கிறிஸ்தவர்கள் மறைத்துவைக்க முடியாத ஓர் இரகசியம்!
“நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; . . . அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.”—யோவான் 18:20.
1, 2. வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, மிஸ்டீரியான் என்ற கிரேக்க வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?
கிரேக்க வார்த்தை மிஸ்டீரியான் என்பது பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளில் 25 தடவை “பரிசுத்த இரகசியம்” என்றும் 3 தடவை “மறைபொருள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பரிசுத்தம் என்பதாக அழைக்கப்படும் ஒரு இரகசியம் நிச்சயமாகவே முக்கியமானதாக இருக்கவேண்டும்! இப்படிப்பட்ட ஒரு இரகசியத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் பெற்ற எவரும் மிகவும் கனப்படுத்தப்பட்டவராக உணரவேண்டும், ஏனென்றால் அவர் சர்வலோகத்தின் உன்னதமான கடவுளோடு ஒரு இரகசியத்தில் பங்குகொள்ள தகுதியானவராக எண்ணப்பட்டிருக்கிறார்.
2 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் “மறைபொருள்” என்பதைக்காட்டிலும் “பரிசுத்த இரகசியம்” என்ற மொழிபெயர்ப்பே அதிக பொருத்தமானதாக உள்ளது என்பதை வைனின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி (ஆங்கிலம்) உறுதிசெய்கிறது. மிஸ்டீரியான் என்பதைக் குறித்து அது இவ்வாறு சொல்கிறது: “[கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில்] அது [ஆங்கில வார்த்தையைப் போல] மறைபொருளை அர்த்தப்படுத்துவது இல்லை; ஆனால் புரிந்துகொள்வதற்கு மனிதரின் இயற்கையான திறமைக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால், அதை தெய்வீக வெளிப்பாட்டினால் மாத்திரமே தெரிந்துகொள்ளமுடியும்; அது கடவுள் நியமித்த முறையின்படியும் நேரத்தின்படியும் அவருடைய ஆவியால் அறிவொளியூட்டப்பட்டவர்களுக்கு மாத்திரமே தெரியப்படுத்தப்படுகிறது. சாதாரணமான கருத்தில், மறைபொருள் என்பது பகிர்ந்து கொள்ளாமல் வைத்துக்கொள்ளப்படும் அறிவை குறிக்கிறது; பைபிளில் பயன்படுத்தப்படுகையில் அது வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைக் குறிக்கிறது. ஆகவே மறைபொருளோடு விசேஷமாக சம்பந்தப்படுத்தப்படும் வார்த்தைகள் ‘தெரியப்பண்ணுவது,’ ‘அறியப்பண்ணுவது,’ ‘வெளிப்படுத்துவது,’ ‘பிரசங்கிக்கப்படுவது,’ ‘புரிந்துகொள்ளப்படுவது,’ ‘பகிர்ந்துகொடுக்கப்படுவது’ ஆகியவை ஆகும்.”
3. முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவ சபை எவ்விதமாக இரகசிய மத தொகுதிகள் சிலவற்றிலிருந்து வித்தியாசப்பட்டதாக இருந்தது?
3 முதல் நூற்றாண்டில் தழைத்தோங்கிய இரகசிய மத தொகுதிகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்குமிடையே இருந்த ஒரு பெரிய வித்தியாசத்தை இந்த விளக்கம் தெளிவாக காண்பிக்கிறது. இரகசியமான உட்பிரிவுகளுக்குள் சேர்த்துக்கொள்ளப்படுகிறவர்கள் மத போதனைகளை வெளிப்படுத்தாமல் இரகசியமாக காத்துக்கொள்ளும் ஒரு மெளன பிரமாணத்தினால் அநேகமாக கட்டப்பட்டவர்களாக இருந்தனர்; கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டில் ஒருபோதும் வைக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல் “இரகசியமான தேவஞானத்தை”ப்பற்றி பேசி, அதை “மறைக்கப்பட்டது” அதாவது, “இப்பிரபஞ்சத்துப் பிரபுக்க”ளிடமிருந்து மறைக்கப்பட்டது என்பதாக அழைப்பது உண்மையே. அதை அவர்கள் அறிவிக்கும்படிக்கு கடவுளுடைய ஆவியால் கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.—1 கொரிந்தியர் 2:7-12; நீதிமொழிகள் 1:20-ஐ ஒப்பிடுக.
“பரிசுத்த இரகசியம்” அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது
4. “பரிசுத்த இரகசியம்” யாரை மையமாகக் கொண்டிருந்தது, எவ்விதமாக?
4 யெகோவாவின் “பரிசுத்த இரகசியம்” இயேசு கிறிஸ்துவை மையமாக கொண்டிருக்கிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, [யெகோவா] தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் [“பரிசுத்த,” NW] இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.” (எபேசியர் 1:9, 10) “கடவுளின் பரிசுத்த இரகசியத்தைப் பற்றிய திருத்தமான அறிவு, அதாவது கிறிஸ்து”வைப் பற்றிய திருத்தமான அறிவுக்கான அவசியத்தை சுட்டிக்காட்டும்போது பவுல் ‘பரிசுத்த இரகசியத்தின்’ தன்மையைக் குறித்து இன்னும் அதிக திட்டவட்டமாக பேசினார்.—கொலோசெயர் 2:2, NW.
5. ‘பரிசுத்த இரகசியத்தில்’ என்ன உட்பட்டிருக்கிறது?
5 இன்னும் அதிகம் இதில் உட்பட்டிருக்கிறது, ஏனென்றால் “பரிசுத்த இரகசியம்” அநேக அம்சங்களைக்கொண்ட இரகசியமாகும். அது வெறுமனே இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக அல்லது மேசியாவாக அடையாளம் காட்டுவது மாத்திரமல்ல; கடவுளுடைய நோக்கத்தில் அவர் வகிக்கும்படியாக நியமிக்கப்பட்டிருக்கும் பங்கையும் அது உட்படுத்துகிறது. அது கடவுளுடைய மேசியானிய ராஜ்யமாகிய பரலோக அரசாங்கத்தை உட்படுத்துகிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் பின்வருமாறு சொன்னபோது தெளிவாக இதை விளக்கினார்: ‘பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.’—மத்தேயு 13:11.
6. (அ) “பரிசுத்த இரகசியம்” ‘ஆதிமுதல் அடக்கமாயிருந்தது’ என்று சொல்வது ஏன் சரியாக இருக்கிறது? (ஆ) அது எவ்விதமாக படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது?
6 மேசியானிய ராஜ்யத்துக்கு ஒரு ஆதாரத்தை அளிப்பது கடவுளுடைய நோக்கம் என்பது முதல் முறையாக குறிப்பிடப்பட்ட அந்தச் சமயத்திற்கும் “தேவரகசியம் நிறைவே”றிமுடியும் சமயத்திற்கும் இடையே ஒரு நீண்ட காலப்பகுதி கடந்துபோக வேண்டும். (வெளிப்படுத்துதல் 10:7; ஆதியாகமம் 3:15) ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகையில் அது நிறைவேறி முடிகிறது என்பதை வெளிப்படுத்துதல் 10:7 மற்றும் 11:15-ஐ ஒப்பிடுவது நிரூபிக்கிறது. உண்மையில் ஏதேனில் ராஜ்யத்தைப்பற்றிய முதல் வாக்கு கொடுக்கப்பட்ட சமயத்திலிருந்து நியமிக்கப்பட்ட ராஜா பொ.ச. 29-ல் தோன்றும்வரையாக சுமார் 4,000 ஆண்டுகள் கடந்துசென்றன. 1914-ல் பரலோகங்களில் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பாக மற்றொரு 1,885 ஆண்டுகள் கடந்துசென்றன. இவ்விதமாக, “பரிசுத்த இரகசியம்” படிப்படியாக ஏறக்குறைய 6,000 ஆண்டுகளின் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. (பக்கம் 16-ஐப் பார்க்கவும்.) ‘ஆதிமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது வெளியரங்கமாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவருகிற இரகசியத்தைப்’பற்றி உண்மையில் பவுல் சரியாகவே பேசினார்.—ரோமர் 16:25-27; எபேசியர் 3:4-11.
7. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பில் நாம் ஏன் முழுமையாக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம்?
7 மட்டுப்பட்ட வாழ்நாள் காலத்தை உடைய மனிதர்களைப் போலல்லாமல், மாறாக, யெகோவா குறித்த காலத்துக்கு முன்னே தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்தும்படியாக கால ஓட்டத்தால் அவர் அவசரப்படுத்தப்படுவதாக ஒருபோதும் உணருவது கிடையாது. சில பைபிள் கேள்விகள் தற்சமயம் நமக்கு திருப்தியளிக்கும் வகையில் விளக்கப்படாதபோது நாம் பொறுமையை இழந்துவிடாதபடிக்கு இந்த உண்மை நம்மைக் காக்க வேண்டும். கிறிஸ்தவ வீட்டாருக்கு ஏற்ற வேளையிலே உணவை அளிக்கும்படியான வேலைப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு அடக்கமுள்ளதாக இருப்பதன் காரணமாக, துணிகரமாக முந்திக்கொண்டு சென்று இன்னும் தெளிவாக்கப்படாத காரியங்களைப் பற்றி மனம்போனபோக்கில் ஊகித்துக்கொண்டு போவது கிடையாது. அடிமை வகுப்பு கொள்கையில் பிடிவாதமாக இருப்பதை தவிர்க்க முயற்சிசெய்கிறது. நீதிமொழிகள் 4:18-ஐ தெளிவாக மனதில் கொண்டு தற்போது ஒவ்வொரு கேள்விக்கும் தன்னால் பதிலளிக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்ள முடியாதபடி அது மிதமிஞ்சி பெருமையுள்ளதாக இல்லை. ஆனால் யெகோவா அவருடைய நோக்கங்களின் சம்பந்தமாக இரகசியங்களை அவருடைய சொந்த நேரத்திலும் அவருடைய சொந்த வழியிலும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பார் என்பதை அறிந்திருப்பது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது! யெகோவாவின் ஏற்பாட்டில் நாம் பொறுமை இழந்து, இரகசியங்களை வெளிப்படுத்துகிறவரை விவேகமில்லாமல் முந்திக்கொண்டு செல்ல ஒருபோதும் முயற்சிசெய்யக்கூடாது. இன்று யெகோவா பயன்படுத்திவரும் வழிமூலம் அப்படிச்செய்வதில்லை என்பதை அறிவது எத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது! அது உண்மையுள்ளதாயும் விவேகமுள்ளதாயும் இருக்கிறது.—மத்தேயு 24:45; 1 கொரிந்தியர் 4:6.
வெளிப்படுத்தப்பட்ட இரகசியம் கட்டாயமாக அறிவிக்கப்படவேண்டும்!
8. “பரிசுத்த இரகசியம்” தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பது நமக்கு எப்படி தெரியும்?
8 தம்முடைய “பரிசுத்த இரகசியத்தை” மறைத்துவைப்பதற்காக கிறிஸ்தவர்களுக்கு யெகோவா அதை வெளிப்படுத்தவில்லை. இயேசு தம்மைப் பின்பற்றுவோர் எல்லாருக்கும்—வெறுமனே சில பாதிரிமார்களுக்கு மட்டுமல்ல—கொடுத்த நியமத்துக்கு இசைவாக அது தெரியப்படுத்தப்பட வேண்டும்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”—மத்தேயு 5:14-16; 28:19, 20.
9. ஒரு சிலர் சொல்கிறபடி, இயேசு ஒரு புரட்சிக்காரர் இல்லை என்பதை எது நிரூபிக்கிறது?
9 இரகசியமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, தம்மைப் பின்பற்றுவோர் அடங்கிய இரகசியமாக இயங்கும் ஒரு அமைப்பை உருவாக்கும் புரட்சிகரமான எண்ணம் இயேசுவுக்கு இல்லை. பூர்வ கிறிஸ்தவமும் சமுதாயமும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில், பூர்வ கிறிஸ்தவர்கள் அளித்த விளக்கத்தை குறித்து இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்போலஜிஸ்ட் ஜஸ்டின் மார்டியர் சொன்னது சம்பந்தமாக ராபர்ட் எம். கிரானட் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்தவர்கள் புரட்சிக்காரர்களாக இருந்திருந்தால் தங்கள் குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் மறைவாகவே இருந்திருப்பார்கள்.” ஆனால் கிறிஸ்தவர்கள் எவ்வாறு “மறைவாகவே இருந்து” அதே சமயத்தில் “மலையின்மேல் இருக்கிற பட்டணம்” போல இருக்கமுடியும்? அவர்கள் தங்கள் வெளிச்சத்தை ஒரு மரக்காலின்கீழ் மறைத்துவைக்க துணியமாட்டார்கள்! ஆகவே, அரசாங்கம் அவர்களுடைய நடவடிக்கையைக் குறித்துப் பயப்படுவதற்கு எதுவுமிருக்கவில்லை. “அமைதியையும் நல்ல ஒழுங்கையும் காத்துக்கொள்வதில் அவர்களே பேரரசரின் மிகச்சிறந்த நண்பர்களாவர்” என இந்த எழுத்தாளர் தொடர்ந்து அவர்களைப் பற்றி வர்ணித்தார்.
10. கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடைய அடையாளத்தை இரகசியமாக வைத்துக்கொள்ளக்கூடாது?
10 இயேசு தம்முடைய சீஷர்கள், ஒரு மத உட்பிரிவு என்பதாக அழைக்கப்பட்ட ஒன்றின் அங்கத்தினர்களாக தங்கள் அடையாளத்தை இரகசியமாக வைக்கவேண்டும் என விரும்பவில்லை. (அப்போஸ்தலர் 24:14; 28:22) இன்று நம்முடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய தவறுவது, கிறிஸ்துவுக்கும் இரகசியங்களை வெளிப்படுத்துகிறவரான அவருடைய தந்தைக்கும் பிரியமற்றதாக இருக்கும்; நாமும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கமுடியாது.
11, 12. (அ) கிறிஸ்தவம் அறிவிக்கப்படவேண்டும் என்று யெகோவா ஏன் விரும்புகிறார்? (ஆ) இயேசு எவ்விதமாக சரியான முன்மாதிரியை வைத்தார்?
11 யெகோவா “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்”புகிறார். (2 பேதுரு 3:9; எசேக்கியேல் 18:23; 33:11; அப்போஸ்தலர் 17:30) மனந்திரும்புகிற மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஆதாரமாக இருப்பது எல்லாருக்காகவும்—வெறும் ஒரு சிலருக்காக மட்டுமல்ல—தம்மை மீட்கும் பலியாக அளித்த இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின்மேல் விசுவாசம் காண்பிப்பதாகும்; ஆகவே “விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடை”யமுடியும். (யோவான் 3:16) வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின்போது, வெள்ளாடுகளாக அல்ல செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுவதற்கு தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மக்களுக்கு உதவுவது இன்றியமையாததாகும்.—மத்தேயு 25:31-46.
12 உண்மை கிறிஸ்தவம் மறைத்து வைக்கப்படக்கூடாத ஒன்று; சாத்தியமான மற்றும் பொருத்தமான ஒவ்வொரு வழியிலும் அது அறிவிக்கப்பட வேண்டும். இயேசுதாமே சரியான முன்மாதிரியை வைத்தார். அவருடைய சீஷர்களையும் அவருடைய போதனையையும் பற்றி பிரதான ஆசாரியன் அவரிடம் விசாரித்தபோது அவர் பின்வருமாறு சொன்னார்: “நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.” (யோவான் 18:19, 20) இந்த உதாரணத்தைக் கருத்தில் கொள்ளும்போது, வெளியரங்கமாக பேசவேண்டும் என்பதாக கடவுள் அறிவித்திருக்கும் செய்தியை, கடவுள் பயமுள்ள எந்த நபர் இரகசியமாக வைத்துக்கொள்ள துணிவார்? நித்தியஜீவனுக்கு வழிநடத்துகிற “அறிவாகிய திறவுகோலை” மறைத்துவைக்க யாருக்கு துணிச்சல்வரும்? அவ்விதமாகச் செய்வது அவரை முதல் நூற்றாண்டு மத மாய்மாலக்காரரைப் போலாக்கிவிடும்.—லூக்கா 11:52; யோவான் 17:3.
13. நாம் ஏன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரசங்கிக்க வேண்டும்?
13 யெகோவாவின் சாட்சிகளாக நாம் கடவுளுடைய ராஜ்ய செய்தியை இரகசியமாய் வைத்துக்கொண்டோம் என்பதாக ஒருவராலும் ஒருபோதும் சொல்லமுடியாதிருக்கட்டும்! செய்தி ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சரி நிராகரிக்கப்பட்டாலும் சரி, அது பிரசங்கிக்கப்பட்டது என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். (எசேக்கியேல் 2:5; 33:33-ஐ ஒப்பிடுக.) ஆகவே அனைவரிடமும், நாம் எங்கே அவர்களைச் சந்திக்க நேரிட்டாலும் சத்தியத்தின் செய்தியைச் சொல்வதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அனுகூலப்படுத்திக்கொள்வோமாக.
சாத்தானின் வாயில் துறடுகளைப் போடுவது
14. நம்முடைய வணக்கத்தில் நாம் வெளிப்படையாக இருப்பதைக் குறித்து நாம் ஏன் தயங்கக்கூடாது?
14 அநேக இடங்களில் யெகோவாவின் சாட்சிகள் அதிகமதிகமாக செய்தி துறையின் முக்கிய கவனத்துக்குரியவர்களாகி வருகிறார்கள். பூர்வ கிறிஸ்தவர்களுக்கு சம்பவித்தது போலவே, அவர்கள் அடிக்கடி தவறாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு கேள்விக்குரிய மத பிரிவுகள் மற்றும் இரகசிய அமைப்புகளைப் போன்றே கருதப்படுகிறார்கள். (அப்போஸ்தலர் 28:22) நாம் வெளிப்படையாக பிரசங்கிப்பதானது நாம் அதிகமாக தாக்கப்படுகிற சாத்தியத்தை ஏற்படுத்துமா? கருத்து வேறுபாடுகளின் நடுவில் நம்மைநாமே திணித்து கொள்வது நிச்சயமாகவே ஞானமற்றதாகவும், இயேசுவின் புத்திமதிக்கு எதிர்மாறானதாகவும் இருக்கும். (நீதிமொழிகள் 26:17; மத்தேயு 10:16) இருந்தபோதிலும், பிரயோஜனமான ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்காக மக்களுக்கு உதவிசெய்வதும் மறைத்துவைக்கப்படக்கூடாது. அது யெகோவாவை மகிமைப்படுத்தி, அவரை உயர்த்தி, அவரிடமாகவும் ஸ்தாபிக்கப்பட்ட அவருடைய ராஜ்யத்திடமாகவும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இப்பொழுது சத்தியத்தை அதிக வெளியரங்கமாக பிரசங்கிக்க முடிவதற்கு ஓரளவான காரணம், அங்கே பைபிள் சத்தியத்துக்கு கிடைத்திருக்கும் மனநிறைவளிக்கும் பிரதிபலிப்பே ஆகும்.
15, 16. (அ) நாம் வெளியரங்கமாக செயல்படுவதாலும் நம்முடைய ஆவிக்குரிய செழுமையாலும் என்ன நோக்கங்கள் நிறைவேறுகின்றன, ஆனால் கவலைப்படுவதற்கு இது ஒரு காரணமாய் இருக்கிறதா? (ஆ) யெகோவா ஏன் சாத்தானின் வாயில் துறடுகளைப் போடுகிறார்?
15 யெகோவாவின் சாட்சிகளின் வெளியரங்கமான பிரசங்கிப்பு, அவர்கள் அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய பரதீஸ், அவர்களுடைய செழுமை—மனித வளங்களும் பொருள் சம்பந்தமான சொத்துக்களும்—கவனிக்கப்படாமல் இல்லை என்பது உண்மையே. நேர்மை இருதயமுள்ள ஆட்களைக் கவர்ந்திழுக்கும் அதே சமயத்தில், எதிர்ப்பவர்களை இந்தக் காரணிகள் வெறுப்படையச் செய்யக்கூடும். (2 கொரிந்தியர் 2:14-17) உண்மையில், இந்தச் செழுமையே கடைசியாக கடவுளுடைய மக்களை தாக்கும்படியாக சாத்தானின் சேனைகளை தூண்டியிழுக்கக்கூடும்.
16 இது கவலைக்குரிய காரணமாக இருக்கவேண்டுமா? எசேக்கியேல் 38-ம் அதிகாரத்தில் காணப்படும் யெகோவாவின் தீர்க்கதரிசனத்தின்படி அப்படி இருக்கவேண்டியதில்லை. மாகோகுவின் கோகு, கடவுளுடைய மக்களின்மீது செய்யப்படும் தாக்குதலை வழிநடத்துவான் என்பதாக அது முன்னறிவிக்கிறது. மாகோகுவின் கோகு என்பது, 1914-ல் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு பூமியின் எல்லைக்கு தாழ்த்தப்பட்டதிலிருந்து பிசாசாகிய சாத்தானை விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7-9) யெகோவா கோகுவிடம் இவ்வாறு சொல்கிறார்: “உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.” (எசேக்கியேல் 38:11, 12) இருப்பினும் இது யெகோவாவின் செயலாக இருப்பதால் கடவுளுடைய மக்கள் இந்தத் தாக்குதலைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை என்பதாக 4-ஆம் வசனம் காட்டுகிறது. ஆனால் கடவுள் ஏன் தம்முடைய மக்களின்மீது ஒரு முழு வேக தாக்குதலை அனுமதிப்பார்—ஆம் தூண்டவும்கூட செய்வார்? வசனம் 23-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) நாம் யெகோவாவின் பதிலை வாசிக்கிறோம்: “இவ்விதமாய் நான் பல ஜாதியாரின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அவர்கள் என்னை அறியும்படி செய்வேன்; நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.”
17. கோகுவின் வரவிருக்கும் தாக்குதலை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
17 இதன் காரணமாக, கோகுவின் தாக்குதலைக்குறித்த பயத்தில் வாழ்வதற்குப் பதிலாக, யெகோவாவின் மக்கள் மேலுமான இந்தப் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்துக்காக ஆவலோடே எதிர்நோக்கி இருக்கிறார்கள். தம்முடைய காணக்கூடிய அமைப்பை செழுமையாக்கி அவர்களை ஆசீர்வதிப்பதன் மூலமாக சாத்தானுடைய வாயில் யெகோவா துறடுகளைப் போட்டு, அவனையும் அவனுடைய இராணுவ சேனையையும் தோல்வியடையச் செய்யும்படி இருக்கிறார் என்பதை அறிவது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது!
எக்காலத்திலும் இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக!
18. (அ) அநேக மக்கள் இப்பொழுது என்ன உணர்வுக்கு வருகிறார்கள்? (ஆ) ராஜ்ய செய்திக்கு கிடைக்கும் பிரதிபலிப்பு எப்படி ஒரு வலிமைமிக்க தூண்டுதலாக இருக்கிறது?
18 நவீன காலங்களில் யெகோவாவின் சாட்சிகள் பைபிள் ஆதாரமுள்ள தங்கள் கருத்துக்களை மிகவும் பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்; இது விரும்பப்படாதபோதிலும் அவ்விதமாகச் செய்து வந்திருக்கிறார்கள். புகைபிடித்தல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம் ஆகியவற்றினால் வரும் ஆபத்துக்களையும் கட்டுப்பாடில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது குறுகிய நோக்குடையது என்பதையும், முறைகேடான பாலுறவும் வன்முறையும் நிரம்பிய பொழுதுபோக்கினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதையும், இரத்தமேற்றுதலின் அபாயங்களைக் குறித்தும் பல பத்தாண்டுகளாக அவர்கள் எச்சரித்துவந்திருக்கிறார்கள். பரிணாமக் கோட்பாட்டின் முரண்பாடுகளையும்கூட அவர்கள் சுட்டிக்காண்பித்திருக்கிறார்கள். இப்பொழுது அதிகமதிகமான ஆட்கள் “யெகோவாவின் சாட்சிகள் சொன்னது ஒன்றும் தவறில்லை” என்பதாக சொல்கிறார்கள். நம்முடைய கருத்துக்களை நாம் பகிரங்கமாக வெளிப்படுத்தியிராவிட்டால், அவர்கள் இந்தவிதமாக பிரதிபலிக்கமுடியாது. இப்படிப்பட்ட ஒரு கூற்றைச் சொல்வதன் மூலமாக, “சாத்தானே, நீ ஒரு பொய்யன்; கடைசியாக யெகோவா சொன்னதே சரி” என்று சொல்லும் விதமான ஒரு நடவடிக்கையை எடுக்கிறார்கள். இயேசுவின் முன்மாதிரியைத் தொடர்ந்து பின்பற்றி சத்தியத்தின் வார்த்தையை வெளிப்படையாக பேசுவதற்கு நமக்கு என்னே ஒரு பலமான தூண்டுவிப்பாக இது இருக்கிறது!—நீதிமொழிகள் 27:11.
19, 20. (அ) யெகோவாவின் மக்கள் 1922-ல் என்ன தீர்மானத்தை வெளிப்படுத்தினார்கள், இந்த வார்த்தைகள் எவ்விதமாக இன்னும் பொருத்தமாயுள்ளன? (ஆ) யெகோவாவின் “பரிசுத்த இரகசிய”த்தை நாம் எவ்விதமாக கருதவேண்டும்?
19 இந்த விஷயத்தில் தங்களுக்கிருக்கும் பொறுப்பை யெகோவாவின் மக்கள் வெகு காலமாகவே புரிந்துகொண்டிருக்கின்றனர். 1922-ல் குறிப்பிடத்தக்க ஒரு மாநாட்டில், அப்போது உவாட்ச் டவர் சங்கத்தின் தலைவராக இருந்த ஜே. எஃப். ரதர்ஃபோர்டு, பின்வருமாறு சொல்வதன் மூலமாக கூடிவந்திருந்தவர்களைக் கிளர்ச்சியடையச் செய்தார்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழிப்புள்ளவர்களாயிருங்கள், சுறுசுறுப்பாயிருங்கள், தைரியமாயிருங்கள். கர்த்தருக்கு விசுவாசமும் உண்மையுமுள்ள சாட்சிகளாயிருங்கள். பாபிலோனின் எல்லா தடயங்களும் பாழாய் போகும் வரையாக போரில் முன்னேறிச்செல்லுங்கள். செய்தியை எல்லா இடங்களிலும் அறிவியுங்கள். யெகோவாவே கடவுள் என்பதையும் இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாய் இருக்கிறார் என்பதையும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இதுவே எல்லா நாட்களிலும் முக்கியமான நாள். இதோ, ராஜா ஆட்சிசெய்கிறார்! நீங்களே அவருடைய விளம்பர பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள். ஆகவே ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரம் பண்ணுங்கள், விளம்பரம் பண்ணுங்கள், விளம்பரம் பண்ணுங்கள்.”
20 இந்த வார்த்தைகள் 1922-லேயே முக்கியமானதாக இருந்திருந்தால், 75 ஆண்டுகளுக்குப் பின்னர், நியாயாதிபதியாகவும் பழிவாங்குபவராகவும் கிறிஸ்து வெளிப்படுவது அதிக அருகாமையில் இருக்கும் இப்பொழுது அவை இன்னும் எவ்வளவு அதிக முக்கியமானவையாக இருக்கும்! யெகோவாவின் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தையும் கடவுளுடைய மக்களால் அனுபவிக்கப்படும் ஆவிக்குரிய பரதீஸையும் பற்றிய செய்தி “பரிசுத்த இரகசிய”மாகும்; அது அத்தனை மாட்சிமைப் பொருந்தியதாக இருப்பதன் காரணமாக அதைக் கடவுளுடைய மக்கள் இரகசியமாக வைத்துக்கொள்ள துணியமாட்டார்கள். இயேசுதாமே தெளிவாக சொன்னபடி, அவரைப் பின்பற்றுவோர் பரிசுத்த ஆவியின் உதவியோடு, யெகோவாவின் நித்திய நோக்கங்களில் அவருடைய முக்கிய பங்கைக் குறித்து “பூமியின் கடைசிபரியந்தமும்” சாட்சி பகருகிறவர்களாயிருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 1:8; எபேசியர் 3:8-12) உண்மையில், இரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுளாகிய யெகோவாவின் ஊழியர்களாக, நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க நாம் துணியமாட்டோம்!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ “பரிசுத்த இரகசியம்” என்ன?
◻ அது அறிவிக்கப்பட வேண்டும் என்பது நமக்கு எப்படி தெரியும்?
◻ யெகோவாவின் மக்களின்மீது கோகுவின் தாக்குதலை எது கொண்டுவருகிறது, இதை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
◻ நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய தீர்மானித்திருக்க வேண்டும்?
[பக்கம் 16-ன் பெட்டி]
ஒரு “பரிசுத்த இரகசியம்” படிப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது
◻ பொ.ச.மு. 4026-க்குப் பின்: சாத்தானை அழிப்பதற்கு ஒரு வித்தை எழுப்புவதாக கடவுள் வாக்களிக்கிறார்.—ஆதியாகமம் 3:15
◻ பொ.ச.மு. 1943: வித்து ஆபிரகாமின் மூலமாக வரும் என்பது வாக்களிக்கப்பட்டு ஆபிரகாமிய உடன்படிக்கை உறுதிசெய்யப்படுகிறது.—ஆதியாகமம் 12:1-7
◻ பொ.ச.மு. 1918: உடன்படிக்கையின் சுதந்தரவாளியாக ஈசாக்கின் பிறப்பு.—ஆதியாகமம் 17:19; 21:1-5
◻ சுமார் பொ.ச.மு. 1761: வித்து ஈசாக்கின் மகன் யாக்கோபின் வழியாக வருவார் என்பதை யெகோவா உறுதிசெய்கிறார்.—ஆதியாகமம் 28:10-15
◻ பொ.ச.மு. 1711: வித்து தன்னுடைய மகன் யூதாவின் வழியாக வருவார் என்பதை யாக்கோபு குறிப்பிடுகிறார்.—ஆதியாகமம் 49:10
◻ பொ.ச.மு. 1070-1038: வித்து தன்னுடைய சந்ததியாக இருக்கும் என்பதையும் ராஜாவாக என்றுமாக அரசாளும் என்பதையும் தாவீது ராஜா அறிந்துகொள்கிறார்.—2 சாமுவேல் 7:13-16; சங்கீதம் 89:35, 36
◻ பொ.ச. 29-33: இயேசு வித்தாகவும், மேசியாவாகவும், எதிர்கால நியாயாதிபதியாகவும், நியமிக்கப்பட்ட ராஜாவாகவும் அடையாளம் காட்டப்படுகிறார்.—யோவான் 1:17; 4:25, 26; அப்போஸ்தலர் 10:42, 43; 2 கொரிந்தியர் 1:20; 1 தீமோத்தேயு 3:16
◻ இயேசு, தாம் உடன் அரசர்களையும் நியாயாதிபதிகளையும் கொண்டிருப்பார் என்பதையும், பரலோக ராஜ்யத்துக்கு பூமிக்குரிய பிரஜைகள் இருப்பார்கள் என்பதையும், அவரைப் பின்பற்றுவோர் அனைவருமே ராஜ்ய பிரசங்கிகளாக இருக்கவேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.—மத்தேயு 5:3-5; 6:10; 28:19, 20; லூக்கா 10:1-9; 12:32; 22:29, 30; யோவான் 10:16; 14:2, 3
◻ உலக சம்பவங்களால் உறுதிசெய்யப்படுகிற விதமாக ராஜ்யம் திட்டவட்டமான ஒரு காலத்தில் ஸ்தாபிக்கப்படும் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.—மத்தேயு 24:3-22; லூக்கா 21:24
◻ பொ.ச. 36: யூதரல்லாதவர்களும்கூட ராஜ்யத்தில் உடன் சுதந்தரவாளிகளாக இருப்பர் என்பதை பேதுரு கற்றறிகிறார்.—அப்போஸ்தலர் 10:30-48
◻ பொ.ச. 55: கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது ராஜ்ய உடன் சுதந்தரவாளிகள் சாவாமைக்கும் அழியாமைக்கும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை பவுல் விளக்குகிறார்.—1 கொரிந்தியர் 15:51-54
◻ பொ.ச. 96: அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய பின்பற்றுவோரின்மீது ஏற்கெனவே ஆட்சிசெய்துகொண்டிருக்கும் இயேசு, அவர்களுடைய முடிவான எண்ணிக்கை 1,44,000 ஆக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறார்.—எபேசியர் 5:32; கொலோசெயர் 1:13-20; வெளிப்படுத்துதல் 1:1; 14:1-3
◻ பொ.ச. 1879: கடவுளுடைய “பரிசுத்த இரகசியத்தின்” நிறைவேற்றத்தில் 1914 அதிக முக்கியத்துவமுள்ள ஆண்டாக இருக்கும் என்பதை சீயோனின் காவற்கோபுரம் (ஆங்கிலம்) சுட்டிக்காண்பிக்கிறது
◻ பொ.ச. 1925: ராஜ்யம் 1914-ல் பிறந்தது என்பதையும் ராஜ்யத்தைப் பற்றிய “பரிசுத்த இரகசியம்” அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும் காவற்கோபுரம் விளக்குகிறது.—வெளிப்படுத்துதல் 12:1-5, 10, 17
[பக்கம் 15-ன் படம்]
தங்களுடைய தலைவராகிய இயேசுவைப் போலவே, யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் ராஜ்யத்தை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்