அன்பின் கதவைத் திறப்பீர்களா?
கப்பல் நகராமல் நிற்பதற்கு கடலுக்குள் நங்கூரம் பாய்ச்சப்படுகிறது. அந்த நங்கூரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி பெருங்காற்றுக்கும் பேரலைக்கும் அசைந்து கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு அந்தச் சங்கிலியிலுள்ள வளையங்கள் ஒன்றுக்கொன்று உறுதியாகவும் பலமாகவும் இணைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது சீக்கிரத்தில் அறுந்துவிடும்.
கிறிஸ்தவ சபையிலும் இதுபோன்ற நிலை இருக்க வேண்டும். ஒரு சபை ஆன்மீக ரீதியில் பலமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டுமானால், அதன் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். ஆனால், எது அவர்களை ஒன்றிணைக்கிறது? அன்பு என்கிற பலமான சக்தியே அவர்களை ஒன்றிணைக்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” சொல்லப்போனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பு, சாதாரண நட்பையும் பரஸ்பர மரியாதையையும்விட மேலானது. அவர்கள் சுயதியாக அன்பை வளர்க்கிறார்கள்.—யோவான் 13:34, 35.
சக விசுவாசிகளை மதித்தல்
இன்றுள்ள சபைகள் பலவற்றில், வித்தியாசமான வயது, இனம், தேசம், கலாச்சாரம், மொழி, சமுதாயப் பின்னணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன; அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் கவலைகளும்கூட வேறுபடுகின்றன; ஒருவேளை நோய்நொடி, பணக்கஷ்டம் போன்ற வித்தியாசமான ஏதோவொரு சோகத்தை சுமந்துகொண்டுதான் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இதுபோன்ற வேறுபாடுகள் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு பெரிய சவாலாக அமையலாம். இந்தச் சவால்களின் மத்தியிலும் எல்லாரிடமும் அன்பு காட்டுவதற்கும் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கும் எது நமக்கு உதவும்? சபையிலுள்ள எல்லாரிடமும் உள்ளப்பூர்வமாக மதிப்பு மரியாதை காட்டுவது, ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை வளர்க்க உதவும்.
அப்படியானால், நாம் மற்றவர்களை உயர்வாய் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்பவராக இருப்பதன் மூலம், அல்லது அனுதாபமுள்ளவராக இருப்பதன் மூலம், அவர்களை கௌரவமாக நடத்துவதன் மூலம், சிறப்புவாய்ந்தவராக அல்லது மதிப்புமிக்கவராகக் கருதுவதன் மூலம், நன்றியுள்ளவராக இருப்பதன் மூலம் நாம் அதைக் காட்டலாம். நாம் நம்முடைய சக விசுவாசிகளை உயர்வாய் கருதினால், அவர்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற உதவி செய்வோம்; அவர்களை அருமையானவர்களாகக் கருதுவோம்; அவர்களுடைய சிறந்த குணங்களையும் திறமைகளையும் ஒத்துக்கொள்வோம்; அவர்கள் நம்மோடு சேர்ந்து கடவுளை வணங்குவதற்காக நாம் நன்றியுடன் இருப்போம். இதன் விளைவாக, அவர்களை அதிகமதிகமாக நேசிக்கத் துவங்குவோம். முதல் நூற்றாண்டு கொரிந்து சபையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன எழுதினார் என்பதை இப்போது சுருக்கமாகச் சிந்திப்போம்; கிறிஸ்தவ அன்பை இன்னும் முழுமையாக எவ்வாறு காட்டுவது என்பதைத் தெரிந்துகொள்ள இது நமக்கு உதவும்.
‘இதயக் கதவை அடைத்து வைத்த’ கொரிந்தியர்கள்
கொரிந்தியர்களுக்கு தன்னுடைய முதல் கடிதத்தை பொ.ச. 55-ல் பவுல் எழுதினார்; அதன் பிறகு, ஒரு வருடத்திற்குள் இரண்டாம் கடிதத்தையும் எழுதினார். கொரிந்து சபையிலுள்ளவர்கள் சிலர் தங்களுடைய சக விசுவாசிகளை உயர்வாக மதிக்கத் தவறினார்கள் என்பதை அவருடைய குறிப்புகள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த நிலைமையை பவுல் பின்வரும் வார்த்தைகளில் விவரித்தார்: “கொரிந்தியரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை. நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்; எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.” (2 கொரிந்தியர் 6:11, 12, பொது மொழிபெயர்ப்பு) “இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்” என்று அவர்களைக் குறித்துச் சொல்லும்போது பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?
அவர்கள் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாக, பெருந்தன்மையற்றவர்களாக இருந்தார்கள் என அவர் அர்த்தப்படுத்தினார். “வீண் சந்தேகத்தாலும் . . . அநியாயமாக நடத்தப்பட்ட உணர்வாலும் அவர்களிடையே ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலை” பவுலிடம் அன்பு காட்ட கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு “முட்டுக்கட்டையாக இருந்தது” என்று பைபிள் அறிஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார்.
பவுல் கொடுத்த ஆலோசனையைக் கவனியுங்கள்: “பிள்ளைகளுக்குச் சொல்வதைப்போல் சொல்லுகிறேன்: எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.” (2 கொரிந்தியர் 6:13, பொ.மொ.) சக விசுவாசிகளிடம் அன்பு காட்ட இதயக் கதவைத் திறந்து வைக்கும்படி பவுல் கொரிந்து கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார். சக விசுவாசிகளிடம் அவநம்பிக்கையை வளர்ப்பதற்கும், உப்புச்சப்பு இல்லாத விஷயங்களைக்கூட பெரிதுபடுத்துவதற்கும் பதிலாக, நம்பிக்கையான மனநிலையை வளர்ப்பதையும் பரந்த மனப்பான்மையைக் காட்டுவதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
அன்பின் கதவை திறந்து வைத்தல்—இன்றும்
இன்று உண்மை வணக்கத்தார் தங்கள் இதயக் கதவைத் திறந்து எல்லாரிடமும் அன்பைப் பொழிய கடும் முயற்சி செய்வதைப் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கிறது. இதயக் கதவைத் திறப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. இதயக் கதவைத் திறப்பதற்கு, பைபிள் தராதரங்களுக்கிசைய வாழாத மக்களிலிருந்து நாம் வித்தியாசமானவர்களாய் நடக்க வேண்டும். அத்தகைய ஆட்கள் பொதுவாக மற்றவர்களை உயர்வாய் கருத மாட்டார்கள். அவர்கள் அலட்சியம் செய்பவர்களாக, மரியாதை காட்டாதவர்களாக, நக்கல்பேர்வழிகளாக இருக்கலாம். எனவே, இப்படிப்பட்ட மனப்பான்மை நம்மைத் தொற்றிக்கொள்ள நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கொரிந்து கிறிஸ்தவர்களைப்போல நம் சக விசுவாசிகளைச் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டு நம்முடைய அன்புக்கு அணைபோட்டோமானால் அது எவ்வளவு வருத்தத்திற்குரிய விஷயம். ஒரு சகோதரருடைய குறைகளை எளிதில் கண்டுபிடித்துக்கொண்டு, அவருடைய நல்ல குணங்களை கண்டுங்காணாமல் இருக்கிறோமென்றால் அன்றைய கொரிந்தியர்களுக்கும் நமக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா? ஒருவர் வேறொரு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக நாம் அவரோடு ஒட்டி உறவாடாமல் இருக்கிறோமென்றால் அவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்கிறோம், அல்லவா?
இதற்கு மாறாக, இதயக் கதவைத் திறந்து அன்பாகப் பழகுகிற கடவுளுடைய ஊழியர், சக விசுவாசிகளை உள்ளப்பூர்வமாக மதிப்பார். அவர்களை கண்ணியமாக நடத்துவார்; அவர்களுடைய நிலைமையை நன்கு புரிந்துகொண்டு உதவ முயலுவார். குறை சொல்வதற்கு சரியான காரணம் இருந்தாலும்கூட, மன்னிக்க விரும்புவார், மனதில் வெறுப்பை வளர்க்கமாட்டார். அதற்குப் பதிலாக, சக விசுவாசி தன்னைப் புண்படுத்தும் விதத்தில் செய்த காரியத்தையும்கூட தன்னுடைய நன்மைக்குத்தான் என எடுத்துக்கொள்வார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னபோது அவர் எத்தகைய அன்பை மனதில் வைத்திருந்தாரோ அத்தகைய அன்பைக் காட்ட பெருந்தன்மை அவருக்கு உதவும்.—யோவான் 13:35.
புதியப் புதிய நண்பர்களைப் பெற முயலுங்கள்
நமக்கு உள்ளப்பூர்வமான அன்பிருந்தால் நம்முடைய நண்பர் வட்டத்தைவிட்டு வெளியே வந்து எல்லாரிடமும் பழகவும், சபையில் நாம் அவ்வளவாக பரிச்சயமாகாத ஆட்களிடம்கூட நட்புகொள்ளவும் முயலுவோம். யாரிடமெல்லாம் நாம் நெருங்கிப் பழகலாம்? நம்முடைய சகோதர சகோதரிகள் சிலர் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருக்கலாம், ஏதோ காரணத்தினால் அவர்களுக்கு ஒருசில நண்பர்களே இருக்கலாம். சக விசுவாசி என்பதைத் தவிர நமக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நாம் முதலில் நினைக்கலாம். மிகவும் வித்தியாசப்பட்டவர்களாக தெரிந்த ஆட்கள் மத்தியில்தான் மிக நெருங்கிய நட்பு நிலவியதாக பைபிள் சொல்வது உண்மை அல்லவா?
உதாரணமாக, ரூத்தையும் நகோமியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; நகோமி ரூத்தைவிட வயதில் மூத்தவர்; அதோடு அவர்களுடைய நாடும் கலாச்சாரமும் மொழியும்கூட வித்தியாசப்பட்டது. அப்படியிருந்தும் அத்தகைய வித்தியாசங்கள் அவர்களுடைய நட்பை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மற்றொரு உதாரணத்தைப் பாருங்கள், யோனத்தான் ஓர் இளவரசர், தாவீதோ சாதாரண மேய்ப்பர். அவர்களுக்கிடையே கணிசமான வயது வித்தியாசமும் இருந்தது; என்றாலும், அவர்கள் இருவரும் உயிர் நண்பர்களாய் இருந்தார்கள் என பைபிள் தெரிவிக்கிறது. அவர்களிடையே இருந்த நட்பு மிகுந்த இன்பத்தையும் ஆன்மீக ரீதியில் ஆதரவையும் தந்தது என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன.—ரூத் 1:16; 4:15; 1 சாமுவேல் 18:3; 2 சாமுவேல் 1:26.
இன்றும்கூட வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த உண்மைக் கிறிஸ்தவர்கள் மத்தியில் நெருங்கிய நட்பு நிலவுகிறது; மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்பவர்களுக்கு இடையேயும் நல்ல நட்பு மலர்ந்திருக்கிறது. இரண்டு டீனேஜ் பிள்ளைகளையுடைய ஒற்றைத் தாய் ரெஜினாவின் உதாரணத்தைக் கவனியுங்கள்.a மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவுக்கு அவர் படுபிஸியாக இருந்தார்; மற்றவர்களுக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்குவதுகூட அவருக்கு பெரும்பாடாக இருந்தது. ஹாரால்டும் யூட்டாவுமோ பிள்ளைகள் இல்லாத வயதான தம்பதி. மேலோட்டமாக பார்த்தால், இந்த இரு குடும்பத்தாரும் எல்லா விதத்திலும் வித்தியாசப்பட்டிருப்பதாகத் தெரியலாம். ஆனால் இதயக் கதவைத் திறக்க வேண்டுமென்ற பைபிள் அறிவுரையை ஹாரால்டும் யூட்டாவும் கடைப்பிடிக்கத் தீர்மானித்தார்கள். ஒன்றுசேர்ந்து வெளி ஊழியம் செய்வது, பொழுதுபோக்கை அனுபவிப்பது என அவர்கள் செய்த பல காரியங்களில் ரெஜினாவையும் அவருடைய பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டார்கள்.
நம்முடைய நண்பர் வட்டத்தை இன்னும் விசாலமாக்கி எல்லாரிடமும் அன்பாக பழக நாம் முயலலாம் அல்லவா? வித்தியாசமான தேசம், கலாச்சாரம், வயது ஆகியவற்றைச் சேர்ந்த சக விசுவாசிகளிடமும் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள நாம் முயற்சி செய்யலாம் தானே?
மற்றவர்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு உதவுதல்
நமக்கு பெருந்தன்மை இருந்தால், மற்றவர்களுடைய நிலைமையை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்போம். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி தேவை? கிறிஸ்தவ சபையிலுள்ள அங்கத்தினர்களைக் கொஞ்சம் கவனியுங்கள். இளைஞருக்கு ஆலோசனை தேவை; முதியோருக்கு ஊக்கம் தேவை; முழுநேர ஊழியர்களுக்கு பாராட்டும் பக்கபலமும் தேவை; அதோடு மனமொடிந்த சக விசுவாசிகளுக்கு மனபாரத்தை இறக்கிவைக்க யாராவது தேவை. எல்லாருக்குமே ஏதாவதொரு விதத்தில் உதவி தேவை. நியாயமான விதத்தில் நம்மால் முடிந்தளவு மற்றவர்களுக்கு நாம் உதவலாம்.
இதயக் கதவைத் திறப்பதில் பிரத்தியேக தேவையில் உள்ளவர்களைப் புரிந்துகொண்டு உதவி செய்வதும் அடங்கும். தீராத நோயுடன் போராடுபவர்களையோ வேறெதாவது பிரச்சினைகளுடன் போராடுபவர்களையோ உங்களுக்கு தெரியுமா? இதயக் கதவைத் திறந்து, பெருந்தன்மையாய் நடந்து கொள்வது, உதவி தேவைப்படுகிற நபர்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு ஆதரவு காட்டவும் நமக்கு உதவும்.
எதிர்காலத்தைக் குறித்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நிறைவேறவிருப்பதால், உடைமைகள், திறமைகள் அல்லது சாதனைகளைக் காட்டிலும் சபையிலுள்ளவர்களின் மத்தியில் நிலவும் நெருங்கிய பிணைப்பே மிக அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். (1 பேதுரு 4:7, 8) சக விசுவாசிகளிடம் அன்புகாட்ட நம் இதயக் கதவைத் திறப்போமாக; அவ்வாறு செய்தால், நம்முடைய சபையிலுள்ள ஒற்றுமையின் பிணைப்பைப் பலப்படுத்த தனிப்பட்ட ரீதியில் நாமும் பங்களிக்கிறோம். தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து சொன்ன பின்வரும் வார்த்தைகளுக்கு இசைவாக செயல்படுகிறவர்களை யெகோவா நிறைவாய் ஆசீர்வதிப்பார் என்பதில் நாம் உறுதியுடன் இருக்கலாம்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.”—யோவான் 15:12.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
நம்முடைய சகோதர சகோதரிகள் எல்லாரையுமே நாம் உயர்வாக மதிக்க வேண்டும், கண்ணியமாக நடத்த வேண்டும், அவர்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும்