கடவுளுடைய மகிமையை நீங்கள் பிரதிபலிப்பீர்களா?
‘யெகோவாவின் மகிமையை நாம் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறோம்.’—2 கொரிந்தியர் 3:18, NW.
1. மோசே எதைப் பார்த்தார், அதன் பிறகு என்ன நடந்தது?
யாருமே இதுவரை பார்த்திராத பிரமிப்பூட்டும் ஒரு காட்சி அது. சீனாய் மலை உச்சியில் மோசே மட்டும் தனியாக இருக்கும்போது அவரது அசாதாரணமான ஒரு வேண்டுகோள் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுவரை எந்த மனிதனும் பார்த்திராத ஒன்று அவருக்குக் காண்பிக்கப்படுகிறது—அதுதான் யெகோவாவின் மகிமை. ஆனால், யெகோவாவை மோசே நேரடியாகப் பார்க்கவில்லை. யெகோவா மிகவும் பிரகாசமானவராக இருப்பதால், எந்த மனிதனும் அவரைப் பார்த்து உயிரோடு இருக்க முடியாது. எனவே, தாம் கடந்து போகுமட்டும் அவர் தமது “கரத்தினால்” மோசேயின் முகத்தை மறைத்தார். இதைச் செய்வதற்கு ஒரு தேவதூதனையே அவர் பயன்படுத்தியிருப்பார். யெகோவா கடந்துபோன பிறகு தம் மகிமையின் பின்னொளியை மோசேக்குக் காண்பித்தார். அதுமட்டுமல்ல, ஒரு தேவதூதன் மூலமாக அவரிடம் பேசினார். அதன் பிறகு நடந்ததை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: ‘மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கியபோது, அவருடனே யெகோவா பேசினதினாலே அவருடைய முகம் பிரகாசமாயிருந்தது.’—யாத்திராகமம் 33:18–34:7, 29.
2. கிறிஸ்தவர்கள் பிரதிபலிக்கிற மகிமையைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார்?
2 நீங்கள் மோசேயுடன் அந்த மலையில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். சர்வவல்லவரின் மகிமையான ஒளிப்பிரகாசத்தைப் பார்ப்பதும் அவரது வார்த்தைகளைக் கேட்பதும் உங்களுக்கு எவ்வளவு மெய்சிலிர்ப்பதாய் இருக்கும்! நியாயப்பிரமாணத்தின் மத்தியஸ்தரான மோசேயுடன் சேர்ந்து சீனாய் மலையில் நடப்பது எப்பேர்ப்பட்ட சிலாக்கியம்! ஆனால், கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கும் விஷயத்தில் உண்மை கிறிஸ்தவர்கள் சில விதங்களில் மோசேயையும் விஞ்சிவிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிந்திக்க வைக்கும் இந்த உண்மை, அப்போஸ்தலன் பவுல் எழுதிய ஒரு கடிதத்தில் காணப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘யெகோவாவின் மகிமையைக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறார்கள்’ என அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 3:7, 8, 18, NW) பூமியில் வாழும் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களும் ஒருவிதத்தில் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
கிறிஸ்தவர்கள் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கிற விதம்
3. மோசே அறிந்திருக்க முடியாத எந்தெந்த விதங்களில் நாம் யெகோவாவை அறிந்திருக்கிறோம்?
3 கடவுளுடைய மகிமையை நம்மால் எப்படிப் பிரதிபலிக்க முடியும்? மோசேயைப் போல் நாம் யெகோவாவை பார்த்ததுமில்லை, அவர் பேசுவதைக் கேட்டதுமில்லை. ஆனாலும், மோசே அறிந்திருக்க முடியாத விதங்களில் நாம் யெகோவாவை அறிந்திருக்கிறோம். மோசே மரித்து சுமார் 1,500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மேசியாவாக இயேசு வந்தார். ஆகவே, பாவம் மற்றும் மரணத்தின் பயங்கரமான ஒடுக்குதலிலிருந்து மனிதரை மீட்பதற்கு உயிரைக் கொடுத்த இயேசுவில் நியாயப்பிரமாணம் எவ்வாறு நிறைவேறியது என்பதை மோசே அறிந்திருக்க வாய்ப்பில்லை. (ரோமர் 5:20, 21; கலாத்தியர் 3:19) அதுமட்டுமல்ல, யெகோவாவுடைய நோக்கத்தின் மகத்துவம், மேசியானிய ராஜ்யத்துடனும் அது கொண்டுவரப்போகும் பூமிக்குரிய பரதீஸுடனும் எப்படி நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை சிறிய அளவிலேயே மோசேயால் புரிந்துகொள்ள முடிந்தது. நாமோ நிஜக் கண்களால் அல்ல, ஆனால் விசுவாசக் கண்களால் பைபிள் போதனைகளின் அடிப்படையில் யெகோவாவின் மகிமையை காண்கிறோம். மேலுமாக, யெகோவா பேசுவதையும் நாம் கேட்கிறோம். ஒரு தேவதூதர் மூலம் அல்ல, ஆனால் பைபிள் மூலம் கேட்கிறோம்; குறிப்பாக, இயேசுவின் போதனைகளையும் ஊழியத்தையும் அழகாக விவரிக்கிற சுவிசேஷங்கள் மூலம் கேட்கிறோம்.
4. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய மகிமையை எப்படி பிரதிபலிக்கிறார்கள்? (ஆ) வேறே ஆடுகளைச் சேர்ந்தோர் கடவுளுடைய மகிமையை எந்தெந்த வழிகளில் பிரதிபலிக்கலாம்?
4 கிறிஸ்தவர்களின் முகம் கடவுளுடைய மகிமையின் ஒளியால் பிரகாசிப்பதில்லை என்றாலும், அவருடைய மகத்துவமான பண்புகளையும் நோக்கங்களையும் பற்றி பிறரிடம் பேசுகையில் அவர்களது முகம் பிரகாசிக்கிறது. நம் நாளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவிக்கையில், யெகோவாவுடைய ஜனங்கள் அவரது ‘மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்’ எனச் சொன்னார். (ஏசாயா 66:19) மேலுமாக, 2 கொரிந்தியர் 4:1, 2-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் . . . வெட்கமான அந்தரங்க காரியங்களை . . . வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.” முக்கியமாக, ‘புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரரான’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையே பவுல் இங்கு குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 3:6) ஆனாலும் அவர்களுடைய ஊழியம் எண்ணற்றோர்மீது தாக்கத்தை ஏற்படுத்தி, பூமியில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையை அவர்களுக்கு அளித்திருக்கிறது. இவ்விரு வகுப்பாரும் ஊழியத்தில் தாங்கள் போதிக்கும் விஷயங்கள் மூலம் மட்டுமல்ல, ஆனால் தங்கள் செயல்கள் மூலமும் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறார்கள். உன்னதமான கடவுளின் மகிமையைப் பிரதிபலிப்பது நம்முடைய பொறுப்பு மட்டுமல்ல, அது நமக்குக் கிடைத்த பாக்கியமும்கூட!
5. நாம் அனுபவிக்கும் ஆன்மீக செழுமை எதற்கு அத்தாட்சி அளிக்கிறது?
5 இயேசு முன்னறிவித்தபடி, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய மகத்தான நற்செய்தி இன்று பூமியெங்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) சகல தேசங்களையும் கோத்திரங்களையும் ஜனங்களையும் பாஷைக்காரரையும் சேர்ந்தவர்கள் நற்செய்தியை ஆர்வமாகக் கேட்டு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். (ரோமர் 12:2; வெளிப்படுத்துதல் 7:9) ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் போலவே, இவர்களாலும் தாங்கள் கண்டதும் கேட்டதுமான காரியங்களைப் பேசாமல் இருக்க முடிவதில்லை. (அப்போஸ்தலர் 4:20) இன்று அறுபது லட்சத்திற்கும் அதிகமானோர், சரித்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்குக் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலித்து வருகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா? யெகோவாவின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் அவரது ஜனங்களான நமக்கு இருக்கிறது என்பதற்கு நாம் அனுபவிக்கும் ஆன்மீக செழுமை உறுதியான அத்தாட்சி அளிக்கிறது. நமக்கு எதிராக வல்லமைமிக்க சேனைகள் இருப்பது, யெகோவாவின் ஆவி நம்மேல் இருப்பதற்கு மேலுமான அத்தாட்சி அளிக்கிறது. அப்படியானால், யெகோவாவின் ஆவி நம்மேல் இருப்பதற்கான காரணம் என்ன? அதை நாம் இப்போது பார்க்கலாம்.
கடவுளுடைய ஜனங்களின் வாயை அடைக்க முடியாது
6. யெகோவாவின் சார்பாக நிலைநிற்கை எடுக்க நமக்கு விசுவாசமும் தைரியமும் ஏன் தேவை?
6 நீதிமன்றத்தில், ஒரு பயங்கர குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொல்லும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். பலம்வாய்ந்த ஒரு பெரிய அமைப்பே அவன் கையில் இருக்கிறது, அவனை நீங்கள் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்துவான் என்பதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்கு எதிராக சாட்சி சொல்ல உங்களுக்குத் தைரியமும் வேண்டும், உயர் அதிகாரிகள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற திடநம்பிக்கையும் வேண்டும். இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில்தான் இப்போது நாம் இருக்கிறோம். யெகோவாவையும் அவரது நோக்கங்களையும் குறித்து சாட்சிகொடுக்கும்போது, உண்மையில் பிசாசாகிய சாத்தானுக்கு எதிராகவே நாம் சாட்சி சொல்கிறோம்; உலகமனைத்தையும் மோசம்போக்குகிற மனுஷ கொலைபாதகன் என்றும் பொய்யன் என்றும் அவனைக் காட்டிக் கொடுக்கிறோம். (யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9) இப்படி, யெகோவாவுக்கு ஆதரவாகவும் பிசாசுக்கு எதிராகவும் நிலைநிற்கை எடுக்க நமக்கு விசுவாசமும் தேவை, தைரியமும் தேவை.
7. சாத்தான் எந்தளவுக்குச் சக்திவாய்ந்தவன், அவன் என்ன செய்ய முயலுகிறான்?
7 ஆம், யெகோவா ஈடிணையற்றவர். சாத்தானைக் காட்டிலும் மிகமிக சக்திவாய்ந்தவர். ஆகவே, அவருக்கு உண்மையோடு சேவை செய்பவர்களைக் காப்பாற்ற அவருக்குச் சக்தி மட்டுமல்ல, விருப்பமும் இருக்கிறது என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். (2 நாளாகமம் 16:9) சாத்தானோ பேய்களுக்கும் அதிபதியாய் இருக்கிறான், கடவுளிடமிருந்து விலகியிருக்கிற மக்களாலான இவ்வுலகிற்கும் அதிபதியாய் இருக்கிறான். (மத்தேயு 12:24, 26; யோவான் 14:30) அவன் பூமியின் சுற்றுவட்டாரத்தில் தள்ளப்பட்டிருப்பதாலும் ‘மிகுந்த கோபத்தோடு’ இருப்பதாலும் யெகோவாவின் ஊழியர்களைக் கடுமையாக எதிர்க்கிறான். அதுமட்டுமல்ல, தன் ஆதிக்கத்திலுள்ள இவ்வுலகைப் பயன்படுத்தி, நற்செய்தியைப் பிரசங்கிக்கிற அனைவரின் வாயையும் அடைக்க முயலுகிறான். (வெளிப்படுத்துதல் 12:7-9, 12, 17) இதை அவன் எப்படிச் செய்கிறான்? குறைந்தபட்சம் மூன்று வழிகளில் செய்கிறான்.
8, 9. தவறான ஆசையை சாத்தான் எவ்வாறு பயன்படுத்துகிறான், கூட்டாளிகளை நாம் ஏன் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
8 நம்மைத் திசை திருப்பிவிடுவதற்கு சாத்தான் முயலுகிற ஒரு வழி, வாழ்க்கையின் அன்றாடக் கவலைகளில் மூழ்கச் செய்வதாகும். இந்தக் கடைசி நாட்களில் வாழ்கிற ஜனங்கள் தேவப் பிரியராய் இராமல் பணப்பிரியராயும், தற்பிரியராயும், சுகபோகப் பிரியராயும் இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-4) பெரும்பாலான ஜனங்கள் வாழ்க்கையின் அன்றாடக் கவலைகளில் மூழ்கிப் போயிருப்பதால் நாம் சொல்லும் நற்செய்திக்கு ‘கவனம் செலுத்துவதில்லை.’ பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு ஆர்வமே இருப்பதில்லை. (மத்தேயு 24:37-39, NW) ஜனங்களின் இத்தகைய மனப்பான்மை நம்மையும் தொற்றிவிடலாம், ஆன்மீக ரீதியில் நம்மை மந்தமாக்கி விடலாம். பொருளாதார மற்றும் சுகபோக காரியங்கள் மீது நாம் ஆசை வைத்தால் கடவுள்மீது நமக்குள்ள அன்பு தணிந்துவிடும்.—மத்தேயு 24:12.
9 அதனால்தான், கிறிஸ்தவர்கள் தங்களுடைய கூட்டாளிகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 13:20) ஆகவே, கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிப்போருடன் நாம் ‘சஞ்சரிப்போமாக.’ அவ்வாறு செய்வது எவ்வளவு இனிமையானது! கூட்டங்களிலும் மற்ற சமயங்களிலும் ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் நாம் கூடிவருகையில், அவர்களுடைய அன்பு, விசுவாசம், சந்தோஷம், ஞானம் ஆகியவற்றிலிருந்து ஊக்கம் பெறுகிறோம். அத்தகைய பயனுள்ள கூட்டுறவு, ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென்ற நம் தீர்மானத்தைப் பலப்படுத்துகிறது.
10. கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிப்போரை எந்தெந்த வழிகளில் சாத்தான் கேலிசெய்திருக்கிறான்?
10 கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்காதபடி எல்லாக் கிறிஸ்தவர்களையும் தடுப்பதற்கு சாத்தான் முயலுகிற இரண்டாவது வழி, கேலிசெய்வதாகும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த சமயத்தில் அவரும்கூட கேலிசெய்யப்பட்டார்; ஜனங்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள், பரியாசம் பண்ணினார்கள், ஏளனம் செய்தார்கள், அவமானப்படுத்தினார்கள், துப்பவும் செய்தார்கள். (மாற்கு 5:40; லூக்கா 16:14; 18:32, பொது மொழிபெயர்ப்பு) ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் கேலி கிண்டலுக்கு ஆளானார்கள். (அப்போஸ்தலர் 2:13; 17:32) இன்றைய யெகோவாவின் ஊழியர்களும் இதுபோன்ற நிந்தனைகளை எதிர்ப்படுகிறார்கள். அவர்கள் ஒருவிதத்தில், ‘பொய் தீர்க்கதரிசிகள்’ என முத்திரை குத்தப்படுவார்கள் என்று அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். “கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? . . . சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்” என அவர் முன்னறிவித்தார். (2 பேதுரு 3:3, 4) கடவுளுடைய ஜனங்கள் பிற்போக்குவாதிகள் என்று கேலிசெய்யப்படுகிறார்கள். பைபிளின் ஒழுக்கத் தராதரங்கள் இந்த நவீன காலத்திற்கு ஒத்துவராதவை என்று கருதப்படுகின்றன. நாம் சொல்லும் செய்தி அநேகருக்குப் பைத்தியமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 1:18, 19) கிறிஸ்தவர்களாக நாம் பள்ளியிலும், வேலையிடத்திலும், சில சமயங்களில் குடும்ப வட்டாரத்திலும் கேலி செய்யப்படலாம். இருந்தாலும், இயேசுவைப் போல கடவுளுடைய வார்த்தையே சத்தியம் என்பதை அறிந்தவர்களாய் பிரசங்க வேலையின் மூலம் கடவுளுடைய மகிமையை நாம் தொடர்ந்து பிரதிபலிக்கிறோம்.—யோவான் 17:17.
11. துன்புறுத்தல் மூலம் கிறிஸ்தவர்களின் வாயை அடைக்க சாத்தான் எப்படி முயன்றிருக்கிறான்?
11 நம்முடைய வாயை அடைப்பதற்கு பிசாசு பயன்படுத்துகிற மூன்றாவது வழி, எதிர்ப்பும் துன்புறுத்தலும் ஆகும். தம்மைப் பின்பற்றியவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” (மத்தேயு 24:9) ஆம், உலகின் பல பாகங்களில் யெகோவாவின் சாட்சிகளாக நாம் கடும் துன்புறுத்தலை அனுபவித்திருக்கிறோம். கடவுளைச் சேவிப்போருக்கும் பிசாசாகிய சாத்தானைச் சேவிப்போருக்கும் இடையே பகைமையும் விரோதமும் எழும்புமென வெகு காலத்திற்கு முன்பே யெகோவா முன்னறிவித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். (ஆதியாகமம் 3:15) சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து உத்தமத்தோடு இருப்பது, யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையே சரியானது என்பதற்கு நாம் அளிக்கும் சான்று எனவும் அறிந்திருக்கிறோம். இதை அறிந்திருப்பது, மிகவும் கடினமான சூழல்களிலும்கூட நம்மைப் பலப்படுத்துகிறது. கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்க நாம் தீர்மானமாயிருந்தால், எந்தவொரு துன்புறுத்தலும் நம் வாயை முற்றிலும் அடைத்துவிட முடியாது.
12. சாத்தானுடைய எதிர்ப்பின் மத்தியிலும் நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் குறித்து ஏன் களிகூர வேண்டும்?
12 நீங்கள் இவ்வுலகத்தின் கவர்ச்சியைத் தவிர்த்து, கேலி, எதிர்ப்பு ஆகியவற்றின் மத்தியிலும் உண்மையுள்ளவராய் இருக்கிறீர்களா? அப்படியானால், களிகூர உங்களுக்குக் காரணம் இருக்கிறது. தம்மைப் பின்பற்றப் போகிறவர்களுக்கு இயேசு இவ்வாறு உறுதியளித்தார்: ‘என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.’ (மத்தேயு 5:11, 12) நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பதானது, யெகோவாவின் சக்திவாய்ந்த பரிசுத்த ஆவி உங்கள்மீது இருப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது; அவருடைய மகிமையைப் பிரதிபலிக்க அந்தப் பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவுகிறது.—2 கொரிந்தியர் 12:9.
யெகோவாவின் உதவியோடு சகித்திருத்தல்
13. கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் சகிப்புத்தன்மையோடு இருப்பதற்கு முக்கிய காரணம் என்ன?
13 ஊழியத்தில் நாம் சகிப்புத்தன்மையோடு இருப்பதற்கு முக்கிய காரணம், நாம் யெகோவாவை நேசிக்கிறோம், அவரது மகிமையைப் பிரதிபலிப்பதில் மனமகிழ்கிறோம். பொதுவாக ஜனங்கள் தங்களுக்குப் பிரியமானவர்களையும் மதிப்புக்குரியவர்களையும் பின்பற்றவே விரும்புவார்கள்; ஆனால், யெகோவா தேவனைக் காட்டிலும் பின்பற்றத்தக்க சிறந்த நபர் வேறு யாருமே கிடையாது. கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு சத்தியத்தைப் போதித்து அவர்களை மீட்பதற்காக, அவர் தம்முடைய மகனையே இப்பூமிக்கு அனுப்பி, தம் மாபெரும் அன்பை வெளிக்காட்டினார். (யோவான் 3:16; 18:37) கடவுளைப் போல, நாமும்கூட எல்லா மனிதரும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம், அதற்காகத்தான் அவர்களிடம் நாம் பிரசங்கிக்கிறோம். (2 பேதுரு 3:9) இந்த விருப்பமும், கடவுளைப் பின்பற்ற வேண்டுமென்ற தீர்மானமுமே ஊழியத்தின் மூலம் அவரது மகிமையைத் தொடர்ந்து பிரதிபலிக்க நம்மை உந்துவிக்கின்றன.
14. ஊழியத்தில் சகிப்புத்தன்மையோடு இருப்பதற்கு யெகோவா நம்மை எப்படிப் பலப்படுத்துகிறார்?
14 ஆனாலும், மிக முக்கியமாக, கிறிஸ்தவ ஊழியத்தில் சகிப்புத்தன்மையோடு இருப்பதற்கு யெகோவாவிடமிருந்தே நமக்குப் பலம் கிடைக்கிறது. தமது ஆவி, தமது அமைப்பு, தமது வார்த்தையான பைபிள் ஆகியவற்றின் மூலம் நம்மை ஆதரிக்கிறார், பலப்படுத்துகிறார். தமது மகிமையைப் பிரதிபலிக்க மனமுள்ளவர்களுக்கு யெகோவா “சகிப்புத்தன்மையை அளிக்கிறார்.” நமது ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார், சோதனைகளைச் சமாளிப்பதற்கு ஞானத்தையும் அருளுகிறார். (ரோமர் 15:5, NW; யாக்கோபு 1:5) அதுமட்டுமா, நம்முடைய சக்திக்கு மிஞ்சின எந்த சோதனையையும் அவர் அனுமதிப்பதில்லை. யெகோவாமீது நாம் நம்பிக்கை வைத்தோமானால், சோதனையிலிருந்து விடுபட அவர் வழிசெய்வார்; அவரது மகிமையைத் தொடர்ந்து நாம் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்வார்.—1 கொரிந்தியர் 10:13.
15. சகித்திருப்பதற்கு எது நமக்கு உதவுகிறது?
15 ஊழியத்தில் நாம் சகிப்புத்தன்மையோடு இருப்பது, கடவுளுடைய ஆவி நம்மேல் இருப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. இதை இப்படி விளக்கலாம்: பிரெட் பாக்கெட்டுகளை இலவசமாக வீடு வீடாகக் கொண்டு கொடுக்கும்படி உங்களிடம் ஒருவர் சொல்கிறார். உங்களுடைய சொந்தச் செலவில், உங்களுடைய சொந்த நேரத்தில் அதைச் செய்யும்படி சொல்கிறார். ஆனால் வெகு சிலரே இந்த பிரெட்டை விரும்புகிறார்கள். நீங்கள் இப்படி வீடு வீடாகக் கொண்டு கொடுப்பதை சிலர் எதிர்க்கவும் செய்கிறார்கள். அப்படியானால், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் இந்த வேலையை நீங்கள் செய்துகொண்டே இருப்பீர்களா? செய்ய மாட்டீர்கள். ஆனாலும், பல வருடங்களாக, சொல்லப்போனால் பல பத்தாண்டுகளாகக்கூட, உங்களுடைய சொந்தச் செலவில், சொந்த நேரத்தில் நற்செய்தியை நீங்கள் அறிவித்து வந்திருப்பீர்கள். ஏன்? யெகோவாவை நீங்கள் நேசிப்பதாலும், சகித்திருப்பதற்கு தமது ஆவி மூலம் உங்களுடைய முயற்சிகளை அவர் ஆசீர்வதித்திருப்பதாலும் அல்லவா அப்படி அறிவித்து வந்திருப்பீர்கள்? ஆம், அதில் சந்தேகமே இல்லை!
மறக்கப்படாத ஒரு வேலை
16. ஊழியத்தில் நாம் சகிப்புத்தன்மையோடு இருப்பது நமக்கும் நாம் சொல்வதைக் கேட்போருக்கும் எதை அர்த்தப்படுத்துகிறது?
16 புதிய உடன்படிக்கையின் ஊழியம் தன்னிகரற்ற ஒரு பரிசாகும் (2 கொரிந்தியர் 4:7) அதுபோலவே, வேறே ஆடுகளால் உலகமுழுவதும் செய்யப்பட்டு வரும் கிறிஸ்தவ ஊழியமும் ஒரு பொக்கிஷமாகும். ஊழியத்தில் நீங்கள் தொடர்ந்து சகித்திருந்தால், தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதியது போல், ‘உங்களையும் உங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ள முடியும்.’ (1 தீமோத்தேயு 4:16) அதன் அர்த்தம் என்னவென்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பிரசங்கிக்கும் நற்செய்தி, மற்றவர்கள் நித்திய ஜீவனைப் பெற வாய்ப்பளிக்கிறது. ஆன்மீக ரீதியில் நீங்கள் உதவி செய்கிறவர்களுடன் உங்களால் மிக நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது. கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ள நீங்கள் உதவி செய்தவர்களுடன் பரதீஸில் நித்தியமாக வாழ்வது எவ்வளவு இன்பமாயிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க நீங்கள் எடுத்த முயற்சிகளையெல்லாம் அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். உண்மையிலேயே அது உங்களுக்குப் பரம திருப்தியளிக்கும்!
17. நாம் வாழ்ந்து வரும் இந்தக் காலக்கட்டம் ஏன் மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமானது?
17 மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள். கடவுளிடமிருந்து விலகியிருக்கிற மக்களைக் கொண்ட இவ்வுலகில் இனி ஒருபோதும் நற்செய்தி பிரசங்கிக்கப்படப் போவதில்லை. இப்படிப்பட்ட ஓர் உலகில்தான் நோவா வாழ்ந்தார், அந்த உலகம் அழிக்கப்பட்டதை அவர் கண்ணாரக் கண்டார். தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக்கொள்வதற்கு ஒரு பேழையைக் கட்டும்படி கடவுள் கொடுத்த வேலையை உண்மையோடு செய்து முடித்ததை எண்ணி அவர் எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார்! (எபிரெயர் 11:7) நீங்களும்கூட அத்தகைய சந்தோஷத்தை அனுபவிக்கலாம். கடைசி நாட்களில் நீங்கள் செய்த வேலையைப் பற்றி புதிய உலகில் எப்படி உணருவீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததைக் குறித்து எப்படி உணருவீர்கள்!
18. யெகோவா தம் ஊழியர்களுக்கு என்ன உறுதியையும் உற்சாகத்தையும் அளிக்கிறார்?
18 அப்படியானால், கடவுளுடைய மகிமையை நாம் தொடர்ந்து பிரதிபலிப்போமாக. அவ்வாறு செய்வதை நாம் ஒருகாலும் மறக்க மாட்டோம். யெகோவாவும்கூட நாம் செய்தவற்றை மறப்பதில்லை. நம்மை உற்சாகப்படுத்தும் விதத்தில் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.”—எபிரெயர் 6:10-12.
விளக்க முடியுமா?
• கடவுளுடைய மகிமையைக் கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள்?
• கடவுளுடைய ஜனங்களின் வாயை அடைக்க சாத்தான் பயன்படுத்துகிற சில வழிகள் யாவை?
• கடவுளுடைய ஆவி நம்மேல் இருப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
மோசேயின் முகம் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலித்தது
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
ஊழியத்தில் கடவுளுடைய மகிமையை நாம் பிரதிபலிக்கிறோம்