படிப்புக் கட்டுரை 50
“இறந்தவர்கள் எப்படி உயிரோடு எழுப்பப்படுவார்கள்?”
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?”—1 கொ. 15:55.
பாட்டு 130 உயிர் ஓர் அற்புதமே
இந்தக் கட்டுரையில்...a
1-2. பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி எல்லா கிறிஸ்தவர்களும் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேருக்கு இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை இருக்கிறது. அதேசமயத்தில், பரலோகத்தில் வாழ்வதற்காக சிலரை யெகோவா அபிஷேகம் செய்திருக்கிறார். இவர்கள், பரலோகத்துக்குப் போன பிறகு தங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால், பரலோக உயிர்த்தெழுதலால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகின்றன.
2 பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி எழுதும்படி முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்துவின் சீஷர்களில் சிலரை யெகோவா தூண்டினார். உதாரணத்துக்கு, “நாம் இப்போது கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். ஆனால், இனி நாம் எந்த விதத்தில் இருப்போம் என்பது இன்னும் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும், அவர் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பது நமக்குத் தெரியும்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 3:2) அதனால், பரலோகத்துக்குப் போனதற்குப் பிறகு அங்கே வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது. ஆனால், யெகோவாவை அவர்கள் நேரடியாகப் பார்ப்பார்கள். பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிய எல்லா விவரங்களையும் பைபிள் சொல்வது இல்லை. ஆனால், சில விவரங்களை அப்போஸ்தலன் பவுல் பதிவு செய்திருக்கிறார். உதாரணத்துக்கு, “எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும்” கிறிஸ்து ஒழிக்கும்போது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரோடு இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. அப்படி ஒழிக்கப்படுவதில் ‘கடைசி எதிரி மரணமும்’ அடங்கும். எல்லாம் முடிந்த பிறகு, இயேசுவும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்பவர்களும் எல்லாவற்றையும் யெகோவாவிடம் ஒப்படைத்துவிட்டு அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்கள். (1 கொ. 15:24-28) அது எப்பேர்ப்பட்ட ஒரு சமயமாக இருக்கும்!b
3. ஒன்று கொரிந்தியர் 15:30-32-ன்படி, உயிர்த்தெழுதல் நம்பிக்கை பவுலை எப்படித் தாங்கிப்பிடித்தது?
3 நிறைய சோதனைகளைச் சகிப்பதற்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை பவுலுக்கு உதவியது. (1 கொரிந்தியர் 15:30-32-ஐ வாசியுங்கள்.) “தினமும் நான் சாவை எதிர்ப்படுகிறேன்” என்று கொரிந்தியர்களிடம் அவர் சொன்னார். அதோடு, நான் ‘எபேசுவில் கொடிய மிருகங்களோடு போராடினேன்’ என்றும் அவர் எழுதினார். ஒருவேளை, எபேசுவிலிருந்த அரங்கத்தில் நிஜமாகவே மிருகங்களுடன் போராடியதைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம். (2 கொ. 1:8; 4:10; 11:23) அல்லது, தன்னிடம் “மிருக” குணத்தைக் காட்டிய யூதர்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் அவர் சொல்லியிருக்கலாம். (அப். 19:26-34; 1 கொ. 16:9) எதுவாக இருந்தாலும் சரி, படுபயங்கரமான ஆபத்துகளை அவர் சந்தித்தார். ஆனாலும், தனக்கு சந்தோஷமான ஓர் எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தார்.—2 கொ. 4:16-18.
4. உயிர்த்தெழுதல் நம்பிக்கை இன்று நம்மை எப்படிப் பலப்படுத்துகிறது? (அட்டைப் படம்)
4 நாமும் ஆபத்தான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். நம்முடைய சகோதர சகோதரிகளில் சிலர், அநியாய அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறுசிலர், போர் நடக்கிற பகுதிகளில் வாழ்கிறார்கள். அதனால், அவர்களுக்குப் பாதுகாப்பு என்பதே கிடையாது. இன்னும் சில சகோதர சகோதரிகள், பிரசங்க வேலைக்குக் கட்டுப்பாடுகளோ தடையோ போடப்பட்டிருக்கிற நாடுகளில் வாழ்கிறார்கள். அதனால், அவர்களால் சுதந்திரமாகப் பிரசங்கிக்க முடிவதில்லை. தங்களுடைய உயிரைப் பணயம் வைத்துதான் பிரசங்கிக்கிறார்கள். இருந்தாலும், இந்த எல்லா சகோதர சகோதரிகளும் தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்துவருகிறார்கள். இப்படி, நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். யெகோவாவை வழிபடுவதற்காகத் தங்களுடைய உயிரை இழக்க வேண்டியிருந்தாலும், இதைவிட ஓர் அருமையான வாழ்க்கையை அவர் தருவார் என்ற நம்பிக்கை இருப்பதால், தொடர்ந்து தைரியமாக சேவை செய்துவருகிறார்கள்.
5. என்ன எண்ணம் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பலவீனப்படுத்திவிடலாம்?
5 “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், ‘சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்’ என்று இருக்கலாமே!” என்ற எண்ணம் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலருக்கு இருந்தது. இதைப் பற்றி பவுல் எச்சரித்தார். சொல்லப்போனால், பவுலுடைய காலத்துக்கு முன்பே, கடவுளுடைய ஊழியர்கள் சிலருக்கு இந்த எண்ணம் இருந்தது. இஸ்ரவேலர்களுடைய மனப்பான்மையைப் பற்றி ஏசாயா 22:13-ல் சொல்லப்பட்டிருந்ததை பவுல் ஒருவேளை மேற்கோள் காட்டியிருக்கலாம். யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் வாழாமல் தங்களுக்குப் பிடித்த விதத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். ‘நாம எவ்வளவு நாளைக்கு இருப்போம்னு தெரியாது, இருக்கிற வரைக்கும் வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிப்போம்’ என்று நினைத்தார்கள். அதே எண்ணம்தான் இன்று இந்த உலகத்தில் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.—2 நா. 36:15-20.
6. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
6 கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள், உயிர்த்தெழுதலை நம்பாதவர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? ‘நாளைக்கு நடக்குறத பத்தி கவலைபட கூடாது, இன்னைக்கு ஜாலியா இருக்கணும்’ என்ற எண்ணம் இருப்பவர்களோடு நாம் நெருக்கமான நட்பு வைத்துக்கொண்டால் ஆபத்துதான்! ஏனென்றால், நம்முடைய நல்ல பழக்கவழக்கங்களை அவர்கள் கெடுத்துவிடுவார்கள். சொல்லப்போனால், யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய வைத்துவிடுவார்கள். அதனால்தான், “மனத்தெளிவு அடையுங்கள்; நீதியின்படி நடங்கள்; பாவம் செய்துகொண்டே இருக்காதீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—1 கொ. 15:33, 34.
எப்படிப்பட்ட உடல் இருக்கும்?
7. ஒன்று கொரிந்தியர் 15:35-38 சொல்வதுபோல், உயிர்த்தெழுதலைப் பற்றி சிலர் என்ன கேள்வி எழுப்பியிருக்கலாம்?
7 ஒன்று கொரிந்தியர் 15:35-38-ஐ வாசியுங்கள். உயிர்த்தெழுதலைப் பற்றி மற்றவர்களுடைய மனதில் சந்தேக விதைகளை விதைக்க ஆசைப்பட்டவர்கள், “இறந்தவர்கள் எப்படி உயிரோடு எழுப்பப்படுவார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருக்கலாம். இறந்ததற்குப் பிறகு நமக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி வித்தியாசமான கருத்துகள் இன்றும் மக்கள் மத்தியில் இருப்பதால், பவுல் சொன்ன விஷயத்தைப் பற்றி நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்.
8. பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி புரிந்துகொள்வதற்கு எந்த உதாரணம் உதவுகிறது?
8 ஒருவர் சாகும்போது அவருடைய உடல் முழுவதுமாக சிதைந்து ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது. அப்படியிருக்கும்போது, அவரை எப்படி மறுபடியும் உயிரோடு கொண்டுவர முடியும்? இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: இந்தப் பிரபஞ்சத்தையே படைப்பதற்கு யெகோவாவுக்கு எதுவுமே தேவைப்படவில்லை! அப்படியென்றால், ஒருவர் இறந்ததற்குப் பிறகு அவருடைய உடல் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டாலும் கடவுளால் திரும்பவும் அவருக்கு உடல் கொடுக்க முடியாதா? நிச்சயம் முடியும்! (ஆதி. 1:1; 2:7) அதற்காக, அதே உடலை கடவுள் கொடுக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. இதைப் புரிந்துகொள்ள, அப்போஸ்தலன் பவுல் சொன்ன விதையைப் பற்றிய ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு “விதையை” விதைக்கும்போது அது முளைத்து ‘பயிராக’ ஆகிறது. ஆனால், விதைக்கும் பயிருக்கும் ஒரே மாதிரியான உருவம் இருப்பதில்லை. இறந்தவர்களுக்கு “கடவுள் தனக்குப் பிரியமானபடி . . . ஓர் உடலைக் கொடுக்கிறார்” என்பதைப் புரிந்துகொள்வதற்கு பவுல் இந்த உதாரணத்தைச் சொன்னார்.
9. என்ன விதமான உடல்கள் இருப்பதாக 1 கொரிந்தியர் 15:39-41 சொல்கிறது?
9 ஒன்று கொரிந்தியர் 15:39-41-ஐ வாசியுங்கள். எல்லா படைப்புகளுக்கும் கடவுள் ஒரே உருவத்தைக் கொடுக்கவில்லை என்று பவுல் சொன்னதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, ஆடு மாடுகள், பறவைகள், மீன்கள் என எல்லாவற்றுக்கும் வெவ்வேறு உருவங்கள் இருக்கின்றன. அதோடு, சூரியனுக்கும் நிலாவுக்கும்கூட வெவ்வேறு உருவம் இருப்பதைப் பற்றியும் பவுல் சொன்னார். “மகிமையில் நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வேறுபடுகிறது” என்றும் அவர் சொன்னார். இந்த வேறுபாட்டை நம் கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும், பெரிய நட்சத்திரங்கள்... சிறிய நட்சத்திரங்கள்... சிவப்பு நிற நட்சத்திரங்கள்... வெள்ளை நிற நட்சத்திரங்கள்... சூரியனைப் போன்ற மஞ்சள் நிற நட்சத்திரங்கள்... என நிறைய நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். “பரலோகத்துக்குரிய உடல்களும் இருக்கின்றன, பூமிக்குரிய உடல்களும் இருக்கின்றன” என்றும் பவுல் சொன்னார். எப்படி? பூமியிலிருக்கிற நமக்கு சதையால் ஆன உடல் இருக்கிறது. ஆனால், பரலோகத்தில் இருப்பவர்களுக்கு ஆவி உடல் இருக்கிறது.
10. பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுபவர்களுக்கு என்ன விதமான உடல் இருக்கும்?
10 அடுத்ததாக, “இறந்தவர்களுடைய உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்; அழிவுள்ளதாக விதைக்கப்படுவது அழிவில்லாததாக உயிர்த்தெழுப்பப்படும்” என்று பவுல் சொன்னார். ஒருவர் சாகும்போது அவருடைய உடல் சிதைந்து அழிந்துபோகிறது. (ஆதி. 3:19) அப்படியிருக்கும்போது, ஒருவர் எப்படி ‘அழிவில்லாததாக உயிர்த்தெழுப்பப்படுவார்?’ எலியா, எலிசா, இயேசு ஆகியவர்கள் உயிர்த்தெழுப்பிய ஆட்கள், பூமியில் வாழ்ந்தார்கள். ஆனால், அதுபோன்ற உயிர்த்தெழுதலைப் பற்றி பவுல் சொல்லவில்லை. ‘பரலோகத்துக்குரிய உடலில்’ உயிர்த்தெழுப்பப்படுபவர்களைப் பற்றிதான் அவர் சொன்னார்.—1 கொ. 15:42-44.
11-12. இயேசு எந்த உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் எப்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
11 இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்தபோது அவருக்கு சதையால் ஆன உடல் இருந்தது. ஆனால், உயிர்த்தெழுப்பப்பட்டதற்குப் பிறகு “பரலோகத்துக்குரிய உடலை” பெற்று பரலோகத்துக்குத் திரும்பிப் போனார். அதேபோல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் பரலோகத்துக்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “நாம் மண்ணால் உண்டானவனுடைய சாயலில் இருப்பதுபோல், பரலோகத்துக்குரியவருடைய சாயலிலும் இருப்போம்.”—1 கொ. 15:45-49.
12 உயிர்த்தெழுதலைப் பற்றி பவுல் சொன்னபோது கடைசியாக இப்படிச் சொன்னார்: “சதையும் இரத்தமும் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போக முடியாது.” (1 கொ. 15:50, அடிக்குறிப்பு) இதிலிருந்து, மனித உடலில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. அப்போஸ்தலர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட மற்ற கிறிஸ்தவர்களும், சதையாலும் இரத்தத்தாலும் ஆன அழிந்துபோகிற உடலில் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். அவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதைப் பற்றியும் பவுல் சொன்னார். இறந்தவுடனே உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்றும், எதிர்காலத்தில்தான் அவர்கள் உயிர்த்தெழுப்பப்பட இருந்தார்கள் என்றும் பவுல் சொன்னார். 1 கொரிந்தியர் புத்தகத்தை பவுல் எழுதிய சமயத்தில், சீஷர்களில் சிலர் ஏற்கெனவே ‘இறந்துபோய்விட்டார்கள்.’ உதாரணத்துக்கு, அப்போஸ்தலன் யாக்கோபை சொல்லலாம். (அப். 12:1, 2) மற்ற அப்போஸ்தலர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட மற்றவர்களும் அப்போது ‘உயிரோடுதான்’ இருந்தார்கள்.—1 கொ. 15:6.
மரணத்துக்கு எதிரான வெற்றி!
13. இயேசுவின் “பிரசன்னத்தின்போது” என்ன நடக்கும்?
13 இயேசுவும் பவுலும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி சொன்னார்கள். அதாவது, கிறிஸ்துவின் பிரசன்னத்தைப் பற்றி சொன்னார்கள். அப்போது, போர்களும் நிலநடுக்கங்களும் கொள்ளைநோய்களும் மற்ற கெட்ட விஷயங்களும் உலகம் முழுவதும் நடக்கும் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. 1914-லிருந்து இது நடந்துவருகிறது. இன்னொரு முக்கியமான விஷயமும் நடக்கும் என்று இயேசு சொன்னார். அதாவது, கடவுளுடைய அரசாங்கம் இப்போது ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்ற நல்ல செய்தி, “உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று சொன்னார். (மத். 24:3, 7-14) “எஜமானுடைய பிரசன்னத்தின்போது” ‘இறந்துபோன’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பவுல் சொன்னார்.—1 தெ. 4:14-16; 1 கொ. 15:23.
14. கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது இறந்துபோகிற அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும்?
14 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் யாராவது இன்று இறந்துபோனால், உடனடியாக பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் 1 கொரிந்தியர் 15:51, 52-ல் இப்படிச் சொன்னார்: “நாம் எல்லாரும் மரணத்தில் தூங்கப்போவதில்லை. ஆனால் கடைசி எக்காளம் முழங்கும்போது, ஒரே நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில், நாம் எல்லாரும் மாற்றம் அடைவோம்.” கிறிஸ்துவின் சகோதரர்களாகிய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், தாங்கள் உயிர்த்தெழுப்பப்பட்டதற்குப் பிறகு “எப்போதும் . . . எஜமானோடு” இருக்கப்போவதால் அளவில்லாத சந்தோஷம் அடைவார்கள்.—1 தெ. 4:17.
15. “கண்ணிமைக்கும் நேரத்தில்” மாற்றம் அடைபவர்கள் என்ன செய்வார்கள்?
15 “கண்ணிமைக்கும் நேரத்தில்” மாற்றம் அடைகிற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்தில் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. இயேசு அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்: “என் தகப்பனிடமிருந்து நான் அதிகாரம் பெற்றதுபோல், முடிவுவரை என் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்குத் தேசங்கள்மீது நான் அதிகாரத்தைக் கொடுப்பேன். அவன் இரும்புக் கோலால் தேசங்களை நொறுக்குவான். அவற்றை மண்பாத்திரங்களைப் போல் சுக்குநூறாக்குவான்.” (வெளி. 2:26, 27) பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள், தங்கள் தளபதியான இயேசுவோடு சேர்ந்து இரும்புக் கோலால் தேசத்தாரை நொறுக்குவார்கள்.—வெளி. 19:11-15.
16. நிறைய பேர் மரணத்தை எப்படி ஜெயிப்பார்கள்?
16 அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மரணத்தை ஜெயிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. (1 கொ. 15:54-57) அவர்கள் எல்லாரும் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, அர்மகெதோன் போரில் இயேசுவோடு சேர்ந்து இந்த உலகத்தில் இருக்கிற எல்லா அநியாய அக்கிரமத்தையும் ஒழித்துக்கட்டுவார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து’ புதிய உலகத்துக்குள் காலடி எடுத்து வைப்பார்கள். (வெளி. 7:14) புதிய உலகத்தில், மரணத்துக்கு எதிரான இன்னொரு வெற்றியை அவர்கள் பார்ப்பார்கள். அதாவது, இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள் உயிரோடு வருவதைப் பார்ப்பார்கள். சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடப்போகிற அந்தச் சமயத்தைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! (அப். 24:15) யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற எல்லாரும் ஆதாமிடமிருந்து வந்த சாவையும் ஜெயிப்பார்கள். இந்தப் பூமியில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்!
17. ஒன்று கொரிந்தியர் 15:58 சொல்வதுபோல் நாம் என்ன செய்ய வேண்டும்?
17 உயிர்த்தெழுதலைப் பற்றி கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய விஷயங்கள் நமக்கு ஆறுதலாக இருக்கின்றன. அதற்காக நாம் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். “எஜமானுடைய வேலையை” அதிகமதிகமாக செய்யும்படி பவுல் சொன்ன அறிவுரைக்குக் கீழ்ப்படிய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) இந்த வேலையை உண்மையோடும் சுறுசுறுப்போடும் செய்தால் நமக்கு சந்தோஷமான எதிர்காலம் கிடைக்கும். அப்போது கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்கள் நம்முடைய கற்பனையை எல்லாம் மிஞ்சிவிடும்! எஜமானுடைய வேலையை செய்வதற்கு நாம் உழைத்த உழைப்பெல்லாம் வீண்போகவில்லை என்பதை அப்போது புரிந்துகொள்வோம்.
பாட்டு 55 ஆஹா, நித்ய வாழ்வே!
a ஒன்று கொரிந்தியர் 15-வது அதிகாரத்தின் இரண்டாவது பாகம், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றி சொல்கிறது. இருந்தாலும், வேறே ஆடுகளும் அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், யெகோவாவுக்கு நல்லபடியாக சேவை செய்வதற்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருப்பதற்கு இந்த நம்பிக்கை எப்படி உதவும் என்றும் பார்ப்போம்.
b 1 கொரிந்தியர் 15:29-ல் பவுல் சொன்ன விஷயங்களைப் பற்றி, இந்த இதழில் இருக்கிற “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதி சொல்கிறது.