“அபார சக்தி படைத்த கற்கும் இயந்திரம்”
அது என்ன, “அபார சக்தி படைத்த கற்கும் இயந்திரம்” என்று யோசிக்கிறீர்களா? அது வேறு ஒன்றுமில்லை, மழலையின் மூளைதான். ஒரு பிஞ்சுக் குழந்தை இந்த உலகை எட்டிப் பார்க்கும்போதே தன்னைச் சுற்றியுள்ள காட்சிகள்... சத்தங்கள்... உணர்ச்சிகள்... என எல்லாவற்றையும் கிரகித்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறான்.a
முக்கியமாக, மனிதர்களின் முகத்தைப் பார்க்கும்போது... பேச்சைக் கேட்கும்போது... ஸ்பரிசத்தை உணரும்போது... குழந்தைக்குள் ஆர்வம் கொப்பளிக்கிறது. பெனெலோப் லீச் என்பவர் குழந்தைப் பருவம் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “ஒரு பச்சிளம் குழந்தையைக் கவரும் காட்சிகள், அவனது கவனத்தை ஈர்க்கும் சத்தங்கள், அவன் ஏங்குகிற உணர்ச்சிகள் எவையென்று கண்டுபிடிக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் அவனைப் பாசத்தோடு பேணி வளர்க்கிறவரிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கின்றன.” ஆம், குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது!
“குழந்தையைப் போல் பேசினேன்”
ஒரு பச்சிளம் குழந்தை காதில் கேட்டே ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதைப் பார்த்து பெற்றோரும் குழந்தைநல மருத்துவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறபடி, ஒருசில நாட்களில்... பிஞ்சுக் குழந்தை தன்னுடைய தாயின் குரலுக்கும் வேறொருவருடைய குரலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்கிறான், தாயின் குரலுக்காக ஏங்குகிறான்; ஒருசில வாரங்களில்... தனது தாய்மொழியின் சத்தத்திற்கும் மற்ற மொழிகளின் சத்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுகொள்கிறான்; ஒருசில மாதங்களில்... பேச்சின் தொனியைப் புரிந்துகொள்கிறான்; அதனால், சாதாரணமாகப் பேசுவதற்கும் அர்த்தமில்லாமல் சத்தமிடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்கிறான்.
பைபிளில் அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப் போல் பேசினேன்.” (1 கொரிந்தியர் 13:11) ஒரு குழந்தை எப்படிப் பேசும்? இயல்பாகவே அது தத்துப்பித்து என எதையாவது உளறிக்கொண்டிருக்கும். ஆனால், அது வெறும் உளறல்தானா? இல்லவே இல்லை! டாக்டர் லீஸ் எலியட் தனது புத்தகத்தில் (குழந்தையின் மூளையில் என்ன நடக்கிறது?—முதல் ஐந்தாண்டுகளில் மூளையும் மனதும் வளர்ச்சியடைவது எப்படி? [ஆங்கிலம்]) இவ்வாறு எழுதுகிறார்: ‘தசைகளின் சிக்கலான இயக்கம்தான் பேச்சு. நாம் பேசும்போது உதடு, நாக்கு, அண்ணம், குரல்வளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற டஜன்கணக்கான தசைகள் வேகமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. குழந்தையின் தத்துப்பித்து உளறல் மற்றவர்களைத் தன் பக்கம் இழுப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே தோன்றினாலும், திருத்தமான பேச்சிற்கு அது மிக முக்கியமான ஒத்திகையாக இருக்கிறது.’
தங்களது மழலைச் செல்வம் தத்துப்பித்து எனப் பேசும்போது பெற்றோரும் அவனிடம் சைகை காட்டி, புருவங்களை உயர்த்தி, உணர்ச்சி பொங்கப் பேசுகிறார்கள். இதிலும் ஒரு நன்மை உண்டு. பெற்றோர் இப்படிப் பேசும்போது தானும் எதையாவது சொல்ல அவன் தூண்டப்படுகிறான். இந்தப் பேச்சுப் பரிமாற்றம்தான் மற்றவர்களோடு பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள அவனுக்கு உதவுகிறது. இந்தத் திறன் குழந்தைக்கு வாழ்நாள் முழுக்க பயன்படும்.
ஆட்சி கைமாறும்போது...
பெற்றோர் தங்களது குட்டிக் குழந்தைக்கு என்ன வேண்டும், ஏது வேண்டும் எனப் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். குழந்தை அழுதால் போதும், உடனே அவனுக்குப் பாலூட்டுவார்கள்; குழந்தை சிணுங்கினால் போதும், உடனே, அவன் ‘டயப்பரை’ மாற்றுவார்கள்; குழந்தை விசும்பினால் போதும், அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு சமாதானப்படுத்துவார்கள். குழந்தையை இப்படிக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம். பராமரிப்பாளர் என்ற தங்களது பொறுப்பைப் பெற்றோர் நிறைவேற்றுகிற ஒரு முக்கிய வழி இதுவே.—1 தெசலோனிக்கேயர் 2:7.
பெற்றோர் இப்படி விழுந்து விழுந்து கவனிப்பதால், ‘இந்த உலகத்திலேயே நான்தான் வி.ஐ.பி.’ எனக் குழந்தை கற்பனை செய்துகொள்கிறான்; அதோடு பெரியவர்கள், குறிப்பாகப் பெற்றோர், தனக்குச் சேவை செய்யவே இருக்கிறார்கள் என்றும் நினைத்துக்கொள்கிறான். அவன் மனதில் பதிந்துவிட்ட இந்தக் கருத்து தவறானது. ஆனால், இயல்பானது. ஏனென்றால், ஒரு வருடத்துக்கும் மேலாக, இதுவே அவனுடைய யதார்த்த உலகமாக இருந்துவந்திருக்கிறது. அவனைப் பொருத்தவரை, பெரிய பெரிய ஆட்கள் நிறைந்த சாம்ராஜ்யத்தில் அவனே மகாராஜா; அவனுக்குப் பணிவிடை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள். குடும்பநல ஆலோசகர் ஜான் ரோஸ்மான்ட் எழுதினார்: “வெறும் இரண்டே வருடங்களில், குழந்தையின் கண்முண் இந்த மாய உலகத்தைப் பெற்றோர் படைத்துவிடுகிறார்கள்; ஆனால், அதைச் சரி செய்ய அவர்களுக்குப் பதினாறுக்கும் அதிகமான வருடங்கள் எடுக்கின்றன! இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த எண்ணத்தை விதைப்பதும் பெற்றோர்தான், அதை மெதுமெதுவாகச் சிதைப்பதும் பெற்றோர்தான்.”
கிட்டத்தட்ட இரண்டு வயதாகும்போது, குழந்தையின் சாம்ராஜ்யம் தரைமட்டமாகிறது. இதுவரை பராமரிப்பாளராக இருந்துவந்த பெற்றோர் இப்போது போதகராக ஆகிறார்கள். இனிமேல் அவர்கள் சொல்கிறபடி அவன்தான் நடக்க வேண்டும், அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் பெற்றோர் வளைந்துகொடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான். குழந்தையின் ராஜ்யம் இப்போது பூஜ்யம் ஆகிறது. ஆனால், இந்தப் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதனால், கோபமடைந்து தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறான். எப்படி?
பிடிவாதத்தைச் சமாளித்தல்
கிட்டத்தட்ட இரண்டு வயதில், நிறைய குழந்தைகளின் இயல்பு தலைகீழாக மாறத் தொடங்குகிறது. தொட்டதற்கெல்லாம் கோபம்... ஆத்திரம்... அழுது புரண்டு ஆர்ப்பாட்டம்... என ஆரம்பித்துவிடுவார்கள். இதைச் சமாளிப்பதற்குள் பெற்றோருக்குப் போதும் போதும் என்றாகிவிடும். இப்போது, அவன் வாயைத் திறந்தாலே, “மாட்டேன்,” “வேண்டாம்” என்றுதான் சொல்வான். முரண்பட்ட உணர்ச்சிகளோடு அவன் போராடுவதால், தன்மீதும் பெற்றோர்மீதும் அவனுக்குக் கோபம் கோபமாக வரலாம். பெற்றோராகிய உங்களிடமிருந்து தூரமாக இருக்கவும் அவன் நினைப்பான், அதே சமயத்தில் உங்கள் பக்கத்தில் இருக்கவும் நினைப்பான். இதைப் பார்த்து குழம்பும் பெற்றோர், ‘இவனை எப்படித்தான் சமாளிப்பது’ எனத் தெரியாமல் தவிப்பார்கள். பிள்ளைகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?
இந்தச் சமயத்தில் குழந்தைகளின் வாழ்வில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறது. இதற்குமுன், அவன் லேசாகச் சிணுங்கினாலே பெற்றோர் அவனிடம் ஓடோடி வருவார்கள். ஆனால் இனிமேல் அப்படி இல்லை; அவனது “ஆட்சி” கவிழ்ந்துவிட்டது, இனி அவனேதான் சில காரியங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. அவன்தான் பெற்றோருக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பதையும் போகப் போக புரிந்துகொள்கிறான்; பைபிளும் இதை ஆமோதிக்கிறது: “பிள்ளைகளே, எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்.”—கொலோசெயர் 3:20.
இந்தச் சிரமமான கட்டத்தில், பெற்றோர் தங்களுடைய அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. தங்களது அதிகாரத்தை உறுதியாக, அதே சமயத்தில் அன்பாக, காட்டும்போது இந்தப் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்வது அவனுக்கு எளிதாக இருக்கும். அதோடு, அவன் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு அவனைத் தயாராக்கும்.
ஒழுக்க நெறிகள்
மிருகங்கள், ஏன் இயந்திரங்களும்கூட நாம் சொல்கிற வார்த்தைகளைப் பிடித்துக்கொள்ளும்; அதைத் திரும்பவும் சொல்லிக் காட்டும். ஆனால், ஒரு மனிதனால் மட்டும்தான் யோசித்துச் செயல்பட முடியும். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வயதில், ஒரு குழந்தைக்குள் பெருமை, அவமானம், குற்றவுணர்ச்சி, தர்மசங்கடம் போன்ற உணர்வுகள் தலைதூக்க ஆரம்பிக்கிறது. ஒழுக்க நெறிகளை உடைய ஒரு நபராக—தன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் தவறு செய்தாலும்கூட சரியானதைச் செய்ய உறுதியாக இருக்கிற ஒரு நபராக அவன் வளருவதற்கு இதுவே முதல் கட்டமாக இருக்கிறது.
இந்தச் சமயத்தில், அவனிடம் ஏற்படுகிற இன்னொரு மாற்றத்தைப் பார்த்து பெற்றோர் பிரமித்துப்போவார்கள். அவனுக்கு இப்போது மற்றவர்களுடைய உணர்ச்சிகள் புரிய ஆரம்பிக்கிறது. இரண்டு வயதில், அவன் தானாகவே விளையாடினான்; இப்போதோ மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறான். என்ன செய்தால் அப்பா-அம்மா சந்தோஷப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறான்; அவர்களுக்குப் பிரியமாய் நடக்க விரும்புகிறான். எனவே, பெற்றோர் சொல்வதைக் கேட்க மனதாய் இருப்பான்.
மூன்று வயதாகும்போது நல்லது எது கெட்டது எது, சரி எது தவறு எது என்பதை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ளத் தொடங்குவான். பெற்றோரே, பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்க இதுவே சரியான சமயம். அப்போதுதான் அவர்கள் பொறுப்புள்ளவர்களாய் வளருவார்கள். (g11-E 10)
[அடிக்குறிப்பு]
a எளிமைக்காக இந்தப் பத்திரிகை முழுக்க ஆண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், இது பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
[பக்கம் 5-ன் சிறுகுறிப்பு]
ஒருசில நாட்களில்... பிஞ்சுக் குழந்தை தன்னுடைய தாயின் குரலுக்கும் வேறொருவருடைய குரலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்கிறான், தாயின் குரலுக்காக ஏங்குகிறான்
[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]
மூன்று வயதாகும்போது நல்லது எது கெட்டது எது, சரி எது தவறு எது என்பதை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ளத் தொடங்குவான்
[பக்கம் 6-ன் பெட்டி]
திரும்பத் திரும்ப அடம்பிடிப்பது ஏன்?
புதிய பெற்றோரின் அதிகாரம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் ஜான் ரோஸ்மன்ட் இவ்வாறு எழுதினார்: “குழந்தை கேட்டதை கொடுக்காமல் விட்டது நம் தவறு, அதனால்தான் குழந்தை அடம்பிடிக்கிறது எனச் சில பெற்றோர் நினைக்கிறார்கள். தங்கள்மீதுதான் தப்பு இருக்கிறது எனப் பெற்றோர் நினைத்துக்கொள்வதால், உடனே ஏதாவது செய்து அதைச் சரிசெய்யப் பார்க்கிறார்கள். அதனால், முதலில் இல்லை என்று சொன்னவர்கள் இப்போது சரி என்று சொல்கிறார்கள். அல்லது குழந்தையை அடித்திருந்தால், அவன்/ள் எதைக் கேட்டு அடம்பிடித்தானோ/ளோ அதை அதிகமாகக் கொடுத்து பிராயச்சித்தம் தேடுகிறார்கள். இதன் விளைவு? பிள்ளையும் நினைத்ததைச் சாதித்துவிடுகிறது. அதனால், பிடிவாதத்தை நிறுத்துகிறது. பெற்றோருக்கும் நிம்மதி கிடைக்கிறது. குழந்தையின் மனதிலோ, ‘அப்பா-அம்மாகிட்ட இருந்து எதையாவது வாங்கனும்னா அடம்பிடிக்கணும்’ என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதனால், இன்னும் அதிகமாக அடம்பிடிக்க ஆரம்பிக்கிறது.”