‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
“[அவர்] நன்றி சொல்லி அதைப் பிட்டு, ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்’ என்றார்.”—1 கொ. 11:24.
1, 2. இயேசு எருசலேமுக்குச் செல்லும் நேரம் நெருங்கிய சமயத்தில் அப்போஸ்தலர்கள் எதைப் பற்றி நினைத்திருப்பார்கள்?
‘மேகக்கூட்டம் கலைய, பிறை நிலா எட்டிப் பார்க்கிறது. முந்தைய நாளின் மாலைப் பொழுதில், எருசலேமின் காவற்காரர்களின் கண்களில் மெல்லிய வெள்ளிக்கயிறு போல நிலா தெரிந்திருக்க வேண்டும். நியாயசங்கத்தாரின் காதில் இந்தச் செய்தி விழ, புதிய மாதமாகிய நிசான் பிறந்துவிட்டதை அவர்கள் அறிவிக்கிறார்கள். தூதுவர்கள் மூலமாக இச்செய்தி நாலாபக்கமும் எட்டுகிறது. இயேசு தங்கியிருக்கும் இடத்திற்கும் சென்றெட்டுகிறது. பஸ்காவிற்குமுன் எருசலேம் சென்றாக வேண்டும் என்ற தீர்மானத்தில் இயேசு இருந்திருப்பார்.’
2 யோர்தானுக்கு அப்பாலிருந்த பெரேயாவில், இயேசுவோடு தங்கியிருந்த சிலருக்கும் இதே எண்ணம்தான் மனதில் ஓடியிருக்கும். எருசலேமுக்கு இயேசு செல்லப்போகும் கடைசி பயணம் இது! (மத். 19:1; 20:17, 29; மாற். 10:1, 32, 46) பொதுவாக, நிசான் 1–ஆம் தேதியை நிர்ணயித்தவுடன், அதிலிருந்து சரியாக 13 நாட்கள் கழித்து, அதாவது நிசான் 14-ஆம் நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பஸ்கா பண்டிகை அனுசரிக்கப்படும்.
3. பஸ்கா அனுசரிக்கப்படும் நாள் இன்று கிறிஸ்தவர்களுக்கு ஏன் அக்கறைக்குரியது?
3 பஸ்கா பண்டிகை அனுசரிக்கப்படுகிற அதே நாளில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எஜமானரின் இரவு விருந்து அனுசரிக்கப்படுகிறது; இந்த நாள் 2014-ஆம் ஆண்டில், ஏப்ரல் 14-ஆம் தேதி வருகிறது. உண்மை கிறிஸ்தவர்களுக்கும், ஆர்வம் காட்டுபவர்களுக்கும் இது ஒரு விசேஷ நாள். ஏன்? 1 கொரிந்தியர் 11:23-25 இதற்குப் பதிலளிக்கிறது: “எஜமானராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்படவிருந்த இரவன்று ரொட்டியை எடுத்து, நன்றி சொல்லி அதைப் பிட்டு, ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்’ என்றார். உணவு சாப்பிட்டபின், அவ்வாறே அவர் கிண்ணத்தையும் எடுத்து, ‘இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது; நீங்கள் இதிலிருந்து குடிக்கும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்’ என்றார்.”
4. (அ) நினைவு நாள் அனுசரிப்பு சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன? (ஆ) நினைவு நாள் அனுசரிப்புக்கான தேதி ஒவ்வொரு வருடமும் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? (“நினைவு நாள் அனுசரிப்பு-2014” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
4 இயேசு தம் சீடர்களிடம் வருடந்தோறும் அனுசரிக்கச் சொன்ன ஒரே நிகழ்ச்சி இதுதான். முக்கியமான இந்த நிகழ்ச்சியில் நீங்கள் நிச்சயம் கலந்துகொள்வீர்கள். அதற்கு முன்பு, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இந்த நிகழ்ச்சிக்கு நான் எப்படித் தயாராகலாம்? என்னென்ன அடையாளச் சின்னங்கள் பயன்படுத்தப்படும்? இந்நிகழ்ச்சி எப்படி நடக்கும்? இந்த நிகழ்ச்சியும், அடையாளச் சின்னங்களும் எனக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?’
அடையாளச் சின்னங்கள்
5. பஸ்காவுக்காக என்ன ஏற்பாடுகளைச் செய்யும்படி அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னார்?
5 பஸ்காவை அனுசரிப்பதற்கான அறையைத் தயார்படுத்துமாறு அப்போஸ்தலர்களிடம் இயேசு கூறியபோது, அந்த அறையை ஆடம்பரமாக அலங்கரிக்க வேண்டும் என்றல்ல, மாறாக, அது சுத்தமாகவும் பொருத்தமாகவும் அனைவரும் உட்காருவதற்குப் போதுமானதாகவும் இருக்க வேண்டும் என்றே அர்த்தப்படுத்தியிருப்பார். (மாற்கு 14:12-16-ஐ வாசியுங்கள்.) பஸ்கா உணவுக்காக புளிப்பில்லாத அப்பம், சிவப்பு நிற திராட்சமது போன்றவற்றை அவர்கள் தயார்செய்ய வேண்டியிருந்தது. பஸ்கா உணவைச் சாப்பிட்டபின், அங்கே இருந்த இரண்டு அடையாளச் சின்னங்கள்மீது இயேசு தம் கவனத்தைத் திருப்பினார்.
6. (அ) பஸ்கா உணவிற்குப் பிறகு, இயேசு ரொட்டியை எடுத்து என்ன சொன்னார்? (ஆ) நினைவு நாள் அனுசரிப்பின்போது பயன்படுத்தப்படும் ரொட்டி எவ்விதமாக இருக்கவேண்டும்?
6 பஸ்காவின்போது அங்கிருந்த மத்தேயு பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “இயேசு ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து, பிட்டு சீடர்களிடம் கொடுத்து, ‘இதைச் சாப்பிடுங்கள் . . .’ என்று சொன்னார்.” (மத். 26:26) “ரொட்டி” என்பது பஸ்காவின்போது பயன்படுத்தப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தைக் குறிக்கிறது. (யாத். 12:8; உபா. 16:3) அது, கோதுமை மாவும் தண்ணீரும் கலந்து செய்யப்பட்ட ரொட்டி. அதில் புளிப்போ, உப்போ சேர்க்கப்படாததால் உப்பியிருக்கவில்லை. அது மொரமொரப்பாகவும், எளிதில் பிட்க முடிந்ததாகவும் இருந்தது. இன்றும்கூட, கோதுமை மாவும் தண்ணீரும் கலந்து, இலேசாக எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ரொட்டி செய்யுமாறு யாராவது ஒருவரிடம் மூப்பர்கள் முன்கூட்டியே சொல்லிவைக்கலாம். (ஒருவேளை, கோதுமை மாவு கிடைக்கவில்லை என்றால் அரிசி, பார்லி, சோளம் போன்ற தானியங்களிலிருந்து கிடைக்கும் மாவைப் பயன்படுத்தலாம்.) அல்லது மால்ட், முட்டை, வெங்காயம் போன்றவற்றை சேர்க்காமல் யூதர்கள் செய்யும் மாட்ஸாத் என்ற ரொட்டியையும் பயன்படுத்தலாம்.
7. எவ்விதமான திராட்சமதுவை இயேசு பயன்படுத்தினார், நினைவு நாள் அனுசரிப்பின்போது நாம் எவ்விதமான திராட்சமதுவை பயன்படுத்தலாம்?
7 அடுத்ததாக, “[இயேசு] ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, ‘நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்’” என்று சொன்னார். (மத். 26:27, 28) அந்தக் கிண்ணத்தில் இருந்தது சிவப்பு நிற திராட்சமது. (அது திராட்ச ரசமாக இருந்திருக்க முடியாது, ஏனென்றால் திராட்சை அறுவடை பல மாதங்களுக்கு முன்னரே முடிந்திருந்தது.) எகிப்தில் அனுசரிக்கப்பட்ட பஸ்காவின்போது திராட்சமது பயன்படுத்தப்படவில்லை. என்றாலும், பஸ்காவின்போது அதைப் பயன்படுத்துவதற்கு இயேசு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால், அந்தத் திராட்சமதுவில் கொஞ்சத்தை எடுத்துதான் எஜமானரின் இரவு விருந்தின்போது பயன்படுத்தினார். ஆகவேதான், நினைவு நாள் அனுசரிப்பின்போது திராட்சமதுவை நாம் பயன்படுத்துகிறோம். இயேசு சிந்திய இரத்தத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக அதில் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதனால் அவருடைய இரத்தத்தை அடையாளப்படுத்தும் திராட்சமதுவிலும், நறுமணப்பொருட்களையோ பிராந்தியையோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எதுவும் சேர்க்கப்படாத திராட்சமதுவே பயன்படுத்தப்பட வேண்டும். போஷொலே, பர்கண்டி, ஷியான்டி போன்ற வகைகளும் பயன்படுத்தப்படலாம்.
அர்த்தமுள்ள அடையாளச் சின்னங்கள்
8. ரொட்டி மற்றும் திராட்சமதுவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதில் கிறிஸ்தவர்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்?
8 அப்போஸ்தலர்கள் மட்டுமல்லாமல் மற்ற கிறிஸ்தவர்களும் எஜமானருடைய இரவு விருந்தை அனுசரிக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலன் பவுல் தெளிவுபடுத்தினார். கொரிந்துவிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “எஜமானரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களுக்குக் கொடுத்தேன்: எஜமானராகிய இயேசு . . . ரொட்டியை எடுத்து, நன்றி சொல்லி அதைப் பிட்டு, ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்’ என்றார்.” (1 கொ. 11:23, 24) அவர் அன்று சொன்னபடியே, இந்நாள் வரையாக கிறிஸ்தவர்கள் அதை அனுசரித்து வருகிறார்கள்; ரொட்டி மற்றும் திராட்சமதுவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
9. ரொட்டியைப் பற்றிய என்ன தவறான கருத்து சிலருக்கு இருக்கிறது?
9 ‘இது என்னுடைய உடலாயிருக்கிறது’ என்று இயேசு சொல்லியிருப்பதால், அந்த ரொட்டி அற்புதகரமாக இயேசுவின் உடலாய் மாறியதாக கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். இது உண்மை அல்ல.a ஏனென்றால், இயேசுவின் உடலும் சரி புளிப்பில்லாத ரொட்டியும் சரி, அந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்களின் கண்முன்தான் இருந்தன. ஆகவே மற்ற சமயங்களில் பேசியது போல, அடையாள அர்த்தத்தில்தான் இயேசு பேசினார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.—யோவா. 2:19-21; 4:13, 14; 10:7; 15:1.
10. நினைவு அனுசரிப்பின்போது பயன்படுத்தப்பட்ட ரொட்டி எதைக் குறிக்கிறது?
10 அப்போஸ்தலர்கள் சீக்கிரத்தில் சாப்பிடவிருந்த அந்த ரொட்டி இயேசுவின் உடலை அர்த்தப்படுத்தியது. அந்த ரொட்டி, ‘கிறிஸ்துவின் உடலான’ பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் சபையைக் குறிப்பதாக உண்மை கிறிஸ்தவர்கள் ஒருசமயம் நினைத்தார்கள். அவர் ரொட்டியைப் பிட்டு, அதை பல துண்டுகளாக்கினாலும், அவருடைய எலும்புகள் ஒன்றும் முறிக்கப்படாமல் இருந்ததால் அவ்வாறு நம்பினார்கள். (எபே. 4:12; ரோ. 12:4, 5; 1 கொ. 10:16, 17; 12:27) காலப்போக்கில் பைபிளை நன்கு ஆராய்ந்த பிறகு, ரொட்டி இயேசுவின் உடலைத்தான் குறிக்கிறது என அறிந்துகொண்டார்கள். ‘கிறிஸ்து சரீரத்தில் பாடுகளை அனுபவித்து’ கழுமரத்தில் அறையப்பட்டு இறந்ததைப் பற்றி பைபிளில் நிறைய இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, நினைவு நாள் அனுசரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ரொட்டி, நம்முடைய பாவங்களுக்காக இயேசு பலியாகக் கொடுத்த அவருடைய உடலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.—1 பே. 2:21-24; 4:1; யோவா. 19:33-36; எபி. 10:5-7.
11, 12. (அ) திராட்சமது பற்றி இயேசு என்ன சொன்னார்? (ஆ) எஜமானரின் இரவு விருந்தில் பயன்படுத்தப்பட்ட திராட்சமது எதை அர்த்தப்படுத்துகிறது?
11 ரொட்டியைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வது, திராட்சமதுவைப் பற்றி இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. “உணவு சாப்பிட்டபின், அவ்வாறே அவர் கிண்ணத்தையும் எடுத்து, ‘இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது’” என்றார். (1 கொ. 11:25) நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை, ராபர்ட் யங் பரிசுத்த வேதகாமத்தின் சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பை (ஆங்கிலம்) போலவே மொழிபெயர்த்திருக்கின்றன. அது இவ்வாறு சொல்கிறது: “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாயிருக்கிறது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) நிஜமான அந்தக் கிண்ணம், புதிய ஒப்பந்தமாக இருந்ததா? இல்லை. “கிண்ணம்” என்பது, அதிலிருந்த திராட்சமதுவைக் குறித்தது. அப்படியென்றால், திராட்சமது எதை அர்த்தப்படுத்துவதாக இயேசு சொன்னார்? அவர் சிந்தவிருந்த இரத்தத்தையே.
12 மாற்கு சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: “இது ‘ஒப்பந்தத்திற்குரிய என் இரத்தத்தைக்’ குறிக்கிறது; என் இரத்தம் அநேகருக்காகச் சிந்தப்படப்போகிறது.’” (மாற். 14:24) ஆம், இயேசுவின் இரத்தம் ‘பாவ மன்னிப்புக்கென்று அநேகருக்காகச் சிந்தப்படவிருந்தது.’ (மத். 26:28) ஆகவே, சிவப்பு நிற திராட்சமது இயேசுவின் இரத்தத்தையே பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர் தமது இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்ததால் நாம் விடுதலை பெற முடிகிறது, அதாவது, ‘நம்முடைய மீறுதல்களுக்கு மன்னிப்புக் கிடைக்கிறது.’—எபேசியர் 1:7-ஐ வாசியுங்கள்.
கிறிஸ்துவின் நினைவு நாள் அனுசரிப்பு
13. கிறிஸ்துவின் நினைவு நாள் எப்படி அனுசரிக்கப்படும் என்பதை விளக்குங்கள்.
13 யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து முதன்முறையாக நினைவு நாள் அனுசரிப்பில் கலந்துகொள்ளப் போகிறீர்களா? அங்கே நீங்கள் எதை எதிர்பார்க்கலாம்? கூடிவரும் இடம், எல்லோரும் வசதியாக உட்கார்ந்து நிகழ்ச்சியை நன்றாக அனுபவிக்கும் விதத்தில், நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்கும். பெரிய பார்ட்டிகள் நடப்பது போன்ற சூழல் அங்கே இருக்காது. அந்த இடம், பூக்களால் எளிமையாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கலாம். தகுதி வாய்ந்த ஒரு மூப்பர், அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி கண்ணியமான முறையில் தெளிவான ஒரு சொற்பொழிவாற்றுவார். நாம் வாழ்வு பெற கிறிஸ்து தம்மையே பலியாகக் கொடுத்ததைப் பற்றி அவர் விளக்குவார். (ரோமர் 5:8-10-ஐ வாசியுங்கள்.) அதோடு, பைபிளில் சொல்லப்பட்டுள்ள இரண்டு விதமான நம்பிக்கைகளைப் பற்றியும் விவரிப்பார்.
14. நினைவு நாள் அனுசரிப்பின்போது கொடுக்கப்படும் பேச்சில் எந்த இரண்டு நம்பிக்கைகளைப் பற்றி பேச்சாளர் விளக்குவார்?
14 அவற்றில் ஒன்று, பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகும் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் சில கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே இருக்கிற பரலோக நம்பிக்கை. (லூக். 12:32; 22:19, 20; வெளி. 14:1) இன்னொன்று, உண்மையுள்ள அநேக கிறிஸ்தவர்களுக்கு பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் வெகுகாலமாக ஜெபித்துவருவது போல, கடவுளுடைய சித்தம் சீக்கிரத்தில் பூமியிலேயும் செய்யப்படும். (மத். 6:10) அவர்கள் சதாகாலமாக அனுபவிக்கப்போகும் அற்புதமான ஆசீர்வாதங்களைப் பற்றி பைபிள் அழகாக வர்ணிக்கிறது.—ஏசா. 11:6-9; 35:5, 6; 65:21-23.
15, 16. எஜமானரின் இரவு விருந்தின்போது ரொட்டியை என்ன செய்வார்கள்?
15 பேச்சு முடியப்போகும் சமயத்தில், அப்போஸ்தலர்களிடம் அன்று இயேசு செய்யச் சொன்னதை நாம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டதென பேச்சாளர் குறிப்பிடுவார். அடையாளச் சின்னங்களான புளிப்பில்லாத ரொட்டியும், திராட்சமதுவும் பேச்சாளருக்கு அருகே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும். இயேசு இந்த அனுசரிப்பின்போது செய்ததைப் பற்றி விவரிக்கும் பைபிள் பதிவைப் பேச்சாளர் வாசிப்பார். உதாரணத்திற்கு, மத்தேயுவில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பதிவை அவர் வாசிக்கலாம்: “இயேசு ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து, பிட்டு சீடர்களிடம் கொடுத்து, ‘இதைச் சாப்பிடுங்கள், இது என் உடலைக் குறிக்கிறது’ என்று சொன்னார்.” (மத். 26:26) இயேசு அதைப் பிட்டுத் தம்முடைய இரு பக்கத்திலும் அமர்ந்திருந்த அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார். ஏப்ரல் 14-ஆம் தேதியன்று நீங்கள் கலந்துகொள்ளப்போகும் அந்த நிகழ்ச்சியிலும் புளிப்பில்லாத ரொட்டித் துண்டுகள் ஏற்கெனவே பிட்டு தட்டுகளில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.
16 சகோதரர் ஒருவர் சுருக்கமான ஜெபம் செய்த பிறகு, ரொட்டித் துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் தட்டுகள், கூடிவந்திருக்கும் அனைவருக்கும் கடத்தப்படும். உரிய நேரத்தில் இதைச் செய்து முடிப்பதற்கு வசதியாக போதுமான தட்டுகள் பயன்படுத்தப்படும். சடங்காச்சாரம் எதுவும் இருக்காது. நடைமுறைக்கு ஏற்றவாறு ஒழுங்குடன் தட்டுகள் கடத்தப்படும். 2013-ஆம் ஆண்டு பெரும்பாலான சபைகளில் நடந்ததுபோல, நீங்கள் கலந்துகொள்ளப்போகும் இந்நிகழ்ச்சியிலும் வெகு சிலரே இதைச் சாப்பிடுவார்கள் (அல்லது யாருமே சாப்பிடாமலும் இருக்கலாம்).
17. திராட்சமது பற்றி இயேசு சொன்ன என்ன விஷயம் நினைவு நாள் அனுசரிப்பில் பின்பற்றப்படும்?
17 அடுத்ததாக, திராட்சமது பற்றி மத்தேயுவில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பதிவைப் பேச்சாளர் வாசிப்பார்: “[இயேசு] ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, ‘நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்; ஏனென்றால் இது, “ஒப்பந்தத்திற்குரிய என் இரத்தத்தைக்” குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று அநேகருக்காகச் சிந்தப்படப்போகிறது.’” (மத். 26:27, 28) இதே முறையைப் பின்பற்றி, திராட்சமதுவுக்காக இன்னொரு ஜெபம் செய்யப்படும். அதற்குப் பிறகு, திராட்சமது இருக்கும் ‘கிண்ணங்கள்’ கூடிவந்திருக்கும் அனைவருக்கும் கடத்தப்படும்.
18. பெரும்பாலோர் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடாவிட்டாலும், நினைவு நாள் அனுசரிப்பில் கலந்துகொள்வது ஏன் முக்கியம்?
18 கடவுளுடைய அரசாங்கத்தில் தம்மோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்களே ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட வேண்டும் என இயேசு சொன்னார். அதனால், கூடிவந்திருக்கும் பெரும்பாலோர் அவற்றைச் சாப்பிட மாட்டார்கள். (லூக்கா 22:28-30-ஐ வாசியுங்கள்; 2 தீ. 4:18) அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். என்றாலும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் இயேசுவின் பலியை உயர்வாக மதிப்பதைக் காட்டுகிறார்கள். அந்த மீட்பு பலியின் அடிப்படையில் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க அது ஓர் அருமையான தருணம். ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டத்தாரின்’ பாகமாக இருப்பதற்கான அரும்பெரும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆம், அவர்கள் ‘தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியிருப்பார்கள்.’—வெளி. 7:9, 14-17.
19. நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நாம் எப்படித் தயாராகலாம்? அதிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
19 உலக முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லோரும் இந்த விசேஷ நிகழ்ச்சிக்குத் தயாராகிறார்கள். இந்நிகழ்ச்சி நடக்கப்போகும் நாளுக்கு பல வாரங்களுக்கு முன்னரே எத்தனை பேரை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் நாம் அழைப்போம். கி.பி. 33-ல் இயேசு ஆரம்பித்து வைத்த இந்த அனுசரிப்புக்கு முன் நடந்த சம்பவங்களை மனதுக்குக் கொண்டுவருகிற பைபிள் பதிவுகளை வாசிப்போம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, சொந்த வேலைகளை ஒழுங்குபடுத்துவோம். ஆரம்பப் பாடலும் ஜெபமும் தொடங்கும் முன்னரே வந்து சேருவோம்; அப்போதுதான், வருகைதருவோரை வரவேற்கவும் நிகழ்ச்சியில் முழுமையாக கலந்துகொள்ளவும் முடியும். பேச்சாளரோடு சேர்ந்து பைபிளை எடுத்துப் பார்க்கும்போது புதிதாக வந்திருப்பவர்களும் சபையாராகிய நாமும் முழுப் பயனை அடைவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன்மூலம் இயேசுவின் பலிக்கு நம்முடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்க முடியும். அதோடு “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிதலைக் காட்டவும் முடியும்.—1 கொ. 11:24.
a “இயேசுவின் உடல் இன்னும் பிட்கப்படாமல் (இன்னும் உயிரோடு) இருந்ததைப் பார்த்ததால்,” நிஜமாகவே அவரது உடலைச் சாப்பிடுவதாகவோ அவரது இரத்தத்தைக் குடிப்பதாகவோ அப்போஸ்தலர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று ஜெர்மனியைச் சேர்ந்த அறிஞர் ஹைன்ரிச் மெயர் சொல்கிறார். ரொட்டியும் திராட்சமதுவும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை விளக்குவதற்கு இயேசு “எளிய வார்த்தைகளை” பயன்படுத்தினார் என்றும் அப்போஸ்தலர்கள் இதைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு நினைத்தார் என்றும் அவர் சொல்கிறார்.