சோர்வாக இருந்தாலும் சோர்ந்து விடுவதில்லை
‘பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய தேவன்’ ‘சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமை இழந்தவருக்கு ஊக்கம் பெருகச் செய்கின்றார்.’—ஏசாயா 40:28, 29; பொது மொழிபெயர்ப்பு.
1, 2. (அ) உண்மை வணக்கத்தைப் பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் என்ன இனிய அழைப்பு விடுக்கப்படுகிறது? (ஆ) நமது ஆன்மீகத்திற்கு எது பெரும் ஆபத்தை விளைவிக்கலாம்?
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். . . . என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று இயேசு விடுத்த கனிவான அழைப்பை அவருடைய சீஷர்களான நாம் நன்கு அறிந்திருக்கிறோம். (மத்தேயு 11:28-30) ‘கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து வரும் இளைப்பாறுதலின் காலங்களும்,’ அதாவது புத்துயிரளிக்கும் காலங்களும் கிறிஸ்தவர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 3:19) பைபிள் சத்தியங்களை படித்திருப்பதாலும், ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையைப் பெற்றிருப்பதாலும், யெகோவாவின் நியமங்களை வாழ்க்கையில் பின்பற்றுவதாலும் தனிப்பட்டவர்களாக நீங்களும் புத்துணர்ச்சி அடைந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
2 இருந்தாலும், யெகோவாவை வணங்கும் சிலர் உணர்ச்சி ரீதியில் அவ்வப்போது சோர்வடைந்து விடுகிறார்கள். சில சமயங்களில் இத்தகைய சோர்வு கொஞ்ச காலத்திற்கு மட்டுமே நீடிக்கிறது, வேறு சில சமயங்களிலோ அது வெகு காலத்திற்கு நீடிக்கிறது. காலம் செல்லச் செல்ல, கிறிஸ்தவ பொறுப்புகள் இயேசு வாக்குறுதி கொடுத்தது போல புத்துயிரளிக்கும் சுமையாக இல்லாமல் ஒரு பாரமாக ஆகிவிட்டிருக்கிறதென சிலர் உணருகிறார்கள். அப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்கள், யெகோவாவுடன் ஒரு கிறிஸ்தவர் வைத்துள்ள உறவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கலாம்.
3. யோவான் 14:1-ல் காணப்படும் ஆலோசனையை இயேசு ஏன் கொடுத்தார்?
3 இயேசு கைதாகி கொலை செய்யப்பட்டதற்கு முன்பு, தம் சீஷர்களிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.” (யோவான் 14:1) அப்போஸ்தலர்கள் துயர சம்பவங்களை சந்திக்கவிருந்ததால் இயேசு அந்த வார்த்தைகளை அவர்களிடம் சொன்னார். அவற்றைத் தொடர்ந்து பயங்கரமான துன்புறுத்தலை அவர்கள் எதிர்ப்படவிருந்தார்கள். அப்போஸ்தலர்கள் முற்றிலும் சோர்ந்துபோய் இடறலடையக் கூடும் என்பதை இயேசு அறிந்திருந்தார். (யோவான் 16:1) சோக உணர்வுகளை கட்டுப்படுத்தாவிட்டால் அவர்கள் ஆன்மீக ரீதியில் பலவீனமடைந்து யெகோவா மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடக் கூடும் என்பதையும் அறிந்திருந்தார். இன்று கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் இது உண்மை. நீண்டகால மனச்சோர்வு மிகுந்த வேதனையை ஏற்படுத்தலாம், நம்முடைய இருதயமும் பாரமடைந்து விடலாம். (எரேமியா 8:18) நாம் உள்ளுக்குள் தளர்ந்து போய்விடலாம். இப்படிப்பட்ட அழுத்தத்தினால், நாம் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் செயலற்றவர்களாகி விடக்கூடும், ஏன் யெகோவாவை வணங்கும் ஆசையைக்கூட இழந்து விடக்கூடும்.
4. நம்முடைய அடையாளப்பூர்வ இருதயத்திற்கு சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
4 அப்படியானால், “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்” என்ற பைபிளின் ஆலோசனை எவ்வளவு பொருத்தமானது! (நீதிமொழிகள் 4:23) நம்முடைய அடையாளப்பூர்வ இருதயத்தை சோர்விலிருந்தும் ஆன்மீக அசதியிலிருந்தும் பாதுகாப்பதற்கு பைபிளின் நடைமுறையான ஆலோசனை நமக்கு உதவுகிறது. என்றாலும், சோர்வடைவதற்கான காரணத்தை நாம் முதலில் தெளிவாக அடையாளம் காண்பது அவசியம்.
கிறிஸ்தவம் நம்மை ஒடுக்குவதில்லை
5. கிறிஸ்தவ சீஷராக இருப்பதில் என்ன முரண்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறது?
5 உண்மைதான், ஒரு கிறிஸ்தவர் கடினமாக பிரயாசப்படுபவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார். (லூக்கா 13:24) சொல்லப்போனால், “தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்” என்று இயேசுகூட சொல்லியிருக்கிறார். (லூக்கா 14:27) மேலோட்டமாக பார்த்தால், தமது சுமை இலகுவாயும் புத்துயிரளிப்பதாயும் இருக்குமென இயேசு முன்பு சொல்லியிருந்ததோடு இந்தக் கூற்று முரண்படுவது போல் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவற்றிற்கு இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை.
6, 7. நம்முடைய வணக்கம் சோர்வை ஏற்படுத்துவதில்லை என ஏன் சொல்லலாம்?
6 கடினமாக பிரயாசப்படுவதும் ஊக்கமாக உழைப்பதும் உடல் ரீதியில் களைப்பை ஏற்படுத்தினாலும், நல்ல நோக்கத்திற்காக அவ்வாறு செய்யும்போது அது திருப்தியையும் புத்துணர்ச்சியையுமே அளிக்கும். (பிரசங்கி 3:13, 22) அருமையான பைபிள் சத்தியங்களை சக மனிதரோடு பகிர்ந்துகொள்வதற்கு இதைக் காட்டிலும் வேறு என்ன நல்ல காரணம் இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, கடவுள் வகுத்த உயர்ந்த ஒழுக்க தராதரங்களின்படி வாழ்வதற்காக நாம் படும் பாடெல்லாம் அதனால் கிடைக்கும் பலன்களோடு ஒப்பிட ஒன்றுமேயில்லை. (நீதிமொழிகள் 2:10-20) துன்புறுத்தப்பட்டாலும்கூட, கடவுளுடைய ராஜ்யத்தின் நிமித்தம் அதை கெளரவமாக கருதுகிறோம்.—1 பேதுரு 4:14.
7 இயேசுவின் சுமை உண்மையிலேயே புத்துயிரளிக்கிறது; அதுவும், பொய் மதம் எனும் நுகத்தின் கீழ் இருப்போருடைய ஆன்மீக இருளுடன் ஒப்பிடுகையில் அது நிச்சயம் புத்துயிரூட்டுகிறது. யெகோவாவுக்கு நம்மீது கனிவான அன்பு உள்ளதால் நியாயமற்ற விதத்தில் அவர் எதையும் நம்மிடம் கேட்பதில்லை. ‘அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல.’ (1 யோவான் 5:3) வேத வசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, உண்மை கிறிஸ்தவம் நம்மை ஒடுக்குவதில்லை. ஆகவே, நம்முடைய வணக்கம் அசதியையோ சோர்வையோ ஏற்படுத்துவதில்லை என்பது தெளிவாக இருக்கிறது.
‘பாரமான யாவற்றையும் தள்ளிவிடுங்கள்’
8. ஆன்மீக அசதிக்கு பெரும்பாலும் காரணமாயிருப்பது எது?
8 ஆன்மீக ரீதியில் நமக்கு அசதி ஏதும் ஏற்பட்டால், பெரும்பாலும் இந்தச் சீர்கெட்ட உலகம் நம்மீது சுமத்தும் கூடுதலான சுமையே அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடப்பதால்’ நம்மைத் தளர்ந்து போகவும் நம் கிறிஸ்தவ சமநிலையைக் குலைத்துப் போடவும் செய்யும் சக்திகள் நம்மைச் சுற்றி ஏராளம் உள்ளன. (1 யோவான் 5:19) தேவையற்ற காரியங்கள் நம் அன்றாட கிறிஸ்தவ நடவடிக்கைகளின் ஒழுங்கைக் கெடுத்துப்போட்டு, அவற்றில் ஈடுபடுவதை சிக்கலாக்கிவிடலாம். அவை நம்மை பாரமடைய செய்வதோடு, சக்கையாக பிழிந்தும் விடலாம். அதனால்தான், ‘பாரமான யாவற்றையும் தள்ளிவிடுங்கள்’ என பைபிள் சரியாகவே அறிவுரை கொடுக்கிறது.—எபிரெயர் 12:1-3.
9. பொருள் சம்பந்தமான நாட்டங்கள் நம்மை எப்படி பாரமடையச் செய்யலாம்?
9 உதாரணமாக, புகழ், பணம், பொழுதுபோக்கு, இன்ப சுற்றுலா ஆகியவற்றில் மூழ்கிப்போயிருக்கும் இந்த உலகமும் பொருள் சம்பந்தமான மற்ற நாட்டங்களும் நம் சிந்தையை பாதிக்கலாம். (1 யோவான் 2:15-17) செல்வத்தை சேர்ப்பதில் குறியாக இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கிக் கொண்டனர். அதை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
10. விதைக்கிறவனைப் பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து செல்வத்தைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
10 கடவுளுடைய சேவையில் நமக்கு அசதியோ சோர்வோ ஏற்பட்டால், அதற்கு பொருளாதார நாட்டங்கள் நமது ஆன்மீகத்தை நெருக்கிப் போடுவது காரணமாக இருக்குமா? இந்தச் சூழ்நிலை உருவாகும் சாத்தியம் நிஜமே என்பதை விதைக்கிறவனைப் பற்றிய இயேசுவின் உவமை காட்டுகிறது. ‘உலகக் கவலைகளையும், ஐசுவரியத்தின் மயக்கத்தையும், மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளையும்’ இயேசு முட்களுக்கு ஒப்பிட்டார்; இத்தகைய முட்கள் நம் இருதயத்தில் “உட்பிரவேசித்து” அங்குள்ள கடவுளுடைய வார்த்தை எனும் விதையை ‘நெருக்கிப்போடுவதாக’ குறிப்பிட்டார். (மாற்கு 4:18, 19) ஆகவே, பைபிள் நமக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறது: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”—எபிரெயர் 13:5.
11. பாரமடையச் செய்யும் காரியங்களை நாம் எப்படி ஒதுக்கிவிடலாம்?
11 அதிகமான பொருட்களை சேர்க்கும் நாட்டம் அல்ல, ஆனால் ஏற்கெனவே நம்மிடம் இருப்பதை வைத்து என்ன செய்கிறோம் என்பதே சில சமயங்களில் நம் வாழ்க்கையை சிக்கலாக்குகிறது. தீராத வியாதியாலோ அன்பானவர்கள் மரித்ததாலோ அல்லது மனதைக் குடையும் வேறுசில பிரச்சினைகளாலோ சிலர் உணர்ச்சி ரீதியில் சோர்வடைகிறார்கள். அதனால் அவ்வப்போது சரிப்படுத்தல்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஒரு தம்பதியர் தங்களுடைய சில ஹாபிகளையும் தேவையில்லாத சில புராஜெக்ட் வேலைகளையும் ஓரங்கட்டிவிட தீர்மானித்தார்கள். தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு, தேவையில்லாத புராஜெக்ட் சம்பந்தமான பொருட்களையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டார்கள். நம்முடைய பழக்கவழக்கங்களையும் உடைமைகளையும் குறித்து அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நாம் எல்லாருமே நன்மையடையலாம். நாம் களைப்புற்று மனம் சோர்ந்துவிடாதபடிக்கு தேவையில்லாத எல்லா பாரத்தையும் ஓரங்கட்டிவிடலாம்.
நியாயத்தன்மையும் அடக்கமும் இன்றியமையாதவை
12. நம்முடைய சொந்த தவறுகளைக் குறித்து நாம் என்ன அறிந்திருக்க வேண்டும்?
12 சிறு சிறு விஷயங்களில்கூட நாம் செய்யும் தவறுகள் படிப்படியாக நமது வாழ்க்கையை சிக்கலாக்கி விடலாம். தாவீது சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! “என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச் சுமையைப் போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று” என அவர் சொன்னார். (சங்கீதம் 38:4) அநேக சமயங்களில், பயனளிக்கும் சில மாற்றங்களை செய்வது பெருஞ்சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
13. நம்முடைய ஊழியத்தை சமநிலையுடன் நோக்குவதற்கு நியாயத்தன்மை எப்படி உதவும்?
13 “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும்” வளர்க்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21, 22, NW) ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ . . . இணக்கமுள்ளது,’ அதாவது நியாயத்தன்மையுள்ளது என பைபிள் கூறுகிறது. (யாக்கோபு 3:17) கிறிஸ்தவ ஊழியத்தில் மற்றவர்கள் ஈடுபடும் அதே அளவுக்கு தாங்களும் ஈடுபட வேண்டுமென நினைத்து சிலர் தங்களை வருத்திக் கொள்கிறார்கள். ஆனால், பைபிள் நமக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:4, 5) யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிப்பதற்கு சக கிறிஸ்தவர்களின் சிறந்த முன்மாதிரி நம்மை உந்துவிக்கும் என்பது உண்மைதான், ஆனால் நம்முடைய சூழ்நிலைக்கு ஒத்துவரும் இலக்குகளை வைப்பதற்கு நடைமுறை ஞானமும் நியாயத்தன்மையும் நமக்கு உதவும்.
14, 15. நம்முடைய சரீர மற்றும் உணர்ச்சிப்பூர்வ தேவைகளை கவனிப்பதற்கு நடைமுறை ஞானத்தை எப்படி பயன்படுத்தலாம்?
14 அதிக முக்கியமில்லாததாக தோன்றும் சிறிய விஷயங்களிலும்கூட நியாயத்தன்மையோடு இருப்பது சோர்வை தவிர்க்க உதவும். எடுத்துக்காட்டாக, நல்ல தேக ஆரோக்கியத்திற்கு உதவும் சமநிலையான பழக்கங்கள் நமக்கு இருக்கின்றனவா? யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்றில் சேவை செய்யும் ஒரு தம்பதியரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சோர்வை போக்குவதற்கு நடைமுறை ஞானம் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மனைவி இவ்வாறு கூறுகிறார்: “எங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் எல்லா நாளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லவே நாங்கள் முயலுகிறோம். தவறாமல் உடற்பயிற்சியும் செய்கிறோம். இது உண்மையிலேயே எங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கிறது. எங்களுடைய வரம்புகளை நாங்கள் அறிந்திருப்பதால் அதற்கு தகுந்தபடி காரியங்களை செய்கிறோம். கொஞ்சமும் சோர்வடையாமல் எப்போதும் துடிப்புடன் செயல்படுகிறவர்களோடு எங்களை ஒப்பிட்டுப் பார்க்காமலிருக்க முயலுகிறோம்.” நாம் வேளாவேளைக்கு சத்துள்ள உணவை சாப்பிடுகிறோமா, போதுமான ஓய்வு எடுக்கிறோமா? நம் ஆரோக்கியத்திற்கு தகுந்த கவனம் செலுத்துவது உணர்ச்சிப்பூர்வ சோர்வையும் ஆன்மீக சோர்வையும் குறைக்கலாம்.
15 சிலருக்கு விசேஷ தேவைகள் இருக்கலாம். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ சகோதரி பல கஷ்டமான சூழ்நிலைகளில் முழுநேர சேவை செய்திருக்கிறார். அவருக்கு புற்று நோயும் வேறுபல உடல் உபாதைகளும் இருந்திருக்கின்றன. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளை சமாளிக்க எது அவருக்கு உதவுகிறது? அவர் இவ்வாறு கூறுகிறார்: “தனிமையில் அமைதியாக இருக்கும் நேரம் எனக்கு அவசியம் தேவை. குறிப்பாக, கவலையும் சோர்வும் வாட்டிவதைக்கிற சமயங்களில் படிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்குமான அப்படிப்பட்ட நேரம் எனக்கு ரொம்பவே தேவைப்படுகிறது.” நம்முடைய தனிப்பட்ட தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்ய நடைமுறை ஞானமும் சிந்திக்கும் திறனும் நமக்கு உதவுகிறது, இவ்வாறு ஆன்மீக சோர்வை தவிர்க்க முடிகிறது.
யெகோவா தேவன் நம்மை பலப்படுத்துகிறார்
16, 17. (அ) நம்முடைய ஆன்மீக ஆரோக்கியத்தை கவனிப்பது ஏன் மிக மிக முக்கியம்? (ஆ) நாம் அன்றாடம் செய்யும் காரியங்களில் எதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
16 நம் ஆன்மீக ஆரோக்கியத்தை கவனிப்பதும் மிக மிக முக்கியம். யெகோவா தேவனுடன் நமக்கு நெருங்கிய உறவு இருக்கும்போது, நம் உடல் சோர்வடைந்தாலும், அவரை வணங்குவதில் நாம் சோர்வடையவே மாட்டோம். யெகோவா ‘சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமை இழந்தவருக்கு ஊக்கம் பெருகச் செய்கின்றார்.’ (ஏசாயா 40:28, 29, பொ.மொ.) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் அனுபவத்தில் கண்டிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.”—2 கொரிந்தியர் 4:16.
17 இந்த வசனத்தில் “நாளுக்கு நாள்” என்ற வார்த்தையை கவனியுங்கள். யெகோவா அளிக்கும் காரியங்களை அனுதினமும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. ஒரு மிஷனரியாக 43 ஆண்டுகள் உண்மையோடு சேவித்த ஒரு சகோதரி, சரீர சோர்வையும் மனச்சோர்வையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை. அவர் இவ்வாறு கூறுகிறார்: “எந்த வேலையையும் ஆரம்பிக்கும் முன், யெகோவாவிடம் ஜெபிப்பதற்காகவும் அவருடைய வார்த்தையை படிப்பதற்காகவும் காலையில் சீக்கிரமாகவே எழும்புவதை பழக்கமாக்கிக் கொண்டேன். இதை அன்றாடம் செய்வது இன்று வரையில் சகித்திருக்க எனக்கு உதவியிருக்கிறது.” தவறாமல், ஆம், “நாளுக்கு நாள்” யெகோவாவிடம் ஜெபம் செய்து, அவரது உயர்ந்த பண்புகளையும், அவர் கொடுத்த வாக்குறுதிகளையும் தியானித்தால் நாமும்கூட அவரது ஆதரவளிக்கும் வல்லமையில் நம்பிக்கையோடு இருக்கலாம்.
18. வயோதிகராகவோ சுகவீனராகவோ இருக்கும் உண்மையுள்ளோருக்கு பைபிள் என்ன ஆறுதலை அளிக்கிறது?
18 முக்கியமாய் வயோதிகம், சுகவீனம் காரணமாக மனச்சோர்வடைவோருக்கு இது பெரிதும் உதவுகிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களை மற்றவர்களோடு ஒப்பிடுவதால் அல்ல, ஆனால் தாங்கள் முன்பு செய்ததையும் இப்போது செய்து வருவதையும் ஒப்பிடுவதால் மனமொடிந்துவிடலாம். முதியோரை யெகோவா கௌரவிக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது! “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 16:31) நம்முடைய குறைபாடுகளை யெகோவா அறிவார்; ஆகவே, நம்முடைய பலவீனங்களின் மத்தியிலும் முழு இருதயத்தோடு அவரை வணங்குவதை அவர் உயர்வாக மதிக்கிறார். அதுமட்டுமல்ல, நாம் ஏற்கெனவே செய்த நற்காரியங்கள் அவருடைய நினைவில் மங்காமல் இருக்கின்றன. பைபிள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) பல பத்தாண்டுகளாக யெகோவாவுக்கு உண்மையோடிருந்தவர்கள் நம் மத்தியில் இருப்பதால் நாம் எல்லாரும் எவ்வளவாய் மகிழ்ச்சியடைகிறோம்!
சோர்ந்துவிடாதீர்கள்
19. நன்மை செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதால் நாம் எப்படி பயனடைகிறோம்?
19 எப்போதும் சுறுசுறுப்பாக வேலைகளை செய்துவருவது களைப்பைப் போக்கும் என பலர் நம்புகிறார்கள். அவ்வாறே, ஆன்மீக காரியங்களில் தவறாமல் ஈடுபடுவது, உணர்ச்சிப்பூர்வ அல்லது ஆன்மீக சோர்விலிருந்து விடுபட உதவும். “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என பைபிள் கூறுகிறது. (கலாத்தியர் 6:9, 10) “நன்மை செய்கிறதில்” மற்றும் “நன்மை செய்” என்ற சொற்றொடர்களை கவனியுங்கள். நாம் செயல்பட வேண்டும் என்பதை இவை அர்த்தப்படுத்துகின்றன. மற்றவர்களுக்கு நன்மை செய்வது, யெகோவாவின் சேவையில் தளர்ந்து போகாதிருக்க நமக்கு நிச்சயம் உதவும்.
20. சோர்வை ஒழிப்பதற்கு யாருடைய சகவாசத்தை தவிர்க்க வேண்டும்?
20 அதற்கு நேர்மாறாக, கடவுளுடைய சட்டங்களை அவமதிப்போருடன் சகவாசம் வைப்பது சலிப்பூட்டும் சுமையாகி விடலாம். ஆகவே பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.” (நீதிமொழிகள் 27:3, பொது மொழிபெயர்ப்பு) சோர்வையும் சலிப்பையும் ஒழிப்பதற்கு, எதிர்மறையான எண்ணம் உடையோரிடமும் குற்றங்குறை காண்போரிடமும் சகவாசம் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
21. கிறிஸ்தவ கூட்டங்களில் நாம் எப்படி மற்றவர்களுக்கு உற்சாகம் அளிப்பவராக இருக்கலாம்?
21 நமக்கு ஆன்மீக பலத்தை அருளுவதற்கு யெகோவா செய்துள்ள ஓர் ஏற்பாடே கிறிஸ்தவ கூட்டங்கள். அங்கே புத்துயிரளிக்கும் புத்திமதியின் வாயிலாகவும் தோழமையின் வாயிலாகவும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. (எபிரெயர் 10:25) கூட்டங்களில் பதில் சொல்வதாக இருந்தாலும் சரி, பேச்சு கொடுப்பதாக இருந்தாலும் சரி, சபையிலுள்ள அனைவரும் அதை உற்சாகமூட்டும் விதத்தில் செய்ய முயல வேண்டும். மற்றவர்களை உற்சாகப்படுத்தும் பொறுப்பு, முக்கியமாக சபையை முன்நின்று வழிநடத்துகிற போதனையாளர்களுக்கு இருக்கிறது. (ஏசாயா 32:1, 2) சபையாருக்கு அறிவுரையையோ புத்திமதியையோ கொடுக்க வேண்டியிருந்தாலும்கூட அதை புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டும். (கலாத்தியர் 6:1, 2) மற்றவர்கள் மீது நாம் வைத்துள்ள அன்பு, சோர்வடையாமல் யெகோவாவை சேவிக்க உண்மையிலேயே நமக்கு உதவும்.—சங்கீதம் 133:1; யோவான் 13:35.
22. அபூரணத்தின் மத்தியிலும் நாம் ஏன் தைரியங்கொள்ளலாம்?
22 இந்த முடிவின் காலத்தில் யெகோவாவை வணங்குவது வேலை செய்வதை உட்படுத்துகிறது. அதோடு, மனத்தளர்ச்சி, உணர்ச்சிப்பூர்வ வேதனை, அழுத்தமிக்க சூழ்நிலை ஆகியவற்றின் பாதிப்புகளையும் கிறிஸ்தவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நம் அபூரண இயல்பு பலவீனமானது, மண்பாண்டம் போன்றது. என்றாலும், பைபிள் இவ்வாறு கூறுகிறது: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:7) ஆம், நாம் சோர்வாக உணர்ந்தாலும், ஒருபோதும் சோர்ந்து விடாதிருப்போமாக. மறுபட்சத்தில், நாம் ‘தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர்’ என்று சொல்வோமாக.—எபிரெயர் 13:6.
சுருக்கமான மறுபார்வை
• களைந்துபோட முடிகிற சில பாரமான சுமைகள் யாவை?
• சக கிறிஸ்தவர்களுக்கு ‘நன்மை செய்வதில்’ நாம் எப்படி பங்குகொள்ளலாம்?
• சோர்வாகவோ சலிப்பாகவோ உணருகையில் நம்மை யெகோவா எப்படி ஆதரிக்கிறார்?
[பக்கம் 23-ன் படம்]
நீண்டகால மனச்சோர்வு அப்போஸ்தலர்களை ஆபத்துக்குள்ளாக்கி விடும் என்பதை இயேசு அறிந்திருந்தார்
[பக்கம் 24-ன் படம்]
சில ஹாபிகளையும் தேவையில்லாத தனிப்பட்ட புராஜெக்ட் வேலைகளையும் சிலர் ஓரங்கட்டியிருக்கிறார்கள்
[பக்கம் 26-ன் படம்]
பலவீனங்களின் மத்தியிலும் நாம் முழு இருதயத்தோடு வணங்குவதை யெகோவா உயர்வாக கருதுகிறார்