அதிகாரம் 3
கடவுள் நேசிப்பவர்களை நேசியுங்கள்
“ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
1-3. (அ) பைபிளில் உள்ள மறுக்கமுடியாத உண்மை எது? (ஆ) நம்மை நல்வழியில் நடத்துகிற நண்பர்களை நாம் எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
மனிதர்கள் ஒரு விதத்தில் ‘ஸ்பான்ஞ்’ போல் இருக்கிறார்கள்; தங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே ‘உறிஞ்சிக்கொள்கிறார்கள்.’ ஆம், நாம் ஒருவருடன் நெருங்கிப் பழகினால்—சில சமயம் நமக்கே தெரியாமல்—அவருடைய மனோபாவங்கள், நெறிமுறைகள், சுபாவங்கள் நம்மிடமும் ஒட்டிக்கொள்கின்றன.
2 “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) இந்த உண்மையை யாருமே மறுக்க முடியாது. மேலோட்டமாகப் பழகுவதைப் பற்றி இந்த வசனம் சொல்லவில்லை. காலமெல்லாம் தொடரும் நட்பைப் பற்றியே சொல்கிறது; ஏனென்றால், “நடக்கிறவன்” என்ற வார்த்தை இந்த அர்த்தத்தையே தருகிறது. “ஒரு நபரோடு நடப்பது என்பது அவரிடம் அன்பாகவும் அன்னியோன்னியமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது” என ஒரு பைபிள் விளக்கவுரை சொல்கிறது. நாம் யார்மீது பிரியமாக இருக்கிறோமோ அவரை அப்படியே பின்பற்ற முயல்வோம் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்தானே? ஆம், ‘பூவோடு சேர்ந்த நாருபோல்,’ ‘பன்றியோடு சேர்ந்த கன்றுபோல்’ நாம் யாருடன் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடுவோம்.
3 கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க, நம்மை நல்வழியில் நடத்துகிறவர்களை நாம் நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? சுருங்கச் சொன்னால், கடவுள் நேசிக்கும் நபர்களை நாம் நேசிக்க வேண்டும், அவருடைய நண்பர்களை நம்முடைய நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும். இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: யெகோவா தனது நண்பர்களிடம் என்ன குணங்களை எதிர்பார்க்கிறாரோ அதே குணங்களை உடைய ஒருவர் உங்களுடைய நண்பராகவும் இருந்தால் எப்படி இருக்கும்? அவரைவிட வேறு யாராவது உங்களுக்குச் சிறந்த நண்பராக இருக்க முடியுமா? யெகோவா எப்படிப்பட்டவர்களை நேசிக்கிறார் என்பதை நாம் இப்போது சிந்திப்போம். யெகோவாவின் கண்ணோட்டத்தை நாம் தெளிவாகப் புரிந்திருந்தால், நல்ல நண்பர்களை மிக எளிதில் கண்டுபிடிக்கலாம்.
கடவுள் யாரை நேசிக்கிறார்?
4. தனது நண்பர்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்க யெகோவாவுக்கு ஏன் உரிமை இருக்கிறது, ஆபிரகாமை ‘என் நண்பன்’ என யெகோவா ஏன் அழைத்தார்?
4 யெகோவா தனது நண்பர்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்; அப்படிச் செய்ய அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது; அவர்தானே இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசர். அவருக்கு நண்பராக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! சரி, அவர் யாரைத் தனது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்? தன்னை முழுமனதோடு விசுவாசிப்பவர்களையே நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார். உதாரணமாக, விசுவாசத்திற்குத் தலைசிறந்த முன்மாதிரியாகத் திகழும் ஆபிரகாமை எடுத்துக்கொள்ளுங்கள். தனது ஒரே மகனைப் பலியாகக் கொடுக்கும்படி கடவுள் இவரிடம் கேட்டார்.a பாசமுள்ள ஓர் அப்பாவுக்கு இதைவிடப் பெரிய சோதனை ஏதாவது இருக்க முடியுமா? இருந்தாலும் ஆபிரகாம், “ஈசாக்கைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போனார்.” ஏனென்றால், “இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும்” என்பதை முழுமையாக விசுவாசித்தார். (எபிரெயர் 11:17-19) ஆபிரகாம் இப்பேர்ப்பட்ட விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டியதால், கடவுள் அவரை ‘என் நண்பன்’ என அன்புடன் அழைத்தார்.—ஏசாயா 41:8; யாக்கோபு 2:21-23.
5. தனக்குக் கீழ்ப்படிகிறவர்களை யெகோவா எப்படிக் கருதுகிறார்?
5 தனக்குக் கீழ்ப்படிகிறவர்களை யெகோவா உயர்வாய் மதிக்கிறார். முக்கியமாக, தனக்கு உண்மையாக இருப்பவர்களை அவர் நேசிக்கிறார். (2 சாமுவேல் 22:26-ஐ வாசியுங்கள்.) முதல் அதிகாரத்தில் பார்த்தபடி, அன்பினால் தூண்டப்பட்டுத் தனக்குக் கீழ்ப்படிகிறவர்களைக் கண்டு யெகோவா மிகவும் சந்தோஷப்படுகிறார். அவர் “நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்” என்று நீதிமொழிகள் 3:32 சொல்கிறது. தனது கட்டளைகளின்படி நடக்கிறவர்களை தனது ‘கூடாரத்திற்கு’ விருந்தினராக வரும்படி அன்புடன் அழைக்கிறார்; அதாவது, தன்னை வழிபடவும், தயக்கமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் ஜெபம் செய்யவும் அழைக்கிறார்.—சங்கீதம் 15:1-5.
6. இயேசுமீது நமக்கு அன்பு இருப்பதை எப்படிக் காட்டலாம், தனது மகனை நேசிக்கிறவர்களைப் பார்க்கும்போது யெகோவா எப்படி உணருகிறார்?
6 தனது ஒரே மகன் இயேசுவை யார் நேசிக்கிறார்களோ அவர்களை யெகோவா நேசிக்கிறார். “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான், என் தகப்பனும் அவன்மேல் அன்பு காட்டுவார். நாங்கள் இரண்டு பேரும் அவனிடம் வந்து அவனோடு தங்குவோம்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:23) இயேசுமீது நமக்கு அன்பு இருப்பதை எப்படிக் காட்டலாம்? அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமே. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்து சீஷராக்குவது அந்தக் கட்டளைகளில் அடக்கம். (மத்தேயு 28:19, 20; யோவான் 14:15, 21) பாவ இயல்புள்ளவர்களாகிய நாம் இயேசுவின் ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதன்’ மூலமும், அதாவது சொல்லிலும் செயலிலும் நம்மால் முடிந்தளவு அவரைப் பின்பற்றுவதன் மூலமும், அவர்மீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டலாம். (1 பேதுரு 2:21) இயேசுவை நெஞ்சார நேசித்து அவருடைய வழியில் நடக்க முயல்கிறவர்களைப் பார்க்கும்போது யெகோவா அளவிலா ஆனந்தம் அடைகிறார்.
7. யெகோவாவின் நண்பர்களே நம் நண்பர்களாக இருப்பது ஏன் மிகவும் நல்லது?
7 யெகோவா தனது நண்பர்களிடம் எதிர்பார்க்கும் முத்தான குணங்கள் இவையே: விசுவாசம், உண்மைத்தன்மை, கீழ்ப்படிதல், இயேசு மீதும் அவருடைய நெறிமுறைகள் மீதும் அன்பு. எனவே, நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் இப்படிப்பட்ட குணங்களும் நெறிமுறைகளும் இருக்கின்றனவா? யெகோவாவின் நண்பர்களே எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்களா?’ யெகோவாவின் நண்பர்களே நமக்கும் நண்பர்களாக இருப்பது மிகவும் நல்லது. தெய்வீக குணங்களை வளர்த்துக்கொள்கிறவர்களும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை முழுமூச்சுடன் அறிவிக்கிறவர்களும் நமக்கு நண்பர்களாக இருந்தால் நம்மைச் செதுக்கிச் சீராக்குவார்கள். கடவுளுக்குப் பிரியமாய் நடக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை வலுப்படுத்துவார்கள்.—“நல்ல நண்பருக்குரிய தகுதிகள்...” என்ற பெட்டியைப் பக்கம் 33-ல் காண்க.
பைபிள் உதாரணம் கற்பிக்கிற பாடம்
8. இவர்களுக்கு இடையே இருந்த பந்தம் ஏன் உங்கள் மனதைக் கவருகிறது: (அ) நகோமி–ரூத்? (ஆ) மூன்று இளம் எபிரெயர்கள்? (இ) பவுல்–தீமோத்தேயு?
8 நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்தவர்களின் உதாரணங்கள் பைபிளில் ஏராளம். நகோமிக்கும் அவருடைய மருமகள் ரூத்துக்கும் இடையே, பாபிலோனிலிருந்த மூன்று இளம் எபிரெயர்களுக்கும் இடையே, பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் இடையே இருந்த பந்தத்தைப் பற்றி நீங்கள் பைபிளில் வாசித்துப் பார்க்கலாம். (ரூத் 1:16; தானியேல் 3:17, 18; 1 கொரிந்தியர் 4:17; பிலிப்பியர் 2:20-22) என்றாலும், நட்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த தாவீது–யோனத்தான் உதாரணத்தை இப்போது நாம் சிந்திக்கலாம்.
9, 10. தாவீது–யோனத்தானின் நட்புக்கு எது அடித்தளமாய் இருந்தது?
9 கோலியாத்தை தாவீது வெட்டிச் சாய்த்த பிறகு, “யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்” என்று பைபிளில் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 18:1) அதுமுதல் அவர்கள் இருவருக்கும் இடையே முறிக்கமுடியாத நட்பு மலரத் துவங்கியது. அவர்களுக்கு ரொம்பவே வயது வித்தியாசம் இருந்தபோதிலும், போர்க்களத்தில் யோனத்தான் சாகும்வரை அந்த நட்புமலர் வாடாமல் இருந்தது.b (2 சாமுவேல் 1:26) இவர்களுடைய நெருங்கிய நட்புக்கு எது அடித்தளமாக இருந்தது?
10 தாவீதுக்கும் யோனத்தானுக்கும் கடவுள்மீது ஆழமான அன்பு இருந்தது, அவருக்கு உண்மையுடன் வாழ வேண்டுமென்ற தீவிர ஆசையும் இருந்தது. இதுவே அவர்களுடைய நட்புக்கு அடித்தளமாக இருந்தது. ஆம், கடவுளோடு இருந்த பந்தமே அவர்களுடைய நட்பைப் பலப்படுத்தியது. இருவரிடமும் இருந்த மெச்சத்தக்க குணங்களால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டார்கள். யெகோவாவின் பெயரை நிந்தித்தவனை எதிர்த்துச் சண்டையிட்ட இளம் தாவீதின் வீரதீரத்தையும் மனவுறுதியையும் பார்த்து யோனத்தான் அசந்துபோனார். அதேசமயம், யோனத்தானும் யெகோவாவின் ஏற்பாடுகளை முழுமனதோடு ஆதரித்தார், தன்னுடைய நலனைவிட தாவீதின் நலனில் அதிக அக்கறை காட்டினார்; இதையெல்லாம் பார்த்து தன்னைவிட மூத்தவரான யோனத்தான்மேல் தாவீதுக்கும் மதிப்புமரியாதை பெருகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யோனத்தானின் அப்பா சவுல் கொடிய அரசராக இருந்தார்; தாவீதை அவர் கொல்லத் துடித்தார், அதனால் மனம் நொந்துபோன தாவீது வனாந்தரத்திற்குத் தப்பியோடி அங்கே நாடோடியாய்த் திரிந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் யோனத்தான் தன் நண்பனுக்கு உண்மையாய் இருந்தது குறிப்பிடத்தக்கது; ஏனென்றால், யோனத்தான் தாவீதைத் தேடிச் சென்று, ‘யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவருக்கு உதவினார்.’ (1 சாமுவேல் 23:16) உயிர்த் தோழன் தன்னைத் தேடிவந்து தைரியம் அளித்தபோது தாவீதுக்கு எப்படி இருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள்!c
11. தாவீது–யோனத்தான் உதாரணத்திலிருந்து நட்பைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 தாவீது–யோனத்தான் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நண்பர்கள் ஒரே விதமான ஆன்மீக நெறிகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். நம்மைப் போல் நம்பிக்கை உள்ளவர்களோடு, ஒழுக்கநெறிகளைப் பின்பற்றுகிறவர்களோடு, கடவுளுக்கு உண்மையாயிருக்க விரும்புகிறவர்களோடு நாம் நெருங்கிப் பழகினால், உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முடியும்; இப்படி, ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் முடியும். (ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.) இதுபோன்ற ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களைச் சக விசுவாசிகள் மத்தியில் பார்க்க முடியும். ஆனால், ராஜ்ய மன்றத்துக்கு வருகிற எல்லாருமே நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது.
நெருங்கிய நண்பர்களைத் தேர்ந்தெடுக்க...
12, 13. (அ) கிறிஸ்தவர்கள் மத்தியிலும்கூட நாம் ஏன் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? (ஆ) முதல் நூற்றாண்டு சபையில் என்ன பிரச்சினைகள் இருந்தன, அதற்கு பவுல் கொடுத்த கடுமையான எச்சரிக்கைகள் யாவை?
12 ஆன்மீக ரீதியில் வளர நம் நண்பர்கள் நமக்கு உதவி செய்ய வேண்டுமென்றால், சபையிலும்கூட நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒருவேளை ஆச்சரியமாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு மரத்தில் உள்ள சில காய்கள் பழுப்பதற்கு காலமெடுக்கலாம்; அதுபோல, சபையிலுள்ள சிலர் முதிர்ச்சியடைவதற்குக் காலம் எடுக்கலாம். அதனால்தான் சபையிலுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் வெவ்வேறு அளவில் முதிர்ச்சியடைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். (எபிரெயர் 5:12–6:3) என்றாலும், புதியவர்களிடம் அல்லது விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களிடம் நாம் பொறுமையுடனும் அன்புடனும் பழகுகிறோம். ஏனென்றால், ஆன்மீக ரீதியில் முன்னேற அவர்களுக்கு உதவ வேண்டுமென நாம் விரும்புகிறோம்.—ரோமர் 14:1; 15:1.
13 சில சமயங்களில், சபையில் எப்படிப்பட்டவர்களுடன் பழகுகிறோம் என்பதைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிலர் தகாத நடத்தையில் ஈடுபடலாம், சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படலாம் அல்லது குறைசொல்லலாம். முதல் நூற்றாண்டிலிருந்த சபைகளிலும்கூட இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. பெரும்பாலோர் உண்மையுள்ளவர்களாகவே இருந்தார்கள். ஆனால், சிலர் தகாத விதமாய் நடந்துகொண்டார்கள். கொரிந்து சபையிலிருந்த சிலர் கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிராகப் பேசிவந்தார்கள். எனவே, அந்தச் சபையாரிடம், “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்” என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 15:12, 33) கிறிஸ்தவர்கள் மத்தியிலும்கூட கண்ணியமற்ற விதத்தில் நடப்பவர்கள் சிலர் இருந்ததால் ஜாக்கிரதையாக இருக்கும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் அறிவுறுத்தினார். ஆம், அப்படிப்பட்ட ஆட்களுடன் நெருங்கிப் பழகாமல் விலகியிருக்கும்படி தீமோத்தேயுவுக்குச் சொன்னார்.—2 தீமோத்தேயு 2:20-22-ஐ வாசியுங்கள்.
14. நண்பர்களைக் குறித்து பவுல் கொடுத்த எச்சரிக்கைகளில் பொதிந்துள்ள நியமத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
14 பவுல் கொடுத்த எச்சரிக்கைகளில் பொதிந்துள்ள நியமத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? நம்மீது தீய செல்வாக்கு செலுத்தும் ஆட்களோடு பழகுவதை நாம் தவிர்க்க வேண்டும்—சபைக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி. (2 தெசலோனிக்கேயர் 3:6, 7, 14) யெகோவாவோடு உள்ள பந்தத்தை நாம் பொக்கிஷமாய்ப் பாதுகாக்க வேண்டும். ஆரம்பத்தில் பார்த்த உதாரணத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: நம்முடைய நெருங்கிய நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் மனப்பான்மைகளையும் ஒரு ‘ஸ்பான்ஞ்’ போல் நாமும் அப்படியே உறிஞ்சிக்கொள்கிறோம். ஒரு ‘ஸ்பான்ஞை’ அழுக்குத் தண்ணீரில் முக்கியெடுத்து, அதைப் பிழிந்தால் நல்ல தண்ணீர் வருமென எதிர்பார்க்க முடியாது; அதுபோல, தீய செல்வாக்கு செலுத்தும் ஆட்களோடு பழகிக்கொண்டு நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வோம் என எதிர்பார்க்க முடியாது.—1 கொரிந்தியர் 5:6.
கிறிஸ்தவர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்
15. சபையில் ஆன்மீகச் சிந்தையுள்ள நண்பர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
15 ஆனால், கிறிஸ்தவர்கள் மத்தியில் உங்களுக்கு நிச்சயம் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். (சங்கீதம் 133:1) சபையில் ஆன்மீகச் சிந்தையுள்ள நண்பர்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? கடவுளுக்குப் பிரியமான குணங்களையும் பழக்கங்களையும் நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்; அப்போது, கடவுளுக்குப் பிரியமாய் நடக்க விரும்புகிறவர்கள் உங்களிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள். அதேசமயம், புதிய நண்பர்களைக் கண்டுபிடிக்க நீங்களும் முயற்சி செய்ய வேண்டும், சில நடைமுறையான படிகளை எடுக்க வேண்டும். (“நல்ல நண்பர்களைக் கண்டுபிடித்தோம்” என்ற பெட்டியைப் பக்கம் 34-ல் காண்க.) நீங்கள் என்ன குணங்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதே குணங்களை உடைய ஆட்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். “உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்” என்று பைபிள் தரும் அறிவுரைக்குக் கீழ்ப்படியுங்கள்; இனம், தேசம், கலாச்சாரம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் நம் சகோதர சகோதரிகள் எல்லாரோடும் தோழமைகொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 6:13; 1 பேதுரு 2:17-ஐ வாசியுங்கள்.) சக வயதினருடன் மட்டுமே எப்போதும் பழகிக்கொண்டிருக்காதீர்கள். யோனத்தானுக்கும் தாவீதுக்கும் ரொம்பவே வயது வித்தியாசம் இருந்தது என்பதை நினைவில் வையுங்கள். உங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளும்போது, அவர்களுடைய அபரிமிதமான அனுபவத்திலிருந்தும் ஞானத்திலிருந்தும் நீங்கள் பயனடைவீர்கள்.
பிரச்சினைகள் ஏற்படுகையில்...
16, 17. சக விசுவாசி ஒருவர் நம்மைப் புண்படுத்தினால் நாம் ஏன் சபையைவிட்டுப் போகக்கூடாது?
16 சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கலாம், அவர்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்தும் வந்திருக்கலாம், அதனால் அவ்வப்போது பிரச்சினைகள் எழலாம். சக கிறிஸ்தவர் ஒருவர் நம் மனதைப் புண்படுத்துகிற விதமாக ஏதாவது பேசிவிடலாம் அல்லது செய்துவிடலாம். (நீதிமொழிகள் 12:18) சில சமயங்களில் மற்றவர்களுடன் நமக்கு ஒத்துப்போகாதபோது அல்லது கருத்துவேறுபாடு ஏற்படும்போது பிரச்சினைகள் பெரிதாகலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் விசுவாசத்திலிருந்து விலகி சபையைவிட்டு வெளியே போய்விடுவோமா? யெகோவா மீதும் அவர் நேசிக்கிறவர்கள் மீதும் நமக்கு உண்மையான அன்பு இருந்தால், அப்படிப் போக மாட்டோம்.
17 யெகோவா நம் படைப்பாளராகவும் உயிரைக் காப்பவராகவும் இருப்பதால், நம் அன்பையும் முழுமையான பக்தியையும் பெற அவரே தகுதியானவர். (வெளிப்படுத்துதல் 4:11) யெகோவா இன்று பயன்படுத்தி வருகிற சபையை நாம் உண்மையோடு ஆதரிக்க வேண்டும். (எபிரெயர் 13:17) சக விசுவாசி ஒருவர் நம்மைப் புண்படுத்தினால் அல்லது நம் மனதை நோகடித்தால் அவர் மீதுள்ள கோபத்தில் நாம் சபையை விட்டே போய்விட மாட்டோம். ஏன் போக வேண்டும்? யெகோவா நம்மைப் புண்படுத்தவில்லையே! நாம் யெகோவாவை உண்மையிலேயே நேசித்தால், அவரையும் அவருடைய மக்களையும்விட்டு ஒருபோதும் பிரிய மாட்டோம்!—சங்கீதம் 119:165-ஐ வாசியுங்கள்.
18. (அ) சபையில் சமாதானம் தழைத்தோங்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மன்னிப்பதற்கு நியாயமான காரணம் இருக்கும்போது மன்னித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
18 சபையிலுள்ள சகோதர சகோதரிகள்மீது நமக்கு அன்பு இருந்தால், அவர்களிடம் சமாதானமாக இருப்போம். தான் நேசிப்பவர்களிடம் யெகோவா பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை, நாமும் எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு அன்பு இருந்தால், மற்றவர்கள் செய்கிற சின்னச் சின்ன தவறுகளைப் பொருட்படுத்த மாட்டோம்; அதோடு, நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள், அவ்வப்போது தவறு செய்கிறவர்கள் என்பதையும் மனதில் வைத்திருப்போம். (நீதிமொழிகள் 17:9; 1 பேதுரு 4:8) அன்பு இருந்தால் நாம் ‘ஒருவரை ஒருவர் . . . தாராளமாக மன்னிப்போம்.’ (கொலோசெயர் 3:13) ஆனால், இந்த அறிவுரையைப் பின்பற்றுவது எப்போதும் நமக்குச் சுலபமாக இருக்காது. நம்மைப் புண்படுத்திய நபர்மீது நாம் கோபமாகவே இருந்தால், நம் மனதில் வன்மத்திற்கு இடம்கொடுத்துவிடலாம். நாம் கோபமாகவே இருக்கும்போது ஏதோவொரு விதத்தில் அவரைத் தண்டிக்கிறோம் என்று நினைத்துக்கொள்வோம். உண்மையில், வன்மம் வைத்துக்கொள்வது நமக்குத்தான் கெடுதல். நமக்கு விரோதமாக தவறு செய்தவரை மன்னிப்பதற்கு நியாயமான காரணம் இருந்தால் மன்னித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். (லூக்கா 17:3, 4) நமக்கு மன சமாதானமும் மன நிம்மதியும் கிடைக்கும், சபையில் சமாதானம் தழைத்தோங்கும்; மிக முக்கியமாக, யெகோவாவுடன் நமக்குள்ள பந்தம் முறிந்துவிடாமல் இருக்கும்.—மத்தேயு 6:14, 15; ரோமர் 14:19.
ஒருவரோடு பழகுவதை எப்போது நிறுத்திக்கொள்ள வேண்டும்?
19. எப்போது ஒருவருடன் பழகுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்?
19 சபையில் அங்கத்தினராக இருந்த ஒருவருடன் இனிமேல் பழகக் கூடாது என்று சில சமயங்களில் நமக்குச் சொல்லப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலை எப்போது ஏற்படலாம்? மனம் திருந்தாமல் கடவுளுடைய சட்டங்களை மீறி நடப்பவர் சபைநீக்கம் செய்யப்படும்போது, அல்லது ஒருவர் பொய் போதனைகளைப் போதிப்பதன் மூலம் விசுவாசத்தை நிராகரிக்கும்போது, அல்லது சபையுடன் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளும்போது ஏற்படலாம். இத்தகைய ஆட்களுடன் “பழகுவதை விட்டுவிட வேண்டும்” என்று கடவுளுடைய வார்த்தை நேரடியாகச் சொல்கிறது.d (1 கொரிந்தியர் 5:11-13-ஐ வாசியுங்கள்; 2 யோவான் 9-11) அவர் ஒருவேளை நம்முடைய நண்பராக அல்லது குடும்ப அங்கத்தினராக இருந்தால் அவரோடு பழகுவதை நிறுத்திக்கொள்வது ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். என்றாலும், இந்த விஷயத்தில் நாம் உறுதியாக இருப்போமா? வேறு எதையும்விட, யெகோவாவுக்கும் அவருடைய நீதியான சட்டங்களுக்கும் உண்மைத்தன்மை காட்டுவோமா? நாம் காட்டுகிற உண்மைத்தன்மையையும் கீழ்ப்படிதலையும் யெகோவா உயர்வாய் மதிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
20, 21. (அ) சபைநீக்கம் ஏன் ஓர் அன்புள்ள ஏற்பாடு? (ஆ) நம்முடைய நண்பர்களை மிக கவனமாகத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?
20 சபைநீக்கம் என்பது யெகோவா செய்திருக்கும் ஓர் அன்புள்ள ஏற்பாடு. ஏன் அப்படிச் சொல்கிறோம்? மனம் திருந்தாத ஒரு பாவியைச் சபையிலிருந்து நீக்குவது யெகோவாவை நேசிப்பதையும், அவருடைய பெயரையும் நெறிகளையும் உயர்வாய் மதிப்பதையும் காட்டுகிறது. (1 பேதுரு 1:15, 16) ஒருவரை சபைநீக்கம் செய்யும்போது சபை பாதுகாக்கப்படுகிறது. யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்கிறவர்கள் வேண்டுமென்றே பாவம் செய்கிறவர்களுடைய தீய செல்வாக்கிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்; இந்தக் கொடிய உலகில் கிறிஸ்தவ சபை மட்டுமே புகலிடமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 5:7; எபிரெயர் 12:15, 16) தவறு செய்தவர் மீதுள்ள அன்பினால்தான் யெகோவா அவரைக் கடுமையாகக் கண்டிக்கிறார். அவர் தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொள்ளவும் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கான படிகளை எடுக்கவும் இது உதவும்.—எபிரெயர் 12:11.
21 ‘பூவோடு சேர்ந்த நாருபோல்,’ ‘பன்றியோடு சேர்ந்த கன்றுபோல்,’ நாம் யாருடன் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடுவோம் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. எனவே, நம்முடைய நண்பர்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். யெகோவாவின் நண்பர்களையே நம்முடைய நண்பர்களாக்கினால், அவர் நேசிக்கும் நபர்களையே நேசித்தால், நம்முடைய நட்பு வட்டத்தில் நல்லவர்களே இருப்பார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் யெகோவாவுக்குப் பிரியமாய் வாழவேண்டுமென்ற நம் தீர்மானத்தைப் பலப்படுத்தும்.
a இது, யெகோவா தனது ஒரே மகனை எதிர்காலத்தில் பலியாகச் செலுத்துவதற்குப் படமாக இருந்தது. (யோவான் 3:16) ஆபிரகாமின் விஷயத்தில் யெகோவா தலையிட்டு, ஈசாக்குக்குப் பதிலாக ஒரு செம்மறியாட்டுக் கடாவைப் பலியாகச் செலுத்தினார்.—ஆதியாகமம் 22:1, 2, 9-13.
b கோலியாத்தை வெட்டிச் சாய்த்தபோது தாவீது ஒரு “சின்னப் பையன்.” யோனத்தான் இறந்தபோது தாவீதுக்கு சுமார் 30 வயதுதான். (1 சாமுவேல் 17:33; 31:2; 2 சாமுவேல் 5:4) யோனத்தானுக்கு அப்போது ஏறக்குறைய 60 வயது, அதனால் அவர் தாவீதைவிட கிட்டத்தட்ட 30 வயது மூத்தவராக இருந்திருக்கலாம்.
c தாவீதுக்குத் தைரியமளிக்க யோனத்தான் ஐந்து விஷயங்களைச் சொன்னார். இது 1 சாமுவேல் 23:17-ல் உள்ளது. (1) பயப்படாமல் இருக்கும்படி தாவீதிடம் சொன்னார். (2) சவுலின் திட்டங்கள் நிச்சயம் தோல்வி அடையும் என தாவீதுக்கு நம்பிக்கை அளித்தார். (3) கடவுள் வாக்குறுதி அளித்தபடி, தாவீது நிச்சயம் ராஜாவாக ஆவார் என அவருக்கு நினைப்பூட்டினார். (4) அவர் எப்போதும் தாவீதுக்கு உண்மையாக இருப்பார் என்று உறுதியளித்தார். (5) அவர் தாவீதுக்கு உண்மையாய் இருப்பதை சவுலும் அறிவார் என்று சொன்னார்.
d சபைநீக்கம் செய்யப்பட்டவரை அல்லது சபையுடன் உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டவரை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு பக்கங்கள் 237-239-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.