யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
கொரிந்து சபையினரின் ஆன்மீக நலனில் அப்போஸ்தலன் பவுல் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். அவர்களுக்கிடையே சண்டைசச்சரவுகள் இருப்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருக்கிறார். சபையில் ஒழுக்கக்கேடான காரியங்கள் நடப்பதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. சில விஷயங்கள் சம்பந்தமாகத் தகவல் கேட்டு அந்தச் சபையார் பவுலுக்குக் கடிதமும் எழுதியிருந்தார்கள். ஆகவே, பொ.ச. 55 வாக்கில், தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது கொரிந்தியருக்கு முதல் கடிதத்தை பவுல் எழுதுகிறார். அப்போது அவர் எபேசுவில் இருக்கிறார்.
முதல் கடிதத்தை எழுதிய சில மாதங்களிலேயே, அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கடிதத்தையும் அவர் எழுதியிருப்பதுபோல் தெரிகிறது. கொரிந்து சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததைப் போன்ற சூழ்நிலைகளே நம்முடைய காலத்திலும் நிலவுகின்றன; ஆகவே, கொரிந்தியருக்கு பவுல் எழுதிய நிருபங்களிலுள்ள தகவல்கள் நமக்கு மிகவும் பயனுள்ளவையாய் இருக்கின்றன.—எபி. 4:12.
‘விழித்திருங்கள், நிலைத்திருங்கள், திடன்கொள்ளுங்கள்’
‘நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேச வேண்டும்’ என்று பவுல் அறிவுரை வழங்குகிறார். (1 கொ. 1:10) கிறிஸ்தவக் குணங்களால் வாழ்க்கை என்னும் கட்டடத்தைக் கட்டுவதற்கு ‘இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரம்’ இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். (1 கொ. 3:11-13) விபசாரத்தில் ஈடுபட்டபின்பும் சபையில் தொடர்ந்து இருக்கிற ஒருவனைக் குறித்து, ‘அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்’ என்று கூறுகிறார். (1 கொ. 5:13) ‘சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது’ என்று அவர் சொல்கிறார்.—1 கொ. 6:13.
‘[அவர்கள்] எழுதின காரியங்களுக்கு’ அவருடைய பதில் கடிதத்தில், திருமணம் செய்துகொள்வதையும் செய்துகொள்ளாதிருப்பதையும் பற்றிச் சிறந்த ஆலோசனைகளை அளிக்கிறார். (1 கொ. 7:1) கிறிஸ்தவக் குடும்பத்தில் கணவர் எவ்வாறு தலைமை வகிக்க வேண்டும், கிறிஸ்தவக் கூட்டங்களில் சபையார் எவ்வாறு நல்லொழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும், உயிர்த்தெழுதல் நடப்பது எந்தளவு நிச்சயம் என்பது பற்றியெல்லாம் அவர் குறிப்பிடுகிறார்; அதன்பிறகு, ‘விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்’ என்று அறிவுரை கூறி முடிக்கிறார்.—1 கொ. 16:13.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:21—‘பைத்தியமான’ நற்செய்தியின் மூலமாகவா விசுவாசிகளை யெகோவா இரட்சிக்கிறார்? இல்லவே இல்லை. என்றாலும், உலகத்திற்கு இந்த நற்செய்தி பைத்தியமானதாகவே தோன்றுகிறது. ‘உலகம் அதன் சொந்த ஞானத்தினால் தேவனை அறியாததே’ அதற்குக் காரணம்.—யோவா. 17:25.
5:5—‘ஆவி ... இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, ... அவனை [பொல்லாதவனை] சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பது’ என்பதன் அர்த்தம் என்ன? மனந்திரும்பாமல் திரும்பத் திரும்பப் படுமோசமான பாவத்தைச் செய்கிற ஒருவர் சபைநீக்கம் செய்யப்படுகையில், அவர் மீண்டும் சாத்தானுடைய பொல்லாத உலகின் பாகமாக ஆகிவிடுகிறார். (1 யோ. 5:19) அதனால்தான், அவர் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர் என்று இந்த வசனம் சொல்கிறது. அவரை நீக்குவது அழிவைக் குறிக்கிறது, அதாவது அவருடைய பொல்லாத செல்வாக்கு சபையிலிருந்து அகற்றப்படுவதைக் குறிக்கிறது. அதோடு, சபையின் ஆவி, அதாவது சபையார் மத்தியில் நிலவுகிற சிறந்த மனப்பான்மை பாதுகாக்கப்படுகிறது.—2 தீ. 4:22.
7:33, 34—ஒரு கணவனோ மனைவியோ கவலைப்படுகிற “உலகத்திற்குரிய” காரியங்கள் எதைக் குறிக்கின்றன? உணவு, உடை, உறைவிடம் போன்ற அன்றாட வாழ்க்கைக்குரிய காரியங்களையே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். இந்த உலகில் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டிய தீய காரியங்களை அவை குறிப்பதில்லை.—1 யோ. 2:15-17.
11:26—இயேசுவின் மரணத்தை எப்பொழுதெல்லாம் நினைவுகூர வேண்டும், எதுவரைக்கும்? இயேசுவின் மரணத்தை அடிக்கடி நினைவுகூர வேண்டுமென பவுல் சொல்லவில்லை. ‘பானம்பண்ணும்போதெல்லாம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, ‘எப்பொழுதெல்லாம்’ அல்லது ‘ஒவ்வொரு முறையும்’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்த நினைவுச் சின்னங்களில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும், அதாவது வருடத்திற்கு ஒரு முறை, நிசான் 14 அன்று கர்த்தரின் மரணத்தைத் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு, கர்த்தர் வருமளவும், அதாவது, உயிர்த்தெழுதல் மூலம் அவர்களைப் பரலோகத்தில் அவர் ஏற்றுக்கொள்ளும் வரையிலும் நினைவுகூர வேண்டும்.—1 தெ. 4:14-17.
13:13—விசுவாசத்தையும் நம்பிக்கையையும்விட அன்பு எவ்விதத்தில் பெரியது? ‘நம்பப்பட்ட விஷயங்கள்’ நிஜமாகி, அவற்றைக் குறித்த ‘நிச்சயமான எதிர்பார்ப்பு’ நிறைவேறும்போது, நாம் வைத்திருந்த விசுவாசமும் நம்பிக்கையும் முடிவுக்கு வரும். (எபி. 11:1, NW) ஆனால், அன்பிற்கு எல்லையே இல்லை என்பதால் விசுவாசத்தையும் நம்பிக்கையையும்விட அது பெரிதாயிருக்கிறது.
15:29—‘ஞானஸ்நானம்’ என்று பவுல் என்ன அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகிறார்? ஞானஸ்நானம் பெறாமலேயே இறந்துபோனவர்களுக்காக, உயிரோடிருப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டுமென பவுல் இங்கே குறிப்பிடவில்லை. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் ஞானஸ்நானத்தைப் பற்றியே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். அவர்கள் இறக்கும்வரை உத்தமத்தோடு இருந்து, அதன்பின் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதை இது குறிக்கிறது.
நமக்குப் பாடம்:
1:26-31; 3:3-9; 4:7. நம்மைக் குறித்து மேன்மைபாராட்டாமல் மனத்தாழ்மையுடன் யெகோவாவைக் குறித்து மேன்மைபாராட்டுவது சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கும்.
2:3-5. கிரேக்க தத்துவத்திற்கும் கல்விக்கும் மையமாயிருந்த கொரிந்துவில் சாட்சி கொடுக்கையில் கேட்போரை இணங்க வைக்கும் விதத்தில் தன்னால் பேச முடியுமா என பவுல் யோசித்திருக்கலாம். என்றாலும், தனக்கிருந்த குறைபாடோ பயமோ கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருந்த ஊழியத்தில் குறுக்கிட அவர் இடமளிக்கவில்லை. அவ்வாறே நாமும் அசாதாரணமான சூழ்நிலைகளில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்காமல் இருந்துவிடக் கூடாது. பவுலைப்போல் நாமும் நம்பிக்கையோடு யெகோவாவிடம் உதவி கேட்கலாம்.
2:16. நமக்கு ‘கிறிஸ்துவின் சிந்தை’ இருக்க வேண்டுமானால், அவர் சிந்திக்கும் விதத்தை அறிந்துகொண்டு, அவரைப்போல் சிந்திப்பதும், தனிச்சிறப்பு வாய்ந்த அவருடைய இயல்புகளை மிக நன்றாகப் புரிந்திருப்பதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதும் அவசியம். (1 பே. 2:21; 4:1) ஆகவே, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும்பற்றிக் கருத்தூன்றிப் படிப்பது எவ்வளவு முக்கியம்!
3:10-15; 4:17. கற்பித்துச் சீஷராக்கும் வேலையில் நாம் எந்தளவு திறமையோடு செய்கிறோம் எனச் சீர்தூக்கிப் பார்ப்பதும் அதில் முன்னேற்றம் செய்வதும் அவசியம். (மத். 28:19, 20) மாணாக்கருக்கு நாம் சரிவரக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், சோதனைகள் வரும்போது அவர் தோல்வி அடைந்துவிடலாம்; அது நமக்கு மிகுந்த வேதனையளிக்கும் என்பதால், நம் இரட்சிப்பு ‘அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோல’ இருக்கும்.
6:18. ‘வேசித்தனத்திற்கு விலகியோடுவது,’ போர்னியா சம்பந்தப்பட்ட செயல்களைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது; அதோடு, ஆபாசம், ஒழுக்க சம்பந்தமான அசுத்தம், பாலியல் குறித்துக் கற்பனை செய்வது, சரசமாடுவது போன்றவற்றைத் தவிர்ப்பதையும் குறிக்கிறது. ஏனெனில் இவை யாவும் ஒருவரை வேசித்தனத்தில் விழச்செய்யும்.—மத். 5:28; யாக். 3:17.
7:29. மணமானவர்கள், தங்களுடைய மண வாழ்க்கைக்கு முதலிடம் கொடுத்து, ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு இரண்டாவது இடம் கொடுத்துவிடக் கூடாது; இவ்விஷயத்தில் அவர்கள் கவனமாயிருப்பது அவசியம்.
10:8-11. மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக இஸ்ரவேலர் முறுமுறுத்தபோது யெகோவாவுக்கு அது மிகவும் வேதனையாய் இருந்தது. எனவே, முறுமுறுக்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ளாதிருப்பது சிறந்தது.
16:2. உலகெங்கும் பிரசங்க வேலைக்குக் குறிப்பிட்ட பணத்தைத் தவறாமல் கொடுக்க வேண்டுமானால், நம்மால் எவ்வளவு பணம் கொடுக்க முடியுமென்று முன்கூட்டியே திட்டமிடுவதும், அதன்படி செய்வதும் அவசியம்.
எப்போதும் ‘நற்சீர் பொருந்துங்கள்’
கண்டிக்கப்பட்ட நபர் மனந்திரும்பும்போது அவரை “மன்னித்து ஆறுதல் செய்ய” வேண்டும் என்று கொரிந்தியருக்கு பவுல் சொல்கிறார். அவர்கள் பவுலின் முதல் கடிதத்தை வாசித்துத் துக்கமடைந்திருந்தபோதிலும், அது ‘மனந்திரும்புகிறதற்கேதுவான துக்கமாய்’ இருந்ததால் சந்தோஷப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.—2 கொ. 2:6, 7; 7:8, 9.
அவர்கள் ‘எல்லாக் காரியங்களிலும் பெருகியிருக்கிறதுபோல தர்மகாரியத்திலும் பெருக வேண்டும்’ என பவுல் உற்சாகப்படுத்துகிறார். விரோதிகளுக்குப் பதிலளித்த பிறகு, அனைவருக்கும் கடைசியாக இவ்வாறு அறிவுரை வழங்குகிறார்: “[எப்போதும்] சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள்.”—2 கொ. 8:7; 13:11.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:15, 16—நாம் எவ்வாறு ‘கிறிஸ்துவின் நற்கந்தமாய், [அதாவது, சுகந்த வாசனையாய்] இருக்கிறோம்’? எவ்வாறெனில், பைபிள் சொல்லும் காரியங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம், அதிலுள்ள செய்தியை மற்றவர்களுக்குச் சொல்கிறோம். கெட்டவர்களுக்கு அந்த “வாசனை” அருவருப்பாக இருந்தாலும், யெகோவாவுக்கும் நல்மனமுள்ளவர்களுக்கும் அது சுகந்த வாசனையாய் இருக்கிறது.
5:16—அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், ‘ஒருவனையும் மாம்சத்தின்படி அறிவதில்லை’ என்பதன் கருத்து என்ன? மக்களை அவர்கள் மாம்சத்தின்படி பார்ப்பதில்லை, அதாவது பணம், இனம், குலம், தேசம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதில்லை. சக வணக்கத்தாரோடு வைத்திருக்கும் ஆன்மீகக் கூட்டுறவையே அவர்கள் முக்கியமானதாய்க் கருதுகிறார்கள்.
11:1, 16; 12:11—கிறிஸ்தவர்களிடம் பவுல் புத்தியீனமாக நடந்துகொண்டாரா? இல்லை. என்றாலும், சிலருக்கு அவர் பெருமைபிடித்தவர் போலவும் புத்தியீனமாய் நடந்துகொள்வது போலவும் தெரிந்ததற்குக் காரணம், தானும் ஓர் அப்போஸ்தலன்தான் என்பதை அவர் ஆதாரப்பூர்வமாகச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதே.
12:1-4—‘பரதீசுக்குள் எடுக்கப்பட்டவர்’ யார்? இப்படிப்பட்ட தரிசனத்தைப் பார்த்த வேறு யாரைப் பற்றியும் பைபிள் சொல்வதில்லை; அதோடு, தொடர்ந்து வரும் வசனங்களில் தான் ஓர் அப்போஸ்தலன் என்பதை பவுல் ஆதாரப்பூர்வமாகச் சொன்னதை வைத்துப் பார்க்கையில், அவர் தன் சொந்த அனுபவத்தைக் குறிப்பிடுவது போலவே தெரிகிறது. அப்போஸ்தலன் பவுல் தரிசனத்தில் பார்த்தது, ‘முடிவு காலத்தில்’ கிறிஸ்தவ சபை அனுபவித்து மகிழ்கிற ஆன்மீகப் பரதீசாக இருக்கலாம்.—தானி. 12:4.
நமக்குப் பாடம்:
3:5. தம்முடைய வார்த்தை, தமது பரிசுத்த ஆவி, தமது அமைப்பின் பூமிக்குரிய பாகம் ஆகியவற்றின் மூலமாக கிறிஸ்தவர்களை யெகோவா ஊழியத்திற்குத் தகுதிபெறச் செய்கிறார் என இந்த வசனம் சொல்கிறது. (யோவா. 16:7; 2 தீ. 3:16, 17) ஆகவே, நாம் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் ஊக்கமாய்ப் படிக்க வேண்டும், பரிசுத்த ஆவிக்காக விடாமல் ஜெபம் செய்ய வேண்டும், கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.—சங். 1:1-3; லூக். 11:10-13; எபி. 10:24, 25.
4:16. நமது ‘உள்ளான மனுஷனை நாளுக்குநாள்’ யெகோவா புதுப்பிப்பதால், அவர் அளித்திருக்கும் ஏற்பாடுகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதாவது ஆன்மீக ரீதியில் நம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான காரியங்களை நாள் தவறாமல் செய்ய வேண்டும்.
4:17, 18. நமக்கு வருகிற உபத்திரவம், ‘அதிசீக்கிரத்தில் நீங்கும்’ என்பதையும், அது ‘இலேசானது’ என்பதையும் நாம் மனதில்கொள்வது, நமக்குக் கஷ்டம் வரும்போது யெகோவா மீதுள்ள விசுவாசத்தை இழந்துவிடாதிருக்க உதவும்.
5:1-5. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பரலோக நம்பிக்கையை பவுல் எவ்வளவு அழகாக விவரிக்கிறார்!
10:13. பொதுவாக, தேவை அதிகமுள்ள இடத்திற்கு நாம் நியமிக்கப்படாத வரையில், நமது சபைக்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியத்தில் மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும்.
13:5. ‘நாம் விசுவாசமுள்ளவர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்கு,’ பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதற்கு இசைவாக நாம் நடக்கிறோமா என்று பார்க்க வேண்டும். ‘நம்மை நாமே பரீட்சித்துப் பார்ப்பதற்கு,’ கடவுளோடு நாம் வைத்திருக்கும் பந்தம் எந்தளவு பலமானது, நம்முடைய ‘பகுத்துணரும் திறமைகளை’ எந்தளவு பயன்படுத்துகிறோம், கடவுளுடைய வேலையில் எந்தளவு ஈடுபடுகிறோம் என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். (எபி. 5:14; யாக். 1:22-25) இவ்வாறு, பவுலின் சிறந்த அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலம் சத்திய வழியில் நாம் தொடர்ந்து நடக்க முடியும்.
[பக்கம் 26, 27-ன் படம்]
“இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம்” என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? —1 கொ. 11:26