1 சாமுவேல்
18 சவுலிடம் தாவீது பேசியதைக் கேட்ட பிறகு, யோனத்தான்+ தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்.+ 2 அந்த நாளிலிருந்து சவுல், தாவீதை அவனுடைய அப்பாவின் வீட்டுக்குப் போக விடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.+ 3 யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்ததால்,+ அவரும் தாவீதும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+ 4 பின்பு யோனத்தான், தான் போட்டிருந்த கையில்லாத அங்கியையும், தன்னுடைய உடை, வாள், வில், இடுப்புவார் ஆகியவற்றையும் தாவீதுக்குக் கொடுத்தார். 5 தாவீது போருக்குப் போக ஆரம்பித்தார். அவர் சவுல் அனுப்பிய எல்லா இடங்களுக்கும் போய் வெற்றியோடு திரும்பியதால்,*+ அவரை சவுல் போர்வீரர்களுக்குத் தலைவராக்கினார்.+ அதைப் பார்த்து எல்லா ஜனங்களும் சவுலின் ஊழியர்களும் சந்தோஷப்பட்டார்கள்.
6 தாவீதும் மற்ற வீரர்களும் பெலிஸ்தியர்களை வீழ்த்திவிட்டுத் திரும்பியபோதெல்லாம், இஸ்ரவேலின் எல்லா நகரங்களிலிருந்தும் பெண்கள் கூடிவந்து, கஞ்சிராவோடும்+ தம்பூராவோடும் சந்தோஷமாக ஆடிப்பாடி+ சவுல் ராஜாவை வரவேற்றார்கள். 7 வெற்றியைக் கொண்டாடிய அந்தப் பெண்கள்,
“சவுல் கொன்றது ஆயிரம்,
தாவீது கொன்றது பல்லாயிரம்”+
என்று பாடினார்கள். 8 அவர்கள் அப்படிப் பாடியது சவுலுக்குப் பிடிக்கவே இல்லை. அவர் பயங்கர எரிச்சலோடு,+ “தாவீதுக்குப் பல்லாயிரமாம், எனக்கு ஆயிரமாம். இனி அரச பதவி மட்டும்தான் அவனுக்கு பாக்கி!”+ என்றார். 9 அந்த நாளிலிருந்து சவுல் எப்போதும் தாவீதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்.
10 அடுத்த நாள், சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி கடவுள் விட்டுவிட்டார்.+ அரண்மனைக்குள் அவர் வினோதமாக* நடந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது தாவீது வழக்கம் போலவே யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ சவுல் தன் கையில் ஈட்டியை வைத்திருந்தார்.+ 11 அவர் தன் மனதில், “தாவீதைச் சுவரோடு சுவராகக் குத்திக் கொல்லப்போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அந்த ஈட்டியை எறிந்தார்.+ இரண்டு தடவை அவர் அதை எறிந்தபோதும் தாவீது அவரிடமிருந்து தப்பினார். 12 யெகோவா தன்னைவிட்டு விலகி+ தாவீதோடு இருப்பதை சவுல் புரிந்துகொண்டதால், தாவீதை நினைத்துப் பயந்தார்.+ 13 அதனால், தாவீதைத் தன் முன்னாலிருந்து அனுப்பிவிட்டு, அவரை ஆயிரம் வீரர்களுக்குத் தலைவராக்கினார். தாவீதின் தலைமையில் வீரர்கள் போருக்குப் போனார்கள்.+ 14 தாவீது எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார்,*+ யெகோவா அவரோடு இருந்தார்.+ 15 தாவீதுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைப்பதைப் பார்த்து சவுல் பயந்துபோனார். 16 ஆனால், இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருந்த ஜனங்கள் எல்லாரும் தாவீதை நேசித்தார்கள். ஏனென்றால், போருக்குப் போகும்போது அவர்தான் அவர்களுக்குத் தலைமைதாங்கினார்.
17 சவுல் தன் மனதில், ‘இவன்மேல் நான் கை வைப்பது நல்லதல்ல, பெலிஸ்தியர்களே இவனை வெட்டிச் சாய்க்கட்டும்’+ என்று நினைத்தார். அதனால் தாவீதிடம், “என் மூத்த மகள் மேரபை+ உனக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன்.+ ஆனால், நீ எனக்காகத் தொடர்ந்து உன் வீரத்தைக் காட்டி யெகோவாவின் போர்களைத் தலைமைதாங்கி நடத்த வேண்டும்”+ என்று சொன்னார். 18 அதற்கு தாவீது, “ராஜாவின் மருமகனாவதற்கு எனக்கென்ன அருகதை இருக்கிறது? இஸ்ரவேலில் என் அப்பாவின் குடும்பம் சாதாரணக் குடும்பம்தானே?”+ என்றார். 19 சவுல் தன் மகள் மேரபை தாவீதுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டிய சமயம் வந்தபோது, மெகொல்லாத்தியனாகிய ஆதரியேலுக்கு+ அவளைக் கொடுத்துவிட்டார்.
20 சவுலின் மகள் மீகாள்+ தாவீதைக் காதலித்தாள். இந்த விஷயம் சவுலிடம் சொல்லப்பட்டபோது அவர் சந்தோஷப்பட்டார். 21 “அவன் கதையை முடிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்; அவளை அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொல்லி பெலிஸ்தியர்களின் கையில் சிக்க வைத்துவிடுகிறேன்”+ என்று தன் மனதில் சொல்லிக்கொண்டார். பின்பு தாவீதிடம் இரண்டாவது தடவையாக, “நீ என் மகளைக் கல்யாணம் செய்துகொள், இன்று நாம் சம்பந்தம் பண்ணலாம்” என்றார். 22 அதோடு, சவுல் தன்னுடைய ஊழியர்களைக் கூப்பிட்டு, “நீங்கள் தாவீதிடம் போய், ‘ராஜாவுக்கு உன்னைப் பிடித்துவிட்டது, அவருடைய ஊழியர்கள் எல்லாரும் உன்மேல் பிரியமாக இருக்கிறார்கள். அதனால் ராஜாவின் மாப்பிள்ளை ஆகிவிடு’ என்று ரகசியமாகச் சொல்லுங்கள்” என்றார். 23 சவுலின் ஊழியர்கள் இந்த விஷயத்தை தாவீதின் காதில் போட்டபோது அவர் அவர்களிடம், “ராஜாவின் மாப்பிள்ளையாக ஆவது உங்களுக்கு அவ்வளவு லேசாகத் தெரிகிறதா? நானே ஒரு ஏழை, ரொம்பச் சாதாரண ஆள்”+ என்றார். 24 தாவீது சொன்னதை சவுலின் ஊழியர்கள் அவரிடம் சொன்னார்கள்.
25 பெலிஸ்தியர்களின் கையால் தாவீதைச் சாகடிக்க சவுல் திட்டம் போட்டதால் தன் ஊழியர்களிடம், “நீங்கள் தாவீதிடம் போய், ‘ராஜாவுக்கு மணமகள் விலை*+ எதுவும் வேண்டாமாம், 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல்களை*+ கொண்டுவந்தால் போதுமாம்’ என்று சொல்லுங்கள்” என்றார். 26 அதன்படியே, அவருடைய ஊழியர்கள் தாவீதிடம் போய் இதைச் சொன்னார்கள். ராஜாவின் மாப்பிள்ளை ஆவதற்கு தாவீதும் ஆசைப்பட்டார்.+ சவுல் கொடுத்த கெடு முடிவதற்கு முன்பே, 27 தாவீது தன்னுடைய ஆட்களோடு போய் 200 பெலிஸ்தியர்களை வெட்டிச் சாய்த்தார். ராஜாவின் மாப்பிள்ளை ஆவதற்காக அந்த 200 பெலிஸ்தியர்களின் நுனித்தோல்களையும் கொண்டுவந்து கொடுத்தார். அதனால், சவுல் தன்னுடைய மகள் மீகாளை அவருக்குக் கல்யாணம் செய்து வைத்தார்.+ 28 யெகோவா தாவீதோடு இருப்பதையும்,+ தன் மகள் மீகாள் தாவீதை நேசிப்பதையும்+ சவுல் புரிந்துகொண்டதால், 29 தாவீதை நினைத்து இன்னும் அதிகமாகப் பயந்தார். வாழ்நாள் முழுக்க அவரை எதிரியாகவே பார்த்தார்.+
30 பெலிஸ்தியர்களின் தலைவர்கள் போர் செய்ய வந்த ஒவ்வொரு தடவையும், சவுலின் ஊழியர்கள் எல்லாரையும்விட தாவீதுக்கு அதிக வெற்றி கிடைத்தது.*+ அதனால், அவருக்குப் பேரும் புகழும் கிடைத்தது.+