“ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக்கொள்ளட்டும்”
“நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”—ரோமர் 14:12.
1. என்ன உத்தரவாதத்தை மூன்று எபிரெய இளைஞர்கள் நிறைவேற்றினார்கள்?
பாபிலோனில் வாழ்ந்துவந்த மூன்று எபிரெய இளைஞர்கள் வாழ்வா சாவா என்ற தீர்மானத்தை எதிர்ப்படுகிறார்கள். அந்நாட்டு சட்டத்தின்படி, மாபெரும் சிலைக்கு முன்பு அவர்கள் தாழ விழுந்து வணங்க வேண்டுமா? அல்லது அதை வணங்க மறுத்து, எரிகிற அக்கினிச் சூளைக்கு இரையாக வேண்டுமா? சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற அந்த இளைஞர்களுக்கு யாரிடமும் யோசனை கேட்க நேரமுமில்லை; அவர்கள் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. எந்தவித தயக்கமுமின்றி, ராஜாவிடம் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: “நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.” (தானியேல் 3:1-18) இந்த மூன்று எபிரெயர்களும் தங்களுடைய உத்தரவாதத்தை தாங்களே சுமந்தார்கள்.
2. இயேசு கிறிஸ்து சம்பந்தமாக பிலாத்து எடுத்த தீர்மானத்தில் செல்வாக்கு செலுத்தியது யார், ஆனால் கணக்குக் கொடுக்கும் உத்தரவாதத்திலிருந்து அந்த ரோம ஆளுநரை அது விலக்கிவிட்டதா?
2 சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடந்த மற்றொரு சம்பவத்தைக் கவனியுங்கள். ஒருவர் குற்றஞ்சாட்டப்படுகிறார். அதைக் குறித்து ஆளுநர் விசாரிக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒரு பாவமும் அறியாதவர் என்பதை தெரிந்துகொள்கிறார். ஆனால் கூட்டத்தாரோ அவரைக் கொலை செய்யச் சொல்லி கூக்குரலிடுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைக்கு இணங்காதிருக்க அவர் ஓரளவு முயற்சி செய்கிறார். ஆனால் கடைசியில், அந்த ஆளுநர் தனது உத்தரவாதத்தை சுமக்கத் தயங்கி அவர்களுடைய வேண்டுகோளுக்கு அடிபணிந்துவிடுகிறார். தண்ணீரில் தனது கைகளைக் கழுவிவிட்டு, “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன்” என்று பொந்தியு பிலாத்து கூறுகிறார். அதன் பிறகு, அந்த மனிதனை கழுவேற்ற ஜனங்களிடம் ஒப்படைத்துவிடுகிறார். ஆம், இயேசு கிறிஸ்துவின் விஷயத்தில், தீர்மானம் எடுக்கும் உத்தரவாதத்தை தான் சுமப்பதற்குப் பதிலாக, அதை மற்றவர்கள்மீது அவர் போட்டுவிடுகிறார். அவர் தண்ணீரில் எவ்வளவுதான் கைகழுவினாலும், அநியாயமாக இயேசுவுக்குத் தண்டனை விதித்ததற்குக் கணக்குக் கொடுக்காமல் தப்பிவிட முடியாது.—மத்தேயு 27:11-26; லூக்கா 23:13-25.
3. நமக்காக மற்றவர்கள் தீர்மானமெடுக்க நாம் ஏன் அனுமதிக்கக் கூடாது?
3 உங்களைப் பற்றியென்ன? தீர்மானமெடுக்க வேண்டிய சமயத்தில், அந்த மூன்று எபிரெயர்களைப் போல் நீங்கள் இருக்கிறீர்களா, அல்லது உங்களுக்காக மற்றவர்கள் தீர்மானமெடுக்க அனுமதித்துவிடுகிறீர்களா? தீர்மானம் எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. சரியான தீர்மானம் எடுப்பதற்கு முதிர்ச்சி தேவை. உதாரணமாக, வயதுவராத பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் நல்ல தீர்மானமெடுக்க வேண்டியிருக்கிறது. சிக்கலான சூழ்நிலையில், பல்வேறு விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருக்கையில், தீர்மானம் எடுப்பது மிகவும் கஷ்டம்தான். என்றாலும், அப்படி தீர்மானம் எடுப்பது அவ்வளவு பெரிய சுமை அல்ல; ஆனால் ‘ஆவிக்குரிய தகுதிகளை’ உடையவர்கள் நமக்காக சுமக்கும் ‘பாரங்களில்’ ஒன்றாக அது ஆகிவிடக் கூடாது. (கலாத்தியர் 6:1, 2; NW) மாறாக, நாம் ஒவ்வொருவரும் சுமக்கிற சுமையாகவே இருக்க வேண்டும்; அதற்காக ‘நாம் ஒவ்வொருவரும்தான் தேவனுக்குக் கணக்கொப்புவிக்க’ வேண்டும். (ரோமர் 14:12) “ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக்கொள்ளட்டும்” என பைபிள் குறிப்பிடுகிறது. (கலாத்தியர் 6:5, பொது மொழிபெயர்ப்பு) அப்படியானால், வாழ்க்கையில் நாம் எப்படி ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியும்? முதலாவதாக, நம் வரம்புகளை உணர்ந்து, அவற்றை ஈடுகட்ட என்ன தேவை என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
முக்கியத் தேவை
4. தீர்மானம் எடுக்கும் விஷயத்தில், முதல் தம்பதியருடைய கீழ்ப்படியாமையிலிருந்து என்ன இன்றியமையாத பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?
4 மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், முதல் தம்பதியர் எடுத்த தீர்மானம் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிப்பதற்கு அவர்கள் தீர்மானித்தார்கள். (ஆதியாகமம் 2:16, 17) அவர்கள் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு எது காரணமாக இருந்தது? ‘ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டதாக’ பைபிள் கூறுகிறது. அதனால், “அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.” (ஆதியாகமம் 3:6) ஆக, ஏவாள் அந்தத் தீர்மானம் எடுத்ததற்குக் காரணம் சுயநல ஆசையே. அவளுடைய செயல், ஆதாமும் அவளுடன் சேர்ந்துகொள்ள அடிகோலியது. அதன் விளைவாக பாவமும் மரணமும் “எல்லாருக்கும்” வந்தது. (ரோமர் 5:12) ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை மனித வரம்புகளைப் பற்றி நமக்கு ஓர் இன்றியமையாத பாடத்தைக் கற்பிக்கிறது: கடவுளுடைய வழிநடத்துதலை மனிதன் பின்பற்றாவிட்டால், தவறான தீர்மானங்களைத்தான் எடுக்க நேரிடும்.
5. யெகோவா நமக்குத் தந்திருக்கும் வழிநடத்துதல் என்ன, அதிலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
5 வழிநடத்துதல் தராமல் யெகோவா தேவன் நம்மை விட்டுவிடாதிருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படலாம்! “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” என பைபிள் நமக்குச் சொல்கிறது. (ஏசாயா 30:21) பரிசுத்த ஆவியால் எழுதப்பட்ட பைபிளின் மூலம் யெகோவா நம்மிடம் பேசுகிறார். நாம் பைபிளைப் படித்து அதைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டும். சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு, ‘முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்ற திட உணவை’ நாம் உட்கொள்ள வேண்டும். ‘நன்மை தீமையைப் பகுத்தறியும் ஆற்றல்களைப் பயன்படுத்த நாம் பயிற்சி பெற வேண்டும்.’ (எபிரெயர் 5:14, பொ.மொ.) கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வதைக் கடைப்பிடிப்பதன் மூலம் நமது பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவிக்கலாம்.
6. நமது மனசாட்சி தகுந்த முறையில் செயல்படுவதற்கு எது அவசியம்?
6 தீர்மானம் எடுக்க நமக்கு உதவும் ஓர் இன்றியமையாத திறன்தான் மனசாட்சி. நியாயந்தீர்க்கும் திறமை மனசாட்சிக்கு இருப்பதால், நம்மில் ‘குற்றமுண்டு, குற்றமில்லை என்று அது தீர்க்கலாம்.’ (ரோமர் 2:14, 15) என்றாலும், நமது மனசாட்சி தகுந்த முறையில் செயல்படுவதற்கு, கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவை அதற்குப் புகட்ட வேண்டும். அதோடு, அந்த வார்த்தையை கடைப்பிடிப்பதன் மூலம் நம்முடைய மனசாட்சியை உணர்வுள்ளதாக வைத்துக்கொள்ள வேண்டும். திருத்தமான அறிவு புகட்டப்படாத மனசாட்சியை உள்ளூர் பாரம்பரியங்களும் பழக்கவழக்கங்களும் எளிதில் பாதித்துவிடும். நம்முடைய சூழ்நிலைகளும் பிறருடைய கருத்துகளும்கூட நம்மைத் தவறாக வழிநடத்திவிடும். மனசாட்சி உறுத்தும்போதெல்லாம் அதை அசட்டை செய்து கடவுளுடைய தராதரங்களை மீறுகையில் அதற்கு என்ன ஏற்படுகிறது? காலப்போக்கில், ‘மனசாட்சி சூடுண்டதாக’ மாறிவிடலாம், அதாவது தழும்பு ஏற்பட்டதைப் போல் மரத்துப்போய்விடலாம். (1 தீமோத்தேயு 4:1) மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி நம்பகமான வழிகாட்டியாக இருக்கிறது.
7. ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு எது முக்கியமாய் தேவைப்படுகிறது?
7 அப்படியானால், பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவும் அதைக் கடைப்பிடிக்கும் திறமையும் ஞானமான தீர்மானங்கள் எடுக்கும் உத்தரவாதத்தை சுமப்பதற்கு முக்கியமாய் தேவைப்படுகிறது. அவசரப்பட்டு முடிவெடுப்பதற்குப் பதிலாக, பைபிள் நியமங்களைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அதோடு, அவற்றைக் கடைப்பிடிப்பதற்குச் சிந்திக்கும் திறமையைப் பயன்படுத்த வேண்டும். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவும் அந்த அறிவால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியும் நமக்கு இருந்தால், உடனடியாகத் தீர்மானம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில்கூட—சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைப் போல—நாம் சிறந்த முடிவெடுப்போம். முதிர்ச்சியை நோக்கி தொடர்ந்து வளருவது தீர்மானம் எடுக்கும் நமது திறமையை மெருகூட்டும்; இதைப் புரிந்துகொள்வதற்கு வாழ்க்கையின் இரண்டு அம்சங்களுக்கு நாம் இப்பொழுது கவனம் செலுத்தலாம்.
யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பது?
8, 9. (அ) கெட்ட சகவாசங்களைத் தவிர்ப்பதன் அவசியத்தை என்னென்ன நியமங்கள் காட்டுகின்றன? (ஆ) கெட்ட சகவாசம் என்பது ஒழுக்கங்கெட்ட ஆட்களுடன் பழகுவதை மட்டுமே குறிக்கிறதா? விளக்கவும்.
8 “மோசம் போகாதீர்கள், கெட்ட சகவாசங்கள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 15:33, NW) ‘நீங்கள் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல’ என்று இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம் கூறினார். (யோவான் 15:19, NW) இந்த நியமங்களைக் கற்றிருப்பதால், வேசித்தனக்காரர், விபச்சாரக்காரர், திருடர், குடிவெறியர் போன்றவர்களுடன் சகவாசம் வைக்காதிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எளிதில் புரிந்துகொள்கிறோம். (1 கொரிந்தியர் 6:9, 10) என்றாலும், பைபிள் சத்தியத்தைப் பற்றிய அறிவில் வளரும்போது, திரைப்படங்களிலோ தொலைக்காட்சியிலோ கம்ப்யூட்டர் ஸ்கிரீன்களிலோ புத்தகங்களிலோ இப்படிப்பட்ட ஆட்களுடன் நேரம் செலவழிப்பதுகூட ஆபத்தானது என்று நாம் அறிந்துகொள்கிறோம். இன்டர்நெட் சாட் ரூம்களில் ‘தங்கள் சுயரூபத்தை மறைப்பவர்களுடன்’ சகவாசம் கொள்வதும் ஆபத்தானதே.—சங்கீதம் 26:4, NW.
9 சிலர் உண்மை கடவுள்மீது விசுவாசம் வைக்காவிட்டாலும் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கலாம், அப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகலாமா? “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” பைபிள் நமக்குச் சொல்கிறது. (1 யோவான் 5:19) கெட்ட சகவாசம் என்பது நெறிமுறையற்ற அல்லது ஒழுக்கங்கெட்ட ஆட்களை மட்டுமே குறிப்பதில்லை என்பதை நாம் பகுத்துணருகிறோம். ஆகவே, யெகோவாவை நேசிப்பவர்களுடன் மட்டுமே நாம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது ஞானமானது.
10. இந்த உலகத்தாருடன் தொடர்புகொள்வது சம்பந்தமாக யோசித்து சமநிலையான தீர்மானங்கள் எடுக்க எது நமக்கு உதவுகிறது?
10 உலகத்தாருடன் தொடர்புகொள்வதை அடியோடு தவிர்ப்பது சாத்தியமும் இல்லை, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. (யோவான் 17:15) கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடும்போதும் பள்ளியில் இருக்கும்போது வேலை செய்யும்போதும் உலகத்தாருடன் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது. அவிசுவாசியை கல்யாணம் செய்திருக்கிற கிறிஸ்தவர் மற்றவர்களைவிட இந்த உலகத்துடன் அதிகம் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம். என்றாலும், நமது பகுத்தறியும் திறமைகளைப் பயிற்றுவித்திருந்தால், இந்த உலகத்தாருடன் அளவோடு தொடர்புகொள்வது வேறு, நட்பு வைத்துக்கொள்வது வேறு என்பதை புரிந்துகொள்வோம். (யாக்கோபு 4:4) இவ்வாறாக, பள்ளியில் ஸ்போர்ட்ஸ், டான்ஸ் போன்ற இதர காரியங்களில் பங்குகொள்வதா, அல்லது சக வேலையாட்களுடன் பார்ட்டிகளில் கலந்துகொள்வதா என்று நன்கு யோசித்து சமநிலையான தீர்மானங்கள் எடுக்க முடியும்.
வேலையைத் தேர்ந்தெடுத்தல்
11. வேலை சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்கையில் முதலாவதாக எதை சிந்திக்க வேண்டும்?
11 பைபிள் நியமங்களை நன்கு கடைப்பிடிப்பது, ‘நம்முடைய வீட்டாருக்கு உணவளிக்க’ வேண்டிய கடமையை நிறைவேற்றும் விஷயத்தில் தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. (1 தீமோத்தேயு 5:8, NW) நாம் தேர்ந்தெடுக்கப் போகிற வேலை எப்படிப்பட்டது என்று முதலில் சிந்திக்க வேண்டும். நேரடியாக பைபிள் கண்டனம் செய்யும் வேலையை தேர்ந்தெடுப்பது நிச்சயமாகவே தவறு. ஆகவே, விக்கிரகாராதனை, திருட்டு, இரத்தத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற வேதப்பூர்வமற்ற செயல்களை உட்படுத்துகிற வேலைகளை உண்மை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் பொய் சொல்லவோ ஏமாற்றவோ மாட்டோம், முதலாளி நம்மிடம் அப்படிச் செய்யச் சொன்னாலும்கூட செய்ய மாட்டோம்.—அப்போஸ்தலர் 15:29; வெளிப்படுத்துதல் 21:8.
12, 13. வேலை சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்கையில், எப்படிப்பட்ட வேலை என்பதோடுகூட வேறென்ன அம்சங்களை சிந்தித்துப் பார்ப்பது முக்கியம்?
12 கடவுளுடைய கட்டளைகள் எதையும் நேரடியாக மீறாத வேலையைப் பற்றியென்ன? சத்தியத்தைப் பற்றிய அறிவிலும் பகுத்தறிகிற திறனிலும் வளருகையில், சிந்திக்க வேண்டிய வேறுசில அம்சங்களை நாம் பகுத்துணருகிறோம். உதாரணமாக, சூதாட்ட மையத்தில் வரும் போன்கால்களுக்குப் பதிலளிப்பது, அல்லது அதுபோல் பைபிளுக்கு முரணான வேறு வேலை பார்ப்பது சரியா? சம்பளம் எங்கிருந்து கிடைக்கிறது? வேலை செய்கிற இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். ஒருவேளை கிறிஸ்தவமண்டல சர்ச்சுக்கு பெயின்ட் அடிக்கும் காண்ட்ராக்ட் எடுப்பதன் மூலம் பொய் மதத்திற்கு ஆதரவு அளிக்க ஒத்துக்கொள்வோமா?—2 கொரிந்தியர் 6:14-16.
13 அப்படி சர்ச்சுக்கு அல்லது வேறு ஏதேனும் கோவிலுக்கு பெயின்ட் அடித்துக் கொடுக்க முதலாளி காண்ட்ராக்ட் எடுத்திருந்தால் என்ன செய்வது? இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், நமக்கு எந்தளவு அதிகாரம் இருக்கிறது, அந்த வேலையில் எந்தளவு நாம் பங்குகொள்வோம் போன்ற அம்சங்களைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். ஊரிலுள்ள எல்லாருக்கும் தபால் பட்டுவாடா செய்வது பைபிளுக்கு முரணில்லாத வேலையாகத் தோன்றலாம்; ஆனால், தவறான செயல்கள் நடக்கும் இடங்களுக்கும்கூட தபால் பட்டுவாடா செய்ய வேண்டியிருக்கலாம், ஆகவே என்ன செய்வது? மத்தேயு 5:45-ல் உள்ள நியமத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வது பொருத்தமானது, அல்லவா? நாம் அந்த வேலையை இராப்பகலாக செய்வதும் நமது மனசாட்சியை பாதிக்கக்கூடும் என்பதை அசட்டை செய்துவிடக்கூடாது. (எபிரெயர் 13:18) சொல்லப்போனால், வேலை சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்கும் உத்தரவாதத்தை சுமப்பதற்கு நம் பகுத்தறியும் திறனைத் தீட்டுவதும் கடவுள் தந்த மனசாட்சி என்ற திறனைப் பயிற்றுவிப்பதும் முக்கியம்.
“உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்”
14. தீர்மானங்கள் எடுக்கையில், என்னென்ன படிகளை நாம் எடுக்க வேண்டும்?
14 கல்வி, மருத்துவ சிகிச்சை போன்ற வேறுசில விஷயங்கள் சம்பந்தமாக தீர்மானங்கள் எடுப்பது பற்றியென்ன? நாம் எந்தவொரு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தாலும், பொருத்தமான பைபிள் நியமங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், பின்பு நமது சிந்தனா சக்தியைப் பயன்படுத்தி அவற்றைப் பின்பற்ற வேண்டும். “உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என பூர்வ இஸ்ரவேலின் ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் கூறினார்.—நீதிமொழிகள் 3:5, 6.
15. தீர்மானங்கள் எடுப்பது சம்பந்தமாக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
15 நாம் எடுக்கும் தீர்மானங்கள் அடிக்கடி மற்றவர்களைப் பாதிக்கின்றன, ஆகவே இதற்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, உணவு சம்பந்தமாக நியாயப்பிரமாண சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளின்கீழ் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இருக்கவில்லை. நியாயப்பிரமாணத்தில் அசுத்தமென சொல்லப்பட்டிருந்த, அதேசமயத்தில் வேறெந்த ஆட்சேபணைகளும் இல்லாத சில உணவுகளை சாப்பிட அவர்களுக்கு அனுமதியிருந்தது. என்றாலும், ஏதாவதொரு விதத்தில் விக்கிரக வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட மிருகத்தின் இறைச்சியைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.” (1 கொரிந்தியர் 8:11-13) மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும்படி பூர்வ கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாம் எடுக்கும் தீர்மானங்களும் பிறர் ‘இடறலடைய’ காரணமாக இருந்துவிடக் கூடாது.—1 கொரிந்தியர் 10:29, 33.
தேவ ஞானத்தைத் தேடுங்கள்
16. தீர்மானங்கள் எடுப்பதில் ஜெபம் நமக்கு எப்படி உதவுகிறது?
16 தீர்மானங்கள் எடுப்பதற்கு சிறந்த உதவி ஜெபமாகும். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என சீஷனாகிய யாக்கோபு கூறுகிறார். (யாக்கோபு 1:5) நாம் நம்பிக்கையுடன் யெகோவாவிடம் ஜெபத்தில் அணுகி, சரியான தீர்மானங்கள் எடுப்பதற்குத் தேவையான ஞானத்தைத் தரும்படி அவரிடம் கேட்கலாம். நமது கவலைகளைப் பற்றி அவரிடம் சொல்லி அவருடைய உதவியை நாடும்போது, நாம் சிந்திக்கிற பைபிள் வசனங்களை நன்கு புரிந்துகொள்ளவும் நாம் கவனிக்கத் தவறியவற்றை மனதிற்குக் கொண்டுவரவும் பரிசுத்த ஆவி நமக்கு உதவும்.
17. தீர்மானம் எடுப்பதில் மற்றவர்கள் நமக்கு எப்படி உதவி செய்யலாம்?
17 தீர்மானங்கள் எடுப்பதில் மற்றவர்கள் நமக்கு உதவி செய்ய முடியுமா? ஆம், உதவி செய்ய முடியும், சபையில் முதிர்ச்சி வாய்ந்த ஆட்களை யெகோவா நமக்குத் தந்திருக்கிறார். (எபேசியர் 4:12, 13) நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் முக்கியமான ஒன்றாக இருந்தால், அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஆன்மீக விஷயங்களில் கூர்ந்த அறிவுடையவர்களும் வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களும் பொருத்தமான பைபிள் நியமங்களை நமது கவனத்திற்குக் கொண்டுவரலாம்; அவை ‘அதிமுக்கியமான காரியங்களை உறுதிப்படுத்திக்கொள்ள’ நமக்கு உதவி செய்வதாக இருக்கும். (பிலிப்பியர் 1:9, 10, NW) ஆனால் ஓர் எச்சரிக்கை: நமக்காக மற்றவர்கள் தீர்மானமெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது. தீர்மானமெடுக்கும் பொறுப்பு நம்முடையது.
பலன்—எப்போதும் நல்லதாக இருக்குமா?
18. ஒரு நல்ல தீர்மானத்தின் பலனைப் பற்றி என்ன சொல்லலாம்?
18 பைபிள் நியமங்களின் அடிப்படையில் கவனமாக எடுக்கப்படும் தீர்மானங்கள் எப்போதுமே நல்ல பலனைத் தருமா? ஆம், எப்போதுமே நல்ல பலனைத் தரும். ஆனால், சிலசமயங்களில், உடனே பலன் கிடைக்காமல் போகலாம், கஷ்டத்தையும் நாம் அனுபவிக்கலாம். சாத்ராக்கும், மேஷாக்கும், ஆபேத்நேகோவும், அந்தப் பிரமாண்டமான சிலையை வழிபடக் கூடாது என தீர்மானித்தபோது, சாவை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். (தானியேல் 3:16-19) இது போலவே, மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே அவசியமென யூத உயர்நீதி மன்றத்தினரிடம் அப்போஸ்தலர்கள் சொன்னபோது, அவர்கள் முதலில் அடிக்கப்பட்டார்கள், பிறகே விடுதலை செய்யப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:27-29, 40) ‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்’கூட நம் தீர்மானத்தின் விளைவுகளைக் கெடுத்துப்போடலாம். (பிரசங்கி 9:11, NW) சரியான தீர்மானம் எடுத்தும் ஏதாவதொரு விதத்தில் நாம் கஷ்டப்பட்டால், சகித்திருக்க யெகோவா நமக்கு உதவி செய்வார் என்றும், எதிர்காலத்தில் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—2 கொரிந்தியர் 4:7.
19. தீர்மானங்கள் எடுப்பதில் நமது உத்தரவாதத்தை எப்படித் தைரியமாகச் சுமக்கலாம்?
19 அப்படியானால், தீர்மானங்கள் எடுக்கும்போது பைபிள் நியமங்களை நாம் ஆராய வேண்டும், அதோடு அவற்றை பின்பற்றுவதற்கு நம் சிந்தனா திறமையையும் பயன்படுத்த வேண்டும். யெகோவா தமது பரிசுத்த ஆவியின் மூலமும் சபையிலுள்ள முதிர்ச்சியுள்ளவர்களின் மூலமும் உதவி அளித்திருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! யெகோவா அளித்துவருகிற இத்தகைய பல்வேறு ஏற்பாடுகளின் உதவியோடு, ஞானமான தீர்மானங்கள் எடுப்பதில் நமது உத்தரவாதத்தை தைரியமாகச் சுமப்போமாக.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கு முக்கியமான தேவை என்ன?
• முதிர்ச்சியை நோக்கி வளருவது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதை எப்படிப் பாதிக்கலாம்?
• வேலை சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்கையில் நாம் சிந்திக்க வேண்டிய சில அம்சங்கள் யாவை?
• தீர்மானங்கள் எடுக்க என்னென்ன ஏற்பாடுகள் உதவும்?
[பக்கம் 22-ன் படம்]
ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை ஒரு முக்கியமான பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது
[பக்கம் 24-ன் படம்]
முக்கியமான தீர்மானம் எடுப்பதற்கு முன்பு பைபிள் நியமங்களை ஆராயுங்கள்