துயர காலங்களில் நீங்கள் ஆறுதலைக் கண்டடையலாம்
துயர உணர்ச்சிகளை நாம் எவ்வாறு கருதவேண்டும்? நாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்களெனில், நமக்கு அதிசயமான நம்பிக்கையும் ஆவிக்குரிய நல்வாய்ப்புகளும் இருப்பதால், நமக்கு அவை ஏற்படுவதை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக நாம் அவற்றைக் கருத வேண்டுமா? அத்தகைய உணர்ச்சிகள் நாம் கடவுளுடைய சேவைக்கு ஆவிக்குரியப்பிரகாரம் தகுதியற்றவர்களெனக் குறித்துக் காட்டுகின்றனவா?
“எலியா நமக்கிருப்பவற்றைப்போன்ற உணர்ச்சிகளையுடைய மனிதனாயிருந்தான்” என சீஷன் யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 5:17, NW) கடவுள் எலியாவை அசாதாரண முறையில் பயன்படுத்தினபோதிலும், அந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியுங்கூட துயரத்தை உணர்ந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் எலியா பின்வருமாறு உணர்ச்சிமீதூரக் கூறினார்: “போதும் யெகோவாவே, என்னை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களிலும் நல்லவன் அல்ல.” (1 இராஜாக்கள் 19:4, தி.மொ.) உத்தமத்தைக்-காத்த மனிதனாகிய யோபும், உண்மையுள்ள பெண் அன்னாளும், யெகோவாவின் பற்றுறுதியுள்ள மற்ற ஊழியர்களும் துயரத்தை அனுபவித்தனர். தேவபக்தியுள்ள சங்கீதக்காரன் தாவீதுங்கூட பின்வருமாறு ஜெபித்தார்: “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகிவிட்டன; என் இடுக்கண்களினின்று என்னை விடுவியும்.”—சங்கீதம் 25:17, தி.மொ.
யெகோவா மனிதர்களைத் தம்முடைய சேவையில் பயன்படுத்துவது அவர்களை முற்றிலும் கவலையற்றவர்களாக்கி விடுகிறதில்லை. அவர்களுக்கு மனித பலவீனங்களும் உணர்ச்சிகளும் இன்னும் இருக்கின்றன, மேலும் இக்கட்டுக்கு உட்பட்டிருக்கையில் துயரத்தை அனுபவிக்கலாம். (அப்போஸ்தலர் 14:15) எனினும், உணர்ச்சி சார்ந்த நெருக்கடியைச் சமாளிப்பதில் மற்றவர்களைப் பார்க்கிலும் கடவுளுடைய ஊழியர்களுக்கு மேம்பட்ட உதவி உள்ளது. தங்கள் மனச் சோர்வையும் துயர உணர்ச்சிகளையும் அடக்கியாள சில நபர்களுக்கு எது உதவிசெய்ததென்பதைக் காண பைபிள்பூர்வ முன்மாதிரிகள் சிலவற்றை நாம் கவனிக்கலாம்.
துயரப்பட்ட அப்போஸ்தலன் ஆறுதலைக் கண்டடைகிறார்
மனச்சோர்வுற்றிருப்பது எவ்வாறிருக்குமென அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார். “எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், . . . உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.” (2 கொரிந்தியர் 7:5, 6) பவுலின் மனச்சோர்வு, ஒரே சமயத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த பல சூழ்நிலைமைகளால் உண்டாயிற்று. “புறம்பே போராட்டங்கள்”—உயிரையே ஆபத்துக்குள்ளாக்கும் கடுமையான துன்புறுத்தல்கள்—இருந்தன. (2 கொரிந்தியர் 1:8-ஐ ஒத்துப்பாருங்கள்.) மேலும், கொரிந்துவில் இருந்ததைப்போன்ற, சபைகளைப்பற்றிய கவலைகளின் உருவில் “உள்ளே பயங்கள்” இருந்தன.
சில மாதங்களுக்கு முன்னால், பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களுக்குத் தன் முதல் கடிதத்தை எழுதியிருந்தார். அதில் அவர் அந்தச் சபையிலிருந்த மிகக் கேடான பல நிலைமைகளைக் கண்டனஞ்செய்திருந்தார், ஆகவே அந்தக் கொரிந்தியர்கள் எவ்வாறு தன்னுடைய கடிதத்திற்கு பிரதிபலிப்பார்கள் என்பதைப்பற்றிக் கவலையுடனிருந்ததாகத் தோன்றுகிறது. எனினும், கொரிந்துவிலிருந்து தீத்து அவர்களுடைய பிரதிபலிப்பைக் குறித்து நல்நம்பிக்கையளிக்கும் அறிக்கையுடன் வந்தபோது பவுல் ஆறுதலடைந்தார். இவ்வாறே, நமக்கு நற்செய்தியைக் கொண்டுவந்து நம் துயரத்தைத் தணிப்பதற்கு யெகோவா தம்முடைய தற்கால ஊழியர்களில் ஒருவரைப் பயன்படுத்தக்கூடும்.
கடவுள்-கொடுத்திருக்கும் வேலைநியமிப்புகளை எவ்வாறு கருதுவது
சில கிறிஸ்தவர்கள் தங்கள் ஊழியத்தைக் குறித்து ஓரளவு துயரம் கொண்டுள்ளனர். கடவுள்-கொடுத்திருக்கும் தங்கள் வேலை நியமிப்புகளைத் தாங்கள் நிறைவேற்றுவது தங்களால் கூடியதற்கு மீறிய அதிகத்தைத் கேட்பதாயிருக்குமென யெகோவாவின் ஊழியர்கள் சிலர் நிச்சயமாகவே நினைத்திருக்கின்றனர். உதாரணமாக, மோசே, எகிப்திலிருந்த இஸ்ரவேலரின் சார்பாகக் கடவுளுடைய பிரதிநிதியாக இருப்பதற்குத் தான் தகுதியற்றவரென உணர்ந்தார். மற்றக் காரியங்களோடுகூட, தான் திறமைமிகுந்த பேச்சாளன் அல்லவென அவர் கூறினார். (யாத்திராகமம் 3:11; 4:10) ஆனால் கடவுளில் நம்பிக்கை வைத்து மேலும் ஆரோனைத் தன் பிரதிநிதி பேச்சாளனாகக் கொண்டு, மோசே தன் வேலைநியமிப்பை நிறைவேற்றத் தொடங்கினார்.
காலப்போக்கில் மோசே அதற்குமேலும் ஆரோன்பேரில் சார்ந்தில்லை. அவ்வாறே, சிலர் தொடக்கத்தில் கிறிஸ்தவ ஊழியத்தைக் கடினமாகக் காண்கின்றனர், ஆனால் அவர்கள் பயிற்றுவிப்பைப் பெற்று திறம்பட்ட சுவிசேஷகர்கள் ஆகின்றனர். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளான பல இளைஞர்கள் பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் முழு-நேர பிரசங்கிகளாகும்படி வளர்ந்திருக்கின்றனர். கிறிஸ்தவ ஊழியர்களைத் தகுதிபெறச் செய்வதற்கும் கடவுள்-கொடுத்திருக்கும் தங்கள் வேலைநியமிப்புகளை நிறைவேற்றுவதற்கு அவர்களைப் பலப்படுத்தி உரிமை அளிப்பதற்கும் எப்பொழுதும் யெகோவாவின்மீது நம்பிக்கைவைத்து சார்ந்திருக்கலாம் என்பதை அறிவது ஆறுதலாயிருக்கிறது.—சகரியா 4:6; 2 கொரிந்தியர் 2:14-17; பிலிப்பியர் 4:13.
நடந்துவிட்டதைப்பற்றி விசாரப்படுகையில் ஆறுதல்
கடவுளுடைய சேவையில் நாம் அதிகம் செய்யவில்லையென துயரப்படுவதனால் நாம் மனச்சோர்வடைந்திருக்கலாம். பல ஆண்டுகளாக ஊழியத்தில் செயலற்றவராக இருந்த ஒரு சகோதரன் மறுபடியும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளத் தொடங்கினார். அதன்பின் சிறிது காலத்துக்குள், அவர் கடும் நோயுற்று நிலையாகப் படுத்தப் படுக்கையில் இருக்கும் நிலைக்குள்ளானார். மனச்சோர்வுற்ற அந்தச் சகோதரன் பின்வருமாறு கூறினார்: “முன்னால், நான் சுறுசுறுப்பாய்ச் செயல்பட்டிருக்கக் கூடியபோது, என் கடமைப்பொறுப்பை நழுவவிட்டேன். இப்பொழுது, நான் செயல்பட விரும்புகையில், என்னால் முடியவில்லை.”
சென்ற காலத்தில் நடந்ததன்பேரில் உணர்ச்சிவசப்பட்டு ஆற்றலை வீணாக்கிக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, இப்பொழுது நம்மால் கூடிய மிகச் சிறந்ததைச் செய்வது ஞானமாயிருக்குமல்லவா? இயேசுவின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த மாம்சப்பிரகாரமான சகோதரர்களான யாக்கோபும் யூதாவும் அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பிற்பட்ட காலம் வரையில் விசுவாசிகளாகவில்லை. இதன்பேரில் அவர்களுக்கு ஏதாவது துயரம் இருந்திருந்தாலும், அவர்கள் கடவுளுடைய ஊழியர்களாகவும் பைபிள் எழுத்தாளர்களாகவுங்கூட இருப்பதிலிருந்து இது அவர்களை நிறுத்திவிடவில்லை.
ஜெபத்தைக் குறித்து ஒருபோதும் கவனக்குறைவாக இராதீர்கள்
சோர்வுற்றிருக்கையில், கடவுளுடைய ஜனங்கள் ஊக்கமாய் ஜெபிக்கவேண்டும். உண்மையில், சோர்வுற்ற சமயங்களில் செய்யப்பட்ட பல ஜெபங்கள் வேத எழுத்துக்களில் அடங்கியிருக்கின்றன. (1 சாமுவேல் 1:4-20; சங்கீதம் 42:8) ‘நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன் என்னால் ஜெபிக்க முடியாது,’ என்று சிலர் நினைக்கலாம். அவ்வாறெனில் யோனாவைக் கவனித்துப் பாருங்கள். மீனின் வயிற்றுக்குள் இருக்கையில், அவர் பின்வருமாறு கூறினார்: “என் ஆத்துமா என்னில் தோய்ந்துபோகையில் யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் பிரார்த்தனை உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடம் வந்து சேர்ந்தது. . . . நானோ நன்றிசெலுத்தும் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; யெகோவாவினிடமே ரட்சிப்பு.” (யோனா 2:4-9, தி.மொ.) ஆம், யோனா ஜெபித்தார், கடவுள் அவரை ஆறுதல்படுத்திக் காப்பாற்றினார்.
ஸ்வீடனில் ஒரு சகோதரி பயனியராகப் பல ஆண்டுகள் இருந்து ஊழியத்தில் நல்ல பலன் கண்டிருந்தபோதிலும், திடீரென சோர்வுற்றும் பலனற்றும் போனவளாக உணர்ந்தாள். அவள் தன் இருதயச்சோர்வை ஜெபத்தில் யெகோவாவிடம் கூறினாள். சில நாட்களுக்குப் பின்னால், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்திலிருந்த ஒரு சகோதரன் தொலைபேசியில் அவளிடம் பேசினார். பெத்தேலை விரிவுபடுத்தும் வேலையின் சம்பந்தமாக அவள் வாரத்தில் ஒரு நாள் அங்கே வந்து உதவிசெய்யக்கூடுமாவென அவர் கேட்டார். இந்தச் சகோதரி பின்னால் இவ்வாறு கூறினாள்: “பெத்தேலின் சூழ்நிலையும் அதன் விரிவாகும் வேலையைக் காண மற்றும் அதில் பங்குகொள்ள கிடைத்த வாய்ப்பும் எனக்குத் தேவைப்பட்ட பலத்தை அளித்தன.”
நாம் மனச்சோர்வுற்றிருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு வழி ஜெபம் என்பதை நினைவில் வைப்பது நல்லது. (கொலோசெயர் 4:2) நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பாக, யெகோவா தம்முடைய சேவையில் மேலுமதிக பொறுப்புள்ள வேலைக்கு வழிநடத்தும் ஒரு வாசலைத் திறக்கலாம், அல்லது அவர் நம்முடைய ஊழியத்தை மிகைப்பட்ட பலன் தரும்படி ஆசீர்வதிக்கலாம். (1 கொரிந்தியர் 16:8, 9, தி.மொ.) எவ்வாறாயினும், “கர்த்தரின் [யெகோவாவின், NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” (நீதிமொழிகள் 10:22) இது நம்முடைய மனச்சோர்வை அகற்றி ஊக்கப்படுத்தும்.
சந்தேகங்களால் துயறுற்றிருக்கிறீர்களா?
எப்போதாவது, யெகோவாவின் ஊழியர்களில் ஒருவருக்கு சந்தேகங்கள் உண்டாகலாம். இது நமக்கு ஏற்பட்டால், கடவுளுடைய தயவை இழந்துவிட்டோமென நாம் உடனடியாக முடிவுசெய்யக்கூடாது. அப்போஸ்தலன் தோமா தன் எஜமானரின் உயிர்த்தெழுதலைப்பற்றிய கண்கூடான சாட்சியைச் சந்தேகித்ததற்காக இயேசு அவரை வேண்டாமென தள்ளிவிடவில்லை. மாறாக, தோமா தன் சந்தேகங்களை நிவிர்த்திசெய்துகொள்ள இயேசு அவருக்கு அன்புடன் உதவிசெய்தார். இயேசு உயிரோடிருந்தாரென தோமா தெரிந்துகொண்டபோது அவர் எவ்வளவு மனக்கிளர்ச்சியடைந்தார்!—யோவான் 20:24-29.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்குள் நுழைந்திருந்த “தெய்வபக்தியற்ற மனிதர்,” தங்கள் பொய்ப் போதகம், முறுமுறுப்பு மற்றும் இவைப்போன்றவற்றால் சிலருக்குத் துயரமுண்டாகும் சந்தேகங்களை உண்டுபண்ணிக்கொண்டிருந்தனர். ஆகவே, சீஷன் யூதா பின்வருமாறு எழுதினார்: “அன்றியும், சந்தேகத்திலிருக்கிற சிலருக்கு இரக்கம்பாராட்டி அக்கினியிலிருந்து பறித்திழுப்பதுபோல அவர்களைத் தப்புவித்து இரட்சியுங்கள்.” (யூதா 3, 4, 16, 22, 23, தி.மொ.) கடவுளுடைய இரக்கமுள்ள கவனிப்பைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்க, யூதாவின் உடன்தோழரான வணக்கத்தார்—முக்கியமாய் சபை மூப்பர்கள்—சந்தேகித்தவர்கள் இரக்கத்துக்குத் தகுதியுள்ளோராயிருந்தால் அவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டியிருந்தது. (யாக்கோபு 2:13) அவர்களுடைய நித்திய ஜீவன் ஆபத்திலிருந்தது, ஏனெனில் அவர்கள் நித்திய அழிவாகிய “அக்கினி”க்கு உட்படும் ஆபத்திலிருந்தனர். (மத்தேயு 18:8, 9; 25:31-33, 41-46-ஐ ஒத்துப்பாருங்கள்.) சந்தேகங்கள் உடையோராயுள்ள உடன்கூடிய விசுவாசிகளுக்குத் தயவாய் உதவியளித்து, அவர்கள் ஆவிக்குரியப்பிரகாரமாய் உறுதியுள்ளோராகையில் எத்தகைய மகிழ்ச்சி ஏற்படுகிறது!
துயரந்தரும் கடும் இக்கட்டுகள் கடவுள் நம்மோடு இருக்கிறாராவென சந்தேகங்கொள்ளும்படி நம்மைச் செய்வித்தால், நாம் நம் ஜெபங்களில் திட்டவட்டமாய் இருக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பநிலைமைகளின்கீழ், ஞானத்துக்காக யெகோவாவைக் கேட்பதில் விடாமுயற்சியுடன் இருப்போமாக. நாம் ஞானத்தில் குறைவுபட்டு அதைக் கேட்டு ஜெபித்ததற்காக அவர் நம்மைக் கடிந்துகொள்ளாமல் நமக்கு உதாரத்துவமாய்க் கொடுக்கிறார். நாம் “ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே [தொடர்ந்து, NW] கேட்கவேண்டும்,” ஏனெனில் சந்தேகப்படுகிறவன் எல்லாத் திக்கிலும் “காற்றினால் அடிபட்டு அலைகிற கடலலைக்கு ஒப்பானவன்.” இத்தகைய ஆட்கள் கடவுளிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்கிறதில்லை ஏனெனில் அவர்கள் திடத்தீர்மானமற்றவர்கள், ஜெபத்திலும் தங்கள் எல்லா வழிகளிலும் ‘நிலையற்றவர்கள்.’ (யாக்கோபு 1:5-8, தி.மொ.) நம்முடைய கடும் இக்கட்டுகளைச் சரியான முறையில் நோக்கவும் அவற்றைச் சகித்து நிலைத்திருக்கவும் யெகோவா நமக்கு உதவிசெய்வாரென நாம் விசுவாசம் கொண்டிருப்போமாக. உடன்தோழரான விசுவாசிகளால் அல்லது பைபிள் படிப்பின்போது, வேதவசனங்கள் நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படலாம். கடவுளுடைய செயலால் வழிநடத்தப்பட்ட சம்பவங்கள் நாம் செய்யவேண்டியதைக் காண நமக்கு உதவிசெய்யக்கூடும். நம்மை வழிநடத்துவதில் தேவதூதர்கள் ஒருவேளை பங்குகொள்ளலாம், அல்லது பரிசுத்த ஆவியின்மூலம் நாம் வழிநடத்துதலைப் பெறக்கூடும். (எபிரெயர் 1:14) நம்முடைய அன்புள்ள கடவுளில் முழு நம்பிக்கையும் வைத்து ஞானத்துக்காக ஜெபிப்பதே முக்கியமான காரியம்.—நீதிமொழிகள் 3:5, 6.
யெகோவா ஆறுதலளிக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்
பவுல் ஜெபத்துடன் யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவரை ஆறுதலின் மூலக்காரணரென அறிந்திருந்தார். இந்த அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதினார்: “நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கடவுளும் பிதாவுமானவர் ஸ்தோத்திரத்துக்குரியவர்; இவர் இரக்கங்களின் பிதா எல்லாவித ஆறுதலின் கடவுள், எங்களுடைய சகல உபத்திரவத்திலும் எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். அவர் எங்களுக்கு அளிக்கும் அதே ஆறுதலின்மூலமாய் எவ்வித உபத்திரவத்திலும் இருக்கிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திறமையுள்ளவர்களாக வேண்டுமென்றிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 1:3, 4, தி.மொ.
எல்லாவித ஆறுதலின் கடவுள் தம்முடைய ஊழியர்கள் அனுபவிக்கும் துயரத்தைப்பற்றி தெரிந்திருக்கிறார், அவர்கள் துயரத்தைத் தீர்க்க விரும்புகிறார். கொரிந்தியர்மீது பவுல் கொண்டிருந்த கவலையைப் பற்றிய காரியத்தில், அவருடைய கிறிஸ்தவத் தோழனான தீத்துவின்மூலம் கவலையைத் தீர்ப்பதற்கான உதவி வந்தது. இது இன்று நாம் ஆறுதல்படுத்தப்படக்கூடிய ஒரு முறையாகும். ஆகையால், நாம் துயரத்திலிருக்கையில், நம்மைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 18:1) உடன்தோழரான கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொள்வது கடவுள் நம்மை ஆறுதல்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். நாம் இவ்வாறு ஒருவேளை நினைக்கலாம்: ‘நான் அவ்வளவு கடும் மனச்சோர்வடைந்திருக்கிறேன், என் கிறிஸ்தவ நண்பர்களுடன் இருக்க எனக்குப் போதிய பலன் இல்லை.’ எனினும், நாம் இத்தகைய உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடவேண்டும், உடன்தோழரான விசுவாசிகள் அளிக்கக்கூடிய ஆறுதலை நாம் நமக்கு இழந்துவிடச் செய்யக்கூடாது.
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்!
ஒரு கடும் இக்கட்டு இத்தகைய முறையில் தாக்கி அதன் விளைவால் நாம் கடுமையான சோர்வை அனுபவிக்கச் செய்திருப்பதை நம்மில் சிலர் ஒருவேளை அனுபவித்திருக்க மாட்டோம். ஆனால் தளர்வூட்டும் நோய், மணத்துணைவரின் மரணம், அல்லது வேறொரு கடுந்தொல்லை தரும் சூழ்நிலைமை உணர்ச்சிவேக துயரத்தைக் கொண்டுவரலாம். இது நேரிட்டால், நாம் ஆவிக்குரியப்பிரகாரம் நிச்சயமாக நோயுற்றிருக்கிறோமென்ற முடிவுக்கு வராதிருப்போமாக. சோர்வுற்ற ஒருவர் கடவுளுடைய சேவைக்கு நன்றாய்த் தகுதிபெற்றவராயிருக்கலாம், ஆவிக்குரியப்பிரகாரம் மற்றவர்களுக்கு உதவிசெய்யக்கூடியவராயும் இருக்கலாம். சோர்வுற்றோரை அவர்கள் ஏதோ தவறு செய்துவிட்டனர், ஆவிக்குரியப்பிரகாரம் நோயுற்றிருக்கின்றனரென்ற சந்தேகத்துடன் கருதாமல், “மனந்தளர்ந்தவர்களை உற்சாகப்படுத்துங்கள்,” என்று பவுல் சகோதரர்களை ஊக்கப்படுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:14) மனச்சோர்வு சிலசமயங்களில் தவறுசெய்துவிட்டதோடும் குற்றப்பழியோடும் சம்பந்தப்பட்டிருக்கிறதெனினும், சுத்தமான இருதயத்தோடு கடவுளைச் சேவிப்போரின் காரியத்தில் அது அவ்வாறில்லை. ஒருவேளை மிகக் கடும் முட்டுப்பாடுடன் செலுத்தப்படுகிற அவர்களுடைய வணக்கம், யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்ததாக உள்ளது. அவர் அவர்களை நேசித்து தேவைப்பட்ட உதவியுடனும் ஆறுதலுடனும் அவர்களுடைய சகாயத்துக்கு வருகிறார்.—சங்கீதம் 121:1-3.
ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேராயிருப்போர் 1918-ம் ஆண்டில் இக்கட்டுகளால் மிகக் கடுமையாகத் துயருற்றிருந்தனர். (கலாத்தியர் 6:16 ஒப்பிட்டுப் பாருங்கள்.) அவர்களுடைய பிரசங்கிக்கும் அமைப்பு ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது, அவர்களில் சிலர் தவறாக சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய முன்னாள் உடனுழைப்பாளர்கள் பலர் உண்மையற்றுப்போய், எதிர்க்கும் விசுவாசத்துரோகிகளானார்கள். மேலும், இதெல்லாம் நேரிடுவதற்குக் கடவுள் அனுமதித்ததன் காரணத்தை அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. சிறிது காலம் அவர்கள் ‘கண்ணீரோடு விதைத்தார்கள்,’ ஆனால் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அவர்கள் விடாது தொடர்ந்து யெகோவாவைச் சேவித்துக்கொண்டிருந்தார்கள், மேலும் தங்களையும் சோதித்துப் பார்த்தனர். இதன் பலன்? அவர்கள் ‘அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவந்தார்கள்.’ (சங்கீதம் 126:5, 6) நெருங்கிவந்துகொண்டிருந்த தங்கள் சர்வதேச அறுப்பு வேலைக்காக அவர்களைச் சுத்திகரிக்கவே கடவுள் அத்தகைய இக்கட்டுகளை அனுமதித்தாரென அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் இப்பொழுது உணருகின்றனர்.
பல்வேறு இக்கட்டுகளால் நாம் நெருக்கித் தாக்கப்படுவதால் துயருற்றவர்களாகும்படி நேரிட்டால், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரின் அனுபவத்திலிருந்து நாம் நன்மையடையலாம். நம்பிக்கை இழந்துவிடுவதற்குப் பதிலாக, நாம் சரியானதைச் செய்வதை அழுகையோடு செய்ய வேண்டியதாயிருந்தாலும், அதைச் செய்வதில் விடாமல் தொடருவோமாக, ஏற்ற காலத்தில், நம்முடைய சோதனைகளிலிருந்து வெளியேற ஒரு வழி உண்டாகும், நாம் ‘கெம்பீரத்தோடே திரும்பிவருவோம்.’ ஆம், நம்முடைய இக்கட்டுகளைச் சகித்து நிலைத்திருந்ததனால், சந்தோஷம்—கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஒரு கனி—நம்முடையதாயிருக்கும். யெகோவா நமக்கு “எல்லாவித ஆறுதலின் கடவுளாக” நிச்சயமாக நிரூபிப்பார்.