“இந்த உலகத்தின் காட்சி மாறுகிறது”
‘சகோதரரே நான் சொல்லுகிறது என்னவெனில், இனிவரும் காலம் குறுகினது.’—1 கொரிந்தியர் 7:29.
1, 2. உங்கள் வாழ்நாள் காலத்தில் என்னென்ன மாற்றங்களையெல்லாம் இந்த உலகத்தில் பார்த்திருக்கிறீர்கள்?
உங்கள் வாழ்நாள் காலத்தில் என்னென்ன மாற்றங்களையெல்லாம் இந்த உலகத்தில் பார்த்திருக்கிறீர்கள்? அவற்றில் சிலவற்றை விவரிக்க முடியுமா? உதாரணத்திற்கு மருத்துவ துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சிகளின் காரணமாக சில நாடுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது; 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது 50 வருடங்களுக்கும் குறைவாக இருந்தது, இன்றோ 70 வருடங்களைத் தாண்டிவிட்டது! ரேடியோ, டிவி, செல் ஃபோன்கள், ஃபாக்ஸ் மெஷின்கள் போன்றவற்றால் நாம் அடைந்திருக்கும் பயன்களையும் நினைத்துப் பாருங்கள். அதுமட்டுமல்ல, கல்வித்துறை, போக்குவரத்து, மனித உரிமைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை கவனியாமல் இருக்க முடியாது; இவை அனைத்தும் கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கின்றன.
2 ஆனால் உலகில் ஏற்பட்டுள்ள எல்லா மாற்றங்களுமே பயனளித்திருப்பதாக சொல்ல முடியாது. உதாரணத்திற்கு குற்றச்செயல், ஒழுக்க சீர்குலைவு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், விவாகரத்து, பணவீக்கம், தீவிரவாதம் ஆகியவை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் ஏற்பட்டிருக்கும் கொடிய விளைவுகளை பொருட்படுத்தாமல் இருக்கவே முடியாது. “இந்த உலகத்தின் காட்சி மாறுகிறது” என்று வெகு காலத்திற்கு முன்பே அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; அதை நீங்களும் பெரும்பாலும் ஒப்புக்கொள்வீர்கள்.—1 கொரிந்தியர் 7:31, NW.
3. “இந்த உலகத்தின் காட்சி மாறுகிறது” என்று பவுல் எழுதியபோது எதை அர்த்தப்படுத்தினார்?
3 பவுல் அவ்வாறு சொன்னபோது இந்த உலகத்தை ஒரு நாடக மேடைக்கு ஒப்பிட்டுப் பேசினார். கதாபாத்திரங்கள்—அரசியல், மத, சமூக புள்ளிகள்—மேடைக்கு வருகிறார்கள், தங்கள் பாகங்களை ஏற்று நடிக்கிறார்கள், பிறகு மேடையை விட்டுச் சென்றுவிடுகிறார்கள், பிற்பாடு மற்றவர்கள் மேடையில் தோன்றுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடந்துவந்திருக்கிறது. அன்றெல்லாம் அரச வம்சங்கள் பல பத்தாண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளாகக்கூட ஆட்சி செய்தன; மாற்றங்களும் ஆமை வேகத்தில்தான் நடந்தேறின. ஆனால் இன்று, அரசியல் தலைவர்மீது துப்பாக்கிக் குண்டு பாயும் அந்த சில விநாடிகளுக்குள் சரித்திரமே தலைகீழாகிவிடுகிறது! ஆம், இந்தக் கொந்தளிப்பான காலத்தில், நாளை என்ன நடக்கும் என்றே சொல்ல முடிவதில்லை.
4. (அ) உலக சம்பவங்கள் சம்பந்தமாக என்ன சமநிலையான கண்ணோட்டம் கிறிஸ்தவர்களுக்குத் தேவை? (ஆ) இப்போது என்ன இரண்டு நம்பத்தகுந்த அத்தாட்சிகளை நாம் ஆராயப் போகிறோம்?
4 உலகம் ஒரு நாடக மேடை என்றும், உலகத் தலைவர்கள் நாடக நடிகர்கள் என்றும் வைத்துக்கொண்டால், கிறிஸ்தவர்கள்தான் பார்வையாளர்கள்.a இருந்தாலும், ‘உலகத்தின் பாகமாக இல்லாத’ அவர்கள், நாடகத்தையே அல்லது நாடக நடிகர்களையே சதா உற்று கவனித்துக்கொண்டு இருப்பதில்லை. (யோவான் 17:16, NW) மாறாக, நாடகம் இறுதிக்கட்டத்தை—உச்சக்கட்ட அழிவுக்காட்சியை—எட்டுவதற்கான அறிகுறிகள் தெரிகிறதா என்பதையே ஆவலோடு பார்க்கிறார்கள்; ஏனென்றால் வெகு காலமாக மனிதர் எதிர்பார்த்து காத்திருக்கும் நீதியுள்ள புதிய உலகத்தை யெகோவா உருவாக்குவதற்கு முன்பு இவ்வுலக ஒழுங்குமுறை முடிவுக்கு வர வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.b நாம் முடிவு காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் விரைவில் புதிய உலகம் வரும் என்பதையும் காட்டும் இரண்டு அத்தாட்சிகளை நாம் இப்போது ஆராயலாம். அவை: (1) பைபிளின் காலவரிசை, (2) சீரழியும் உலக நிலைமைகள்.—மத்தேயு 24:21; 2 பேதுரு 3:13.
கடைசியில் ரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது!
5. “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” என்பது என்ன, அது நமக்கு ஏன் ஆர்வத்திற்குரியது?
5 காலவரிசை என்பது காலத்திற்கும் சம்பவங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயும் முறையாகும். ஒரு காலப்பகுதியில் உலகத் தலைவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் தலையீடு இல்லாமல் நடு மேடையில் இருப்பார்களென்று, அதாவது முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பார்களென்று இயேசு குறிப்பிட்டார். அந்தக் காலப்பகுதியை “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” என்று அழைத்தார். (லூக்கா 21:24, NW) அந்தக் ‘குறிக்கப்பட்ட காலங்களின்’ முடிவில் கடவுளுடைய பரலோக ராஜ்யம் ஆட்சிசெய்ய துவங்கும். அதன் உரிமையுள்ள அரசரான இயேசு முதலில் தமது “சத்துருக்களின் நடுவே” ஆளுவார். (சங்கீதம் 110:2) அதன் பிறகு தானியேல் 2:44-ன்படி அந்த ராஜ்யம் எல்லா மனித அரசாங்கங்களையும் “நொறுக்கி, நிர்மூலமாக்கி” என்றென்றும் நிலைத்திருக்கும்.
6. “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” எப்போது ஆரம்பமானது, எவ்வளவு காலம் நீடித்தது, எப்போது முடிவடைந்தது?
6 “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவடைந்து கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சி துவங்குவது எப்போது? இக்கேள்விக்கான விடை, ‘முடிவு காலமட்டும் முத்திரிக்கப்பட்டு’ வைக்கப்பட்டிருந்தது; அது பைபிள் காலவரிசையை உட்படுத்துகிறது. (தானியேல் 12:9) அந்தக் ‘காலம்’ நெருங்கியபோது, பணிவான பைபிள் மாணாக்கர்களின் ஒரு தொகுதிக்கு அவ்விடையை வெளிப்படுத்த யெகோவா நடவடிக்கைகள் எடுத்தார். பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிந்தபோது “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” ஆரம்பமானது என்பதையும் அந்தக் “காலங்கள்” 2,520 வருடங்கள் கொண்டவை என்பதையும் கடவுளுடைய ஆவியின் உதவியோடு அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே இந்த விவரங்களை வைத்து, “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” 1914-ல் முடிவடைந்தது என்பதை கணக்கிட்டார்கள். அதோடு, இவ்வுலகின் முடிவு காலம் அந்த வருடத்தில் ஆரம்பமானதையும் புரிந்துகொண்டார்கள். பைபிள் மாணாக்கராக 1914-ம் வருடம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை உங்களால் பைபிளிலிருந்து விளக்க முடியுமா?c
7. தானியேல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு காலங்கள் எப்போது ஆரம்பமானது, எவ்வளவு காலம் நீடித்தது, எப்போது முடிந்தது என்பதையெல்லாம் கணக்கிட எந்த வசனங்கள் நமக்கு உதவுகின்றன?
7 இது தொடர்பான ஒரு துப்பு தானியேல் புத்தகத்தில் மறைந்திருக்கிறது. ‘புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்’ ஆரம்பத்தில், பொ.ச.மு. 607-ல், எருசலேமை அழிக்க பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சாரை யெகோவா பயன்படுத்தினார்; இதனால், அடையாளப்பூர்வமான ஏழு காலங்களுக்கு தெய்வீக தலையீடு இல்லாமல் புறஜாதிகள் தொடர்ந்து ஆட்சிசெய்வார்கள் என அந்த ராஜாவின் மூலம் வெளிப்படுத்தினார். (எசேக்கியேல் 21:26, 27; தானியேல் 4:16, 23-25) அந்த ஏழு காலங்கள் உண்மையில் எவ்வளவு காலம் நீடித்தன? வெளிப்படுத்துதல் 11:2, 3 மற்றும் 12:6, 14 வசனங்களின்படி, மூன்றரை காலங்கள் என்பது 1,260 நாட்கள் கொண்டவை. ஆகவே ஏழு காலங்கள் என்பது அதன் இரு மடங்காக, அதாவது 2,520 நாட்களாக இருக்க வேண்டும். அது உண்மையில் அவ்வளவு நாட்கள்தானா? இல்லை, தானியேல் காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசியான எசேக்கியேலிடம் அடையாளப்பூர்வ காலத்தைக் கணக்கிடுவதற்கான முறையை யெகோவா குறிப்பிட்டார்; “ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்” என சொன்னார். (எசேக்கியேல் 4:6, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே ஏழு காலங்கள் உண்மையில் 2,520 ஆண்டுகளாக இருக்கும். பொ.ச.மு. 607-ல் துவங்கி, 2,520 ஆண்டுகளை கணக்கிட்டால், 1914-க்கு வருகிறோம்; அவ்வருடத்தில்தான் குறிக்கப்பட்ட காலங்கள் முடிவுக்கு வந்தன என நாம் தீர்மானிக்கலாம்.
‘முடிவு காலம்’ ஊர்ஜிதம்
8. உலக நிலைமைகள் 1914 முதற்கொண்டு மேன்மேலும் மோசமாகி வருவதற்கு என்ன அத்தாட்சிகளை சுட்டிக்காட்டுவீர்கள்?
8 பைபிள் காலவரிசையின் அடிப்படையிலான மேற்கண்ட கணக்கு சரியே என்பதை 1914 முதல் நடந்திருக்கும் உலக சம்பவங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் போன்றவை “உலகத்தின் முடிவுக்கு” அடையாளம் என இயேசுவே குறிப்பிட்டார். (மத்தேயு 24:3-8; வெளிப்படுத்துதல் 6:2-8) 1914 முதற்கொண்டு இவையெல்லாம் நடந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, முடிவு காலத்தில் மக்கள் ஒருவரையொருவர் கருதும் விதத்திலும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்கும் என அப்போஸ்தலன் பவுல் கூடுதலாக சொன்னார். நாம் அனைவரும் இன்று கண்கூடாக பார்க்கும் அதே மாற்றங்களைத்தான் அவர் துல்லியமாக விவரித்தார்.—2 தீமோத்தேயு 3:1-5.
9. 1914 முதற்கொண்டு காணப்படும் உலக நிலைமைகள் பற்றி என்ன சொல்லப்படுகிறது?
9 “இந்த உலகத்தின் காட்சி” 1914 முதற்கொண்டு உண்மையிலேயே பெருமளவு மாறிவிட்டதா? 1914-ம் ஆண்டின் சந்ததி (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் பேராசிரியர் ராபர்ட் வோல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “1914-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு உலகம் முடிந்து இன்னொரு உலகம் தோன்றியது என்பதை அந்தப் போரின் சமயத்தில் வாழ்ந்தவர்களால் மறுக்கவே முடியவில்லை.” இதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், உலக சுகாதார அமைப்பின் மனநல இயக்குநரான டாக்டர் ஷார்ஷ ஏ. கோஸ்டா இ சில்வா இவ்வாறு எழுதினார்: “மாற்றங்கள் அதிவிரைவாக நடக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்; இதனால் மனித சரித்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கவலையும் உடல்/மன அழுத்தமும் ஏற்படுகிறது.” உங்களுடைய தனிப்பட்ட அனுபவமும் இதுதானா?
10. உலக நிலைமைகள் 1914 முதல் மேன்மேலும் சீர்கெட்டு வருவதற்கான காரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
10 உலக நிலைமைகள் மேன்மேலும் சீர்கெட்டு வருவதற்குக் காரணமான விஷமி யார்? வெளிப்படுத்துதல் 12:7-9 அவனது முகமூடியை கிழிக்கிறது. “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [இயேசு கிறிஸ்து] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே [பிசாசாகிய சாத்தான்] யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற . . . பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது” என அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, பிசாசாகிய சாத்தானே கேடு விளைவிக்கும் அந்த விஷமி; 1914-ல் அவன் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். அதுமுதல், “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்று சொல்லப்பட்ட விதமாகவே நடந்திருக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:10, 12.
இறுதிக்காட்சி அரங்கேறப்போகும் விதம்
11. (அ) “உலகமனைத்தையும்” மோசம்போக்குவதற்கு சாத்தான் என்னென்ன வழிகளை பயன்படுத்துகிறான்? (ஆ) சாத்தானின் எந்த விசேஷ முயற்சியைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்தார்?
11 சாத்தான் தனக்கு முடிவு நெருங்கிவிட்டதை அறிந்தபடியால் 1914 முதல் “உலகமனைத்தையும்” மோசம்போக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறான். அவன் ஏமாற்றுவதில் மகா கில்லாடி. உலகத் தலைவர்களையும் புதுப் பாணிகளை புகுத்துபவர்களையும் மேடையில் ஏற்றிவிடுகிறான்; அவனோ எப்போதும் திரை மறைவில் இருந்துகொண்டு செயல்படுகிறான். (2 தீமோத்தேயு 3:13; 1 யோவான் 5:19) தன்னுடைய ஆட்சிமுறையில் உண்மையான சமாதானம் நிலவுமென மக்களை நம்ப வைப்பதே அவனது குறிக்கோள்களில் ஒன்று. பொதுப்படையில் அவனது பிரச்சாரம் வெற்றி கண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனென்றால் நிலைமைகள் சீர்கெட்டுக் கொண்டே போவதற்கு ஏராளமான அத்தாட்சி இருந்தாலும் நல்ல மாற்றம் ஏற்படுமென மக்கள் இன்னும் நம்பிக்கையோடுதான் காத்திருக்கிறார்கள். இந்த உலக ஒழுங்குமுறை அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு சாத்தானின் குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சாரம் நடைபெறும் என அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்தார். “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்” என அவர் எழுதினார்.—1 தெசலோனிக்கேயர் 5:3; வெளிப்படுத்துதல் 16:13.
12. சமீப வருடங்களில் சமாதானத்திற்காக என்னென்ன முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன?
12 சமீப வருடங்களில், பல்வேறு மனித திட்டங்களை விவரிக்கையில் “சமாதானமும் சவுக்கியமும்” என்ற வார்த்தைகளை அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார்கள். 1986-ம் ஆண்டை சர்வதேச சமாதான ஆண்டு என்றும்கூட அழைத்தார்கள்; ஆனால் அது சமாதான ஆண்டாக இருக்கவில்லை. உலகத் தலைவர்கள் எடுத்த அப்படிப்பட்ட முயற்சிகள்தான் 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் முழு நிறைவேற்றமா? அல்லது உலகத்தின் கவனத்தையே ஈர்க்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க விதத்தில் இனி நடக்கப்போகும் ஒரு சம்பவத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டாரா?
13. “சமாதானமும் சவுக்கியமும்” பற்றிய அறிவிப்பை பவுல் முன்னுரைத்தபோது, அதைப் பின்தொடரும் அழிவை எதோடு ஒப்பிட்டார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
13 பைபிள் தீர்க்கதரிசனங்களை பெரும்பாலும் அவற்றின் நிறைவேற்றத்திற்குப் பிறகே அல்லது அவை நிறைவேறிவரும் சமயத்திலேயே முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என்பதால், அதற்கான பதிலை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்தாலும் “சமாதானமும் சவுக்கியமும்” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து திடீரென அழிவு வரும் என்று பவுல் சொன்னார்; அதை, கர்ப்பவதிக்கு ஏற்படும் பிரசவ வேதனையோடு அவர் ஒப்பிட்டுப் பேசியது ஆர்வத்திற்குரிய விஷயம். சுமார் ஒன்பது மாத காலப்பகுதியில், கர்ப்பவதி தன் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை நாளுக்குநாள் அதிகமதிகமாக உணருகிறாள். குழந்தையின் இதயத்துடிப்பை அவளால் கேட்க முடிகிறது அல்லது குழந்தையின் அசைவுகளை அவளால் உணர முடிகிறது. குழந்தை அவளை உதைக்கவும் செய்யலாம். அறிகுறிகள் நாளுக்குநாள் அதிக தெளிவாகின்றன. கடைசியில் ஒருநாள் அவளுக்கு கடும் வலி ஏற்படுகிறது; எதிர்பார்க்கப்பட்ட அந்த நாள் வந்துவிட்டதை, அதாவது குழந்தை பிறக்கப்போகும் சமயம் வந்துவிட்டதை அது சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறே, முன்னுரைக்கப்பட்டபடி “சமாதானமும் சவுக்கியமும்” என்ற அறிவிப்பு எவ்விதத்தில் நிறைவேறினாலும்சரி, வேதனைமிக்க திடீர் சம்பவத்திற்கு அது வழிவகுக்கும்; என்றாலும் இறுதியில் அது சந்தோஷத்தில் முடிவடையும், அதாவது துன்மார்க்கம் அழிக்கப்பட்டு புதிய உலகம் பிறக்கும்.
14. எதிர்கால சம்பவங்கள் பொதுவாக எந்த வரிசையில் நடக்கும், இறுதியில் என்ன சம்பவிக்கும்?
14 வரப்போகும் அழிவு, பார்வையாளர்களான விசுவாசமிக்க கிறிஸ்தவர்களுக்கு பயபக்தியூட்டுவதாக இருக்கும். முதலாவதாக, மகா பாபிலோனின் (சாத்தானுடைய அமைப்பின் மத பாகம்) ஆதரவாளர்களை பூமியின் ராஜாக்கள் (அரசியல் பாகம்), தாக்கி அழித்துவிடுவார்கள். (வெளிப்படுத்துதல் 17:1, 15-18) இவ்வாறு, எதிர்பாராத திருப்புமுனையாக, சாத்தானுடைய ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாக பிளவுபட்டு, ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளும். சாத்தானால் அதைத் தடுக்க முடியாமல் போகும். (மத்தேயு 12:25, 26) யெகோவா ‘தமது யோசனையை நிறைவேற்றும்படி,’ அதாவது தம்முடைய மத எதிரிகளை அழிக்கும்படி பூமியின் ராஜாக்களின் இருதயங்களை ஏவுவார். பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு, இயேசுவின் தலைமையில் அவரது பரலோக சேனை சாத்தானின் அமைப்பில் மீந்திருக்கும் பாகங்களை—வர்த்தக மற்றும் அரசியல் பாகங்களை—முழுமையாக வீழ்த்தும். இறுதியில் சாத்தான் செயல்பட முடியாதபடி கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவான். அப்போது திரை விழும், நீண்டகால நாடகம் முடிவடையும்.—வெளிப்படுத்துதல் 16:14-16; 19:11-21; 20:1-3.
15, 16. ‘இனிவரும் காலம் குறுகினது’ என்ற நினைப்பூட்டுதல் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க வேண்டும்?
15 இவை அனைத்தும் எப்போது நடக்கும்? அந்த நாளோ நாழிகையோ நம் யாருக்கும் தெரியாது. (மத்தேயு 24:36) இருந்தாலும், ‘இனிவரும் காலம் குறுகினது’ என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (1 கொரிந்தியர் 7:29) ஆகவே மீதமுள்ள காலத்தை நாம் ஞானமாக பயன்படுத்துவது அவசியம். எவ்வாறு அதை ஞானமாக பயன்படுத்தலாம்? முக்கியமல்லாத காரியங்களுக்கு செலவிடும் நேரத்தை அதிமுக்கியமான காரியங்களுக்கு செலவிடுவதற்காக, அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறபடி ‘அனுகூலமான நேரத்தை வாங்க’ வேண்டும்; இவ்வாறு ஒவ்வொரு நாளையும் பிரயோஜனமாக பயன்படுத்த வேண்டும். ஏன்? ஏனெனில் ‘நாட்கள் பொல்லாதவையாக இருக்கின்றன.’ மேலும், நமக்கான ‘யெகோவாவுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்கையில்,’ மீதமுள்ள கொஞ்ச காலத்தை, ஆம், பொன்னான காலத்தை நாம் வீணாக்க மாட்டோம்.—எபேசியர் 5:15-17, NW; 1 பேதுரு 4:1-4.
16 இந்த முழு உலகமும் முடிவுக்கு வரப்போவதை அறிந்திருப்பது நம்மை தனிப்பட்ட விதமாக எப்படி பாதிக்க வேண்டும்? நம் நன்மைக்காக அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு எழுதினார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” (2 பேதுரு 3:11) ஆம், நாம் இப்படிப்பட்டவர்களாக அல்லவா இருக்க வேண்டும்! பேதுருவின் ஞானமான அறிவுரைக்கு இசைவாக, (1) நம் நடத்தை பரிசுத்தமுள்ளதாக இருப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், (2) நாம் யெகோவாவுக்கு செய்யும் வைராக்கியமான சேவை, அவர்மீது நமக்கிருக்கும் ஆழ்ந்த அன்பை எப்போதும் வெளிக்காட்டும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
17. சாத்தானுடைய என்ன கண்ணிகளுக்கு எதிராக விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
17 இந்த உலகத்தின் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு அவற்றிடம் பற்றை வளர்த்துக்கொள்ளாதிருக்க, கடவுள் மீதுள்ள அன்பு நமக்கு உதவும். இந்த உலகிற்கு நேரிடப்போகும் கதியை கருத்தில் கொள்கையில், இன்ப நாட்டங்களுக்கே முதலிடம் கொடுக்கும் உலக வாழ்க்கையின் பகட்டுகளால் வசீகரிக்கப்படுவது நமக்கு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. நாம் வாழ்வதும் வேலை செய்வதும் இந்த உலகில்தான் என்றாலும், உலகை முழுமையாக பயன்படுத்தக்கூடாது என்ற ஞானமான அறிவுரைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:31, NW) சொல்லப்போனால், இந்த உலகின் பிரச்சாரங்களைக் கேட்டு ஏமாந்துபோகாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்றுள்ள பிரச்சினைகளை இந்த உலகத்தால் தீர்க்கவே முடியாது, என்றென்றைக்கும் தன்னைத்தானே காத்துக்கொள்ளவும் முடியாது. இதை நாம் ஏன் உறுதியாக சொல்லலாம்? ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
தலைசிறந்த காட்சி இனிதான் வரவிருக்கிறது!
18, 19. புதிய உலகில் நீங்கள் என்ன மாற்றங்களை பார்க்க காத்திருக்கிறீர்கள், அதற்காக காத்திருப்பது ஏன் வீண்போகாது?
18 சாத்தானையும் அவனது ஆதரவாளர்களையும் யெகோவா விரைவில் ஒழித்துக்கட்டப் போகிறார். அதன் பிறகு இந்த உலக அழிவிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள், அடுத்த காட்சிக்கு தயார்படுத்தும் “காட்சி” மாற்றங்களை கடவுளுடைய ஆசீர்வாதத்தோடு செய்ய ஆரம்பிப்பார்கள்; அந்த மாற்றங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். அலங்கோலமான போர்க் காட்சிகள் இனியும் இருக்காது; கடவுள் ‘பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுவார்.’ (சங்கீதம் 46:9) உணவு பற்றாக்குறைக்குப் பதிலாக, ‘பூமியில் ஏராளமான தானியம் இருக்கும்; . . . அவை நிரம்பி வழியும்.’ (சங்கீதம் 72:16, NW) சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், பால்வினை நோய்கள், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள், விவாகரத்து நீதிமன்றங்கள், பொருளாதார நொடிப்பு, தீவிரவாதம் என எதுவுமே இருக்காது.—சங்கீதம் 37:29; ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3-5.
19 ஞாபகார்த்த கல்லறைகளெல்லாம் காலியாக்கப்படும்; உயிர்த்தெழுப்பப்பட்டு வரும் கோடிக்கணக்கானவர்கள்—இன்னுமதிக கதாபாத்திரங்கள்—காட்சியில் தோன்றுவார்கள். ஒரு சந்ததி இன்னொரு சந்ததியோடு மறுபடியும் ஒன்றுசேரும்போதும், வெகுகாலம் பிரிந்திருந்த அன்பானவர்கள் ஒருவரையொருவர் பாசத்தோடு கனிவாக கட்டித்தழுவும்போதும் எப்பேர்ப்பட்ட சந்தோஷம் நிலவும்! இறுதியில், பூமியில் வாழும் அனைவருமே யெகோவாவை வணங்குபவர்களாக இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 5:13) மாற்றங்கள் முழுமையாக செய்யப்பட்ட பிறகு, திரை உயரும். அப்போது பூமி முழுவதும் பரதீஸாக காட்சியளிக்கும். அக்காட்சியைக் காணும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள்? ‘இதற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன், காத்திருந்தது வீண்போகவில்லை!’ என உணர்ச்சிபொங்க நீங்கள் சொல்லப்போவது உறுதி.
[அடிக்குறிப்புகள்]
a அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், “உலகத்திற்கும் தேவதூதர்களுக்கும் மனிதருக்கும் முன்பாக நாடக மேடையில் இருப்பதைப் போல்” உள்ளார்கள் என பவுல் வேறொரு சூழமைவில் குறிப்பிட்டார்.—1 கொரிந்தியர் 4:9, NW.
b உதாரணத்திற்கு, தானியேல் 11:40, 44, 45 ஆகிய வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் “வடதிசை ராஜா”வின் அடையாளம் சம்பந்தமாக தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் 280-1 பக்கங்களைக் காண்க.
c நாடுகடத்தப்பட்ட யூதர்கள் பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்கு திரும்பினார்கள்; அதற்கு 70 வருடங்களுக்கு முன்பு எருசலேம் அழிக்கப்பட்டதாக பைபிளே சுட்டிக்காட்டுகிறது. (எரேமியா 25:11, 12; தானியேல் 9:1-3) “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” சம்பந்தமான நுட்ப விவரங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 95-7-ஐக் காண்க.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• “இந்த உலகத்தின் காட்சி மாறுகிறது” என்ற அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் நம் காலத்தில் எவ்வாறு உண்மையாகியிருக்கின்றன?
• ‘புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்’ முடிவை பைபிள் காலவரிசை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?
• ‘முடிவு காலம்’ 1914-ல் ஆரம்பமானதை, மாறிவரும் உலக நிலைமைகள் எவ்வாறு உறுதிப்படுத்துகின்றன?
• ‘இனிவரும் காலம் குறுகினது’ என்ற உண்மை நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
[பக்கம் 20-ன் படம்]
கடைசியில் ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது!