யெகோவாவின் சிட்சையை எப்போதும் ஏற்றுக்கொள்ளுங்கள்
‘யெகோவாவுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே.’—நீதிமொழிகள் 3:11.
கடவுள் தரும் சிட்சையை ஏற்றுக்கொள்ளும்படி பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் நம் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறார். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” (நீதிமொழிகள் 3:11-12) உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை நேசிப்பதால்தான் உங்களை சிட்சிக்கிறார்.
2 “சிட்சை” என்பது தண்டனை, திருத்தம், போதனை, கல்வி ஆகியவற்றைக் குறிக்கிறது. “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 12:11) கடவுள் கொடுக்கும் சிட்சையை ஏற்றுக்கொள்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் நீதியான வழியில் நடக்க உங்களுக்கு உதவும். இவ்வாறாக, பரிசுத்த கடவுளான யெகோவாவிடம் உங்களை நெருங்கி வரச்செய்யும். (சங்கீதம் 99:5) திருத்தம், சக விசுவாசிகள் மூலமாகவோ, கிறிஸ்தவ கூட்டங்களில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மூலமாகவோ, அல்லது கடவுளுடைய வார்த்தையையும் ‘உண்மையுள்ள விசாரணைக்காரர்’ அளிக்கும் பிரசுரங்களையும் படிப்பதன் மூலமாகவோ கிடைக்கலாம். (லூக்கா 12:42-44) எந்த விஷயத்தில் திருத்தம் செய்யவேண்டுமென்பது உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகையில் அதற்காக நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! ஆனால், மோசமான பாவத்தைச் செய்திருந்தால் எப்படிப்பட்ட சிட்சை தேவைப்படும்?
சிலர் சபைநீக்கம் செய்யப்படுவதேன்
3 கடவுளுடைய ஊழியர்கள் பைபிளையும், கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிக்கிறார்கள். யெகோவாவின் ஒழுக்கநெறிகளைப்பற்றி அவர்களுடைய கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேசப்படுகிறது. ஆகவே, யெகோவா எதை எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றி கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். சபை அங்கத்தினர் ஒருவர் மனந்திரும்பாமல் படுமோசமான பாவத்தில் ஈடுபடுகையில் மட்டுமே சபைநீக்கம் செய்யப்படுகிறார்.
4 சபைநீக்கம் செய்யப்பட்டதைப் பற்றிய பைபிள் பதிவை கவனியுங்கள். கொரிந்து சபையில் ‘ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருந்தான்; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருந்தது.’ அந்தச் சபையார் அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். “ஆவி . . . இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று” கொரிந்தியரை பவுல் ஊக்குவித்தார். (1 கொரிந்தியர் 5:1-5) சபைநீக்கம் செய்யப்பட்டு, சாத்தானிடம் ஒப்படைக்கப்படுகையில், பாவம் செய்த அந்நபர் மறுபடியும் சாத்தானுடைய உலகத்தின் பாகமாகிறார். (1 யோவான் 5:19) அவரை நீக்கியதால் மாம்ச சிந்தைகொண்ட பொல்லாத செல்வாக்கு சபையிலிருந்து அகன்றது. சபையின் தெய்வீக “ஆவி,” அதாவது அதில் நிலவிய சிறந்த மனப்பான்மை பாதுகாக்கப்பட்டது.—2 தீமோத்தேயு 4:22; 1 கொரிந்தியர் 5:11-13.
5 அதிக காலம் கடந்துவிடும் முன்னரே, தவறு செய்த அந்நபரை சபையில் சேர்த்துக்கொள்ளும்படி கொரிந்திய கிறிஸ்தவர்களை பவுல் ஊக்குவித்தார். ஏன்? அவர்கள் “சாத்தானாலே . . . மோசம்போகாதபடிக்கு” அப்படிச் செய்யும்படி அவர் கூறினார். பாவம் செய்த அந்நபர் மனந்திரும்பியது தெளிவாக இருந்தது. அவர் ஒழுக்கரீதியில் சுத்தமான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருந்தார். (2 கொரிந்தியர் 2:8-11) மனந்திரும்பிய அந்த மனிதனை சபையில் சேர்த்துக்கொள்ள கொரிந்தியர்கள் மறுத்தார்களெனில், சாத்தான் அவர்களை மோசம்போக்கிவிடுவான். எப்படியெனில், சாத்தான் விரும்பிய விதமாகவே அவர்கள் உணர்ச்சியற்றவர்களாக, மன்னிக்காதவர்களாக இருப்பார்கள். மாறாக, கொரிந்தியர்களோ, மனந்திரும்பிய அந்த மனிதனை பெரும்பாலும் சீக்கிரத்திலேயே “மன்னித்து ஆறுதல்” செய்திருப்பார்கள்.—2 கொரிந்தியர் 2:5-7.
6 சபைநீக்கம் செய்வதால் என்ன பலன்? அது யெகோவாவின் பரிசுத்த பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அவருடைய மக்களின் நற்பெயரையும் பாதுகாக்கிறது. (1 பேதுரு 1:14-16) தவறுசெய்துவிட்டு மனந்திரும்பாத ஒருவரை சபையிலிருந்து நீக்கும்போது கடவுளுடைய ஒழுக்கநெறிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன, சபையின் ஆன்மீக சுத்தம் பாதுகாக்கப்படுகிறது, மனந்திரும்பாத அந்நபர் தான் செய்த பாவம் எந்தளவு மோசமானது என்பதை உணர்ந்துகொள்ளவும் அது உதவுகிறது.
மனந்திரும்புவது முக்கியம்
7 மோசமான பாவத்தில் ஈடுபடும் அநேகர் உண்மையிலேயே மனந்திரும்புகிறார்கள்; அதனால், சபைநீக்கம் செய்யப்படுவதில்லை. உண்மையான மனந்திரும்புதலை வெளிக்காட்டுவது சிலருக்கு சுலபமாக இருப்பதில்லை. 32-ம் சங்கீதத்தை இயற்றிய இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதை கவனியுங்கள். தான் செய்த படுமோசமான பாவத்தை, அநேகமாக பத்சேபாள் சம்பந்தப்பட்ட பாவத்தை சில காலத்திற்கு அவர் அறிக்கையிடவேயில்லை என்பதை அந்தச் சங்கீதத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதன் விளைவு? கோடை காலத்தின் உஷ்ணம் ஒரு மரத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதுபோல, தன் பாவங்களைப் பற்றிய மனக்கவலை தாவீதின் பலத்தை குன்றிப்போகச் செய்தது. தாவீதின் உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டன. ஆனால், அவர் தன் ‘மீறுதல்களை . . . அறிக்கையிட்டபோது, யெகோவா அவருடைய பாவத்தின் தோஷத்தை மன்னித்தார்.’ (சங்கீதம் 32:3-5) அதன்பிறகு தாவீது பின்வருமாறு பாடினார்: “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, . . . அவன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்].” (சங்கீதம் 32:1, 2) கடவுளுடைய இரக்கத்தை அனுபவித்தது தாவீதுக்கு எவ்வளவு அருமையாக இருந்தது!
8 பாவம் செய்த நபர் இரக்கத்தைப் பெற வேண்டுமெனில், அவர் மனந்திரும்ப வேண்டுமென்பது தெளிவாகவே இருக்கிறது. என்றாலும், அவமானமாக உணர்வதோ, மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயமோ உண்மையான மனந்திரும்புதல் அல்ல. “மனந்திரும்புவது” என்றால் பாவத்தைக் குறித்து வருந்தி, தவறான நடத்தை சம்பந்தமாக “மனதை மாற்றிக்கொள்வது” என்று அர்த்தம். மனந்திரும்பிய நபர் “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” கொண்டிருக்கிறார். முடிந்தால் ‘தவறை சரி செய்ய’ விரும்புகிறார்.—சங்கீதம் 51:17; 2 கொரிந்தியர் 7:11, NW.
9 கிறிஸ்தவ சபைக்குள் மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்படுவதில் மனந்திரும்புதல் மிக முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது. சபைநீக்கம் செய்யப்பட்ட நபர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு முன், அவருடைய இருதய நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். அவருடைய பாவம் எந்தளவு மோசமானது என்பதையும், யெகோவாவுக்கும் சபைக்கும் அவர் எந்தளவு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும் அவர் உணர வேண்டும். பாவம் செய்த நபர் மனந்திரும்ப வேண்டும், மன்னிப்பு கேட்டு ஊக்கமாக ஜெபிக்க வேண்டும், கடவுளின் நீதியான நெறிகளுக்கு இசைவாக வாழ வேண்டும். சபையில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்கையில், தான் மனந்திரும்பியதையும், “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளை” பிறப்பிப்பதையும் நிரூபிக்க அவர் தயாராக இருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 26:20.
பாவத்தை ஏன் அறிக்கையிட வேண்டும்?
10 பாவம் செய்த சிலர் பின்வருமாறு யோசிக்கலாம்: ‘நான் செய்த பாவத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னால், தர்மசங்கடமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை, சபைநீக்கமும் செய்யப்படலாம். ஆனால், நான் பேசாமல் இருந்துவிட்டால், அப்படிப்பட்ட தர்மசங்கடத்தை தவிர்க்கலாம். அதோடு, சபையிலுள்ள யாருக்கும் அது தெரியவே வராது.’ இப்படி யோசிக்கையில் சில முக்கிய குறிப்புகள் கவனிக்கப்படாமல் போகின்றன. அவை யாவை?
11 யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.” இருந்தாலும், அவர் தம் மக்களை ‘சரியான’ அளவில் திருத்துகிறார். (யாத்திராகமம் 34:6, 7; எரேமியா 30:11, ஈஸி டு ரீட் வர்ஷன்) நீங்கள் மோசமான பாவத்தைச் செய்துவிட்டு, அதை மறைக்க நினைத்தால் கடவுளுடைய இரக்கத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? யெகோவாவுக்கு அதைப் பற்றித் தெரியும். பாவத்தை அவர் கண்டுங்காணாமல் விட்டுவிடவே மாட்டார்.—நீதிமொழிகள் 15:3; ஆபகூக் 1:13.
12 நீங்கள் மோசமான பாவத்தைச் செய்திருந்தால், அதை அறிக்கையிடுவதன் மூலமாக நல்மனசாட்சியைப் பெற்றுக்கொள்ளலாம். (1 தீமோத்தேயு 1:18-20) ஆனால், அவ்வாறு அறிக்கையிடாதிருந்தால் மனசாட்சி கறைப்பட்டுவிடலாம். இது இன்னுமதிக பாவத்திற்குள் உங்களைத் தள்ளிவிடும். நீங்கள் செய்திருப்பது மற்றொரு மனிதருக்கோ சபைக்கோ விரோதமான பாவம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது யெகோவாவுக்கு விரோதமான பாவம். சங்கீதக்காரன் பின்வருமாறு பாடினார்: யெகோவாவின் “அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன. அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 11:4, 5, பொது மொழிபெயர்ப்பு.
13 படுமோசமான பாவத்தை மறைத்து, சுத்தமான கிறிஸ்தவ சபையில் தொடர்ந்திருக்க முயலும் எவரையும் யெகோவா ஆசீர்வதிக்க மாட்டார். (யாக்கோபு 4:6) ஆகவே, நீங்கள் பாவம் செய்திருந்து, இப்போது சரியானதைச் செய்ய விரும்பினால், நேர்மையாக அதை அறிக்கையிட தயங்காதீர்கள். இல்லையெனில், உங்கள் மனசாட்சி குறுகுறுத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அப்படிப்பட்ட மோசமான பாவத்தைப் பற்றிய அறிவுரையைக் குறித்து வாசிக்கும்போதோ கேட்கும்போதோ அது குறுகுறுக்கும். யெகோவா தம்முடைய ஆவியை சவுல் ராஜாவிடமிருந்து நீக்கியதைப்போல உங்களிடமிருந்தும் நீக்கிவிட்டால் என்னவாகும்? (1 சாமுவேல் 16:14) கடவுளுடைய ஆவி உங்களிடமிருந்து நீக்கப்படுகையில், நீங்கள் இன்னுமதிக மோசமான பாவத்தில் விழுந்துவிட நேரிடலாம்.
உண்மையுள்ள சகோதரர்களில் நம்பிக்கை வையுங்கள்
14 ஆகவே, பாவத்தில் ஈடுபட்டு மனந்திரும்பிய நபர் என்ன செய்ய வேண்டும்? “அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்.” (யாக்கோபு 5:14, 15) ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுப்பதற்கு’ ஒரு வழி, மூப்பர்களை அணுகுவதே. (மத்தேயு 3:8) இந்த விசுவாசமுள்ள, கனிவான ஆட்கள் ‘கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணுவார்கள்.’ அவர்கள் பைபிளிலிருந்து அளிக்கும் ஆலோசனை, நிவாரணமளிக்கும் எண்ணெயைப்போல இருக்கும்; உண்மையான மனந்திரும்புதலை காட்டும் எவருக்கும் ஆறுதல் அளிக்கும்.—எரேமியா 8:22.
15 யூதர்களை பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பொ.ச.மு. 537-ல் விடுவித்தபோதும், பொ.ச. 1919-ல் ஆன்மீக இஸ்ரவேலரை ‘மகா பாபிலோனிலிருந்து’ விடுவித்தபோதும் நமது மேய்ப்பராகிய யெகோவா எப்பேர்ப்பட்ட அன்பான முன்மாதிரியை வைத்தார்! (வெளிப்படுத்துதல் 17:3-5; கலாத்தியர் 6:16) இதன்மூலம் பின்வரும் வாக்குறுதியை அவர் நிறைவேற்றினார்: “என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் . . . நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்.”—எசேக்கியேல் 34:15, 16.
16 யெகோவா தம் அடையாளப்பூர்வ ஆடுகளுக்கு உணவளித்து, அவற்றை பாதுகாப்பாக தங்கவைத்தார். காணாமல் போனவற்றை தேடினார். அதேபோல, கடவுளுடைய மந்தை ஆன்மீக ரீதியில் நன்கு உணவளிக்கப்பட்டு, பாதுகாப்பாய் இருப்பதை கிறிஸ்தவ மேய்ப்பர்கள் உறுதி செய்துகொள்கிறார்கள். சபையிலிருந்து பிரிந்து செல்லும் ஆடுகளை அவர்கள் தேடுகிறார்கள். கடவுள், ‘எலும்பு முறிந்ததைக் காயங்கட்டியதைப்போல’ மற்றவர்களுடைய சொல்லாலோ, தங்களுடைய சொந்த செயல்களாலோ காயம்பட்டிருக்கும் ஆடுகளுக்கு கண்காணிகள் ‘காயங்கட்டுகிறார்கள்.’ கடவுள் ‘நசல்கொண்டதைத் திடப்படுத்தியதைப்’ போலவே, தங்களுடைய சொந்த தவறுகளின் காரணமாக ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டவர்களுக்கு மூப்பர்கள் உதவுகிறார்கள்.
மேய்ப்பர்கள் எவ்வாறு உதவி அளிக்கிறார்கள்
17 பின்வரும் ஆலோசனைக்கு மூப்பர்கள் சந்தோஷமாக கீழ்ப்படிகிறார்கள்: “பயத்தோடே” தொடர்ந்து ‘இரக்கம் பாராட்டுங்கள்.’ (யூதா 22) ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடுவதன் மூலம் சில கிறிஸ்தவர்கள் மோசமாக பாவம் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையிலேயே மனந்திரும்பினால், ஆன்மீக ரீதியில் கைகொடுக்கத் தயாராயிருக்கும் மூப்பர்களின் இரக்கமுள்ள, அன்புள்ள உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்பதில் அவர்கள் உறுதியாயிருக்கலாம். பவுல் தன்னையும் உட்படுத்தி, அப்படிப்பட்ட மூப்பர்களைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 1:24) ஆகவே, அவர்கள் அளிக்கும் ஆன்மீக உதவியை நாட ஒருபோதும் தயங்காதீர்கள்.
18 நீங்கள் மோசமாக பாவம் செய்திருந்தால், மூப்பர்கள் மீது ஏன் நம்பிக்கை வைக்கலாம்? ஏனெனில், அவர்கள் முக்கியமாய் கடவுளுடைய மந்தைக்கு மேய்ப்பர்களாக இருக்கிறார்கள். (1 பேதுரு 5:1-4) காயப்படுத்திக்கொண்ட அப்பாவி ஆடு அபயக்குரல் எழுப்பும்போது எந்த அன்பான மேய்ப்பனும் அதற்காக அதை தண்டிக்க மாட்டார். தவறு செய்யும் சக விசுவாசிகளை கையாளுகையில், மூப்பர்கள் அந்தத் தவறுக்காக அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதில் கவனத்தை ஊன்றவைப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர் செய்த பாவத்தைப் பற்றியும், ஆன்மீக ரீதியில் அவரை பழைய நிலைக்குக் கொண்டுவர வாய்ப்பிருந்தால் அதைப் பற்றியுமே யோசிக்கிறார்கள். (யாக்கோபு 5:13-20) மூப்பர்கள் நீதியாக நியாயந்தீர்க்க வேண்டும்; ‘மந்தையைக் கனிவாக நடத்தவேண்டும்.’ (அப்போஸ்தலர் 20:29, 30, NW; ஏசாயா 32:1, 2) மற்றெல்லா கிறிஸ்தவர்களைப் போலவே, மூப்பர்களும் ‘நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, . . . தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்க வேண்டும்.’ (மீகா 6:8) ‘[யெகோவாவுடைய] மேய்ச்சலின் ஆடுகளுடைய’ உயிரையும் பரிசுத்த சேவையும் குறித்ததில் தீர்மானங்கள் எடுக்கும்போது அப்படிப்பட்ட குணங்கள் இன்றியமையாதவை.—சங்கீதம் 100:3.
பூர்வகால மேய்ப்பர்களை போல, கிறிஸ்தவ மூப்பர்கள் கடவுளுடைய காயம்பட்ட ஆடுகளுக்கு ‘காயங்கட்டுகிறார்கள்
19 கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகிறார்கள். அதன் வழிநடத்துதலை பின்பற்ற முயலுகிறார்கள். “ஒருவன் அறியாமல் தவறான படி எடுத்துவிட்டால்” அதாவது, எதிர்பாராத விதத்தில் தவறு செய்துவிட்டால் ஆன்மீக தகுதியுள்ளவர்கள் ‘சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுகிறார்கள்.’ (கலாத்தியர் 6:1, NW; அப்போஸ்தலர் 20:28) கரிசனையுள்ள மருத்துவர் முறிந்த எலும்பை சரியான இடத்தில் பொருத்துகையில் கவனமுள்ளவராக இருக்கிறார். ஏனெனில், குணப்படுத்த முயலுகையில் நோயாளிக்கு தேவையற்ற வலியை ஏற்படுத்தாதிருக்க அவர் விரும்புகிறார். அதேபோல மூப்பர்களும் தவறு செய்த நபருடைய சிந்தனையைச் சரிபடுத்த முயலுகையில் சாந்தமாகவும், அதேசமயம் தெய்வீக ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற உறுதியோடும் அதைச் செய்கிறார்கள். (கொலோசெயர் 3:12) இரக்கம் காட்டுவது சம்பந்தமாக தீர்மானிக்கையில், மூப்பர்கள் ஜெபம் செய்துவிட்டு பைபிளின் அடிப்படையிலேயே அதைச் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் கடவுளுடைய நோக்குநிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கும்.—மத்தேயு 18:18.
20 ஒருவர் செய்த பாவம் எல்லாருக்கும் தெரியவந்தால் அல்லது அது எல்லாருக்கும் கண்டிப்பாக தெரியவரும் என்றால், சபையின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக அவ்விஷயத்தைக் குறித்து சபையில் அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும். சபையாருக்கு தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கையிலும் அறிவிப்பு செய்யப்படும். ஒருவர் காயத்திலிருந்து குணமடைந்து வருகையில், அவரால் அதிகமாக செயல்பட முடியாது. அதேபோல, நியாயவிசாரணையில் கண்டிக்கப்பட்ட நபர் ஆன்மீக ரீதியில் குணமடைந்து வருகையில் சபை காரியங்களில் அவரால் ஈடுபட முடியாது. மனந்திரும்பிய அந்நபர் குறிப்பிட்ட காலத்திற்கு கூட்டங்களில் பதில் சொல்லாமல், வெறுமென கேட்பதே சரியானதாக இருக்கும். அவருக்கு பைபிள் படிப்பு நடத்த மூப்பர்கள் ஒருவரை ஏற்பாடு செய்யலாம். இது அவர் எந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறாரோ அதில் அவரைப் பலப்படுத்த உதவும். மறுபடியும் அவர் ‘விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவராக’ ஆவதற்கு உதவும். (தீத்து 2:2) இது அன்பின் காரணமாக செய்யப்படுகிறதே தவிர, தவறு செய்தவரை தண்டிப்பதற்காக அல்ல.
21 மூப்பர்கள் ஆன்மீக உதவியை பல வழிகளில் அளிக்கலாம். உதாரணமாக, முன்பு குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்த ஒரு சகோதரர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஒருமுறையோ இருமுறையோ அளவுக்கதிகமாக குடித்துவிட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது, புகைபிடிக்கும் பழக்கத்தை வெகு முன்னரே விட்டுவிட்ட ஒருவர், பலவீனமான சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் ஓரிரு முறை புகைத்ததாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஜெபித்து, கடவுள் தன்னை மன்னித்து விட்டதாக நம்பினாலும், ஒரு மூப்பரின் உதவியை அவர் நாட வேண்டும். அப்போது அந்த பாவம் பழக்கமாகி விடாமல் பார்த்துக்கொள்ள முடியும். ஓரிரு மூப்பர்கள் அந்தச் சூழ்நிலையை கையாளலாம். என்றாலும், அந்த மூப்பர்கள் நடத்தும் கண்காணியிடம் அதைத் தெரிவிப்பார்கள், ஏனெனில் மற்ற அம்சங்களும் அதில் உட்பட்டிருக்கலாம்.
கடவுள் தரும் சிட்சையை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்
22 கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்றால், யெகோவாவின் சிட்சைக்கு கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். (1 தீமோத்தேயு 5:20) பைபிளையும், கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிக்கையில் பெறுகிற திருத்தத்தையும் யெகோவாவின் மக்களுடைய கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கொடுக்கப்படுகிற ஆலோசனைகளையும் கடைப்பிடியுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் எப்போதும் விழிப்புள்ளவர்களாய் இருங்கள். அப்போது கடவுள் அளிக்கும் சிட்சை, ஆன்மீக ரீதியில் பாவத்திற்கு எதிரான பாதுகாப்பு கோட்டையை அதாவது, உறுதியான மதிலைப் போல் இருக்கும்.
23 கடவுள் கொடுக்கும் சிட்சையை ஏற்றுக்கொள்வது அவருடைய அன்பில் நிலைத்திருக்க உங்களுக்கு உதவும். சிலர் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால், நீங்கள் உங்கள் ‘இருதயத்தைக் காத்துக்கொண்டு’ ‘ஞானமுள்ளவர்களைப்போல் . . . நடந்தால்’ அந்நிலை உங்களுக்கு வராதிருக்கும். (நீதிமொழிகள் 4:23; எபேசியர் 5:15) நீங்கள் இப்போது சபைநீக்கம் செய்யப்பட்டவராக இருந்தால், மறுபடியும் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு தேவையானவற்றைச் செய்யலாமே? தமக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் யாவரும் தம்மை உண்மையோடும் “மனமகிழ்ச்சியோடும்” வணங்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். (உபாகமம் 28:47) யெகோவாவின் சிட்சையை எப்போதும் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அவ்வாறே அவரை என்றென்றும் வணங்கலாம்.—சங்கீதம் 100:2.