எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டுகிறீர்கள்?
“நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள் அனைவர்மீதும் நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருப்பதாக.”—பிலே. 25.
1. பவுல் தன் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதங்களில் என்ன நம்பிக்கையைத் தெரிவித்தார்?
“சகோதரர்களே, நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள்மீது எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருப்பதாக”! (கலா. 6:18) இப்படித்தான் அப்போஸ்தலன் பவுல் கலாத்திய சபையிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். இதுபோன்ற வார்த்தைகளையே மற்ற சபைகளுக்கு எழுதிய கடிதங்களிலும் அவர் குறிப்பிட்டார்; சபையிலுள்ளவர்கள் வெளிக்காட்டும் நல்ல மனப்பான்மையைக் கடவுளும் கிறிஸ்துவும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையை இவ்விதத்தில் அவர் தெரிவித்தார். ‘நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுவது’ பற்றி அவர் சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
2, 3. (அ) “மனப்பான்மை” என்ற வார்த்தையை பவுல் பயன்படுத்தியபோது எதை அர்த்தப்படுத்தினார்? (ஆ) நல்ல மனப்பான்மை வெளிக்காட்டுவது சம்பந்தமாக நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
2 “மனப்பான்மை” என்ற வார்த்தையை பவுல் பயன்படுத்தியபோது, ஒருவருடைய குணத்தை அல்லது சிந்தையை அர்த்தப்படுத்தினார் என்று அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது. சிலர் மென்மையானவர்களாக, தயவுள்ளவர்களாக, கனிவானவர்களாக, தாராள குணமுள்ளவர்களாக, மன்னிக்கும் குணமுள்ளவர்களாக இருக்கலாம். பைபிள் குறிப்பிடுகிறபடி, சிலர் ‘அமைதியும் சாந்தமும்,’ ‘குளிர்ந்த மனமும்’ உள்ளவர்களாக இருக்கலாம். (1 பே. 3:4; நீதி. 17:27) மறுபட்சத்தில், சிலர் குத்தலாய்ப் பேசுபவர்களாக, பொருளாசை பிடித்தவர்களாக, பிறரைப் புண்படுத்துபவர்களாக, சுதந்திர மனப்போக்குள்ளவர்களாக இருக்கலாம். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், ஒழுக்கங்கெட்டவர்களாக, கீழ்ப்படியாதவர்களாக, ஏன் அடங்காதவர்களாகவும் இருக்கலாம்.
3 எனவே, “நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள்மீது நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருப்பதாக” என்று பவுல் எழுதியபோது, கடவுளுடைய சித்தத்திற்கும் கிறிஸ்துவின் சுபாவத்திற்கும் இசைவாக உள்ள மனப்பான்மையை வெளிக்காட்டும்படியே தன் சகோதரர்களை ஊக்கப்படுத்தினார். (பிலி. 4:23; கொலோசெயர் 3:9-12-ஐ வாசியுங்கள்.) இன்று நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எப்படிப்பட்ட மனப்பான்மையை நான் வெளிக்காட்டுகிறேன்? யெகோவாவைப் பிரியப்படுத்தும் மனப்பான்மையை வெளிக்காட்ட நான் இன்னும் என்ன செய்யலாம்? சபையில் நிலவுகிற நல்ல மனப்பான்மையை மெருகூட்ட என் பங்கில் என்ன செய்யலாம்?’ உதாரணத்திற்கு, சூரியகாந்தி மலர்கள் நிறைந்த ஒரு தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கண்களைக் கொள்ளைகொள்ளும் ஒவ்வொரு மலரும் அந்த முழுத் தோட்டத்தின் அழகிற்கு அழகு சேர்க்கிறது. அதுபோலவே, முழு சபையின் அழகிற்கு அழகு சேர்க்கும் “மலர்களில்” நாமும் ஒருவராக இருக்கிறோமா? அப்படியிருப்பதற்குக் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். யெகோவாவைப் பிரியப்படுத்தும் மனப்பான்மையை வெளிக்காட்ட நாம் என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
உலகச் சிந்தையை ஒதுக்கித் தள்ளுங்கள்
4. “உலகத்தின் சிந்தை” எதைக் குறிக்கிறது?
4 பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியையே பெற்றிருக்கிறோம்.” (1 கொ. 2:12) “உலகத்தின் சிந்தை” எதைக் குறிக்கிறது? இது, எபேசியர் 2:2-ல் சொல்லப்பட்ட அதே சிந்தையைக் குறிக்கிறது: “ஒருகாலத்தில் நீங்கள் இந்த உலகம் போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தீர்கள்; காற்றுபோல் நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகச் சிந்தையை, அதாவது கீழ்ப்படியாதவர்களிடம் தற்போது செயல்படுகிற சிந்தையை ஆளுகிறவனுடைய விருப்பத்தின்படி வாழ்ந்துகொண்டிருந்தீர்கள்.” காற்று நம்மைச் சூழ்ந்திருப்பது போல, இந்த உலகச் சிந்தையும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. உதாரணமாக, இன்று பெரும்பாலோர், ‘நீ யார் எனக்குச் சொல்ல?’ என்று அகம்பாவத்துடன் கேட்கிறார்கள்; ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்!’ என்று கோஷம்போடுகிறார்கள். சாத்தானுடைய உலகத்தின் பாகமாக உள்ள இவர்களைத்தான் ‘கீழ்ப்படியாதவர்கள்’ என்று அந்த வசனம் குறிப்பிடுகிறது.
5. இஸ்ரவேலரில் சிலர் என்ன கெட்ட மனப்பான்மையை வெளிக்காட்டினார்கள்?
5 இப்படிப்பட்ட மனப்பான்மை காலங்காலமாகவே இருந்துவந்திருக்கிறது. மோசேயின் நாட்களில், கோராகு என்பவன் இஸ்ரவேலரை முன்நின்று வழிநடத்தியவர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்தினான். குறிப்பாக, குருமார்களாய் சேவை செய்த ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் விரோதமாகப் பேசினான். அபூரணத்தினால் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளை ஒருவேளை அவன் கவனித்திருக்கலாம். அல்லது, மோசே தன் உறவினர்களுக்குத் தனி சலுகை காட்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கலாம். எப்படியிருந்தாலும், கோராகு விஷயங்களை மனிதக் கண்ணோட்டத்தில்தான் பார்த்தான். அதனால்தான், யெகோவாவினால் நியமிக்கப்பட்டவர்களை எதிர்த்து மரியாதைக்குறைவாகப் பேசினான்; ‘நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள் . . . யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்’ என்று கேள்வி கேட்டான். (எண். 16:3) அவ்வாறே, தாத்தானும் அபிராமும் மோசேயைக் குற்றம்சாட்டி, “எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?” என்றார்கள். மோசே அவர்களை ஆளனுப்பி அழைத்தபோது, “நாங்கள் வருவதில்லை” என்று ஆணவத்தோடு சொன்னார்கள். (எண். 16:12-14) அவர்களுடைய கலக மனப்பான்மை யெகோவாவுக்குக் கோபமூட்டியது. அதனால், கலகம் செய்த அனைவரையும் அவர் அழித்துப்போட்டார்.—எண். 16:28-35.
6. முதல் நூற்றாண்டு சபையிலிருந்த சிலர் தங்கள் கெட்ட மனப்பான்மையை எப்படி வெளிக்காட்டினார்கள், அதற்குக் காரணம் என்ன?
6 முதல் நூற்றாண்டு சபையிலிருந்த சிலரும்கூட, ‘தலைமை ஸ்தானத்தில் உள்ளவர்களை அவமதித்தார்கள்,’ குறைகூறினார்கள். (யூ. 8) இவர்கள் தங்களுடைய பொறுப்புகளைக் குறித்து அதிருப்தி அடைந்திருந்தார்கள்; எனவே, சபையில் உள்ளப்பூர்வமாய்ச் சேவை செய்துவந்த மூப்பர்களுக்கு எதிராக மற்றவர்களைத் திருப்பிவிட முயற்சி செய்தார்கள்.—3 யோ. 9, 10-ஐ வாசியுங்கள்.
7. எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டுவது தவறானது?
7 கிறிஸ்தவ சபையில் அப்படிப்பட்ட மனப்பான்மைக்கு இடமில்லை. ஆகவேதான், இந்த விஷயத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். மோசேயின் காலத்திலும் அப்போஸ்தலன் யோவானின் காலத்திலும் இருந்தது போலவே இன்றுள்ள மூப்பர்களும் அபூரணர்களே. அதனால் அவர்களும் தவறு செய்யலாம். அந்தத் தவறால் ஒருவேளை நாம் பாதிக்கப்பட்டால், “எனக்கு நீதி வேண்டும்” என்று போராடுவதோ, “இந்தச் சகோதரர்மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என்று விடாப்பிடியாய் இருப்பதோ எவ்வளவு மோசமானது! இப்படிப்பட்ட கலக மனப்பான்மை உலகச் சிந்தையை வெளிக்காட்டுவதாக இருக்கும். மூப்பர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை யெகோவா பெரிதுபடுத்தாமல் இருக்கலாம். நாமும் அவ்வாறே பெரிதுபடுத்தாமல் இருக்கலாம், அல்லவா? பெரிய பாவங்களைச் செய்த சிலர், நீதிவிசாரணைக் குழுவிலுள்ள மூப்பர்களிடம் ஏதோவொன்று பிடிக்காததால், விசாரணைக்கே போக மறுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை யாருக்கு ஒப்பிடலாம்? தன் நோய்க்குச் சரியான சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவர் இருந்தும், அவரிடம் ஏதோவொன்று பிடிக்காததால், அவரிடம் சிகிச்சைக்கே போக மறுக்கும் ஒரு நோயாளிக்கு ஒப்பிடலாம்.
8. மூப்பர்களைக் குறித்து சரியான மனப்பான்மையோடு இருக்க எந்த வசனங்கள் நமக்கு உதவும்?
8 அப்படிப்பட்ட மனப்பான்மையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் ‘வலது கையில் ஏழு நட்சத்திரங்கள் இருப்பதாக’ பைபிள் சொல்வதை நினைவில் வைக்க வேண்டும். இந்த “நட்சத்திரங்கள்” பரலோக நம்பிக்கையுள்ள மூப்பர்களைக் குறிப்பதாக இருந்தாலும், சபைகளிலுள்ள எல்லா மூப்பர்களையும் குறிக்கின்றன. இந்த ‘நட்சத்திரங்களை’ இயேசு தாம் விரும்புகிறபடியெல்லாம் வழிநடத்த முடியும். (வெளி. 1:16, 20) அவர் கிறிஸ்தவ சபைக்குத் தலைவராக இருப்பதால் மூப்பர்களுக்கிடையே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்திருக்கிறார். ‘தீ ஜுவாலையைப் போன்ற’ கண்கள் இயேசுவுக்கு இருப்பதால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே, மூப்பர்களில் ஒருவர் தவறு செய்யும்போது தமக்கே உரிய வழியில், தமக்கே உரிய நேரத்தில் அதை அவர் சரிசெய்வார். (வெளி. 1:14) இதற்கிடையே, அவருடைய வலது கையிலுள்ள மூப்பர்களுக்கு நாம் தொடர்ந்து மரியாதை காட்ட வேண்டும். இதைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைக் காத்து வருகிறார்கள்; ஆகவே, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்; அப்போது, அவர்கள் இதைத் துக்கத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதைத் துக்கத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்.”—எபி. 13:17.
9. (அ) ஒருவர் கண்டித்துத் திருத்தப்படும்போது எது தெரியவரும்? (ஆ) திருத்தப்படும்போது என்ன செய்வது ஞானமானது?
9 ஒருவர் கண்டித்துத் திருத்தப்படும்போது அல்லது அவரிடமிருந்து சபைப் பொறுப்புகள் நீக்கப்படும்போது அவருடைய உண்மையான மனப்பான்மை தெரியவரும். வன்முறைமிக்க வீடியோ கேம்ஸ் விளையாடிவந்த ஓர் இளம் சகோதரருக்கு மூப்பர்கள் அன்பாக அறிவுரை கொடுத்தார்கள். வருத்தகரமாக, அவர் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வேதப்பூர்வத் தகுதிகளை இழந்த அவர், உதவி ஊழியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். (சங். 11:5; 1 தீ. 3:8-10) ஆனால், மூப்பர்களின் இந்த முடிவை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்; அதைப் பற்றி எல்லோரிடமும் பேச ஆரம்பித்தார். மூப்பர்களைக் குறைகூறி கிளை அலுவலகத்திற்குப் பலமுறை கடிதம் எழுதினார். சபையிலுள்ள மற்றவர்களையும் அவ்வாறே எழுதச் சொன்னார். உண்மையில் ஒருவர் இப்படியெல்லாம் செய்து தன் தவறை நியாயப்படுத்த நினைத்தால் சபையின் சமாதானம் தவிடுபொடியாகுமே தவிர தழைக்காது. எனவே, நாம் கண்டித்துத் திருத்தப்படும்போது நம் பலவீனங்களைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அதைக் கருதி, மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதுவே ஞானமானது.—புலம்பல் 3:28, 29-ஐ வாசியுங்கள்.
10. (அ) கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டுமென யாக்கோபு 3:16-18 கற்பிக்கிறது? (ஆ) ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்திற்கு’ இசைவாகச் செயல்பட்டால் வரும் பயன்கள் என்ன?
10 கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும், வெளிக்காட்டக் கூடாது என்பதை யாக்கோபு 3:16-18 நமக்குக் கற்பிக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: “பொறாமையும் பகைமையும் எங்கேயோ, அங்கே கலகங்களும் கீழ்த்தரமான எல்லாச் செயல்களும் இருக்கும். பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், கீழ்ப்படியத் தயாரானதாகவும், இரக்கமும் நற்செயல்களும் நிறைந்ததாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிவேஷமற்றதாகவும் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் சமாதானச் சூழலில் நீதியின் விதையை விதைத்து, அதன் கனியை அறுவடை செய்வார்கள்.” ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்திற்கு’ இசைவாகச் செயல்பட்டால், கடவுளுடைய குணங்களைப் பின்பற்றுவோம். இவ்விதத்தில், நல்ல மனப்பான்மை காட்ட ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவோம், சபையில் சமாதானம் செழித்தோங்கச் செய்வோம்.
சபையில் மரியாதையான மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள்
11. (அ) சரியான மனப்பான்மை இருந்தால் என்ன செய்ய மாட்டோம்? (ஆ) தாவீதின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 “கடவுளுடைய சபையாகிய மந்தையை மேய்ப்பதற்கு” யெகோவா மூப்பர்களை நியமித்திருக்கிறார் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். (அப். 20:28; 1 பே. 5:2) ஆகவே, நாம் மூப்பர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கடவுளுடைய ஏற்பாடுகளை மதிப்பதுதான் ஞானமானது. சரியான மனப்பான்மை இருந்தால், சபைப் பொறுப்புகளைப் பெற நாம் துடிக்க மாட்டோம். தாவீது எங்கே தன் சிம்மாசனத்தைத் தட்டிப்பறித்துவிடுவாரோ என்ற பயத்தில் சவுல் ராஜா, ‘தாவீதை எப்போதும் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்.’ (1 சா. 18:9, NW) அவர் கெட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொண்டதால் தாவீதைக் கொன்றுபோடத் துடித்தார். பதவி வெறிபிடித்த சவுலைப் போல் இல்லாமல் தாவீதைப் போல் இருப்பது எவ்வளவு நல்லது! வாலிப வயதில் அவரை அநீதி துரத்தித் துரத்தி துன்புறுத்தியபோதிலும் கடவுளால் நியமிக்கப்பட்டவருக்கு மரியாதை காட்ட அவர் தவறவே இல்லை.—1 சாமுவேல் 26:23-ஐ வாசியுங்கள்.
12. சபையின் ஒற்றுமைக்குப் பங்களிக்க நாம் என்ன செய்யலாம்?
12 எல்லோருக்கும் ஒரே விதமான கருத்துகள் இருப்பதில்லை என்பதால், சகோதர சகோதரிகளுக்கு இடையே, ஏன் மூப்பர்களுக்கு இடையேகூட எரிச்சலும் கோபமும் தலைதூக்கலாம். ஆனால், நமக்கு இருக்க வேண்டிய மனப்பான்மையைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்,” “நீங்களே உங்களை விவேகிகள் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்.” (ரோ. 12:10, 16) ஆகவே, ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்றில்லாமல், ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்க முடியும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய கருத்துகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தோமானால், சபையின் ஒற்றுமைக்குப் பங்களிப்போம்.—பிலி. 4:5.
13. நம்முடைய கருத்துகளைச் சொன்ன பிறகு என்ன செய்ய வேண்டும், இதற்கு பைபிளில் என்ன உதாரணம் இருக்கிறது?
13 சபையில் ஏதோவொரு விஷயம் சரியில்லை என்று நாம் கவனித்தால், நம் கருத்தைச் சொல்வது தவறா? தவறில்லை. முதல் நூற்றாண்டில், ஒரு பிரச்சினையைக் குறித்து பயங்கரமான கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டன. “இதன் காரணமாக, பவுலையும் பர்னபாவையும் வேறு சிலரையும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் அனுப்ப வேண்டுமென்று” சகோதரர்கள் தீர்மானித்தார்கள். (அப். 15:2) இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதைக் குறித்து அந்தச் சகோதரர்களுக்கு வித்தியாசமான கருத்துகள் நிச்சயம் இருந்திருக்கும், அதை அவர்கள் தெரிவிக்கவும் செய்தார்கள். என்றாலும், கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்பட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்த பின்பு, தங்கள் சொந்தக் கருத்துகளைப் பற்றிப் பேசவே இல்லை. எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானம் கடிதம் மூலமாகச் சபைகளுக்குத் தெரிவிக்கப்பட்டபோது சபையார் “ஊக்கமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்,” ‘விசுவாசத்திலும் பலப்பட்டார்கள்.’ (அப். 15:31; 16:4, 5) இன்றும்கூட, ஏதோவொரு விஷயத்தைக் குறித்து நம்முடைய கருத்தை மூப்பர்களிடம் சொன்ன பிறகு, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று முழு நம்பிக்கையோடு அதை அவர்களிடம் விட்டுவிட வேண்டும்.
மற்றவர்களோடு பழகும்போது நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள்
14. நாம் எப்படித் தனிப்பட்ட விதத்தில் நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டலாம்?
14 நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுவதற்குத் தனிப்பட்ட விதத்தில் நிறைய வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. உதாரணத்திற்கு, மற்றவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது, மன்னிக்கும் மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும்; அது நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.” (கொலோ. 3:13) “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்” என்ற வார்த்தைகள், ஒருவருக்கொருவர் எரிச்சலடைவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதைக் காட்டுகின்றன. என்றபோதிலும், மற்றவர்களுடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி சபையின் சமாதானத்தைக் குலைத்துப்போடுவதற்குப் பதிலாக, யெகோவாவைப் போலவே தாராளமாய் மன்னிப்போமாக! ஒன்றுசேர்ந்து அவருக்குச் சேவை செய்வோமாக!
15. (அ) மன்னிப்பது பற்றி யோபுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) நல்ல மனப்பான்மையை வெளிக்காட்ட ஜெபம் நமக்கு எவ்வாறு உதவும்?
15 யோபுவிடமிருந்து நாம் மன்னிக்கக் கற்றுக்கொள்ளலாம். அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மூன்று நண்பர்கள் சுடுசொற்களை அள்ளிவீசி அவருடைய மனதைச் சுட்டார்கள். இருந்தபோதிலும், யோபு அவர்களை மன்னித்தார். எப்படி? ‘யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தார்.’ (யோபு 16:2; 42:10) மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது அவர்களைக் குறித்த நம் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள உதவும். நம்முடைய சகோதரர்கள் எல்லோருக்காகவும் ஜெபம் செய்வது கிறிஸ்துவின் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவும். (யோவா. 13:34, 35) அவர்களுக்காக ஜெபம் செய்வதோடு, கடவுளுடைய சக்தியை நாம் பெற்றுக்கொள்வதற்காகவும் ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 11:13) மற்றவர்களோடு பழகும்போது கிறிஸ்தவப் பண்புகளை வெளிக்காட்ட கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்.—கலாத்தியர் 5:22, 23-ஐ வாசியுங்கள்.
சபையில் நிலவும் நல்ல மனப்பான்மைக்குப் பங்களியுங்கள்
16, 17. “நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற” விஷயத்தில் நீங்கள் என்ன செய்ய தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
16 சபையிலுள்ள ஒவ்வொருவரும் நல்ல மனப்பான்மையை வெளிக்காட்ட கடினமாக முயற்சி செய்யும்போது முழு சபையும் பயனடையும். இதுவரை கலந்தாலோசித்த விஷயங்களிலிருந்து, நல்ல மனப்பான்மையை வெளிக்காட்ட இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு நாம் வரலாம். அப்படியானால், கடவுளுடைய வார்த்தை சொல்வதுபோல் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய நாம் முயல வேண்டும். (எபி. 4:12) சபைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ விரும்பிய பவுல் இவ்வாறு சொன்னார்: “என்னிடம் எந்தக் குற்றமும் இருப்பதாக என் மனதிற்குத் தோன்றவில்லை; அதற்காக நான் குற்றமற்றவனாகிவிட மாட்டேன்; என்னை நியாயந்தீர்ப்பவர் யெகோவாவே.”—1 கொ. 4:4.
17 பரம ஞானத்திற்கு இசைவாக நாம் செயல்படும்போது நம்மைக் குறித்தோ நம்முடைய சபைப் பொறுப்புகளைக் குறித்தோ மட்டுக்குமீறி நினைக்க மாட்டோம்; மாறாக, சபையில் நிலவும் நல்ல மனப்பான்மையை மெருகூட்ட நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்வோம். மன்னிக்கும் மனப்பான்மையைக் காட்டுவதும், மற்றவர்களுடைய நல்ல குணங்களைப் பார்ப்பதும் சகோதர, சகோதரிகளோடு சமாதான உறவில் சங்கமம் ஆக உதவும். (பிலி. 4:8) இப்படியெல்லாம் செய்தோமானால், “நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற” நம்மைப் பார்த்து யெகோவாவும் இயேசுவும் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள், சந்தேகமே இல்லை!—பிலே. 25.