பாக நமக்கு நாமே கற்பித்துக்கொள்வதற்காக ஏன் படிக்க வேண்டும்?
• நம்முடைய நடத்தை யெகோவாவை எப்படி பாதிக்கலாம்?
• வேசித்தனத்தில் ஈடுபடும் நபர் யாருடைய உரிமைகளில் வரம்பு மீறிவிடலாம்?
• கிறிஸ்தவ ஒழுக்கம் சம்பந்தமாக உங்கள் தீர்மானம் என்ன?
[பக்கம் 22-ன் படம்]
“அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை”