பிற்சேர்க்கை
முக்காடு—எப்போது அவசியம், ஏன் அவசியம்?
பைபிளின்படி, ஒரு கிறிஸ்தவ பெண் எப்போதெல்லாம் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்? ஏன் போட வேண்டும்? இது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்கலாம். கடவுளுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க பவுல் நமக்கு உதவுகிறார். (1 கொரிந்தியர் 11:3-16) நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய மூன்று விஷயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்: (1) ஒரு பெண் என்னென்ன செய்யும்போது முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும், (2) என்னென்ன சூழ்நிலைகளில் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும், (3) என்னென்ன காரணங்களுக்காக முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்.
என்னென்ன செய்யும்போது. இரண்டு சந்தர்ப்பங்களை பவுல் குறிப்பிடுகிறார்; ஒன்று ஜெபம் செய்யும்போது, மற்றொன்று தீர்க்கதரிசனம் சொல்லும்போது. (வசனங்கள் 4, 5) ஜெபம் செய்வதென்றால், மிகுந்த பயபக்தியோடு யெகோவாவிடம் பேசுவதாகும். இன்று தீர்க்கதரிசனம் சொல்வதென்றால், ஒரு கிறிஸ்தவ ஊழியர் பைபிளைப் பற்றி கற்றுக்கொடுப்பதாகும். அப்படியென்றால், ஜெபம் செய்யும் போதெல்லாம் அல்லது பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கும் போதெல்லாம் ஒரு பெண் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டுமென பவுல் சொன்னாரா? இல்லை. என்ன சூழ்நிலையில் அவள் ஜெபிக்கிறாள் அல்லது கற்பிக்கிறாள் என்பதைப் பொறுத்தே முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்.
என்னென்ன சூழ்நிலைகளில். இரண்டு சூழ்நிலைகளை பவுல் குறிப்பிடுகிறார்; ஒன்று குடும்பத்தில், மற்றொன்று சபையில். “பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான், . . . ஜெபம் செய்யும்போது அல்லது தீர்க்கதரிசனம் சொல்லும்போது முக்காடு போடாத ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய தலையை அவமதிக்கிறாள்” என்று பவுல் சொல்கிறார். (வசனங்கள் 3, 5) குடும்பத்தில் கணவனைத்தான் மனைவிக்குத் தலையாக யெகோவா நியமித்திருக்கிறார். ஆகவே, கணவரின் அதிகாரத்தை மதிக்காமல் அவருக்கு யெகோவா கொடுத்திருக்கிற பொறுப்புகளை மனைவி தன் கையில் எடுத்துக்கொண்டால் தன் கணவரை அவமதிப்பாள். உதாரணத்திற்கு, பைபிள் படிப்பை மனைவி நடத்தும்போது அந்த இடத்தில் கணவர் இருந்தால், அவருடைய அதிகாரத்திற்கு மதிப்புக் கொடுத்து தன் தலையில் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். கணவர் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி பெறாதிருந்தாலும் சரி, அவள் முக்காடு போட வேண்டும், ஏனென்றால் அவரே குடும்பத்தின் தலைவர்.a அதுபோலவே, ஞானஸ்நானம் பெற்ற மகன் மைனராக இருந்தாலும் தாய் ஜெபம் செய்யும்போதோ கற்பிக்கும்போதோ, அவன் அந்த இடத்தில் இருந்தால் அவள் முக்காடு போட வேண்டும்; மகன் குடும்பத்தின் தலைவனாக இல்லாவிட்டாலும், கிறிஸ்தவ சபையிலுள்ள ஞானஸ்நானம் பெற்ற ஆண்களுக்கு இருக்கிற அதிகாரம் அவனுக்கும் இருப்பதால் அவள் முக்காடு போட வேண்டும்.
கிறிஸ்தவ சபையைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், “வேறு ஏதாவது வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருவன் வாக்குவாதம் செய்தால், எங்களுக்கும் கடவுளுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட எந்த வழக்கமும் இல்லை என்று அவன் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொல்கிறார். (வசனம் 16) கிறிஸ்தவ சபையில், ஞானஸ்நானம் பெற்ற ஆண்களுக்குத்தான் தலைமை ஸ்தானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (1 தீமோத்தேயு 2:11-14; எபிரெயர் 13:17) ஆண்கள் மட்டுமே மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்; தன்னுடைய மந்தையை மேய்க்கும் பொறுப்பை அவர்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 20:28) இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, ஞானஸ்நானம் பெற்ற தகுதியுள்ள ஆண் கையாள வேண்டிய பொறுப்பு ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கப்படலாம். உதாரணத்திற்கு, ஞானஸ்நானம் பெற்ற தகுதியுள்ள ஆண் இல்லாத பட்சத்தில் அல்லது வராத பட்சத்தில் வெளி ஊழியக் கூட்டத்தை அவள் நடத்த வேண்டியிருக்கலாம். அல்லது, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் படிப்பை ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவ ஆணின் முன்னிலையில் அவள் நடத்த வேண்டியிருக்கலாம்.b இவை கிறிஸ்தவ சபைக்குரிய நடவடிக்கைகளாகவே இருப்பதால் அவள் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவள் கையாளும் பொறுப்பு பொதுவாக ஓர் ஆண் கையாள வேண்டிய பொறுப்பு என்பதை அவள் புரிந்து நடப்பதாக இருக்கும்.
மறுபட்சத்தில், வழிபாடு சம்பந்தப்பட்ட வேறு பல அம்சங்களில் ஈடுபடும்போது அவள் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, கிறிஸ்தவக் கூட்டங்களில் பதில் சொல்லும்போது, கணவனுடனோ ஞானஸ்நானம் பெற்ற மற்றொரு ஆணுடனோ வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, அல்லது கணவர் இல்லாத சமயத்தில் ஞானஸ்நானம் பெறாத பிள்ளைகளுக்குப் படிப்பு நடத்தும்போது அல்லது அவர்களோடு ஜெபம் செய்யும்போது அவள் முக்காடு போட வேண்டிய அவசியமில்லை. இது சம்பந்தமாக உங்களுக்கு இன்னும் பல கேள்விகள் வரலாம்; முக்காடு போடுவதா வேண்டாமா என ஒரு சகோதரிக்குக் குழப்பமாக இருந்தால், நம்முடைய பிரசுரங்களில் கூடுதலாக ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.c அப்போதும் என்ன செய்வதென்று தெளிவாகத் தெரியாவிட்டால், மனசாட்சியின் பொருட்டு அவள் முக்காடு போட்டுக்கொள்வதில் தவறில்லை. இதைத்தான் 241-ஆம் பக்கத்தில் உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.
என்னென்ன காரணங்களுக்காக. 10-வது வசனத்தில், ஒரு கிறிஸ்தவ பெண் ஏன் முக்காடு போட வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களை பவுல் குறிப்பிடுகிறார்: “தேவதூதர்களை முன்னிட்டும், பெண் தன்னுடைய தலையில் கீழ்ப்படிதலின் [“அதிகாரத்தின்,” பொது மொழிபெயர்ப்பு] அடையாளமாகிய முக்காட்டைப் போட்டுக்கொள்ள வேண்டும்.” முதலாவதாக, ‘அதிகாரத்தின் அடையாளம்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ஒரு பெண் முக்காடு போட்டுக்கொள்வதன் மூலம், சபையிலுள்ள ஞானஸ்நானம் பெற்ற ஆண்களுக்கு யெகோவா அளித்திருக்கும் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதைக் காட்டுகிறாள். இவ்விதத்தில், யெகோவா தேவன்மீது அன்பு வைத்திருப்பதையும் அவருக்கு விசுவாசமாய் இருப்பதையும் காட்டுகிறாள். இரண்டாவதாக, “தேவதூதர்களை முன்னிட்டும்” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ஒரு பெண் முக்காடு போட்டுக்கொள்வது பலம்படைத்த தேவதூதர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி, யெகோவாவின் அமைப்பில் உள்ளவர்கள் தெய்வீக அதிகாரத்திற்கு மதிப்பு கொடுப்பதை தேவதூதர்கள் ஆர்வமாய் கவனிக்கிறார்கள். இவ்விஷயத்தில் பாவ இயல்புள்ளவர்களாகிய மனிதர்களுடைய முன்மாதிரியிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள். ஏனென்றால், தேவதூதர்களும் யெகோவாவின் ஏற்பாட்டிற்கு அடிபணிந்து நடக்க வேண்டும்—முற்காலங்களில் தேவதூதர்கள் பலர் அடிபணிந்து நடக்கத் தவறிவிட்டார்கள். (யூதா 6) ஞானஸ்நானம் பெற்ற ஓர் ஆணைவிட ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு அதிக அனுபவமும் அறிவும் புத்திக்கூர்மையும் இருந்தாலும் மறுபேச்சின்றி அவருடைய அதிகாரத்திற்கு அவள் அடிபணிந்து நடப்பதைத் தேவதூதர்கள் கவனிக்கலாம். சிலசமயங்களில், அப்படி அடிபணிந்து நடக்கும் ஒரு கிறிஸ்தவ பெண் பரலோக நம்பிக்கை பெற்றவளாக இருக்கலாம். அவள் இறுதியில் தேவதூதர்களைவிட உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்று கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்வாள். இப்போது அவள் தேவதூதர்களுடைய பார்வையில் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறாள்! சொல்லப்போனால், பற்றுறுதியையும் கீழ்ப்படிதலையும் மனத்தாழ்மையோடு காட்டுவதில் கோடானுகோடி தேவதூதர்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் பாக்கியத்தை எல்லா சகோதரிகளும் பெற்றிருக்கிறார்கள்!
a பொதுவாக, ஞானஸ்நானம் பெற்ற கணவன் அந்த இடத்தில் இருந்தால் ஒரு கிறிஸ்தவ மனைவி சப்தமாக ஜெபம் செய்யக் கூடாது. ஆனால், வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இதற்கு விதிவிலக்கு உண்டு; உதாரணத்திற்கு, ஏதோவொரு உடல்நலப் பிரச்சினையால் கணவனுக்குப் பேச்சுவராமல் போய்விட்டால் மனைவி அவர் முன்னிலையில் சப்தமாக ஜெபம் செய்யலாம்.
b ஒரு சகோதரி பைபிள் படிப்பு நடத்தும்போது, அவளுடைய கணவரைத் தவிர ஞானஸ்நானம் பெறாத வேறொரு சகோதரர் அங்கே இருந்தால் அவள் முக்காடு போட்டுக்கொள்ள அவசியமில்லை.
c கூடுதலான தகவலுக்கு, காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2015 இதழில் பக்கம் 30-ஐயும், ஜூலை 15, 2002 இதழில் பக்கங்கள் 26-27-ஐயும், பிப்ரவரி 15, 1977 ஆங்கில இதழில் பக்கங்கள் 125-128-ஐயும் காண்க.