அதிகாரம் 4
அதிகாரத்தில் உள்ளவர்களை ஏன் மதிக்க வேண்டும்?
“எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.”—1 பேதுரு 2:17.
1, 2. (அ) அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது? (ஆ) என்னென்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
அம்மா ஒரு வேலை சொல்லும்போது பிள்ளை முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அம்மா சொல்வது அவன் காதில் விழுகிறது; அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால், கீழ்ப்படிய இப்போது அவனுக்கு இஷ்டமில்லை. சிலசமயங்களில் நாமும் அந்தச் சிறுபிள்ளையைப் போல்தான் இருக்கிறோம். ஆம், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படிவது நமக்கும் போராட்டமாக இருக்கிறது.
2 அதிகாரத்தில் உள்ளவர்களை மதித்து நடப்பது எப்போதுமே அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. உங்கள்மீது அதிகாரம் செலுத்துபவர்களை மதிப்பது உங்களுக்குச் சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதிகாரத்திற்கு மரியாதை காட்டும் பழக்கம் இன்று மக்கள் மத்தியில் மறைந்துகொண்டே வருகிறது. ஆனால், நம்மீது அதிகாரம் உள்ளவர்களை நாம் மதித்து நடக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:21) அப்போதுதான் கடவுளுடைய அன்பில் நாம் நிலைத்திருக்க முடியும். அப்படியென்றால், உங்கள் மனதில் சில கேள்விகள் வரலாம். அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது ஏன் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? யெகோவா நம்மிடம் ஏன் அதை எதிர்பார்க்கிறார், அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்க எது நம்மை உந்துவிக்கும்? எந்தெந்த விதங்களில் நாம் அதிகாரத்திற்கு மரியாதை காட்டலாம்?
ஏன் சவாலாக இருக்கிறது?
3, 4. மனிதர்கள் எப்போது பாவிகளானார்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை மதித்து நடப்பது பாவ இயல்புள்ளவர்களான நமக்கு ஏன் சவாலாய் இருக்கிறது?
3 அதிகாரத்தில் உள்ளவர்களை மதிப்பது நமக்கு ஏன் சவாலாக இருக்கிறது என்பதற்கு இரண்டு காரணங்களை இப்போது சுருக்கமாகச் சிந்திக்கலாம். முதலாவதாக, நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்கள். இரண்டாவதாக, நம்மீது அதிகாரம் செலுத்துகிறவர்களும் பாவ இயல்புள்ளவர்கள். வெகு காலத்திற்கு முன்பே, மனிதர்கள் பாவிகளாகிவிட்டார்கள். ஆம், ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாமல் போனபோதே பாவிகளாகிவிட்டார்கள். எனவே, கீழ்ப்படியாமை பாவத்திற்கு வித்திட்டது எனலாம். அன்றுமுதல் இன்றுவரை கீழ்ப்படியாமை மனிதர்களின் பிறவிக்குணமாக இருக்கிறது.—ஆதியாகமம் 2:15-17; 3:1-7; சங்கீதம் 51:5; ரோமர் 5:12.
4 நாம் பாவிகளாய் இருப்பதால் நம்மில் பெரும்பாலோருக்கு ஆணவமும் அகம்பாவமும் எளிதில் வந்துவிடுகின்றன. ஆனால், மனத்தாழ்மை அவ்வளவு எளிதில் வருவதில்லை. அதை வளர்த்துக்கொள்ளவும் தொடர்ந்து காட்டவும் கடினமாய் முயல வேண்டியிருக்கிறது. நாம் பல வருடங்களாகக் கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்து வந்திருந்தாலும்கூட பெருமையும் பிடிவாதமும் நம்மைத் தொற்றிக்கொள்ளலாம். கோராகுவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; எத்தனையோ கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவின் மக்களோடு ஒற்றுமையாய் இருந்தார், உண்மையாய் நடந்தார். இருந்தாலும், இன்னும் நிறைய அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களிலேயே சாந்த சொரூபியான மோசேயைத் துணிகரமாய் எதிர்த்துக் கலகம் செய்தார். (எண்ணாகமம் 12:3; 16:1-3) அடுத்து, உசியாவின் உதாரணத்தைக் கவனியுங்கள்; கடவுளுடைய ஆலயத்துக்குள் அவர் அகம்பாவத்துடன் நுழைந்து, குருமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய பரிசுத்த சேவையைச் செய்தார். (2 நாளாகமம் 26:16-21) கோராகுவும் உசியாவும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் தக்க தண்டனை பெற்றார்கள். என்றாலும், இவர்களுடைய உதாரணம் நமக்குப் பாடமாக இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுக்க நமக்குத் தடைக்கல்லாய் இருக்கும் அகம்பாவத்தை நாம் தகர்த்தெறிய வேண்டும்.
5. பாவ இயல்புள்ளவர்களாகிய மனிதர்கள் எப்படித் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்?
5 மறுபட்சத்தில், பாவ இயல்புள்ளவர்களாகிய மனிதர்கள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்; அதனால், அப்படிப்பட்டவர்களை மதிப்பது மக்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிகாரத்திலுள்ள அநேகர், கொடுங்கோலர்களாக, ஆட்டிப்படைக்கிறவர்களாக, கல்நெஞ்சக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களைப் பற்றிய பதிவுகள் வரலாற்றுச் சுவடுகளில் ஏராளம் ஏராளம். (பிரசங்கி 8:9-ஐ வாசியுங்கள்.) உதாரணமாக, சவுலை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தபோது அவர் நல்லவராக, மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார். ஆனால், காலப்போக்கில் அகம்பாவமும் பொறாமையும் அவரிடம் ஒட்டிக்கொண்டன; கடவுளுக்குப் பிரியமாய் வாழ்ந்த தாவீதை துன்புறுத்தினார். (1 சாமுவேல் 9:20, 21; 10:20-22; 18:7-11) பின்னர் தாவீது இஸ்ரவேலின் தலைசிறந்த ராஜாக்களில் ஒருவராக ஆனார்; ஆனால் அவரும்கூட அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்; ஏத்தியனாகிய உரியாவின் மனைவியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார், பின்பு அப்பாவியான உரியாவை போர்முனையில் நிறுத்தி சாகும்படி செய்தார். (2 சாமுவேல் 11:1-17) ஆம், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு பாவ இயல்பு முட்டுக்கட்டையாக இருக்கிறது. முக்கியமாக, அவர்கள் யெகோவாவை வணங்காதவர்களாய் இருந்தால், அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகவே இருக்கும். ‘காலம் காலமாகவே சில கத்தோலிக்க போப்புகள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மக்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள்’ என்று இங்கிலாந்து நாட்டின் அரசியல் மேதை ஒருவர் சொன்னார். இப்படிப்பட்டவர்களைப் பற்றிய பதிவுகளை மனதில் கொண்டு, இந்தக் கேள்வியை நாம் சிந்திக்கலாம்: அதிகாரத்தில் உள்ளவர்களை நாம் ஏன் மதிக்க வேண்டும்?
அதிகாரத்தில் உள்ளவர்களை ஏன் மதிக்க வேண்டும்?
6, 7. (அ) யெகோவா மீதுள்ள அன்பு என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது, ஏன்? (ஆ) அடிபணிவது என்றால் என்ன, நாம் எப்படி அடிபணியலாம்?
6 அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுக்க அன்பே நம்மைத் தூண்டுகிறது; ஆம், யெகோவாமீது, சக மனிதர்மீது, நம்மீது உள்ள அன்பே நம்மைத் தூண்டுகிறது. முக்கியமாக யெகோவாவை நாம் அதிகமாய் நேசிப்பதால் அவருடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம். (நீதிமொழிகள் 27:11-ஐயும் மாற்கு 12:29, 30-ஐயும் வாசியுங்கள்.) ஏதேனில் மனிதர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனபோதே அவருடைய பேரரசுரிமையை, அதாவது இப்பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் உரிமையை, எதிர்த்து சாத்தான் சவால் விட்டதையும், பின்பு மனிதர்களில் பெரும்பாலோர் அவன் பக்கம் சாய்ந்துகொண்டு யெகோவாவின் ஆட்சியை நிராகரித்துவிட்டதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், யெகோவாவின் பக்கம் நிற்பதில் நமக்கு எவ்வளவு சந்தோஷம்! வெளிப்படுத்துதல் 4:11-ல் உள்ள வலிமைமிக்க வார்த்தைகளை வாசிக்கும்போது நம் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை ஆள யெகோவா மட்டுமே தகுதியானவர் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் யெகோவாவின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் அவருடைய பேரரசுரிமையை ஆதரிக்கிறோம்.
7 அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுவதில் கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மற்றொரு விஷயமும் உட்பட்டுள்ளது. நாம் யெகோவாவை நேசிப்பதால் அவருக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிகிறோம். இருந்தாலும், சில சமயங்களில் அவருக்குக் கீழ்ப்படிவது நமக்கு அதிக கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், முதல் பாராவில் சொல்லப்பட்ட சிறுபிள்ளை அடிபணியக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததைப் போல், நாமும் அடிபணியக் கற்றுக்கொள்ள வேண்டும். தனது தகப்பனின் விருப்பத்தைச் செய்வது இயேசுவுக்கு மிகக் கடினமாய்த் தோன்றியபோதிலும்கூட அவர் அடிபணிந்தார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். “என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று தன் தகப்பனிடம் அவர் சொன்னார்.—லூக்கா 22:42.
8. (அ) இன்று யெகோவாவின் அதிகாரத்திற்கு அடிபணிகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம், அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பதை யெகோவா எப்படிக் கருதுகிறார்? (ஆ) ஆலோசனையைக் கேட்கவும், புத்திமதியை ஏற்றுக்கொள்ளவும் எது நமக்கு உதவும்? (பக்கங்கள் 52-53-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
8 இன்றைக்கு யெகோவா நம்மிடம் நேரடியாகப் பேசுவதில்லை. தன்னுடைய வார்த்தையின் மூலமும் பூமியிலுள்ள தன் பிரதிநிதிகளின் மூலமும் நம்மிடம் பேசுகிறார். எனவே, நம்மீது அதிகாரம் செலுத்த யெகோவா நியமித்திருப்பவர்களை அல்லது அனுமதித்திருப்பவர்களை நாம் மதிக்கும்போது பெரும்பாலும் யெகோவாவின் அதிகாரத்திற்கு அடிபணிகிறோம். இவர்களுக்கு நாம் கீழ்ப்படியாமல் போகும்போது யெகோவாவின் மனதைப் புண்படுத்துகிறோம்; உதாரணமாக, பைபிள் அடிப்படையில் அவர்கள் நமக்கு அறிவுரை கொடுக்கும்போது அல்லது நம்மைத் திருத்தும்போது நாம் ஏற்றுக்கொள்ள மறுத்தால் யெகோவாவின் மனதைப் புண்படுத்துகிறோம். இஸ்ரவேலர் மோசேக்கு எதிராக முறுமுறுத்து கலகம் செய்தபோது தனக்கு எதிராகவே கலகம் செய்ததுபோல் யெகோவா கருதினார்.—எண்ணாகமம் 14:26, 27.
9. அதிகாரத்திற்கு மதிப்பு காட்ட சக மனிதர் மீதுள்ள அன்பு நம்மைத் தூண்டுகிறதென எப்படிச் சொல்லலாம்? உதாரணம் தருக.
9 சக மனிதர் மீதுள்ள அன்பினாலும் அதிகாரத்திற்கு நாம் மதிப்பு காட்டுகிறோம். எப்படிச் சொல்லலாம்? நீங்கள் ஒரு படைவீரர் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு படை வெற்றி பெறுவதற்கும், வீரர்கள் அனைவரும் உயிர் தப்புவதற்கும் படையில் உள்ள ஒவ்வொருவரும் அவரவருடைய மேலதிகாரிக்கு மரியாதை கொடுக்க வேண்டும், உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், ஒத்துழைக்க வேண்டும். அதிகாரத்துக்கு நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் சக வீரர்கள் அனைவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். உண்மைதான், இன்று மனிதப் படைகள் பயங்கரமான நாசத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், யெகோவாவின் படைகள் மக்களுக்கு நன்மையே செய்கின்றன. கடவுளை ‘பரலோகப் படைகளின் யெகோவா’ என்று நூற்றுக்கணக்கான தடவை பைபிள் அழைக்கிறது. (1 சாமுவேல் 1:3) பலம்படைத்த பரலோகப் படைகளுக்கு அவர் தலைவராக இருக்கிறார். யெகோவா சில சமயங்களில் பூமியிலுள்ள தனது ஊழியர்களைப் படைவீரர்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். (சங்கீதம் 68:11; எசேக்கியேல் 37:1-10) நம்மீது அதிகாரம் செலுத்த யெகோவா நியமித்திருப்பவர்களுக்கு நாம் கீழ்ப்படியாவிட்டால், சக கிறிஸ்தவ வீரர்களுக்கு ஆபத்து விளைவிப்போம், அல்லவா? ஒரு கிறிஸ்தவர் மூப்பர்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் சபையிலுள்ள மற்றவர்களும் பாதிக்கப்படலாம். (1 கொரிந்தியர் 12:14, 25, 26) குடும்பத்தில் ஒரு பிள்ளை அடங்கவில்லை என்றால் முழுக் குடும்பமும் அவதிப்படலாம். எனவே, அதிகாரத்தில் உள்ளவர்களை மதித்து அவர்களுடன் ஒத்துழைக்கும்போது சக மனிதருக்கு அன்பு காட்டுகிறோம்.
10, 11. நமக்குக் கிடைக்கும் நன்மையை மனதில் வைப்பது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய நம்மை எப்படித் தூண்டும்?
10 நமக்கு நன்மை கிடைப்பதாலும் அதிகாரத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம். அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும்படி யெகோவா நமக்குச் சொல்லும்போது அதனால் கிடைக்கும் பலன்களையும் பெரும்பாலும் சொல்கிறார். உதாரணமாக, பிள்ளைகள் இந்தப் பூமியில் நீண்ட காலத்துக்கு சந்தோஷமாய் வாழ பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென அவர் சொல்கிறார். (உபாகமம் 5:16; எபேசியர் 6:2, 3) அவருடன் நமக்குள்ள பந்தத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் இருக்க சபை மூப்பர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமெனச் சொல்கிறார். (எபிரெயர் 13:7, 17) நாம் பாதுகாப்புடன் வாழ அரசாங்க அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனச் சொல்கிறார்.—ரோமர் 13:4.
11 அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா ஏன் சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது அதற்கு மதிப்பு கொடுப்பது நமக்குச் சுலபமாக இருக்குமல்லவா? வாழ்க்கையின் மூன்று முக்கிய அம்சங்களில் அதிகாரத்திற்கு எப்படி மதிப்பு காட்டுவது என்பதை நாம் இப்போது சிந்திக்கலாம்.
அதிகாரத்திற்கு மதிப்பு காட்டுதல் —குடும்பத்தில்
12. குடும்பத்தில் கணவருக்கு யெகோவா என்ன பொறுப்பைக் கொடுத்திருக்கிறார், அதை அவர் எப்படி நிறைவேற்றலாம்?
12 குடும்பத்தை நிறுவியவர் யெகோவா. அவர் எல்லாவற்றையும் சீராகச் செய்கிறவர்; அதனால்தான் சுமுகமாய் இயங்கும் விதத்தில் குடும்பத்தை அமைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 14:33) கணவரைக் குடும்பத் தலைவராய் அவர் நியமித்திருக்கிறார். கணவர் தனக்குத் தலையாய் இருக்கும் கிறிஸ்து இயேசுவுக்கு மதிப்பு காட்டுகிறார். எப்படி? சபைமீது இயேசு எப்படித் தலைமை வகிக்கிறாரோ அதுபோல் கணவரும் தன் குடும்பத்தின் மீது தலைமை வகிக்கிறார். (எபேசியர் 5:23) எனவே, குடும்பப் பொறுப்பைக் கணவர் ஒருபோதும் மற்றவர் தலையில் கட்டிவிடக்கூடாது, அவரே நிறைவேற்ற வேண்டும். அவர் கொடுங்கோலராகவோ அடக்கியாளுபவராகவோ இருக்கக்கூடாது. தன் மனைவி மக்களிடம் பாசமாகவும், நியாயமாகவும், தயவாகவும் நடந்துகொள்ள வேண்டும். தானும் அதிகாரத்திற்குக் கீழிருப்பதை அவர் மறந்துவிடக்கூடாது. ஆம், தான் யெகோவாவின் அதிகாரத்திற்குக் கீழிருப்பதை அவர் மனதில் வைத்து நடக்க வேண்டும்.
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி கிறிஸ்தவ தகப்பன் தலைமை வகிக்கிறார்
13. யெகோவாவுக்குப் பிரியமான விதத்தில் தன் குடும்பப் பொறுப்பை மனைவி எப்படி நிறைவேற்றலாம்?
13 மனைவி தன் கணவருக்கு உதவியாளராக, அதாவது பொருத்தமான துணையாக, இருக்க வேண்டும். மனைவிக்கும் குடும்பத்தில் அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால், பிள்ளைகள் தங்கள் “அம்மா கொடுக்கிற அறிவுரையை” ஒதுக்கித்தள்ளக் கூடாது என்று பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 1:8) என்றாலும், மனைவி தன் கணவனின் அதிகாரத்தை மீறி செயல்படக்கூடாது. குடும்பத் தலைவராக கணவர் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு மனைவி துணைபுரியும்போது, அவருடைய அதிகாரத்திற்கு மதிப்பு காட்டுகிறாள். அவள் தன் கணவரை மட்டம் தட்டிப் பேச மாட்டாள், அவரைத் தன் கைக்குள் போட்டுக்கொள்ள மாட்டாள், அல்லது அவருடைய அதிகாரத்தைத் தட்டிப்பறிக்க மாட்டாள். தன் கணவருக்கு ஆதரவாக இருப்பாள், அவருடன் ஒத்துழைப்பாள். கணவருடைய தீர்மானங்களை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் தன் கருத்துகளை மரியாதையுடன் தெரிவிப்பாள், அதேசமயத்தில் அவருக்கு அடிபணிந்து இருப்பாள். கணவர் விசுவாசியாக இல்லையென்றால், அவருக்குக் கீழ்ப்படிவது சில சந்தர்ப்பங்களில் அவளுக்குப் பெரும் சவாலாக இருக்கலாம். என்றாலும், அவள் அடிபணிந்து நடப்பதைப் பார்த்து யெகோவாவின் வழிகளில் நடக்க அவர் தூண்டப்படலாம்.—1 பேதுரு 3:1, 2-ஐ வாசியுங்கள்.
14. யெகோவாவையும் பெற்றோரையும் பிள்ளைகள் எப்படிச் சந்தோஷப்படுத்தலாம்?
14 பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படியும்போது யெகோவாவின் மனதை மகிழ்விக்கிறார்கள். அதோடு, பெற்றோரின் மனதையும் சந்தோஷப்படுத்துகிறார்கள், அவர்களுக்குக் கௌரவம் சேர்க்கிறார்கள். (நீதிமொழிகள் 10:1) ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போலவே கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்; தாய்க்கு அல்லது தகப்பனுக்கு தங்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகமாய்த் தேவை என்பதை அறிந்திருக்கிறார்கள். கடவுள் கொடுத்திருக்கும் கடமைகளைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் சரிவரச் செய்யும்போது சமாதானமும் மகிழ்ச்சியும் பொங்கிவழியும். குடும்பத்தை ஸ்தாபித்த யெகோவாவுக்கும் புகழ் சேரும்.—எபேசியர் 3:14, 15.
அதிகாரத்திற்கு மதிப்பு காட்டுதல் —சபையில்
15. (அ) நாம் யெகோவாவின் அதிகாரத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம் என்பதைச் சபையில் எப்படிக் காட்டலாம்? (ஆ) தலைமை தாங்கி நடத்துபவர்களுக்கு மதிப்பு கொடுக்க எந்த நியமங்கள் நமக்கு உதவும்? (பக்கங்கள் 54-55-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
15 யெகோவா தன்னுடைய மகனைக் கிறிஸ்தவ சபைக்கு அரசராக நியமித்திருக்கிறார். (கொலோசெயர் 1:13) இயேசுவோ, கடவுளுடைய மக்களுக்கு ஆன்மீக உணவளிக்கும் பொறுப்பை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையிடம்’ ஒப்படைத்திருக்கிறார். (மத்தேயு 24:45-47) யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு இந்த ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ செயல்படுகிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளிலிருந்த மூப்பர்களைப் போலவே இன்றுள்ள மூப்பர்களுக்கும் ஆளும் குழுவிடமிருந்து அறிவுரைகளும் வழிநடத்துதலும் கிடைக்கின்றன; இவை ஆளும் குழுவிடமிருந்து நேரடியாகவோ அதன் பிரதிநிதிகளாய்ச் சேவை செய்யும் பயணக் கண்காணிகளிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ கிடைக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ மூப்பர்களின் அதிகாரத்திற்கு மதிப்பு கொடுக்கும்போது யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்.—1 தெசலோனிக்கேயர் 5:12-ஐயும் எபிரெயர் 13:17-ஐயும் வாசியுங்கள்.
16. எந்த அர்த்தத்தில் மூப்பர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள்?
16 மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பரிபூரணர் அல்ல. அவர்களும் நம்மைப் போல் தவறு செய்கிறவர்கள்தான். இருந்தாலும், ஆன்மீக ரீதியில் சபையார் உறுதியாய் இருப்பதற்கு அவர்களை நமக்குப் “பரிசுகளாக” கடவுள் கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:8) மூப்பர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள். (அப்போஸ்தலர் 20:28) எப்படி? முதலாவதாக, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளில் உள்ள தகுதிகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-7, 12; தீத்து 1:5-9) இரண்டாவதாக, ஒரு சகோதரருக்கு இந்தத் தகுதிகள் இருக்கின்றனவா என்பதை மூப்பர்கள் சீர்தூக்கிப் பார்க்கும்போது கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்காக ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும்.
17. சபை பொறுப்புகளை நிறைவேற்றும்போது சகோதரிகள் ஏன் முக்காடு போடுகிறார்கள்?
17 பொதுவாக, சபை பொறுப்புகளை நிறைவேற்றுவது, உதாரணத்திற்கு வெளி ஊழிய கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவது, மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்களின் பொறுப்பு. ஆனால், அவர்கள் இல்லாத பட்சத்தில் ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்கள் அந்த வேலைகளைச் செய்யலாம். அவர்களும் இல்லாத சமயத்தில், தகுதியுள்ள சகோதரிகள் செய்யலாம். ஆனால், பொதுவாக ஞானஸ்நானம் பெற்ற சகோதரர் செய்ய வேண்டிய வேலையை ஒரு சகோதரி செய்யும்போது அவர் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்.a (1 கொரிந்தியர் 11:3-10) இது பெண்களை இழிவுபடுத்துவதாக இல்லை. மாறாக, சபையிலும் குடும்பத்திலும் யெகோவா ஏற்படுத்தியிருக்கும் தலைமை ஸ்தானத்திற்கு மதிப்பு கொடுக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
அதிகாரிகளுக்கு மதிப்பு காட்டுதல்
18, 19. (அ) ரோமர் 13:1-7-ல் உள்ள நியமங்களை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? (ஆ) அரசு அதிகாரிகளுக்கு நாம் எப்படி மதிப்பு காட்டலாம்?
18 ரோமர் 13:1-7 வசனங்களில் உள்ள நியமங்களை உண்மை கிறிஸ்தவர்கள் கருத்தாய்க் கடைப்பிடிக்கிறார்கள். (வாசியுங்கள்.) இந்த வசனங்களில், ‘அதிகாரம்’ என்ற வார்த்தை அடிக்கடி வருவதைப் பார்த்திருப்பீர்கள்; இது அரசு அதிகாரத்தைக் குறிக்கிறது. அரசாங்கங்கள் மக்களுக்குச் சில முக்கியமான சேவைகளைச் செய்கின்றன; உதாரணமாக, ஓரளவு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்றன, மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருகின்றன. யெகோவா அனுமதிக்கும்வரை இந்த அரசாங்கங்கள் இருக்கும். அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அதிகாரங்களுக்கு நாம் மதிப்பு கொடுக்கிறோம். வரி செலுத்துவதில், படிவங்களை அல்லது ஆவணங்களைப் பூர்த்தி செய்வதில், அனைத்து சட்டங்களையும் மதித்து நடக்கிறோம்; அதுமட்டுமல்ல நம்மையும், நம் குடும்பத்தையும், வியாபாரத்தையும், சொத்துக்களையும் உட்படுத்தும் அனைத்து சட்டங்களையும் மதித்து நடக்கிறோம். ஆனால், கடவுளுடைய சட்டங்களை மீறும்படி அரசாங்க அதிகாரிகள் சொன்னால் அவர்களுக்குக் கீழ்ப்படிய மாட்டோம். இயேசுவின் அப்போஸ்தலர்களைப் போல், “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று அவர்களிடம் சொல்வோம்.—அப்போஸ்தலர் 5:28, 29; “யாருடைய அதிகாரத்திற்கு நான் கீழ்ப்படிய வேண்டும்?” என்ற பெட்டியைப் பக்கம் 48-ல் காண்க.
19 அரசு அதிகாரிகளிடம் தகுந்த முறையில் நடந்துகொள்வதன் மூலமும் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். சிலசமயங்களில் அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச வேண்டிய சந்தர்ப்பம் நமக்கு வரலாம். அப்போஸ்தலன் பவுலுக்கும் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வந்தது. அரசன் ஏரோது அகிரிப்பா, ஆளுநர் பெஸ்து போன்றவர்களிடம் அவர் பேசினார். அவர்கள் பயங்கரமான குற்றங்கள் செய்திருந்தபோதிலும் அவர்களுக்கு பவுல் மதிப்பு கொடுத்துப் பேசினார். (அப்போஸ்தலர் 26:2, 25) நாம் ஜனாதிபதியிடம் பேசினாலும் சரி போலீஸ்காரரிடம் பேசினாலும் சரி, பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அதேபோல் பள்ளியில் படிக்கும் கிறிஸ்தவ பிள்ளைகளும் தங்கள் ஆசிரியர்களுக்கும் பள்ளி அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் மரியாதை காட்டுகிறார்கள். நம் நம்பிக்கைகளை ஆதரிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல நம்மை எதிர்ப்பவர்களுக்கும் நாம் மதிப்பு காட்டுகிறோம். நாம் மரியாதையுள்ள ஆட்கள் என்பதை நாம் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து விசுவாசிகள் அல்லாதவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.—ரோமர் 12:17, 18-ஐ வாசியுங்கள்; 1 பேதுரு 3:15.
20, 21. அதிகாரத்திற்குத் தகுந்த மரியாதை காட்டுவதால் நமக்குக் கிடைக்கும் சில நன்மைகள் யாவை?
20 மற்றவர்களுக்கு மரியாதை காட்ட நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது. “எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 2:17) நாம் உண்மையிலேயே மதிப்புமரியாதை காட்டுகிறவர்கள் என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ளும்போது மனம் கவரப்படலாம். மரியாதை என்ற குணம் இன்று அபூர்வமாகி வருவதை நினைவில்கொள்ளுங்கள். “உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்” என்று இயேசு சொன்னார். இயேசுவின் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வழி மரியாதையுடன் நடந்துகொள்வதாகும்.—மத்தேயு 5:16.
21 இருள் சூழ்ந்த இவ்வுலகில், நல்மனம் படைத்தவர்கள் ஆன்மீக ஒளியிடம் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே, குடும்பத்தாரிடம், சபையாரிடம், அரசு அதிகாரிகளிடம் நாம் மதிப்பு காட்டும்போது அதைப் பார்த்து சிலர் கவர்ந்திழுக்கப்படலாம். பின்பு, அவர்களும் நம்மோடு சேர்ந்து ஒளியின் பாதையில் நடக்கத் தூண்டப்படலாம். அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட எதிர்பார்ப்பு! அப்படி அவர்கள் கவரப்படவில்லை என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: சக மனிதர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்கும்போது யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறோம். அதோடு, அவருடைய அன்பிலும் நிலைத்திருப்போம். இதைவிட பெரிய வெகுமதி வேறு உண்டா?
a இந்த நியமத்தை நடைமுறையில் பின்பற்ற உதவும் சில வழிகளைப் பக்கங்கள் 239-242-ல் உள்ள பிற்சேர்க்கையில் காணலாம்.