பைபிளின் கருத்து
திருமணத்தில் மத ஒற்றுமை—ஏன் அவசியம்?
சூரியன் உறங்கச் செல்லும் இனிய மாலைப்பொழுதில், ஒரு குடும்பம் தங்கள் சாப்பாட்டிற்காக கூடுகிறது. அங்கே நிசப்தம் நிலவ, தந்தை ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார், ஆனால் அந்த ஜெபத்தை சிறிதும் காதில் வாங்காத அம்மா, மனதுக்குள் வேறொரு தெய்வத்திடம் பிரார்த்தனை செய்கிறார். மற்றொரு குடும்பத்தில் மனைவி சர்ச்சுக்கு சென்று வழிபடுகிறார், ஆனால் அவர் கணவனோ யூத ஜெப ஆலயத்துக்கு செல்கிறார். பெற்றோரில் ஒருவர் தன் பிள்ளைக்கு கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி சொல்லிக்கொடுக்க, மற்றவர் ஹனுக்கா எனும் யூத பண்டிகையைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார், இப்படியும் குடும்பங்கள் இருக்கின்றன.
சமீபத்திய கணக்கெடுப்பின் பிரகாரம், தங்கள் மதத்திற்கு வெளியே அநேகர் திருமணம் செய்துகொள்வதால் இப்படிப்பட்ட காட்சிகளை பெரும்பாலான குடும்பங்களில் பார்க்கிறோம். இப்போது ஐக்கிய மாகாணத்திலுள்ள கத்தோலிக்கரில் 21 சதவீதத்தினர் வேறுமதத்தவரை திருமணம் செய்கின்றனர். மார்மன் மதத்தவரில் இதன் எண்ணிக்கை 30 சதவீதம், முஸ்லீம்களில் 40 சதவீதம், யூதர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இவ்வாறு செய்கின்றனர் என்று ஒரு கணக்கறிக்கை சொல்கிறது. மத வேறுபாடுகள் அநேக நூற்றாண்டுகளாக இருந்து வருவதால் மதக்கலவரங்களை முறியடிக்க கலப்புத்திருமணம்தான் ஒரே வழி என்று சிலர் நினைக்கின்றனர். “எந்த விதமான கலப்புத்திருமணமாக இருந்தாலும் அது பாராட்டத்தக்கதே” என்று ஒரு செய்தித்தாள் எழுத்தாளர் எழுதினார். பைபிளின் கருத்தும் இதுதானா?
பைபிள், எந்த விதமான மத அல்லது இன வேறுபாடுகளையும் ஆதரிப்பதில்லை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை இனப்பிரிவினைகளை அங்கீகரிப்பதில்லை. அப்போஸ்தலன் பேதுருவும் இதைப்பற்றி தெளிவாகவே இவ்வாறு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) அதே சமயத்தில், யெகோவாவின் உண்மை வணக்கத்தார், “கர்த்தருக்குள் மட்டுமே” திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் பைபிள் போதிக்கிறது. (1 கொரிந்தியர் 7:39) ஏன்?
திருமணத்தின் நோக்கம்
திருமணம் ஒரு நெருக்கமான பாசப்பிணைப்பாக இருக்க வேண்டும் என்று யெகோவா நோக்கம் கொண்டிருந்தார். (ஆதியாகமம் 2:24) கடவுள் திருமண பந்தத்தை ஏற்படுத்தியபோது வெறும் தோழமை எனும் உறவைவிட நெருக்கமான உறவையே மனதில் கொண்டிருந்தார். யெகோவா நம் முதல் பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை வளர்க்கவும் இந்த பூகோள வீட்டை பராமரிக்கவும் ஒரு நியமிப்பு கொடுத்தார். அப்போது, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற அந்த இளம் தம்பதிகள் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 1:28) இவ்வாறு கடவுளை சேவிப்பதில் ஒன்றிணைந்து வேலை செய்யும்போது அந்த ஆணும் பெண்ணும் வெறும் தோழராக மட்டுமல்ல, நெருங்கிய நீண்டகால பார்ட்னராகவும் இருப்பர்.—ஒப்பிடுக மல்கியா 2:14.
“அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” என்று இயேசு சொன்னபோது, இப்படிப்பட்ட நெருக்கமான உறவையே மறைமுகமாக குறிப்பிட்டார். (மத்தேயு 19:6) ஒரே சுமையை இரு விலங்குகள் இழுப்பதற்கு பயன்படுத்தப்படும் நுகத்தோடு, இப்படிப்பட்ட திருமண பந்தத்தை ஒப்பிட்டு ஓர் உருவக அணியை இயேசு பயன்படுத்தினார். ஆனால், ஒரே நுகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இரு விலங்குகள் வெவ்வேறு திசைகளில் அந்த சுமையை இழுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்! சற்று கற்பனை செய்து பாருங்கள். அதேபோல, உண்மையான விசுவாசத்தில் இல்லாதவர்களை திருமணம் செய்பவர்கள் அவர்களுடைய துணை பைபிள் பிரமாணங்களை எதிர்க்கும் போது, அந்த பிரமாணங்களின்படி வாழ கஷ்டத்தின் உச்சிக்கே போகின்றனர். பொருத்தமாகவே பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக”.—2 கொரிந்தியர் 6:14.
மேம்பட்ட திருமண வாழ்க்கை
அது மட்டுமின்றி, உண்மை வணக்கத்தில் உள்ள ஐக்கியம் திருமண பந்தத்தை அதிகளவில் பலப்படுத்தும். “ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான அம்சங்களில் ஒன்று, இருவரும் வணக்கத்தில் ஒன்றாய் இருப்பதே” என்று ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டார். பிரசங்கி 4:9, 10 இவ்வாறு சொல்கிறது: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்”.
வணக்கத்தை தங்களுடைய வாழ்க்கையின் மையமாக கொண்ட கிறிஸ்தவ தம்பதிகள், சொல்லர்த்தமாக மட்டுமல்ல ஆவிக்குரிய ரீதியிலும் ஐக்கியமாய் இருப்பர். அவர்கள் ஒன்றாக ஜெபம் செய்யும் போதும், ஒன்றாக கடவுளுடைய வார்த்தையை படிக்கும் போதும், ஒன்றாக உடன் கிறிஸ்தவர்களுடன் கூடும் போதும், ஒன்றாக மற்றவர்களிடம் பிரசங்கிக்கும் போதும் திருமண பந்தத்தில் நெருக்கத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒரு ஆவிக்குரிய கட்டை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு சொன்னார்: “உண்மை வணக்கம் என்பது ஒரு வாழ்க்கை முறை. நான் யாருக்காக வாழ்கிறேன் மற்றும் எதற்காக வாழ்கிறேன் என்ற நம்பிக்கையை கொண்டில்லாத ஒருவரை திருமணத் துணையாக தேர்ந்தெடுப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.”—ஒப்பிடுக மாற்கு 3:35.
“கர்த்தருக்குள் திருமணம்” செய்பவர்கள் தங்களுடைய துணையின் நடத்தை, இயேசுவினுடைய சிறந்த ஒழுக்கத்தராதரத்தை பிரதிபலிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது இயல்பே. இயேசு எவ்வாறு தன் சபையை அன்பாய் நடத்தினாரோ அதுபோல கிறிஸ்தவ கணவன்மார்களும் தங்கள் மனைவிகளை அன்பாய் நடத்த வேண்டும். கிறிஸ்தவ மனைவிகளும் தங்கள் கணவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:25, 29, 33) கிறிஸ்தவர்கள் தங்கள் துணையை பிரியப்படுத்துவதற்காக மட்டும் இவ்வாறு செய்வதில்லை. ஆனால், திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் நடத்தும் விதத்தைக்குறித்து கணக்கு கேட்கும் யெகோவா தேவனை பிரியப்படுத்தவும் அவ்வாறு செய்கிறார்கள்.—மல்கியா 2:13, 14; 1 பேதுரு 3:1-7.
கிறிஸ்தவ தம்பதிகள் தங்கள் இருவருக்கும் பொருந்தக்கூடிய சில நம்பிக்கைகளை கடைபிடிப்பதும்கூட அவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை சமாதானமாய் தீர்த்துக்கொள்ள உதவும். ஆகவேதான் கிறிஸ்தவர்கள் “தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கு”வதில் தங்கள் கவனத்தை ஊன்றவைக்கும்படி பைபிள் அறிவுறுத்துகிறது (பிலிப்பியர் 2:4). ஒரே விசுவாசத்தில் இணைக்கப்பட்டிருக்கும் தம்பதிகளுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் எழும்பும்போது, தங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு முதலிடம் கொடுக்காமல் பொதுவாயுள்ள ஓர் அதிகாரத்துவமாகிய பைபிளையே சார்ந்திருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:16, 17) இந்த விதத்தில் “ஏகமன”தாய் இருக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கொடுக்கும் அறிவுரையை பின்பற்றுகிறார்கள்.—1 கொரிந்தியர் 1:10; 2 கொரிந்தியர் 13:11; பிலிப்பியர் 4:2.
கவர்ந்திழுக்கப்படுவதும் தனிப்பட்ட குணங்களும்
உண்மையில், தம்பதிகளுக்கிடையே உள்ள உறவு வெறும் ஒரே மதநம்பிக்கையை கொண்டிருப்பது மட்டுமல்ல பரஸ்பர கவர்ச்சியுணர்வும் ஒரு அம்சம். (உன்னதப்பாட்டு 3:5; 4:7, 9; 5:10) ஆனால் ஒரு திருமண உறவு நிலைக்க, ஒரே மாதிரியான விருப்புவெறுப்புகள் மிக முக்கியம். எனக்கு பொருத்தமான ஜோடி நீதானா? என்ற புத்தகத்தின் பிரகாரம் “ஒரே மாதிரியான விருப்புவெறுப்புகளையுடைய தம்பதிகள் சந்தோஷமான, ஒற்றுமையான மற்றும் நிரந்தரமான உறவைக்கொண்ட ஒரு குடும்பத்தை கட்ட அநேக வாய்ப்புகள் உள்ளன.”
விசனகரமாக, கண்களால் சந்தித்து காதல் மயக்கத்தில் உள்ளவர்கள், திருமணம் முடியும் வரை முக்கியமான பிரச்சினைகளை பற்றி கலந்து பேச மாட்டார்கள். இதை ஒப்பிட, ஒரு அழகான வீட்டை பார்க்கிறீர்கள், அதன் அழகில் மயங்கிய நீங்கள் அந்த வீட்டையும் வாங்குகிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த வீட்டிற்கு குடிபோன பிறகுதான் அதன் அஸ்திவாரம் சரியில்லை என்பது உங்களுக்கு தெரியவருகிறது. உங்கள் ஆசை நிராசையாகிறது. இப்படிப்பட்ட நிலையில்லா அஸ்திவாரத்தின்மீதுள்ள அழகிய மனங்கவரும் அம்சங்களை கொண்ட வீடு என்னத்திற்கு, அதனால் என்ன பிரயோஜனம்? அதேபோல, ஒருவர் வேறு மதநம்பிக்கையுடைய ஒருவருடன் காதல் வயப்படுகிறார் அல்லது ஈர்க்கப்படுகிறார், இவர்தான் தனக்கு சரியான ஜோடி என்றும் கற்பனையில் மிதக்கிறார்—ஆனால், திருமணத்திற்கு பிறகுதான் அந்த உறவில் பெரியளவு குறைகள் இருப்பது புரிகிறது.
வேறு மதங்களை பின்பற்றுகிறவர்களின் திருமணங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் சில பிரச்சினைகளை சற்று சிந்தித்து பாருங்கள்: தங்கள் வணக்கத்திற்கு எங்கே போவார்கள்? அவர்களுடைய பிள்ளைகள் எந்த மதத்தை கற்றுக்கொள்வார்கள்? எந்த மதத்திற்கு அந்த குடும்பம் பொருளாதார உதவியை கொடுக்கும்? ஒரு துணை அனுசரிக்கும் மத பழக்க வழக்கங்களையும் பண்டிகை நாட்களையும், மற்றவர் பொய் வணக்கம் என்று கருதலாம்; இருந்தாலும் அந்த துணையை அதில் கலந்து கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்துவாரா? (ஏசாயா 52:11) எல்லா திருமணத்திலும் ஒவ்வொரு துணையும் பொருத்தமான சில மாற்றங்களை செய்வது அவசியமே; இருப்பினும், பைபிள் நியமங்களை விட்டுக்கொடுப்பது—அது திருமணத்தை பாதுகாப்பதற்காக இருந்தாலும்சரி—கடவுளால் ஏற்றுக்கொள்ள முடியாதது.—ஒப்பிடுக உபாகமம் 7:3, 4; நெகேமியா 13:26, 27.
வெவ்வேறு மதத்தை சார்ந்த தம்பதிகள் தங்கள் குடும்ப சமாதானத்தை காத்துக்கொள்ள, தனித்தனியே தங்களுடைய மதநம்பிக்கையை பின்பற்றுகிறார்கள். வருத்தகரமாக, இப்படி தனித்தனியே வணங்குவதால் திருமணத்தில் ஒரு ஆவிக்குரிய வெறுமை ஏற்பட்டுவிடுகிறது. தன்னுடைய வணக்கத்தை ஏற்காத கணவனைக்கொண்ட ஒரு கிறிஸ்தவ மனைவி இவ்வாறு நொந்துகொள்கிறார்: “எங்களுக்கு திருமணமாகி 40 வருடங்கள் ஆகியும், என் கணவர் என்னை இன்னும் நன்கு புரிந்து கொள்ளவேயில்லை.” இதற்கு நேர்மாறாக, “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குபவர்களின் திருமணம் கடவுளையே மையமாக கொண்டிருக்கும். கவிதை நயத்துடன் பைபிள் சொல்கிற விதமாக, “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.”—யோவான் 4:23, 24; பிரசங்கி 4:12.
பிள்ளைகளைப் பற்றி என்ன?
வித்தியாசமான மதத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள யோசித்துக் கொண்டிருப்பவர், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரு மதநம்பிக்கைகளையும் சொல்லிக்கொடுப்போம், அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்று ஒருவேளை நினைக்கலாம். பிள்ளைகளுக்கு தங்கள் மதநம்பிக்கைகளை பற்றி சொல்லிக்கொடுக்கவும், கடைசியில் பிள்ளைகளே ஒரு மதத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கவும் இரு பெற்றோருக்கு சட்ட ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுயாதீனம் இருப்பது உண்மைதான்.a
பிள்ளைகள் தங்கள் தாய் தந்தை இருவருக்கும் “கர்த்தருக்குள்” கீழ்ப்படியும்படி பைபிள் அறிவுறுத்துகிறது. (எபேசியர் 6:1) நீதிமொழிகள் 6:20 இவ்வாறு சொல்கிறது: “என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” பிள்ளைகளுக்கு வித்தியாசப்பட்ட கோட்பாடுகளை போதிப்பதற்கு மாறாக, ஒரே மத நம்பிக்கையை கொண்ட இரு பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள், பைபிள் சொல்கிற விதமாக ஐக்கியமாய் “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” என்ற நம்பிக்கையில் இருப்பார்கள்.—எபேசியர் 4:5; உபாகமம் 11:19.
“கர்த்தருக்குள்” என்பதன் உண்மை?
ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புகள் தம்பதிகளுக்குள் இருப்பதே வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு திறவுகோல். அப்படியானால் கிறிஸ்தவர் என்று உரிமைபாராட்டும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்வது ஞானமான காரியமா? பைபிள் சொல்லும் பதிலை சற்று கவனியுங்களேன்: “அவருக்குள் (இயேசு) நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.” (1 யோவான் 2:6) ஆக, திருமணத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவர், இயேசுவை பின்பற்ற உண்மையாய் உழைக்கும் ஒரு உடன் கிறிஸ்தவரையே தனக்கு துணையாக தேர்ந்தெடுப்பார். இந்த தகுதிகளையுடைய துணை தன்னுடைய வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதலும் பெற்றிருப்பார். அவர், இயேசுவின் அன்பான ஆள்த்தன்மையையும், கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பதில் அவர் கொண்டிருந்த வைராக்கியத்தையும் வாழ்க்கையில் பின்பற்றுவார். இயேசுவின் விஷயத்தில் உண்மையாய் இருந்தது போல, அவருடைய வாழ்க்கையும் கடவுளுடைய சித்தத்தை சுற்றியே அமைந்திருக்கும்.—மத்தேயு 6:33; 16:24; லூக்கா 8:1; யோவான் 18:37.
திருமணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது. கடவுளுடைய வணக்கத்தாராலாகிய இந்த குடும்பத்தில் தங்களுக்கு ஏற்ற துணைக்காக காத்துக்கொண்டிருந்த போதிலும், கடவுளுடைய சித்தத்தை தங்களுடைய வாழ்க்கையின் முதலிடத்தில் வைப்பதன் மூலம் ஒரு சிறந்த வாழ்க்கை முறையை கொண்டிருப்பர். இப்படிப்பட்ட வாழ்க்கைமுறை கடைசியில் ஒரு சந்தோஷமான மற்றும் திருப்திகரமான திருமணத்திற்கு வழிநடத்தும்.—பிரசங்கி 7:8; ஏசாயா 48:17, 18.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! மார்ச் 8, 1997, பக்கம் 26-7-ல் உள்ள “பைபிளின் கருத்து: பிள்ளைகள் தாங்களாகவே மதத்தைத் தெரிவு செய்ய வேண்டுமா?” என்ற கட்டுரையை காண்க. மேலும், 1995-ல் வாட்ச் டவர் சொஷைட்டி ஃஆப் இண்டியாவால் வெளியிடப்பட்ட யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டின் 24-5 பக்கங்களை காண்க.
[பக்கம் 20-ன் பெட்டி]
மதரீதியில் பிளவுபட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவி
இன்று திருமணமான தம்பதிகள் மதரீதியில் பிரிந்திருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. சிலர் திருமணம் செய்யும்போதே வேறுமதத்தவரை தன் துணையாக தேர்ந்தெடுத்திருப்பர். அநேக தம்பதிகள் ஒரே மத நம்பிக்கையில் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்திருக்கலாம், ஆனால் பின்பு ஒருவர் வேறொரு வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது அந்த குடும்பம் மதரீதியில் பிளவுபடுகிறது. ஒரு குடும்பம் மதரீதியில் பிளவுபடுவதற்கு மற்ற சூழ்நிலைகளும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், காரணம் என்னவாக இருந்தாலும், மதவேறுபாட்டினால் திருமண வாக்குறுதி மீறப்படவோ அல்லது மதிப்புகுறைவாக கருதப்படவோ கூடாது. திருமணத்துணைகள் வணக்கத்தில் வித்தியாசப்பட்டிருந்த போதிலும், திருமணத்தின் புனிதத்தன்மையையும், நிரந்தரத்தன்மையையும் பைபிள் உயர்வாய் கருதுகிறது. (1 பேதுரு 3:1, 2) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 7:12) திருமண தம்பதிகள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்களை பின்பற்றினார்களேயானால் அன்பும் மரியாதையும் பூத்துக்குலுங்கும் இந்த குடும்பம் எனும் சோலைவனத்தில் சமாதானத்தை என்றும் அனுபவித்து மகிழ்வர்.—எபேசியர் 5:28-33; கொலோசெயர் 3:12-14; தீத்து 2:4, 5; 1 பேதுரு 3:7-9.